மெல் கிப்சனின் (கத்தோலிக்க) படம்
Mel Gibson’s, The Passion of the Christ
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹொலிவுட் நடிகரான மெல் கிப்சனின் (Mel Gibson) சொந்தத் தயாரிப்பான “கிறிஸ்துவின் பாடுகள்” (The Passion of the Christ). படம் வெளிவருமுன்பே இந்தப்படம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது படம் கீழைத் தேய நாடுகளுக்கும் வந்து கிறிஸ்தவர்கள் அலைமோதிக் கொண்டு தியெட் டர்களை நாடி ஓடிப் படத்தைப் பல தடவை பார்த்து முடித்திருப்பார்கள். பல சபைகளும், கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் இந்தப் படத்திற்கு டிக்கட் வாங்கிக்கொடுத்து அனேகரை வழி அனுப்பி வைத்திருப்பார்கள். இந்தப் படத்தை சபையில் காட்டுவதற்குக் கூட அனேகர் ஏற்பாடு செய்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது. திருமணமும் நடந்து, விருந் தெல்லாம் முடிந்த பின் இந்தப் படம் பற்றிய விமர்சனம் எதற்கு? என்ற எண்ணமும் எனக்குத் தோன்றியது. இருந்தாலும் இதற்குப் பிறகும் இப்படி யான காரியங்கள் நடக்கும்போது கிறிஸ்தவர்கள் எந்தவிதத்தில் சிந்திக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காகவாவது பயன்படுமே என்ற நோக்கத்தில் மெல் கிப்சனின் படத்தைப் பற்றிய இந்த விமர்சனத் தொகுப்பை அளிக்க முடிவெடுத்தேன்.
மெல் கிப்சன் கிறிஸ்தவரல்ல. அவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். படத்தைப் பற்றிக் கருத்துக்கூறியுள்ள கிப்சன், “படம் என்னுடைய தனிப் பட்ட ஆத்மீக நம்பிக்கைகளைக் குறிக்கின்றது. அதை நான் இதுவரை வெளிப் படையாக விளக்கியதில்லை” என்று கூறியுள்ளார். கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஓர் இன்டர்நெட் பத்திரிகை ஆசிரியர், “கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கு இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரலாற்றுச் சந்தர்ப்பம் இது” என்று கிப்சனின் படத்தை வர்ணித்துள்ளார். படமும் அதற்குத் தகுந்தபடி ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஓர் விஷேட நாளான “சாம்பல் புதன்கிழமையில்” அமெரிக்காவெங்கும் வெளியிடப்பட்டது. படத்தை வெளியிட்ட கிப்சனின் நோக்கம் இத்தனைத் தெளிவாக இருந்தபோதும் சுவிஷேச கிறிஸ்தவர்கள் என்று தங்களை வர்ணித்துக்கொள்கிற பில்லி கிரெகமும், ஜேம்ஸ் டொப்சன் போன்றவர்களும் முன்வந்து படத்திற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவில் செட்டில்பேக் (Saddle back) திருச்சபையின் போதகரான ரிக் வாரன் (Rick Warren) ஏழு தியெட்டர் களில் 18,000 டிக்கெட்டுகளை வாங்கி கிறிஸ்தவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். சிந்திப்பதை மூட்டைகட்டி வைத்துவிட்டு உணர்ச்சி வெள்ளத்தில் நீச்சலடிக்கத் துடியாய்த் துடிக்கும் மக்களைக் கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவம் எந்தளவுக்கு இந்தப் படத்தால் பாதிக்கப் படப்போகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது என்னால் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை. சில ஆத்துமாக்களாவது சிந்திக்கும் தேவகுழந்தைகளாக மாறட்டும் என்ற நப்பாசையில் இந்தப் படத்தைப் பற்றிய சில குறைபாடுகளை உங்கள் முன்வைக்கிறேன்.
1. படத்தை எடுப்பதில் பங்கெடுத்த அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதவிசுவாசிகள். தயாரிப்பாளரான மெல் கிப்சன் மட்டுமல்ல, படத்திற்கு ஆலோசனை கூறியவர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக, படத்திற்கு ஆலோசனை தந்தவர்கள் ரோமன் கத்தோலிக்க மத இறையியல் ஆலோசகர்கள். போப் ஜோன் போல் மிமி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, “அன்று நடந்ததைப் பார்ப்பதுபோல் இருக்கிறது” என்று பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இயேசுவை அடிப்படை யாக வைத்து இதுவரை வந்துள்ள படங்களைவிட இது வித்தியாசமானது. ஏனெனில், இது கத்தோலிக்க மதத்தவரால் கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இயேசுவாக நடித்துள்ள நடிகர், “நான் இயேசுவின் பாத்திரத்தில் நடிப்பதால் ஒவ்வொரு நாளும் ‘மாஸில்’ கலந்து கொண்டேன்” கூறியிருக்கிறார். அத்தோடு, “இந்த மனிதனின் பாத்திரத்தில் நடிப்பதால் எனக்குள் சாக்கிரமன்ட்ஸ் (Sacraments) இருப்பது நல்லது என்று நான் மெல் கிப்சனிடம் கூறினேன். அவர் அதற்கு உடனடி யாக ஏற்பாடு செய்தார்” என்று இந்த நடிகர் டெலிவிஷனுக்கு பேட்டியளித்திருந்தார். இது வத்திக்கனின் (Vatican) ஆதரவு பெற்ற கத்தோலிக்க மதப்பிரச்சாரப் படம்.
2. படத்தின் கதை வசனம் முழுவதும் வேதாகமத்தில் இருந்து பெறப் பட்டதல்ல. படத்தின் பெரும்பகுதி கத்தோலிக்க தியான நூல்களில் கொடுக் கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பல பகுதிகள் 18ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கத்தோலிக்க பெண் துறவியான சகோதரி ஆன் எமரிக் (Sister Anne Emmerich) என்பவர் எழுதிய தியான நூலொன்றின் (The Dolorous Passion of Christ) அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் விளக்கப்பட்டிருப்பவற்றை இந்தப் பெண்துறவி கனவுகளின் மூலம் பெற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். படத்தைத் தயாரிப்பதற்கு இந்த நூலே எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது என்று மெல் கிப்சன் பேட்டியளித்திருக்கிறார். வேதாகமத்தில் இல்லாத வற்றையும், கிறிஸ்துவின் வாயில் இருந்து ஒரு போதுமே வந்திராதவற்றையும் படத்தில் சேர்த்து கிறிஸ்து தன் வாழ்நாளில் அனுபவித்ததுபோல் காட்டுவது வேதம் போதிக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்களுக்கு முரணான தாகும். வேதாகமத்தில் இல்லாதவற்றைப் படத்தில் சேர்த்திருப்பது மட்டு மல்ல அதில் தெளிவாக விளக்கப்பட்டிருப்பவையும் படத்தில் சேர்க்கப்பட வில்லை. “படத்தைப் பார்ப்பவர்கள் கிறிஸ்துவின் துயரங்களை பலிபீடத்தில் கொடுக்கப்படும் பலியோடு தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டுமென்பதே படத்தின் நோக்கம். ஏனெனில், இரண்டும் ஒன்றுதான்” என்று தீவிர ரோமன் கத்தோலிக்க மதத்தவரான மெல் கிப்சன் தெளிவாகவே டெலிவிஷன் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். கத்தோலிக்க மதச்சடங்கான மாஸில் (Mass) நிகழ்வதும், கிறிஸ்துவின் கல்வாரி சிலுவைப்பலியும் ஒன்றுதான் என்று படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைப்பதே படத்தைத் தயாரித்த வர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. ரோமன் கத்தோலிக்க மாஸ் சடங்கு மூலம் கிறிஸ்து தொடர்ந்தும் பலியாகக் கொடுக்கப்படுவதை வேதாகமம் முற்றாக நிராகரிக்கிறது. ஒருமுறை மட்டுமே வரலாற்றில் மரித்த இயேசு தொடர்ந்தும் எந்தவிதத்திலும் மரித்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி அவர் தொடர்ந்தும் பலியிடப்படுவதாகப் போதிப்பது பிசாசின் போதனை. என்னுடைய வார்த்தையோடு எதையும் சேர்க்கக் கூடாது, அதில் இருந்து எதையும் குறைக்கவும் கூடாது என்ற இயேசுவின் வார்த்தைகளையும் மெல் கிப்சனின் படத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.
3. இந்தப் படத்தின் மூலம் விளக்கப்படும் இறையியல் போதனைகள் வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணானவை.
(அ) வேதாகமம் போதிக்கும் திருவிருந்தில் அது நிகழும் ஒவ்வொரு முறையும் கிறிஸ்து பிதாவுக்கு முன் பலியிடப்படுவதில்லை. இயேசு, (யோவான் 19:30) தான் சிலுவையில் மரிக்கின்றபோது “முடிந்தது” என்று கூறி தன் தலையைச் சாய்த்தார். அவர் முடிந்துவிட்டதாக அறிவித்த செயல் தொடர்ந்தும் நிகழ்வதாக ரோமன் கத்தோலிக்க மதம் பொய்ப் போதனை செய்து வருகிறது. கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களுக்கு ரோமன் கத்தோலிக்க மதம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் கிறிஸ்து ஒவ்வொரு முறையும் மாஸ் நடக்கும்போது தொடர்ந்தும் பலியிடப்படுவ தாக அது நம்புவதால்தான். இதனால்தான் கத்தோலிக்க மதம் தன்னுடைய குரு மடங்களிலெல்லாம் கிறிஸ்துவின் துயரங்களைச் சித்தரிக்கும் படங்களை அதிகமாக வரைந்து வைத்திருக்கும். கத்தோலிக்க தியானங்களிலும், ஜெபங்களிலும் இதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல வெள்ளிக் கிழமைக்கு முன் லெந்து காலத்தில் நாற்பது நாட்களுக்கு விரதம் இருந்து வேதம் போதிக்காததையெல்லாம் செய்து கிறிஸ்துவின் சரீரப்பாடுகளை நினைவு கூறும்படி சொல்கிறது கத்தோலிக்க மதம். இவற்றின் மூலம் மாஸ் பற்றிய தன்னுடைய போதனைகளை மக்கள் மனத்தில் பதியவைப்பதே அம்மதத்தின் நோக்கமாக இருக்கிறது. இதனால்தான் இந்தப் படத்தில் கிறிஸ்துவின் சிலுவைத் துயரங்களைத் தத்ரூபமாகப் படமாக்குவதில் (வேதாகமத்திற்குப் புறம்பான போதனைகளையும் இணைத்து) அதிக கவனம் செலுத் தப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க மாஸ் பற்றிய இந்தப் பொய்யையே மெல் கிப்சனின் படம் வலியுறுத்துகிறது. இதை எப்படி மெய்க்கிறிஸ்தவ சுவிசே ஷத்தை அறிவிக்கப் பயன்படுத்த முடியும்?
(ஆ) அடுத்ததாக வேதாகமம் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவம் அவர் சிலுவையில் அடைந்த துன்பங்களில் தங்கியிருப்பதாக ஒருபோதும் போதிக்கவில்லை. அவர் நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்யும் கிருபாதாரப் பலியாக இருந்தார் என்பதே வேதபோதனை. கிருபா தாரப் பலி என்பது கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தேவகோபத்தைத் தம்மேல் சுமந்து, நமது பாவங்களைத் தன்னுடைய கணக்கில் ஏற்று நமக்கு விடுதலை பெற்றுத்தந்ததைக் குறிக்கிறது (1 யோவான் 4:10). இதை மெல் கிப்சனின் படம் எங்குமே சுட்டிக்காட்டவோ விளக்கவோ இல்லை. மாறாக தத்ரூபமாக கிறிஸ்துவின் சரீரப்பாடுகள் மட்டும் ரோமன் கத்தோலிக்க மதப்பிரச்சாரத்திற்காகப் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
(இ) கிறிஸ்துவின் சிலுவை மரணப் பரிகாரப்பலி அவருடைய கீழ்ப்படிவின் ஒருபகுதி மட்டுமே. அதன் மறுபாதி படத்தில் தலைகாட்டவில்லை. ஏனெனில், ரோமன் கத்தோலிக்க மத இறையியலில் அதற்குப் பங்கில்லை. அதாவது, கிறிஸ்து தன்னுடைய பிதாவின் நியாயப்பிரமாணத்தை ஒன்று விடாமல் பூரணமாகக் கைக்கொண்டார் என்பதே அதன் மறுபாதி. பாவிகள் மீதிருக்கும் தேவகோபம் நீக்கப்பட கிறிஸ்துவின் சிலுவை மரணம் மட்டும் போதாது. கிறிஸ்து பிதாவின் அத்தனைக் கட்டளைகளையும் ஒன்றுவிடா மல் பரிபூரணமாகத் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே, கிறிஸ்துவை விசுவாசிக்கும் எவரும் நீதிமான்களாக பிதாவால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் (2 கொரிந்தியர் 5:21). இயேசு கிறிஸ்து இந்த இரண்டையும் தவறாது தன் வாழ்வில் நிறைவேற்றினார். இந்தப் போதனைக்கு ரோமன் கத்தோலிக்க மதத்தில் இடமில்லை; படத்திலும் பங்கில்லை. மெய்க்கிறிஸ்தவ சுவிசேஷத்தை விளக்க இந்தப் படம் ஒரு போதும் பயன்படாது.
4. சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த அனேக போதகர்கள் இந்தப் படம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று துள்ளிக்குதிக்கிறார்கள். ஒரு போதகர், “இந்தக் காலத்தில் ஓய்வு நாட்களில் விரிவுரைகளை சபைகளில் கேட்டு ஆத்துமாக்களுக்கு அலுத்துப் போய் விட்டது. இந்த நவீன காலத்தில் சத்தியத்தை விளக்க இந்தப் படம் தான் சரியான வழி” என்று யெரபோகாமைப்போல பேசியிருக்கிறார். “வாழ்நாள் பூராவும் கொடுக்கப்படும் பிரசங்கங்களை ஒரே படத்தில் பார்க்கிறேன்” என்று பில்லி கிரெகம் கூறியிருக்கிறார். உருவச் சிலைகளோ, அடையாளங்களோ, நாடகங்களோ, நடனமோ, படமோ, காட்சிகளோ அல்ல, பிரசங்கம் மட்டுமே மனித இதயத்தைப் பிளந்து, பாவத்தை உணர வைக்கக்கூடிய சக்தி படைத்தது என்பது இந்த ஊழியக்காரர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. கத்தோலிக்க மதம் மக்கள் வேதத்தை வாசிக்க முடியாமல் செய்து, சிலைகளின் மூலமும், உருவங்களின் மூலமும், காட்சிகள் மூலமும் கர்த்தரை வணங்கச் செய்த, வரலாற்றுச் சீர்திருத்தவாத காலத்திற்கு முற்பட்ட காலங்களில், மக்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டு சத்தியம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை நாம் மறக்கக்கூடாது. படங்களும், காட்சிகளும் சுவிசேஷ சத்தியத்தைக்குறித்து பாவிகளை சிந்திக்கவைக்க முடியாது. காட்சி கண்களைக் கவரும், உணர்ச்சிகளைத்தாக்கும், தற்காலிகமானதோர் அனுபவத்தைக் கூட அளிக்கும். ஆனால், விசுவாசத்துக்குரிய ஏதுக்களை அதனால் ஒருபோதும் கொடுக்க முடியாது. அதற்கு கர்த்தர் தன் வார்த்தையையே தந்திருக்கிறார். வார்த்தை ஆவியின் வல்லமையோடு தரக்கூடிய நித்திய ஜீவனை மெல் கிப்சனின் படத்தால் ஒருபோதும் தர முடியாது. பிரசங்கத்தைக் கேட்காமல் ஒருவனும் கிறிஸ்துவை அறிக்கையிட முடியாது என்று ரோமர் 10ல் பவுல் கூறியிருக்கிறார். “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டா லும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு . .” என்று பவுல் திமோத்தேயுவுக்கும், நமக்கும் அறிவுரை செய்கிறார் (2 தீமோத்தேயு 4:2-4). நமது பணி இன்று மக்களுக்கு சினிமா காட்டுவது அல்ல, வார்த்தைகளினால் சுவிசேஷப் பிரசங்கம் செய்வது. ஏனெனில், பிரசங்கம் எதற்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதை நிறைவேற்றக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறது என்று கர்த்தரே சொல்லியிருக்கிறார் (ஏசாயா 55:9-11). பிரசங்கத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நாம் வெளியிட்டுள்ள “பிரசங்கம் ஏன்!” என்ற நூலை உடனடியாகப் பெற்று வாசியுங்கள்.
5. கிறிஸ்து கமலஹாஷனைப் போல அழகாக இருந்தார் என்று யார் சொன்னது? அவர் கவுன்டமணியைப்போலக்கூட இருந்திருக்கலாம். வேதம் சொல்லுகிறது, “அவருக்கு அழகுமில்லை; சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.” (ஏசாயா 53:2) என்று. மெல்கிப்சனின் படத்தில் இயேசுவாக நடிக்கும் நடிகர் (Jim Caviezel) உருவத்தில் மிகவும் ஆரோக்கியமும், அழகும் கொண்ட மனிதன். இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு இயேசு இனி இந்த ரூபத்தி லேயே அவர்கள் கண்களை மூடுகிறபோது தோன்றுவார். புதிய ஏற்பாடு முழுவதிலும் கிறிஸ்துவின் உருவத்தைப் பற்றிய விளக்கங்களையே நாம் பார்க்க முடியாது. அவருடைய உருவத்தோற்றத்தை நாம் அறிந்து கொள்வது அத்தனை முக்கியமானதாக இருந்தால் புதிய ஏற்பாடு தேவையான அளவுக்கு நமக்கு அந்த விளக்கங்களைத் தந்திருக்கும். மாறாக, ஆவியோடும், சத்தியத்தின் மூலமுமாகவுமே நாம் கர்த்தரை ஆராதிக்க வேண்டியிருப்பதால் புதிய ஏற்பாடு இயேசுவின் தோற்றத்தைப் பற்றிய விளக்கங்களைத் தர வில்லை. அத்தோடு, அவர் தேவனாகவும் இருந்திருப்பதால் தெய்வீக மயமான தேவமனிதனை நாம் முழுமையாக படத்தில் காட்டிவிட முடியாது.
இதுவரை படத்தைப் பற்றிய ஐந்து குறைபாடுகளைப் பார்த்தோம். இனி இந்தப் படத்திற்கு கிறிஸ்தவர்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது என்பதற்கான கீழ்வரும் நான்கு காரணங்களைத் தருகிறேன். இவற்றை ஆராய்ந்து பார்த்து நீங்களே ஒரு முடிவெடுங்கள்.
1. இந்தப்படம் நம்முடைய மனதில் இயேசு கிறிஸ்து பற்றிய அரைகுறையான காட்சியைப் பதிய வைக்கும்.
தவறான இறையியல் கருத்துக்களை நாம் கொண்டிருந்தால் வேதத்தைப் படித்து அவற்றை மாற்றிக் கொள்வது சுலபமான காரியம். ஆனால், தவறான ஒரு காட்சியை நம் மனதில் பதியவைத்துக் கொண்டிருந் தால் அதை அகற்றி விடுவது சுலபமான காரியமல்ல. காட்சி வலிமைமிக்கது. இந்தப் படத்தில் இயேசுவாக நடிப்பவரின் பிம்பம் எத்தனை ஆத்துமாக்கள், இளைஞர்களுடைய மனங்களில் ஆழமாகப் பதியப்போகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். இயேசு இப்படிததான் இருந்திருப்பார் என்று ஆழமாகப் பதியப்போகும் எண்ணத்தை அவர்கள் தங்களுடைய மனதில் இருந்து அகற்றிக் கொள்வது சுலபமானதல்ல. ஜெபிக்கும்போதெல்லாம் படத்தில் இயேசுவாக நடிக்கும் மனிதர்தான் கண்முன்னால் வந்து நிற்பார். எந்தவித உருவச்சிலைகள், அடையாளங்கள், காட்சிகளை வைத்து தன்னை நினைவு படுத்திக் கொள்ளவும், ஆராதனை செய்யவும் கூடாது என்று பத்துக் கட்டளைகளின் இரண்டாம் கட்டளை மூலமாக கர்த்தர் தந்துள்ள போதனையை நாம் கடைப்பிடிக்க இந்தப் படம் இடறலாக அமையும்.
2. இந்தப்படம் வேத வரலாறு பற்றிய அரைகுறையான விளக்கத்தை மக்கள் முன் வைக்கிறது.
இந்தப்படத்தின் நிகழ்ச்சிகள், வசனங்கள், கருத்துக்கள் அனைத்திற்கும் ஆதாரம் 18ம் நூற்றாண்டு ஆகஸ்தீன் குருத்துவத்தைச் சேர்ந்த ஆன் எமரிக் (Sister Anne Emmerich) எழுதிய தியான நூல் என்பதை மெல் கிப்சன் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். வேதத்தோடு தொடர்பில்லாத, ஒரு பெண் துறவியின் கற்பனைகலந்த நூலொன்றைப் பயன்படுத்தி இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரித்து அதை வரலாற்று நிகழ்ச்சியாகக் காட்ட முனைந்திருப்பதால் கிறிஸ்துவின் வரலாற்றைப் பற்றிய மிகத்தவறான விளக்கங்களையே மக்கள் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது.
3. இந்தப்படம் வேத சத்தியத்தைப் பற்றிய அரைகுறையான விளக்கங்களை மக்கள் முன் வைக்கின்றது.
ஏற்கனவே நாம் பார்த்ததுபோல் இந்தப் படம் கிறிஸ்துவின் பாடுகளை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டி அதுவே கிறிஸ்துவின் வாழ்க்கையில் மிக முக்கிய அம்சமாகக் காட்டுகிறது. ஆனால், வேதம் அதை வலியுறுத்திப் பேசவில்லை. கிறிஸ்துவின் மரணம் பாவிகள் பாவநிவாரணமடைய அவசியம். கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் அவர்கள் நீதிமான்களாக அவசியம். இவற்றைப் படம் எந்தவிதத்திலும் விளக்கவில்லை. கத்தோலிக்கர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் மட்டுமே பெரிது படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வேதம் வலியுறுத்தும் கிறிஸ்துபற்றிய போதனைகளை பார்ப்பவர்கள் அறிந்துகொள்ள முடியாமல் போவது மட்டுமல்ல, சத்தியமும் முரண்பாடானவிதத்தில் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
4. இந்தப் படம் வேதத்திற்குப் புறம்பான ஆத்மீக அனுபவங்களை ஆத்துமாக்களுக்கு அளிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு பிரமாதமாக இருக்கும் என்று சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பலர் சொல்லி வருகிறார்கள். ஆனால், இதனால் பெரிய ஆபத்துதான் காத்திருக்கிறது. ஏற்கனவே சினிமாவிற்கு அடிமையாகி, உணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்துவரும் தமிழ் மக்கள் நவீன டிஜிட்டல் ஒலி, ஒளித் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கண்களையும், காதுகளையும், மனதையும் அசைத்துப் பிழியும் வகையில் இரத்தம் சிந்துகிற கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் நடிகரைப் பார்க்கிறபோது கண்கள் கலங்கி, உணர்ச்சிகள் தாக்கப்பட்டு தற்காலிகமான போலியான தோர் அனுபவத்தை தியெட்டரில் பெற்று அதைத் தவறாகத் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆத்மீக அனுபவமாகக் கருதிவிடக்கூடிய பேராபத்து இருக்கின்றது. தமிழகத்தில் “அம்மன்” படம் வெளிவந்தபோது மக்கள் அதைப் பார்த்து விட்டு தியெட்டரில் சாமியாடியதைப்போல இந்தப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு ஆத்மீக அனுபவத்தை அடைந்ததாக சொல்லுபவர்களுக்கு சபைகள் திருமுழுக்கு கொடுக்க ஆரம்பித்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது.
சமீபத்தில் பிறேசில் நாட்டில் இந்தப் படம் வெளியிடப்பட்டபோது 56 வயது மாது ஒருவரும், 43 வயது பிரஸ்பிடீரியன் போதகர் ஒருவரும் தியேட்டரில் படம் பார்க்கும்போது மாரடைப்பால் மரணமாயிருக்கிறார்கள். படத்தில் காட்டப்பட்டுள்ள அளவுக்கு மீறிய வன்செயலே (Violence) இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. விசுவாசிகளே! கர்த்தரை அறியாத மெல் கிப்சன் பணம் சேர்க்கும் நோக்கத்திற்காக இரத்தம் சொட்டச்சொட்டத் தயாரித்திருக்கும் இந்தப்படத்தால் கர்த்தர் எப்படி மகிமையடைய முடியும்?