டிஸ்பென்சேஷனலிசம்

தோற்றமும், வளர்ச்சியும்

டிஸ்பென்சேஷனலிசம் (Dispensationalism) என்ற வார்த்தையை உங்களில் பலர் இதுவரை கேட்டிராமல் இருக்கலாம். இந்தப் பத்திரிகையில் அந்த வார்த்தையை நாம் பல தடவைகள் பயன்படுத்தியிருக்கிறோம். இந்தப்பதம் எதைக்குறிக்கிறது என்பதை வாசகர்களுக்கு முதலில் விளக்க வேண்டியது அவசியமாகிறது. இது வரலாற்றில் கர்த்தருடைய திட்டத்தை (The plan of God) விளக்கும் ஒரு கோட்பாட்டின் பெயர். ‘டிஸ்பென்சேஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘திட்டம்’ என்று பொருள். சுருககமாகக் கூறப்போனால், கர்த்தருடைய மீட்பின் நிறைவேறுதல் வரலாற்றில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் ஒவ்வொருவிதமான திட்டத்தைக் கொண்டு அமைந்தது என்பது இந்தக் கோட்பாட்டு தரும் விளக்கம்.

டிஸ்பென்சேஷனலிசத்தை உலகம் முழுவதும் பரப்பியதில் பெரும் பங்கு வகிக்கும் ஸ்கோபீல்ட், “கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய குறிப்பிட்ட சித்தத்திற்கு மனிதன் எந்தவிதத்தில் கீழ்ப்படிந்தான் என்பதை சோதிக்கும் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியே டிஸ்பென்சேஷன் (திட்டம்)” என்று விளக்கி னார். இப்படியாக வரலாற்றின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும், குறிப்பிட்ட தேவசித்தம் வெளிப்படுததப்பட்டு, அதன் மூலம் மனிதன் சோதிக் கப்பட்டான். அந்தச் சோதனையில் மனிதன் தவறுகிறபோது கர்த்தர் அந்தக் காலப்பகுதியில் அவனைத் தண்டித்தார். இதுவே டிஸ்பென்சேஷனலிசத்தின் போதனை. பொதுவாக டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் வரலாற்றை ஏழு பகுதி களாக பின்வருமாறு பிரிப்பார்கள்:

இவ்விதமாக வரலாற்றைக் கூறுபோடுவது கர்த்தர் தன்னுடைய மக்களை இரட்சிக்கும் நோக்கத்தின் ஒற்றுமையை சிதறடிக்கிறது. டிஸ்பென்சேஷனலிசம் சீர்திருத்தவாதக் கோட்பாடான, கர்த்தர் இரட்சிப்பைக் குறித்து ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே கொண்டுள்ளார் என்ற போதனையையும், அவருடைய மக்கள் ஒரு இனம் மட்டுமே என்ற போதனையையும் மறுதளித்து கர்த்தர் இரட்சிப்பைக்குறித்து இருவிதமான திட்டங்களைக் கொண்டுள்ளார் என்றும், (அதாவது, கர்த்தரின் ஆளுகையின் கீழ் இவ்வுலகில் இஸ்ரவேல் ஒரு நாடாகவும்,  மீட்படைந்து பரலோகத்தை நோக்கி ஆத்மீகப் பிரயாணத்தைப் நடத்திக் கொண்டிருக்கிற மக்களும்), அவருக்கு இருவிதமான மக்கள் கூட்டம் உண்டு என்றும் (இஸ்ரவேலும், சபையும்)  போதிக்கின்றது. கர்த்தர் இஸ்ரவேல் நாட்டைக் குறித்துக் கொண்டிருந்த திட்டத்தின் ஒரு இடையூராகவே திருச்சபையை டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் கணிக்கிறார்கள். அத்தோடு கர்த்தருடைய திட்டங்கள் அனைத்தும் இவ்வுலகில் இஸ்ரவேலை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதால், அவருடைய வாக்குத் தத்தங்கள் அனைத்தும் இஸ்ரவேலுக்கு மட்டுமே சொந்தமானதாகவும், இந்த உலகில் அவை நடைமுறையில் எழுத்துபூர்வமாக நிச்சயம் நிறைவேறும் என்றும் இக்கோட்பாடு போதிக்கின்றது.

இந்த உலகில் கர்த்தரின் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன்பாகவும், யூத தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்கு முன்பாகவும், திருச்சபை ஒரு இடையூராக அமைந்துவிட்டதால் சபை இந்த உலகில் இருந்து சடுதியாக, இரகசியமாக அகற்றப்பட்டு விடும் (Rapture) என்றும், இது எந்த நிமிடத்திலும் இந்த உலகில் நடக்கலாம் என்றும் டிஸ்பென்சேஷனலிசம் விளக்குகிறது. இவ்விதமாக சபை இந்த உலகில் இருந்து அகற்றப்படும் நேரத்திலேயே கர்த்தர் மறுபடியும் தன்னுடைய தீர்க்கதரிசனங்களின்படி இஸ்ரவேலுக்கான தனது திட்டங்களை நிறைவேற்ற ஆரம்பிப்பார் என்கிறது இக்கோட்பாடு. இதை முதலில் ஒரு மாபெரும் சோதனைக் காலத்தைக் கொண்டுவருவதன் மூலமும், அதன்பின் ஆயிரம் வருட அரசாட்சியை ஏற்படுத்துவதன் மூலமும் கர்த்தர் நிறைவேற்று வார் என்கிறது இந்தப் போதனை. இந்தக் கோட்பாடே இன்று பலர் மத்தியிலும் பிரபல்யமடைந்திருக்கிறது. டிஸ்பென்சேஷனலிசத்தைப் பின்பற்று கிறவர்கள் மத்தியிலும் பல கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருந்தாலும், நாம் இதுவரை பார்த்ததே அவர்களுடைய பொதுவான கோட்பாடாக இருக்கின்றது. டிஸ்பென்சேஷனலிசம் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்ப் பதத்தைத் தேடாமல் வசதிக்காக அதே பெயரில் இந்த ஆக்கம் முழுவதும் பயன்படுத்தப் போகிறேன்.

இது கிறிஸ்தவம் போதிக்கும் ஒரு கோட்பாடா? இது எவ்வாறு, எங்கிருந்து, யாரால் உருப்பெற்றது? என்பதையும், இது எப்படி வளர்ந்து கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபல்யமானது என்பதையும் நாம் ஆராய்வது அவசியம்.  இன்று தமிழர்கள் மத்தியில் காணப்படு¢ம் 99% மான இறையியல் கல்லூரிகளையும், பாப்திஸ்துகளில் இருந்து பல்வேறு சபைப்பிரிவுகளையும் இந்தக் கோட்பாடு பாதித்து ஆண்டு வருவதால் இதைக்குறித்து கிறிஸ்தவர்களாகிய நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது.

டிஸ்பென்சேஷனலிசம் தோன்றுமுன் வரலாற்றில் ஆயிரம் வருட ஆட்சிக்காலம் பற்றிய கருத்துக்கள்

டிஸ்பென்சேஷனலிஸ்ட் எழுத்தாளர்கள் தங்கள் கோட்பாட்டை நிலைநிறுத்திக் கொள்வதற்காக வரலாற்றை அடிக்கடி உதாரணம் காட்டி எழுதுவது வழக்கம். சார்ள்ஸ் ரைரி (Charles Ryrie) அதை தன் நூல்களில் செய்திருக்கிறார். சபைப்பிதாக்களான ஜஸ்டின் மார்டர் (Justin Martyr), ஐரேனியஸ் (Irenaeus), அலெக்சான்டிரியாவைச சேர்ந்த கிளமென்ட் (Clement of Alexandria), ஆகஸ்தீன் (Augustine) ஆகியோரின் எழுத்துக்களை உதாரணங்காட்டி அவர்கள் டிஸ்பென்சேஷனல் கோட்பாட்டைப் பின்பற்றியவர்கள் என்று ரைரி விளக்குகிறார் (Charles Ryrie. Dispensationalism Today). ஆனால், ரைரியின் வாதத்திற்கு மாறாக இவர்களில் ஒருவராவது இஸ்ரவேலையும், திருச்சபையையும் தனித்தனி மக்களாகப் பிரித்துக்காட்டி இவை இரண்டிற்கும் மத்தியில் தீவிரமான வேறுபாடு இருப்பதாகப் போதிக்கவில்லை. உண்மையில் ஜஸ்டின் மார்டர் தன்னுடைய நூலொன்றில் சபையை மெய்யான இஸ்ரவேலாகக் கணித்து எழுதியிருக்கிறார்.

ஆகஸ்தீன், ஆயிரம் வருடங்கள், ஆத்மீக ரீதியில் சபையில் நிறைவேறப் போவதாகக் கருதினார். அத்தோடு, இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோதே சாத்தானைக் கட்டுப்படுத்துதல் நிறைவேறிவிட்டதாகவும் கருதினார். விசுவாசிகளுடைய மறுபிறப்பு அனுபவத்தையே வெளிப்படுத்தல் 20ல் காணப்படும் முதல் உயிர்த்தெழுதலாகவும் அவர் கருதினார். வெளிப் படுத்தல் நூலின் 20:1–6 வரையுள்ள பகுதிகள் அதற்கு முன்னால் காணப்படும் அதிகாரங்களின் நிகழ்ச்சிகளை மறுபடியும் படம் பிடித்துக் காட்டும் பகுதி என்றும், 19ம் அதிகாரத்திற்குப் பின் கால அடிப்படையில் புதிதாக நடக்கப்போகும் விபரங்களை விளக்கும் பகுதி அல்ல என்றும் விளக்கினார். ஆயிரம் வருடங்களை எழுத்துபூர்வமாகக் கணித்து அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது இயேசு மறுபடியும் வருவார் என்று எதிர்பார்த்தார். இவ்விதமாக ஆத்மீக ரீதியில் ஆயிரம் வருடங்களைக் கருதுவது மத்திய காலத்திலும் அதற்குப்பின்னும் வழமையாக இருந்தது.

பத்தாம் நூற்றாண்டின் இறுதிவரை ஆகஸ்தீனின் கருத்தைப் பின்பற்றி கிறிஸ்துவின் முதலாம், இரண்டாம் வருகைக்கு இடைப்பட்ட காலத்தையே ஆயிரம் வருடங்களாகக் கணிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆயிரம் வருடங்களின் இறுதிப்பகுதியில் நியாயத்தீர்ப்பு வர இருப்பதால் அதைக் குறித்த பயம் அனேகருக்கு ஏற்பட்டது. ஆனால், கிறிஸ்துவின் வருகையும் ஆயிரம் வருடங்களின் முடிவோடு தொடர்புடையதாக இருந்ததால், ஆயிரம் வருடம் உண்மையில் அதைவிட அதிக காலமாக இருக்கப்போவதை ஆகஸ்தீனின் வழியைப் பின்பற்றியவர்கள் உணர்ந்தார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஆயிரம் வருடங்களை அடையாள மொழியாகக் கருதுவதே சரியான வழி என்பதை அவர்கள் உணர்ந்தனர். இந்த முறையிலேயே வெளிப்படுத்தல் நூலை வரலாற்று அடிப்படையில் விளக்கும் முறை (Historical Interpretation) ஆரம்பமானது. அதாவது, வெளிப்படுத்தல் விசேஷம் சபை வரலாற்றை அடையாள மொழியில் விளக்கும் நூலாக இம்முறையைப் பின்பற்றியோர் கருதினர்.

வெளிப்படுத்தல் விசேஷத்தை ஆத்மீக ரீதியில் சபை வரலாற்றை அடையாளமாக விளக்கும் நூலாகக் கருதும் வழக்கத்தையே ரோமன் கத்தோலிக்க மதமும், சீர்திருத்தவாதிகளும் பின்பற்றினர். இருந்தாலும் அடை யாள மொழிகளில் பலவற்றைக் குறித்து ரோமன் கத்தோலிக்க எழுத்தாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் அபிப்பிராய பேதம் இருந்தது. சீர்திருத்தவாதிகள் கத்தோலி¢க்க போப்புக்களின் ஆட்சி முறையின் ஆரம்பத்தை அந்திக்கிறிஸ்துவின் காலமாகக் கருதினர். மார்டின் லூதர் வெளிப்படுத்தல் 11, 12, 13 அதிகாரங்கள் போப்புக்களின் அதிகார ஆரம்பத்தை வர்ணிக்கும் பகுதிகளாக விளக்கமளித்தார். அவரைப் பொறுத்தவரையில் 666 போப்புக் களின் அதிகாரத்தைக் குறிப்பதாக இருந்தது. வரலாற்று ரீதியில் வெளிப்படுத் தலுக்கு விளக்கமளித்தவர்கள், அந்திக்கிறிஸ்துவை போப்புக்களோடு தொடர்பு படுத்தி விளக்கும் முறை புரட்டஸ்தாந்து சிந்தனையாளர்களிடம் மூன்று நூற்றாண்டுகள் வரை இருந்து புரட்டஸ்தாந்து வேதவிளக்க முறை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

இருந்தபோதும் வேறு சில புரட்டஸ்தாந்தியர்கள் வரலாற்று ரீதியில் வெளிப்படுத்தலுக்கு விளக்கமளித்தபோதும், ஆகஸ்தீனின் ஆத்மீக, வரலாற்று ரீதியில் விளக்கமளிக்கும் முறையைப்பின்பற்றாமல் ஆயிரம் வருட காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இயேசு வருகை தருவார் (Premillennialism)  என்ற கொள்கையைப் பின்பற்றினார்கள். சீர்திருத்தவாதிகளின் காலப்பகுதியிலும், தூய்மைவாதிகளின் காலப்பகுதியிலும் ஆயிரம் வருட ஆட்சிக்காலத்துக்கு முன்னதாக இயேசு வருவார் என்று நம்பியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் அவர்களில் ஒருவராவது பெரும் சோதனைக் காலத்துக்கு முன்பாக சபை இந்த உலகில் இருந்து இரகசியமாக அகற்றப்பட்டுவிடும் (Pre-tribulation rapture) என்ற கருத்தை துப்பரவாகக் கொண்டிருக்கவில்லை. பெரும் சோதனைக்காலத்தை சபையும் நிச்சயமாக சந்திக்கும் என்றே அவர்கள் நம்பினார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் பெரும் சோதனைக்காலம் 1260 நாட்களாக அல்லாமல், வருடங்களாக இருந்தது.

இதே காலப்பகுதியில் டேனியல் விட்பீ (Daniel Whitby) என்பவர் ஆகஸ்தீனின் கொள்கையில் இருந்து வேறுபட்ட ஒரு விளக்கத்தைத் தன்னுடைய புதிய ஏற்பாட்டு விளக்கவுரை நூலில் (1703) தந்தார். ஆயிரம் வருட அரசாட்சி குறித்து ஆத்மீக ரீதியிலான ஆனால், எதிர்காலத்து (Futuristic) விளக்கத்தை இவர் அளித்தார். இது வரலாற்று ரீதியிலான விளக்கத்திலிருந்து மாறுபட்டது. இவர் வெளிப்படுத்தல் 20, அதற்கு முன்னிருக்கும் அதிகாரங்களில் கூறப்பட்ட சம்பவங்களை (கிறிஸ்துவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தை) மறுபடியும் விளக்குகின்றது என்ற ஆகஸ்தீனி¢ன் ஆயிரம் வருட கால ஆட்சி குறித்த விளக்கத்தை நிரகரித்து இப்பகுதி அதற்கு முன்னிருக்கும் 19 அதிகாரத்து நிகழ்ச்சிகளை காலரீதியில் தொடர்கின்றது என்ற போஸ்ட்மிலேனியல் (Postmillennial) விளக்கத்தை அளித்தார். இவர் ஆயிரம் வருட அரசாட்சி திருச்சபை இதுவரை சந்தித்திராத ஓர் அனுபவமாக இருக்கும் என்றும், இயேசுவின் முதலாம் வருகைக்கும், இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே அது அமையுமென்றும், அது திருச்சபைக் காலப்பகுதியின் உச்சகட்டமாகவும் இருக்கும் என்றும் விளக்கினார். இக்கோட்பாடே இன்று போஸ்ட்மிலேனியலிசம் (Postmillennialism) என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் வருட அரசாட்சி குறித்து எதிர்காலத்து விளக்கத்தை அளித்த விட்பீ, பெரும் சோதனைக் காலத்தைக்குறித்து வரலாற்று ரீதியில் விளக்கமளித்தார்.

சீர்திருத்தவாதிகளினதும், தூய்மைவாதிகளினதும் காலப்பகுதியில் பொதுவாகவே வெளிப்படுத்தல் விசேஷம் வரலாற்று ரீதியிலேயே விளக்கப் பட்டது. இவர்களில் சீர்திருத்தவாதிகள் ஆகஸ்தீனைப் பின்பற்றி ஆயிரம் வருட அரசாட்சிக் காலத்தை ஆத்மீக ரீதியில் நடந்து கொண்டிருக்கும் ஒன்றாக விளக்கினர். ஒரு சில புரட்டஸ்தாந்தியர்கள் திருச்சபை தம் காலத்தில் பெரும் சோதனைக்காலத்தில் இருப்பதாகவும் (Great tribulation) அதன் முடிவில் ஆயிர வருட ஆட்சிக்காலம் ஆரம்பமாகும் என்றும் விளக்கினர். விட்பீ போஸ்ட்மிலேனியல் கோட்பாட்டை ஆரம்பித்து வைத்தார். வரலாற்றில் இந்தக்காலப்பகுதிவரை ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பிக்குமுன்னதாக இயேசுவின் வருகை இருக்கும் (Premillennialists) என்று நம்பியவர்கள் வெளிப்படுத்தல் விசேஷத்தின் பெரும்பகுதிக்கு வரலாற்று ரீதியிலே (Historicists) விளக்கமளித்து வந்திருந்தனர்.

19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் டிஸ்பென்சேஷனலிசம்

பத்தொன்பதாம் நூற்றாண்டு நெருங்கிவந்த காலத்தில் ஐரோப்பாவின் அரசியல், சமுதாய ஸ்தாபனங்களை பிரான்சுப் புரட்சி தகர்த்தெறிந்ததால் இங்கிலாந்தில் அனேகர் உலக முடிவும், கிறிஸ்துவின் வருகையும் சமீபித்து விட்டதோ என்று அஞ்சத்தொடங்கினர். இது இறுதிக்காலத்தைக் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தவர்கள் அனைவரையும் வேதத்தில் குறிக்கப்பட்டிருக் கும் 1260 நாட்கள் இவைதானோ என்று எண்ண வைத்தன. நெப்போலியனின் உயர்வால் பிரான்சில் கத்தோலிக்க போப்பின் அதிகாரம் தகர்ந்து, 1798ல் பிரான்சுப்படை ரோமில் நுழைந்து போப்பை அகற்றியது. இதையெல்லாம் கவனித்த, தீர்க்கதரிசனத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் உலக முடிவு சமீபித்துவிட்டதோ என்று சிந்திக்க ஆரம்பித்தனர். ஆயிரம் வருட அரசாட்சி க்கு முன்பு கிறிஸ்துவின் வருகை இருக்கும் என்று நம்பிய பிரிமில்லேனியல் கோட்பாட்டைப் பின்பற்றியவர்கள் தீர்க்கதரிசன ஆய்வில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தனர். கிறிஸ்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் வரப்போகிறார் என்றும், ஆயிரம் வருட ஆட்சி ஆரம்பிக்கப்போகிறது என்றும் அவர்கள் நம்ப ஆரம்பித்தனர்.

இந்த தீர்க்கதரிசன ஆய்வோடு யூதர்களுடைய நிலைபற்றிய ஆய்விலும் இவர்களுடைய கவனம் திரும்பியது. 1816ல் லூயிஸ் வே (Lewis Way) என்பவர் யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு திரும்பப் போகிற நாட்களுக்கும், யூதர்களின் தேசிய மனமாற்றத்திற்கும் அதிக தொடர்பு இருப்பதாக எழுதிய ஒரு நூலும் இந்த ஆர்வத்தை அதிகரித்தது. யூதர்கள் பற்றிய இந்த ஆய்வுகள் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கியது. அதாவது, தீர்க்கதரிசனங்களுக்கு எழுத்துபூர்வமான விளக்கமளிப்பதில் என்றுமில்லாதவகையில் அதிக ஊக்கம் காட்டப் பட்டது. இதனால், தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலைப்பற்றிப் பேசியதெல்லாம் இஸ்ரவேலான நாட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், திருச்சபைக்கும் அதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று விளக்கம்கொடுக்கும் முறை ஆரம்பித்தது.

பிரிமில்லேனியலிசக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்கள் யூதர்களுடைய தேசிய மனமாற்றத்தைக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஒரு முக்கிய அடையாளமாகக் கருதினர். இக்காலத்தில் உலகம் முழுவதும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதில் ஆர்வம் காட்டப்பட்டதும், ரோமன் கத்தோலிக்க மதத்தில் பரிசுத்தம் தொடர்ந்து குறைவடைந்து வந்ததும், திருச்சபை புதிய ஏற்பாட்டு சபைபோல் இருக்க வேண்டும் என்பதில் பிலிமத் சகோதரர்கள் காட்டிய அளப்பரிய ஆர்வமும், 1830 ம் ஆண்டு புரட்சிக்கு இட்டுச் சென்ற அரசியல், பொருளாதார, சமூக இடறல்களும் பலரைக் கிறிஸ்துவின் வருகை சமீபித்து விட்டது என்று எண்ண வைத்தன.

எட்வர்ட் இர்விங் (Edward Irving)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் எர்வர்ட் இர்விங்கைப்போல தீர்க்க தரிசனத்தில் ஆர்வம் காட்டியவர்கள் குறைவு. 1822ல் லண்டனில் கல்சிடோனியன் சபைக்குப் போதகராக நியமனம் பெற்றபின் இர்விங் தன்னுடய பேச்சுத்திறத்தால் சாதாரண மக்களையும், உயர் மட்டத்தாரையும் அதிகம் கவர்ந்தார். இக்காலத்தில் சாமுவேல் கொல்ரிட்ஜ் (Colridge) என்பவருடன் ஏற்பட்ட நட்பால் இர்விங் கிறிஸ்து பற்றிய தவறான ஒரு போதனையை நம்பத் தொடங்கினார் (கிறிஸ்துவில் பாவம் இருந்ததாக இர்விங் பிரசங்கித்தார்). கொல்ரிட்ஜின் தொடர்பு இர்விங்கைத் தான் பரிசுத்த ஆவியின் குரல் என்றும், உலகம் தொடர்ந்து தீவிரமாக மோசமடைகிறதென்றும் நம்ப வைத்தது. இதனால் வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து இர்விங் தீவிரமாக பிரசங்கிக்க ஆரம்பித்தார். 1825ல் இர்விங் பிரிமில்லேனியல் கோப்பாட்டைத் தழுவினார். 1826ல் இர்விங் மெனுவல் லாகன்சா (Manuel Lasanza) என்ற இ¢த்தாலிய கத்தோலிக்க யெசுவிட் (Catholic Jesuit) எழுதிய நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்நூல் வெளிப்படுத்தல் விசேஷத்தை எதிர்காலத்தின் (Futurism) அடிப்படையில் விளக்கமளித்தது.

கிறிஸ்துவின் வருகை குறித்து தீவிர ஆர்வம் காட்டிய இர்விங் சில நண்பர்களுடன் இணைந்து பிரித்தானிய நாட்டில் மிலனேரியன் (Millenarian) கோட்பாட்டில் ஆர்வம் காட்டிய அத்தனை பேரையும் அழைத்து அல்பரி  (Albury Conference) மகாநாட்டை நடத்தினார். இது 1827, 1828 ஆண்டுகளிலும் கூடியது. இம்மகாநாட்டில் கிறிஸ்துவின் வருகை பற்றிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக நியாயத்தீர்ப்புக் காலத்தில யூதர்கள் தங்களுடைய நாட்டை அடைவார்கள் என்றும், கிறிஸ்துவின் வருகைக்குப் பின் இவ்வுலகில் ஆயிரம் வருட ஆட்சி ஆரம்பிக்கும் என்றும், ஜஸ்டீனியனின் ஆட்சிக் காலத்தில் இருந்து பிரான்சுப் புரட்சிவரையுள்ள காலமே தானியேல் 7, 13 போதிக்கும் 1260 நாட்கள் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதிலிருந்து, வரலாற்று ரீதியில் விளக்கமளிக்கும் போக்கை முற்றாக உதறித்தள்ளிவிடாமலிருந்தாலும் எதிர்கால அடிப்படையில் விளக்கம் கொடுக்கும் போக்கை நோக்கி தீர்க்கதரிசன விளக்கங்கள் நடைபோடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது பின்பு டார்பியின் (Darby) காலத்தில் முழுமை பெற்றது. இத்தீர்மானங்களில் இஸ்ரவேலின் நிலை முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதைக் கவனிக்கவும்.

எட்வர்ட் இர்விங் பெந்தகொஸ்தே வரங்களிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். 1828ல் ஸ்கொட்லாந்துக்கு பிரசங்கம் செய்யச் சென்றபோது சந்தித்த ஏ. ஜே. ஸ்கொட் (A. J. Scott) என்ற மனிதரின் தாக்கத்தால் அற்புத வரங்கள் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன என்று இர்விங் நம்ப ஆரம்பித்தார். இதுவரை அவை இறுதிக்காலத்திலேயே மறுபடியும் உயிர்¢ப்பிக்கப்படும் என்று இர்விங் நம்பி வந்திருந்தார். அவை ஒருபோதும் இல்லாமல் போகவில்லை என்ற ஸ்கொட்டின் வாதம் இர்விங்கைக் கவர்ந்தது. இர்விங்கின் அற்புத வரங்கள் பற்றிய இந்த ஆர்வமும் டிஸ்பென்சேஷன லிசத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது. இக்காலத்தில் இசபெல்லா கெம்பல் (Isabella Cambpbell) என்ற பெண்ணும், மார்கிரட் மெக்டோனல்ட் (Margaret Macdonald) என்ற பெண்ணும் தரிசனத்தின் மூலம் அற்புத வரங்களைக் குறித்துப் பேச ஆரம்பித்திருந்தனர். மார்கிரட் மெக்டோனல்ட் இயேசுவின் இரண்டாம் வருகை இரகசிய வருகையாக இருக்கும் என்று தரிசனம் கண்டதாக சொல்லப்பட்டது. 1834ல் பவர்ஸ்கோர்ட் (Powerscourt) என்ற இடத்தில் நடந்த மகாநாட்டில் இரகசிய வருகை பற்றிய போதனைக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. இந்த மகாநாட்டில் இர்விங் கலந்து கொண்டார். இரகசிய வருகை பற்றிய போதனையும், கிறிஸ்துவின் வருகைக்கு முன்னதாக நடக்கவிருப்பதாகக் கூறப்படும் பெரும் சோதனைக்காலம் (Pre-tribulation) பற்றிய போதனையும் இக்காலத்தில் சிறிது சிறிதாக உருப்பெற்றாலும் பின்பு டார்பியினாலேயே இவற்றிற்கு இறையியல் உருவம் கொடுக்கப்பட்டது.

எட்வர்ட் இர்விங்காலோ அல்லது அவரது கூட்டாளிகளாலோ அல்பரி மகாநாட்டில் தீர்க்கதரிசனங்களுக்கு எதிர்கால அடிப்படையில் (Futurism) விளக்கம் கொடுக்கும் முறை ஆரம்பித்தது. அத்தோடு தீர்க்கதரிசன கால அட்டவனையில் இஸ்ரவேலுக்கு அதிமுக்கிய இடம் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக, கிறிஸ்துவின் வருகையின்போது மறுபடியும் பெந்தகொஸ்தே வரங்கள் உயிர்பெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவற்றில் முதலிரண்டும் நேரடியாக எதிர்காலத்தில் டிஸ்பென்சேஷனலிசத்தின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தன. இர்விங்கின் ஊழியத்தில் பங்கு கொண்டிருந்த ரொபட் பெக்ஸ்டர் என்ற மனிதர் இக்காலத்தில் தானியேலில் காணப்படும் 1260 நாட்கள் வருடங்கள் அல்ல நாட்கள் மட்டுமே என்று தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார். இதுவும் தீர்க்கதரிசனங்களுக்கு எதிர்கால விளக்கம் கொடுக்கும் முறைக்கு துணைபோனது.

எட்வர்ட் இர்விங்கின் வாழ்க்கை இறுதியில் துன்பகரமாக முடிந்தது. பெந்தகொஸ்தே அற்புத வரங்களில் நம்பிக்கை வைத்து, தன்னுடைய பிரசங்க ஊழியத்தை அழித்துக் கொண்டு, இறுதியில் காசநோய் பிடித்து அதைக் கர்த்தர் தீர்ப்பார் என்று நம்பி அதிலிருந்து விடுதலை பெறாமலேயே நிம்மதியின்றி இர்விங் இறந்தார் என்பது வரலாறு.

ஜோன் நெல்சன் டார்பி (John Nelson Darby)

எட்வர்ட் இர்விங்கின் ஊழிய காலத்தில் இங்கும் அங்குமாக டிஸ்பென்சேஷனலிசத்தின் தோற்றத்திற்குக் காரணமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும் ஜோன் நெல்சன் டார்பியே டிஸ்பென்சேஷனலிசத்தை முறைப்படுத்தி அமைத்து அதற்கு முழு உருவம் கொடுத்த மனிதராக இருந்தார். இர்விங்கின் ஊழியத்தின் மூலம் தோன்றிய கத்தோலிக்க அப்போஸ்தல சபை தன்னுடைய முக்கியத்துவத்தை ஆயிரம் வருட ஆட்சிக்கால கோட்பாட்டாளர் மத்தியில் இழந்து கொண்டு வர பிலிமத் சகோதரர்கள் (Plymouth Brethren) அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டனர். பிலிமத் சகோதர்கள் இயக்கத்தை டார்பி ஆரம்பித்திருக்காவிட்டாலும் அதன் அதிமுக்கிய தலைவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

ஜோன் நெல்சன் டார்பி அன்றைய திருச்சபையின் விருத்தி குறைந்த தன்மையையும், போதக ஊழியத்தையும் கடுமையாகத் தாக்கி 1829ல் எழுதிய ஒரு ஆக்கத்தின் மூலம் சகோதரத்துவ இயக்கத்தில் இடம் பெற்றார். ஆனால், அவருடைய தீர்க்கதரிசனம் சம்பந்தமான போதனைகளும், டிஸ்பென்சேஷன லிசத்திற்கு அவர் ஆற்றிய பங்கைப் பற்றியுமே நாம் அக்கறை கொண்டிருக்கிறோம். அயர்லாந்தின் டப்ளின் என்ற இடத்தில் 1831ல் நடந்த பவர்ஸ்கோர்ட் மகாநாட்டிற்குக் காரணகர்த்தாவாக டார்பி இருந்தார். இம்மகாநாட்டில் எட்வர்ட் இர்விங்கும் கலந்து கொண்டிருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம். இம்மகாநாட்டில் டார்பி திருச்சபையைத் தொடர்ந்து தாக்கினார். விசுவாசிகள் இயேசுவின் நாமத்தில் மட்டுமே கூட வேண்டும் என்றும், சபை அமைப்பில் அக்கறை காட்டக்கூடாதென்றும் டார்பி கூறினார். அத்தோடு இம்மகா நாட்டில் தன்னுடைய சபை பற்றிய கோட்பாட்டையும் டார்பி விளக்கினார். தானியேல் நூலில் காணப்படும் 69வது வாரத்துக்கும் 70ம் வாரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் ஒரு தற்காலிக இடைச்செருகலே திருச்சபை என்று டார்பி விளக்கினார். டார்பியின் இந்தப்போதனையும், பெரும் சோதனைக்காலத்துக்கு முன்பு திருச்சபை இரகசியமாக அகற்றப்படும் என்ற போதனையையும் குறித்து அவருக்கும் சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்த இன்னொரு தலைவரான பென்ஜமின் டபிள்யூ நியூட்டன் என்பவருக்கும் இடையில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நியூட்டன் 1834 மகாநாட்டில் கலந்து கொள்ள மறுத்து தனியாக ஒரு மகாநாட்டை ஆரம்பித்தார். இதை டார்பி கடுமையாக கண்டித்தார். 1845ல் டார்பி பிளிமத்துக்குப் போய் நியூட்டனைக் கடுமையாக சாடினார். நியூட்டனின் போதனைகளிலும் குறைகண்டார். இவற்றால் நியூட்டன் இயக்கத்தை விட்டுவிலக டார்பி அவரையும், அவரைச் சேர்ந்தவர்களையும் சபைநீக்கம் செய்தார்.

டார்பிக்கும், நியூட்டனுக்கும் எதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்வது அவசியம். டார்பி பெரும் சோதனைக்காலத்திற்கு முன்பு திருச்சபை இரகசியமாக அகற்றப்படும் என்றும், சபையோடு தொடர்பில்லாத ஒரு கூட்டம் சோதனைக் காலத்துக்குள்ளாகப் போகும் என்று கூறினார். சபை இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, வெளிப்படுத்தல் விசேஷத்தின் முதல் சில அதிகாரங்களின் நிகழ்ச்சிகளைத்தவிர அதற்குப் பின்னால் வரும் அதிகாரங்களின் எந்த நிகழ்ச்சிகளும் இதுவரை நடக்கவும் இல்லை, இனி நடக்கவும் முடியாது என்பது டார்பியின் வாதமாக இருந்தது.   ஆனால், நியூட்டனோ சோதனைக் காலத்தைச் சந்திக்கும் விசுவாசிகள் திருச்சபை அங்கத்தவர்கள் என்றும் அவர்கள் சோதனைக்காலத்தை முழுவதுமாகக் கடந்து போவார்கள் என்றும் கருதினார். இதிலேயே இவருக்கும் டார்பிக்கும் பெருங்கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது சபை அகற்றப்படு¢ம் என்ற போதனையைக் குறித்து டார்பிக்கும், நியூட்டனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படையான காரணம், டார்பி பழைய, புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் பற்றிக் கொண்டிருந்த கருத்துத்தான். பழைய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கும், புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கும் (பெந்தகோஸ்தேயில் இருந்து இரகசிய வருகைவரை) இடையில் பெரும் அடிப்படை வித்தியாசம் இருப்பதாக டார்பி விளக்கினார். பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளை விடத் தரத்தில் குறைந்தவர்களாக டார்பி கருதினார். நியூட்டன் மாறாக பழைய, புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் அனைவரும் ஒரே சபையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் சம ஆசீர்வாதங்களை அடைகிறார்கள் என்றும் விளக்கினார்.

டார்பியைப் பொறுத்தவரையில் மெய்யான சபை கர்த்தரோடு ஐக்கியத்தில் வந்ததாக இருந்தது. அதேநேரம் இந்த உலகில் காணப்படும¢ சபைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கினார். திருச்சபை பற்றிய டார்பியின் இந்த நம்பிக்கையே அவருடைய ஏனைய போதனைகளுக்கு அடிப்படையாக அமைந்தது. தன்னுடைய காலத்து திருச்சபை உலகில் பலவீன மானதாகவும், பரிசுத்தத்தில் குறைந்தாகவும் இருப்பதாகக் கருதிய டார்பி அது கர்த்தருடைய திட்டத்திற்கு முரணாக அமைந்து காணப்படுவதாகக் கருதினார். ஏனெனில், கர்த்தருடைய திட்டங்களில் ஒன்றான சபை, இந்த உலகத்தில் வெற்றிபெறாததால் ஏனைய காலங்களில் நடந்ததுபோல் இப்போது கர்த்தருடைய தண்டனையை சந்திக்க வேண்டும் என்றார். சபையைத் திருத்தும் எந்த முயற்சியும் தோல்வியிலேயே போய் முடியும் என்று கூறிய டார்பி, அது கர்த்தருடைய சித்தமும் அல்ல என்று விளக்கினார். ஆகவே, விசுவாசிகள் தாங்கள் இருக்கும் சபைகளையெல்லாம்விட்டு விலகி இயேசுவின் பெயரில் மட்டும் எங்கும் கூடிவரவேண்டும் என்றார் டார்பி. அவரைப் பொறுத்த வரையில் இப்படிக்கூடிவரும் சகோதரர்கள் மட்டுமே தம்மில் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்து கிறிஸ்துவை இந்த உலகத்தில் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். இன்று தமிழர்கள் மத்தியில் சபை அமைக்காமலும், கூடுகின்ற கூட்டத்துக்கு ஒரு பெயர்கூட இல்லாமலும், சகோதரர்கள் என்ற முறையில் மட்டும் வாராவாரம் கூடிவருகிறவர்களின் செயலுக்கு டார்பியின் போதனையே காரணம். இப்படிக் கூடுகிறவர்கள் தாங்கள் புதிய ஏற்பாட்டு சபையைப் பின்பற்றி வருகிறோம் என்று கூறினாலும் இது டார்பி உருவாக்கிய தவறான போதனை என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

டார்பியைப் பொறுத்தவரையில் திருச்சபை பெந்தகொஸ்தே நாளுக்கு முன்பு இந்த உலகத்தில் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டில் திருச்சபை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் இஸ்ரவேலே இந்த உலகத்தில் தேவ இராஜ்யமாக கர்த்தரின் வாக்குத்தத்தங்களையும், ஆசீர்வாதங்களையும் அனுபவித்து வந்ததாக டார்பி விளக்கினார். இந்த உலக இராஜ்யத்துக்கான கர்த்தருடைய திட்டங்களை இஸ்ரவேலர் நிராகரித்ததாலேயே அவர் திருச்சபையை நிறுவினார் என்றார் டார்பி. அதாவது, கர்த்தரின் திட்டமாகிய கடிகாரம் தற்காலிகமாக நின்றுபோய்விட்டதாகவும் கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது திருச்சபை அகற்றப்படும்போதே மறுபடியும் கர்த்தரின் திட்டங்கள் நடைமுறையில் கொண்டுவரப்பட்டு அந்தக் கடிகாரம் ஓடத் தொடங்கும் என்றார் டார்பி. இடைச்செருகலாக, தற்காலிகமாக கர்த்தரால் இந்த உலகில் நிறுவப்பட்ட திருச்சபை பரலோகத்துக்குரியதாக இருந்ததால் அது அகற்றப்பட்ட பின்னரே இந்த உலகத்தில் இஸ்ரேவேலை அடிப்படை யாகக் கொண்ட கர்த்தரின் இராஜ்யம் அமைக்கப்பட முடியும் என்றும், ஆகவே, தேவ இராஜ்யம் இஸ்ரவேலைக் கொண்டு இந்த உலகத்தில் எழுத்து பூர்வமாக (Literal earthly kingdom) நிறுவப்படும் என்றார் டார்பி. கர்த்தருடைய மக்களுக்கான வாக்குத்தத்தங்கள் எழுத்துபூர்வமாக இந்த உலகத்து மக்களான இஸ்ரவேலைச் சார்ந்ததால், அவற்றின் நிறைவேற்றமும் எழுத்துபூர்வமாகவே அமைய வேண்டும் என்பது டார்பியின் போதனை. ஆகவே, இஸ்ரவேலின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இந்த உலகத்தில் எழுத்துபூர்வமான ஆயிரம் வருட தேவ இராஜ்யமே என்பது டார்பியின் போதனையாக இருந்தது.

இஸ்ரவேல்/சபை குறித்த டார்பியின் இந்த இறையியல் விளக்கங்களே அவருடைய வேதவிளக்கமுறைக்கு (Hermeneutics) அடிப்படையாக அமைந்தன

‘எழுத்துபூர்வமான வேதவிளக்கமுறையே (Literal interpretation) தங்களுடைய போதனைகளுக்கு அத்திவாரமாக அமைகின்றது என்று அனேக டிஸ்பென் சேஷனலிஸ்ட்டுகள் மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்களுடைய ஆக்கங்களைப் படித்துப் பார்த்தால், அவர்கள் எழுத்துபூர்வமான வேதவிளக்க முறையை சரிவரப் பயன்படுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு அதிக நேரம் எடுக்காது. டிஸ்பென்சேஷனலிஸ்டுகளின் இஸ்ரவேல்/சபை பற்றிய இரட்டைப் போதனையே அவர்களுடைய எழுத்துபூர்வ வேதவிளக்க முறைக்கு அடிப்படையாக இருக்கிறதே தவிர, எழுத்துபூர்வமான வேதவிளக்க முறை இஸ்ரவேல்/சபை பற்றிய போதனைகளை உருவாக்க உதவவில்லை.

டார்பியின் போதனைகளை மறுபடியும் சுருக்கமாகப் பார்ப்போம்:

1. இஸ்ரவேலுக்கும், திருச்சபைக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற்படுத்தி இஸ்ரவேலரை இந்த உலகத்து மக்களாகவும், விசுவாசி களை பரலோகத்து மக்களாகவும் கருதும் இரட்டைப் போதனை.

2. தீர்க்கதரிசனங்களில் இஸ்ரவேலரைப் பற்றிய போதனைகளை யெல்லாம் எழுத்துபூர்வமாக விளக்குவதோடு, சபைபற்றிய போதனைகளுக்கெல்லாம் ஆத்மீக விளக்கமளிக்கும் முறை.

3. திருச்சபையை தேவனுடைய திட்டத்தில் ஒரு தற்காலிக இடைச்செருகலாக விளக்குதல்.

4. திருச்சபை இரகசியமாக இந்த உலகில் இருந்து அகற்றப்படும் என்ற போதனை (இஸ்ரவேலை அடிப்படையாகக் கொண்ட தேவ இராஜ்யம் இந்த உலகில் ஏற்பட இது அவசியம்).

5. இஸ்ரவேலரைக் கொண்டு ஆயிரம் வருடங்களுக்கு இந்த உலகில் ஏற்படப்போகும் தேவ இராஜ்யத்தைக் குறித்த எதிர்பார்ப்பு.

6. நியாயப்பிரமாணத்திற்கும், கிருபைக்கும் இடையில் பெரும் பிரிவேற்படுத்திக்காட்டும் இரட்டைப்போதனை. இதை சீ. ஐ. ஸ்கோபீல்டின் வேதவிளக்கக் குறிப்புகளில் பெரும்பாலும் காணலாம்.

7. இந்த உலகத்தில் காணப்படும் திருச்சபை அமைப்புகள் பற்றி தனிப்பட்ட எதிர்மறையான விளக்கமளித்தல்.

டார்பியின் இந்தப் போதனைகளை வரலாற்றுக் கிறிஸ்தவ போதனைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இவற்றின் செயற்கைத் தன்மை மிக எளிதாகப் புலப்படும். டிஸ்பென்சேஷனலிசத்தின் ஆதரவாளர்களில் ஒருவரான ஹெரி அயர்ன்சைட் (Harry A. Ironside) என்பவர் டார்பியின் விளக்கங்கள் எதுவும் அதற்கு முன் வரலாற்றில் எந்தவொரு மனிதராலும், எந்தவொரு காலப்பகுதியிலும் போதிக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறார். அதாவது அதற்கு முன் 1600 ஆண்டுகள்வரை எவருடைய பிரசங்கத்திலும் போதனைகளிலும் இத்தகைய போதனைகளுக்கு இடமிருக்கவில்லை என்கிறார் அயர்ன்சைட். சபைப் பிதாக்களோ, நைசீனுக்கு முன்னும் பின்னுமோ அல்லது கத்தோலிக்க மதமோ, சீர்திருத்தவாதிகளோ, தூய்மைவாதிகளோ, எவருடைய காலத்திலும் இப்போதனைகளைக் காண முடியவில்லை. அயன்சைட்டின் இந்தக் கருத்தில் இருந்து டார்பியின் இறையியல் போதனைக்கு வரலாற்றுக் கிறிஸ்தவத்தில் ஒருபோதும் இடமிருக்க வில்லை என்பதைப் புரிந்து கொள்வது கடினமில்லை.

பலருக்கு டார்பியின் மீதிருந்த தீவிர பற்றுதலும், அவருடைய சீடர்களுக்கு இருந்த ஆர்வத்தாலும் டார்பியின் போதனைகள் அனேகரை இங்கிலாந்தில் கவர ஆரம்பித்தன. 1843ல் இங்கிலாந்தில் டிஸ்பென்சேஷனலிசம் காலூன்றி நிற்க இரண்டு முக்கிய அம்சங்கள் உதவின. முதலாவதாக, வரலாற்று பிரிமிலேனியலிசம் (Historicist premillennialism) இடிந்து விழ ஆரம்பித்தது ஒரு காரணம். வில்லியம் மில்லருடைய போதனையின்படி 1843ல் கிறிஸ்துவின் வருகை அமையாமல் போனதால் வரலாற்று பிரிமில்லேனியலிசத்துக்கு ஆபத்து ஏற்பட்டது. இரண்டாவதாக 1859ல் ஏற்பட்ட ஆத்மீக எழுப்புதல் இன்னொரு காரணமாக இருந்தது. இந்த எழுச்சி பெரும்பாலும் போதகர் களால் அல்லாமல் ஊழியப்பயிற்சி பெறாதவர்களால் முன்னின்று நடத்தப் பட்டதால், ஊழியப்பயிற்சிகளிலெல்லாம் நம்பிக்கையில்லாத சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதில் அதிகம் பங்கிருந்தது. எனவே இங்கிலாந்தில் இந்த எழுப்புதலின்போது பிலிமத் சகோதரத்துவ சபைகளைப் போல வேறு எந்த சபைப்பிரிவும் நன்மைகளை அடையவில்லை. இந்த எழுப்பு தலின் பாதிப்பால் பின்பு சபை சார்பற்ற இயக்கமொன்று உருவாகி, அமெரிக்க சுவிசேஷப்பிரசங்கியான டி. எல். மூடியின் (D. L. Moody) இங்கிலாந்து ஊழியத் தினால் மேலும் உறுதியடைந்து, எந்தவித சபை அமைப்பையும், விசுவாச அறிக்கைகளையும் கொண்டிராத இயக்கமாக டிஸ்பென்சேஷனலிசம் நிரந்தரமாக குடியேறத் தகுந்த இயக்கமாக இருந்தது.

இதுவரை டிஸ்பென்சேஷனலிசம் எவ்வாறு தோன்றி ஜோன் நெல்சன் டார்பியினால் முறைப்படுத்தப்பட்ட இறையியல் வடிவம் கொடுக்கப்பட்டு இங்கிலாந்தில் நிலைகொள்ள ஆரம்பித்தது என்று பார்த்தோம். சீர்திருத்தவாத, வரலாற்றுக் கிறிஸ்தவத்தோடு எந்தவித தொடர்பும் இல்லாத இந்தப்போதனை வேதத்தில் இருந்து பெறப்பட்டதாக இல்லாமல் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களின் காரணமாகவும், தனி மனிதர்களின் கவர்ச்சிகரமான போதனைகளினாலும் உருப்பெற்றதாக இருப்பதையும் கவனித்தோம். எட்வர்ட் இர்விங்கும், டார்பியும் அவ்விதத்தில் மனிதர்களைக் கவரக்கூடிய அம்சங்களைத் தங்களில் கொண்டிருந்தார்கள். செயற்கையான டிஸ்பென் சேஷனலிசப் போதனை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இங்கிலாந்தில் தோன்றி பின்பு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கிருந்து உலக நாடுகளுக்கெல்லாம் பரவியது. அது எப்படி நடந்தது என்பதை அடுத்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s