திருச்சபை வரலாறு

போலி ஆவணங்களும், ரோம சபைக் குழப்பங்களும்

சபை வரலாற்றின் அனைத்து அத்தியாயங்களிலும் வியப்பூட்டு வதாக இருப்பது ரோமின் போப்புகள் தயாரித்த போலி ஆவணங் களும், போலிக் கட்டளைகள் பற்றிய உண்மைகளும், கொன்ஸ் டன்டைன் அளித்ததாகக் கருதப்படும் நன்கொடையும். ரோமப் போப்புகள் தங்களுடைய பதவிக்காலத்தில் அனேக அதிகாரபூர்வமான கட்டளைகளையும், தீர்ப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். அவற்றை ஆவணங்களாக (Decretals) சபை காத்து வந்தது. 850-ம் ஆண்டளவில் முன்னைய போப்புகளின் கட்டளைகள் என்ற பெயரில் அனேக போலிக் கட்டளைகளும், ஆவணங்களும் பிராங்கிஸ் பிரிவைச் சேர்ந்தவர்களால் விநியோகிக்கப்பட்டன. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசிடோர் செவலே (Isidore Seville) என்ற பிரபலமான எழுத்தாளருக்கு இது சொந்தமானது என்ற தகவலும் உலவ ஆரம்பித்தது. ஆனால், போப்புக்களின் மெய்யான ஆவணங்கள் என்று கருதப்படுபவை சிரிசியசினுடைய (Siricius 384-398) காலத்தைச் சேர்ந்தவை. இந்தப் போலி ஆவணங்களில் அடங்கியிருந்த கட்டளைகளும், கடிதங்களும் முதலாம் நூற்றாண்டில் இருந்த போப்பால் எழுதப்பட்டவை என்ற அறிவிப்போடு விநியோகிக்கப்பட்டன. இந்தப் போலி ஆவணங்களைத் தயாரித்தவன் நல்ல படிப்பறிவுள்ளவனாகவும், இந்தக் காரியத்தில் கைதேர்ந்தவனாகவும் இருந்திருக்கிறான்.

இந்த ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டதற்கான காரணத்தை ஊகிப்பது இலகுவானது. நாட்டிலும், திருச்சபையிலும் போப்பின் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளுவதற்காகவும், வேதபோதனைகளுக்கெல்லாம் முரணான குருமார்களின் அமைப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்குமே இந்த போலி ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த மாதிரியான போலி ஆவணங்களையும், போலித் தகவல்களையும் வைத்தே ரோம சபை தனது இடத்தை வலிமையாக நிலைநாட்டிக் கொண்டு வளர்ந்தது. பதினைந்தாம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் காலத்தில் அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் இந்த ஆவணங்களெல்லாம் போலியானவை என்று உணர்ந்தபோதும் ரோமசபை இவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதை எந்தவிதத்திலும் நிறுத்திக் கொள்ளவில்லை.

கொன்ஸ்டன்டைனின் நன்கொடை

இன்னுமொரு போலி ஆவணத்தில் 324-ம் ஆண்டில் போப் சில்வஸ்டர் கொன்ஸ்டன்டைனுக்கு திருமுழுக்கு அளித்ததாகவும் அதற்கு அன்ப ளிப்பாக கொன்ஸ்டன்டைன் போப்புக்கு லெட்டரன் மாளிகையையும் (Lateran Palace), மேற்கு இத்தாலி நாடு உட்பட இராஜ்யத்தின் அத்தனைப் பகுதிகளையும், ரோமப் பேரரசின் ஏனைய பகுதிகளையும் அளித்ததாகத் தெரிவிக்கிறது. ரோம சபையால் பரப்பப்பட்ட இந்தப் பொய்ச் செய்தியை உணர்வதற்கு அதிக நேரமெடுக்காது. ஏனெனில், கொன்ஸ்டன்டைன் ஆரியன் பிசப்பான இசூபியஸ் நிக்கொமீடியாவிடமிருந்து (Eusebius Nicomedia) திருமுழுக்கு பெற்றாரே தவிர சில்வஸ்டரிடமிருந்தல்ல. அது வும் 337-லேயே திருமுழுக்கு பெற்றுக் கொண்டார். 324-ல் அல்ல. இந்தப் பொய்யை ரோம சபை பரப்பியதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. பெப் பின், சார்ளிமன் ஆகிய அரசர்கள் காலத்தில் வழங்கப்பட்ட நாடாளும் அதிகாரத்தை இன்னும் 500 ஆண்டுகளுக்கு முன் தள்ளிக் காட்டுவதற் காகவே இதை ரோம சபை செய்தது. கொன்ஸ்டன்டைனோ அல்லது அவருக்குப் பின்வந்த எந்தப் பேரரசரோ மேற்கில் நாடாளும் அதிகாரத்தை ரோமப் போப்புக்குக் கொடுக்கக் கனவிலும் நினைத்துப் பார்த்த தில்லை. இந்தப் பொய்க் கதை உருவாவதற்கு எந்தப் போப்பும் நேரடியாக உடந்தையாக இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அதை அவர்கள் நம்பி தங்களுக்கு சாதகமாகப் பயன்படு¢த்திக் கொண்டார்கள். காலம் செல்லச் செல்ல  கட்டுக்கடங்காத அதிகாரங்கள் தங்களுக்கிருப்ப தாக ரோம சபை சொல்லுவதற்கு இது வழிவகுத்தது. இந்த அதிகாரங் களுக்கு உரிமை கொண்டாடிய முதல் போப் முதலாம் நிக்கோலஸ் (Nicholas I, 858-867) ஆகும். நிக்கோலஸ் ஆணவத்தோடு, ‘போப் முடிவு செய்ததை அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்று கொக்கரித்தார். இதைச் செயல்படுத்தும்படியாக பேரரசன் 2ம் லோத்தேயர் (II Lothair) விவாகரத்து செய்த தன்னுடைய மனைவியை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உத்தரவிட்டார். அத்தோடு பேரரசனுடைய தீய நோக்கங்களுக்கு துணைபோன இரண்டு ஆர்ச் பிசப்புக்களையும் பதவி நீக்கம் செய்தார்.

ரோம சபையில் குழப்பம்

நிக்கோலஸுக்கு பின்பு வந்த இரு போப்புகளான ஹேடிரியனும் (Hadrian II), எட்டாம் யோவானும் (John VIII, 872-882) அரசியலில் தலை யிடும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும், பேரரசனை நீக்கும் அதிகார மும் கூட தங்களுக்கிருப்பதாகக் கூறிக்கொண்டனர். ஆனால், பேரரசனை நீக்கும் முயற்சி 882-ல் இரத்தக்களரியில் போய் முடிந்தது. அதற்குப் பிறகு போப்புகள் தொடர்ந்து அரசியலில் தேவையில்லாமல் தலையிட்ட தால் ரோம சபையில் குறிப்பிட்ட காலத்துக்கு பெருங்குழப்பம் நிலவியது. அநேக போப்புகள் இதனால் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். பேரரசன் சார்ளிமனுக்கு பின்பு அரச பதவி ஏற்றவர்களும் தகுதியற்றவர் களாக இருந்ததால் மரியாதை இழந்து போயினர். கடைசிப் பேரரசனாக இருந¢தவன் கரோலிங்கியன் குடும்பத்தில் (Carolingian house) இருந்து வந்த சார்ள்ஸ் (Charles the Fat) ஆகும். இவன் 887ல் பதவியை இழந்தான். சார்ளி மன் நிறுவிய பெரும் பேரரசு இந்த முறையில் ஒரு முடிவுக்கு வந்தது.

சரியான ஆட்சி இல்லாத இந்தக் காலத்தில் நோர்ஸ் கடற் கொள்ளையர்கள் (Norse pirates) ஐரோப்பாவை மறுபடியும் காட்டுமிராண்டித் தனத்திற்குள் தள்ளப் பார்த்தனர். அவர்கள் ஜெர்மனியின் கடற் பிரதேசங் களைத் தாக்கித் துறைமுகங்களை அழித்து ரைன் சமவெளிப் பிரதேசம் முழுவதையும் வாளுக்கும், தீக்கும் இரையாக்கினார்கள். அவர்கள் இறுதி யில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு நோர்மண்டியில் குடியேறினார்கள். அங்கிருந்து 1066-ல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார்கள். அதேவேளை இஸ்லாமியப் படை 9-ம் நூற்றாண்டில் ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பா விற்கு வந்து சிசிலியையும் தென் இத்தாலியையும் கைப்பற்றித் தாம் போன இடமெல்லாம் பெருமோசத்தை விளைவித்தது. அதேவேளை ஹங்கேரியன் மெகியர்கள் கிழக்குப் பிரதேசத்தில் இருந்து ஐரோப்பா வைப் பயமுறுத்தினர். இவையெல்லாம் அரசியலிலும், மக்களின் சமய வாழ்க்கையிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. இதைப் பற்றிக் குறிப்பிடும் சேவ் (Schaff) எனும் வரலாற்றாசிரியர் பின்வருமாறு கூறுகி றார்: ‘இக்காலத்தில் பெயர் கிறிஸ்தவ உலகில் அரசர்களும், அவருக்குக் கீழிருந்தவர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மக்களைத் துன்புறுத்தி தங்களுக்குப் பிடித்தவர்களை பிசப்புக்களாக நியமித்து அத னால் கிடைக்கும் பணத்தைச் சுருட்டிக் கொண்டனர். மெட்ரொபொலி ட்டன்கள் பிசப்புக்களைத் துன்புறுத்த, பிசப்புக்கள், மதகுருமார்களைத் துன்புறுத்த, அவர்கள் மக்களைத் துன்புறுத்தினர். கொள்ளைக்கூட்டங்கள் குழுக்களாக நாடு முழுவதும் நடமாடினார்கள்.’

சார்ள்ஸ் 887-ல் பதவி இழந்தபின்பு இத்தாலிய பெரிய மனிதர்கள் வலிமையுள்ளவர்களாக மாறி அதிகாரத்தைக் கைப்பற்ற தங்களுக்குள் போராடினர். இந்தப் போராட்டத்தில் சபை பெரிதும் பாதிப்புக்குள் ளாயிற்று. சேவ் (Schaff) சொல்லுகிறார், ‘இந்தக் காலத்தில் போப்புக்கள் பண ஆசை மிகுந்து, கொலை செய்யவும் தயங்காதவர்களாக சாத்தானின் குகைகளைப் போல சபையை நடத்தினார்கள். அடுத்தடுத்து வந்த போப் புக்களில் அநேகர் தங்களுடைய வாழ்க்கையை சிறையில் அனுபவித்தனர் அல்லது கொலை செய்யப்பட்டனர்.’

இந்தக் காலத்தில் ஒழுக்கத்தில் மோசமான மூன்று பெண்கள் போப்புக் களாக இருந்தனர். மூப்பரான தியோடோராவும் (Theodora) அவளுடைய இரண்டு பெண்களான மரோசியாவும் (Marozia), தியோடோராவுமே (Theodora) இவர்கள். இவர்கள் ஒழுக்கமற்ற முறையில் தங்களுக்குப் பிறந்த வர்களை போப்புக்களாக்கினார்கள். மிகவும் அழகாக இருந்த இந்தப் பெண்கள் தங்களுடைய அழகாலும், ஒழுக்கக் கேட்டாலும் போப்புக்க ளோடு போட்ட கூத்துக்களை வார்த்தையில் விவரிக்க முடியாது. பரோனியஸ் (Baronius), லுயிட்பிராந்து (Luitprand) போன்ற முக்கிய ரோமன் கத்தோலிக்க வரலாற்று அறிஞர்கள்கூட எந்தவிதமான ஆத்தி ரமோ, உளப் பாதிப்போ இல்லாமல் இவற்றை விவரித்து தங்களுடைய வரலாற்று நூல்களில் எழுதியிருக்கிறார்கள். அதே நேரம் பழங்கருத்தான ரோமப் பேரரசுக் கனவும் பலரை இன்னும் பிடித்திருந்தது. அதைப் புதுப்பிக்கும் சகல முயற்சிகளும் தோல்வியிலேயே போய் முடிந்தன.

பதினொராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ரோமப் போப்புப்பதவிக்கு எல்லாமே கேட்டிலேயே போய் முடிந்தது. 1044-1046 வரை தகுதியில்லாத மூன்று பேர் தங்களைப் போப்பாக அறிவித்துக் கொண்டிருந்தனர்.  ஒரு போப்பை நியமித்து ரோம சபையைக் காக்கும்படி பேரரசன் மூன்றாம் ஹென்றி கேட்டுக்கொள்ளப்பட்டான். இந்த நேரத்தில் போப்புக்களின் அதிகாரத்தைப் புதுப்பிக்கும் ஒரு குழு ரோமில் உருவானது. இக்குழுவில் முக்கிய பங்கு வகித்தவன் இளந்துறவியான ஹைடில்பிராண்டு (Hildebrand). இவன் போப்புக்களை நியமிக்கும் அதிகாரம் கார்டினல் களின் கையிலேயே இருக்க வேண்டும் என்று 1059-ல் ஏற்படுத்தப்பட்ட விதியை வலியுறுத்தி பேரரசன் அதில் தலையிட இடமளிக்காமல் செய் யப் பார்த்தான். ஹைடில்பிராண்டு வெகுவிரைவிலேயே சக்திமிக்க வனாக உயர்ந்து பல போப்புக்களை நியமிக்குமளவுக்கு செல்வாக்கு அடைந்தான். இவன் எதற்கும் சளைக்காதவனாகவும், கொடுமைக்கார னாகவும், தனது காரியங்களை சாதிக்கப் படைகளையும் பயன்படுத்தத் தவறாதவனாக இருந்தான்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி (800-1075)

ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அந்ஸ்கார் (Ansgar) டென் மார்க்கிற்கும், நோர்வேக்கும் சுவிசேஷத்தைக் கொண்டு சென்றான். ஆனால், பதினோராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிவரை ஸ்கண்டி நேவியா முழுவதும் கிறிஸ்தவம் பரவியிருக்கவில்லை. ராஸ்டிஸ் (Rastiz) 846-ல் மொரேவியாவில் தனக்குக் கீழிருந்த பகுதியின் மக்களனைவரும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளும்வரை அவர்களைக் கொன்று குவித் தான். பதினான்கு பொகீமிய இளவரசர்கள் 848-ல் திருமுழுக்கு பெற்றுக் கொண்டார்கள். ஆனால், ஜெர்மானியர்களிடமிருந்து கிறிஸ்தவம் அறி முகப்படுத்தப்பட்டதால் மக்கள் தொடர்ந்து அதனை தீவிரமாக எதிர்த் தார்கள். பல்கேரிய அரசனான போரிஸ் 860-ல், ராஸ்டிஸினுடைய வழி யைப் பின்பற்றி தன்நாட்டு மக்களைக் கொன்று குவித்தான். 968-ல் போலந்து பெயரளவில் கிறிஸ்தவ நாடானது. 973-ல் இருந்து மெகியர்கள் (Magyars) தம் நாட்டுக்கு பயணிகளாக வந்தவர்களின் ஊழியத்தால் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டார்கள். 988-ல் அரசன் விலாடிமீரின் வேண்டுகோளின்படி கிரேக்க ஓர்தடொக்ஸ் சபையால் அனுப்பி வைக்கப் பட்ட கொன்ஸ்தாந்திநோபிளின் மூலம் இரஷ்யர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார்கள். கிரேக்க ஓர்தடொக்ஸ் சபையின் ஊழியத்தின் ஒரு பெரும் வெற்றி இரஷ்யர்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டது. உலகின் ஏனைய பகுதிகள் இஸ்லாமியரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான போது இரஷ்யா அதற்குத் தப்பியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறு திப் பகுதியில் ஐரோப்பாவில் பின்லாந்து, லெப்லாந்து ஆகிய நாடுகளைத் தவிர ஏனைய பகுதிகளனைத்தும் பெயர் கிறிஸ்தவத்தின் ஆளுகைக்குள் வந்தன.

நாம் விவரித்துக் கொண்டிருப்பது இந்தவகையில் பரவிய பெயர்க் கிறிஸ்தவத்தைத்தான் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வது அவசியம். இயேசு போதித்து அவருடைய அப்போஸ்தலர்களால் நிறுவப்பட்ட மெய்க் கிறிஸ்தவம் இருந்த இடம் தெரியாமல் போகுமளவுக்கு வேத அடிப்படையிலில்லாமல் மனித சிந்தையில் உருவான பெயர் கிறிஸ்தவமே இந்த வகையில் வாளாலும், இரத்தத்தாலும் விஸ்தரித்தது. இதுவே ரோமன் கத்தோலிக்க மதமாக முழு உருவெடுத்தது.


மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s