தோற்றமும், வளர்ச்சியும் (2)
அப்போஸ்தலர் காலத்தில் ஆதிசபையிலும் அதற்குப் பின் சீர்திருத்த வாதிகளின் காலத்திலும், தூய்மைவாதிகளின் காலத்திலும் இருந்தி ராத டிஸ்பென்சேஷனலிசம் ஜோன் நெல்சன் டார்பியினால் ஆரம் பிக்கப்பட்டு எப்படி இங்கிலாந்தில் வளர்ந்தது என்பதையும், வேதத் தில் காணமுடியாத அதனுடைய கோட்பாடுகளையும் கடந்த இதழில் ஆராய்ந்தோம். இனி அது எப்படி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு வளர்ந்தது என்பதை இந்த இதழில் ஆராயப் போகிறோம்.
அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிசம்:
ஆயிரம் வருட அரசாட்சிக் கோட்பாட்டில் டிஸ்பென்சேஷனலிசத்தின் ஊடுருவல்
அமெரிக்காவில் பிரிமில்லேனியலிசத்தைப் பின்பற்றியோர் மத்தியில் 1843-ல் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இவர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த வில்லியம் மில்லர் (1792-1849) (William Miller) இயேசு கிறிஸ்து 1843-ல் வரப்போவதாக தீர்க்க தரிசனம் சொன்னார். இந்தத் தீர்க்கதரிசனத்தினால் இவரைச்சுற்றிப் பெருங்கூட்டம் கூடியது. ஆனால், இயேசு கிறிஸ்து 1843-ல் வராததால் இந்தக் கூட்டம் பிசுபிசுத்துப் போய் ‘மிலரிசம்’ பேரடி வாங்கியது. இதனால் பிரிமில்லேனியலிசக் கோட் பாடு பெரும் பாதிப்புக்குள்ளானது. முக்கியமாக வரலாற்றுப் பிரிமில்லேனிய லிசம் இதனால் பாதிக்கப்பட்டது. 1260 வருட/நாட்களுக்கு மில்லர் அளித்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அவருடைய தீர்க்கதரிசனமும் அமைந் திருந்ததால் அந்தத் தீர்க்கதரிசனம் பொய்யாய்ப்போனபோது அனைத்துப் பிரிமில்லேனியலிசப் பிரிவினரும் பாதிப்புக்குள்ளானார்கள். இதன் காரணமாக எதிர்காலத்தின் அடிப்படையில் முடிவுகால நிகழச்சிகளுக்கு விளக்கம் கொடுக்கும் முறை டின்பென்சேஷனலிசத்தின் முக்கிய அம்சமாக விளங்கு வதற்கு இந்த நிகழ்ச்சி பாதை வகுத்துத் தருவதாக அமைந்தது.
இந்தக் காலப்பகுதியில் ஜோன் நெல்சன் டார்பி 1862 முதல் 1877 வரை ஆறு தடவைகள் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் வந்துபோனார். அமெரிக்க கிறிஸ்தவர்கள் தன்னுடைய கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளச் செய்யும் டார்பியினுடைய ஆரம்ப முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. முக்கியமாக கிறிஸ்தவ உலகத்தின் மோசமான நிலமைக்கு பாரம் பரிய சபைகளே மூலகாரணமென்றும், அதனால் விசுவாசிகள் சபைகளைப் புறக்கணித்து சகோதரர்களாக கிறிஸ்துவின் பெயரில் எல்லா இடங்களிலும் கூடிவரவேண்டுமென்ற இவருடைய போதனை அமெரிக்க கிறிஸ்தவர்களிடம் விற்பனையாகவில்லை. அமெரிக்க கிறிஸ்தவ சபைகள் முழுவதும் உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழ்கிற சபைகளாக இருக்கின்றன என்றும் அதுவே அவர்கள் மத்தியில் தனது கோட்பாடுகள் செல்லுபடியாகாதற்குக் காரணம் என்றும் டார்பி குற்றஞ்சாட்டினார். ஆனால், டார்பியின் விடாமுயற்சி 1870-வதுகளில் அவருக்குக் கைகொடுக்கக் ஆரம்பித்தது. செயின்ட் லூயிஸ். சிக்காகோ, நியூயோர்க், பொஸ்டன் ஆகிய அமெரிக்க நகரங்களில் அவருடைய கோட்பாடுகள் சிறிது சிறிதாக பிரபல்யமடைய ஆரம்பித்தன. செயின்ட் லூயிசில் ஜேம்ஸ் புரூக்ஸ் என்ற பிரஸ்பிடீரியன் சபைப் போதகர் டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டைப் போதிக்கும் முக்கிய போதகராக உருவானார். சிக்காகோவில் டார்பிக்கு டி. எல் மூடியுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஆனால், டார்பியால் தன்னு டைய டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாடுகளைப் பரப்பும் முக்கிய பிரச்சார கராக டீ. எல். மூடியை மாற்ற முடியவில்லை. பொஸ்டனில் எப். ஜீ. பிரவுன் என்பவர் சகோதரத்துவ கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டார். ஜோன் நெல்சன் டார்பி கடைசித் தடவையாக அமெரிக்காவுக்கு விஜயம் செய்த 1877-ம் ஆண்டில் அங்கே எண்பத்தி எட்டு சகோதரத்துவ குழுக்கள் இருந்தன. ஆனால், இவையனைத்துமே சிறு தொகையினரான விசுவாசி களை மட்டுமே கொண்டிருந்தன. (சகோதர்கள் கூடிவரும் கூட்டத்தை நான் குழுக்கள் என்று அழைப்பதற்குக் காரணம் சகோதரத்துவ கோட்பாட்டாளர் திருச்சபையை ஓர் அமைப்பாக ஏற்றுக் கொள்ளாததால்தான். அவர் களுடைய கோட்பாட்டின்படி சகோதர்கள் கூடிவரும் நிரந்தரமற்ற, பெயரில் லாத கூட்டமே சகோதரத்துவ குழுக்கள். வேதபோதனையின்படி அவர்கள் சபை அமைப்பைக் கொண்டிராததால் அவர்களுடைய கூட்டத்தை சபை என்று அழைப்பது முறையல்ல.) இங்கிலாந்தில் பிலிமத் சகோதரர்கள் பிரபல் யம் பெற்றிருந்ததுபோல் அமெரிக்காவில் அவர்கள் என்றுமே பிரபல்யமான ஒரு இயக்கமாக இருக்கவில்லை. ஆனால், டின்பென்சேஷனலிசம் மட்டும் பிரபல்யமடைந்தது.
இதே காலப்பகுதியில் அமெரிக்காவில் ஆயிரம் வருட அரசாட்சி பற்றிய விளக்கங்கள் தரும் இதழ்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்தன. அவற்றில் பல எதிர்கால அடிப்படையிலான பிரிமில்லேனியல் விளக்கங்களைத் தருவதாகவும், சில டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாகவும் இருந்தன. புரொபடிக் டைம்ஸ் Prophetic Times (1863-1881), வேமார்க் இன் த வில்டர்னர்ஸ் Waymark in the Wilderness (1854-1857, 1864-1872) ஆகியன இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இரண்டாவதன் ஆசிரியராக இருந்த இங்லிஸின் (Inglis) எழுத்துக்களில் அமெரிக்க டிஸ்பென்சேஷனலிசத்திற்கே உரிய குணாதிசயங்களைப் பார்க்க முடிகின்றது. இவர் ஜோன் நெல்சன் டார்பியின் சகோதரத்துவக் கோட்பாடுகளையும், கூட்டுச்சேராத் தன்மையையும் முழுமையாக நிராகரித்து அவருடைய டிஸ்பென்சேஷனலிசக் கோட் பாடுகளையும், கிறிஸ்துவின் இரகசிய வருகை போன்றவற்றை மட்டும் எடுத்துக் கொண்டார்.
தீர்க்கதரிசனத்துக்கு முக்கியத்துவம் தந்த வேத ஆராய்ச்சி மகாநாடுகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி முப்பது ஆண்டுகளில் பிரிமில் லேனியலிசம் பல தீர்க்கதரிசன வேத ஆராய்ச்சி மகாநாடுகளை (Prophetic Bible Conferences) நடத்தி ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. நயாகரா வேத ஆராய்ச்சி மகாநாடு (Niagara Bible Conference) இந்த மகாநாடுகளுக் கெல்லாம் தாயாக அமைந்தது. இது 1868-ல் நியூ யோர்க் நகரில் ஆரம்ப மானது. இதில் பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்களாக ஜேம்ஸ் இங்லிஸ் (James Inglis), டேவிட் இங்லிஸ் (David Inglis), சார்ள்ஸ் கெம்பல் (Charles Campbell) போன்றோரிருந்தனர். இதில் 120 பிரபல்யமான பிரிமில்லேனியல் இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மகாநாடுகள் தொடர்ந்து நடந்தன. இவற்றில் பங்கு கொண்டு உரையாற்றிய சிலர் டிஸ்பென்சேஷ னலிசக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்களாகவும் வேறு சிலர் ஆரம்பத்தில் டார்பியின் பிரி-டிரிபியுலேசன் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு பின்பு அதைக் கைவிட்டவர்களாகவும் இருந்தனர். டிஸ்பென்சேஷனலிசத்திற்கே இந்த மகாநாடுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபோதிலும் ஆரம்ப காலங்களில் பிரிமில்லேனியலிசத்தைச் சேர்ந்த பல்வேறு கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களும் இணைந்து செயல்பட்டனர்.
ஹென்றி வார்ட் பேச்சர் (Henry Ward Becher) என்பவர் வேத போதனை களுக்கு இயற்கை ரீதியிலான “லிபரல்” விளக்கம் அளித்த பேச்சிற்குப் பின்பே நயாகரா மகாநாடு நடைபெற்றது என்பதைக் குறிப்பிட வேண்டும். ஹென்றி வார்ட் பேச்சரின் பேச்சு அனேகரை வசீகரிக்க ஆரம்பித்ததால் அதற் கெதிராக நயாகரா மாகாநாட்டுத் தலைவர்கள் கூட்டுச் செர்ந்தனர். 1878-ல் நடந்த நயாகரா மகாநாடு, லிபரலிசத்திற்கெதிராக வேதத்தின் அடிப்படைப் போதனைகளை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தவகையில் அது பாராட்டத் தகுந்த நடவடிக்கையே. ஆனால், மகாநாட்டில் வெளியிடப்பட்ட பதின்னான்கு அடிப்படைக் கோட்பாடுகளில் ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்னதான கிறிஸ்துவின் வருகையும் ஒன்றாக இருந்தது. மகாநாட்டுத் தலைவர்கள் அனைவரும் டிஸ்பென்சேஷனலிசத்தை ஏற்றுக் கொண்டவர் களாக இருந்தபோதும், ஆயிரம் வருட அரசாட்சிக் கோட்பாட்டைத் தனியொரு கோட்பாடாகப் பார்க்காமல் தங்களுடைய ஏனைய அடிப்படை வேதநம்பிக்கைகளோடு இணைந்த ஒரு கோட்பாடாகவே கருதினர். ஆகவே, பின்பு வரலாற்றில் உருவான அடிப்படைவாதத்திற்கு (Fundamentalism) இந்தப்போக்கு அடித்தளமிடுவதாக அமைந்தது.
இந்த மகாநாடுகள் லிபரலசத்திற்கெதிரான வேதக்கோட்பாடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் இந்த மாகாநாட்டுத் தலைவர்கள் சத்தியப் பாதுகாவலர்களாக பெயர்பெற ஆரம்பித்தனர். ஆனால், அதே நேரம், இவர்கள் அனைவரும் டிஸ்பென்சேஷனலிசத்தைத் தழுவியவர்களாக இருந்ததால் அதற்கு எங்கும் ஆதரவு பெருக ஆரம்பித்தது. டிஸ்பென்சேஷன லிசம் இந்தவகையில் அமெரிக்காவில் ஆதரவு பெற ஆரம்பித்தற்குக் காரணம் இதன் எழுத்துபூர்வமான வேதவிளக்க விதிதான் (Literal Interpretation). இக்காலத்தில் லிபரலிசம் வேதத்தின் அற்புதங்களை அடியோடு நிராகரித்து இயற்கைரீதியிலான விளக்கத்தை அளித்தது. அதற்கு மாறாக டிஸ்பென் சேஷனலிசம் எழுத்துபூர்வமான விளக்கமளிப்பதை வற்புறுத்தி அற்புதங் களை அற்புதங்களாக விளக்கியது. லிபரலிசத்தை எதிர்த்த சுவிசேஷ இயக்கத் தவர்கள் இதனால் டிஸ்பென்சேஷனலிசத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள்.
லிபரலிசத்தை எதிர்த்து நிற்பதற்குக் கைகொடுத்த டிஸ்பென்சேஷனலிசத்தின் எழுத்துபூர்வமான வேதவிளக்க விதிமுறை காலம் போகப்போக அதன் அடிப்படைக் கோட்பாடாக உருப்பெற்றது. இப்போதனைப்படி, தீர்க்கதரிசனங்கள் அது கொடுக்கப்பட்டுள்ளபடியே எழுத்துபூர்வமாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். வேதத்தில் இஸ்ரவேலை யூதர்களாக மட்டுமே விளங்கிக் கொள்ள வேண்டும். தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் அந்த எண்கள் குறிக்கும் காலப்பகுதிகளாக மட்டுமே கருதப்பட வேண்டும். அத்தோடு, அடையாளங்களாக வேதத்தில் தரப்பட்டுள்ளவைகளும்கூட வரலாற்றில் வாழ்ந்துள்ள வேத மனிதர்களை அல்லது சம்பவங்களைக் குறிப்பவையாக மட்டுமே விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் வரலாற்றில் நடந்துள்ள, நடக்கப்போகும் சம்பவங்களாக தெளிவாகவும், தீர்க்கமாகவும் விளங்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் இந்த டிஸ்பென்சேஷனலிச எழுத்துபூர்வமான வேத விளக்க முறை போதித்தது.
இந்த முறையில் வேதத்திற்கு விளக்கங் கொடுத்த டிஸ்பென்சேஷனலிஸ்ட் தலைவர்களின் மாகாநாட்டுப் பிரசங்கங்கள் வித்தியாசமான வகையில் அமைந்திருந்தன. அவர்கள் “பிரசங்கம்” என்பதை “வேதவாசிப்பு” (Bible reading) என்ற பெயரில் அழைத்தார்கள். இந்த வேத வாசிப்பிலும் வித்தியாசமான முறையைக் கடைப்பிடித்தார்கள். அதாவது, எந்த உதாரணங்களையும் தராமல், அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கங்களைத்தராமல் வேத வசனங்களுக்கு நேரிடையாக உள்ளது உள்ளபடி எழுத்துபூர்வமான ஒருசில விளக்கத்தை மட்டும் அளித்தனர் (like a running commentary). இது வேதப்படிப்பிற்கு அதிக மரியாதை தரும் முயற்சிபோலத் தென்பட்டாலும் இந்த முறையில் ஆபத்து இருந்தது. ஒத்தவாக்கிய அகராதியைப் பயன்படுத்தி ஒரு பகுதிக்கான விளக்கத்தை வேதத்தின் பல பகுதிகளைப் பயன்படுத்தி போகிற போக்கில் கிரிக்கெட் காமென்டரி கொடுப்பதுபோல் ஒரு சில விளக்கங்களை மட்டும் அளிப்பதை பிரசங்கம் என்று கூற முடியாது. இந்த வகையில்தான் இவர்களுடைய “வேதவாசிப்பு” அமைந்திருந்தது. ஆனால், இந்த முறை அக்காலத்து அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்படி வேதத்திற்கு எழுத்துபூர்வமான விளக்கத்தை அளித்தவர்கள் தாங்கள் சாதாரண மனிதர்களுக்கு சாதாரண விளக்கங்களை அளிப்பவர்கள் என்று மார்தட்டிக் கொண்டனர். வேத வசனங்களில் இரகசியமான, கண்ணுக்குப் புலப்படாதவற்றைப் பார்க்கக்கூடாதென்றும், நேரடியாக நாம் வாசிக்கும்போது தெரிகிறவற்றை மட்டுமே விளக்க வேண்டும் என்று 1886 மகாநாட்டில் கூறப்பட்டது. இதுவே சாதாரண மக்களால் விளங்கிக் கொள்ளக்கூடிய வேதத்தின் சாதாரண விளக்கங்கள் என்றும் விளக்கப்பட்டது. வேதவிளக்க விதிகள் பற்றிய டிஸ்பென்சேஷனலிசத் தலைவர்களின் இத்தகைய பேச்சுக்கள் அக்காலத்தில் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்றதற்கு இன்னுமொரு முக்கிய கரணம் இருந்தது. 1820-ல் இருந்து ஒரு நூற்றாண்டு காலம்வரை அமெரிக்காவில் பொதுஅறிவு மெய்த்தன்மை (Scottish common Sense Realism) என்ற தத்துவம் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தது. இதுவே அன்றைய அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் போதிக்கப்பட்டு வந்தது. இது ஓர் அமெரிக்க தத்துவம். இந்தத்தத்துவம், கர்த்தருடைய சத்தியம் ஒருங்கிணைக்கப்பட்ட, வரைமுறை கொண்ட தனி யூனிட் என்றும் அதை விளங்கிக்கொள்வதற்கு பொதுஅறிவு இருந்தாலே போதும் என்றும் விளக்கியது. டிஸ்பென்சேஷனலிசத்தின் எழுத்துபூர்வமான வேதவிளக்கங் களுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு தந்ததற்கு அவர்கள் மத்தியில் காணப்பட்ட இந்தத் தத்துவமே பெரும்பாலும் காரணமாக இருந்தது. “நூற்றில் தொன்னூற்றொன்பது தடவைகள் சாதாரண மனிதன் ஒருவன் வேதத்தைப் படித்து விளங்கிக் கொள்ளக்கூடிய சத்தியம் மட்டுமே சரியானது” என்ற ஆர். ஏ. டோரியின் (R. A. Torrey), வார்த்தைகள் இவர்களுக்கு மிகவும் பொருளுள்ளதாகப்பட்டது. ஆகவே, டிஸ்பென்சேஷனலிஸ்ட்டுகளின் எழுத்துபூர்வமான வேதவிளக்க விதி அமெரிக்கர்களைப் பாதித்திருந்த “பொதுஅறிவுத்” தத்துவத்தின் அருமையான வெளிப்பாடாக இருந்தது.
டி. எல். மூடியும் (Dwight L. Moody), செங்கியும் (Ira Senkey)
இதுவரை நாம் பத்தோன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிசத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்த அம்சங்களை ஆராய்ந்து வந்துள்ளோம். அத்தோடு அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இன்னுமொரு முக்கிய மனிதரைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது. அந்த மனிதர்தான் டி. எல். மூடி (Dwight L. Moody) இவருடைய சுவிசேஷக்கூட்டப் பணிகள் டிஸ்பென்சேஷனலிசம் அமெரிக்காவில் வளரப் பெருங்காரணமாக இருந்துள்ளன. இந்தக் காலப் பகுதியில் அமெரிக்காவில் மூடி பெரும் பிரசங்கியாகக் கருதப்பட்டார். அவருடைய செய்தி எப்போதும் தேவனுடைய அன்பைக் குறித்ததாக இருந்தது. மூடியினுடைய இறையியல், அடிப்படையில் வேத இறையியலாக இருந்தபோதும், தெளிவற்றதாகவும், உறுதியற்றதாகவும் இருந்தது. மூடி இறையியல் சச்சரவுகளை எப்போதுமே வெறுத்தார். அத்தோடு, மூடி பாரம் பரிய சபைத்தொடர்பற்றவராக, எந்தவித சபைத்தொடர்புமே இல்லாத வராக இருந்தார். அவர் சபையின் அடிப்படையில் சுவிசேஷப்பணி செய்வதைத் தவிர்த்து சபைக்குப் புறத்தில் ஸ்தாபனங்களின் கூட்டுச் சேர்க்கையோடு (Para-church Organizations) தன்னுடைய சுவிசேஷ சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதில் நாட்டம் காட்டினார்.
1873-ல் பிரிட்டனில் (Britain) சுவிசேஷப் பணி செய்யும்படி அவருக்கு அழைப்பு வந்தது. மூடி, ஐரா செங்கியைத் (Ira Senkey) தனக்குத் துணையாகவும், கூட்டங்களில் பாட்டுப்பாடுவதற்காகவும் அழைத்துச் சென்றார். அவர்களுடைய கூட்டங்கள் எவரும் நினைத்தும் பார்க்காதவிதத்தில் வெற்றி பெற்றன. இக்கூட்டங்கள், முக்கியமாக ஸ்கொட்லாந்தில் ஏற்பட்ட “எழுப்புதல்” அவர்களை உலகப்பிரசித்தமடையச் செய்தன. அதற்குப் பிறகு 1874-ல் அவர்கள் இருவரும் மறுபடியும் பிரிட்டிஸ் தீவுகளுக்குப் போய்வந்தபின் அமெரிக்காவில் தேசீயத் தலைவர்கள்போல அவர்கள் வரவேற்கப்பட்டனர். அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நாம் இலகுவாக ஊகித்து விடலாம். அமெரிக்க கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் தங்கள் கூட்டங்களில் வந்து பேசும்படி அழைத்து, அவர்கள் இருவரையும் வைத்துத் கூட்டங்கள் நடத்த அலைமோதினர். மூடி தன்னுடைய முதலாம் சுற்று சுவிசேஷக் கூட்டங்களை நடத்துவதற்கு சிக்காகோ வேதாகமப் பயிற்சிக் கல்லூரி போன்றவற்றின் வசதியுள்ள கட்டிடங்களைப் பயன்படுத் திக் கொண்டார். இந்தக் கல்லூரி நகர்ப்புற சுவிசேஷப்பணிக்காக விசுவாசிகளைத் (Laymen) தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. 1880-ல் இருந்து 1899-ல் தான் இறக்கும்வரை மூடி மசாசுசெட்ஸில் உள்ள நோர்த்பீல்டைத் தன்னுடைய வசிப்பிடமாகத் தெரிந்துகொண்டிருந்தார். அங்கே மூடி நடத்திய வசந்தகாலக் கூட்டங்கள் சகலவிதமான மக்களையும் கவர்வதாக அமைந்திருந்தது. மூடியின் இந்தக் கூட்டங்களின் விளைவாக உருவானதே அமெரிக்காவின் Student Volunteer Movement. இந்த மாணவர் இயக்கம் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ஆயிரக் கணக்கானோரை வெளிநாட்டு மிஷனரி ஊழியத்துக்குப் போகும்படி உற்சாகமூட்டி அமெரிக்காவில் அதுவரை இருந்திராதவகையில் மிஷனரி ஆர்வத்தை ஏற்படுத்தியது.
மூடி டிஸ்பென்சேஷனலிசத்துக்கு அளித்த பங்கை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: (1) தன்னுடைய கூட்டங்களில் டிஸ்பென்சேஷனலிசத் தலைவர்களுக்கு மூடி முக்கிய இடத்தை அளித்தார். (2) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ டிஸ்பென்சேஷனலிசப் போதனைகளை அளிக்கின்ற, பரப்புகின்ற ஸ்தாபனங்களை அவர் நிறுவினார். (3) இங்கிலாந்திலிருந்து கெசிக் பரிசுத்தவாத போதனைகளை (Keswick Holiness Teaching) அமெரிக்கா வில் பரப்புவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்.
(1) மூடியும் டிஸ்பென்சேஷனலிசமும் – மூடி டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாடுகளைத் தன்னுடைய பிரசங்கங்களில் நேரடியாகப் பயன்படுத்தியிரா விட்டாலும், பிரிமில்லேனியலிசப் போதனைகளை அடிக்கடி தந்திருக்கிறார். இது அவர் வாழ்ந்த நோர்த்பீல்டில் இருந்த பிரிமில்லேனியலிசக் கோட்பாடு களைப் பின்பற்றியவர்களுக்கு சுவிசேஷ இயக்கத்தில் தங்களுடைய முத்திரையைப் பதிக்க அருமையானதொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. மூடி டார்பியின் போதனைகளால் நேரடியாக பாதிக்கப்படாமல் இருந் தாலும் டார்பி பிரபல்யமாவதற்குக் காரணகர்த்தாவாக இருந்த சீ. எச். மெக்கின்டொச் (C. H. Mackintoch) என்பவரின் எழுத்துக்களைப் பெரிதும் மதித்தார். தன்னுடைய வேத அறிவுக்கு அவையே மூல காரணம் என்று மூடி கூறியிருக்கிறார். ஆகவே, மூடி டிஸ்பென்சேஷனலிசத்தை நிச்சயம் ஆதரித்திருக்கிறார் என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதனால்தான் பிரிமில்லேனியலிசத்தைப் பின்பற்றியவர்களையும் டிஸ்பென்சேஷனலிசத்தைப் பின்பற்றியவர்களையும் இந்தக் காலத்தில் ஒரே மேடையில் பார்க்க முடிந்திருக்கிறது. அத்தோடு, டீ. எல். மூடிக்குப்பிறகு அவருடைய இடத்தில் வைத்துப் பேசப்படும் ஆர். ஏ. டோரி (R. A. Torrey) டிஸ்பென்சேஷனலிசத்தின் சாம்பியன் என்று அழைக்கப்படுகிறவர். ஆகவே, தெரிந்தோ தெரியாமலோ டிஸ்பென்சேஷனலிசத்தின் வளர்ச்சிக்கு காரண மானவர்களில் முதன்மை பெறுகிறவராக மூடி இருந்திருப்பதை ஒருக்காலும் மறுக்க முடியாது.
(2) மூடியும் வேதாகமப் பயிற்சி நிலையங்களும் – டிஸ்பென்சேஷனலிசத்துக்கு மூடியளித்திருந்த இன்னுமொரு வரப்பிரசாதம் வேதாகமக் கல்லூரிகள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பல சுவிசேஷ இயக்கத் தலைவர்கள் சபை அதிகாரிகளைவிட ஆர்வமுள்ள விசுவாசிகளுக்கு குறைந் தளவான இறையியல் போதனைகளை அளித்து ஊழியத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பயன்படுத்தினால் மிஷனரி ஊழியம் வளரும் என்று நம்பினர். 1866-ல் டபிள்யூ. ஜே. ஏர்ட்மன் (W. J. Erdman), டபிள்யூ. ஜீ. முவர்ஹெட் (W. G. Moorhead) மற்றும் சகோதரி எமா டிரையர் (Miss. Emma Dryer) ஆகியோர் இணைந்து ஒரு வேதபோதனையளிக்கும் நிறுவனத்தை நிறுவினர். இதற்கு மூடி முழு ஆதரவளித்தார். இவர்களில் எமா டிரையர் ஒரு டிஸ்பென்சேஷனலிஸ்ட். 1898 அக்டோபரில் இது ஆர். ஏ. டோரியை சுப்ரின்டென்டன்டாகக் கொண்டு முழுநேர போதனை யளிக்க ஆரம்பித்தது. மூடியின் மறைவுக்குப்பிறகு இந்த நிறுவனம் மூடி வேதாகம நிறுவனம் (Moody Bible Institute) என்ற பெயரைப் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவுப்பகுதியில் ஏ. ஜே, புரொஸ்ட் (A. J. Frost), வில்லியம் பெல் ரைலி (William Bell Riley) ஆகியோர் தலைமையில் நோர்த் வெஸ்டர்ன் வேதாகம பயிற்சிப் பாடசாலை (North Western Bible Training School) ஆரம்ப மானது. அதற்குப் பிறகு வெகுவிரைவிலேயே லொஸ் ஏன்ஜலீஸ் வேதாகம நிறுவனம் (Bible Institute of Los Angeles), டோரான்டோ வேதாகம பயிற்சிப் பாடசாலை (Toronto Bible Training School), பிலடெல்பியா வேதாகம நிறுவனம் (Philadelphia Bible Institute) ஆகியன நிறுவப்பட்டன. ஒரு சிலவற்றைத் தவிர அமெரிக்காவில் அக்காலத்தில் இருந்த வேதாகமக் கல்லூரிகள் அனைத்தும் டிஸ்பென்சேஷனலிசத்தைப் பரப்புவதற்கு அடித்தளமாக அமைந்தன.
(3) மூடியும் கெசிக் போதனைகளும் – மூன்றாவதாக மூடி அனேக டிஸ்பென்சேஷனலிஸ்டுகளுக்கு கெசிக் பரிசுத்தவாதப் போதனைகளை (Keswick Holiness teaching) அறிமுகப்படுத்தி வைத்தார். 1891 அளவில் மூடி பிரெட்ரிக் பீ. மேயரை (F. B. Meyer) நோர்த்பீல்டுக்கு அழைத்துவந்தபோது கடுமையான எதிர்ப்பு தோன்றியது. நோர்த்பீல்ட் மகாநாட்டில் பேச வந்திருந்த அனேக நயாகரா மகாநாட்டுத் தலைவர்கள் அதற்கு முன் சார்ள்ஸ் பினி (Charles Finney), ஆசா மேகன் (Asa Mahan) ஆகியோருடைய ஒபர்லின் பூரணப் பரிசுத்தப் போதனைகளை (Oberlin Perfectionism) கடுமை யாக எதிர்த்திருந்தபடியால் மேயர் அந்தப் போதனைகளில் இருந்து தன்னை விலக்கிக் காட்ட வேண்டியிருந்தது. கெசிக் இயக்கம் 1873-ல் இங்கிலாந்தில் கெசிக் என்ற இடத்தில் எச். டபிள்யூ வெப் பெப்லோ (H. W. Webb Peploe) என்பரின் தலைமையில் கூட ஆரம்பித்தது. இது மெத்தடிஸ்ட் பூரணத்துவத் தில் இருந்து விலகி வந்த இயக்கம். ஜோன் வெஸ்லியின் போதனையான, விசுவாசிகள் இந்த உலகத்தில் தங்களுடைய பாவ சரீரத்தில் பரிசுத்தத்தில் பூரணத்துவத்தை அடைய முடியும் என்ற போதனையை கெசிக் இயக்கம் நிராகரித்தது. இருந்தாலும் விசுவாசிகளின் பாவ சரீரத்தின் வல்லமையைக் கிறிஸ்து தன்னுடைய மரணத்தின் மூலம் பெற்றுத்தந்துள்ள நீதி மட்டுப் படுத்தி விட்டது என்ற போதனையையும் அவர்கள் நிராகரித்தனர். விசுவாசிகளின் வாழ்க்கையில் பாவத்துடனான போராட்டம் நடப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை ஒரு முரண்பாடாக அவர்கள் கருதி அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். விசுவாசி தன்னு டைய வாழ்க்கையில் இரண்டு கட்டங்களைக் கடக்க வேண்டியிருப்பதாக அவர்கள் போதித்தனர். அதாவது, உலகப்பிரமாணமான கிறிஸ்தவன் (carnal Christian), ஆதமீகமயமான கிறிஸ்தவன் (spiritual Christian) என்ற இரண்டு கட்டங்களையும் ஒவ்வொரு விசுவாசியும் தன் வாழ்க்கையில் சந்திக்க நேரும் என்பது கெசிக்கின் போதனை. ஒரு விசுவாசி உலகப்பிரமாணமான வாழ்க்கையில் இருந்து விலகி ஆத்மீகமயத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் அடைய அவனுக்கு “விசுவாசம்” அல்லது பரிசுத்தப்படுத்தல் அவசியம் என்பது இதன் போதனை. இந்தப் பரிசுத்தப்படுத்தலை அவர்கள் முழுமையாக ஒப்புக்கொடுத்தல் (absolute surrender) அல்லது கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தல் (yielding to Christ) என்ற பெயர்களிலும் அழைத்தனர். ஒரு விசுவாசி யினுடைய வாழ்க்கையில் ஏதாவதொரு சமயத்தில் திடீரென நிகழும் இந்த அனுபவத்தால் அவன் வெற்றியுள்ள வாழ்க்கையை (Victorious life) வாழ முடியும் என்று கெசிக் இயக்கம் போதித்தது. இந்த “இரண்டா வது ஆசீர்வாதம்” என்ற அனுபவத்தை மூடி, தன் வாழ்க்கையில் 1871-ல் பெற்றுக்கொண்ட தாகக் கூறி, இந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் (Baptism of the Holy Spirit) பற்றிப் பிரசங்கிக்க வேண்டும் என்று டோரிக்கும் அறிவுரை செய்தார். டோரியும் அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. ஏனைய டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் தொடர்ந்து கெசிக் போதனைகளை ஆதரித்து வந்தனர். 1913-ல் சார்ள்ஸ் டிரம்புல் (Charles Trumbull) அமெரிக்க கெசிக் மகாநாட்டைக் கூட்டினார். இவர், சீ. ஐ. ஸ்கோபீல்ட்டைப்பற்றித் தான் எழுதிய வாழ்க்கை சரிதத்தில் ஸ்கோபீல்டை யும், தன்னையும் பவுலும் தீமோத்தேயுவுமாக வர்ணித்து எழுதியிருந்தார். இது டிஸ்பென்சேஷனலிசத்துக்கும் கெசிக் இயக்கத்துக்கும் இடையில் இருந்த இறுக்கமான உறவைச் சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் கெசிக் போதனைகளை ஸ்கோபீல்ட் தன்னுடைய வேதாகமக் குறிப்புகளில் (Scofield Bible Notes) படிமுறையாக சேர்த்து விளக்கியிருக்கிறார். பரிசுத்த ஆவியின் கிரியைகள் நிகழும் முக்கியமான காலம் சபையின் காலம் என்று கருதும் டிஸ்பென்சேஷனலிஸ்டுகளை கெசிக்கின் இந்தப்போதனைகள் அதிகமாகக் கவர்ந்தன. பரிசுத்த ஆவி சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் இறுதிக்காலம் வருவதற்குமுன் உலகம் முன்னேறும் என்ற எண்ணத்தைப் பிரிமில்லேனியலிஸ்டுகள் கைகழுவிவிட, கெசிக் இயக்கமோ ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியின் மூலமாக முழுமையான ஆத்மீக வெற்றியைத் தன் வாழ்க்கையில் அடையமுடியும் என்று போதித்தது.
இதுவரை நாம் அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிசம் பரவ ஜோன் நெல்சன் டார்பியும், மூடியும் அளித்த பங்கைப்பற்றி அறிந்து கொண்டோம். ஆயிரம் வருட ஆரசாட்சிக்கு முன்னதாக கிறிஸ்துவின் வருகை, டிஸ்பென் சேஷனலிசம், கிறிஸ்துவின் பெயரில் விசுவாசிகள் திருச்சபை அமைப்பை நிராகரித்து தங்களுடைய சுயவிருப்பத்தின்படி எங்கும் கூடுதல், கெசிக் பரிசுத்தவாத போதனை, விசுவாசிகள் சபைக்கட்டுப்பாடின்றி மிஷனரி ஊழியத்தில் ஈடுபடலாம் என்ற போக்கு, அழைப்பே பெற்றிராத விசுவாசி களுக்கெல்லாம் குறைந்தளவு இறையியல் போதனைகளை அளித்து சுவிஷேச ஊழியத்திற்கு அனுப்பும் வேதாகமப் பயிற்சி நிலையங்கள் ஆகிய அனைத் தும் ஜோன் நெல்சன், டார்பி, மூடி, டோரி ஆகியோரின் கைங்கரியத்தினால் வளர்ந்து அமெரிக்க கிறிஸ்தவத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தின. இனி டிஸ்பென்சேஷனலிசம் எவ்வாறு மேலும் தீவிரமடைந்தது, எங்கும் பரவ ஆரம்பித்தது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.