பிரசங்கத்தைத் தயாரிக்கின்ற வேளையில் அதற்கான ஆரம்பக் குறிப்புகளையும், விளக்கமான குறிப்புகளையும் தயாரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை கடந்த இதழில் பார்த்தோம். இப்படியாக நாம் தயாரிக்கும் குறிப்புகளே பிரசங்கத் தயாரிப்பில் நாம் போக வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டுவனவாக இருக்கின்றன. அனேக பிரசங்கிகள் பிரசங்கத்தை ஏற்கனவே தயாரிக்காமல், ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு எங்கோ ஆரம்பித்து, எங்கோ போய்க்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே தாம் ஆரம்பித்த பாதை எது? போய்க்கொண்டிருக்கிற பாதை எது? என்பது தெரியாமலிருக்கின்றபோது, கேட்டுக்கொண்டிருக்கிறவர்களுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல்தான் இருககும். பிரசங்க மேடைக்குப் போவதற்கு முன்பாக பிரசங்கிக்கு தான் எதைப்பிரசங்கிக்கப் போகிறோம்? அதை எப்படிப் பிரசங்கிக்கப்போகிறோம்? எப்படி முடிக்கப் போகிறோம்? என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். பிரசங்க மேடையில் நிற்கும்போது எந்தப் பிரசங்கிக்கும் பரிசுத்த ஆவியானவர் பிரசங்க செய்தியைக் கொடுப்பதில்லை. அவருக்கு சோம்பேரிகளைத் துப்பரவாகப் பிடிக்காது.
கடந்த தடவை பார்த்தபடி இதுவரை தயாரித்துள்ள பிரசங்கக் குறிப்புகள் நமக்கு பிரசங்கப் பகுதியைக் குறித்த தெளிவான விளக்கத்தை அளித்திருக்கும். அதாவது அந்தப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள போதனை என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்போம். இது மிகவும் அவசியம். பிரசங்கிக்க எடுத்துக் கொண்டிருக்கும் பகுதியில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பதை எந்தவித சந்தேகமுமில்லாமல் தெளிவாகப் புரிந்துகொண்டிராமல் அந்தப்பகுதியை வைத்துப் பிரசங்கிக்கப் போகக்கூடாது. இந்தப்பிரசங்கக் குறிப்புகள் நாம் பிரசங்கிக்கப்போகும் பகுதியை நமக்கு விளக்க உதவியாக இருந்திருக்கின்றனவே தவிர இவையே பிரசங்கமாகிவிடாது. இதுவரை நாம் எடுத்துக் கொண்டுள்ள வேதப்பகுதியைக்குறித்துப் பெற்றுக் கொண்டிருக்கும் விளக்கத்தின் அடிப்படையில்தான் இனிப் பிரசங்கத்தைத் தயாரி¢க்க வேண்டும். இதுவரை நாம் செய்திருப்பதெல்லாம் ஒரு காரை அக்குவேர் ஆணிவேராகக் கழட்டித் தனித்தனியாகப் பிரித்து அந்தக்காரின் அம்சங்களைப் புரிந்து கொண்டிருப்பதுதான். இதுவரை நாம் எடுத்துள்ள குறிப்புகள் நமக்குத்தான் உபயோகப்படுமே தவிர பிரசங்கம் கேட்பவர்களுக்கல்ல. இனி, நாம் பிரித்து வைத்திருக்கும் கார்ப்பாகங்களையெல்லாம் முறையாக அந்தந்த இடத்தில் வைத்து காரை உருவாக்க வேண்டும். பிரசங்கத் தயாரிப்பும் இதுபோல்தான்.
குறிப்புகளின் அடிப்படையில் பிரசங்கத்திற்கான வசனங்களைத் தீர்மானித்தல்
பிரசங்கத்தைத் தயாரிக்க இனி நாம் செய்ய வேண்டியது, இதுவரைத் தயாரித்த குறிப்புகளை வைத்துக் கொண்டு பிரசங்கத்திற்கான வசனங்களை முடிவு செய்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு எபேசியர் 1:3–14 வரையுள்ள வசனங்களை ஆராய்ந்து குறிப்புகளை எழுதி வைத்திருந்தால், அது முழுவதையும் ஒரே பிரசங்கத்தில் பிரசங்கிக்கப் போகிறோமா? அல்லது அதைப் பல பகுதிகளாகப் பிரித்து வாராவாரம் அதிலுள்ள சத்தியங்களை ஒவ்வொன்றாகப் பிரசங்கிக்கப் போகிறோமா? என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அப்படியான முடிவை எடுத்த பின்னர் பிரசங்கிக்கத் தீர்மானித்திருக்கும் வசனங்களை மேலும் ஆராய்வது அவசியம்.
பிரசங்கிக்கத் தெரிந்து கொண்ட பகுதியை மேலும் ஆராய்தல்
பிரசங்கிப்பதற்கு எபேசியர் 1:3–6 வரையுள்ள வசனங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த வசனங்களை நாம் கடந்த இதழில் ஆராய்ந்திருப்பதால் அந்தப்பகுதியில் தரப்பட்டிருக்கும் போதனையும் நமக்குத் தெரியும். (இதை வாசிக்கும்போது அந்த இதழையும் பக்கதில் வைத்துக் கொள்வது நல்லது). இனி அந்தவசனங்களை வசதியாக பிரித்து அதில் காணப்படும் சத்தியங்களின் அடிப்படையில் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக கீழ்வரும் குறிப்பைப் பாருங்கள்.
3ம் வசனம் — கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்.
6ம் வசனம் — அந்த ஆசீர்வாதங்களின் ஒன்றாக நாம் கர்த¢தரால் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம்.
5, 6ம் வசனங்கள் – அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்பே முன்குறித்திருக்கிறார்.
4, 5ம் வசனங்கள் – அவருடைய முன்குறித்தலின் நோக்கம்: (1) அவர் நமக்குத் தந்தருளின அவருடைய கிருபையின் மகிமை புகழ்ச்சியடைய வேண்டும். (2) அவருக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர் களும், குற்றமில்லாதவர்களுமாக இருக்க வேண்டும்.
6ம் வசனம் — அவருடைய முன்குறித்தலின் இலக்கு: நாம் கிறிஸ்துவின் மூலமாக அவருடைய சுவிகாரப் புத்திரராவது.
மேலே தந்துள்ள குறிப்பை நீங்கள் கவனமாக ஆராய்ந்தால் எபேசியர் 1:3-6 வரையுள்ள வசனங்களில் காணப்படு¢ம் போதனைகள் அனைத்தையும் முறைப்படுத்தி குறிப்பெடுத்திருப்பதைக் காணலாம். இப்படிச் செய்வதன் மூலம் அந்தப்பகுதியில பவுல் எதை, எந்த முறையில் சொல்லவருகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் இன்னுமொரு உண்மையையும் புரிந்து கொள்வீர்கள். 1:3–14 வரையுள்ள வசனங்களை நாம் ஆராய்ந்தபோது 3-6 வரையிலான வசனங்களை இந்தளவுக்கு விவரமாக நாம் ஆராயவில்லை. அதற்குக் காரணம், அங்கே நாம் வானத்தில் பறக்கும் விண்கலத்தில் இருந்து பூமியைப் பார்க்கும் விதத்தில் முழுப்பகுதியையும் பார்த்தோம். ஆகவே, நமக்கு முழுப்பகுதியின் போதனையே தெரிந்தது (Bird’s eye view). விண்கலம் கீழே இறங்கி வர வர பூமியில் இருக்கும், நாடுகளும், நகரங்களும், ஆறுகளும், குளங்களும், ஏன் வீதிகளும் கூடத் தெளிவாகத் தெரிய வரும். அதுபோலத்தான் நாம் 3-6 வரையுள்ள வசனங்களைத் தனியாகப் பிரித்து ஆராய்கிறபோது அதில் காணப்படும் மேலும் பல விபரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.
மேலே பார்த்த குறிப்பிலிருந்து எபேசியர் 1:3-6 வரையிலான பகுதியின் முக்கிய போதனை கர்த்தரின் முன்குறித்தல் என்பதையும், அந்த முன்குறித்தல் எவ்வாறு நிகழ்ந்தது என்றும், அந்த முன்குறித்தலுக்கான நோக்கம் என்னவென்றும், அந்த முன்குறித்தலின் இறுதி இலக்கு என்ன என்பதையும் தெளிவாகப் பார்க்கிறோம். இதுவரை பார்த்த விளக்கங்களில் இருந்து நாம் பிரசங்கத்திற்கான ஒரு வரைபடத்தை சுலபமாகத் தயாரித்துக் கொள்ளலாம்.
பிரசங்கத்திற்கான வரைபடம்
பிரசங்கத்திற்கான வரைபடம் பிரசங்கத்தின் தலையங்கத்தையும், அதன் அடிப்படையில் வரப்போகும், முறைப்படுத்தித் தரப்பட்டிருக்கும் முக்கிய தலைப்புகளையும் குறிக்கும். அது பின்வரும் முறையில் அமையும்:
தலைப்பு:
கர்த்தரின் முன்குறித்தல்
அறிமுகம்: 3வது வசனத்தின்படி கர்த்தர் விசுவாசிகளை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களுடன் ஆசீர்வதித்திருக்கிறார். அந்த ஆசீர்வாதங்களில் ஒன்று முன்குறித்தல்.
1. முன்குறித்தல் என்றால் என்ன?
2. விசுவாசிகள் எவ்வாறு முன்குறிக்கப்பட்டிருக்கிறார்கள்?
அ. தேவனுடைய தயவுள்ள சித்தத்தின்படி
ஆ. உலகத்தோற்றத்துக்கு முன்னதாக
3. விசுவாசிகளை கர்த்தர் முன்குறித்ததற்கான நோக்கம் என்ன?
அ. அவர் நமக்குத் தந்தருளின அவருடைய கிருபையின் மகிமை புகழ்ச்சியடைய வேண்டும்.
ஆ. அவருக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களாகவும்,
– குற்றமில்லாதவர்களுமாக இருக்க வேண்டும்.
4. விசுவாசிகளை எதற்காக கர்த்தர் முன்குறித்திருக்கிறார்?
– தம்முடைய சுவீகாரப் புத்திரராவதற்கு
இதில் எபேசியர் 3:3–6 ஆகிய வசனங்களில் நாம் 3ம் வசனத்தை பிரசங்கத்தை அறிமுகப்படுத்துகின்ற வசனமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதாவது 3ம் வசனம் கர்த்தர் நம்மை சகல ஆசீர்வாதங்களுடன் ஆசீர்வதித்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 4–6 வரையிலான வசனங்கள் இப்பகுதியில் இருந்து நாம் கொடுக்கப்போகும் பிரசங்கத்தின் சரீரமாக இருக்கின்றது. அதாவது பிரசங்கத் தலைப்பான கர்த்தரின் முன்குறித்தலை இவ்வசனங்கள் விளக்குகின்றன. இப்பகுதி போதிக்கும் முன்குறித்தலை நான்கு கேள்விகளைத் தலைப்புகளாகக் கொண்டு பிரசங்கத்தில் விளக்கப் போகிறோம். தலைப்புகள் இந்தவிதத்திலேயே இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அது வேறுவிதமாகவும் இருக்கலாம். ஆனால், பிரசங்கப்பொருளை முறையாக, படிமுறையாக விளக்கிப் பிரசங்கிக்க தலைப்புகள் அவசியம். இதே தலைப்புகளை இன்னொரு விதத்தில் மாற்றிக் கிழே தந்திருக்கிறேன்.
விசுவாசிகளின் முன்குறித்தல்
1. விசுவாசிகளின் முன்குறித்தலின் தன்மை
2. விசுவாசிகள் முன்குறிக்கப்பட்டிருக்கும் விதம்
3. விசுவாசிகள் முன்குறிக்கப்பட்டதற்கான நோக்கம்
4. விசுவாசிகள் முன்குறிக்கப்பட்டிருப்பதன் இலக்கு
இதுவரை எபேசியர் 1:3–6 வரையுள்ள வசனங்களில் முன்குறித்தலைப்பற்றிய போதனைக்கான வரைபடத்தைத் தயாரித்துவிட்டோம். இத்தோடு பிரசங்கத் தயாரிப்பு முடிந்து விட்டதாகக் கருதிவிடக்கூடாது. இன்னும் செய்ய வேண்டிய பல காரியங்கள் இருக்கின்றன. படிப்படியாக ஒவ்வொன்றையும் இனிப் பார்க்கப்போகிறோம்.
பிரசங்கத்தின் சரீரத்தைத் தயாரித்தல்
மேலே கொடுக்கப்பட்ட வரைபடத்தை வைத்து இனி பிரசங்கத்தின் சரீரத்தை உருவாக்க வேண்டும். அதாவது, கர்த்தரின் முன்குறித்தலைப் பற்றி இந்த வசனங்கள் போதிக்கும் சத்தியங்களை ஏனைய வேத பகுதிகளின் மூலம் நிரூபித்து, உதாரணங்களைத் தந்து பிரசங்கத்தின் சரீரத்தை அமைக்க வேண்டும். எபேசியர் முதலாம் அதிகாரத்தின் 1:3–14 வரையுள்ள வசனங்களை நாம் ஆரம்பத்தில் ஆராய்ந்தபோது பல உண்மைகளை ஏற்கனவே அறிந்து குறிப்பெடுத்திருப்போம். அத்தோடு 3–6 வரையுள்ள வசனங்களுக்கான வரைபடத்தைத் தயாரிக்கும்போதும் பல உண்மைகளை இந்தப்பகுதியில் இருந்து தெரிந்து கொண்டிருப்போம். அந்த உண்மைகளையெல்லாம் முறையாக மேலே நாம் பார்த்த தலைப்புகளின் கீழ் பிரசங்கத்தில் விளக்கமாக எழுதிக்கொள்ள வேண்டும். முக்கியமாக இந்தப்பகுதியில் காணப்படும் பதங்களான முன்குறித்தல், கர்த்தரின் தயவுள்ள சித்தம், கிருபையின் மகிமை, சுவிகாரப் புத்திரர் போன்றவற்றை ஆராய்ந்து அவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் சத்தியங்களை முறயாக விளக்க வேண்டும். எந்த சத்தியம் எந்தத் தலைப்பின் கீழ் வரவேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்வது அவசியம்.
முதலாவது தலைப்பான விசுவாசிகளின் முன்குறித்தலில், முன்குறித்தலைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து தகுந்த விளக்கங் களையும், உதாரணங்களையும் தந்து அந்தத் தலைப்பின் கீழ் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஒத்தவாக்கிய அகராதி, சொல் அகராதி போன்றவை வேதத்தின் ஏனைய பகுதிகளில் காணப்படும் முன்குறித்தலைப் பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள உதவும். விளக்கங்களும் உதாரணங்களும் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது. வேறு வேதபகுதிகளில் இருந்து நிரூபண வசனங்களைத் தந்தால் மூன்றுக்கு மேல் வசனங்கள் இராதபடி பார்த்துக்கொள்வது நல்லது. அந்த வசனங்கள் வேதத்தில் இருக்கும் உதாரணங்களில் சிறப்பானவையாக இருப்பவையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வசனத்தையும் பிரசங்கத்தில் விளக்க நேரம் தேவை. ஆகவே, அதிக வசனங்களைக் கொடுத்துவிட்டு ஏனைய தலைப்புகளை விளக்க நேரமில்லாமல் போய்விடக்கூடாது. ஒரு தலைப்பை மட்டும் விளக்க முழுப்பிரசங்கத்தையும் பயன்படுத்திவிடக்கூடாது. இன்னும் மூன்று தலைப்புகளுக்கு விளக்கம் எழுதித்தயாரிக்க வேண்டியிருக்கிறது.
முன்குறித்தலைப்பற்றிய இந்த வேதவசனங்கள் இறையியல் போதனைகளைத் தருவதால் இதுபற்றி இதுவரை அதிகம் ஆராய்ந்திராத பிரசங்கிகள் இந்த சத்தியத்தை ஆராய்ந்து படிப்பது பிரசங்கத்தைத் தெளிவாகப் பிரசங்கிக்க உதவும். நமக்கே சத்தியத்தில் விளக்கம் இல்லாவிட்டால் கேட்கும் ஆத்துமாக் களுக்கு நாம் சொல்வது எங்கே புரியப்போகிறது! தவறான உபதேசத்தைத் தந்துவிடாமல் இருப்பதும் மிக அவசியம். தமிழ் மக்கள் மத்தியில் முன்குறித்த லாகிய வேத சத்தியத்தை முறையாக அறிந்திருப்பவர்கள் குறைவு. அப்படி யொன்று வேதத்தில் இல்லை என்று தவறாக எண்ணிப் பிரசங்கித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் அதிகம். ஆகவே, இந்த சத்தியத்தை விளக்கும் நல்ல நூல்களை வாங்கி வாசிப்பது நமது பிரசங்கம் தெளிவாக இருக்க துணை செய்யும். உதாரணமாக முன்குறித்தலைப் பற்றித் தெரிந்து கொள்ள, தமிழில் இருக்கும் ஏ. டபிள்யூ, பிங்க்கின் ‘சர்வ வல்லவரின் ஏகாதிபத்தியம்’, ஆபிரகாம் பூத்தின் ‘கிருபையின் மாட்சி’, ஜோன் ஓவனின், ‘கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு’ ஆகிய நூல்களை சிந்தித்து வாசிப்பது நல்ல பயன் அளிக்கும். இந்த நூல்களை எழுதியுள்ள வேத அறிஞர்களின் விளக்கங்களை நாம் பிரசங்கத்தில் உதாரணங்காட்டவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நம் மக்கள் இத்தகைய நூல்களை வாசித்து சத்தியத்தில் மேலும் வளரவும் துணை செய்யும்.
இதுவரை பிரசங்கத்தில் படிமுறையாக வரும் தலைப்புகள் ஒவ்வொன்றை யும், எடுத்துக்கொண்டுள்ள வேதவசனங்களைவைத்து பிரசங்கத்திற்கான சரீரத்தை எவ்வாறு உருவாக்குவது என்று பார்த்தோம். பிரசங்கத்தின் சரீரமே இந்த வசனங்கள் போதிக்கின்ற முன்குறித்தலாகிய சத்தியத்தை தெளிவாக ஆத்துமாக்களுக்கு பவுல் போதித்திருக்கும் முறையில் விளக்கப் போகிறது. ஆகவே, பிரசங்கத்தின் சரீரத்தை அமைப்பதில் பெருங்கவனம் செலுத்துவது அவசியமாகிறது. அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை அடுத்த இதழில் பார்ப்போம்.