மத்தியகால ஆரம்பம்
ஆறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஐரோப்பாவில் புதிய நிகழ்ச்சிகள் நிகழ ஆரம்பித்தன. இதுவரை இருந்து வந்த கிரேக்க, ரோம கலாச்சாரத்தின் பாதிப்புகள் குறையத் தொடங்கின. ரோம சிந்தனைகளோடு டியூடோனிக் சிந்தனைகள் கலந்து புதிய சிந்தனைகள் உருவாகி பரவத் தொடங்கின். முதலாம் கிரெகரி போப்பாக பதவியேற்ற 590ம் ஆண்டை மத்திய காலத்தின் ஆரம்பமாகக் கருதலாம். இத்தாலியின் பெரும்பகுதி இக்காலத்தில் போராலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தது. ரோம சாம்ராஜ்யம் 476ல் வீழ்ந்தபோது இத்தாலிக்கு வெளியில் தனது மகிமையை இழந்திருந்த கத்தோலிக்க சபை மறுபடியும் அந்நிலையை அடைய முடியாத நிலையில் இருந்தது. ரைன், டான்யூப் நதிப்பிரதேசங்களை கத்தோலிகக சபை இழந்திருந்தது. பாபேரியன்களால் கைப்பற்றப்பட்ட ரோமப்பிரதேசங்களில் ஆரியனிசமும் வேறு வேதவிரோதப்போதனைகளும் தலைதூக்கி ஆண்டு கொண்டிருந்தன. ஸ்பெயினிலும் (Spain), கோலிலும் (Gual), இல்லிரியாவிலும் (Illyria) போப்பின் அதிகாரம் பலவீனமாகி இருந்ததோடு ஆபிரிக்காவில் அது இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது.
மகா கிரெகரி (590-604) (Pope Gregory the great)
கிரெகரி (Gregory I) ரோமின் போப்பாக நியமிக்கப்பட்டபோது நாட்டில் நிலமை இவ்வாறே இருந்தது. கிரெகரியின் தலைமைத்துவம் கிரெகரிக்குப்பின் வந்த போப்புக்களுக்கு சிறந்த உதாரணமாக இருந¢தது. ஆகவே, முதலாம் போப் என்ற பட்டம் முறையாக கிரெகரிக்கே கொடுக்கப்பட வேண்டும். போப் லியோ (440-461) (Pope Leo I), ஏழாம் கிரெகரி (1075-1085) (Gregory vii), மூன்றாம் இனொசன்ட் (1198-1216) (Innocent III) ஆகியோரில் கிரெகரிக்கே போப் பதவியை வளர்த்து வரலாற்றில் நிலைநிறுத்தியதில் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.
கிரெகரி 540ல் ரோமில் ஒரு செல்வமிக்க குடும்பத்தில் பிறந்தார். தன்னுடைய திறமையினால் 573ல் ரோம் நகரின் தலைவனாக பதவி வகித்தார். கர்த்தருக்குப் பணி செய்ய விரும்பி 574ல் தன்னுடைய சொத்துக்களையெல்லாம் வறுமையில் வாடியவர்களுக்குக் கொடுத்ததோடு சிசிலியில் ஆறு குருமடங்களையும் கட்டினார் கிரெகரி. சமய வாழ்க்கைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு பெனடிக்டைன் பிரிவில் இணைந்து குருத்துவத்திற்காகப் பயிற்சி பெற்றார். போப் இரண்டாம் பெலேஜியஸ் (Pelagius II) 579ல் கிரெகரியை கொன்ஸ்தாந்தி நோபிளுக்கு அனுப்பியபோது அங்கே வெளியுறவுப்பணியில் அதிக அனுபவத்தைப் பெற்றார் கிரெகரி. 590ல் கிரெகரி போப்பாகப் பதவியேற்றார். கிரெகரியைப் பற்றி எழுதும் ஒரு வரலாற்றறிஞர், “கிரெகரி அதிகாரத்தை விரும்புபவர், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடையவர், துறவரத்தில் தீவிரமானவர், பக்தியில் வைராக்கியமானவர், குருத்துவத்தில் பற்றுடையவர் ஆனால், மிகவும் தாழ்மையானவர்” என்று எழுதுகிறார்.
ஏற்கனவே வெளியுறவுத்துறையில் கிரெகரி பெற்றிருந்த அனுபவம் போப் பதவிக்கு பெரிதும் கைகொடுத்தது. இதனால் இத்தாலியிலேயே அரசியலில் மிகுந்த செல்வாக்குள்ள மனிதராக விளங்கினார் கிரெகரி. ரோமைச் சுற்றி இருந்த பகுதிகளிலும், சிசிலியிலும் (Sicily), கோலிலும் (Gaul), ஆபிரிக்காவிலும் போப்பின் அதிகாரத்திலிருந்த பகுதிகள் அனைத்தையும் திறமையாக நிர்வகித்து எதிர்காலத்தில் போப் உலகளாவிய உறவை ஏற்படுத்தி அதிகாரம் செலுத்துவதற்கான அடித்தளத்தை கிரெகரி அமைத்தார். நாடுகளில் இழந்து போயிருந்த போப்பின் அதிகாரத்தை மீண்டும் நிறுவ பெரிதும் உழைத்த கிரெகரி கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதின் அவசியத்தை உணர்ந்தார். ஐரோப்பாவின் மூன்றில் இரண்டு பங்கு கடவுளை அறியாதிருக்கிறது என்பதை உணர்ந்த கிரெகரி இங்கிலாந்தின் ஆங்கிலேய சாக்சன்களை (Anglo Saxons) மதம் மாற்ற ரோம மிஷனரிகளை அனுப்ப ஆவல் கொண்டார். கடவுளை அறியாதவர்களுக்கு கடவுளைப்பற்றி அறிவிக்க குருமார்களை அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
கத்தோலிக்க சபையே முழு உலகத்திற்கும் ஆன்மீகத் தலைமைத்துவத்தை அளிக்கவேண்டும் என்று போப் முதலாம் லியோ (440-461) கூறியிருந்தார். அதை கிரெகரி மறுபடியும் புதுப்பித்தார். 558ல் கொன்ஸ்தாந்திநோபிளின் தலைவனாக இருந்த யோவான், தன்னை முழு உலகத்துக்கும் போப்பாக அறிவித்தபோது, கிரெகரி ரோமப் பேரரசனிடம் குறைகூறி யோவானை அகங்காரம் பிடித்தவன், கொடியவன், அந்திக்கிறிஸ்து என்றெல்லாம் அறிக்கையிட்டார். அதேநேரம் கிரெகரி ஊழியர்களுக்கெல்லாம் ஊழியர் என்ற பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக்கொள்ளத் தவறவில்லை. இன்றைக்கும் போப் இந்தப் பட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். யோவானைக் குறைகூறிய கிரெகரியின் செயல் சிரிப்புக்கிடமானது. ஏனெனில், கிரெகரி தன்னை பேதுருவுக்கு அடுத்த சபைத்தலைவராகவும், உலகத்திலுள்ள கிறிஸ்துவின் குரு என்றும் கூறி தன்னையே உலகத்தின் சபைகளனைத்திற்கும் தலைவனாக நியமித்துக் கொண்டு யோவானை அகங்காரம் பிடித்தவன் என்று கூறியது எந்தவகையிலும் நியாயமற்றது. தானே சபைகளுக்கெல்லாம் தலைவன் என்பதை கிரெகரி மிக உறுதியாக எங்கும் அறிவித்துக் கொண்டார். இதை உலகின் ஏனைய பகுதி சபைகளும் அங்கீகரிக்கத் தொடங்கின. ஆகஸ்தீனைப் போலவே கிரெகரியும், கத்தோலிக்க சபைக்கு வெளியில் வேறெங்கிருந்தும் எவரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். இரட்சிப்பை அளிக்கக்கூடிய கத்தோலிக்க சபைக்குத் தானே தலைவன் என்றும் கிரெகரி அறிவித்தார்.
பக்திமானாக இருந்த கிரெகரி வேதத்திலும் நம்பிக்கையுள்ளவராய் இந்தக் கொடிய உலகத்தை நியாயந்தீர்க்க வரப்போகும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியவராய் இருந்தார். நல்ல பிரசங்கியாகவும், இறையியல் எழுத்தாளராகவும் விளங்கினார். ஒரிகனின் காலத்தில் உருவான பேர்கட்டரி (Purgatory) என்ற போதனையை (அதாவது இறந்தவர்கள் உடனடியாக பரலோகத்தையோ நரகத்தையோ அடையாமல் இடைப்பட்ட ஓரிடத்தில் தங்கள் பாவநிவாரணத்திற்காக தங்கியிருப்பார்கள் என்ற போதனை) கிரெகரி அதிகாரபூர்வமான சபைப் போதனையாக மாற்றினார். கிரெகரியின் காலத்திலேயே சபைகளில் படங்களையும், உருவங்களையும் வைக்கும் வழக்கம் ஆரம்பமாகியது. இந்த வழக்கத்தை அனுமதித்தபோதும் கிரெகரி அவற்றை வழிபடக்கூடாது என்று கூறினார். கஷ்டமான நிலையில் இருந்த ரோமன் கத்தோலிக்க சபையை பெலப்படுத்தி தனக்குப் பின்னால் வரவிருக்கும் போப்புக்களின் தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் பணியை மிகவும் திறமையாக கிரெகரி செய்து முடித்திருந்தார்.
பிரித்தானியாவில் கிறிஸ்தவமும், மிஷனரி ஊழியமும்
போப் கிரெகரி தன்னுடைய நண்பனும், குருவுமாக இருந்த ஆகஸ்தீனை ஆங்கிலேய சாக்சன்களுக்கு (Anglo Saxons) கடவுளைப் பற்றி அறிவிக்க அனுப்பிவைத்தார். மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே சுவிசேஷம் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது அனேகர் அறியாத செய்தியாக இருக்கிறது. மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டேர்டூலியனின் எழுத்துக்களில் இருந்தும், அதற்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரிகனின் எழுத்துக்களில் இருந்தும் இதனை அறிந்துகொள்ள முடிகின்றது. ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்துக்கு வந்த ஆங்கிலேய சாக்சன்கள் கிழக்கு இங்கிலாந்திலும், தென்கிழக்கு ஸ்கொட்லாந்திலும் கிறிஸ்தவத்தை அழித் தொழித்தனர். ஆனால், மேற்குப்பகுதியில் இருந்தவர்கள் தொடர்ந்து கிறிஸ்தவர்களாக இருந்ததோடு அங்கே செல்டிக் சபை அயர்லாந்துடனும், ஸ்கொட்லாந்துடனும் இருந்த தொடர்பால் வளர்ந்தது.
597ல் ஆகஸ்தீன் 40 பேரோடு தெனெட் (Thanet) என்ற தீவில் இறங்கினார். இந்த வருடத்திலேயே ஸ்கொட்லாந்திலும், அயர்லாந்திலும் ஊழியம் செய்து வந்த செயின்ட் கொலம்பா அயோனாவில் மரணமானார். கென்ட்டின் அரசனான எத்தள்பர்ட் (Ethelbert) ரோம மிஷனரிகளுக்கு உதவி செய்தான். அவனுடைய மனைவியான பேர்த்தா (Bertha) பிரான்சின் இளவரசி. அவள் கிறிஸ்துவை விசுவாசித்தாள். ஆனால், இவர்களுக்கு உதவி செய்யுமுன் எத்தள்பர்ட், இந்தப் புது விசுவாசத்தைக் குறித்து தான் ஆராய்ந்தபின்பே ஏற்றுக்கொள்ளுவேன் என்று தெரிவித்திருந்தான். ஒன்பது மாதங்களுக்குள் அவனும் பத்தாயிரம் பேரும் மதம் மாறினார்கள். ஆகஸ்தீன் கென்டபரியில் செயின்ட் மார்டின் சபையில் தன்னுடைய தலைமையகத்தை அமைத்துக் கொண்டார். பின்பு இங்கிலாந்தின் மத வாழ்வில் அதிக செல்வாக்கு செலுத்திய பெரும் கெத்தீட்ரல் இங்கேயே உருவானது. 604ல் மெலிட்டஸ் (Mellitus) செயின்ட் பவுல் ஆலயத்தை நிருவி இலண்டனின் முதலாவது பிசப்பாக பதவியேற்றார். அதே காலப்பகுதியில் ஜஸ்டஸ் (Justus) ரொச்செஸ்டரின் (Rochester) பிசப்பாக நியமனம் பெற்றார்.
செல்டிக் சபையை ரோம சபையோடு இணைப்பதற்கு ஆகஸ்தீன் எடுத்த முயற்சிகள் வெற்றியடையவில்லை. அவர்கள் தனித்து நிற்பதிலேயே உறுதியாக இருந¢தனர். ஆகஸ்தீன் 604ல் மரணமடைந்தார். கென்டபரி கெத்தீட்ரலை (Canterbury cathedral) நிறுவியதே ஆகஸ்தீனின் சிறப்பான பணியாக இருந்தது. இந்தக் கெத்தீட்ரல் பின்பு நாடு முழுவதும் தனது செல்வாக்கைப் பரப்பியது.
பெட்ரிக் (Patrick) அயர்லாந்தில் 432ல் இறங்கிய காலத்தில் இருந்து சுவிசேஷம் அந்த நாட்டில் பரவ ஆம்பித்தது. பெட்ரிக் ரோம சபையின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டதற்கான எந்தவித சாட்சியங்களும் இல்லை. 397ல் நினியன் (Ninian) ஸ்கொட்லாந்தில் சபையையும், குருமடத்தையும் நிறுவியதோடு சுவிசேஷத்தை அந்நாட்டின் வடபகுதிகளுக்கும் கொண்டு சென்றார். அதற்குப்பிறகு அனேக மிஷனரிகள் வந்து சென்றார்கள். இருந்தபோதும் இவர்களையெல்லாம்விட வெற்றிகரமாக ஊழியம் செய்தவர் அயர்லாந்தில் இருந்து அயோனாவிற்கு (Iona) 563ல் வந்த செயின்ட் கொலம்பா (St. Columba) என்பவர். அவர் மிகச்சிறந்த சுவிசேஷகராக இருந்தார். இவரோடு சேர்ந்து பணிபுரிந்தவர்கள் முப்பது வருடங்களுக்குள் நொதாம்பிரியாவிலிருந்து தெற்கில் தெம்ஸ்வரை ஊழியப்பணி புரிந்திருந்தனர்.
திருச்சபையில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள்
கிரெகரி 604ல் இறந்தபோது போப்பின் அதிகாரம் பெருமளவுக்கு வளர்ந்து ரோமன் சபையும் பலவித மாற்றங்களை அடைந்திருந்தது. முதலாம் நூற்றாண்டில் உருவான திருச்சபைக்கும், ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த ரோமன் சபைக்கும் இடையில் இருந்த மாற்றங்களைக் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. இம்மாற்றங்கள் எந்தளவுக்கு மெய்க்கிறிஸ்தவத்தை விட்டு ரோம சபை விலகிப் போயிருந்தது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
போப்பின் அதிகாரம்
திருச்சபை ஆரம்பித்த காலத்தில் வேதபோதனையின்படி அது மூப்பர்களால் மட்டும் ஆளப்பட்டது. இப்போது அது மாறி தனி மனிதனான போப் சகல அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருந்து, எந்தத் தாழ்மையும் இன்றி நாட்டரசர்களுக்கு சமமான அதிகாரத்தைக் கொண்டு சில வேளைகளில் அவர்களையும் வெற்றிகொள்ளும் விதத்தில் நடந்து கொண்டார். அதுவும் உலகெங்குமுள்ள திருச்சபைகளுக்குத் தான் மட்டுமே தலைவன் என்றும் போப் தன்னை அறிவித்துக் கொண்டார். இது எந்தளவுக்கு திருச்சபைத் தலைமை மாறிவிட்டது என்பதை உணர்த்துகிறது.
திருவிருந்து
திருவிருந்து கிறிஸ்துவை நினைவுகூரும் சாதனமாக தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அது ஒரு சடங்காச்சாரியமாக வெகுவேகமாக மாறிக்கொண்டு வந்தது. திருவிருந்தின்போது கிறிஸ்து (ஆத்மீக ரீதியில் அல்லாமல்) சரீர பூர்வமாக (physically present) விசுவாசிகள் மத்தியில் பிரசனமாக இருக்கிறார் என்ற நம்பிக்கை எங்கும் பரவியிருந்தது. 831ல் திருவிருந்தின்போது அப்பமும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின் சரீரமாக மாறுகின்றது என்ற போதனை எழுத்தில் வெளியிடப்பட்டது. 1215ல் அது ரோமன் கத்தோலிக்க சபையின் அதிகாரபூர்வமான போதனையாக அறிவிக்கப்பட்டது.
பேர்கட்டரி (ஆத்மா திருத்தம் பெறும் இடம்)
ஆகஸ்தீன், தீயின் மூலமாக ஆத்துமாக்களின் பாவங்களுக்கு நிவாரணம் தேட முடியும் என்ற எண்ணத்தை வெளியிட்ட காலத்தில் இருந்தே ஆத்மா திருத்தம் அடைவதற்காக ஒரு இடம் இருக்கின்றது என்ற கொள்கை உறுதி பெறத் தொடங்கியது. இந்தப் போதனை கடவுளை அறியாதவர்கள் மத்தியி லேயே பெருமளவில் காணப்பட்டது. அதாவது பூமிக்கு கீழுள்ள ஓரிடத்தில் மனிதர்களின் ஆத்துமாக்கள் தங்கள் பாவ நிவாரணத்திற்காக கடுந்துன்பத்தை அனுபவிக்கிறது என்பதே பேர்கட்டரி எனப்படும் இந்தப் போதனை. இது முதலாம் கிரெகரியால் அங்கீகரிக்கப்பட்டு எங்கும் பரவ ஆரம்பித்தது. 1439ல் இது ரோமன் கத்தோலிக்க மதத்தின் அதிகாரபூர்வமான போதனையாக புளோரன்ஸ் கவுன்சிலால் அறிவிக்கப்பட்டது.
மரித்தவர்களுக்கும், புனிதர்களுக்குமான ஜெபம்
பெர்கட்டரி பற்றிய போதனைகள் உறுதிபெற்று பரவ ஆரம்பித்தபோது இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்யும் முறைகளும் உருவாயின. புனிதர் களையும், இரத்தசாட்சியாக இறந்தவர்களையும் புனிதமானவர்களாகக் கருதி அவர்களுக்கு ஆண்டுவிழாக் கொண்டாடும் முறைகளும் ஆரம்பித்தன. அத்தோடு காலம் போகப்போக புனிதர்களுக்காக ஜெபம் செய்யும் முறையும் வழக்கில் வந்தது. இது 787ல் நைசியாவின் இரண்டாம் கவுன்சிலால் கத்தோலிக்க சபையின் அதிகாரபூர்வமான போதனையாக அறிவிக்கப்பட்டது.
மரியாள் ஆராதனை
எபேசியக் கவுன்சில் 431ல் மரியாளை கடவுளின் தாயாக (Theotokos – Mother of God) அறிவித்த காலத்தில் இருந்தே அவளைக் கடவுளாகக் கருதும் வழக்கம் அதிகரித்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பும் இருந்து வந்தது. ஆறாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் மரியாளிடம் ஜெபம் செய்யும் முறையும், அவளுக்கு விழா எடுக்கும் வழக்கமும் (மார்ச் 25) வழமைக்கு வந்தது. மரியாளை கடவுளின் தாயாகக் கருதும் முறை கடவுளை அறியாத சமூகத்தில் இருந்து பெறப்பட்ட போதனையாகும்.
பாவமன்னிப்பு
சபை ஆரம்பமான காலத்தில் கொடிய பாவங்களை செய்தவர்கள் திருந்தும்போது சபைமுன் பாவ அறிக்கை செய்வது வழக்கில் இருந்தது. ஆனால் போப் முதலாம் லியோவின் காலத்தில் இருந்து தனிமையில் ஒரு குருவிடம் மட்டும் பாவ அறிக்கை செய்யும் வழக்கம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பாவ அறிக்கை செய்வது கட்டாயமானதாக இருக்கவில்லை. விருப்பப்பட்டவர் கள் மட்டுமே அதைச் செய்யும்படியாக எதிர்பார்க்கப்பட்டார்கள். ஆனால், 763ல் பிசப் மெட்சினால் அது கட்டாயபூர்வமானதாக அறிவிக்கப்பட்டது.
ஆராதனை ஸ்தலங்கள்
கிறிஸ்தவர்கள் மத்தியில் செல்வம் அதிகரிக்கத் தொடங்கியபோது ஆராதனை ஸ்தலங்களும் ஆடம்பரமான முறையில் அமையத் தொடங்கின. முதலாம் கிரெகரியின் காலத்தில் ரோமில் இருந்த ஏழுசபைகளும் ஆடம்பர மாகக் கட்டப்பட்டிருந்தன. இருநூறு வருடங்களுக்கு முன்பு ஜெரோமும், கிரிசொஸ்தோமும் இந்த ஆபத்தைக் குறித்து எச்சரித்திருந்தனர். ஜெரோம், பரிசுத்த வாழ்க்கை மட்டுமே மெய்யான ஆலயம் என்று கூறியிருந்தார். 814ல் சபைகளில் உருவச்சிலைகளை வைத்து வழிபடும்முறை பெருகிக் காணப் பட்டது.
ஆசாரித்துவம் (Priesthood)
சபைகளில் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருந்து ஆத்மீகக் காரியங்களைச் செய்யும் ஆசாரித்துவ முறை வழமைக்கு வந்தது. குருக்கள் இந்தச் சடங்குகளைச் செய்யும் ஆல்டர் (Altar) புனிதமானதாகக் கருதப்பட்டது. விசுவாசிகளின் ஆசாரித்துவம் என்ற வேதபோதனைக்கு சாவு மணி அடிக்கப்பட்டு கடவுளை அறியாத மக்கள் மத்தியில் காணப்ப்டட ஆசாரித்துவ முறை திருச்சபையில் ஆரம்பித்தது.
தூபம் காட்டுதல் (Incense)
ஆரம்பத்தில் ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்காக ஆரம்பித்த தூபம் காட்டும் வழக்கம் பின்பு ஆராதனையின் ஒரு பகுதியாக மாறியது. முதல் நான்கு நூற்றாண்டுகளில் இது காணப்படவில்லை.
இந்தவகையில் உலகில் இருந்த திருச்சபை படிப்படியாக இன்று நம்மத்தியில் இருக்கும் ரோமன் கத்தோலிக்க சபையாக உருமாறியது.