டிஸ்பென்சேஷனலிசம்

தோற்றமும், வளர்ச்சியும் (3)

அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிசத்தின் வளர்ச்சி பற்றி கடந்த இதழில் பார்த்தோம். டிஸ்பென்சேஷனலிசத்தைப் பற்றி முழுமை யாக விளங்கிக் கொள்வதற்கு இதுவரை வந்துள்ள ஆக்கங்களை வாசித்தபின் இந்த இதழில் வருவதையும் வாசிப்பது அவசியம். டீ. எல். மூடி (Dallas Theological Seminary), ஆர். ஏ. டோரி போன்றவர்களால் அமெரிக்காவில் காலூன்றி வளர்ந்த டிஸ்பென்சேஷனலிசம் மேலும் தீவிர மாக எப்படி வளர்ந்தது என்பதை இனிப்பார்ப்போம்.

ஸ்கோபீல்டின் வேதாகமக் குறிப்புகள்:

இப்படியாக வளர்ந்த டிஸ்பென்சேஷனலிசம் 20ம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் அதிதீவிரமாக தன்னுடைய கோட்பாடுகளை பரப்பியது. டிஸ்பென்சேஷனலிசத்தின் சில பத்திரிகைகளும், நூல்களும் இக்காலத்தில் சுவிசேஷ இயக்கத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. இவற்றில் ஸ்கோபீல்டின் வேதாகமக் குறிப்புகள் (Scofield Bible Notes) முதலிடத்தைப் பெற்றிருந்தது. சுவிசேஷ இயக்கத்தில் இது ஏற்படுத்திய தாக்கத்தை எழுத்தில் விபரிப்பது கஷ்டமானது. அந்தளவுக்கு ஸ்கோபீல்டின் வேதாகமக் குறிப்புகள் பிரபல்யம் பெற்றன. இப்படியான குறிப்புகளை வேதாகமத்துக்கு எழுதி அதற்குள் நுழைத்து வெளியிடும் நோக்கத்தை ஸ்கோபீல்ட் முதன் முதலாக 1901ல் சீ கிளிப் மாகாநாட்டில் (Sea Cliff Conference) கெபேலின் (Gaebelein) என்பவருடன் விவாதித்தார். 1909ல் அதன் முதல் பதிப்பு வெளிவந்தது. வேதாகமத்தில் திணிக்காமல் இந்தக் குறிப்புகளை ஸ்கோபீல்ட் (Scofield) தனியாக ஒரு நூலாக வெளியிட்டிருப் பாரானால் அவற்றை வெகு சீக்கிரத்தில் மக்கள் மறந்திருப்பார்கள். ஆனால், வேதத்தையும், ஸ்கோபீல்டின் குறிப்புகளையும் ஒப்பிட்டு ஆராயத்தெரியாத ஆயிரக்கணக்கானோர் இதனை வாங்கிப் படித்து இதன் இரசிகர்களானார் கள். இந்தக் குறிப்புகள் லிபரலிசத்துக்கு எதிராக வேதத்தின் பிரதானமான கோட்பாடுகளை வலியுறுத்துகிற நல்ல காரியத்தை செய்திருந்தாலும், வேத அறிவில்லாதவர்களை பாதிக்கக்கூடிய ஆபத்துக்களையும் உள்ளடக்கியிருந் தது. வேத அறிவில்லாதவர்களும், புதிய விசுவாசிகளும் ஸ்கோபீல்டின் வேதாகமக்குறிப்புகளை மட்டும் வாசித்துவிட்டு தங்களை இறையியல் வல்லு னர்களாக கருதுகின்ற நிலையும் உருவாகியது. 1917லும் பின்பு 1967லும் ஸ்கோ பீல்டின் குறிப்புகள் திருத்தி வெளியிடப்பட்டன. 1967ம் ஆண்டு திருத்தத் தின் ஆசிரியர் குழுவில் பிரேங் ஈ. கெபேலின் (Frank E. Gaebelein), வில்லி யம் கல்பர்ட்சன் (William Culbertson), சார்ள்ஸ் பெயின்பர்க் (Charles Fainberg), அலன் மெக் ரே (Allan Mac Rae), கிளேரன்ஸ் மேசன் ஜூனியர் (Clarence Mason Jr.,), அல்வா ஜே. மெக்ளேயின் (Alva J. McClain), வில்பர் ஸ்மித் (Wilbur Smith), ஜோன் வெல்வூர்ட் (John Walvoord) ஆகிய எட்டு பேரும் இருந்தனர். இந்தக்குழுவின் தலைவராக ஈ. சூலர் இங்கிலிஸ் (E. Schuyler English) தலைவராக இருந்தார்.

டிஸ்பென்சேஷனலிச இலக்கிய வெளியீடுகளும், மகாநாடுகளும்

இதே காலப்பகுதியில் மேலும் இரு டிஸ்பென்சேஷனலிச வெளியீடுகள் பிரபல்யமாகின. டபிள்யூ. ஈ. பிளெக்ஸ்டோனின் (W. E. Blackstone) “இயேசு வருகிறார்” முதலில் 1878ல் வெளியிடப்பட்டது. ஆனால், 1908லேயே பின்குறிப் பொன்றோடு சில ஆயிரம் பிரதிகள் வெளியிடப்பட்டு உலகெங்கிலுமிருந்த கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டது. 1918ல் கிலேரன்ஸ் லார்கின் (Clarence Larkin) “டிஸ்பென்சேஷனல் சத்தியம்” என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டார். இது அனேக வரைபடங்களுடன் வெளிவந்தது. இந்த வரைபடங்கள் டிஸ்பென்சேஷனலிசப் போதனையின் கர்த்தரின் திட்டங்கள், நீயாயத்தீர்ப்புகள், இறுதிக்கால சம்பவங்கள், தானியேல், வெளிப்படுத்தல் ஆகியவற்றை விளக்குவதாக இருந்தன. இந்த நூல் 40 தடவைகளாவது மறுபதிப்பு செய்யப்பட்டு வெளிவந்தது.

இதே காலப்பகுதிகளில் டிஸ்பென்சேஷனலிசத்தை வளர்¢ப்பதற்காக தீர்க்கதரிசன மாகாநாடுகள் நடத்தப்பட்டன. 1914ல் முதலாம் உலகப்போர் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பாக பெப்ரவரி மாதத்தில் மூடி வேதாகமக் கல்லூரியில் ஓர் தீர்க்கதரிசன மகாநாடு நடந்தது. இதன் தலைவர்களாக ஜேம்ஸ் கிரே (James Gray), டபிள்யூ. பீ. ரைலி (W. B. Riley), ஸ்கோபீல்ட் (Scofield), கெபேலின் (Gaebelein) ஆகியோர் இருந்தனர். இந்த மகாநாட்டில் விளக்கப்பட்டதுபோல் அதுவரை வேறு எந்த மகாநாடுகளிலும் டிஸ்பென்சேஷனலிசம் வெளிப்படையாகவும் ஆணித்தரமாகவும், துல்லியமாகவும் விளக்கப்படவில்லை.

முதலாம் உலகப்போர், தீர்க்கதரிசனத்தில் மக்கள் அதிக ஆர்வம் கொள்ள வைத்தது. உலகப் போர் முடிவு பெறும் தருவாயில் தீர்க்கதரிசன மகாநாடு களில் சொல்ல முடியாத அளவுக்கு மக்கள் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். 1918ல் பிலடெல்பியாவில் அத்தகைய மாகாநாடொன்று நடந்தது. இது பிரிட்டன் எருசலேமைக் கைப்பற்றியபோது நடந்ததால் அந்த நிகழ்ச்சி தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றுதலுக்கு ஓர் அடையாளமாகக் கருதப்பட்டு மகாநாடு அந்த வெற்றியைக் கொண்டாடியது.

டல்லாஸ் இறையியல் செமினரி

1929 களிலும் 1930 களிலும் லிபரலிசத்துக்கெதிரான போராட்டத்தை நடத்திய அடிப்படைக்கோட்பாட்டளார்களின் அணியில் டிஸ்பென்சேஷன லிசக்கோட்பாட்டாளர் இணைந்திருந்தபோதும் அவர்கள் ஒரு தனித்துவ முள்ள அணியாக வளர்ந்து வந்ததையும் காண முடிகின்றது. அவர்கள் தங்க ளுடைய போதனைகளை அளிக்கும் வேதாகமக் கல்லூரிகளை நடத்தியது மட்டுமல்லாமல், போதக ஊழியத்துக்கு ஊழியக்காரரைத் தயார் செய்யும் செமினரிகளையும் நடத்திவந்தது. அவற்றில் பெயர் பெற்றது டல்லாஸ் இறையியல் செமினரி (Dallas Theological Seminary). இது 1924ல் லூயிஸ் ஸ்பெரி ஷேபரால் (Lewis Sperry Chafer) தொடங்கப்பட்டது. அவரே இதன் முதல் பிரசிடன்டாகவும் இருந்தார். 1947ல் லூயிஸ் ஸ்பெரி ஷேபரின் முறைப்படுத்தப் பட்ட இறையியல் நூல் (Systematic Theology) பல தொகுதிகளாக வெளி வந்தது. அதேநேரம் இந்த செமினரியோடு தொடர்புடையதாக Bibliotheca Sacra என்ற பத்திரிகையும் வெளியிடப்பட்டது. இதில் பிரபலமான டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டு இறையியலறிஞர்கள் பலரும் எழுதினர். இன்றும் இது தொடர்ந்து வெளிவருகிறது.

டிஸ்பென்சேஷனலிச வேதவிளக்க முறை

அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிசத்தின் வளர்ச்சி பற்றிய ஆய்வை நாம் முடிக்குமுன்பாக டிஸ்பென்சேஷனலிசத்தின் வேதவிளக்கவிதி பற்றிய ஒரு முக்கிய அம்சத்தைக் கவனிப்பது அவசியம். அதனுடைய இரண்டு மிக முக்கிய இலக்கிய வெளியீடுகளான Scofield Reference Bible-லும் Dispensational Truth-லும் அவ்வேதவிளக்க விதி விளக்கப்பட்டிருக்கிறது. இந்த வேதவிளக்க முறையே டிஸ்பென்சேஷனலிசத்திற்கு அடித்தளமாக இருக் கிறது. இது விழுந்துவிட்டால் டிஸ்பென்சேஷனலிசம் உயிர் வாழ முடியாது. அந்த வேதவிளக்கமுறைதான் என்ன? அதாவது, டிஸ்பென்சேஷனலிசம் வேதத்தில் தரப்பட்டுள்ள விளக்கங்களை தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விளக்கங்களைத் தருகிறது. டிஸ்பென்சேஷனலிசத்தின் விளக்கத்தில் இந்த ஒவ்வொன்றிற்கும் இடையில் இருக்கும் பிரிவினையில் காணப்படும் ஒற்றுமையே அதிகம். அதாவது வேதவரலாற்றையும், தீர்க்கதரிசனங்களையும் போதனைகளையும் பிரித்துத் தனித்தனியாகக்காட்டி விளக்குவதிலேயே அது முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. இதன் மூலம் வேத ஒற்றுமையை முற்றாகக் குழைத்துவிடுகிறது டிஸ்பென்சேஷனலிசம்.

இவ்வாறாக, டிஸ்பென்சேஷனலிசம் வேதத்தில் பிரித்துக் காட்டுகின்ற பிரிவுகளுக்கு எல்லையே இல்லை. உதாரணமாக, யூதர்களும், புறஜாதியாரும், சபையும்; யெகோவாவின் துணைவியும், ஆட்டுக்குட்டியின் மணவாட்டியும் (இந்த உலகத்து மணவாட்டியும், பரலோகத்து மணவாட்டியும்); ஏழுவிதமான நியாயத்தீர்ப்புகள் (வெளிப்படுத்தல் 20:12ல் ஸ்கோபீல்டின் குறிப்பைப் பார்க்க வும்); எட்டு உடன்படிக்கைகள்; கிறிஸ்துவின் நாளும், ஆண்டவரின் நாளும், நியாயத்தீர்ப்பின் நாளும்; தேவனுடைய இராஜ்யமும், பரலோக இராஜ்யமும் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்தப்பிரிவுகளைவிட பரிசுத்த ஆவியினுடைய கிரியைகளையும் பல பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறது. அதாவது, “in”, “with”, “upon” என்ற வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் இலக்கணத்தை மீறிய அர்த்தங்களை கொடுத்து பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் பற்றிய இறையியல் விளக்கங்களைக் கொடுக்கிறது டிஸ்பென்சேஷனலிசம்.

டிஸ்பென்சேஷனலிசம், வேதாகமத்தை ஒரு என்சைக்கிளோபீடியாவைப் போலக் (Encyclopedia) கருதி அதன் வரலாற்றையும், தீர்க்கதரிசனங்களையும் பகுதி பகுதியாகப் பிரித்து வரைபடங்களைத் தீட்டியிருக்கிறது. ஆர். ஏ. டோரியின் What the Bible Teaches என்ற நூலும் இதேவிதமாகத் தான் அமைந்திருக்கிறது. 500 பக்கங்களுக்கு மேல் இந்தவகையிலான பிரிவுகளுக்கு பொறுக்கியெடுக்கப்பட்ட வேத வசனங்கள் ஆதாரமாகக்காட்டப்பட்டு டோரியின் நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன. டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் வேத விளக்கமளிக்கிறவர்களை விஞ்ஞானிகளைப்போலக் கருதுகிறார்கள். விஞ்ஞானியினுடைய பணி சேகரிக்க முடிந்த எல்லா செய்திகளையும் சேகரித்து அவற்றைத் தனித்தனியாகப் பட்டியலிட்டு பின்பு அவற்றின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருவதுதான். இதேவிதமாகத்தான் வேதத்தை விளக்குகிறவர்களும் எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டுமென்கிறது டிஸ்பென்சேஷனலிசம். ஆனால், இங்கேயே இவர்கள் பெருந்தவறிழைக்கிறார்கள். ஒவ்வொரு வேதவசனமும், வேதப்பகுதியும் ஓர் வரலாற்று சந்தர்ப்பத்தையும், ஏதாவதொரு இலக்கிய அமைப்பையும் கொண்டு வேதத்தில் அமைந்திருப்பதை இவர்கள் முற்றாகக் கவனிக்க மறுத்துவிடுகிறார்கள். வரலாற்று அமைப்பையும், வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பலவகை மொழி இலக்கியங்களையும் தள்ளிவைத்துவிட்டு வசனங்களை விளங்கிக்கொள்ளப் பார்ப்பது பெரும் ஆபத்தில்தான் கொண்டுபோய்விடும். அந்த ஆபத்தைத்தான் டிஸ்பென்சேஷனலிசத்தில் பார்க்கிறோம்.

அத்தோடு, கர்த்தரின் சித்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ள முறையையும் டிஸ்பென்சேஷனலிசம் கவனிக்கத் தவறிவிட்டது. கர்த்தரின் சித்தம் பங்கு பங்காகவும், வகை வகையாகவும் வரலாற்றில வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, கர்த்தரின் சித்தம் ஒரேயடியாக ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் வேதத்தில் விளக்கப்படாமல் வரலாற்றில் வளர்ந்து வருவதாக வெளிப்படுத் தப்பட்டிருக்கிறது (Progressive revelation). கர்த்தரின் பூரணமான சித்தத்தை, அது வரலாற்றில் வளர்ந்து வரும் விதத்தை ஆராய்ந்து விளங்கிக் கொள்ள இந்தக் கோட்பாடு தவறிவிட்டது. மேலும், வேதத்தின் எல்லாப் பகுதிகளும் சமமான தெளிவைக் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்து தெளிவற்றதாகத் தென்படும் பகுதிகளைத் தெளிவான பகுதிகளைக் கொண்டு விளக்க வேண்டும் என்ற உண்மையையும் இக்கோட்பாடு அலட்சியப்படுத்துகிறது. இக்கோட்பாடு வேதத்தின் எல்லாப் பகுதிகளும் சமமான தெளிவோடி ருப்பதாகக் கருதுவதோடு எல்லாப்பகுதிகளையும் எழுத்துபூர்வமாக மட்டுமே விளக்க வேண்டுமென்று (Strict literal interpretation) முரட்டுத்தனமாக வலியுறுத்துகிறது. டிஸ்பென்சேஷனலிசம் செயற்கை முறையில்  உருவாக்கியுள்ள இந்த வேதவிளக்கமுறை (Artificial interpritive principle) கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கும் முறைக்கு உட்பட்டு வேதத்தை விளக்கத் தவறுகிறது.

இதுவரை டிஸ்பென்சேஷனலிசம் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு காலுன்றி தளைத்து வளர்ந்தது என்பதையும், அதன் ஏஜன்டுகளான இலக்கிய வெளியீடுகளும், இறையியல் கல்லூரிகளும் எப்படி உருவாகின என்றும் பார்த்தோம். டிஸ்பென்சேஷனலிசத்திற்கு அடிப்படையாக உள்ள அதன் வேதவிளக்க முறையின் குறை பாட்டையும் விளக்கியுள்ளோம். இனி டிஸ்பென்சேஷனலிசத்தில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை அடுத்த இதழில் பார்க்கலாம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s