திருச்சபை வரலாறு

கிரெகரி 1 முதல் சார்ளிமன்வரை

From Greogry I to Charlemagne

இஸ்லாமின் வளர்ச்சி

இஸ்லாமின் வளர்ச்சி கிறிஸ்தவத்திற்கு பெரும் ஆபத்தாக அமைந்ததோடு உலக வரலாற்றையும் பாதித்தது. இஸ்லாமை நிறுவிய முகமது 570-ல் மெக்கா வில் பிறந்து சிறுவயதிலேயே பெற்றோரையும் இழந்தார். வாலிபனாக வளர் ந்த பின்பு முகமது வனாந்தரத்தில் தனிமையில் அதிகநேரம் தியானத்தில் ஈடுபட்டிருப்பது வழக்கம். அப்படி தியானத்தில் இருக்கும்போது தான் உணர் விழந்ததாகவும், அந்த நிலையில் சில ஒசைகளைக் கேட்டதாகவும் கூறியிருக் கிறார். அவர் யூதர்களையும், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்ட, தள்ளுபடி ஆகமங்களை நம்பிய சில வேதவிரோதிகளையும் சந்தித் திருக்கிறார். அவர்களுடைய சந்திப்பு கடவுள் ஒருவரே என்ற உண்மையை முகமதுவுக்கு புலப்படுத்தியபோதும், அவர்களுடைய வாழ்க்கை அவரைக் கவரவில்லை. இது முகமது கிறிஸ்தவராக வருவதற்கு தடையாக இருந் திருக்கலாம். அவர் அரேபியாவில் அன்றிருந்த பலதெய்வ வழிபாட்டைக் கூண்டோடு அழித்து அல்லாவின் பெயரில் ஒரே மதத்தை நிறுவ கங்கணம் கட்டினார். முகமது தன்னை அல்லாவின் தீர்க்கதரிசியாகக் கருதினார்.

தன்னுடைய செயல்களுக்கு மிகுந்த எதிர்ப்பு ஏற்பட்டதால் தன்னைப் பின்பற்றிய இருநூறுபேரோடு 622-ல் முகமது மதீனாவுக்கு ஓடிப்போய் வாழ வேண்டியிருந்தது. இந்த “ஹிஜ்ரா” அல்லது “ஹஜீரா”வே முகமதுவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லீம்கள் தங்களுடைய நாட்களை இதை வைத்தே கணிக்கிறார்கள். ஒன்பது வருடங்களுக்கு இப்படி யாக மதீனாவில் வாழ்ந்த பிறகு முகமது மறுபடியும் மெக்காவுக்கு வெற்றிகர மாகத் திரும்பினார். 632-ல் முகமது இறக்கும்போது தான் கங்கணம் கட்டி யிருந்ததுபோல் அரேபியா முழுவதையும் வெற்றி கண்டிருந்தார்.

தனக்கு நாற்பது வயதாகவிருந்தபோது முகமது முஸ்லீம்களின் மதிப்புக் குரிய நூலான “குரானை” எழுத ஆரம்பித்தார். அதில், தான் கேப்பிரியல் என்ற தேவ தூதனிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிப்படுத்தல்களை எழுதி வைத்திருப்பதாக முகமது கூறினார். முகமதுவின் குணாதிசயங்கள் முரண் பட்டவிதத்தில் அமைந்திருந்ததாக சொல்லப்படுகின்றது. சில வேளைகளில் அவர் நட்போடும், கருணையோடும் நடந்துகொள்வார். சிலவேளைகளில் கோபக்காரராகவும் தன்னுடைய எதிரிகளைக் கொடுமைப்படுத்துபவராகவும் இருந்திருக்கிறார். அதேநேரம், மிகவும் உறுதிமிக்கவராகவும், இருந்திருக்கிறார். 622-ல் மெக்காவில் இருந்து அவர் போன தொன்னூரு வருடங்களுக் குள் அவர் நிறுவிய இஸ்லாமிய மதம் இந்தியாவில் இருந்து அத்திலாந்திக் கடல்வரை பரவியிருந்தது. விரைவில் அது மத்திய ஆசியாவுக்குள்ளும், சீனாவுக்குள்ளும் நுழைந்தது. பின்பு தென்னாசியாவெங்கும் பரவி மலேசியா வரை தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.

இந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பினால் திருச்சபைக்கு ஏற்பட்ட தீங்கின் விஸ்தரிப்பை எண்ணிப் பார்க்கும்போது நமது மனம் தள்ளாட ஆரம்பிக்கிறது. அந்தியோகியா, எருசலேம், அலெக்சாந்திரியா ஆகிய பிரதேசங்களிலும் மற்றப் பிரதேசங்களிலும் பரவியிருந்த கிறிஸ்தவ சபையில் ஒரு சில மட்டுமே இந்த ஆக்கிரமிப்புக்குத் தப்பியிருந்தன. சிரியாவில் மட்டும் 10,000 சபைகள் அழிக்கப்பட்டோ அல்லது பள்ளிவாசல்களாகவோ மாறின. வட ஆபிரிக்கா வில் டர்டூலியன், சிப்பிரியன் ஆகஸ்தீன் ஆகிய முக்கிய கிறிஸ்தவ தலைவர் களை நினைவுறுத்திக் கொண்டிருந்த சபை முற்றாக அழிவைச் சந்தித்தது. இந்த முறையில் மத்தியதரைக்கடல் பிரதேசத்தின் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த சபைகள் சந்தித்த அழிவு வெளிப்படுத்தல் நடபடிகளில் 2:5-ல் காணப்படும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைத்தான் நினைவுபடுத்துகிறது. “நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திருந்தாத பட்சத்தில் உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.”

ஸ்பெயினைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் 732-ல் பிரான்ஸிற்குள் நுழைந்தது. ஐரோப்பா முழுவதுமே இஸ்லாமின் ஆக்கிரமிப்புக்கு உட்படும் பேராபத்து இருந்தது. இக்காலத்தில் பிரெங்கிஸ் (Frankish) அரசனுடைய அரண்மனை மேயராக இருந்த சார்ள்ஸ் மார்டல் (Charles Martel) கிறிஸ்தவ படைகளை ஒன்றுசேர்த்து எதிர்த்து வருகின்ற இஸ்லாமியப் படைகளை டுவர்ஸ் (Tours) என்ற இடத்தில் தாக்கி அவர்களுக்கு பெரும் அழிவை உண்டாக்கினார். இந்தப் போர் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மிக முக்கிய மான போர். இதன் காரணமாக ஐரோப்பாவில் தொடர்ந்தும் கிறிஸ்தவம் நிலை நிற்க முடிந்ததோடு இஸ்லாமியப் படைகள் தோல்வியைச் சந்தித்து திரும்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜெர்மானிய ஆதிவாசிகள் மத்தியில் கிறிஸ்வம்

திருச்சபை ஆதியில் உருவான பகுதிகளில் எல்லாம் அதற்குப் பெருந் தீங்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை ரைனைச் (Rhine) சுற்றி இருந்த பகுதிகளில் வாழ்ந்த ஜெர்மனிய ஆதிவாசிகளின் மத்தியில் சுவிசேஷ ஊழியம் நடைபெற ஆரம்பித்தது. இந்த ஊழியத்தில் பிரித்தானிய மிஷனரிகள் பெரும் பங்கு வகித்தனர். இதற்கு முன்னர் கொலம்பானாஸ் (Columbanus) என்பவர் செய்திருந்த பணியினால் உந்தப்பட்டு பிரித்தானியாவின் செல்டிக் சபையைச் சேர்ந்த துறவிகள் கூட்டம் கூட்டமாக ஐரோப்பாவுக்கு ஊழியம் செய்யப் போனார்கள். ஜெர்மானிய ஆதிவாசிகள் மத்தியில் ஊழியம் செய்த வர்களில் இரண்டு ஆங்கிலேயர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். முதலாவது யோர்க்கைச் (York) சேர்ந்த வில்லிபுரோட் (Willibroad). இவர் 690-ல் பிரிசியா வுக்கு (Frisia) மிஷனரியாகப் போனார். ஆரம்பத்தில் புறஜாதியினரால் இவருக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இவற்றிற்கெல்லாம் மத்தியில் இவர் அனேக ஆதிவாசிகளுக்கு சுவிசேஷத்தை அறிவித்து அவர்கள் மனம்மாறக் காரணமாக இருந்தார். இவரது பணிகளால் இவருடைய வாழ்நாளிலேயே பிரெங்கிஸ் பிரிசியா முழுவதும் கிறிஸ்தவத்தின் ஆளுகைக்குள் வந்தது. 695-ல் இவர் உட்ரெக்டின் (Utecht) பிசப்பாக நியமிக்கப்பட்டார்.

அடுத்த ஆங்கிலேய மிஷனரித் துறவி பொனிபேஸ் (Boniface). இவரை வின்பிரித் என்றும் அழைப்பார்கள். இவர் “ஜெர்மனியின் அப்போஸ்தலர்” என்றும் அழைக்கப்பட்டார். டெவன் என்ற இடத்தைச் சேர்ந்த இவர் மிகவும் திறமைவாய்ந்த நிர்வாகஸ்தராக இருந்ததோடு ரோமன் சபைக்குப் பயனுள்ளவராகவும் இருந்தார். துரிங்கியா, பவேரியா, ஹெஸ் ஆகிய இடங் களில் இவரது நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்தன. 732-ல் இவர் ஆர்ச் பிசப்பாக நியமிக்கப்பட்டார். போப்புக்கு மிகவும் அடிபணிந்து ஊழியம் செய்த இவர் 753-ல் வட பிரிசியாவில் இரத்த சாட்சியாக மரித்தார்.

8-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சாக்சனியில் (Saxony) சுதந்திர விரும்பிகளான அப்பிரதேச மக்கள் கத்திமுனையில் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. போப்பின் ஆதரவு பெற்றிருந்த சார்ளிமனுடைய (Charlemagne) பெயருக்கு இந்த சம்பவம் ஊறுவிளைவித்தது. சாக்சன்கள் அடிக்கடி அடிபணிய மறுத்து மதகுருமார்களைக் கொன்று, குருமடங்களையும் தீ வைத்து அழித்தனர். இவர்கள் கிறிஸ்தவத்தை எதிர்த்ததற்குக் காரணம் அது அவர்களுடைய எதிரிகளான பிராங்க்ஸின் மூலமாக அவர்கள் மீது திணிக் கப்பட்டதுதான். இவர்களுடைய செயல்களுக்குத் தண்டனையாக சார்ளி மன் ஒரே நாளில் 4500 சாக்சன்களுடைய தலையைத் துண்டித்தான். முப்பது வருடங்கள் போர் (772-803) தொடர்ந்து நடந்தபின் இறுதியில் சமாதானம் ஏற்பட்டது. அதன்பின் மிஷனரிகள் அனுப்பிவைக்கப்பட்டு எல்ப் (Elbe) வரையும் ஜெர்மனி பெயரளவில் கிறிஸ்தவ நாடாக இருந்தது. மிஷனரிகள் சார்ளிமனுடைய கத்தியைவிட கர்த்தரின் வார்த்தையைப் பயன்படுத்தி ஊழியம் செய்ததால் சாக்சன்கள் இறுதியில் கர்த்தருக்குள் வரமுடிந்தது.

பிரெங்கிஸ் ஆட்சியாளரும், ரோம சாம்ராஜ்யமும்

8-ம் நூற்றாண்டில் போப்புக்கும், பிரெங்கிஸ் அரசர்களுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் பொதுவாக உலகத்திலும், சபையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. ரோமுக்குள்ளும், லொம்பார்டுகளினாலும் தனக் கேற்பட்ட எதிர்ப்புகளை பெப்பின், சார்ளிமன் ஆகிய பிரெங்கிஸ் அரசர்களுடைய ஆதரவின் மூலம் போப்பால் எதிர்க்க முடிந்தது. அதே போல் போப்பின் ஆதரவு இந்த அரசர்களுக்கும் பெருமளவில் உதவியது. 800-ம் ஆண்டில் கிரிஸ்துமஸ் நாளன்று போப் திடீரென்று சார்ளிமனை மேற்கு ரோம சாம்ராஜ்யத்தின் அதிபதியாக பிரகடனம் செய்து மூடிசூட்டினார். இது மிகவும் கவனமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. பிற்காலத்தில் இச்செயல் பல நூற்றாண்டுகள்வரை ஐரோப்பாவையும் திருச்சபையையும் பெருமளவில் பாதித்தது. இந்தப் புது சாம்ராஜ்யம் ஏற்பட்டதனால் இனி அரசும், திருச்சபையும் ஒன்று என்ற எண்ணமும், கர்த்தரின் மகிமைக்காக வும், மக்களின் நன்மைகாகவும் இனி அரசனும், போப்பும் இணைந்து செயல் பட வேண்டும் என்ற எண்ணமும் உருவானது. சார்ளிமனுடைய காலத்தில் இந்தப் புதிய உறவு பிரச்சனை இல்லாமல் தொடர்ந்தது. இருந்தாலும் அரசன் தானே போப்புக்கும், சகலருக்கும் அரசன் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தான்.

சார்ளிமனை ரோம சாம்ராஜ்யப் பேரரசனாக மூடிசூட்டியதன் மூலம் போப் தானே அந்த அதிகாரத்தை அவனுக்கு அளித்தாக உரிமை பாராட்டி னார். ஆனால், அரசன் தான் ஏற்கனவே பேரரசனாக இருந்து வந்திருக் கிறேன் என்று போப்பின் கூற்றை மறுத்தான். இது பிற்காலத்தில் அரசுக்கும், போப்புக்குமிடையில் பெரும் பிரச்சனையை உருவாக்கியது. போப் அரச காரியங்களில் தொடர்ந்து தலையிட அரசன் திருச்சபை காரியங்களை நேரடியாக நடத்திவந்தான். சபை பிசப்புக்கள் எவ்வாறு வாழவேண்டும் பணிபுரிய வேண்டுமென்பதையெல்லாம் அரசனே தீர்மானித்தான்.

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக வணக்கம்

7-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழி படவோ, வழிபாட்டுக்குத் துணயாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. 8-ம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும் என்றெல்லாம் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே.

726-ல் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 2-ம் லியோ விக்கிரக ஆராதனை மோசமான நிலையை அடைந்துவிடாமல் இருக்க சபைகளில் படங்களையும், விக்கிரகங்களையும் மிக உயரமான இடங்களில் வைக்கும்படிக் கட்டளையிட்டான். வழிபாட்டுக்கு வருகிறவர்கள் அவற்றிற்கு முத்தம் கொடுப்பதைத் தடுப்பதற்காக அரசன் இதைச் செய்தான். ஆனால், கொன்ஸ் தாந்திநோபிலின் அதிகாரிகளும், கிரீஸ், சிரியாவில் இருந்தவர்களும் இதற் கெதிராக குரல் கொடுத்தனர். உடனே பெரும் சச்சரவு ஏற்பட்டதால் சபைகளில் இருந்து அத்தனை படங்களையும், விக்கிரகங்களையும் அகற்றும்படிப் பேரசன் கட்டளையிட்டான். இதனால் பெரும் போராட்டம் வெடித்தது. போப் 3-ம் கிரெகரி அரசனைக் கண்டித்து விக்கிர ஆராதனைக்கு மிக வும் ஆதரவாகப் பேசினார். இந்த சமய வழிபாட்டுப் பிரச்சனை வரலாற்றில் ஐக்கனோகிளாஸ்டிக் சச்சரவு (Iconoclastic) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை விக்கிரகங்கள் உடைத்தலைக் குறிக்கிறது.

754-ல் பேரரசன், 5-ம் கொன்ஸ்டன்டைன் ஒரு பெரும் சினட்டைக் கூட்டி விக்கிரக ஆராதனை வேதத்திற்கு முரணானது என்றும், அது புறஜாதியாரின் வழிபாட்டு முறையென்றும் தீர்மானம் நிறைவேற்றி அதைத் தடை செய்தான். இந்தக் காலப்பகுதியில் ஏற்கனவே விக்கிரக ஆராதனை சபையில் நுழைந்து, அவற்றிற்கு தூபாராதனை காட்டும் வழக்கமும் வழக்கில் இருந்தது. கொன்ஸ்டன்டைனுக்குப் பிறகு பதவியேற்ற 4-ம் லியோவின் விதவை 787-ல் இரண்டாம் நைசியா கவுன்சிலைக்கூட்டி, போப் 3-ம் லியோவின் கட்டளையை நீக்கினாள். அத்தோடு, இயேசு கிறிஸ்து, கன்னி மேரி, தேவ தூதர்கள், பரிசுத்தவான்கள் ஆகியோரின் சிலைகளை வைக்கவும் அனுமதி அளித்தாள். இரண்டாம் நைசியா கவுன்சில் விக்கிரகங்களுக்கு மரியாதையுடனான வழிபாடு அளிக்கும்படி சிபாரிசு செய்தது. இருந்தாலும் மேற்குப் பிராந்தியத்தில் அங்கிருந்த போப் விக்கிரக ஆராதனையை வலியுறுத்திய போதும், சார்ளிமனும், பிரெங்கிஸ் பிசப்புக்களும் 794-ல் பிராங்பட்டில் (Frankfort) கூடிய கவுன்சிலின் மூலம் விக்கிரக ஆராதனையை கடுமையாகக் கண்டித்து அதை எதிர்த்து வந்தனர். மேற்கின் பேரரசன் சார்ளிமன் தனது நூலில், “கர்த்தரை மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும். பரிசுத்தவான்களுக்கு மரியாதை மட்டுமே அளிக்க வேண்டும். விக்கிரகங்களை ஒரு போதும் வணங்கக் கூடாது”என்று எழுதி வைத்திருந்தான்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s