தமிழ் கிறிஸ்தவ சபைகள் இன்று சபை அமைப்பை அலட்சியப் படுத்தி நடந்து வருகின்றன. பாரம்பரிய சபைகள் (Traditional Churches) சடங்குக்கும் பாரம்பரியத்திற்கும் பலியாகி ரோமன் கத்தோலிக்க மதத்தைப்போல குருமார்களை வைத்துக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய சபை அமைப்பு முறையை வேதத் தில் பார்க்க முடியாது. பாரம்பரிய சபைகளுக்கு வெளியில் இருக்கும் பிரிவுகள் தனியாக இயங்கி வரும் சபைகள். இவற்றில் பாப்திஸ்து, சகோ தரத்துவ சபைகள், பெந்தகொஸ்தே/கெரிஸ்மெட்டிக் சபைகளை உள்ளடக் கலாம். பெந்தகொஸ்தே/கெரிஸ்மெட்டிக் சபைகளில் பெரும்பாலானவை வேதத்தைக் குழிதோன்டிப் புதைத்து நெடுங்காலமாகி விட்டது. சபை அமைப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய நிலைமை இன்று. அவர்களில் பலர் தங்களை அப்போஸ் தலர்களாகவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவர்கள், 20 நூற்றாண்டுகள் கடந்து போய் விட்டது கூட தெரியாமல் ஊழியம் செய்து வருகிறார்கள். இப்பட்டியலில் எஞ்சி யிருக்கும் பிரிவுகள் பாப்திஸ்துகளும், சகோதரத்துவ சபைகளும்தான்.
சகோதரத்துவ சபைகள் தங்களை சபைகள் என்று அழைத்துக் கொண்டாலும் டிஸ்பென்சேஷனலிசத்தின் பாதிப்பால் சபை அமைப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சுவிசேஷம் சொல்லுவது மட்டுமே தங்கள் பணி என்று இருந்து வருகின்றன. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே சபை யின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். இவர்கள் சபைகளை அமைத் தாலும் அவற்றில் சபை அமைப்பைத் துளியும் பார்க்க முடியாது.
பாப்திஸ்து சபைகள் மத்தியில் பல பிரிவுகள் இருக்கின்றன. முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதால் மட்டுமே நாம் பாப்திஸ்துகள் என்ற ஒரே எண்ணத்தைக் கொண்டு இயங்குகின்றவைதான் எண்ணிக்கையில் அதிகம். அதற்குமேல் போய் வேத சத்தியங்களைப் பின்பற்றி நாம் ஏன் பாப்திஸ்துகள் என்ற மெய்யான அறிவோடு வளர்கின்ற சபைகள் தொகையில் குறைவு. இவர்களும் திருச்சபை அமைப்பில் அலட்சியம் காட்டி வருகிறார்கள். “என் சபையைக் கட்டுவேன்” என்று சொல்லி இயேசு தன்னுடைய சபையை நிறுவி அதற்குத் தேவையான அனைத் தையும் கொடுத்துச் சென்றிருக்க இவர்களில் பலர் அவற்றை நிராகரித்து, உதாசீனப்படுத்தி உலகப்பிரகாரமாக, சபை என்ற பெயரில் எதை எதையோ செய்து வருவது எந்தவிதத்தில் கர்த்தருக்குப் பிடித்தமானது என்பது புரியவில்லை. சபை அமைப்பு பற்றி அதிகம் அலட்டிக் கொள் ளத் தேவையில்லை என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இதற்கு சுயநலம்தான் முக்கிய காரணமே தவிர வேதம் அப் படிப் போதித்திருப்பதால் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரமெடுக்காது.
வேதம் காட்டும் சபை அமைப்பு
முதலில், எந்த ஒரு விசுவாசிகளின் கூட்டமும் விசுவாசிகளான அங்கத் தவர்களைக் கொண்டு சபையாக அமைக்கப்பட வேண்டும். சபை என்று சொன்னால் அந்த சபைக்கு மட்டுமே உரிய அங்கத்தவர்கள் அதில் இருப்பார்கள். இவர்கள் தகுந்த முறையில் வேத அடிப்படையில் திருமுழுக்கு பெற்று அந்த சபையின் போதனைகள், நோக்கங்கள் அனைத்தையும் அறிந்தவர்களாக உரிய முறையில் தெரிவு செய்யப்பட்டு அங்கத்தவர்களாக இருப்பார்கள். அந்த சபையின் சட்ட அமைப்பு, விசுவாச அறிக்கை ஆகியவற்றை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு ஒப்புக் கொடுத்து வாழ்வதாக உறுதி எடுத்தவர்களாகவும் இருப்பார்கள்.
அடுத்ததாக, மூப்பர்களும் (Elders/Pastors), உதவிக்காரர்களும் (Deacons) ஒவ்வொரு சபையாலும் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் சபை அதிகாரிகளாக இருந்து மந்தையை வளர்க்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. இதில் மூப்பர்களுடைய (போதகர்கள்) பணி வேத போதனைகளை அளித்து சபையை ஆத்மீக வழியில் வழிநடத்துவது. இவர்கள் சபைத்தலைவர்களாக இருந்து சபையின் அனைத்துக் காரியங் களிலும் சபையை வேத அடிப்படையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். இவர்களுக்குக் கீழ் இருந்து உதவிக்காரர்கள் சபையின் நடைமுறைக் காரியங்களைச் செய்ய வேண்டும். உதவிக்காரர்கள் உபதேச ஊழியத் துக்காக அழைக்கப்பட்டவர்களல்ல. அவர்கள் போதகர்களுக்கு துணை யாக இருந்து சபைக் காரியங்களை போதகர்கள் காட்டும் வேதவழிகளின் அடிப்படையில் செய்து வர வேண்டும். இந்த இருபதவிகளுக்கும் நியமிக் கப்பட வேண்டியவர்களுக்கான தகுதிகள் வேதத்தில் தெள்ளத் தெளிவாக 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தமிழில் அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன.
இன்று வேதம் தெளிவாக விளக்குகின்ற இந்த சபை அமைப்பு தமிழ் சபைகளில் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. சபை அமைப்பு என்பதே இல்லாமல், எந்த சபைத் தொடர்பும் இல்லாமல் ஒரு தனி மனிதன் எங்காவது ஒரு ஊழியத்தை ஆரம்பித்து சுவிசேஷத்தை சொல்லி சில ஆத்துமாக்களைக் கூட்டி ஒரு வீட்டில் அல்லது தானே கட்டிய ஒரு சிறு வீட்டிலோ, கட்டிடத்திலோ ‘ஜெப வீடு’ என்ற பெயரில் சபை நடத்தி வருவது தமிழ் நாட்டில் நாம் பார்க்கின்ற ஒரு கிறிஸ்தவ கலாச்சாரம். இதை ஆரம்பித்த மனிதர்¢¢ தன்னைத்தானே போதகனாக அறிவித்துக்கொண்டு சாகும்வரை சபை என்று அழைக்கப்படுகின்ற இந் தக் கூட்டத்திற்கு தலைவனாக இருந்து வருவார். இவரே இதற்கு பிரசி டன்ட். காலம் போகப்போக தன் மனைவியையும், பிள்ளைகளையும் ஊழியத்தில் பிரதிஷ்டை செய்து வைத்து அவர்கள் தனக்குப்பின் இந்தக் கூட்டத்தை நடத்திச் செல்ல வழி வகுத்து வைப்பார். எத்தனை வருடங் களானாலும் இந்த ஜெபவீட்டில் சபை அங்கத்துவத்திற்கோ, அமைப் பிற்கோ அல்லது மூப்பர்கள், உதவியாளர்களுக்கோ இடமிருக்காது. அங்கு ஆராதனைக்கு வருபவர்களுடைய கடமை காணிக்கைகளை தவறாது அள்ளி அளிப்பது மட்டுமாகவே இருக்கும். தமிழினத்தில் இதற்குப் பெயர் தான் திருச்சபை ஊழியம். இதை சகோதரத்துவ சபைகளில் இருந்து பாப்திஸ்துகள்வரை அனைவரிடத்திலும் பார்க்கலாம். இவற்றில் ஒரு சில வளர்ச்சியடைந்து பிற்காலத்தில் ஒரே ஒரு போதகரையும், சில உதவிக்காரர்களையும் கொண்டிருக்கும். வளர்ச்சி இம்மட்டுந்தான் போகும். இதற்குமேல் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்கள் இருக்கும் சபைகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.
சபைகளில் கமிட்டி நிர்வாகம்
பெரும்பாலான சபைகளில் அங்கிருக்கும் போதகர் வேதம் போதிக்கும் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களை அவர்களுக்குரிய தகுதிகளின் அடிப் படையில் அந்தந்த பதவிகளில் சபையைக்கூட்டி நியமிக்காது ஒரு ‘கமிட்டியை’ அமைத்து சபையில் நடைமுறை நிர்வாகத்தைக் கவனிக்கும் வேலையை அவர்களுக்கு அளிப்பார். இந்தக் கமிட்டியில் இருப்பவர்கள் சிலவேளைகளில் விசுவாசிகளாகக்கூட இருக்கமாட்டார்கள். இவர்கள் முக்கியமாக சபையில் நெடுங்காலம் இருந்து வந்துள்ள குடும்பங்களின் அங்கத்தவர்களாகவோ, போதகருடைய உறவினர்களாகவோ (மனைவி, பிள்ளைகள்), வயதானவர்களாகவோ, சமுதாயத்தில் முக்கிய இடத்தை வகிப்பவர்களாகவோ இருப்பார்கள். இந்தத் ‘தகுதிகளின்’ அடிப்படை யிலேயே இவர்கள் ‘கமிட்டி’ அங்கத்தவர்களாக வருவார்கள். போதகரு டைய வேலை போதிப்பதாகவும், கமிட்டியின் வேலை சபைக் காணிக் கையை கவனமாக எண்ணி சபைக்காரியங்களுக்கு போதகர் காட்டும் வழியில் செலவழிப்பதாகவும் இருக்கும். பல இடங்களில் முக்கியமாக பேங்க் அக்கவுன்ட், போதகர் அல்லது அவருடைய மனைவி பெயரில் இருக்கும். இது வெளிநாட்டுப் பணத்தை முடக்க ஒரு வழி. சில இடங் களில் கமிட்டியின் கை ஓங்கிவிடுவதும் உண்டு. பணமென்றால் பிணமும் வாய்திறக்குமல்லவா! பொதுவாக இத்தகைய கமிட்டி அமைப்பில் சபைப் பணம் போதகருடைய குடும்ப நன்மைக்காக பாதுகாக்கப்பட்டு வரும். சபையைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் கணக்கு வழக்கோ, வருமானமோ ஒருநாளும் தெரியவராது. கமிட்டி அங்கத்தவர்கள் போதகருக்கு சாதக மாக இருப்பவர்களாக கவனமாகத் தெரிந்துகொள்ளப்படுவார்கள். ‘ஒரு மாதிரியாக’ சிந்திக்கிற கமிட்டி அங்கத்தவர்கள் வெகுவிரைவிலேயே கேள்வி முறை இல்லாமல் கமிட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள். சபையிலும் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.
சில சபைகளில் இந்தக் கமிட்டியின் கையோங்கி போதகர் ஓரங்கட்டப் படுவதுண்டு. போதகர் வெறும் பேச்சுக்குத்தான் போதகராக இருப்பார். அவர் கமிட்டியின் மனங்கோணாது நடந்துபோகிற வரையில் சபையில் ‘கூலி’ வாங்கிக் கொண்டு போதகராக இருக்கலாம். கமிட்டியைப் பகைத் துக் கொண்டால் அவருக்கு ஆபத்துதான். கமிட்டியின் கோபத்துக்கு ஆளாகி சபையில் இருக்கமுடியாமல் வெளியில் தள்ளப்பட்டு வேறு வேலைகளுக்கு போகிற போதகர்களும் உண்டு. எந்தளவுக்கு போதகரின் ஆட்கள் கமிட்டியில் இருக்கிறார்களோ அந்தளவுக்கு போதகர் கையோ ங்கி இருக்கும். இந்த கமிட்டி அங்கத்தவர்கள் ஆத்மீக அடிப்படையில், வேதத்தகுதிகளை ஆராய்ந்து நியமிக்கப்படாததால் சபையில் வேத அடிப் படையில் எதுவும் நடப்பதற்கு இடமிருக்காது. வேதம் அதிகம் தெரியாத வர்களாகவும், சத்திய வாஞ்சை எள்ளளவும் இல்லாதவர்களாகவும் இந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். இதுதான் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான சபை அமைப்பு.
திருந்தி வளர்வது திருச்சபை
இன்று சபை ஊழியங்கள் வேத அடிப்படையில் நடக்க வேண்டுமா னால் சபை மக்கள் அறிவீனர்களாகவும், அடிமைகளாகவும் வாழ்வதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வேதத்திற்கு மதி¢ப்புக் கொடுக்காமல், வேத அடிப்படையில் சபையை அமைக்காமல் கமிட்டி வைத்து சபை என்ற பெயரில் கடை நடத்தி வருவதை அனுமதிக்கக் கூடாது. வேதபோதனைகளுக்கெல்லாம் முரணாக நடப்பவர்களுக்கு நாம் அடங்கி வாழ்வது கர்த்தருக்குப் பிடிக்காதது. அவர்களுக்கு காணிக்கை கொடுப் பதும் தவறு. அத்தோடு, தேவபயத்தோடு வேத போதனைகளுக்கு உட் பட்டு நடக்காதவர்களுக்கு சபையில் எந்தப் பதவியையும் அளிப்பதை அனுமதிக்கக்கூடாது. மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் சபைக்கு தரிசனம் தந்து ‘பந்தா’ காட்டிவிட்டு போகிறவர்களையெல்லாம் சபையில் எந்தப் பதவியிலும் வைக்கக்கூடாது. குடும்ப வாழ்க்கை சரியில்லாதவர் களையும், வேதபோதனைகளுக்கு அடிபணியாதவர்களையும், சபைக் காரியங்களை பயத்தோடும், வாஞ்சையோடும் செய்யத் தவறுகிறவர் களையும் எந்தப்பதவிக்கும் சிபாரிசு செய்யக்கூடாது. இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு கலாச்சாரம், முகஸ்துதி என்ற பெயரில் மனித னுக்கு ‘துதி’பாடி நமக்கேன் தலைவலி என்று இருந்துவிடுகின்ற ஆத்துமாக் கள் நியாயத்தீர்ப்புக் காலத்தில் கர்த்தருக்கு கணக்குக் கொடுக்க நேரிடும். சபை என்ற பெயரில் இருக்கும் சாத்தானின் குகைகளில் உங்களுடைய மனைவி, பிள்ளைகள் ஆத்தும வளர்ச்சி அடைய முடியுமா? என்பதை ஒருமுறை சிந்தித்துப்பாருங்கள்.
நல்ல போதகர்களுக்கும், நல்ல சபைகளுக்கும் நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும். வேதபோதனைகளின்படி சபை நடத்தத் தவறும் போதகர்களை நாம் மதிக்க வேண்டிய அவசியமில்லை. கூலிக்கு மாறடிக் கிறவர்கள் கர்த்தரின் மெய்யான சேவகர்களாக இருக்க முடியாது. சபை என்ற பெயரை மட்டும் வைத்துக்கொள்ளுவதால் ஒரு அமைப்பு ஒரு நாளும் சபையாகி விடாது. வேதம் எல்லா இடங்களிலும் அந்த சபையில் ஆட்சி செய்ய வேண்டும். வேதபோதனையின்படி சபை சட்ட விதிகளும், சபை அங்கத்துவமும், சபை அமைப்பும், நிர்வாகமும், சபைக் கட்டுப் பாடும் இருக்க வேண்டும். வேதத்தை அடிக்கடி பயன்படுத்தி அதன்படி சகலமும் நடைபெறுகிறதா என்று ஆராய்ந்து பார்த்துக் கொள்கிற சபையாக இருக்க வேண்டும். வேதத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டுப் பலரும் சபை அமைக்கப் புறப்பட்டிருப்பதாலேயே இன்று நம்மால் நல்ல சபைகளைப் பார்க்க முடியாமல் இருக்கிறது. இந்த நிலைமாற உங்கள் பங்குக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?