கடந்த இதழில் பிரசங்கத்தின் இறுதியில் அந¢தப் பிரசங்கத்தின் அடிப்படையில் தரப்பட வேண்டிய “பயன்பாடு”களைப் பற்றி ஆராய்ந்தோம். இனிப் பிரசங்கத்தின் அறிமுகம் எப்படி அமைய வேண்டும் என்பதை ஆராய்வது அவசியம். பிரசங்கத்தின் எல்லா அம்சங்களுமே முக்கியமானவை. பிரசங்கத்தின் ஏனைய பகுதிகள் நன்றாய் அமைந்து அதன் அறிமுகம் சரிவர அமையாவிட்டால் அது பிரசங்கத்தைப் பாதித்துவிடும். பிரசங்கத்தின் அறிமுகம் வரப்போகும் செய்தியின் ஏனைய பகுதிகள் எப்படி அமையப் போகின்றன என்பதை விளக்குவதாக இருக்கும். ஆகவே, பிரசங்கம் பலனுள்ளதாக அமைய அதன் அறிமுகம் நன்றாக இருப்பது அவசியமாகின்றது. உதாரணத்திற்கு ஒரு நவீன ஓட்டலுக்கு சாப்பிடப் போனால் நாம் ஆர்டர் செய்யும் பிரதான உணவு வருவதற்கு முன்பாக சிற்றுணவாக சிலவற்றை சாப்பிடத் தருவார்கள் (Entree). அது வரப்போகும் உணவை உண்பதற்கு நம்மைத் தயார் செய்வதாக இருக்கும். அந்த ஆரம்பச் சிற்றுணவே பிரதான சாப்பாடு அல்ல. வரப்போகிற சாப்பாட்டை சாப்பிட நம்மைத் தயார் செய்வது அந்த ஆரம்ப சிற்றுணவுதான். எப்போதுமே அந்த ஆரம்பச் சிற்றுணவு சுவைபடத் தயாரிக்கப்பட்டிருக்கும¢. ஏனெனில், சாப்பிட வந்திருக்கிறவர்கள் அது பிடிக்காமல் எழுந்து போய்விடக் கூடா தல்லவா. அதைப்போலத்தான் பிரசங்கத்தின் அறிமுகமும் இருக்க வேண்டும். அறிமுகம் பிரசங்கம் கேட்கிறவர்களுடைய ஆர்வத்தை அதிகரிப்பதாய், ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாய் இருக்க வேண்டும். “பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுடைய மனதில் அது ஓர் நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டியிருப்பதால் அதில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அதைத் திருத்துவது இலகுவான காரியமல்ல” என்று சொல்லுகிறார் ஆர். எல் டெப்னி (Lectures on sacred rhetoric, R. L. Dabney) அத்தோடு அந்தச் சிற்றுணவு பேருண வாய் இருந்துவிடக்கூடாது. அவ்வாறு இருந்துவிட்டால் சாப்பிட வந்தவர் களுக்கு இனி வரப்போகும் உணவைச் சாப்பிட மனமும், வயிறும் இருக்காது. அதேபோல் அறிமுகத்தின் வேலை பிரசங்கத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமே. அதுவே பிரசங்கமாக நீண்டுவிடக்கூடாது. இந்த வகையில் அமைய வேண்டிய பிரசங்கத்தின் அறிமுகத்தை இனி விவரமாகப் பார்ப்போம்.
அறிமுகமில்லாத பிரசங்கம் தலையில்லாத சரீரம் போன்றது
முதலில் அறிமுகத்தின் அவசியத்தை உணர்வது அவசியம். ஒரு பிரசங்கம் எத்தனை அழகாக, ஆழமான சத்தியங்களோடு தயாரிக்கப்பட்டிருந்தாலும் கேட்கிறவர்களுக்கு அதைப் பற்றிய நல்ல அறிமுகத்தைக் கொடுக்காவிட் டால் அந்தப் பிரசங்கத்தின் பலன் குறைவாகவே இருக்கும். ஒரு சரீரத்திற்கு தலை எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு பிரசங்கத்திற்கு அறிமுகம் அவசி யம். தமிழ்ப் பிரசங்கிகளில் இரண்டு வகையினரை நாம் பார்க்கலாம். அருமையான அறிமுகத்தை மட்டும் கொடுத்துவிட்டு உப்புப்புளி இல்லாத பிரசங்கத்தை அளிப்பவர்கள் ஒரு வகையினர். கேட்பதற்கு பரவாயில்லை என்ற வகையில் பிரசங்கத்தைத் தயாரித்து அறிமுகமே இல்லாமல் பேசுகிற வர்கள் அடுத்தவகையினர். இரண்டு வகையுமே பிரயோஜனமில்லாத பிரசங்கங்கள். நல்ல அறிமுகம் இருந்து பிரசங்கம் பயனுள்ளதாயிராவிட் டால் அதனால் கேட்பவர்களுக்கு எந்த நன்மையுமில்லை. அதேவேளை அறிமுகமே இல்லாததொரு பிரசங்கத்தால் அதிக பயனுமிருக்காது.
பிரசங்கத்தை எந்தளவுக்கு கவனத்தோடு தயாரிக்கிறோமோ அந்தளவுக்கு அறிமுகத்தையும் கவனத்தோடு தயாரிக்க வேண்டும். அறிமுகத்தில் கவனம் செலுத்துகிற பிரசங்கிகள் இன்று மிகவும் குறைவு. புதிய ஏற்பாட்டில் காணப்படும் பிரசங்கங்களை கவனித்துப்பார்த்தால் அவை அருமையான அறிமுகங்களைக் கொண்டமைந்திருப்பதைப் பார்க்கலாம். இயேசு கிறிஸ்து வின் மலைப்பிரசங்கத்தைக் கவனித்துப் பாருங்கள். அங்கே, இயேசு யார் பாக்கியவான்கள் என்று ஆரம்பித்து பாக்கியவான்களுக்கு உள்ள தகைமைகளை விளக்கி கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் மத்தியில் ஆவலைக் கிளப்புகிறார். அது மலைப்பிரசங்கத்தில் தொடர்ந்து வரப்போகிற செய்திகளுக்கு அருமையான அறிமுகமாக இருக்கிறது. சாலமோனின் பிரசங்கம் இன்னுமொரு நல்ல உதாரணம். அதில் “மாயை, மாயை எல்லாம் மாயை” என்று தன்னுடைய பிரசங்கத்தை ஆரம்பிக்கிறான் சாலமோன். அதன்பின் தன்னுடைய செய்தியை விளக்குகிறான். அவனுடைய பிரசங்கத்தின் அறிமுகம் கேட்பவர்களுடைய கவனத்தை ஈர்க்கின்ற நல்ல அறிமுகமாக அமைந்திருக்கின்றது. பேதுரு பெந்தகொஸ்தே நாளில் அன்று நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து பிரமித்துப் போய் நின்ற மக்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிகளையே தன்னுடைய பிரசங்கத்திற்கு அறிமுகமாகக்கொண்டு யோவேலின் தீர்க்கதரிசனத்தை நினைவுறுத்தி பிரசங்கம் செய்திருப்பதை வாசிக்கிறோம் (அப்போஸ். 2:14-39). இயேசுவும், சாலமோனும், பேதுருவும் தங்களுடைய பிரசங்க அறிமுகத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
பவுல் அப்போஸ்தலனுடைய பிரசங்கங்களும் தகுந்த அறிமுகங்களோடு அமைந்திருப்பதை அப்போஸ்தல நடபடிகளில் வாசிக்கலாம். உதாரணத்திற்கு பவுல் அப்போஸ்தலர் 26ம் அதிகாரத்தில் அக்கிரிப்பா அரசனுக்கு முன்பாக பிரசங்கம் செய்தபோது பின்வருமாறு சொல்கிறார், “விஷேசமாய், நீர் யூதருடைய சகல முறைமைகளையும், தர்க்கங்களையும் அறிந்தவரான தால் அப்படி எண்ணுகிறேன். ஆகையால், நான் சொல்வதை பொறுமை யோடு கேட்கும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்று தன்னுடைய பேச்சை ஆரம்பிக்கிறார். அக்கிரிப்பா யூத முறைமைகளையும், தர்க்கங்களையும் நன்கு அறிந்தவன் என்பது பவுலுக்குத் தெரியும். அதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த உண்மையைச் சுட்டிக்காட்டி அக்கிரிப்பாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி பேச்சை ஆரம்பிக்கிறார் பவுல். இது அக்கிரிப்பா பவுல் சொல்லப்போவதைக் கேட்பதற்கு அவனைத் தயார்செய்தது. அதேபோல் அப்போஸ்தலர் 17:22ல் மார்ஸ் மேடையில் நின்று, “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவ பக்தியுள்ளவர்களென்று காண்கின் றேன்” என்று ஆரம்பித்து அத்தேனரின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பினார் பவுல். எந்தக் காரியத்தில் அத்தேனர் அதிக அக்கறை காட்டினார்களோ அதை வைத்தே அவர்களுடைய தவறை உணர்த்த பிரசங்கம் செய்தார் பவுல். இது ஒரு அருமையான அறிமுகம். இவ்வாறாக வேதத்தில் நாம் வாசிக்கின்ற பிரசங்கங்கள் அனைத்தும் நல்ல அறிமுகங்களோடு அமைந்திருப்பதைக் காணலாம்.
இங்கிலாந்து நாட்டு அரசியை நாம் பார்க்கப்போனால் நம்மை அவருக்கு முன் அழைத்துச் செல்கிறவர் செய்கிற முதல் வேலை நாம் யார் என்பதை அரசிக்கு சொல்லி நம்மை அறிமுகப்படுத்தி வைப்பதுதான். அந்த அறிமுகம் மிக மிக அவசியம். அது இல்லாமல் நாம் அரசி முன் நிற்கக்கூட முடியாது. அதுபோல்தான் பிரசங்கத்தின் அறிமுகமும். நான் இதுவரை சொன்னவை மூலம் அறிமுகம் பிரசங்கத்திற்கு எத்தனை அவசியம் என்பதை விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பிரசங்க அறிமுகத்தைத் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
(1) பிரசங்கி பிரசங்க அறிமுகத்தை எப்போதும் கடைசியாகத் தயாரிப்பது நல்லது
பிரசங்கத் தயாரிப்பு பற்றி எழுதியுள்ள ஒரு போதகர் பிரசங்கத்தைத் தயாரித்து முடித்தபின்பே அறிமுகத்தைத் தயாரிக்க வேண்டும் என்று ஆலோசனை தருகிறார். அது நல்ல ஆலோசனைதான். ஏனெனில், முழுப் பிரசங்கத்தையும் தயாரித்த பின்புதான் அதன் உள்ளடக்கம் நமக்குத் தெளி வாகப் புரியும். ஆகவே, பிரசங்கத்தை தயாரித்தபின்பு நாம் சொல்லப்போகிற விஷயத்தின் அடிப்படையில் அதற்குத் தகுந்த, பிரசங்கத்தைத் கேட் கிறவர்களை ஈர்க்கக்கூடிய அறிமுகத்தை நம்மால் தயாரிக்க முடியும். பிரசங் கத்தைக் கேட்கிறவர்களுக்கும் நமக்கும் இடையில் ஒரு நட்புப்பாலமாக அமையும் பிரசங்கத்தின் அறிமுகத்தை சரிவர தயாரிக்க அதைக் கடைசியில் தயாரிப்பதே உசிதமானது.
(2) அறிமுகம் எப்போதும் பிரசங்கத்தின் உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
அதாவது பிரசங்க உள்ளடக்கத்தோடு தொடர்பில்லாததாக அறிமுகம் அமைந்துவிடக்கூடாது. ஆத்துமாக்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டு மென்பதற்காக எதையாவது சொல்லி பிரசங்கத்தை அறிமுகப்படுத்தக் கூடாது. நாம் எடுத்துக்கொண்டுள்ள பிரசங்கப்பகுதி அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தை (Context) விளக்குவதாக அறிமுகம் இருக்கலாம். அதாவது, நாம் எடுத்துக் கொண்டிருக்கிற வசனங்கள் எத்தகைய சந்தர்ப்பத்தில், எந்த முறையில் அமைந்து காணப்படுகின்றன என்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதையும் அறிமுகமாகக் கொடுக்கலாம். அதன் மூலம் நாம் பிரசங்கத்தை கேட்கிறவர்கள் பிரசங்கப் பகுதியை ஆராய வழி நடத்திச் செல்ல முடியும். நாம் எடுத்துக் கொண்டுள்ள வேதப்பகுதி ஒரு வரலாற்றுப் பகுதியாக இருந்தால் அல்லது இயேசு கிறிஸ்துவின் பூவுலக வாழ்க்கை சம்பவமாக இருந்தால் அந்தப்பகுதி களின் வரலாற்று அல்லது வாழ்க்கை நிகழ்ச்சி நடந்த சந்தர்ப்பத்தை விளக்குவதை பிரசங்கத்தின் ஆரம்பமாகக் கொள்ளலாம். இந்தமுறையை ஒவ்வொரு பிரசங்கத்திலும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், இதுவரை குறிப்பிட்ட பகுதிகளைப் பொறுத்தவரை இம்முறை மிகவும் இயற்கையானதாகும். இந்த முறையில் பிரசங்கத்தை அறிமுகப்படுத்துவதால் கேட்பவர்களை நேரடியாக பிரசங்கப்பகுதிக்கு அழைத்துச்செல்கிறோம்.
(3) அறிமுகம் எப்பொழுதும் பிரசங்கத்தைக் கேட்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
டெலிவிஷனில் நாம் பார்க்கும் விளம்பரங்கள் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் இருக்காது. அந்த விளம்பரத்தைக் கொடுப்பவர்கள் தங்களுடைய முழுத்திறமையையும் காட்டி அந்த ஒரு சில நிமிடங்களுக்குள் தாங்கள் விற்கும் பொருளின் அருமை, பெருமைகளை விளக்க வேண்டும். அதைப் போலத் தான் பிரசங்கியின் அறிமுகம் இருக்க வேண்டும். பிரசங்கத்தைக் கேட்கிறவர் கள் ஆர்வத்தோடு அதைக் கேட்கும்படியாக சில நிமிடங்களுக்குள் அந்தப் பிரசங்கத்தை ஒரு விளம்பரதாரருக்கு இருக்க வேண்டிய திறமையுடன் அறிமுகப்படுத்த வேண்டும். பிரசங்கத்தைக் கேட்கிறவர்களின் கவனத்தை ஈர்த்து, தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே நல்ல அறிமுகத்துக்கு இலக்கணம்.
(4) அறிமுகம் எப்போதும் சுருக்கமாக இருக்க வேண்டும்
அறிமுகம் எப்பொழுதும் சுருக்கமாக இருக்க வேண்டும். நீண்ட அறிமுகங்கள் பிரசங்கம் கேட்பவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதைவிட்டு அவர்களை சலிப்படைய செய்துவிடும். அறிமுகத்தைக் கேட்டவுடன் பிரசங்கம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அது சுருக்கமாக அமைந்திருக்க வேண்டும்.
(5) அறிமுகத்தை எழுதி வைத்திருப்பது அவசியம்
பிரசங்கம் கேட்பவர்களுடைய கவனத்தைக் கவருமளவுக்கு சுருக்கமாக அறிமுகம் இருக்க வேண்டுமானால் அதைப் பலதடவைகள் எழுதி வாசித்துப் பார்த்து, சொல்லிப் பார்த்து நமக்கு திருப்திதரும் விதத்தில் அது அமைந்தவுடன் அதைத் தெளிவாக எழுதி வைத்திருப்பது அவசியம். “முதல் கோணி ணால் முற்றும் கோணும்” என்பார்கள். ஆகவே அறிமுகத்தைப் பலதடவைகள் வாசித்து நினைவில் வைத்திருப்பதற்கு வசதியாக எழுதி வைத்திருப்பது பயனளிக்கும்.
(6) அறிமுகம் பலவிதங்களில் அமையலாம்
அறிமுகத்தின் அடிப்படை நோக்கமே பிரசங்தத்தில் நாம் சொல்லப் போகிற விஷயங்களை அறிமுகப்படுத்துவதுதான். பிரசங்கப்பகுதியோடு பிரிக்க முடியாத தொடர்புடைய அறிமுகம் பலவிதங்களில் அமையலாம். அதாவது, எடுத்துக் கொண்ட பிரசங்கப்பகுதியின் சந்தர்ப்பத்தை விளக்குவ தாக ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் பிரசங்கப் பொருளோடு தொடர் புடைய நடைமுறை வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை விவரித்து ஆரம்பிக்க லாம். பிரசங்கப் பொருளோடு தொடர்புடைய பழமொழியொன்றை விளக்கி ஆரம்பிக்கலாம். அதிர்ச்சி தரக்கூடிய ஒரு கேள்வியைக் கேட்டு கேட்பவர் களின் சிந்தனையை நம்பக்கம் திருப்பி ஆரம்பிக்கலாம். இப்படி பலவகை களில் அறிமுகம் அமையலாம். எந்தவகையில் அமைந்தாலும் அது பிரசங்கப் பொருளோடு தொடர்புடையதாக இருப்பது அவசியம்.
(7) அறிமுகம் மன்னிப்புக் கேட்கிறவிதமாக இருக்கக்கூடாது
அதிகாரத்தோடு பிரசங்கிக்க வேண்டிய பிரசங்கி ஆத்துமாக்களுக்கு முன் தன்னுடைய செய்திக்காக ஒருபோதும் மன்னிப்புக்கேட்டு பிரசங்கத்தை ஆரம்பிக்கக்கூடாது. பிரசங்க அறிமுகம் எப்போதும் ஆணித்தரமாகவும், அதிகாரத்துடனும், உறுதியோடும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரசங்கத்தைக் கேட்கிறவர்கள் சலிப்படைந்து ஆர்வமற்று தங்கள் கவனத்தைப் பிரசங்கத்தில் காட்டமாட்டார்கள்.