கொள்கைகளற்ற கிறிஸ்தவமா?

“இயேசு போதும், கொள்கை வேண்டாம்” என்பது தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் கருத்தாக இருக்கின் றது. இயேசு வேறு, கொள்கை வேறு என்று பிரித்துப் பார்ப் பதை சபைப் போதகர்களில் இருந்து சாதாரண கிறிஸ்தவர்கள் வரை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை ஒரு போதகர் சொன்னார், “இறையியல் கோட்பாடு இருபத்தைந்து வீதம் இருந்தால் போதும், எழுபத்தைந்து வீதம் நடைமுறைக்கு அவசியமான காரியங்களில் தான் போதனை தேவை” என்று. இறையியல் வேறு, நடைமுறைப் போதனை வேறு என்று பிரித்துப் பார்க்கும் இந்தப் போதகர் தமிழ் கிறிஸ்தவ போதகர்களை பிரதிபலிக்கின்ற ஒரு உதாரணம்தான்.

இறையியல் கொள்கைகளைக் கண்டு தமிழ் கிறிஸ்தவம் பயந்து ஓடுவ தற்குக் காரணமென்ன? இறையியல் கொள்கைகளும், போதனைகளுமற்ற பிரசங்கங்கள் தமிழ் கிறிஸ்தவத்தை பல்லாண்டுகளாக அலைக்களித்து வருவதற்குக் காரணமென்ன? கொள்கைகளை நிராகரித்து இயேசுவுக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தமேயில்லை என்று தமிழ் கிறிஸ்தவம் முடிவு கட்டியிருப்பதற்குக் காரணமென்ன? என்ற கேள்விகளை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரிகிறது.

(1) பெந்தகொஸ்தே இயக்கம் உருவாவதற்கு முன்பு பாரம்பரிய சபைகள் (Traditional Churches) ரோமன் கத்தோலிக்க மதத்தைப்போல மாறி சத்தியத்தை விற்று சடங்குகளுக்கு இடம் கொடுத்ததால் ஆத்துமாக்கள் பிரசங்கப் பஞ்சத்தால் வாட ஆரம்பித்து சத்தியத்தை அறியமுடியாமல் சடங்கு களை சத்தியமாகக் கருதி வளரும் நிலை உருவானது. இதன் காரணமாக சீ. எஸ். ஐ, மெத்தடிஸ்டு, லூதரன், ஆங்கிலிக்கன் சபைகள் அனைத்தும் இன்றும் சடங்குகளை மட்டுமே பின்பற்றி சபை நடத்தி வருகின்றன. இச்சபைகளுக்குப் போகிறவர்களுக்கு சத்தியமென்றாலே என்னவென்று தெரியாது. இவர்கள் மத்தியில் சத்தியத்தைப் பிரசங்கிக்கிற போதகர்கள் விரல்விட்டு எண்ணுமளவுக்குக்கூட இல்லை. சடங்குகளைப் பின்பற்றி மக்களை இன்றும் இருட்டில் வைத்திருக்கின்றன இந்த சபைப்பிரிவுகள்.

(2) இரண்டாவதாக, கொள்கைகளைவிட்டு விலகியோடும் நிலையில் தமிழ் கிறிஸ்தவம் இருப்பதற்கு பெந்தகொஸ்தே இயக்கம் ஒரு முக்கிய காரணம். தனிமனித ஆத்மீக அனுபவத்திற்கு முதல் எதிரி கொள்கைகளே என்ற கோஷத்தோடு ஆரம்பமான பெந்தகொஸ்தே இயக்கம், பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய வேதம் போதிக்காத போதனைகளை உருவாக்கி ஆத்துமாக்கள் தங்களுடைய ஆத்மீக வளர்ச்சிக்கு நேரடியாக ஆவியை நாடிப்போக வேண்டும் என்று போதிக்க ஆரம்பித்ததால் வேதம் புறக் கணிக்கப்பட்டு வேதகொள்கைகள் நிராகரிக்கப்பட்டன. “சொந்த அனுப வமே சொர்க்கம்” என்று அலைய ஆரம்பித்த தமிழ் உள்ளங்கள் ஆவியின் சத்தியவேதம் என்று ஒன்றிருப்பதையே மறக்க ஆரம்பித்ததால் கொள்கை களற்ற போலிக் கிறிஸ்தவம் தமிழ் மக்கள் மத்தியில் தலைவிரித்தாட ஆரம்பித்தது.

(3) மூன்றாவது காரணமாக தமிழ் பேசும் மக்கள் வாழும் இடமெல்லாம் பல்கிப்பெருகி கிறிஸ்தவ உலகைக் கைக்குள் போட்டு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அநேக கிறிஸ்தவ ஸ்தாபனங்களையும் சேர்த்துக் கொள் ளலாம். இந்த ஸ்தாபனங்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு கொள் கைகள் தடையாக இருக்கும் என்ற காரணத்தால் எல்லாப் போதனை களையும், சபைகளையும் அரவணைத்துப் போகும் போக்கைப் பின்பற்றி வேதம் சார்ந்த கொள்கைகளை வாழமுடியாதபடி செய்து வைத்திருக்கின்றன.

(4) நான்காவதாக, தமிழ் கிறிஸ்தவர்கள் மனதில் கொள்கைகள் கிறிஸ்தவர்களைப் பிரித்து வைக்கும் என்ற தவறான எண்ணம் ஊறிப்பதிந்திருக்கிறது. இந்தத் தப்பெண்ணத்தாலும், கிறிஸ்தவர்கள் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதற்காகவும் பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்கள் கொள்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்கள். இப்படிக் கொள்கைகளைப் புறக்கணித்ததால் போலிப் போதனைகள் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன.

கொள்கை என்றால் என்ன?

முதலில் கொள்கை (Doctrine) என்றால் என்ன என்பதை ஆராய்வது அவசியம். கொள்கை என்ற வார்த்தையை சித்தாந்தம், போதனை, கோட்பாடு என்ற பெயர்களிலும் அழைக்கலாம். ஏதாவதொன்றைப் பற்றிய வரையறுக்கப்பட்ட ஒரு முடிவே கொள்கை. “உலகம் உருண்டை வடிவ மானது” என்று கூறினால் நாம் உலகத்தைப் பற்றிய வரையறுக்கப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கின்றோம் என்று அர்த்தம். அது உலகத்தைப் பற்றிய ஒரு கொள்கை. அந்த முடிவை நாம் தெளிவான சில காரணங் களின் அடிப்படையில் எடுக்கிறோம். உலகத்தைப் பற்றி இப்படி நாம் பல முடிவுகளுக்கு வந்து பல கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக் கிறோம். உலகம் பற்றிய இந்தக் கொள்கைகள் அவசியமில்லை என்று வாதாடுகிறவர்கள் உலகத்தில் இருக்க முடியாது.

எந்தக் காரியத்தைப் பற்றியும் மனிதன் வகுக்கும் கொள்கைகள் சரியான வையாக இருந்துவிடாது. தவறான கொள்கைகளும் உண்டு. “மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான்” என்றார் டார்வின். அது தவறான கொள்கை என்பதை நாம் சில முக்கிய ஆதாரங்களை வைத்து நிராகரிக்கிறோம். அதுவும் ஒரு கொள்கைதான் ஆனால், தவறான கொள்கை.

மனிதகுலம் இருக்குமிடமெல்லாம் அவர்கள் மத்தியில் கொள்கைகள் இருக்கின்றன. கொள்கைகளற்ற ஒரு சமுதாயத்தை நாம் பார்க்க முடியாது. காட்டு மனிதனான ஆதிவாசிகூட மொழி, கலை, சமூக வளர்ச்சிகளை அடையாத நிலையிலும் தனக்கென்று சில கொள்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறான். மனிதன் மனிதனாக வாழ கருத்துக்களும், கொள்கைகளும் அவசியம். கொள்கைகள் அவசியமில்லை என்று கூறுவது கூட ஒரு கொள்கை என்பதை அறியாதவர்கள் இருக்கிறார்களா? நம்மைப் படைத்த கர்த்தர் நமக்கு சிந்திக்கும் மனதைத் தந்து, மொழியைத் தந்து தம்மைப் பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த உண்மைகளை அவர் இயற்கையின் வாயிலாகவும், எழுத்தில் நமக்களித்துள்ள வேதத்தில் இருந்தும் அறிந்து கொள்கிறோம். அப்படியாக கர்த்தருடைய குணாதிசயம், தன்மை, செயற்பாடு, கட்டளைகள் என்பவை பற்றி நாம் அறிந்து கொள்ளும்படி வெளிப்படுத்தப்பட்டிருக்கிற உண்மைகளே கொள்கைகள். இதனை ‘இறையியல்’ என்ற பெயரிலும் அழைக்க லாம் (Theology). அதாவது இறைவனைப் பற்றிய உண்மைகள் இறையியல் அல்லது இறையியல் கொள்கைகள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் பார்க்கிறபோது கொள்கைகள் வேண்டாம் என்று கூறுவது கர்த்தரைப் பற்றிய சத்தியங்கள் எனக்குத் தேவையில்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும். கர்த்தரைப் பற்றிய சத்தியங்களை நிராகரிப்பவர்கள் கர்த்தரைப் பற்றிய எந்த அறிவும் இல்லாதவர்களாக மட்டுமே இருக்க முடியும். அது இறுதியில் அவர்களுடைய ஆத்மீக வாழ்க்கைக்கு பெருந்தீங் காகவே போய் முடியும்.

இயேசு மட்டும் போதுமா?

“கொள்கை வேண்டாம், இயேசு மட்டும் போதும்” என்ற வாதத்தை எடுத்துக் கொள்வோம். இது கேட்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால், இதை ஆராய்ந்து பார்த்தால் பெரும் ஆபத்திருப்பதை புரிந்து கொள்ளலாம். இயேசு வேறு, இறையியல் கொள்கைகள் வேறா? இயேசு கிறிஸ்து இறையியல் கோட்பாடுகளை நிராகரித்தாரா? இறையியல் கொள்கைகளற்ற இயேசு கிறிஸ்துவை நாம் வேதத்தில் பார்க்கிறோமா? என்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பது அவசியம். இயேசு கிறிஸ்து இந்து மதத்தில் நாம் பார்ப்பது போல் வெறும் கல்லல்ல. அவர் ஜீவனுள்ள ஒரே தேவனின் குமாரன். அவருடைய தெய்வீகத்தையும், மானுடத்தையும் பற்றி நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவர் கர்த்தர். அவருடைய குணாதிசயங்கள், வல்லமை, பரிசுத்தம், போதனைகளைப் பற்றி வேதம் விளக்குகிறது. அப்படியிருக்க இயேசுவை அவருடைய குணாதிசயங்களிலிருந்தும், போதனைகளிலிருந்தும் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும். அப்படிப் பிரித்துப் பார்ப்பது அவரை ஜீவனற்ற தேவனாக, வெறும் கல்லாக்க  முயல்வதற்கு ஒப்பானதாகும். இயேசு கிறிஸ்துவை அவரைப் பற்றிய போத னைகளிலிருந்து பிரிக்க முடியாது. இயேசு வேறு, அவருடைய போதனைகள் வேறு அல்ல. இயேசுவைப் பற்றிய அறிவில் நாம் வளர வேண்டுமானால் அவரைப் பற்றி வேதம் தரும் போதனைகளில் இருந்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். வேறுவிதங்களில் அவரை அறிந்து கொள்ள முடியாது. இயேசுவே தன்னுடைய வார்த்தையில் தம்மைப் பற்றி விளக்கியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவை அவருடைய வார்த்தையில் இருந்து பிரிக்க முடியாது. அவருக்கு ‘வார்த்தை’ என்ற பெயரும் இருக்கிறது (யோவான் 1).

“கொள்கை வேண்டாம், இயேசு மட்டும் போதும்” என்ற குரல் எழுவதற்கு காரணம் இன்று தமிழர் மத்தியில் கிறிஸ்தவம் என்ற பெயரில் காணப்படும் கூட்டம் வேதத்தின் அருமை தெரியாமல் அதைப் புறக்கணித்திருப்பதுதான். வேதப் பிரசங்கத்தை இல்லாமலாக்கி சடங்குகள் நிறைந்து வழியும் சபைகளாக பாரம்பரிய சபைப்பிரிவுகள் இருந்து வருகின்றன. இயேசு கிறிஸ்துவின் பெயர் அந்த சபைப்பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தபோதும், கிறிஸ்துவின் சத்தத்தை கேட்கமுடியாதபடி வேதம் அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. வேதத்தின் பொதுவான போதனைகளைக்கூட அறியாமல் ஆராதனை என்ற பெயரில் அங்கெல்லாம் மக்கள் கூடி வெறும் சடங்குகளைப் பின்பற்றி வருகிறார்கள். அங்கிருக்கும் போதகர்களுக்கு வேத அறிவில்லை, வேத நம்பிக்கையுமில்லை. அரசரடி இறையியல் கல்லூரி போன்ற இடங்களில் பட்டங்களைப் பெற் றுக்கொண்டு போதகப்பணிபுரிய வந்திருக்கும் பலருக்கு கர்த்தரைப் பற்றிய வேத அறிவோ பயமோ இருப்பதில்லை. தங்கள் சொந்த வாழ்க்கையில் மறுபிறப்படைந்து இயேசுவை அறியாமல் இருப்பவர்களால் அவரைப் பற்றி ஆத்துமாக்களுக்கு எப்படி விளக்க முடியும்? இயேசு கிறிஸ்துவும் அவருடைய வழிபாடும் வெறும் சடங்காக சபைகளில் காணப்படுகிற போது சத்தியம் அங்கே இல்லாமல் போய் விடுகிறது.

பாரம்பரிய சபைகள் அல்லாத சபைப்பிரிவுகளான சகோதரத்துவ சபைகளிலும், பாப்திஸ்து சபைகளிலும் வேதம் பயன்படுத்தப்படுகிறபோதும் பெரும்பாலான போதகர்களும், மூப்பர்களும் அதில் போதுமான அறிவைக் கொண்டிராமலிருப்பதால் வேதத்தில் இருந்து பிரசங்கிக்கப்படும் பிரசங்கங்களும், போதனைகளும் சத்தில்லாமல் இருக்கின்றன. அவற்றில் போதனைகள் இல்லை, ஏனெனில், போதனைகளைக் கொடுக்குமளவுக்கு பிரசங்கிக்கிறவர்களுக்கு வேதஞானமில்லை. வேதஞானமில்லாததால் வேதக்கோட்பாடுகளே அவசியமில்லை என்று அவர்கள் நிராகரித்து விடுகிறார்கள். பத்தாம் வகுப்பு கூடப்படித்துப் பாஸ் பண்ணாத நூற்றுக்கணக்கான போதகர்களை இவர்கள் மத்தியில் பார்க்கலாம். சிந்திக்க மனமிருந்தபோதும், சிந்திக்கும் ஆற்றலில்லாமல் தங்களை சமுதாயத்தில் உயர்த்திக்கொள்ள உதவும் ஏணியாக கிறிஸ்தவ ஊழியத்தைப் பயன்படுத்தி காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஊழியம் செய்யும் ஆத்துமாக்களுக்கு வேதம் போதிக்கும் மெய்யான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய போதனைகளை அறிந்துகொள்ள முடிவதில்லை. அவர்களும் போதனைகளும், கொள்கைகளும் ஆத்தும விருத்திக்கு உதவாது என்ற எண்ணத்தோடு காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சகோதரத்துவ சபைகள் இறையியல் கல்லூரிகளை நிராகரிக்கின்றன. ஒருவிதத்தில் அது பாராட்டப்பட வேண்டிய காரியம்தான். ஏனெனில் இந்திய இறையியல் கல்லூரிகளில் அதிகமானவை இறைவன் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்கவே பிறந்திருக்கின்றன. ஆனால், இதற்காக இறையியல் அறிவே தேவை இல்லை என்று இவர்கள் முடிவு கட்டியிருப்பது ஆபத்தானது. வேத அறிவை வேறுவழிகளில பெற்றுக்கொள்ள இவர்கள் முயல்வதில்லை. இறையியல் படிப்பதே பேராபத்து என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருப்பதுபோல் தெரிகிறது. இக்காரணங்களால் வேத போதனைகளால் அலங்கரிக்கப்படாத ஒரு இயேசு கிறிஸ்துவை இந்த சபைப்பிரிவுகளில் பார்க்க முடிகிறது. இயேசு கிறிஸ்துவின் இறையாண்மை, தெய்வீகம், மனிதத்துவம், அவருடைய சிலுவைப் பலியின் மேன்மை, அது யாருக்காக நிறைவேற்றப்பட்டது? அவருடைய இராஜ் யத்தின் அருமை பெருமைகள், அவர் தம்முடைய திருச்சபையில் செய்யும் கிரியைகள் ஆகியவை பற்றியும் இன்னும் எத்தனையோ வேதபோதனை களையும் இவர்கள் பிரசங்கிக்கும் இயேசுவில் ஆத்துமாக்களால் பார்க்க முடிவதில்லை. கத்தோலிக்க மதம் போதிக்கும் இயேசுவுக்கும், கிறிஸ்தவம் போதிக்கும் இயேசுவுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடுகூட இவர்களுக்குத் தெரிவதில்லை. இவர்களுடைய இயேசு கிறிஸ்து வேத போதனைகளோடு சம்பந்தமில்லாதவராக இருக்கிறார். வேதபோதனை களில் இருந்து பிரித்துக் காட்டப்படும் இயேசு கர்த்தருடைய ஒரே குமாரனாக ஒருபோதும் இருக்க முடியாது.

அனுபவம் போதும், கொள்கைகள் வேண்டாம்

பெந்தகொஸ்தே இயக்கங்கள் அனுபவத்தை மட்டும் அடிப்படையாக வைத்து காலத்தைப் போக்கி வருகின்றன. தனி மனித அனுபவம் இவர்கள் மத்தியில் ஹிட்லரைப் போல ஆட்சி செய்கிறது. வேத போதனைகளைப் பற்றி இவர்கள் எள்ளளவும் கவலைப்படுவதில்லை. வேதம் வெளிப்படையாக இவர்களால் இன்று புறக்கணிக்கப்படுகிறது. தங்களுடைய சொந்த அனுபவத்தை நியாயப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே இவர்கள் வேதத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுய அனுபவத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் பெந்தகொஸ்தே இயக்கம் வேத போத னைகளுக்கும், கொள்கைகளுக்கும் இடம் கொடாதிருப்பதில் ஆச்சரிய மில்லை. அவ்வாறு இடம் கொடுத்தால் அந்த இயக்கம் இல்லாமல் போய் விடும்.

பெந்தகொஸ்தே இயக்கம் வேதம் போதிக்காத இயேசு கிறிஸ்துவை பிரசங்கிக்கிறது. அதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ‘அனுபவம்’ என்ற மாயமானின் வலையில் சிக்கி அலைந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நான் தென்னிந்தியாவுக்குப் போயிருந்தபோது தினகரனின் மகன் பால் தினகரனின் ஒரு பிரசங்கத்தை டெலிவிஷனில் கேட்க நேர்ந்தது. தன்னுடைய சொந்த அனுபவத்தை விளக்கி கர்த்தரை நம்பும்படி அவர் பேசினார். தான் டாக்டர் பட்டம் பெற பரீட்சை எழுதியபோது பரிசுத்த ஆவியைத் தன் பக்கத்தில் வந்து இருந்து பரீட்சை எழுத உதவுமாறு பால் தினகரன் கேட்டாராம். அந்த வேண்டுகோளை ஏற்று அவருக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் பரிசுத்த ஆவி வந்து அமர்ந்து பால் தினகரனின் பரீட்சைத் தாளில் இருந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தந்து பரீட்சையில் பாஸ் பண்ண வைத்தாராம். இதுவே பால் தினகரனின் பிரசங்கத்தின் சாரம். கர்த்தரை நம்புகிற அனைவரும் இந்தமுறையில் பரீட்சையில் பாஸ் செய்ய பரிசுத்த ஆவி உதவுவார் என்று பால் தினகரன் அன்று கூறக்கேட்டேன். இது சரியாகப்படவில்லையே. உழைக்காதவனுக்கு ஊதியம் இல்லை என்றும், சோம்பேறிக்கு சோறில்லை என்றும் தன்னுடைய வார்த்தையில் சொல்லியிருக்கும் கர்த்தர் இப்படி பரீட்சை எழுதுகிறபோது பக்கத்தில் இருந்து கேள்விகளுக்கு பதில் சொல்லி யாரையும் பாஸ் பண்ண வைக்க மாட்டாரே, அது காப்பி அடிப்பதற்கு சமம் அல்லவா? என்று சிந்திக்கின்ற தமிழ் நெஞ்சத்தை எங்காவது பார்க்க முடிகிறதா? பால் தினகரனைப் பற்றித் தப்பாக பேசுகிறாரே என்று துடிதுடித்துப் போகின்ற இதயங்கள் தான் அதிகம். பால் தினகரன் இப்படிப் பேசக் காரணம் என்ன? சொந்த அனுபவம் ஹிட்லரைப் போல பெந்தகொஸ்தே இயக்கத்தில் ஆட்சி செய் வதால்தான். வேதத்தை வைத்து எவர் சொல்வதையும் ஆராய அவர்கள் இடம் கொடுப்பதில்லை. வேதத்தில் நாம் பார்க்க முடியாத ஒரு இயேசு வைக் காட்டி இவர்கள் ஆத்துமாக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

கொள்கைகள் ஏன் அவசியம்?

இதுவரை கொள்கைகளைப் புறக்கணித்து, கிறிஸ்தவத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறவர்களின் குறைபாடுகளைப் பார்த்தோம். தவறான எண்ணத்தால் கொள்கைகள் கூடாது என்று வேதபோதனைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு இயேசுவுக்காக ஒரு கூட்டத்தை உருவாக்க முனைந்திருப்பவர்கள் மத்தியில், வேதம் போதிக்கும் இயேசு கிறிஸ்துவை விளக்கிச் சொல்லி அவருடைய போதனைகள் அனைத்தையும் விசுவா சித்து பிரசங்கிக்கவும், போதிக்கவும் முற்பட்டுவருகிற நாம், கொள்கை களின் அவசியத்தைப் பற்றி உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய கடமைப்பாட்டையும் கொண்டிருக்கிறோம்.

1. கர்த்தர் வேதத்தை நமக்குத் தந்திருக்கும் முறை கொள்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

கர்த்தர் தம்மைப் பற்றிய சத்தியங்களை நமக்கு எழுத்தில் தந்திருக்கிறார். மோசேக்கு அவர் அவற்றை இரண்டு பலகைகளில் எழுதிக் கொடுத்ததை நினைவுகூறுவது நல்லது. அதற்குப் பிறகு தன்னுடைய சித்தம் அனைத் தையும் அவர் எழுத்தில் தொகுத்து வேதமாக வழங்கியிருக்கிறார். அவர் தம்முடைய சித்தத்தை எழுத்தில் தந்த காரணம் நாம் அவற்றைப் படித்து ஆராய்ந்து கர்த்தரைப் பற்றிய அறிவிலும், கீழ்ப்படிவிலும் உயர வேண்டும் என்பதற்காகத்தான். இன்னுமொரு காரணமும் உண்டு. கர்த்தர் நம்மை சிந்திக்கிற மனிதர்களாகப் படைத்திருப்பதால் நாம் அடிக்கடி கர்த்தரைப் பற்றிய சத்தியங்களை சிந்தித்து ஆராய்ந்து அவற்றிற்குக் கீழ்ப்படிந்து அவர் வழியில் போகிறவர்களாக இருக்கவேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க் கிறார். எழுத்தில் கர்த்தர் தந்திருக்கும் போதனைகளை நாம் தெளிவாக அறிந்துகொள்ளாமல் அவருக்குக் கீழ்ப்படிய முடியாது. கொள்கைகள், அதாவது அவர் வெளிப்படுத்தியுள்ள போதனைகள் தேவையில்லை என்போமானால் கர்த்தரைப் பற்றிய அறிவில் நாம் வளர முடியாது. அவரைப் பற்றிய அறிவில்லாமல் அவருடைய சித்தத்தை நம் வாழ்வில் நிறைவேற்ற முடியாது. எந்தளவுக்கு வேதத்தில் உள்ள போதனைகளை நாம் தெளிவாக அறிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு நாம் கர்த்தரைப் பற்றிய அறிவில் வளரமுடியும். வெறும் கல்லை வணங்குகிறவர்களுக்கும், அனுபவத்தை நாடி சிந்திக்க மறுக்கிறவர்களுக்கும்தான் வேதமும் அதன் கோட்பாடுகளும் அவசியமாயிருக்காது.

அத்தோடு, வேதம் முழுவதிலும் கொள்கைகள் நிரம்பி வழிகின்றன. யாத்திராகமம் 20, பத்துக் கட்டளையாகிய கொள்கையை விளக்குகிறது. லேவியராகமம் முழுவதும் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர் கடைபிடிக்க வேண்டியிருந்த ஆராதனைக் கொள்கைகளை விளக்குகின்றன, புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5-7) இயேசு கிறிஸ்துவின் பிரசங்கம் முழுவதிலும் கொள்கைகள் நிரம்பி வழிகின்றன. அதைப் பிரசங்கித்த இயேசு கொள்கைகள் வேண்டாமென்றா சொல்லியிருக்கிறார்? பவுலின் நிருபங்களிலும் இதே நிலைதான். ரோமருக்கு பவுல் எழுதிய நிருபத்தின் முதல் பதினொரு அதிகாரங்களும் நீதிமானாக்குதலைப் பற்றி விளக்குகின்றன. இந்தக் கொள் கையை தூக்கி எறிந்துவிட்டு நாம் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத் துக் கொள்ள முடியுமா? எத்தனை சபைப்போதகர்களுக்கு இன்று இந்தப் போதனைகள் தெரியாமலிருக்கின்றன. எபேசியர் முதலாம் அதிகாரம் இரட்சிப்பின் பலாபலன்களாகிய கொள்கைகளை வரிசைக் கிரமமாகத் தருகின்றது. அவை நமக்கு அவசியமில்லை என்றால் கர்த்தர் தன் வார்த் தையில் அவற்றைத் தந்திருப்பாரா? அவை அவசியம். இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை நாம் கொண்டிருக்க அவை அவசியம். கலாத்தியர் நிருபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கும் கொள்கைகள்தான். அந்த நிருபமும் நீதிமானாக்குதலைப் பற்றியும், சடங்குகளினால் இரட்சிப்பு கிடைக்காது என்பதையும் ஆணித்தரமாக விளக்குகின்றன. இந்தக் கொள்கைகள் அவசியமில்லையா? இவை தெரியாமல் வாழ்கிறவன் கிறிஸ்தவனாக இருக்க முடியுமா? யாக்கோபுவின் நிருபமும் கொள்கைகளைத்தான் கொண்டிருக்கின்றன. கிரியைகளைக் கொண்டிராத விசுவாசம் செத்த விசுவாசம் என்கிறார் யாக்கோபு. இந்தக்கொள்கை இன்று தேவையில்லையா? கொள்கைகளின் அவசியத்தை உணர்த்த இன்னும் எத்தனையோ உதாரணங்களை நான் காட்டமுடியும். கர்த்தர் தம்முடைய வேதம் முழுவதிலும் நாம் அறிந்து பின்பற்ற வேண்டிய கொள்கைகளைத் தந்திருக்கிறார். அவற்றை நாம் அலட்சியப்படுத்தவோ, நிராகரிக்கவோ முடியாது, கூடாது.

2. விசுவாசிகளின் ஆத்மீக வளர்ச்சிக்கு கொள்கைகள் அவசியம்.

கர்த்தர் எழுத்தில் தந்திருக்கும், அவரைப் பற்றிய சத்தியங்கள் விசுவாசிகளின் ஆத்மீக வாழ்க்கைக்கு அவசியம். ஒன்றுவிடாமல் அத்தனையும் அவசியம். சிலர், இயேசு எவர்களுக்காக மரித்தார் என்ற கோட்பாடு நமக்குத் தேவையில்லை என்பார்கள். அது தவறான முடிவு. இயேசு கிறிஸ்து தன்னுடைய மக்களுக்காக மட்டுமே சிலுவையில் மரித்தார் என்ற சத்தியம் விசுவாசிகளுக்கு இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை அளிக்கிறதாயிருக்கிறது. இழந்துபோக முடியாத இரட்சிப்பை இயேசு அளித்திருக்கிறார் என்று அவர்களால் ஆனந்தப்பட முடிகிறது. இதை எப்படி அவசியமற்றதாகக் கருத முடியும்? வேறு சிலர் வேதம் போதிக்கும் தெரிந்துகொள்ளு தலாகிய கொள்கையைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே ஏதோ கேட்கக்கூடா ததைக் கேட்டுவிட்டதுபோல் காதை மூடிக்கொள்ளுவார்கள். ஆனால், வேதம் பக்கம் பக்கமாக அந்தச் சத்தியத்தை வலியுறுத்துகிறது. கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலாகிய சத்தியம் அவருடைய வல்லமையையும், நீதியையும், இறையாண்மையையும், பரிசுத்தத்தையும் வெளிப்படுத்துகிறது. இதை அறிந்துகொண்டிருப்பவர்கள் கர்த்தர் எத்தனை பெரியவர், மகிமையுள்ளவர் என்று எண்ணி அவரில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பார்கள். வேதத்தை வாசித்து ஆத்மீக அறிவை வளர்த்துக்கொள்வதற்கு சோம்பேரித்தனமுள்ளவர்களுக்கு இது புரியாது. அவர்கள் தங்களுடைய மனதில் வளர்த்துக்கொண்டிருக்கும் இயேசுவைப் பற்றிய எண்ணங்கள் உலகப்பிரகாரமானதாகவும், உயிரற்றதாகவும்தான் இருக்கும்.

விசுவாசிகளின் ஆத்மீக வளர்ச்சிக்கு வேதபோதனைகள் (கொள்கைகள்) எப்படி உதவுகின்றன என்பதற்கு இன்னுமொரு உதாரணத்தையும் தருகிறேன். கர்த்தர் நீதியானவர் என்று வேதம் போதிக்கின்றது. அவரில் எந்த அநீதியும் இல்லையென்றும், அவர் அநீதியை செய்யாதவர் என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். இது கர்த்தரின் நீதியைப் பற்றிய வேதக் கோட்பாடு. இதை நாம் வேதத்தின் பல பகுதிகளையும் வாசித்தே அறிந்து கொள்கிறோம். இதை மீண்டும் மீண்டும் வாசித்து தியானிக்கும்போது நாம் நீதியான கர்த்தரைப் பற்றிய அறிவில் வளர்கிறோம். அது மட்டுமல்ல, நாம் வாழ்க்கையில் ஏதாவதொரு தவறை கவனக்குறைவால் செய்து விடுகிறபோது, பயந்து அலறாமல் நீதியின் தேவன் அதற்காக நம்மைக் கொன்றுவிடமாட்டாரென்பதை உணர்ந்து அவரிடத்தில் மன்னிப்புக் கேட்க முடிகிறது. கர்த்தரின் நீதியைப் பற்றிய அறிவே இல்லாதவர்கள் வாழ்க்கையில் பயத்தோடு தொடர்ந்து வாழ்ந்து ஆத்மவிருத்தியடையாது இருந்துவிட நேரிடுகிறது. இந்த ஆபத்தை கர்த்தரைப் பற்றிய வேதக் கொள்கைகளைப் படித்து அறிந்து கொள்கிறபோது நம்மால் தவிர்த்துக் கொள்ள முடிகிறது. பரிசுத்தத்தில் வளரவும் முடிகிறது. நம்முடைய ஆத்மீக வாழ்க்கையில் சகல பகுதிகளிலும் வளர வேதம் போதிக்கும் அத்தனை கோட்பாடுகளும், போதனைகளும் தவறாது அவசியம்.

வேதம் கர்த்தரைப் பற்றிய அறிவில் நாம் வளர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. கர்த்தரைப் பற்றிய அறிவில் வளருகிறபோதுதான் அவரோடு நமக்கிருக்கும் ஐக்கியம் பெலப்படுகிறது. இறை அறிவு குறைகிற போது கர்த்தரோடு நமக்கிருக்கும் உறவும் குறையும். கர்த்தருடைய அருமை பெருமைகளை தெரிந்துகொள்ளும்போது நாம் தெளிவான சிந்தனை களோடு அவரை வழிபட முடிகிறது. வெறும் கல்லை சிவனாகவும், பிள்ளையாராகவும் பார்த்து அறிவற்ற வழிபாட்டை நடத்துகிற புறஜாதி யாரைப் போல வாழும்படி நாம் அழைக்கப்படவில்லை. ஜீவனுள்ள தேவனை நாம் அறிவுபூர்வமாக வழிபடும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். கண்களை மூடி ஜெபத்தில் வருகிறபோதும், சபையில் ஆராதிக்கின்றபோதும் நமது மனதில் கர்த்தரைப் பற்றிய வேதபூர்வமான எண்ணங் கள் காணப்பட வேண்டும். ஜெபம் முழுவதும் அவரைப் பற்றிய சரியான கருத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதனால்தான் இயேசு நாம் ஆவியோடும், உண்மையோடும் (சத்தியத்தோடும்) கர்த்தரை வழிபட வேண்டுமென்றார். வேதபோதனைகளை (கொள்கைகள்) அறிந்து கொள்ளாமல் நாம் எப்படி கர்த்தரைக் கர்த்தராக எண்ணி வழிபட முடியும்?

வேதம் கர்த்தரின் இறையாண்மை, அவருடைய பரிசுத்தம், நீதித்துவம், மகிமை, இராஜ்யம், இரட்சிப்பை அவர் நிறைவேற்றிய வழிமுறை, திரித்துவ அங்கத்தவர்களின் தன்மை, வரலாற்றில் மீட்பை அவர் நிறைவேற்றிய விதம், ஆவியானவரின் கிரியை, விசுவாசியின் வாழ்க்கை முறை, சுவிசேஷ ஊழியம் நடக்க வேண்டிய விதம், திருச்சபை, அதன் ஒழுங்குமுறை என்று கர்த்தரைப் பற்றியும் அவருடைய செயல் முறைகள் பற்றியும், நாம் வாழ வேண்டிய முறைகள் பற்றியும் கணக்கில்லாத சத்தியங்களை நாம் அறிந்து கொள்ளும்படி அள்ளித் தருகிறது. நாம் கர்த்தரை அவரு டைய சித்தத்தின்படி அன்போடு வழிபடவும், அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் இந்தப் போதனைகள் நமக்கு அவசியம். இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் விசுவாசி அவருக்குக் கீழ்ப்படிய வழியே இல்லை. இந்த சத்தியங்களைத் தான் கொள்கைகள் அல்லது கோட்பாடுகள் என்ற பெயரில் அழைக்கிறோம். இவற்றை முறைப்படுத்தி வரிசைக்கிரமமாக படிக்க வேண்டியதும், ஆராய்ந்து சிந்திக்க வேண்டியதும் கலப்பை பிடிக்கிறவர்களில் இருந்து கல்லூரி விரிவுரையாளர்கள்வரை அனைத்து விசுவாசி களுடையதுமான கடமை. கல்வி அறிவில்லாதவனுக்கு கல்லுச்சாமி, ஞானமுள்ளவனுக்கு ஞானமார்க்கமென்று இந்து மதம் ஏற்படுத்தி வைத்திருப்பது போல் கிறிஸ்தவத்தில் நாம் பார்க்க முடியாது. எல்லோருக்கும் ஒரே கர்த்தர், ஒரே வேதம் மட்டுமே. கல்வி அறிவில்லாதவனும், கற்ற பண்டிதனும் அந்த வேத அறிவைப் பயன்படுத்தியே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவரை அறிகிற அறிவிலும், கிருபையிலும் வளர வேண்டும்.

3. போலிப்போதனைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொண்டு கர்த்தரைப் பற்றிய அறிவில் வளர கொள்கைகள் அவசியம்.

இயேசு மட்டும் போதும் என்ற தவறான எண்ணத்தில் கொள்கைகளை வெறுக்கிறவர்கள் சத்தியத்தில் எப்போதும் தெளிவில்லாதவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு போலிப்போதனைகளை இனங்கண்டு கொள்ளும் பக்குவம் இருக்காது. பவுல்போதிப்பது வேதத்தில் இருக்கிறதா என்பதை பெரோயா பட்டணத்தார் ஆராய்ந்து பார்த்தார்கள். எந்த ஆவியையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. பேதுரு விசுவாசிகளான புறஜாதி மக்களோடு உணவருந்த மறுத்தபோது பவுல் அவருடைய முகத்தைப் பார்த்து எல்லோருக்கும் முன்பாக கண்டித்ததற்குக் காரணம் சத்தியத்தில் பவுலுக்கு தெளிவிருந்ததுதான். இயேசு மட்டும் போதும் என்று கொள்கைகளை பவுல் அலட்சியப்படுத்தி இருந்தால் பேதுரு செய்த தவறைப் பவுல் அலட்சியப்படுத்தியிருப்பார்.

“எந்தவொரு சத்தியத்தையும் தெளிவாக விளக்கவேண்டுமானால் அந்தச் சத்தியத்தை அசத்தியங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும்” என்று அமெரிக்க இறையியல் அறிஞரான கிரேசம் மேச்சன் (Gresham Machen) கூறியிருக்கிறார். அது சத்தியமான வார்த்தை. வாழைப்பழத்தை முழுசாக ருசித்து அனுபவிக்க ஆசைப்படுகிறவர்கள் முதலில் அதன் தோலை உரித்து எறியவேண்டும். தோலோடு பழத்தை சாப்பிட முடியாது. பழத்தின் ருசியை உணரத்தோல் தடையாயிருக்கிறது. அதேபோல் அசத்தியங்களை இனங்கண்டு விலக்கி வைக்கிறபோது சத்தியம் பிரகாசமடைகிறது. கொள்கைகள் அவசியமில்லை என்று கூறி வேதசத்தியங்களை ஆராய்ந்து தொகுத்துப் படிக்க அஞ்சுகிறவர்களால் அசத்தியத்தை இனங்கண்டுகொள்ள முடியாது. எல்லாம் சத்தியம்தான் என்ற நம்பிக்கையில் இருண்ட பாதையில் தான் அவர்களுடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். போலிப் போத னைகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் வேதக் கோட்பாடுகளை நாம் ஆராய்ந்து படித்து அவற்றில் தெளிவு அடைவது அவசியம். சத்தியங்களைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றும்போது போலிப்போதனைகள் நம்மை அணுக முடியாது. அவை சூரியனைக் கண்ட பனிபோல ஓடிவிடும்.

4. திருச்சபை சத்தியத்தில் உறுதியாக வளரவும், சத்தியமல்லாதவற்றை எதிர்த்து நிற்கவும், வழிதவறிப் போகாமல் இருக்கவும் கொள்கைகள் அவசியம்.

சத்தியத்தை விசுவாசிக்கின்ற சபைகள் மட்டுமே தேவனுடைய சபைகளாக இருக்க முடியும். அச்சபைகளால் மட்டுமே அசத்தியத்தை இனங்கண்டு அதனை எதிர்த்து நிற்க முடியும். வழிதவறிப்போகாமல் இருக்க முடியும். சமீபத்தில் என்னை சந்தித்த ஒரு போதகர் தனக்கு முன்பு சபையில் இருந்த போதகர் பரிசுத்தமாக்குதலைப் பற்றிய கோட்பாடுகளை வேதபூர்வமாக போதிக்கக் தவறியதால் சபை மக்கள் அதுபற்றிய சத்தியம் தெரியாமலும், பரிசுத்தமாக வாழ முடியாமலும் குழம்பிப் போய் நிற்கிறார்கள் என்று முறையிட்டு என்னிடம் உதவி கேட்டார். சத்தியத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளுகிறபோதே திருச்சபை மக்கள் பரிசுத்தமாக இருப்பதற்கு வழி கிடைக்கின்றது. சத்தியங்களைத் தெளிவாக தொகுத்து வைப்பதைத்தான் கொள்கைகள் என்று அழைக்கிறோம். அத்தகைய சத்தியத் தொகுப்புதான் 1689 விசுவாச அறிக்கையும், வினாவிடைப் போதனையும். இவை நமக்கு வேத அறிவை மட்டும் கொடுப்பதில்லை. அந்த அறிவைப் பயன்படுத்தி நாம் பக்திவிருத்தியுடன் வாழ வழிகாட்டுகின்றன. சபை சத்தியத்தில் தொடர்ந்திருக்க வகைசெய்கின்றன. தவறானதும், போலித்தனமானதுமான போதனைகள் சபையில் நுழைந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்து தப்புவதற்கு உதவுகின்றன. போலிப்போதனைகள் புதிது புதிதாகத் தோன்றி சபையைப் பயமுறுத்துகிறபோது யூதா 3ல் எழுதி யிருக்கிறபடி அவற்றை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

அதேவேளை, வேதக்கொள்கைகளை அறிந்து அவற்றில் வளர்ந்திராத சபைகளுடையதும், சபையாரினதும் நிலையை எண்ணிப் பாருங்கள் அந்தோ பரிதாபம்! சத்தியத்தை அறியாது, அசத்தியங்களை இனங்கண்டு கொள்ள முடியாது, போலிப்போதனைகளை சத்தியமாக எண்ணிக் கண்ணிருந்தும் குருடர்களாக அறியாமையில் வியாதியஸ்தர்கள் போல் வாழ்ந்து வருவார்கள். தனக்கு நோயிருக்கிறது என்பதே அறியாமல் நோயோடு வாழ்ந்து வருகிறவனைப்போல துர்ப்பாக்கியமானவன் இருக்க முடியுமா? கொள்கைகள் வேண்டாம் என்று அலறுகிறவர்கள் இப்படித் தான் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் இந்த வகையில்தான் இன்று கிறிஸ்தவத்தின் நிலை இருக்கிறது. சபை வரலாற்றில் சீர்திருத்தவாத காலத்திற்கு முன்பு எந்த நிலை இருந்ததோ அந்த நிலையில்தான் தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் இருக்கின்றது. அன்று வேதத்தை எல்லோரும் வாசிக்க முடியாதபடி கத்தோலிக்க மதம் அதை மறைத்து வைத்திருந்தது. இன்று வேதம் நம் சொந்த மொழியில் இருந்தபோதும் அனுபவத்தை மட்டும் நாடி நிற்கும் கூட்டம் ஆத்துமாக்கள் அதை அறிந்து கொள்ளமுடியாதபடி அவர்களுடைய கண்களைக் கட்டி, இருதயத்தைப் பசப்பு வார்த்தைகளால் ஆண்டு வருகின்றது. கொள்கைப்பற்றுள்ள சபைகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி வளராதவரை போலிக் கூட்டங்கள் தமிழினத்தை தொடர்ந்து சூறையாடுவதைத் தடுக்க முடியாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s