பிரசங்கத்தில் “பயன்பாடுகள்”

பிரசங்கத்தில் “பயன்பாடுகள்”

– The Place of Applications in Biblical Preaching –

பிரசங்கிகள் பிரசங்கிக்க வேண்டிய செய்திக்கான ஒரு வரைபடத் தைத் தயாரித்து (Outline), அதன் அடிப்படையில் பிரசங்கத்திற்கான சரீரத்தை (body of the sermon), முறையாகத் தயாரிப்பது எப்படி என்று கடந்த இதழில் பார்த்தோம். இவற்றைச் செய்து முடித்ததோடு பிரசங்கத்தை முழுமையாகத் தயாரித்து விட்டதாக எண்ணிவிடக்கூடாது. பிரசங்கத்தின் சரீரத்தைத் தயாரித்து விட்டால் மட்டும் போதாது. அதற்குத் தலையும், நடப்பதற்கு கால்களும் தேவை. அதாவது பிரசங்கத்தின் பயன்பாட்டு அம்சங்களையும் (Application), முகவுரையையும் (Introduction) தயாரிக்க வேண்டும். இவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பதை இனிப்படிப்படியாகப் பார்ப்போம். முதலாவதாக, பிரசங்கத்தின் பயன்பாடுகளை (Sermon Applications) எப்படித் தயார் செய் வது என்பதை ஆராய்வோம். பெரும்பாலான பிரசங்கிகள் இந்தப் பயன் பாடுகளை முடிவுரைபோல பிரசங்கத்தின் இறுதியில் சுருக்கமாகக் கொடுத்து விடுவதுண்டு. அவர்கள் பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. நான் பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தனியாகப் பிரித்து விளக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். பிரசங்கத்தின் பயன்பாடுகளை வெறும் முடிவுரையாகக் கருதி அலட்சியப் படுத்திவிடாமல் அதைப் பிரசங்கத்தின் சரீரத்துக்கு அடுத்த முக்கிய பகுதி யாகக் கருதித் தயாரிக்க வேண்டியது அவசியம். ஒரு பிரசங்கத்தில் எத்தனை நல்ல போதனைகள் இருந்தாலும் அதில் பயன்பாடுகளும், அந்தப் பயன்பாடு கள் அழுத்தமானதாகவும், தெளிவானதாகவும், ஆத்துமாக்களின் இருதயத்தை அசைப்பனவாகவும் இருக்காவிட்டால் அவற்றால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

பிரசங்கத்தில் பயன்பாடுகள் (Applications)

பயன்பாடு பற்றிய சில தவறான எண்ணங்கள் நம்முடைய பிரசங்கங்கள் ஏனைய அவசியமான அனைத்து அம்சங் களையும் கொண்டிருந்து, அதன் பயன்பாடு என்ன என்பதை விளக்காமல் இருந்தால் அந்தப் பிரசங்கங்களால் கேட்பவர்களுக்கு எந்தப் பயனும் இருக் காது. அந்தப் பிரசங்கங்கள் நல்ல செய்தியைக் கொண்டிருக்கலாம். வேதப் பகுதிகளை முறையாக, தவறில்லாமல் விளக்குவனவாகவும், நல்ல உதாரணங் களையும், கொண்டிருப்பவனவாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றைக் கேட்கும் ஆத்துமாக்கள் அவற்றின் மூலம் தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அந்தப் பிரசங்கத்தின் மூலம் அவர்கள் கர்த்தரை எவ்வாறு மகிமைப்படு¢த்த வேண்டும் என்பதை விளக்கத் தவறு மானால் அவற்றால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. சில பிரசங்கிகள் வேதத்தை விளக்குவது மட்டும்தான் தங்களுடைய பணி, அவற்றை ஆத்து மாக்களின் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டியது பரிசுத்த ஆவியின் பணி என்ற தவறான எண்ணத்தில் ஆத்துமாக்கள் அந்தப்பிரசங்கத்தைக் கேட்டு செய்ய வேண்டியது என்ன என்பதை உறுதியாக விளக்கத் தவறி விடுகின்றனர். இப்படி நம்பிச் செயல்படும் சில பிரசங்கிகளை நானறிவேன்.

வேறு சில பிரசங்கிகள் ஆத்துமாக்களுக்கு எந்தப் பிரச்சனையும் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்திலும், அவர்கள் தங்களைப் பற்றித் தப்பாக எண்ணிவிடக்கூடாது என்ற எண்ணத்திலும் இனிப்பான பிரசங்கங்களையே எப்போதும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு, பிரசங்கத்தில் பயன்பாடுகள் பற்றிப் பேசுவதையே விட்டுவிடுகின்றனர். சில பிரசங்கிகள், ஒவ்வொரு வேதவசனத்தின் மூலமும் கிறிஸ்துவை ஆத்துமாக்கள் காணும்படிச் செய்வது மட்டுமே பிரசங்கியின் தொழில், ஆகவே ஒழுக்க ரீதியான எந்த விளக்கத்தையும் வேதவசனங்களில் இருந்து பிரசங்கிக்கக் கூடாது என்று கருதுகின்றனர். இவர்களுடைய தவறான இறையியல் கண்ணோட்டமே இவர்கள் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைகிறது. அதாவது, பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியி லும், வசனத்திலும் இருந்து கிறிஸ்துவைப்பற்றி மட்டுமே விளக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகிறார்கள். அத்தோடு, புதிய ஏற்பாடு அந்தக் கிறிஸ்துவின் வரலாற்றை விளக்குவதால் அவரைப்பற்றி மட்டுமே அதன் மூலம் விளக்க வேண்டும் என்பார்கள். ஆகவே, பழைய ஏற்பாட்டில் இருந்து ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கையைப்பற்றிப் பிரசங்கித்து நாம் எப்படி கர்த்தருக்கு விசுவாசமாக வாழ்வது என்று பிரசங்கிப்பது, இவர்களைப் பொறுத்தவரையில் தவறு. இத்தகைய தவறான இறையியல் பார்வையால் இவர்களுடைய பிரசங்கத்தில் பயன்பாடுகளுக்கு இடமிருக்காது. பிரசங்கத்தைக் கேட்கும் ஆத்துமாக்கள் கிறிஸ்துவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தாலும், தங்கள் வாழ்க்கையில் இறை வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை இம்முறையிலான பிரசங்கங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.

நாம் முக்கியமாக தமிழ்ப்பிரசங்கிகளுக்கு உதவுமுகமாக இந்த ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பதால் அவர்கள் மத்தியில் காணப்படும் குறைபாடுகளைக்குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது வீதம் தமிழ்ப்பிரசங்கிகள் வேத வசனங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பிரசங்கிக்கும் வழக்கத்தைக் கொண்டிராத தால் அவர்களுடைய பிரசங்கத்தில் பயன்பாடுகள் வேத வசனங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதில்லை. அவர்கள் பிரசங்கப் பயன்பாடுகள் என்ற பெயரில், ஆத்துமாக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதை பிரசங்கத்தில் திட்டித் தீர்த்துவிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிரசங்கத்தின் பயன்பாடுகள் அனைத்தும் பிரசங்கத்தில் இருந்துதான் பெறப்பட வேண்டுமே தவிர பிரசங்கி தான் ஆத்துமாக்கள் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பவற்றை பிரசங்கத்தைப் பயன்படுத்தி சொல்ல முயற்சிக்கக் கூடாது. உதாரணத்திற்கு, விசுவாசிகள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை பிரசங்கம் பொருளாகக் கொண்டிருக்குமானால் அதைவைத்துக் கொண்டு, ஆத்துமாக்கள் போதகர்களுக்கு எந்தவிதத்தில் முகங்கோணாமல் கீழ்ப்படிய வேண்டும், சபைக்கு எந்தவிதத்தில் விசுவாசமாக காணிக்கைகளை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று பட்டியல் போட்டு பிரசங்கிக்கக்கூடாது. இது பெரும்பாலும் இன்று வழக்கில் இருக்கும் ஒரு முறை. வேத வசனங்களை ஆராய்ந்து தயாரிப்பவர்கள் பிரசங்கப் பயன்பாடுகளை அந்த வசனத்தில் இருந்தே பெற்றுக்கொள்வார்கள். பிரசங்கப் பொருளுக்கும், பிரசங்கப் பயன் பாட்டிற்கும் இடையில் முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி இருந்தால் அது பிரசங்கமாகாது.

பிரசங்கப் பயன்பாடு குறித்து நம்மத்தியில் இருக்கும் இத்தகைய நடை முறைக்கு மத்தியில் நாம் பிரசங்கத்தில் காணப்பட வேண்டிய பயன்பாடுகளைப்பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. வெளிப்படையாகக் கூறப்போனால் பயன்பாடுகளைக் கொண்டிருக்காத பிரசங்கத்தை ஒருபோதும் பிரசங்கமாகவே கருத முடியாது. மேலே நாம் பார்த்தவிதத்தில் பிரசங்கிப்பவர்கள் பிரசங்கத்தைப் பற்றிய தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

பிரசங்கத்தில் பயன்பாடுகளின் அவசியம்

ஜெப்ரி தொமஸ் (Geoffrey Thomas) என்ற வேல்ஸ் தேசத்து பிரசங்கி, “பிரசங்கத்தின்மூலம் வேத சத்தியத்தின் பயன்பாடுகளை ஆத்துமாக்கள் அறிந்து கொள்ளும்படி செய்வதே வேதபூர்வமான, சீர்திருத்த விசுவாசப் பிரசங்கங்களின் இருதயமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் (John Angell James) எனும் பழம் போதகர், “வேத வசனங் களை முறையாக, தெளிவாக ஆராய்ந்து, அந்த ஆய்வின் அடிப்படையிலேயே நம்முடைய பிரசங்கங்கள் அனைத்தும் அமைய வேண்டும் என்றும், இருந்தபோதும் அத்தகைய முறையான, தெளிவான ஆய்விற்கும் மேலான அம்சங்களை பிரசங்கம் கொண்டிருக்க வேண்டும்” என்றும் கூறுகிறார். அதாவது, “அறிவைத் தருவதாக மட்டும் இல்லாமல் இதயத்தை அசைப்பதாகவும், மனச்சாட்சியை விளிக்க வைப்பதாகவும் நமது பிரசங்கம் இருக்க வேண்டும்” என்று ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் கூறுகிறார். போதகர் அல்பர்ட் என். மார்டின் (Albert N. Martin) இதை பின்வருமாறு அருமையாக விளக்குகிறார்: “பிரசங்கத்தின் பயன்பாடு என்பது நமது தலையிலிருந்து இதயத்தை நோக்கிச் செல்லும் பிரதான பாதையாக இருக்கிறது. வேதபூர்வ மான சத்தியத்தையும், அந்த சத்தியத்தின் அடிப்படையில் ஆத்துமாக்களில் ஏற்படும் நேர்மையான உணர்வுகளுக்கும் இடையில் பாலமாக அமைவது தான் பிரசங்கத்தின் பயன்பாடுகள். ஆத்துமாக்கள் வேத ஞானத்தை மட்டு மல்லாமல், இருதயத்துக்கு தேவையான உணவையும் பெற்றுக்கொள்ளச் செய்வதே முறையான பயன்பாடுகளைக் கொண்டுள்ள பிரசங்கமாக அமை கின்றது” என்கிறார்.

பிரசங்கத்தின் பயன்பாடுகளின் அவசியத்தை நாம் இத்தனை தூரம் வலியுறுத்தி சொல்வதற்குக் காரணம் அவை இல்லாமல் பிரசங்கம் பிரசங்கமாக இருக்க முடியாது என்பதற்காக மட்டுமல்ல, அவற்றைக் கொண்டிராத பிரசங்கங்களால் ஆத்துமாக்களுக்கு எந்தப்பயனுமில்லை என்பதால்தான். பயன்பாடுகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாமல் மேழெழுந்தவாரியாகப் பிரசங்கிக்கப்படும் பிரசங்கங்களைப் பற்றிக்கூறும் அல்பர்ட் என். மார்டின், “மேலெழுந்தவாரியாகப் பிரசங்கிக்கப்படும், எல்லோருக்கும் பொதுவான பிரசங்கங்களால் ஒருவருக்கும் எந்தப் பயனு மில்லை” என்கிறார். எல்லோருக்கும் பொதுவானவிதத்தில் சத்தியத்தைப் பிரசங்கித்து, ஆத்துமாக்கள் தாங்களாகவே அந்தப் போதனையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று சிந்தித்துப் பயன்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிடுவது தவறான செயல். இப்படிச் செய்யும்போது ஆத்துமாக்கள் அந்தப் போதனைகள் ஏனையோருக்குத்தான் பொருந்தும், தங்களுக்குப் பொருந்தாது என்ற விதத்தில்தான் சிந்திப்பார்கள். ஆத்துமாக்களுக்கு பாவத்தைப் பற்றிய வெறும் ஞானத்தை மட்டும் கொடுத்தால் போதாது. அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதற்கு பிரசங்கம் வழி வகுக்க வேண்டும். அதேபோல் கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் தங்களுக்குத்தான் என்பதில் அவர்கள் ஆறுதலடைய வேண்டும். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் தங்கள் பாவம் கழுவப்படும் என்ற நம்பிக்கையில் உறுதிபெற வேண்டும். இதைப் பிரசங்கம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். “கிறிஸ்துவின் ஆடுகளில் தாங்களும் ஒருவரா என்பதை, நியாயத்தீர்ப்பு நாளின் தீவிரத்தோடு ஆத்துமாக்கள் உணர்வுபூர்வமாக ஆராய்ந்து அறியும்படியாக சத்தியம் பிரசங்கத்தின் மூலம் இதயத்தை தாக்குவதாக இருக்க வேண்டும். இப்படிச் செய்யாத பிரசங்கங்கள் வேதபூர்வமான பிரசங்கங்களாக இருக்க முடியாது” என்கிறார் அல்பர்ட் என். மார்டின்.

பிரசங்கங்களில் பயன்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தும் ஆதாரங்கள்

பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிப்பதில் பிரசங்கிகள் ஏன் அதிகம் ஊக்கம் காட்ட வேண்டும் என்பதற்கு நிராகரிக்க முடியாத இரண்டு முக்கிய காரணங்களை முன்வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, அதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வேதம் வலியுறுத்துகிறது. 2 தீமோத்தேயு 3:16-4:2 ஐக் கவனியுங்கள்.

“வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட் டிருக்கின்றது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும், மரித்தவர் களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும், அவருடைய இராஜ்யத்தையும் சாட்சியாக வைத்து கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.”

இந்த வசனங்களில் பவுல் அப்போஸ்தலன் வேத வாக்கியங்கள் உபதேசத்துக்கு மட்டும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கின்றது என்று கூறவில்லை. பவுல் அத்தோடுவிட்டிருந்தால் நாம் பிரசங்கத்தின் பயன்பாடுகளில் அக்கறை காட்ட வேண்டிய அவசியமிருக்காது. ஆனால் பவுல், அந்த வேதவாக்கியங்களை நாம் எந்தவகையில் ஆத்துமாக்களின் முன் பிரசங்கிக்க வேண்டும் என்பதை இந்த வசனங்களின் மூலம் விளக்கத் தவறவில்லை. பிரசங்கிகளுடைய கடமை உபதேசத்தைக் கொடுப்பது மட்டுமல்ல என்பதை இந்த வசனங்களைக் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். உபதேசங்கள் ஆத்துமாக்களின் இருதயத்தை அசைத்து அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்துகொள்ள வேண்டிய முறையை ஆணித்தரமாக விளக்குவதாக இருக்க வேண்டும். அதனால்தான் பவுல்,  பிரசங்கத்தின் மூலம் பிரசங்கிகள் வேத உபதேசங்களை சரியாகப் போதித்து ஆத்துமாக்களைத் தேவையான வேளைகளில் கண்டனம் செய்தும், கடிந்தும், அவர்கள் நேர்மையுள்ளவர்களாகவும், நீதிக்குரிய செயல்களைச் செய்பவர்களாகவும் சீர்திருந்தும்படிப் பிரசங்கம் செய்ய வேண்டும் என்கிறார். ‘கடிந்து’, ‘கண்டனம் செய்து’ என்ற வார்த்தைகளை வெறுமனே திட்ட வேண்டும் என்ற அர்த்தத்தில் நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது. உபதேசங்களைப் பயன்படுத்தி ஆத்துமாக்கள் தங்களுடைய வாழ்க்கையில் தவறிழைத்துவிடாமல் இருக்கும்படி நீடிய சாந்தத்தோடு கண்டித்துப் பிரசங்கிப்பதைத்தான் பவுல் இங்கே குறிப்பிடுகிறார். பிரசங்கத்தில் பயன்பாடுகள் இருக்க வேண்டுமென்பதை இந்த வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன. பயன்பாடுகளைக் கொண்டிராத பிரசங்கத்தால் ஒருபோதும் ஆத்துமாக்களை நீதிக்குரிய செயல்களில் வழிநடத்த முடியாது.

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் பிரசங்கங்கள் பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களாக இருந்தன. ஏசாயாவின் பிரசங்கங்களை இங்கே உதாரணத்திற்குக் காட்டலாம். இஸ்ரவேலரின் தவறுகளை ஏசாயா வெளிப் படுத்தி, அவர்கள் எத்தகைய மனமாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிவிக்கத் தவறவில்லை. மல்கியா கர்த்தருடைய செய்தியை இஸ்ரவேலருக்கு பிரசங்கித்தபோது, “நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை தவறானது என்று மட்டும் பிரசங்கிக்கவில்லை. நீங்கள் கர்த்தருடைய பணத்தைத் திருடிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் வீடுகளை நல்ல முறையில் கட்டிக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தை உதாசீனப் படுத்துகிறீர்கள், கர்த்தருடைய ஆராதனையை அலட்சியப்படுத்தி உங்கள் சொந்த வழியில் அவரை ஆராதிக்கிறீர்கள்” என்று வரிசைக்கிரமமாக அவர் களுடைய தவறான வாழ்க்கைமுறையை வேதரீதியில் அவர்கள் முன் திறந்து வைத்ததை மல்கியாவில் வாசிக்கலாம். பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கம் (Applicatory preaching) எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.

யோவான் ஸ்நானன் ஏரோதைப் பார்த்து ஒழுக்கமற்ற வாழ்க்கையை வேதம் நிராகரிக்கிறது என்று மட்டும் கூறவில்லை. அத்தோடு நிறுத்தியிருந்தால் அது மெய்யான பிரசங்கமாக இருந்திராது. வெறும் உபதேசமாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால், யோவான் ஸ்நானன், நீ உன்னுடைய சகோதரனுடைய மனைவியோடு வைத்திருக்கும் தொடர்பை உடனடியாகத் துண்டித்துக்கொள்ள வேண்டுமென்று பிரசங்கித்தான் (மாற்கு 6:17-18). அதுவே பயன்பாடுள்ள பிரசங்கம். இயேசு கிறிஸ்துவின் எல்லாப் பிரசங்கங்களும் இதே முறையிலேயே அமைந்திருந்தன. அவர் வெறும் உபதேசத்தை மட்டும் கொடுக்கவில்லை. அவற்றின் பயன்பாடுகளை ஆணித்தரமாக நிலைநிறுத்தினார். உதாரணத்திற்கு, மத்தேயு 23ல் அவர் பரிசேயர்களைப் பார்த்து செய்த பிரசங்கத்தைக் கவனியுங்கள்.

இத்தகைய பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கங்களின் அவசியத்தை வெளிப்படையான போதனைகள் மூலமும், உதாரணங்களின் மூலமும் வேதம் வலியுறுத்திக் காட்டுவது மட்டுமல்ல சபை வரலாறும் அதை வலியுறுத்துகிறது. சபை வரலாற்றில் பெருமைமிக்க போதகர்களான தூய்மை வாதிகள், பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கங்களை அளிப்பதில் உதாரண புருஷர்களாக இருந்தனர். அவர்களுடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் 50, 60 பயன்பாடுகளைக் கொண்டவையாக இருந்தன. எடுத்துக் கொண்டுள்ள வேதவசனங்களைத் துல்லியமாக ஆராய்ந்து அதில் காணப்படும் பயன்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆத்துமாக்களுடைய இதயத்தைப் பிழியும் வகையில் பிரசங்கிப்பதில் அவர்கள் சமர்த்தர்கள். இந்த முறையிலான பிரசங்கங்களுக்கு ஜோன் ஓவன் (John Owen), ஜோன் பிளேவல் (John Flavel) , தொமஸ் புரூக்ஸ் (Thomas Brooks), ரிச்சட் சிப்ஸ் (Richard Sibbs) ஆகியோரின் பிரசங்கங்களை உதாரணத்திற்குக் காட்டலாம்.

ஆத்துமாவின் இதயத்தைத் தாக்காமல், அவர்களுடைய தலைக்குமேல் போகும்படிப் பிரசங்கிப்பதைத் தூய்மைவாதிகள் அறியாதிருந்தனர். அவர்க ளுடைய பிரசங்கங்கள் ஆத்துமாக்களின் சிந்தனையைத் தூண்டிவிட்டு இருதயத்தைத் தாக்குவனவாயிருந்தன. 17ம் நூற்றாண்டில் திருச்சபைகளின் நன்மைகருதி ஆராதனை முறைகள்பற்றி வெளியிடப்பட்ட வெஸ்ட் மின்ஸ்டர் ஆராதனைக் கோட்பாடுகளில் பிரசங்கத்தைப்பற்றி பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது.

“பிரசங்கி பொதுவான போதனைகளை அளிப்பதில் மட்டும் தங்கியிராமல், அந்தப் போதனைகளின் பயன்பாடுகளை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளும்படிப் பிரசங்கிக்க வேண்டும். இந்தவகையில் பயன் பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிப்பதற்கு பிரசங்கி அதிக ஞானத்தோடும், உற்சாகத்தோடும், தியானத்தோடும் கடுமையாக உழைப்பது அவசியம். பிரசங்கத்தின் அத்தகைய பயன்பாடுகள் பிரசங் கங்களைக் கேட்கும் ஆத்துமாக்களுக்கு இனிப்பானவையாக இல்லாம லிருக்கலாம். ஆனால், கர்த்தரின் வார்த்தை அவர்களில் வல்லமையாகக் கிரியைசெய்து , அவர்களுடைய இருதயத்தை சோதிப்பதோடு, அவிசுவாசிகள் யாராவது இருந்தால் அவர்களுடைய இருதயங் களிலுள்ள இரகசியங்களையும் வெளிப்படுத்தி கர்த்தருக்கு அவர்கள் மகிமைதரும்படியாகப் பிரசங்கியார் பிரசங்கம் செய்ய வேண்டும்.”

தூய்மைவாதிகளைப்போலவே, 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளும் பிரசங்கங்களில் பயன்பாடுகள் நிறைந்திருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள். ஜோன் கல்வின் தனது பிரசங்கங்களைத் தயாரிக்கும்போது அவற்றின் பயன்பாடுகளைத் தயாரிப்பதில் அதிகமாக நேரத்தை செலவிட்டதாகச் சொல்லுவார்கள். பழைய ஏற்பாட்டு நூலான யோபுவில் அவர் செய்துள்ள பிரசங்கங்கள் இதற்கு நல்ல உதாரணம். இதேவகையில் தான் ஜொனத்தன் எட்வர்ட்சும் பிரசங்கித்தார். தலைசிறந்த பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜனுடைய (Charles Spurgeon) பிரசங்கங்களை ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் பயன்பாடுகள் ஆற்றுநீரைப்போலத் துள்ளியோடுவதையும், நெஞ்சைத் தொடுபவையாகவும் இருப்பதைக் கவனிக்கலாம். அதேநேரம் பிசப் ஜே. சி. ரைலினுடைய (Bishop J. C. Ryle) பிரசங்கங்களைக் குறிப்பிடாமலும் இருக்க முடியாது. ரைலின் பிரசங்கங்கள் தூய்மைவாதிகள், சீர்திருத்தவாதிகளின் பிரசங்கங்களைப் போலவே பயன்பாடுகள் நிறைந்து காணப்படும்.

பிரசங்க ஊழியத்தில் வித்தர்களாக இருந்து, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட தூய்மைவாதிகளுடையதும், சீர்திருத்தவாதிகளினுடையதும், ஸ்பர்ஜனுடைய தும், ரைலினுடையதுமான பிரசங்கங்களை நாம் வாசித்துப் பார்த்தால் அவர்கள் எந்தவிதத்தில் தங்கள் பிரசங்கங்களில் பயன்பாடுகளைப் பயன் படுத்தியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அத்தகைய படிப்பு பிரசங்க ஊழியத்தில் பிரசங்கிகள் நல்ல தேர்ச்சிபெறத் துணை செய்யும்.

பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க நமக்கிருக்க வேண்டிய தகுதிகள்

போதகனின் பக்திவிருத்தி பொதுவான உபதேசத்தை மட்டும் அளிக்காமல் ஆத்துமாக்கள் தங்களு டைய வாழ்க்கையை சோதித்துத் திருத்திக்கொள்ள வேண்டியவிதத்தில் பயன்பாடுகள் நிறைந்த பிரசங்கங்களை அளிக்கவேண்டுமானால் பிரசங்கியினுடைய வாழ்க்கை அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கர்த்தரோடு தனக்கிருக்கும் உறவில் வளர்ந்து, பக்திவிருத்தியில் சிறந்திருக்கும் போதகனாலேயே பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க முடியும். தன்னுடைய வாழ்க்கையில் பல குறைபாடுகளைக் கொண்டு, அவற்றைத் திருத்திக் கொள்ளாமலும், பக்தியில் வளராமலும் இருக்கும் போதகனால் ஆத்துமாக்கள் பயனடைகிறமுறையில் சுத்தமான இருதயத்தோடு பயன்பாடுகளைத் தயாரித்துப் பிரசங்கிக்க முடியாது. பண ஆசையில் மனம் நிலைதடுமாறிக் கொண்டிருந்தாலோ, ஊழியத்தை வெறும் வர்த்தகமாக நடத்திக் கொண்டிருந்தாலோ, இருதயத்தில் ஆத்துமாக்களின் மேல் மெய்யான அன்பு இல்லாமலிருந்தாலோ ஒருவரால் ஆத்துமாக் களுடைய வாழ்க்கையில் நேர்மையான அக்கறைவைத்து உழைத்துப் பிரசங்கிக்க முடியாது.

சபை ஆத்துமாக்களுடன் அந்நியோன்னியம்

அடுத்ததாக, பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க வேண்டுமானால் ஒரு போதகனுக்கு ஆத்துமாக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். ஆத்துமாக்களின் ஆத்மீகத் தேவைகளையும் ஏனைய தேவைகளையும் அறிந்திருந்தால்தான் அவர்களுக்குப் பயன்படும் முறையில் பிரசங்கப் பயன்பாடுகளைத் தயாரிக்க முடியும். அதுமட்டு மல்லாமல் அவற்றை நேர்மையுடனும், நெஞ்சுரத்துடனும், மனித பயமில்லாமலும் பிரசங்கிக்க வேண்டுமானால் ஆத்துமாக்களுக்கு பிரசங்கி யில் அன்பும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். சட்டசபை எம். பியைப் போல ஆத்துமாக்களைத் தூரத்தில் தள்ளிவைத்துப் பழகும் பிரசங்கிகளுக¢கு ஆத்துமாக்களில் எந்த அன்பும் இருக்காது; அவர்களுடைய தேவைகளில் அக்கறையும் இருக்காது. ஆத்துமாக்களோடு வர்த்தக உறவுமுறை (professional relationship) மட்டும் வைத்திருப்பவர்களுக்கு பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களைக் கனவிலும் கொடுக்க முடியாது.

அறிவு விருத்தி

பயன்பாடுகள் நிறைந்த நல்ல பிரசங்கங்களை அளிக்க வேண்டுமானால் பிரசங்கி தன்னுடைய ஞானத்தைப் பெருக்கிக்கொள்ள நல்ல நூல்களை வாசிக்க வேண்டும். நாம் ஏற்கனவே கூறியதுபோல் சீர்திருத்தவாதிகளினதும், தூய்மைவாதிகளினதும் பிரசங்கங்களை வாசிப்பதும் அவசியம். ஜோன் பனியனின் ‘மோட்ச பிரயாணத்தை’ பல தடவை வாசிப்பது அவசியம். பனியனின் எல்லா நூல்களுமே சிறந்தவை. வேதம் மட்டும் போதும், படிப்பு அவசியமில்லை என்பவர்களால் அன்றாடக் கஞ்சிக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு மனநிம்மதிக்காக ஆராதனைக்கு வருபவர்களுக்கும், திருமண வாழ்க்கையில் இடர்களைச் சந்தித்து அதற்கு வழிதேடி மனச்சமா தானத்திற்காக பிரசங்கம் கேட்க வருபவர்களுக்கும், வேலைத்தளத்தில் பிரச்சனை மிகுதியால் நிம்மதியில்லாமலிருப்பவர்களுக்கும் அவரவர் தேவைகளுக்குத் தகுந்தபடி ஞானத்தோடு வேதத்திலிருந்து தகுந்த விளக்கங்களையும், நடைமுறைக்குப் பயன்படும் ஆலோசனைகளையும் கொடுத்து, அவர்களுடைய மனதைத்தொட்டு, அசைத்து, திருத்தி, ஊக்கப்படுத்திப் பிரசங்கிப்பதென்றால் நல்ல நூல்களை வாசிக்காமலும், நம்மைவிட ஆசீர்வதிக்கப்பட்ட பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கேட்டுப் பயனடையாமலும் அதைச் செய்ய முடியுமா?

பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிக்க நாமெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

1. பிரசங்கிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிற வேதவசனங்களை சரியாக ஆராய்ந்து, அவை தரும் போதனை என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொண்ட பின்பே அப்பகுதியின் பயன்பாடுகளை ஆராய்ந்து தயாரிக்க வேண்டும். பயன்பாடுகள் பிரசங்கப்பகுதியில் இருந்து வரவேண்டி யிருப்பதால் இது அவசியம். பிரசங்கப் பகுதியை ஆராயாமல் இதுதான் இந்தப்பகுதியின் பயன்பாடு என்று நாமே ஏதோ ஒன்றை ஆலோசனையாக சொல்லுவது பெருந்தவறு. இதை இன்று அனேகர் செய்து வருகிறார்கள்.

2. பயன்பாடுகள் எப்போதும் நாம் பிரசங்கிக்க எடுத்துக் கொண்டிருக்கும் வேதப்பகுதியில் இருந்து வெளிப்படையாகப் புறப்படுபவையாக இருக்க வேண்டும். அதாவது, பிரசங்கப்பகுதியில் பயன்பாடுகளை ஆள்விட்டுத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. பயன்பாடுகளுக்கும¢ பிரசங்கப் பகுதிக்கும் சந்பந்தமில்லாதிருக்குமானால் பிரசங்கத்தயாரிப்பில் நாம் எங்கோ தவறுவிட்டுவிட்டோம் என்றுதான் அர்த்தம்.

3. பயன்பாடுகளை நாம் பிரசங்கத்தில் விளக்கும் சத்தியத்தின் ஒவ்வொரு தலைப்பின் கீழுமோ அல்லது பிரசங்கத்தின் இறுதியில் வரிசைக்கிரம மாகவோ கொடுக்கலாம். சில பிரசங்கங்களில் ஒவ்வொரு பகுதியையும் விளக்குகிற வேளையிலேயே அதற்குரிய பயன்பாட்டை உடனடியாக வலியுறுத்த நேரிடும். வேறு சில பிரசங்கங்களில் பயன்பாடுகளை வரிசையாக பிரசங்கத்தின் இறுதியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வலியுறுத்தி விளக்கவேண்டிவரும். சில வேளைகளில் பிரசங்கத்தின் ஆரம்பத்திலேயே இருதயத்தை அசைக்கக் கூடிய ஒரு கேள்வியாக அமைந்த ஒரு பயன்பாட்டோடு பிரசங்கம் ஆரம்பமாகலாம். பிரசங்கங்களுக்குத் தகுந்த முறையில் பயன்பாடுகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

4. பிரசங்கத்தின் பயன்பாடுகள் கேள்விகளாக அமைந்திருந்தால் அவை நாம் வலியுறுத்தும் பயன்பாட்டைக் குறித்து, கேட்பவர்களை சிந்திக்க வைப்ப தாக இருக்கும். உதாரணமாக, ஜெபத்தை வலியுறுத்தும்போது “நீங்கள் அன்றாடம் ஜெபிக்கிறீர்களா?” என்று கேள்வியாக இதயத்தைத் துளைப்பது போல் கேட்பது அவசியம். பயன்பாடுகளாக பிரசங்கி கொடுக்கும் ஆலோசனைகள் கேள்விகளையும் உள்ளடக்கி இருந்தால் அந்த ஆலோசனை கள் அழுத்தமாக இருதயத்தில் பதியும்.

5. பயன்பாடுகள் மேலெழுந்தவாரியாகவும், பொதுவானவையாகவும் இருக்கக்கூடாது. பயன்பாடுகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆத்துமா இது பக்கத்திலிருப்பவருக்குத்தான் பொருந்தும் என்று நினைப்பதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. அது எனக்கு அவசியமானது என்று அந்த ஆத்துமா நினைக்கும்படியாக பயன்பாடுகள் இருக்கவேண்டும். ஆகவே, பிரசங்கி பயன்பாடுகளை ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் பொருந்துகிறவிதத்தில் ஆணித்தரமாகவும், அழுத்தத்தோடும் பிரசங்கத்தில் விளக்க வேண்டும்.

6. பயன்பாடுகளை பிரசங்கத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தையும், (முகவுரையைத் தவிர) தயாரித்த பின்னரே கவனத்தோடு தயாரிக்க வேண்டும்.

7. பயன்பாடுகள் சுருக்கமானதாகவும், ஆத்துமாக்களின் இருதயத்தில் ஊன்றிப் பதியக்கூடியவனவாகவும் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக பயன்பாடுகள் நீண்டுவிடக்கூடாது. ஆகவேதான், அவற்றைத் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பயன்பாடுகளைத் தயாரிப்பது அவசியம்.

பிரசங்கப் பயன்பாட்டிற்கு ஓர் உதாரணம்

பிரசங்கத்தின் பயன்பாடுகள் எந்தவகையில் பிரசங்க வசனங்களில் இருந்து வெளிப்பட்டு தெளிவாக அமையவேண்டும் என்பதற்கு உதாரணமாக லூக்கா 15:1-7 வரையுள்ள வசனங்களைப் பயன்படுத்தி நான் கீழே தந்துள்ள பிரசங்கக் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பிரசங்கப் பொருள்: லூக்கா 15:1-7, காணாமல்போன ஆடு

அறிமுகம்: இது ஒரு உவமை. இந்த உவமையின் எல்லாப்பகுதிகளுக்கும் நாம் விளக்கங் கொடுக்கக்கூடாது. இந்த உவமை காணாமற்போன தன்னுடைய ஆட்டை விடாப்பிடியாகத் தெடிக்கண்டுபிடித்த ஒரு மேய்ப்பன் அதைத் தன் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறான் என்பதாகும். அதேவிதமாக கர்த்தர் இழந்துபோன தன்னுடைய ஆடாகிய பாவியைத் தேடிக்கண்டுபிடித்து மகிழ்கிறார் என்பதே இந்த உவமையின் போதனையாகும். இந்த உவமையை இயேசு ஏன் சொன்னார் என்பதை உவமையின் ஆரம்ப வசனங்கள் விளக்குகின்றன. பாவிகளைக்குறித்த பரிசேயர்களின் தீங்கான எண்ணத்தை திருத்துமுகமாகவே இயேசு இந்த உவமையைச் சொன்னார்.

பிரசங்கத்தின் சரீரம்:

1. நீதிமான்களென்று நம்பிய நீதியற்றவர்கள் (2, 7)

— சுயநீதியும், தற்பெருமையும் கொண்ட பரிசேயர்கள்

(உவமையில் கூறப்படும் தொன்னூற்றொன்பது பேரும் விசுவாசிகளல்ல, அவர்கள் பரிசேயர்களைப் போன்றவர்கள்.)

2. காணாமல்போய் மனந்திரும்பிய பாவி

— காணாமல் போனான் (பாவத்தால் கர்த்தரை அறியாது இருக்கும் நிலை) மனந்திரும்புகிறான் (பாவமன்னிப்பும், விசுவாசமும்)

3. இழந்த ஆட்டைத் தேடும் மேய்ப்பன்

– தேடுகின்ற கர்த்தர் (சுவிசேஷ அழைப்பின் மூலம்)

– ஆட்டைக் கண்டுபிடிக்கும் கர்த்தர் (ஆவியின் கிரியை)

– ஆடு திரும்பியதால் பரலோகத்தில் ஆனந்தம் –

பிரசங்கத்தின் பயன்பாடுகள்:

1. போலித்தனமான பரிசேய வாழ்க்கை வாழ்கிறவர்கள் நீதிமான்களல்ல – அனேகர் இன்று சபைகளில் பரிசேயர்கள் போல் நீதியற்றவர்களாயிருந்தும் நீதிமான்கள் என்ற நம்பிக்கையில் தவறான வாழ்க்கையை வாழ்ந்து கொண் டிருக்கலாம். கர்த்தரோடு தங்களுக்கு ஐக்கியம் இருந்ததாக பரிசேயர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களில் இரட்சிக்கும் விசுவாசம் இருக்கவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் வெறும் உயிரற்ற கிரியைகள் மட்டுமிருந்து இயேசு கிறிஸ்துமேல் எந்த அன்பும், கர்த்தரை அறியாதவர்கள் மீது சுவிசேஷ அனுதாபமும் இல்லாதிருக்குமானால் நீங்கள் நீதிமான்களாக இருக்க முடியாது. விசுவாசத்துக்கும் உங்களுக்கும் வெகுதூரம். போலித்தனமான பரிசேய வாழ்க்கையை இன்றே தூக்கி எறிந்துவிட்டு மனந்திரும்பி கிறிஸ்து இயேசுவை விசுவாசியுங்கள்.

2. பாவிகள் மனந்திரும்ப வேண்டும் – பரலோகத்தில் உண்டாகும் சந்தோஷம் பாவிகள் பாவிகளாயிருப்பதனால் ஏற்பட்டதல்ல, பாவியொரு வன் மனந்திரும்பியதால் ஏற்பட்டது. ஆகவே, பாவியாகிய மனிதன் மனந் திரும்ப வேண்டியது அவனுடைய தவிர்க்க முடியாத பொறுப்பு. மனந்திரும் பாத எவரும் இரட்சிப்பை அடைய முடியாது. வெறும் ஒழுக்கமும், உலகப் பிரகாரமான அன்றாட சமய சடங்காச்சாரியங்களும் ஒரு மனிதனை நீதிமானாக்காது. எத்தனை ஒழுக்கமுடையவனாக இருந்தாலும், கர்த்தருக்கு பணத்தை வாரிக்கொடுப்பவனாக இருந்தாலும், மனந்திரும்பாதவன் போகிற இடம் நரகத்தைத் தவிர வேறில்லை. மனந்திரும்பினால் மட்டுமே பரலோகம்.

3. சுவிசேஷத்தை அனைவரும் அறிந்து கொள்ளும்படிச் சொல்லுவது விசுவாசியின் கடமை – தன்னுடைய ஆடுகளைத் தேடிக்கொண்டிருக்கும் கர்த்தர் சுவிசேஷத்தின் மூலமாக அவர்களை அழைக்கிறார். அந்தச் சுவி சேஷத்தை கர்த்தருக்கிருப்பது போன்ற அடங்காத்தாகத்துடன் பாவிகளோடு பகிர்ந்து கொள்கிறீர்களா? அது உங்களுடைய கடமை. தன்னுடைய ஆட் டைத் தேடுகிற கர்த்தரில் நாம் காணும் அன்பும், ஆர்வமும், தீவிரமும், விடாப்பிடியான முயற்சியும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் கடமைப் பாட்டைக் கொண்டுள்ள நம்மில் இருக்கிறதா?

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s