இறையியல் தெரியாமல் இருப்பதும், இறையியல் கோட்பாடுகளில் தவறுவிடுவதுமே நடைமுறையில் நாம் தவறாக நடப்பதற்கும், போலிப் போதனைகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கின்றன. கிறிஸ்தவத் தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான நீதிமானாக்குதலைப் (Justification) பற்றிய தவறான விளக்கம் கொடுப்பதில் பலர் இன்று ஈடுபட் டிருக்கின்றனர். ரோமன் கத்தோலிக்க மதத்தோடு உறவாடுவதற்கு ஆசைப் பட்ட சில சுவிசேஷ இயக்கத்தார் சில வருடங்களுக்கு முன்பு கத்தோலிக்க மத விளக்கத்தோடு பொருந்திப்போகும் வகையில் நீதிமானாக்குதலுக்கு விளக்க மளிக்கமுற்பட்டனர். நீதிமானாக்குதலாகிய வேத போதனையில் கைவைப்பது கிறிஸ்தவ விசு¬வாசத்தை நிராகரிப்பதற்கு சமமானது.
நீதிமானாக்கும் விசுவாசமா? இது என்ன பெரிய வார்த்தையாக இருக்கிறதே என்று பயப்படுகிறீர்களா? இது நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சத்தியம் தான். இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தர் நமக்கு வழங்கும் நீதியை விளக்குகிறது இந்த சத்தியம். நம்மேலிருந்த தேவ கோபத்தை கிறிஸ்து தன்மேல் தாங்கி பாவிகளாகிய நாம் அடையப்போகிற தண்டனையிலிருந்து விடுதலை தர, அவரை நாம் நம்முடைய பாவங்களுக்காக வருந்தி மனந்திரும்பி விசுவாசிக் கின்றபோது அவருடைய கிருபாதாரப் பலியின் அடிப்படையில் கர்த்தர் நம்மை நீதிமான்களாக அறிக்கையிடுகிறார். இந்தவகையில் கர்த்தர் ஆதியி லிட்ட திட்டம் சிலுவையில் நிறைவேறி, நமக்காக மரித்த கிறிஸ்துவை நாம் இரட்சிப்புக்காக விசுவாசிக்கிறபோது நீதிமான்களாகிறோம் (ரோமர் 4:5).
இந்த நீதிமானாக்குதல் தத்துவத்தை ரோமன் கத்தோலிக்க மதம் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் ரோமன் கத்தோலிக்க மதச் சடங்குகளும், சபை சட்டதிட்டங்களும், ஞானஸ்நானமுமே மனிதனை நீதிமானாக்குகின்றன. கர்த்தர் நமக்கு கிறிஸ்து இயேசுவில் அளித்திருக்கும் விடுதலையையும், சமாதானத்தையும், நீதியையும் கொச்சைப்படுத்தி நீதிமா னாக்குதலுக்கு மனிதன் தன்னுடைய நீதியற்ற சொந்தக் கிரியைகளில் தங்கியிருக்கும்படிச் செய்கிறது ரோமன் கத்தோலிக்க மதம் (எபேசியர் 2:8-10).
விசுவாசத்தினால் மட்டும்
கத்தோலிக்க மதத்தின் பெருந்தவறைச் சுட்டிக்காட்டுவதற்காகவே மார்டின் லூதர் விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக முடியும் (Faith alone) என்று ஆணித்தரமாகப் பிரசங்கித்தார் (ரோமர் 1: 17, 18). “விசுவாசத்தினால் மட்டும்” என்ற பதங்களை வரலாற்று, இறையியல் அடிப்படையில் நாம் விளங்கிக்கொள்வது அவசியம். “விசுவாசம் மட்டும்” என்று கூறும்போது, கர்த்தர் நமக்கு ஈவாகத் தரும் விசுவாசத்தினாலன்றி வேறு எதனாலும் நாம் இரட்சிப்பை அடைய முடியாது (நீதிமான்களாக முடியாது) என்று விசுவாசிக் கிறோம். நம்மை நீதிமான்களாக்குவது கிறிஸ்துவின் இரத்தப்பலியே. நமக்குக் கிடைக்கின்ற நீதியும் கிறிஸ்துவின் நீதி. ஆனால், அதை நாம் அடையச் செய்வது கர்த்தர் தரும் விசுவாசம் மட்டுமே. ஆகவே, வேதம் விசுவாசத்தை ஒரு கருவி யாகப் பார்க்கிறது. (Faith is the instrument by which we receive our justification). இந்த விசுவாசம் நமது சொந்த முயற்சி அல்ல; கர்த்தர் தரும் ஈவு. விசுவாசத்தில் கிரியைக்கு ஒருபோதும் இடமில்லை. அதேவேளை இந்த விசுவாசம் உயிரற்றது மல்ல. பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலம் நமக்குக் கிடைக்கும் இந்த விசுவாசம் மெய்யான மனந்திரும்புதலையும், அன்பையும், நம்பிக்கையையும் எப்போதும் உள்ளடக்கியிருக்கும். கர்த்தருடைய நீதிமானாக்குதலாகிய கிரியை இந்த விசுவா சத்தை நம்மில் எதிர்பார்க்கிறது. விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாகிறோமே தவிர நீதிமானாக்கப்பட்டிருப்பதனால் நாம் விசுவாசிப்பதில்லை.
நீதிமானாக்கும் விசுவாசம்
தன்னில் எந்த நீதியையும் கொண்டிராத விசுவாசம் நம்மை எப்படி நீதிமானாக்குகிறது? என்ற கேள்வி எழலாம். விசுவாசம் அதற்கு கிறிஸ்துவின் கிரியைகளிலேயே தங்கியிருக்கிறது. மார்டின் லூதர் சொன்னதுபோல, அது வெறுங் கை மட்டுமே (an empty hand). விசுவாசம் இறையாண்மையுள்ள கிருபை யால் கர்த்தருடைய நீதிக்குப் பூரணமாகக் கீழ்ப்படிந்த கிறிஸ்துவில் தங்கியிருந்து அவர் தரும் இரட்சிப்பைப் பெற்று அதை நம்முடையதாக்குகிறது. நம்மை நீதிமான்களாக்க விசுவாசத்தில் எந்தத்தகுதியோ, நீதியோ இருக்கவில்லை. நீதிமான்கள் என்னும் தகுதியை பாவிகள் அடைவதற்கு விசுவாசம் தன்னில் எதையும் கொண்டிருக்கவில்லை. அது கிறிஸ்துவையும் அவருடைய சிலுவைப் பலன்களையும் அரவணைத்து அவற்றை நம்முடையதாக்குகின்றது. இந்தவகை யிலேயே விசுவாசம் நம்மை நீதிமான்களாக்குகிறது.
நீதிமான்களாக நாம் எண்ணப்படுகிறோம்
நீதிமானாக்குதல் பற்றிய இன்னுமொரு உண்மை, கர்த்தருடைய நீதிமன்றத்தில் நாம் நீதிமான்களாக கர்த்தரால் அறிவிக்கப்படுகிறோமே தவிர நாம் நீதிமான்களாக மாறிவிடுவதில்லை. கிறிஸ்து மட்டுமே பாவம் இல்லாத நீதிமான். நாம் பாவத்தில் பிறந்தவர்கள்; நம்மில் நீதி இல்லை. கிறிஸ்துவின் நீதி நமக்கு நீதியான வாழ்க்கை நடத்தக்கூடிய இரட்சிப்பைத் தந்திருக்கிறது. பரிசுத்தத்தோடு வாழக்கூடிய வாழ்க்கையை அளித்திருக்கிறது. கத்தோலிக்க மதம் போதிப்பதுபோல் நீதி ஒரு போதும் நம்முடைய சரீரத்தில் புகுத்தப்படுவதில்லை (Justification is never infused). நீதிமானாக்குதலினால் நமது சரீரம் எந்தவித பௌதீக மாறுதல்களையும் அடைவதில்லை. கிறிஸ்துவைப்போல நாம் பாவமற்றவர்களாகிவிடுவதில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாகக் கர்த்தரால் எண்ணப்படுகிறோம் (imputed), அறிவிக்கப்படுகிறோம் (declared) என்று மட்டுமே வேதம் விளக்குகிறது. இது நம்மைப் பற்றிய கர்த்தரின் சட்டரீதியான அறிவிப்பு (a legal, forensic declaration) மட்டுமே. கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கின்றபோது கர்த்தர் நம்மைத் தொடர்ந்து பாவிகளாகக் கருதாமல் நீதிமான்களாக எண்ணுகிறார் (ரோமர் 4:24).
நீதிமானாக்குதலின் காலம்
நீதிமானாக்குதலைப்பற்றிய இன்னுமொரு உண்மையையும் கவனிப்பது அவசியம். கர்த்தர் குறிப்பிட்ட மக்களைத் தனக்காகத் தெரிந்துகொண்டு, அவர் களைக் கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலம் பாவத்தில் இருந்து மீட்டு நீதியான வர்கள் என்று அறிவிக்கும் திட்டத்தை அனாதி காலத்தில் தீட்டினார். ஆனால், அந்தத் திட்டம் கிறிஸ்து கல்வாரியில் மரித்தபோதே வரலாற்றில் நிறைவேறியது. கிறிஸ்து தன் மரணத்தினால் சம்பாதித்த இரட்சிப்பை ஒரு மனிதன் தன் வாழ்க்கை யில் கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசிக்கின்றபோதே அடைகிறான். அந்த வேளையிலேயே அவன் நீதிமானாக கர்த்தரால் அறிவிக்கப்பட்டு அவருடைய குடும்பத்தில் ஒருவனாக சேர்த்துக்கொள்ளப்படுகிறான். தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரும் இந்த முறையிலேயே நடைமுறை வாழ்க்கையில் நீதிமான்களாகி றார்கள். இந்த சத்தியத்தை நாம் குழப்பமில்லாமல் விளங்கிக் கொள்வது அவசியம். இதனால் நீதிமானாக்குதல் மூன்று முறை (அனாதியிலும், வரலாற்றி லும், பின்பு நம்மிலும்) நிகழ்வதாகப் பொருள் கொள்ளக்கூடாது. கர்த்தரின் ஒரே திட்டம் வரலாற்றில் நிறைவேறி கிறிஸ்துவில் நாம் வைக்கும் விசுவாசத்தின் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன்பு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நீதிமானாக்குதலை நடைமுறையில் அனுபவிப்ப தில்லை (1689 அதிகாரம் 11:4). நமக்குரிய சொத்துப்பத்திரம் வங்கியில் இருப்பதால் சொத்தே நம்கையில் இருக்கிறது என்று அர்த்தமல்ல. சொத்து நமக்குத்தான் என்று தீர்மானிக்கப்பட்டு, அதற்கு நாம் உரிமையுடையவர்களாக இருந்தாலும் நடைமுறையில் அதைப் பெற்றுக்கொள்ளும்போதே நாம் அதை அனுபவிக்க முடியும். ஜோன் கில் (John Gill) என்ற பழம்பெரும் பாப்திஸ்து போதகர் நீதிமானாக்குதல் அனாதி காலத்திலேயே நடந்து முடிந்துபோனதொன்றாக (Eternal Justification) தவறாக விளங்கிக் கொண்டார். வேறு சிலர் நீதிமானாக்கு தல் கிறிஸ்து சிலுவையில் இறந்தபோது நடந்ததாகவும் அவ்வேளையிலேயே தெரிந்து கொண்டவர்கள் அதை அடைவதாகவும் விளக்கம் தருகிறார்கள். இதுவும் சரியான விளக்கம் அல்ல. இத்தவறுகளுக்குக் காரணம் இரட்சிப்பின் செயலாக்கத்தை இவர்கள் இறையியல் பூர்வமாக விளங்கிக் கொள்ளாததுதான்.
நீதிமானாக்கும் விசுவாசமும், இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கும்
நீதிமானாக்குதல், நாம் ஏற்கனவே விளக்கியதுபோல் அனாதி காலத்தில் கர்த்தரால் திட்டமிடப்பட்டு வரலாற்றில் கல்வாரியில் நிறைவேறி¢யபோதும் விசுவாசி “விசுவாசத்தின்” மூலமே நீதிமானாகக் கருதப்படுகிறான். அதற்கு முன் அவன் நீதிமானாக எண்ணப்படுவதில்லை. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் (Order of Salvation) உள்ள கிருபைகளான திட்ப உறுதியான அழைப்பு, மறுபிறப்பு, மனந்திரும்புதலும் விசுவாசமும், நீதிமானாக்குதல், மகவேட்பு, பரிசுத்தமாக்குதல், விடாமுயற்சி, இரட்சிப்பின் நிச்சயம் ஆகிய கிருபைகள் அடுத்தடுத்து வருவதாக வேதத்தில் வாசிக்கிறோம். இந்தப் படிமுறை ஒழுங்கை வேதம் பல பகுதிகளில் விளக்குகிறது (ரோமர் 8:30). நீதிமானாக்கும் விசுவாசம் (Justifying faith) இந்தப் படிமுறை ஒழுங்கில் காணப்படும் கிருபைகளில் இருந்து பிரிக்க முடியாதபடி அவற்றோடு இணைந்து காணப்படுகின்றது. இருந்தாலும் இவற்றில் “விசுவாசமாகிய” கிருபையைத்தவிர வேறு எதனாலும் நாம் நீதிமான் களாக கர்த்தரால் எண்ணப்படுவதில்லை. இரட்சிப்பில் மனந்திரும்புதலும், விசுவாசமும் எப்போதும் இணைந்து செயல்படுகின்றபோதும் விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக அறிக்கையிடப்படுகிறான் என்கிறது வேதம். திட்ப உறுதியான அழைப்பும், மறுபிறப்பும் விசுவாசத்துக்கு முன்பே ஒருவனில் ஏற்பட்டபோதும் விசுவாசம் மட்டுமே அவனை நீதிமானாக்குகிறது. ஒருவன் மறுபிறப்பினால் (Regeneration) நீதிமானாவதில்லை. தன்னுடைய கீழ்ப்படி வினால் நீதிமானாவதில்லை. ஆகவே, கர்த்தர் நியமித்துள்ள விசுவாசமாகிய கருவியைத்தவிர வேறு எந்தக் கிருபையாலும் அவர் ஒருவனை நீதிமானாகக் கருதுவதில்லை. நீதிமானாக்குதலில் கிருபையின் கருவியாகிய “விசுவாசம்” வகிக்கும் பங்கை வேதம் விளக்குகிறபடியே விளங்கிக் கொள்வதும், விசுவாசிக்க வேண்டியதும் அவசியம். இதை நாம் மாற்ற முயன்றாலோ அல்லது நிராகரிக்க முயன்றாலோ கிறிஸ்தவ சுவிசேஷத்தையே அழிக்கிறவர்களாகிவிடுவோம்.