தோற்றமும், வளர்ச்சியும் (4)
டிஸ்பென்சேஷனலிசம் தோன்றி வளர்ந்த வரலாற்றை விபரமாக இதுவரை கடந்த இதழ்களில் பார்த்து வந்திருக்கிறோம். டிஸ்பென்சேஷனலிசத்தின் போதனைகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் இன்று ஒரு பிரிவு அதற்குள்ளேயே உருவாயிருக்கிறது. இவர்கள் நியோ-டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இதுவரை பொதுவாக இருந்த (Classical) டிஸ்பென்சேஷனலிசப் போதனைகளில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இவர்கள் சார்ள்ஸ் ரைரி (Charles Ryrie, ஜே. வைட் பென்டிகொஸ்ட் (J. Dwight Pentecost), ஜோன் எவ். வெல்வூட் (John F. Walwoord) ஆகியோரே. டிஸ்பென்சேஷனலிசத்தின் மோசமான பிரிவினராகக் கருதப்படுகிறவர்கள் அல்ட்ராடிஸ்பென் சேஷனலிஸ்டுகள் (Ultradispensationalism). இதனை புலிங்கரிசம் (Bullingerism) என்றும் அழைப்பார்கள். புலிங்கர், இஸ்ரவேலையும் சபையையும் ஜே. என். டார்பியைவிட அதிகமாக வேறுபடுத்திப் பார்த்தார். புலிங்கருடைய எழுத்துக்களே அல்ட்ராடிஸ்பென்சேஷனலிசத்திற்கு வழிவகுத்தன. இது டிஸ்பென்சேஷனலிசப் பிரிவுகளிலேயே ஆபத்தானது.
இது தவிர கடுமைப் போக்கு டிஸ்பென்சேஷனலிசம் (‘Hardline’ dispensationalism) என்ற ஒரு பிரிவும் இருக்கிறது. ஜோன் மெக்காத்தர் (John McArthur Jr.) நியோ-டிஸ்பென்சேஷனலிசப் பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடுமைப் போக்கு டின்பென்சேஷனலிஸ்டுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி, தங்களுடைய சிலுவையை சுமந்து கிறிஸ்துவுக்குப் பின்னால் போகாதவர்கள் இரட்சிப்பை அடையாதவர்கள் என்று ஆணித்தரமாக தன்னுடைய Gospel According to Jesus என்ற நூலில் எழுதி டிஸ்பென் சேஷனலிஸ்டுகள் மத்தியில் ஒரு பெருங்குண்டைத் தூக்கிப் போட்டார். இதனால் இவருக்கு அமெரிக்காவில் டிஸ்பென்சேஷனலிஸ்டுகளிடம் இருந்து பெரும் எதிர்ப்பு உருவானது. ஜோன் மெக்காத்தர் இதற்காக டிஸ்பென்சேஷனல் கோட்பாடுகளை முழுவதுமாகக் கைவிட்டு விடவில்லை. அவர் சீர்திருத்தப் போதனையான ‘கர்த்தரின் உடன்படிக் கையை’ (God’s Covenant) இன்னும் கசப்புடனேயே பார்க்கிறார். இரட்சி ப்பைக் குறித்த சத்தியங்களில் அவர் இப்போது வேதபூர்வமான நம்பிக் கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இரட்சிப்பைப் பற்றிய போதனை ஒன்றே என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சபைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மெக்காத்தர் இறுதிக்கால சம்பவங்களில் தொடர்ந்தும் டிஸ்பென்சேஷன லிசப் போதனைகளையே விசுவாசிக்கிறார். மெக்காத்தர் தொடர்ந்தும் வேதம் காட்டுகிற வழியிலேயே போவாரானால் அவருடைய ஏனைய இறையியல் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்பட வழியுண்டு.
டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் மத்தியில் பல வேறுபாடுகள் இருப்பதால் எல்லோரையும் ஒரே பிரிவுக்குள் போட்டுவிட முடியாது. அத்தோடு ஒருவர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டு பிடிப் பதும் எளிதல்ல. இருந்தாலும் நாம் இதுவரை பார்த்து வந்த வரலாற்று உண்மைகள் டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் யார்? அவர்களுடைய போத னைகள் யாவை? என்பதை நமக்கு ஓரளவுக்கு புரிய வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இனி இதற்கும் வேதபூர்வமான சீர்திருத்தப் போதனைகளுக்கும் (Biblical Reformed teaching) இடையில் உள்ள வேறுபாட்டைப் பார்த்துவிட்டு இந்த ஆக்கத்தை முடிப்பது அவசியமாகிறது. டிஸ்பென்சேஷனலிசமும், சீர்திருத்தப் போதனைகளும் சேர்ந்து வாழ்வது என்பது முடியாத காரியம். டிஸ்பென்சேஷனலிசம் இரட்சிப்பில் ஆரம்பித்து, ஆத்துமா பரிசுத்த வாழ்க்கையை வாழும் விதம், திருச்சபையின் பங்கு, கர்த்தரின் இரண் டாம் வருகை, இந்த உலகில் தேவ இராஜ்யம் என்று எல்லாக் கோட்பாடு களிலும் சீர்திருத்தக் கோட்பாடுகளோடு முரண்படுகின்றது. ஒரு விஷயத்தில் மட்டும் இரண்டும் ஒத்துப்போகின்றன. அதாவது, வேதம் மனித சிந்தனையில் தோன்றியதல்ல என்றும், அதற்கு மனித சிந்தனையின் அடிப்படையில் விளக்கம் தர முடியாது என்பதிலும் லிபரலிசத்திற்கு எதிராக டிஸ்பென்சேஷனலிசமும், சீர்திருத்த கிறிஸ்தவமும் இணைந்து நிற்கின்றன. இதனால் இரு பிரிவுகளும் வேதத்திற்கு மதிப்புத்தர மறுக்கும் பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் இயக்கத்துக்கு எதிரிடையாகவும் இருக்கின்றன. இந்த ஒற்றுமை இத்தோடு மட்டும் நின்றுவிடுகின்றது.
தமிழர் வாழும் நாடுகளில் சகோதரத்துவ சபைகள் பெரும்பாலும் டிஸ்பென்சேஷனலிசக் கொள்கைப் பிடிப்புள்ளவனவாக இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் டிஸ்பென்சேஷனலிசப் போதனைகளை முழுமையாக அறிந்திராதவர்கள். யாரோ அறிமுகப்படுத்தியதை தொடர் ந்து பின்பற்றி வருகிறார்களே தவிர தாம் விசுவாசிப்பதை ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அனேகருக்கு இல்லை. இவர்கள் ஸ்கோபீல்டு வேதக் குறிப்புகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சுவிசேஷம் சொல்லுவதில் அதிக ஆர்வம் காட்டி திருச்சபை அமைப்பில் எந்தக் கவனமும் செலுத்தாமல் இருந்துவருவதற்கு டிஸ்பென்சேஷனலிசமே பெருங்காரணமாக இருக்கின்றது.
இவர்களைத் தவிர தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பெரும்பாலான கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாட்டைப் பின்பற்றுவனவாக இருக்கின்றன. இவர்களும் திருச்சபையைக் காலில் போட்டு மிதித்து வருகிறார்கள். அதற்குக் காரணம் டிஸ்பென்சேஷன லிசமே. சபைக்கு இன்று வேலையில்லை என்கிறது டிஸ்பென்சேஷன லிசம். அந்தப் பொய்யை வேதவாக்காக எண்ணிவருகிறார்கள் கிறிஸ்தவ ஸ்தாபனத்தார்.
டிஸ்பென்சேஷனலிசத்திற்கும் சீர்திருத்தப் போதனைகளுக்கும் இடை யில் இருக்கும் வேறுபாட்டை அடுத்த பக்கத்தில் வாசிக்கலாம்.
டிஸ்பென்சேஷனலிசம்
1. வேதம் முழுவதும் எழுத்துபூர்வ மாக மட்டுமே விளக்கப்பட வேண்டும்.
2. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற் பாட்டிலும் இருவகையிலான இரட்சிப் புக்கான வழிகள்.
3. பழைய ஏற்பாட்டில் திருச்சபை இல்லை.
4. பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் திருச்சபையில் அங்கத்தவர்களாக இல்லை. பரலோகத்திலும் இல்லை.
5. இஸ்ரவேலும், திருச்சபையும் ஒன்றோடொன்று தொடர்பில்லாதவை.
6. புதிய ஏற்பாடு சபைக் காலமல்ல. அது கிருபையின் காலம், புறஜாதி யினர் மத்தியில் சுவிசேஷ அறிவிப் புக்கான காலம் மட்டுமே. இது தேவ இராஜ்யத்தின் காலமல்ல.
7. இறுதிக் காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிறிஸ்துவின் வருகை.
8. இறுதிக் காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நியாயத்தீர்ப்புகள்.
9. இறுதிக் காலத்தில் கிறிஸ்து யூதர்களைக் கொண்டு சபையையும் தன் இராஜ்யத்தையும் நிறுவ வருவார்.
சீர்திருத்தப் போதனை
1. வேதம் முழுவதும் அதன் இலக் கண, இலக்கிய, வரலாற்று அடிப் படையில் விளக்கப்பட வேண்டும்.
2. பழைய, புதிய ஏற்பாடுகளில் இரட்சிப்புக்கான வழி ஒரேவிதத்தில் மட்டுமே காணப்படுகின்றது.
3. பழைய ஏற்பாட்டில் திருச்சபை யைக் காணலாம்.
4. பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் பரலோகத்தில் உள்ளனர். திருச்சபை அங்கத்தவர்களாகவும் இருக்கின்ற னர்.
5. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலுக்கு மத்தியில் நாம் திருச்சபையைப் பார்க்கிறோம்.
6. புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து அப் போஸ்தலரை அடித்தளமாகக் கொண்டு சபையை நிறுவி வளர்க் கிறார். அனைவர் மத்தியிலும் சுவி சேஷம் அறிவிக்கப்பட்டு சபைகள் அமைக்கப்பட வேண்டும். இது தேவ இராஜ்ஜியம் நிகழும் காலம்.
7. இறுதிக் காலத்தில் கிறிஸ்து ஒரு முறை மட்டுமே வருவார்.
8. இறுதிக் காலத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே நியாயத்தீர்ப்பு.
9. இறுதிக் காலத்தில் கிறிஸ்து சபையைத் தன்னோடு எடுத்துக் கொண்டு போக வருவார்.
மேலே நாம் தந்துள்ள அட்டவனை டிஸ்பென்சேஷனலிசத்தின் பொதுவான போதனை களை சீர்திருத்தவாத போதனைகளோடு ஒப்பிடுகின்றது. டிஸ்பென்சேஷனலிஸ்டுகளில் ஒரு பகுதியினர் (நியோ-டிஸ்பென்சேஷனலிசம்) இன்று இவற்றில் 2, 3, 4, 5, 6 ஆகியவற் றில் ஒருவிதத்தில் சீர்திருத்தப் போதனைகளோடு ஒத்துப் போகின்றனர். டார்பி, ஸ்கோபீல் டினுடைய போதனைகளின்படி நியாயப் பிரமாணத்திற்கும் (Law of God) விசுவாசிக்கும் எந்தவிதத்தொடர்பும் இல்லை. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனமும் இஸ்ரவேலுக்கு மட்டுமே தொடர்புடையதாக அவர்கள் விளக்கினார்கள். டிஸ்பென்சேஷனலிஸ்டுகளில் ஒரு பகுதியினர் இன்று இப்போதனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு தீர்க்கதரிசனங்களில் சபைக்குத் தொடர்புள்ள போதனைகளும் இருப்பதாகக் கருதுகின்றனர். இது வரவேற்புக்குரிய நல்ல மாற்றம். இது தொடர்ந்தால் நல்லதே.