செழிப்பாசை காட்டி மயக்கும் செழிப்பு உபதேசம்

இன்று தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்கள் மத்தியில் சூடுபிடித்து நிற்கும் ஒரு போதனைக்குப் பெயர்தான் ‘செழிப்பு உபதேசம்’. இதனை ஆங்கிலத்தில் Prosperity Theology என்று அழைக்கிறார்கள். இதுவரை இதுபற்றி அதிகம் ஆராய்ந்து அறிந்திராதவர்களுக்கு முதலில் இதை சுருக்கமாக விளக்குவது அவசியம். அடிப்படையில் இந்தப் போதனை சொல்வதெல்லாம், விசுவாசிகளுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் ஆசீர்வாதம் பெருகும், அதிகரிக்கும் என்பதுதான். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், விசுவாசி களுக்கு வாழ்க்கையில் துன்பங்களுக்கே இடமில்லை, பணம் பெருகும், தொழில் சிறக்கும், நன்மைகள் ஆறாகப் புரண்டோடும் என்று இந்தப் போதனையை அளிக்கிறவர்கள் சொல்லி வருகிறார்கள்.

இவர்கள் இந்தப் போதனைக்கு வேதத்தை ஆதாரம் காட்டாமலில்லை. ஏசாயா 53ல் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் குறிப்பிடும் தீர்க்கதரிசி, “அவருடைய தழும்புகளால் நாம் குணப்பட்டோம்” என்று சொல்லுகிற வசனத்தை இவர்கள் தங்கள் போதனைக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம், இயேசு கிறிஸ்து கல்வாரியில் தன்னைப் பலியாகக் கொடுத்ததன் மூலம் நம்மை ஒட்டு மொத்தமாகக் குணப்படுத்தியிருக்கிறார். பாவத்திலிருந்தும், வாழ்க்கைத் துன்பங்களிலிருந்தும், சகலவிதமான பிரச்சனைகளிலிருந்தும் நமக்கு ஏற்கனவே விடுதலை வாங்கித் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் இனி இந்த உலகத்தில் துன்பப்படுவதற்கு வழியே இல்லை. கிறிஸ்துவின் இரத்தப்பலி சகல நன்மைகளையும் பெற்றுத் தந்திருக்கிறது என்கிறார்கள் இவர்கள். இந்த வசனம் உண்மையில் அப்படியான விளக்கத்தைத் தர வில்லை. இந்த உலகத்தில் நிரந்தரமான உடல் சுகத்தையும், பணப் பொருள் நிறைவையும் இந்த வசனம் வாக்குறுதியாகத் தரவில்லை.

செழிப்பு உபதேசத்தைக் கொடுக்கிறவர்கள், கிறிஸ்து ஏற்கனவே நாம் அனுபவிக்கும்படி சகல நன்மைகளையும் தமது இரத்தப்பலியின் மூலம் நிறைவேற்றியிருப்பதால் நாம் வாழ்க்கையில் எந்தத் துன்பத்தை எதிர் கொண்டாலும் உடனடியாக கிறிஸ்து சொன்னவற்றை நினைவுகொண்டு அவற்றை முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் துன்பங்கள் பனிபோல் விலகிவிடும் என்கிறார்கள். அத்தோடு, வாழ்க்கையில் ஏதாவது நன்மை நிகழ வேண்டும் என்றால் கிறிஸ்துவின் வாக்குத்தத்த வசனங்களை நினைவுபடுத்திக்கொண்டு அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லி முழு மனத்தோடு விசுவாசித்தால் காரியம் கைகூடும் என்பது இவர்களுடைய போதனை. ஆகவே, ஒரு காரியம் நடப்பது என்பது நாம் எந்தளவுக்கு நம்பிக்கையோடு விசுவாசிக்கிறோம் என்பதிலேயே தங்கியிருக்கிறது என்பது இவர்களுடைய போதனை. உதாரணத்திற்கு பரீட்சையில் பாஸ் பண்ண வேண்டும் என்றால் வேதத்தைப் புரட்டி அதிலுள்ள வாக்குத்தத்த வசனத்தை வாசித்து அதை நாம் உறுதியாக நம்புவோமானால் காரியம் கைகூடும் என்கிறார்கள் இவர்கள். ஏதாவது நடக்காமல் போனால் அதற்குக் காரணம் நமது விசுவாசக்குறைவு என்கிறார்கள் செழிப்பு உபதேச இறையியல் பிரசங்கிகள். இதற்காக இவர்கள் வேதத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாடுவரையுள்ள அத்தனை நூல்களிலுமுள்ள வாக்குத்தத்த வசனங்களைப் பொறுக்கி எடுத்து அவற்றை அடிக்கடி தமது பிரசங்கங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுடைய பிரசங்கங்களிலும், தியானங்களிலும் ஆசீர்வாதம், அற்புதம் என்ற இரு வார்த்தைகளையும் கேட்காமலிருக்க முடியாது. இந்த வகையில் செழிப்பு உபதேச இறையியல் பிஸினஸ் செய்து வருகிறவர்களில் தமிழகத்தில் முன்னணியில் இருப்பவர் தினகரனும் அவருடைய மகனுமான பால் தினகரனும். இவர்களைப் போலவே மோகன் சீ. லாசரஸ், எசேக்கியா பிரான்சிஸ், சாம் ஜெபத்துரை என்று ஒரு பெரிய பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவர்களைத் தவிர சமீபத்தில் தமிழகத்தில் சேலத்தில் உதித்துள்ள குட்டிச்சாமி பரணீதரனைப் போல இவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் பல குட்டிச்சாமிகளின் வரிசையும் உண்டு. ஆக, தமிழ் கிறிஸ்தவர்கள் வாழ்கிற இடமெல்லாம் இன்றைக்கு செழிப்பு உபதேச இறையியல் ‘அம்மா’வைப் போல இவர்கள் மூலம் ஆட்சி செய்து வருகிறது.

இந்த செழிப்பு உபதேசம் எப்படி தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமானது என்பதை ஆராய்வது அவசியம். தினகரனோ மற்றவர் களோ இதை சுயமாகக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கு மட்டும் இந்தப் போதனை விசேடமாக கர்த்தரால் கொடுக்கப்படவில்லை. அவர் கள் இதை மேலை நாட்டு பெந்தகொஸ்தே பிரசங்கிகளிடம் இருந்து கடன் வாங்கிக்கொண்டார்கள். அப்படிப் பெற்றுக்கொண்டதை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி தங்களை வளர்த்துக் கொண்டார்கள்.

மேலை நாடுகளில் ஆரம்பித்த செழிப்பு உபதேசம்

மேலை நாடுகளில் இந்த செழிப்பு உபதேசம் எப்படித் தோன்றியது என்று இனி ஆராய்வோம். செழிப்பு உபதேசம் உண்மையில் வேறு சில போதனைகளோடு தொடர்புடையது. பெந்தகொஸ்தே இயக்கத்தில் தோன்றிய Positive Confession மற்றும் வார்த்தை-விசுவாச போதனை Word-Faith teaching (Faith movement) ஆகிய போதனைகளின் ஒரு பகுதிதான் இந்த செழிப்பு உபதேசம். இந்தப் போதனைகளின் ‘தாத்தா’வாகக் கருதப்படுகிறவர் கென்னத் ஹெகின் (Kenneth Hegin). கென்னத் ஹெகின் தன்னுடைய நூலான ‘கர்த்தரோடு உன்னுடைய டிக்கெட்டை எப்படி எழுதுவது’ (How to write your own ticket with God) என்ற நூலின் மூலம் தன்னுடைய போதனையை பிரபலமாக்கினார். இந்த நூலின் ஆரம்ப அதிகாரத்தில் ஹெகின் கர்த்தரை சந்தித்த அனுபவத்தை விளக்குகிறார். பத்மோசில் இருந்த யோவானைப்போல தான் ஆவியில் இருந்தபோது கர்ததர் மூன்று அடி தூரம் தள்ளி நின்று தனக்கு தரிசனம் கொடுத்ததாகக் கூறுகிறார். அப்படித் தரிசனமான கர்த்தர் கென்னத் ஹெகினிடம் ஒரு பேப்பரையும், பென்சிலையும் எடுத்து தான் சொல்லப் போவதை எழுதிக் கொள்ளும்படி சொன்னாராம். கென்னத் ஹெகின் அதை எழுதிக்கொள்ளத் தயாரானவுடன் கர்த்தர் 1, 2, 3, 4 என்று வரிசைக்கிரமமாக நான்கு விஷயங்களை எழுதிக் கொள்ளும்படிக் கட்டளையிட்டாராம். அதற்குப் பிறகு அவர், “இந்த நான்கு காரியங்களையும் எவராயிருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும் சரி முறைப்படி செய்வார்களானால் அவர்களுக்கு எது தேவையோ அவற்றை நான் நிச்சயமாகக் கொடுப்பேன்” என்று கர்த்தர் சொன்னாராம். இதைச் செய்பவர்களுடைய வாழ்க்கையில் பணம் பெருகும், தொழில் சிறக்கும், நோய் இருக்காது, தொல்லைகளுக்கே இடமில்லை என்று கர்த்தர் சொன்னதாக கென்னத் ஹெகின் எழுதுகிறார். அந்த நான்கு காரியங்களும் என்ன?

1. சொல்லு (Say it) – சொல்லுபவர் எதைச் சொன்னாலும் அது நடக்கும்.

2. அதைச் செய் (Do it) – நடக்கப் போவது நமது செய்கையைப் பொறுத்திருக்கிறது.

3. பெற்றுக்கொள் (Receive it) – நமது விசுவாசமே எதையும் நாம் அடையச் செய்கிறது. உன் விசுவாசத்தால் பரலோகத்தைப் பிடி.

4. மற்றவர்களுக்கு சொல்லு (Tell it so other may belive) – அடுத்தவர் கள் பலனடைய இதை அவர்களுக்கும் சொல்லு.

கென்னத் ஹெகினுடைய இந்தப் போதனையை இன்னொரு செழிப்பு உபதேச போதனையாளரான கென்னத் கோப்லன்ட் (Kenneth Copeland) பின்வருமாறு விளக்குகிறார்: “இது எப்படியென்றால் நீங்கள் விரும்பு கிறதை, அது பொருளாகவோ பணமாகவோ இருந்தாலும், முதலில் உங்களுடைய மனதில் அதை உருவமாகப் பார்க்கப் பழக வேண்டும் (Seeing or visualizing whatever you need, whether physical or financial). இரண்டாவதாக, கர்த்தருடைய வார்த்தையின்பேரில் அதை உங்களுடையதாகக் கருத வேண்டும். மூன்றாவதாக, அது நிகழ்ந்துவிட்டதாகப் பேச வேண்டும்.” இதுவே கோப்லன்டின் போதனை. இதையே போல் யொங்கி சோ (Paul Yonggi Cho – இப்போது இவர் தன் பெயரை டேவிட் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்), ‘கருத்தரிக்கும் விதிமுறை’ என்ற பெயரில் அழைத்து, பின்வருமாறு விளக்குகிறார்: “முதலில் ஒரு தெளிவான இலக்கை வகுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதை உங்கள் மனதில் படமாகப் பார்க்கப் பழகுங்கள். பின்பு அது நிகழும்படி கருத்தரிக்கச் செய்யுங்கள். அடுத்து, ஜீவனைக் கொடுக்கும் வார்த்தையைப் பயன்படுத்தி அது நடைமுறையில் நிகழும்படிச் செய்யுங்கள்” என்கிறார். (யொங்கி சோவின் போதனைகளை விமர்சிக்கும் ‘போல் யொங்கி சோவும் நான்காம் பரிமாணமும்’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்டுள்ள நூலை வாசியுங்கள்).

இந்த செழிப்பு உபதேசப் போதகர்களாக இதுவரை நாம் பெயர் குறிப்பிட்டுள்ளவர்களைத் தவிர பெனி ஹின் (Benny Hinn), மெரிலின் ஹிக்கி (Merilyn Hickey), பிரெட்டிரிக் கே. சீ. பிரைஸ் (Fredrick K. C. Price), ஜொன் அவன்சீனி (John Avanzini), சார்ள்ஸ் கெப்ஸ் (Charles Capps), ஜெரி செவலே (Jerry Savelle), மொரிஸ் செரூலோ (Morris Cerullo), போல் கிரௌச் (Paul Crouch), ஜேன் கிரௌச் (Jane Crouch) ஆகியோரையும் குறிப்பிடலாம்.

இந்தப் போதனையின்படி விசுவாசத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் எதையும் அடைந்துவிட முடியும். அது பணமாகவோ, பொருளாகவோ உடல் நலமாகவோ அல்லது வாழ்க்கையில் பல வெற்றிகளாகக்கூட இருக்கலாம். இதையெல்லாம் அடையக்கூடிய வல்லமை வார்¢த்தையின் மூலமாகவே வெளிப்படுகின்றது. அதாவது, நாம் விசுவாச வார்த்தையை சொல்லுகிற போது அதிலிருந்து வல்லமை வெளிப்பட்டு நாம் விரும்புகிற காரியம் உடனடியாக நடைபெறுகிறது. இதைத்தான் கென்னத் ஹெகினி னுடைய நூல் விளக்குகிறது. சமீபத்தில் என்னோடு பேசிய ஒரு போதகர் தனக்குத் தெரிந்த ஒரு மனிதர் தன்னிடம் சொன்னதை விளக்கினார். அந்த நபர் இந்தப் போதகரைப் பார்த்து சொன்னாராம், “பாஸ்டர், இன்னும் ஒரு வருடத்தில் பாருங்கள் நான் பென்ஸ் காரில் போய்க் கொண்டிருப்பேன். அதற்கு அடுத்த வருடம் கோடீஸ்வரனாகப் போகி றேன்” என்று. இந்த நபர் செழிப்பு உபதேசத்தை எங்கோ கேட்ட பிறகு இப்படி உளர ஆரம்பித்திருக்கிறாராம்.

செழிப்பு உபதேசங்களை அளிப்பவர்கள் தங்களுடைய போதனை க¢கு அடிப்படையாக கர்த்தர் ஆபிரகாமுடன் செய்து கொண்ட உடன் படிக்கையை மேற்கோள் காட்டுகிறார்கள். செழிப்பு உபதேசகர்களில் ஒருவரான ரொபட் டில்டன் சொல்லுகிறார், “நம்முடைய பங்கைச் செய்வதாக நாம் கர்த்தருக்கு வாக்குறுதிகளை அளித்து, அவருடைய வார்த்தையின் அடிப்படையில் அவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் அவரிடம் சொல்ல வேண்டும். ஆம்! அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி அவருடைய பங்கு என்ன என்பதை நாம் அவருக்கு வற்புறுத்தி சொல்ல முடியும்.” (Robert Tilton, God’s Miracle Plan for Man, pg 36). கென்னத் கோப்லன்ட் சொல்லுகிறார், “ஒரு விசுவாசி என்ற அடிப்படையில் இயேசுவின் நாமத்தில் கட்டளைகளையிட உங்க ளுக்கு உரிமை உண்டு. ஒவ்வொரு முறையும் நீங்கள் அவருடைய வார்த் தையில் நிற்கும்போது, கர்த்தருக்கு நீங்கள் கட்டளையிடுகிறீர்கள். அவருடைய வார்த்தையை நீங்கள் பயன்படுத்துவதால் அதை உங்களால் செய்ய முடிகிறது.” (Kenneth Copeland, Our Covenant With God, pg 32). தொடர்ந்து கோப்லன்ட் சொல்லுகிறார், “கர்த்தர் ஆபிரகாமுடன் ஏற்படுத் திக் கொண்ட உடன்படிக்கையில் ஆபிரகாமைவிட கர்த்தர் கீழான இடத் திலேயே இருக்கிறார். அந்த உடன்படிக்கையில் ஆபிரகாமே உயர்ந்த இடத்தை வகிக்கிறார்.” (Kenneth Copeland, Legal and Vital Aspects of Redemption, Audio messages).

The Cross and the Switch Blade என்ற நூலை எழுதியவரும் ஆரம்பத்தில் அசெம்பிளி ஆவ் கோட் சபையில் இருந்தவருமான டேவிட் வில்கர்சன் (David Wilderson) செழிப்பு உபதேசத்தின் போலித்தனத்தை இப்போது விளாசித்தள்ள ஆரம்பித்திருக்கிறார். இது பெந்தகொஸ்தே இயக்கத்தைச் சேர்ந்த பலருக்குக்கூட இந்தப் போதனையின் போலித்தனம் புரிய ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம். Times Square Church -ல் தான் அளித்த ஒரு பிரசங்கத்தில் இந்தப் போதனையை விமர்சிக்கும் வில்கர்சன் சொல்லுகிறார்: “இந்த போதனையை அளிப்பவர்கள் போலித் தீர்க்கதரிசிகள். இவர்களுடைய போதனையில் சுவிசேஷத்திற்கே இடமில்லை. இவர்கள் ஊழியத்தில் இல்லாமல் உலக காரியங்களில் ஈடுபட்டிருப்பார்களானால் இந்த நேரம் ஜெயிலில்தான் இருப்பார்கள்.” இந்தளவுக்கு டேவிட் வில்கர்சன் இவர்களை விளாசுவதற்குக் காரண மென்ன? அவரே சொல்லுகிறார் கேளுங்கள்: “நான் சமீபத்தில் கென்னத் கோப்லன்டினுடைய ஒரு வீடியோ செய்தியைப் பார்த்தேன். அதில் கொப்லன்ட் சொல்லுகிறார், ‘எனக்கு 1800 சதுர மீட்டரில் நிலம் இருக் கிறது. அதில் சாலமோனே பார்த்து வியக்கும் வகையில் ஒரு மாளிகை கட்டப் போகிறேன். என்னுடைய நாயின் விலை 15000/- அமெரிக்க டாலர்கள். என்னுடைய நகரத்தில் இருப்பவர்கள் என் வீட்டுக்கு வந்து என்னுடைய ரோல்ஸ் ரோய்ஸ் காரைப் பார்க்கிறார்கள்.’ வில்கர்சன் கேட்கிறார் ‘‘இதைப் போய் யாராவது சுவிசேஷ செய்தியாகக் கருதுவார்களா? இது கிறிஸ்தவன் பேசுகின்ற பேச்சா?” என்று. இதே கூட்டத்தில் இன்னொரு பேச்சாளர் சொன்னாராம், “நீங்கள் பணத்தில் புரளும் வரை உங்களை பரிசுத்த ஆவியானவர் ஆசீர்வதிக்கமாட்டார். பணச் செழிப்பு உங்கள் வாழ்க்கையில் இல்லாதவரை அவர் உங்களில் செயல் பட முடியாது.” “கர்த்தர் ஒரு புதிய காரியத்தை செய்கிறார் என்று சொல்லி இந்த மனிதர்கள் பேசுகிற, செய்கின்ற காரியங்களைப் பார்த்து உலகம் சிரிக்கிறது” என்கிறார் டேவிட் வில்கர்சன்.

செழிப்பு உபதேசக் கோட்பாடுகள்

செழிப்பு உபதேசப் போதனையாளர்களான கென்னத் ஹெகின், கென் னத் கோப்லன்ட் ஆகியோரின் நூல்கள், பிரசங்கங்களில் இருந்து தொகுக் கப்பட்ட அவர்களுடைய இறையியல் கோட்பாடுகளை உங்கள் முன் வைத்திருக்கிறேன். இவற்றை வாசித்து சிந்தித்து ஆராய்ந்து பார்த்து எந்தள வுக்கு இந்த செழிப்பு உபதேசம் ஆபத்தானது, கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிந்திக்கத் தெரியாதவர்களாக, சிந்திக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கும் ஒரே காரணத்தைப் பயன்படுத்தி தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியில் ஸ்ரீ லங்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், தமிழர் வாழும் மேலை நாடுகளிலும் அனேக செழிப்பு உபதேசப் போதனையாளர்கள் பெந்தகொஸ்தே/ கெரிஸ்மெட்டிக் இயக்கத்தில் எழும்பியிருக்கிறார்கள். இவர்களுடைய பசப்பு வார்த்தை களில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். கிறிஸ்தவ ஊழியர் களை விமர்சிக்கக் கூடாது என்ற தீங்கான போலித்தனமான நம்பிக் கையை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு உங்களையும் உங்கள் குடும்பத் தாரையும் பேரழிவுக்கு உட்படுத்தாதீர்கள். உங்களுடைய ஆத¢மீக வாழ்க் கையை சரியாக வாழவும், அதைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை யும் கர்த்தர் உங்களிடத்திலேயே தந்திருக்கிறார். அதற்கு நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டிய நாள் வரும். அந்நாளில் கர்த்தருக்கு தகுந்த பதில ளிக்க வேண்டிய கடமை உங்களைச் சார்ந்தது. இனி செழிப்பு உபதேசிகளின் இறையியல் கோட்பாடுகளை ஆராய்வோம்.

வெறும் மனிதனான கடவுள்

இவர்கள் கர்த்தரை மனிதனுடைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். கென்னத் கோப்லன்ட் சொல்லுகிறார், “கர்த்தர் 6 அடி 3 அங்குல உயரமும் 200 இறாத்தல் எடையும் உடையவராகத்தான் இருப் பார். ஆதாமுக்குப் பக்கத்தில் அவரை நிறுத்தி வைத்தால் இருவரும் ஒரே மாதிரியாகத்தான் தோன்றுவார்கள். ஆதாமின் மறு உருவமே இயேசு கிறிஸ்து. ஆதாமுக்கு பக்கத்தில் இயேசுவை நிறுத்திவைத்தால் இருவரும் ஒரேமாதிரியாகத்தான் இருப்பார்கள்.” (Christianity in Crisis). இயேசு தனக்கு காட்சி தந்ததாகவும், அப்போது, “மனிதர்கள் என்னை சிலுவை யில் அறைந்து என்னைக் கடவுள் என்று சொன்னார்கள். ஆனால், நான் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. நான் கடவுளோடு சேர்ந்து நடந்தேன். அவர் என்னில் இருக்கிறார் என்று மட்டும்தான் சொன்னேன்” என்று சொன்னதாக கோப்லன்ட் செல்லுகிறார். (Christianity in Crisis).

அநேக செழிப்பு உபதேசகர்கள் திரித்துவப்போதனையை நம்புவ தில்லை. அவர்கள் மூன்று வெவ்வேறு கடவுள்கள் இருப்பதாக விளக்கங் கொடுக்கிறார்கள். அத்தோடு கர்த்தரை அவர்கள் ஜீவனுள்ள தேவனாகப் பார்க்காது ஒரு சக்தியாக (Force) விளக்குகிறார்கள். உலக மண்டலங் களை சில விதிகளே (Laws) உருவாக்கி பாதுகாப்பதாகவும், அந்த விதி களுக்கு கர்த்தரும் கட்டுப்பட்டவர் என்பது இவர்களுடைய போதனை. கர்த்தர் இந்த உலகத்தை பராமரிக்கும் பொறுப்பை மனிதனிடம் ஒப்படைத்திருப்பதாகவும், தன்னுடைய பார்ட்னரான மனிதனுடைய துணையின்றி அவரால் உலகத்தில் ஒன்றுமே செய்யமுடியாது என்றும் விளக்குகிறார்கள். வேதம் கர்த்தர் இறையாண்மை உள்ளவர், எல்லாம் வல்லவர், அவருக்கு மேல் ஒருவரும் இல்லை என்று போதிக்க இந்த செழிப்பு உபதேச போலித்தீர்க்கதரிசிகள் கர்த்தரை மனிதனுடைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். தான் நினைத்த நேரத்திலும், தான் அழைக்கும் நேரத்திலும் கர்த்தரைத் தனக்குப் பக்கத்தில் வந்திருக்கச் செய்யமுடிவதாக தினகரனும், பரிசுத்த ஆவியைத் தனக்குப் பக்கத்தில் வந்திருக்கச் செய்து தான் பரீட்சை எழுத உதவி செய்யவைத்ததாக பால் தினகரனும் பேசுவதற்குக் காரணம் அவர்கள் கர்த்தரைப் பற்றிய வேதவிரோதமான எண்ணங்களைக் கொண்டிருப்பதால்தான். தங்களுடைய ‘விசுவாசத்தால்’ கர்த்தரை வற்புறுத்தி எதையும் செய்ய வைக்க முடியும் என்று செழிப்பு உபதேசப் போதனையளிப்பவர்கள் சொல்லுவதற்குக் காரணம் புறஜாதியினர் கடவுளைப் பற்றிக் கொண்டு ள்ள எண்ணங்களை இவர்கள் பின்பற்றுவதால்தான்.

தெய்வீக மயமான மனிதன்

யோவான் 10:31-39; 2 பேதுரு 1:4 போன்ற வேதப்பகுதிகளைப் பயன்படுத்தி மனிதனைப்பற்றிய வேதவிரோதமான போதனைகளை அளிக் கிறார்கள் செழிப்பு உபதேசப் போதனையாளர்கள். அதாவது, மனிதரை அவர்கள் ‘குட்டிக் கடவுள்களாகப்’ பார்க்கிறார்கள். கோப்லன்ட் சொல்லுகிறார், “பேதுரு நாம் திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறோம் என்கிறார். நாம், கடவுளர்களா? ஆம்! நாம் ஒருவிதத்தில் கடவுளர்கள்தான்.” (Christianity in Crisis). பெனி ஹின் கூறுவதை வாசியுங்கள், “கடவுள் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்து, மனிதனாகத் தோற்றமெடுத்து, மனிதனை ஒரு சிறு கடவுளாக மாற்றிவிட்டு மறுபடியும் பரலோகத்திற்கே போய்விட்டார்.” (Christianity in Crisis).  ஏர்ல் போல்க் (Earl Paulk) என்பவர் எழுதுகிறார், “நாம் கடவுள் என்பதை உணர்ந்து, கடவுளைப் போல நடக்க ஆரம்பிக்கும்வரை தேவ இராஜ்யத்தை நம்மால் அனுபவிக்க முடியாது.” (Satan Unmasked).

செழிப்பு உபதேசப் போதனையாளர்கள் இன்று நமக்கு ஊக்கந்தரும் செய்தி என்று சொல்லி நாம் தெய்வீகத் தன்மை அடைந்திருப்பதாக நம்பச் சொல்லுகிறார்கள். கடவுள் மனிதனைக் கடவுளாகவே இந்த உலகத்தில் படைத்ததாகவும் பாவத்தால் அவன் சாத்தானுடைய தன்மையை அடைந்திருப்பதாகவும், மறுபிறப்பை அடையும்போது அவன் மறு படியும் கடவுளாக மாறிவிடுவதாகவும் இவர்கள் சொல்லுகிறார்கள். ஆகவே, மறுபிறப்படைந்த மனிதன் கடவுளாக இருப்பதால் அவனால் கடவுளைப்போல வல்லமையுடையவனாய் இந்த உலகத்தில் செயல்பட முடியும் என்கிறார்கள் செழிப்பு உபதேசகர்கள். இதனால்தான் இவர்கள், நாம் நமது ‘விசுவாசத்தை’ அதிகரித்துக்கொண்டால் வாழ்க்கையில் தேவையான எதையும் சுலபமாக அடைய முடியும், அவற்றைத் தரும்படிக் கர்த்தரைக் கட்டாயப்படுத்த முடியும் என்று விளக்குகிறார்கள். மனிதன் தெய்வீகத் தன்மையைப் பெற்றிருப்பதால் அவன் எதிர்பார்ப்பதை தெய் வீகத் தன்மையுடைய மனிதனுடைய பாட்னரான கடவுளால் கொடுக் காமல் இருக்க முடியாது என்பது இவர்களுடைய போதனை.

வேதம் போதிக்கும் மனிதனைப் பற்றிய அத்தனை விளக்கங்களுக்கும் எதிரானது செழிப்பு உபதேசிகளின் மனிதனைப் பற்றிய போதனைகள். கர்த்தரின் கிருபையால் பாவத்தில் இருந்து விடுபட்டு மறுபிறப்படையும் மனிதன் தெய்வமாகிவிடுவதில்லை. அவன் மனிதனாக, கர்த்தரின் பிள்ளையாக இருந்து பாவத்தோடு தொடர்ந்து போராட வேண்டிய வனாக இருக்கிறான். பரிசுத்தத்தில் வளர வேண்டியவனாக இருக்கிறான். இதையெல்லாம் செழிப்பு உபதேசிகள் முற்றாக நிராகரிக்கிறார்கள். மறுபிறப்பு அடையும்போது மனிதன் பாவமில்லாதவனாக மாறிவிடுவ தாகப் பொய் சொல்லி ஆத்துமாக்களை வஞ்சிக்கிறார்கள்.

நரகத்தில் கிறிஸ்து

செழிப்பு உபதேசம் செய்பவர்கள் இயேசு கிறிஸ்துவையும் விட்டு வைக்கவில்லை. அவருடைய கல்வாரி மரணத்தையும் அதன் தாற் பரியத்தையும் இறைபோதனை என்ற பெயரில் அலங்கோலப்படுத்து கிறார்கள். கென்னத் ஹெகின் சொல்லுகிறார், “இயேசு கிறிஸ்துவின் சரீர மரணம் மனிதனின் பாவத்தைப் போக்காது” என்று (Hagin, The Name of Jesus, p. 29). கிறிஸ்துவின் ஆத்மீக மரணமே பாவிகளுக்கு நிவார ணம் பெற்றுத் தருகிறதாம். “சாத்தானுடைய தன்மையைக் கொண்டிருப்பதே ஆத்மீக மரணம் என்பது. அதைத்தான் இயேசு சிலுவையில் கொண்டிருந்தார்” என்கிறார் கென்னத் ஹெகின். இயேசு கிறிஸ்து சிலுவையில் தன்னுடைய தெய்வீகத்தை இழந்து சாத்தானுடைய தன்மையை அடைந்தாராம். அதன் பின் அவர் நரகத்தில் தன்னுடைய மக்களின் பாவம் நீங்க நரக வேதனையைத் தாங்கி சாத்தானுக்கு பரிகாரப்பலி செலுத்தினாராம். (ஆகவே, இயேசு சிலுவையில் எந்தப் பலியையும் செலுத்தவில்லை என்பது இவர்களுடைய போதனை.) நரகத்தில் கிறிஸ்து குட்டிச் சாத்தான்களினால் நரக துன்பத்தை அனுபவித்தார் என்றும் அதுவே அவருடைய சிலுவைப்பலி என்றும் இவர்கள் விளக்கமளிக்கிறார்கள். தன்னுடைய மக்கள் மறுபிறவி எடுப்பதற்காக இயேசு நரகத்தில் மறுபிறவி எடுத்தார் என்றும் கூறுகிறார்கள் செழிப்பு உபதேசகர்கள் (Christianity in Crisis). இதெல்லாம் வேதம் கிறிஸ்துவின் கல்வாரி மரணத்தைப் பற்றி விளக்கும் போதனைகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானவை. கிறிஸ்து கல்வாரியில் தமது மக்கள் தங்களுடைய பாவத்திலிருந்து விடுதலை அடைவதற்குத் தேவையான அனைத்தையும் செய்து முடித்துவிட்டார். அவருடைய சரீரப்பலி அதற்கு அவசியமாயிருந்தது. அவர் நரகத்திற்குப் போகவில்லை. நமது பாவத்தைத் தன்மேல் சுமந்து கர்த்தருடைய கட்டளைகளைத் தன்னில் நிறைவேற்றினார். அவருடைய சிலுவைப்பாடுகள் நமது பாவம் அவர் மீது வந்திறங்கியதையும், அதனால் கிறிஸ்து ஆத்மா, சரீரம் ஆகிய இரண்டிலும் அனுபவித்த வேதனைகளை விளக்குகின்றன. அது இந்த உலகத்தில் நிகழ்ந்ததே தவிர இதற்கு வெளியில் அல்ல. வேதப் புரட்டர் களான செழிப்பு உபதேசகர்கள் தங்களுடைய போலிப்போதனையை வலுப்படுத்திக் கொள்ள கிறிஸ்துவையும் விட்டுவைக்கவில்லை.

ஜெபமல்ல ‘பொசிட்டிவ் கன்பெஷன்’ (Positive Confession)

செழிப்பு உபதேசிகள், கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் காணப்படும் சில வலிமையான சக்திகளை வெளிக்கொணர்ந்து சில ஆத்மீக விதிகள் நிறை வேறும்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த ஆத்மீக விதிகளை வார்த்தையின் மூலம் நிறைவேற்றலாம் என்கிறார்கள் இவர்கள். ஆகவே, வார்த்தையைத் தொடர்ந்து நினைவு கூர்ந்து மனப்பாடமாக்கி திரும்பத் திரும்பச் சொன்னால் நினைப்பது நடக்கும் என்பது இவர்களு டைய போதனை. நான் எழுதிக் கேட்காமலேயே எனக்கு அனுப்பப்படும் ஒரு சிறு ஏடு ‘நூறு கிராம ஊழியம்’. அதன் ஆரம்பப் பக்கங்களில் சில வாக்குத்தத்த வேத வார்த்தைகள் தரப்பட்டிருக்கும். அதை வாசிப்பவர்கள் அந்த வசனங்களைத் தொடர்ந்து சொன்னால் அவர்கள் வாழ்க்கையில் பணத்தொல்லை, நோய்த்தொல்லை, பிசாசுத் தொல்லை என்று சகல தொல்லைகளும் இல்லாமல் போய்விடும் என்று எழுதப்பட்டிருக் கும். ஒவ்வொரு இதழிலும் இதே கதைதான். இது செழிப்பு உபதேசத்தைப் பின்பற்றும் ஒரு தமிழ்நாட்டு அரைவேட்காட்டு ஊழியம். ஆனால், இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இப்படி மற்றவர்களுடைய தொல்லைகள் நீங்க வசன வார்த்தைகளை அள்ளித் தெளித்து அவற்றைச் சொல்லிப்பார்த்து தங்களுடைய தேவைகளைப் போக்கிக் கொள்ளும்படி உபதேசிக்கும் இந்த ‘ஏட்டாசிரியர்’, எனக்கு வேகமான கம்பியூட்டர் தேவை, டிஜிட்டல் கெமரா தேவை, ஜிரோக்ஸ் மெசின் தேவை, மகேந் திரா வேன் தேவை என்று பட்டியல் போட்டு இந்தத் தேவைகள் நிறை வேற உதவி செய்யுங்கள், ஜெபியுங்கள் என்று எழுதுவது ஏன் என்று புரியவில்லை. தானும் சில வசனங்களைத் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்து இதெல்லாம் கிடைக்கும்படிச் செய்வதில் அவருக்கு நம்பிக்கை இல்லையோ? மற்றவர்களுக்கு செழிப்பு உபதேசம் தன்னுடைய தேவைகளுக்கு பணப் பிச்சை, பொருள் பிச்சை!

போல் (இப்போது டேவிட்) யொங்கி சோவும் இதேமாதிரிதான் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி நம்முடைய தேவைகளை மனதில் உருவமாகப் பதித்து அவை கிடைத்துவிட்டது என்று நம்பும்படிப் போதிக்கிறார். செழிப்பு உபதேசிகள் இயேசு நம்மிடம் எதிர்பார்க்கும் ஜெபத்தை உதறித் தள்ளிவிட்டு கோயில் அர்ச்சகரைப் போல வார்த்தை மந்திரம் சொல்லும்படி நம்மை வற்புறுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்து நாம் ஜெபிக்க வேண்டும் என்று சொன்னபோது, நம்முடைய தேவை களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதைச் செய்யும்படிச் சொல்லவில்லை. கர்த்தர் இறையாண்மையுள்ளவர், சகலத்தையும் ஆளுகிறவர், நம்மைப் படைத்தவர் என்ற உணர்வோடும் தாழ்மையோடும் சகலத்துக் கும் அவரில் நாம் தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்றார். ஜெபத்தின் மூலம் நாம் கர்த்தரோடு ஐக்கியத்தில் வருகிறோம். வெறும் சட்டி பானையையும், சோற்றையும் பெற்றுக்கொள்வ தற்காக கொடுக்கப்பட்டதல்ல ஜெபம். ஜெபம் செய்து நாம் கேட்பதைக் கொடுக்கும்படி கர்த்தரை ஒருநாளும் வற்புறுத்த முடியாது. அவர் நமக்குக் கட்டுப்பட்டவரல்ல. ஜெபத்தின் மூலம் நமது நிலையை அவருக்கு நாம் நிச்சயம் சொல்ல வேண்டும். நமக்கு எது நன்மை தருமோ அதை மட்டுமே கர்த்தர் நமக்கு எப்போதும் செய்வார். சகலத்தையும் படைத்தவருக்கே தமது பிள்ளைகளுக்கு எது நன்மையானது என்பதும், எதை எப்போது கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும். கர்த்தர் சிலவேளைகளில் நமது தேவைகளை நிறைவேற்றாமலிருப்பதும் நமது நன்மைக்கே. நமது தேவைகள் நிறைவேறவில்லை என்பதால் நமது ஜெபத்தில் குறைபாடு என்று அர்த்தமல்ல. நாம் சரியாக ஜெபித்திருந்தும், விசுவாசத்தோடு ஜெபித்திருந்தும் எல்லாம் தெரிந்த கர்¢த்தர் தனக்கு மட்டுமே தெரிந்த காரணத்தால் நாம் கேட்பதை நிறைவேற்றாமலும் இருப்பார். அந்த நிலையிலும் நமக்கு நன்மையையே செய்யும் கர்த்தர் எல்லாவற்றையும் நாம் நன்மையடையும் பொருட்டு கொண்டு நடத்துபவராக இருக்கிறார் என்ற எண்ணத்தோடு நாம் தொடர்ந்து அவரில் தங்கியிருப்பதற்குப் பெயர்தான் ஜெபம். ஜெபம் என்றால் என்னவென்றே தெரியாமல் செழிப்பு உபதேசகர்களும் அவர்களுடைய கத்துக் குட்டிகளும் இன்று ஜெபம் என்ற பெயரில் ‘சூ! மந்திரக்காளி’ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பாவமும், நோய் நொடியும்

செழிப்பு உபதேசமளிப்பவர்கள் விசுவாசிகள் எந்தவிதத்திலும் இந்த உலகத்தில் குறைவில்லாதவர்கள் என்று போதிக்கிறார்கள். அவர்களில் பாவத்தின் எச்சம் (Remaining sin) இருப்பதையே நிராகரிக்கிறார்கள். அவர்கள் பாவத்தோடு போராட வேண்டியவர்களாக இந்த உபதேசம் போதிப்பதில்லை. அத்தோடு விசுவாசிகள் வாழ்க்கையில் குறைபாட்டோடு இருக்கக் கூடாது என்பது இவர்களுடைய போதனை. செழிப்பு உபதேசகரான ரொபட் டில்டன் (Robert Tilton) சொல்லுகிறார், ‘கர்த்தர் செழிப்பைத் தருவதாக வாக்களித்திருக்கும்போது நாம் வறுமையில் இருப் பது பாவம். கர்த்தர் நமக்குத் தரப்போவதாக வாக்களித்திருப்பவற்றோடு எண்ணிப் பார்க்கும்போது புதுக்காரும், புது வீடும் சர்வ சாதாரணம்.’ (Charismatic Chaos, p. 285). ‘10 டாலரைக் கொடுத்து 1000ஐப் பெற்றுக் கொள்ளுங்கள். 1000ஐக் கொடுத்து 10000ஐப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு வீட்டைக் கொடுத்து நூறு வீடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். மாற்கு 10:30 இதைத்தான் சொல்லுகிறது’ என்கிறார் கோப்லன்டின் மனைவி குளோரியா கோப்லன்ட். எப்படி இருக்கிறது இவர்களுடைய வருமான வளர்ச்சிக் கணக்கு? இவர்கள் 3 யோவான் 2ல், ‘நீ எல்லாவற் றிலும் வாழ்ந்து சகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’ என்று யோவான் சொன்னதை செழிப்பு உபதேசத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இங்கு யோவான் அந்த எண்ணத்தையே கொண்டிருக்கவில்லை. உன் வாழ்வில் நடப்பது எல்லாம் நன்மையாக இருக்கட்டும் என்ற கருத்தில் நாம் கூட வழமையாக விசுவாசிகளைப் பார்த்து சொல்வதுபோல்தான் யோவான் சொல்லியிருக்கிறாரே தவிர ‘சுகமாயிரு’ என்ற அந்த வார்த்தை யில் பொருளாதார, செழிப்புக்கோ, உடல்நல செழிப்புக்கோ இடமேயில்லை.

வாழ்க்கையில் நோய்க்கும் இடமில்லை என்கிறார்கள் இவர்கள். “இயேசு 2000 வருடங்களுக்கு முன்பாகவே உங்களைக் குணமாக்கிவிட்டார். இப்போது அவர் உங்களைக் குணமாக்கப் போவதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசத்தின் மூலம் உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்” என்கிறார் பெனி ஹின் (Rise and Be Healed, p. 44). பெனி ஹின் இதற்கு ஏசாயா 53 ல் தீர்க்கதரிசி சொல்லு கிற வசனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால், அந்த வசனம் இந்த உலகத் தில் நமக்கு நிரந்தர உடல் சுகத்தையும், பொருளாதார வசதியையும் வாக்களிக்கவில்லை. அந்த வசனத்துக்கு அப்படி விளக்கம் கொடுப்பது அடிமுட்டாள்தனம். எங்கள் வீட்டில் நாங்கள் சுகவீனத்தை அனுமதிப் பதேயில்லை என்று சொல்லுகிற பிரெட் பிரைஸின் மனைவிக்கு கென்சர் வியாதி. தனக்கு தலைவலியோ, ஜுரமோ 60 வருடங்களாக வந்ததில்லை என்று சொல்லுகிற கென்னத் ஹெகினுக்கு வைத்தியசாலைக்கு கொண்டு போகுமளவுக்கு நான்கு தடவைகள் இருதய வலி வந்தது. ஓரல் ரொபட் சின் இருதய வியாதியைக் குணப்படுத்திவிட்டதாக போல் கிரௌச் TBN Broadcastல் சொல்லி சில மணி நேரங்களுக்குள்ளாக ரொபட்சுக்கு மறுபடியும் இருதய வலி வந்துவிட்டது. இதற்கெல்லாம் விளக்கம் கேட்கப் போனால் இதெல்லாம் பிசாசின் வேலை என்று திரித்துப் பேசிவிடு வார்கள். வாழ்க்கையில் நோய் என்பது சாத்தானின் வேலை என்றும் அதை வார்த்தையால் இல்லாமலாக்கிவிட வேண்டும் என்று போதிக் கிறார்கள் செழிப்பு உபதேசகர்கள். இவர்கள் பிணி தீர்க்கும் ஊழியத்தில் பெருமளவுக்கு ஈடுபடுவதற்கு இதுதான் காரணம். ஆனால், நம் வாழ்க்கை யில் நோய் ஏற்படுவதற்கு சாத்தான் நேரடிக் காரணமென்று வேதம் எங்குமே போதிக்கவில்லை. பாவம் இருக்கும் உலகத்தில் மனிதனுக்கு தலைவலியும், இருதய வலியும் வந்தே தீரும். பரலோகத்திலேயே இதெல் லாம் இருக்காது. உடல் சுகத்துக்கு பெரு முக்கியத்துவம் அளிக்கும் செழிப்பு உபதேசகர்கள் ஆத்மீக விடுதலைக்கு எந்த வழியையும் காண்பிப்பதில்லை. அவர்களுடைய போதனைகளில் சுவிசேஷத்திற்கு எந்த இடமுமில்லை.

கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டுள்ள சுவிசேஷத்தை அவருடைய வார்த்தையின்படி பிரசங்கிக்க மறுத்து மனித சிந்தனையில் உருவான வேதவிரோதக் கோட்பாடுகளை செழிப்பு உபதேசகர்கள் கிறிஸ்துவின் பெயரில் போதித்து வருகிறார்கள். இதை நம்பி வட்டிக்குப் பெருங்கடன் வாங்கி ஒரு சபைக் கட்டிடத்தைக் கட்டி வாங்கிய தொகையையும் வட்டி யையும் கட்ட முடியாமல் வாழ்க்கையைப் பாழடித்துக் கொண்ட ஒரு ஊழியனைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி அநியாயமாக பொய்யை நம்பி தங்களுடைய இருதயத்தைப் பாழடித்துக் கொள்கிறவர்கள் தமிழர் மத்தியில் அதிகம். பரிசுத்தமான ஆத்மீக வாழ்க்கை என் பது பணத்துக்காகவும், பொருளுக்காகவும் வாழும் வாழ்க்கை அல்ல. தொல்லைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் வாழ்க்கை அது. நண்பர்களே! இந்த செழிப்புப் பிசாசின் வலையில் இருந்து தப்புங்கள். இதிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்திருந்தால் மற்றவர்களும் மனந்திரும்ப உதவுங்கள். இந்த உலகத்தில் பணத்திலும், நோயில்லா வாழ்க்கையிலும் புரள நினைப்பது வெறுங்கனவு. இரட்சகராம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பரலோகம் போகும் வழியைப் பார்க்க பாவி களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதே இன்று நமது பெருங்கடமை.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s