கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்கள்

நமக்காக கல்வாரியில் மரித்த இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்கள் உண்மையிலேயே நமக்குப் போதிப்பதென்ன என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாம் இயேசுவின் சிலுவைப்பாடுகளை மனதில் நினைத்து உருகிக் கண்ணீர்விட வேண்டுமென்று வேதத்தின் எந்தப்பகுதியாவது போதிக்கின்றதா என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? காலங்காலமாக ரோமர் கத்தோலிக்க மதம் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, கிறிஸ்துவின் சிலுவைத்துன்பங்களை கத்தோலிக்கர்கள் தங்கள் சரீரத்தில் அனுபவித்து ஆத்மீகபெலன் அடையவேண்டுமென்ற நோக்கத்தில் லெந்து காலத்தில் நாற்பது நாற்களுக்கு உபவாசம் செய்து, தியானத்தில் ஈடுபட்டு வருவது வழக்கம். அத்தோடு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் மரச்சிலுவையைத் தோலில் சுமந்து நகர் ஊர்வலம் வந்து ஆத்மீக அனுபவம் என்ற பெயரில் உடலை வருத்திக் கொள்வார்கள். இதுவும் போதாதென்று லெந்து காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களைச் சித்தரிக்கும் நாடகங்களையும், கூத்துக்களையும் கிராமங்களிலும் நகரங்களிலும் நடத்தி லெந்துக் காலங்களில் ஒரு பெரு விழாவையே நடத்தி முடித்துவிடுவார்கள். இதையெல்லாம் கத்தோலிக்க மதம் செய்வதற்குக் காரணம் என்ன என்பதையே சிந்தித்துப் பார்க்காமல், வேத அறிவு என்பதே துல்லியமும் இல்லாமல் தமிழர்கள் மத்தியில் சீ. எஸ். ஐ சபைகளும், மெத்தடிஸ் மற்றும் பாப்திஸ்து, பெந்தகொஸ்தே சபைகளும் லெந்து காலங்களில் உபவாசம் இருப்பதோடு கத்தோலிக்க மதம் செய்யும் அத்தனை காரியங்களையும் செய்து வருகிறார்கள். லெந்துகால தியானத்திற்காக எழுதப்பட்டுள்ள விசேட நூல்கள்கூட இவர்கள் மத்தியில் விற்பனைக்கு உண்டு.

கத்தோலிக்க மதம் சுவிசேஷக் கிறிஸ்தவத்திற்கு விரோதி என்ற உண்மையே தெரியாமல் சுவிசேஷ இயக்க சபைகள் கத்தோலிக்க மதக்கோட்பாடு களையும், நடைமுறைகளையும் பின்பற்றி வருவது தமிழினத்தின் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்தை பிடித்திருக்கும் மாபெரும் சாபம். பத்துக் கட்டளைகள் மூலம் தன்னைத் தவிர வேறு எவரையும் அல்லது எதையும் வணங்கக் கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டிருப்பதோடு தன்னை வணங்கும்போது ஆத்துமாக்கள் சத்தியத்தின் அடிப்படையிலும், ஆவியின் மூலமும் மட்டுமே வணங்க வேண்டும் என்று சொல்லியிருக்க அதன் அர்த்தமே புரியாது கர்த்தரை அவருடைய வார்த்தைக்கு விரோதமாக வணங்கி வரும் சுவிசேஷ சபைகள் கர்த்தருக்கு பெருவிரோதிகள்.

இயேசு கிறிஸ்து இன்றைக்கும் சிலுவையில் தொடர்ந்து துன்பப்பட்டு வருகிறார் என்பது கத்தோலிக்க மதப்போதனை. அந்த மதத்தின் போதனை களுக்கும் நடைமுறைப் பயிற்சிகளுக்கும் அந்த நம்பிக்கையே அடித்தளமாக இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்து தன் சரீரத்தில் அனுபவித்த துன்பங்களுக்கு அது அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால், சுவிசேஷ இயக்கம் கிறிஸ்து அனுபவித்த துயரங்கள் இன்றும் தொடர்வதாக நம்பவில்லை. அவை என்றோ வரலாற்றில் முடிந்து போய்விட்ட நிகழ்ச்சி. இன்றைக்கு ஜீவிக்கும் கிறிஸ்துவை, தேவ இராஜ்யத்தை ஆளும் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி சுவிசேஷ செய்தி எல்லோரையும் அழைக்கிறது. கிறிஸ்து வின் துன்பங்களை நாம் எழுத்துபூர்வமாக அனுபவிக்கும்படி சத்திய வேதம் எந்தப்பகுதியிலும் போதிக்கவில்லை. அதை நினைவுபடுத்திக் கொண் டாடும்படி வேதம் எங்குமே வலியுறுத்தவில்லை. கிறிஸ்துவின் சரீரப்பாடு களை நமது சரீரத்தில் அனுபவிப்பதற்காக விஷேட காலங்களை ஏற்படுத்தி கூத்துக்களை நடத்தி விழாக்கொண்டாடும்படி வேதத்தின் எந்தப்பகுதி யிலும் போதனைகள் தரப்படவில்லை. இப்படிச் செய்வதால் நாம் ஒருவிதத் திலும் நம் வாழ்க்கையில் பரிசுத்தமடையப் போவதுமில்லை, பக்திவிருத்தி யில் வளரப்போவதுமில்லை. இதையெல்லாம் செய்துகொண்டிருப்பவர்கள் சத்தியமே தெரியாத சுவிசேஷப் போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் எட்டப்பக் கூட்டமே தவிர வேறில்லை.

அப்படியானால் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளைப்பற்றி வேதம் நமக்கு  எதைப்போதிக்கின்றது? என்பதை இனி ஆராய்வோம்.

1. கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகள் கிறிஸ்து யார் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.

கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகள் அவர் யார் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்படி அழைக்கின்றன. கிறிஸ்து சாதாரணமான மனிதரோ அல்லது விசேஷ அவதாரமோ அல்ல. அவர் தேவனால் அனுப்பப்பட்ட, அவருடைய தெய்வீகக் குமாரன். அதுமட்டுமல்ல அவர் திரித்துவத்தின் இரண்டாம் நபர். பிதாவின் தன்மைகள் அனைத்தையும் தன்னில் கொண்டிருக்கும் தேவகுமாரன். யூதர்களைப்பார்த்து இயேசு சொன்னார், நானும் அவரும் ஒருவரே, என்று. மத்தேயு 16:13-16ல் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்” என்று கேட்டபோது பலரும் பலவிதமாக பதிலளித்தார்கள். ஆனால், பேதுரு மட்டும், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று தெளிவாக பதிலளித்தான். அதாவது, நீரே கர்த்தர், உன்னதத்தில் வாசம் செய்யும் தேவன். தேவனால் அனுப்பப்பட்டு வந்திருக்கும் தேவகுமாரன் என்ற தெளிவான பதிலை அளித்தான் பேதுரு. இயேசு அவனைப் பார்த்து “சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” என்று சொன்னார். 21-ம் வசனம் அதுமுதல் இயேசு தாம் படப்போகிற பாடுகளைப்பற்றி தம்முடைய சீடர்களுக்கு சொல்லத் தொடங்கினார் என்று வேதத்தில் எழுதியிருப்பதை வாசிக்கிறோம். கிறிஸ்துவின் பாடுகள் கிறிஸ்து யார் என்பதை நமக்கு விளக்குகின்றன. நாம் கிறிஸ்துவின் மெய்த்தன்மையை ஆராய்ந்து பார்க்கும்படி அழைக்கின்றன. அவர் எதற்காக, யாருக்காக சிலுவையில் துன்பப்பட நேர்ந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்படி அறைகூவலிடுகின்றன. அவராலன்றி எந்த மனிதனுக்கும் வேறு எவர் மூலமாகவும் இரட்சிப்பில்லை என்ற சத்தியத்தை புலப்படுத்துகின்றன. அவருக்காக இரக்கப்பட்டு, வருத்தப்பட்டு அழவேண்டுமென்று சிலுவை நமக்குப் போதிக்கவில்லை. கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைப் பார்த்து அழுவதால் பரலோகம் போன மனிதன் இந்த உலகத்தில் ஒருவருமே இல்லை. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் மட்டுமே பரலோகம் போகமுடியும். பேதுரு சொன்ன பதில் அவன் விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட பதில்.

2. கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களுக்கும், மரணத்துக்கும் யார் காரணம்  என்பதை அவருடைய சிலுவைத் துயரங்கள் விளக்குகின்றன.

இயேசு கிறிஸ்துவை யூதர்கள் கொன்றார்களா? அல்லது ரோமர்கள் கொன்றார்களா? என்பது முக்கியமேயல்ல. யூதர்களும், ரோமரும் கர்த்தரால் பயன்படுத்தபபட்ட மனித கருவிகள் மட்டுமே. உண்மையில், கிறிஸ்து சிலுவையில் மரித்ததற்கு மூல காரணம் கர்த்தரே. ஏசாயா 53:6, “கர்த்தரோ நம்மெல்லோருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்” என்கிறது. ரோமர் 8:32, “தம்முடைய சொந்தக் குமாரரென்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர்” கர்த்தர் என்று விளக்குகின்றது. அப்போஸ்தலர் 4:27, “உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரொதும், பொந்திபிலாத்தும், புறஜாதிகளோடும், இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம் பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங் கூடினார்கள்” என்கிறது. இயேசுவின் மரணம் உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே கர்த்தரால் தீர்மானிக்கப்பட்டு விட்டது. யூதர்களும், ரோமர்களும் கர்ததருடைய கரத்தில் வெறும் கருவிகளே. இதற்காக யூதர்களும், ரோமரும் தாங்கள் செய்த பாவத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியாது. ஆனால், இயேசுவின் மரணத்திற்கு மூல காரணம் யார் என்பதையும், கர்த்தர் தன்னுடைய பரிசுத்த திட்டங்களை நிறைவேற்ற தன்னுடைய ஒரே குமாரனைப் பலிகொடுத்தார் என்பதையும் கிறிஸ்துவின் சிலுவைத் துன்பங்கள் நினைவுபடுத்துவதை நாம் மறந்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளுக்கான வேத காரணங்களை எண்ணிப் பார்க்காமல் அதற்காக கண்ணீர் வடிப்பதும், அதை நினைத்து உபவாசம் இருப்பதும், சிலுவையைத் தோளில் சுமந்து உடலை வருத்திக் கொள்வதும் வடிகட்டின முட்டாள்த்தனம்.

3. கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் சிலுவையில் கிறிஸ்து உண்மையில் எதை அனுபவித்தார் என்ற சத்தியத்தை விளக்குகின்றன.

சிலுவையில் கிறிஸ்துவின் கரங்களிலும், கால்களிலும் ஆணிகளைப் பொருத்தினார்கள். அவருடைய தலையில் முற்கிரீடத்தை வைத்து அழுத்தி னார்கள். அவருடைய சரீரத்தில் இருந்து இரத்தம் கொட்டியது. கிறிஸ்து சாதாரண மனிதனால் தாங்க முடியாத கொடுமைகளை சிலுவையில் தாங்கி னார் என்பது பேருண்மை. ஆனால், அவற்றை மட்டும் பெரிதுபடுத்துவதால் உண்மையிலேயே கிறிஸ்து சிலுவையில் எதை அனுபவித்தார் என்று வேதம் முக்கியத்துவம் தந்து போதிக்கும் சத்தியத்தை நாம் தவிர்த்துவிட நேரிடும்.

கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்குப் போதிக்கும் அந்த சத்தியம் என்ன? மாற்கு 14:34-ல் கெத்செமனே தோட்டத்தில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் “என்னுடைய ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” என்றார். அதற்குப்பின் அவர் தன்னுடைய பிதாவை நோக்கி, “எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்தில் இருந்து எடுத்துப் போடும்” என்று ஜெபித்துக் கேட்டார். இயேசு கெத்செமனே தோட்டத்தில் தனிமையில் இருந்தார். சிலுவையைச் சந்திக்குமுன்பதாகவே அவருடைய இருதயம் மரண வேதனையை அனுபவித்தது. எத்தகைய மரண வேதனை அது? உயிர் சரீரத்தை விட்டுப் பிரியும் வேதனை மட்டும் அல்ல. அதற்கும் மேலாக நரகதுன்பத்தை தேவனாகிய இயேசு தன்னுடைய இருதயத்தில் அனுபவித்தார். நரகத்தையே தொட்டிராத நம்முடைய தேவன் நமது பாவநிவாரணத்திற்காக நரகவேதனையை, நரகத்திற்குப் போகாமலேயே அனுபவிக்க நேர்ந்தது. நரகத்தின் கொடுமையையும், அதன் கொடூர இருளையும், தனிமையும், பிதாவின் ஐக்கியத்தை இழந்த நிலையையும் தன்னுடைய இருதயத்திலே அனுபவித்தார் இயேசு கிறிஸ்து. அதனால்தான் “இந்தப் பாத்திரத்தை (இந்தத் துன்பத்தை) என்னிடத்தில் இருந்து எடுத்துப் போடும்” என்று பிதாவிடம் ஜெபித்தார் இயேசு. சிலுவையில் இறக்கும்போது, “தேவனே, தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அவர் கதறியதற்கும் இதுதான் காரணம். சிலுவைத் துன்பத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக் கும் ரோமன் கத்தோலிக்க மதம் இந்த சத்தியத்தை மறைத்துவிடுகிறது. நரககொடுமைகளில் இருந்து நம்மை விடுவிக்க கிறிஸ்து நமது பாடுகளைத் தன்னில் தாங்க வேண்டியிருந்தது. கலாத்தியர் 3:13, “கிறிஸ்து நமக்காக சாபமானார்” என்று இதைக்குறித்துத்தான் பேசுகிறது. 2 கொரிந்தியர் 5:21, “பாவமறியாத அவர் நமக்காக பாவமானார்” என்று இந்த சத்தியத்தைத்தான் விளக்குகிறது. 1 பேதுரு 2:24, “அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்தார்” என்று சிலுவைப்பாடுகளை மட்டுமல்ல, அவருடைய ஆத்துமா அனுபவித்த நரகவேதனையைக் குறித்தும் பேசுகிறது. சிலுவையில் நமக்காக மரித்த கிறிஸ்து இந்த உலகமே இதுவரை கண்டிராத மிகப்பெரிய பாவியாக நமக்காக மரித்தார். நம்மீதிருந்த தேவகோபம் அத்தனையும் அவர்மேல் இறங்கியது. அந்தக் கோபத்தை தாங்கும் கொடுமையை இயேசு அனுபவித்தார் என்ற சத்தியத்தை அவருடைய சிலுவைத் துயரங்கள் நமக்கு விளக்குகின்றன.

4. கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் அவருடைய மரணத்திற்குப்பின் நிகழவிருக்கும் உயிர்த்தெழுதலை சுட்டிக்காட்டுகின்றன.

கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளில் மட்டும் தங்களுடைய முழுக் கவனத்தையும் செலுத்துகிறவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் அவசியத்தை மறந்துவிடுகிறார்கள். கிறிஸ்துவின் வாழ்க்கையில் அவருடைய சிலுவைத் துன்பங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பெரிது படுத்துவது வேதபோதனைகளைத் திரிபுபடுத்துவதாகும். தேவ குமாரனாகிய இயேசு, கிறிஸ்துவாக இல்லாமலிருந்திருந்தால், அவர் உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் அவருடைய சரீரத்தின் சாம்பல் மட்டுமே இன்றும் கல்லறையில் தொடர்ந்திருந்திருக்கும். இயேசு, கிறிஸ்துவாகவும், தேவகுமாரனாகவும் இருந்ததால்தான் வரலாற்றில் அவருடைய சிலுவை மரணம் அவசிய மானது. அதுமட்டுமல்லாமல் அவருடைய சிலுவை மரணத்தின் முக்கியத்துவமே அவருடைய உயிர்த்தெழுதலில்தான் தங்கியிருந்தது. அவர் உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்? இன்றைக்கு பாவிகள் மனந் திரும்புவதற்கு வழியே இருந்திருக்காது. சத்தியம் இப்படியிருக்க இயேசுவின் சிலுவைப் பாடுகளை மட்டும் பெரிதுபடு¢த்துவது எத்தனை பெரிய தவறு. இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு அப்போஸ்தலர்கள் அவருடைய உயிர்த்தெழுதலுக்கே தங்களுடைய பிரசங்கங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கலாம். ஸ்தேவானும், பேதுருவும், பவுலும் அதற்கே முக்கியத்துவம் தந்து பிரசங்கித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம். கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவம் அவருடைய உயிர்த்தெழுதலில் தங்கியிருந்ததால்தான். நமக்காக மரித்த தேவன் இன்று கல்லறையில் இல்லை. அவர் ஜீவிக்கிறார். அவர் உயிர்த் தெழுந்து ராஜாவாக தேவராஜ்யத்தை ஆண்டுவருகிறார்.

அதுமட்டுமல்லாமல், கத்தோலிக்க மதம் கிறிஸ்துவின் சிலுவைத் தியாகம் முடிந்துவிட்டதாகக் கருதுவதில்லை. இது மிகப் பெருந்தவறு. இயேசு சிலுவையில் இறந்தபோது, “முடிந்தது” என்று உறுதியாகச் சொல்லித் தன்னுடைய ஆவியைத் துறந்தார் (யோவான் 19:30). பிதாவின் கட்டளைகள் எல்லாவற்றை யும் நிறைவேற்றி, அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவருக்கும் பாவ நிவாரணப் பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்து தேவகோபத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும் பணி நிறைவேறிவிட்டது என்பதுதான் அதற்கு அர்த்தம். கிறிஸ்துவின் சிலுவைத் துன்பங்களை மட்டும் நாம் பெரிதுபடுத்தி கண்ணீர்வடித்து, உபவாசம் செய்தால் கிறிஸ்துவின் கிருபாதாரப் பலிச்செயல் நிறைவேறிவிட்டதை நாம் அலட்சியப்படுத்துகிறவர்களாகிவிடுவோம். விசு வாசிகள் இனி அழவேண்டியவர்களல்ல; ஆனந்தப்பட வேண்டியவர்கள். நம் தேவன் இன்று வெற்றிவீரராக, ஆள்கிறவராக பரலோகத்தில் வீற்றிருக்கிறார்; விசுவாசிகளைத் தொடர்ந்து ஆண்டுகொண்டிருக்கிறார்.

5. கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் பாவிகள் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி அறைகூவி அழைக்கின்றன.

கிறிஸ்து தன்னுடைய சிலுவைத் துன்பங்களின் மூலம் பாவிகளின் பாவ நிவாரணத்துக்கு வழி ஏற்படுத்தித் தந்திருப்பதால், பாவிகள் இன்று நித்திய ஜீவனை அடைவதற்காக மனந்திரும்புவது அவசியம். கிறிஸ்து நம்முடைய அனுதாபத்தை ஒருபோதும் நாடி நிற்கவில்லை. கண்ணீரால் தம்மை நனைக் கும்படிக் கேட்கவில்லை. அவரைப்போல நாமும் சரீரத்தில் இரத்தம் சிந்த வேண்டுமென்று கேட்கவில்லை. மனந்திரும்பி தம்மை விசுவாசிக்கும்படி மட்டுமே நம்மை அழைக்கிறார் (மாற்கு 1:15). அதையே அப்போஸ்தலர் களும் பிரசங்கித்தனர் (அப்போஸ் 20:21). “மனந்திரும்புதல் நமது இருதயத்தில் இருந்து வெளிப்படும் வாந்தி” என்று பரிசுத்தவான்களில் ஒருவர் கூறியிருக்கிறார். தன்னுடைய பாவத்திற்காக முழுமனத்தோடு வருந்தி அதிலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் மட்டுமே பரலோகம் போக முடியும் என்கிறது வேதம். ஆகவே, அநாவசியமாக கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை, வேதபோதனைகளுக்கு மாறாகப் பெரிதுபடுத்தி, விஷேட காலங்களை ஏற்படுத்தி கிறிஸ்துவுக்கு விழாக்காணுவதை விட்டுவிட்டு சிலுவைப் பிரசங்கத்தின் மூலம் பாவிகள் மனந்திரும்புவதற்கு ஏதுவானதை செய்வதே திருச்சபைகள் இன்று செய்ய வேண்டிய பெரும் பணி. பாவிகள் மனந்திரும்புவதற்கு ஏதுவாக சுவிசேஷப் பிரசங்கங்களைத் தெளிவாக அளிக்காத சபை தேவனுடைய சபையாக இருக்க முடியாது. அன்பர்களே! பாவத்தைவிட்டு விலகியோடுங்கள், கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s