தமிழ் கிறிஸ்தவ உலகில் பிரசங்கம் அது வகிக்க வேண்டிய இடத்தை வகிக்க முடியாமல் தரமிழ ந்து கீழானநிலையில் இருப்பதை இன்று அறி யாதவர்கள் இருக்க முடியாது. இந்நிலமைக்கு நம் மக்கள் மத்தியில் இருக்கும் ஒரு குறைபாடும் காரண மாக உள்ளது. அதாவது, வேத அறிவில் நம் மக்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதும் பிரசங்கம் தரமிழந்து காணப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. வரலாற்றில் ரோமன் கத்தோலிக்க மதம் பல நூற்றாண்டுகளாக கொடுங்கோலாட்சி செய்ய முடிந்த தற்கு காரணம் அவர்கள் மக்கள் வேதத்தை வாசிக்க முடியாதபடி செய்திருந்ததுதான். இலத்தீன் மொழியில் மட்டுமே இருந்த வேதத்தை மக்களால் வாசிக்க முடியவில்லை. அதை வாசித்து விளங்கிக்கொள்வதற்கும், மொழி பெயர்ப்பதற்கும் அன்று கடுந்தடையிருந்தது. அதை மொழிபெயர்ப்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தவகையில்தான் கிறிஸ்தவத்தை வளரவிடாமல் தடுத்து வைத்திருந்தது ரோமன் கத்தோலிக்க மதம்.
இன்று, அன்று ரோமன் கத்தோலிக்க மதம் செய்தது போன்ற தடைகள் நம்மத்தியில் இல்லாமலிருந்தாலும் அதைவிடக் கொடுமையாக திருச்சபைப் போதகர்களும், வேதத்தைப் பிரசங்கிக்கிறவர்களும் ஆத்துமாக்களை இருண்ட உலகத்தில் வைத்திருக்கின்றனர். வேதப் பிரசங்கப் பஞ்சம் நம்மத்தியில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. அத்தோடு அனேகர் உப்புச்சப்பில்லாத “தியானச் செய்திகளை” கொடுத்தும், “தியான நூல்களை” எழுதியும் ஆத்துமாக்களை சோம்பேரிகளாக வைத்திருக்கின்றனர். அன்றாடம் வேதத்தை வாசிப்பதை விட்டுவிட்டு ஆத்துமாக்கள் தங்களுடைய ஆத்தும தாகத்தைத் தீர்த்துக்கொள்ளுவதற்கு இந்தத் தியான நூல்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். தியான நூல்களை எழுதி விற்காத ஒரு ஊழியக்காரனை தமிழ் நாட்டில் பார்ப்பது அரிது. இந்தத் தியான நூல்களும், வேத வியாக்கியானம் அறவே இல்லாத தியானச் செய்திகளும் இன்று தமிழ் கிறிஸ்தவர்களை 16ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்ததுபோன்ற இருண்டகாலத்தில் வைத்திருக்கின்றன. இருதயமிருந்தும் சிந்திக்க முடியாமலும், வேத அறிவில்லாமலும், ஆத்மீக பலவீனத்தோடு தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவத்திற்கு விடுதலை வேண்டுமானால் நம் மக்கள் வேதத்தைக் கையில் எடுத்து, வாசித்து, தியானித்து அதன் மூலம் கர்த்தர் தருகின்ற செய்தியை நேரடியாகக் கேட்கத் தயாராக வேண்டும். இது நம்மினம் வாழ, வளர ஒரு அவசியமான சிறு ஆரம்பமாக இருக்கும்.
– ஆசிரியர்