பெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவம்

அப்போஸ்தலர் நடபடிகள் நூலில் பெந்தகொஸ்தே தினம் மிக முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வாக்குத் தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய உலகளாவிய ஊழியத்தை ஆரம்பிக்க அந்நாளில் வந்திறங்கியதாக அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். அன்று அவர் ஆரம்பித்து வைத்த செயல்களின் அடிப்படையில் தேவனின் திருச்சபை இவ்வுலகில் நிறுவப்பட்டு வளர்ந்த வரலாறு பற்றி அந்நூல் விளக்குகிறது. பெந்தகொஸ்தே நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறித்து திருச்சபையினர் பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். அந்நாளின் நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே பெந்தகொஸ்தே சபை என்ற பெயரில் ஒரு சபைப்பிரிவு கடந்த நூற்றாண்டில் இந்த உலகில் தோன்றியது. அந்நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களின் அடிப்படையிலேயே கெரிஸ்மெட்டிக் இயக்கமும் இந்த உலகில் ஆரம்பித்தது. அந்நாளையும், அந்நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் வைத்து மேலும் மேலும் புதிய போதனைகள் தொடர்ந்து உருவாகி வருவதை நாம் பார்க்கிறோம். ஆகவே, பெந்தகொஸ்தே தினம் சபை வரலாற்றில் ஒரு முக்கியமான தினமாகவும், இன்றும் பலரை ஈர்த்து வருகின்ற ஒரு வரலாற்று நாளாகவும் காணப்படுகின்றது.

பெந்தகொஸ்தே நாளில் எருசெலேமில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நாம் சரிவர விளங்கிக் கொண்டிருக்கிறோமா என்று ஆராய்வதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும். அந்நாளின் நிகழ்ச்சிகளை வேதபூர்வமாக நாம் விளங்கிக் கொண்டிராவிட்டால் நமது ஊழியங்களின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும். பெந்தகொஸ்தே தினத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு தங்களால் மட்டுமே சரியான விளக்கம் கொடுக்க முடியும் என்று எண்ணி இயங்கி வருகிறவர்கள் அந்நாளில் நடந்த நிகழ்ச்சிகளை வேதபூர்வமாக ஆராயத் தவறிவிட்டார்கள் என்பதை இந்த ஆக்கத்தின் மூலம் வெளிப்படுத்துவதும் எனது நோக்கமாக இருக்கின்றது.

பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் சபைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வேதத்தை ஆராய்ந்து படிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இலக்கணபூர்வமாகவும், வரலாற்று ரீதியிலும் அவர்கள் வேதத்தை ஆராய்ந்து கர்த்தரின் சித்தத்தை அறிந்து கொள்வதை தவிர்த்து, மேலெழுந்த வாரியாக வேதத்தை வாசித்து தங்களுடைய உள்ளுணர்வு தூண்டுகின்ற வழியில், சொந்த உணர்ச்சிகளுக்கு வசதிப்படும் விதத்தில் வேதப்பகுதிகளுக்கு விளக்கம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தவறான வேதவாசிப்பு முறையே அவர்கள் பெந்தகொஸ்தே தினத்தின் நிகழ்ச்சிகளுக்கு அளித்து வரும் தவறான விளக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த ஆக்கத்தை வாசிக்கின்ற வாசகர்கள் தங்களுடைய சிந்தனையைப் பயன்படுத்தி நேரத்தை செலவிட்டு வேதத்தை ஆராய்ந்து பார்க்குமாறு ஆரம்பத்திலேயே கேட்டுக்கொள்கிறேன். சத்தியம் விடுதலை தரும் என்கிறது வேதம். போலித்தனமான போதனைகளில் இருந்து நாம் விடுதலை அடைய வேத சத்தியங்களை ஆராய்ந்து படிக்க வேண்டியது அவசியமாகிறது.

பழைய ஏற்பாட்டில் மீட்பின் இரகசியம்

வேதம் பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. பழைய ஏற்பாடு வரலாற்றில் மீட்பை நிறைவேற்ற வரப்போகிற இயேசு கிறிஸ்துவைப் பற்றி நமக்கு விளக்குகிறது. புதிய ஏற்பாடு வரலாற்றில் தோன்றி மீட்பை நிறைவேற்றிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி விளக்குகிறது. பழைய ஏற்பாடு முன்னோக்கிப் பார்க்கிறது. புதிய ஏற்பாடு பின்னோக்கிப் பார்க்கிறது. இரண்டும் ஒரே இயேசுவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. இயேசு நிறைவேற்றிய இரட்சிப்பின் திட்டத்தையே வேதம் முழுவதும் நாம் வாசிக்கிறோம். இன்னொரு விதத்தில் வேதத்தை மீட்பின் வரலாறாகக் கூறலாம். அதுவே வேதத்தின் முக்கிய பொருளாக அமைந்திருக்கிறது.

கிறிஸ்து வரலாற்றில் நிறைவேற்றிய மீட்பின் திட்டங்களோடு சம்பந்தப்பட்ட முக்கியமான நாள்தான் பெந்தகொஸ்தே நாள். பெந்தகொஸ்தே தினத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கிறிஸ்துவின் மீட்பின் நிறைவேற்றுதலோடு தொடர்புடையவை என்பதை அனேகர் மறந்துவிடுகிறார்கள். அதுவே அவர்களுடைய தவறான போதனைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இயேசு கிறிஸ்துவின் மீட்பின் திட்டத்திற்கும் பெந்தகொஸ்தே நாளுக்கும் என்ன தொடர்பு என்பதை இனிப்பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் 3:15ல் முதன் முதலாக நாம் நற்செய்தியைப் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில் நற்செய்திக்கு இடமில்லை என்று கூறும் டிஸ்பென்சேஷனல் (Dispensationalism) கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் இவ்வசனத்தை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இவ்வசனத்தில் கர்த்தர், பெண்ணுக்கு மகனாகப் பிறக்கவிருக்கும் தன்னுடைய குமாரன் பிசாசின் கொட்டத்தை அடக்குவார் என்று வாக்குத்தத்தம் அளிக்கிறார். இது இயேசுவையும் அவருடைய மீட்பின் செயல்களையும் விளக்கும் ஒரு வசனமாக இருக்கிறது. அச்செயல்கள் நிறைவேறுவதற்கு அடிப்படையாக பழைய ஏற்பாட்டின் வரலாறு அமைந்திருக்கின்றது. இஸ்ரவேலரைக் கர்த்தர் தெரிந்து கொண்டதும், அவர்களுக்குத் தேவனாக இருந்து அவர்களை வழிநடத்தியதும், சடங்காச்சாரியங்களை ஏற்படுத்தி அவற்றைப் பின்பற்றும்படிச் செய்ததும், தன்னைவிட்டு விலகிப்போனபோதெல்லாம் அவர்களைத் தண்டித்து மனந் திரும்பச் செய்ததும், அச்சந்ததியின் மிகுதியைத் தொடர்ந்து வரலாற்றில் இருக்கும்படிச் செய்ததும், தன்னுடைய ஒரே குமாரன் தானளித்திருந்த வாக்குத்தத்தத்தின்படி அச்சந்ததியிலிருந்து தோன்றி வரலாற்றில் மீட்பை (Redemption) நிறைவேற்ற வேண்டுமென்பதற்காகத்தான். கிறிஸ்துவின் மீட்பின் நிறைவேறுதல் பற்றிய இரகசியத்தைத்தான் பழைய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் மறைமுகமாகப் போதிக்கின்றன. தீர்க்கதரிசிகள் அனைவரும் இஸ்ரவேலருக்கு கர்த்தரின் செய்தியைக் கொண்டுவந்தபோது அச்செய்தி முழுவதிலும் கிறிஸ்துவின் மீட்பின் இரகசியம் நிறைந்திருந்தது. உதாரணத்திற்கு ஏசாயா தீர்க்கதரிசியின் பல பகுதிகளை வாசித்து பாருங்கள். அந்நூலின் சேவகனின் பாடல்கள் (Servant songs) கிறிஸ்துவின் பிறப்பையும், கல்வாரித் துன்பங்களையும் விபரித்துக் கூறி மீட்பின் இரகசியத்தை அடையாளங் காட்டு கின்றன. இதைத்தான் பவுல் அப்போஸ்தலன் எபேசியர் 3ம் அதிகாரத்தில் விளக்குகிறார். மீட்பின் இரகசியத்தைப் பற்றிக் கூறும் பவுல், “இதைக் குறித்து முன்னமே நான் உங்களுக்கு சுருக்கமாக எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக் குறி¢த்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்து கொள்ளலாம்; இந்த இரகசியம் இப்பொழுது . . . ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது போல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை” என்கிறார். அதாவது, பழைய ஏற்பாட்டுக்காலங்களிலே இந்த மீட்பின் இரகசியம் மறைமுகமாக, உள்ளடக்கமாக காணப்பட்டிருந்ததேயொழிய வெளிப்படையாக விளக்கப்படவில்லை என்கிறார் பவுல். இதையேதான் எபிரேயருக்கு எழுதின நிருபத்தின் முதன் மூன்று வசனங்களிலும் வாசிக்கிறோம். பூர்வ காலங்களில் இந்த மீட்பின் இரகசியம் பங்குபங்காகவும், வகைவகையாகவும், தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பிதாக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாக எபிரேய நிருப ஆசிரியர் விளக்குகிறார். இவற்றிலிருந்து பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நமது பிதாக்களும், கர்த்தரை நம்பினவர்களும் கிறிஸ்துவை விசுவாசித்திருந்த போதும் அவர்களுக்கு மீட்பின் இரகசியம் பங்கு பங்காகவும், வகைவகை யாகவும் மறைமுகமாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதை விளங்கிக் கொள்கிறோம். ஆகவே பழைய ஏற்பாட்டில் சுவிசேஷம் (Gospel message) இருந்தது. விசுவாசிகள் அதைக் கேட்டுத்தான் மனந்திரும்பி வரப்போகின்ற கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். பழைய ஏற்பாட்டில் சுவிசேஷம் மறைமுகமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தபோதும் பாவிகள் கிறிஸ்துவை விசுவாசிக்க அது போதுமானதாக (sufficient) இருந்தது.

புதிய ஏற்பாட்டில் மீட்பின் நிறைவேற்றுதலும், வெளிப்படுத்தலும்

கர்த்தரின் அனாதித் திட்டத்தின்படி மீட்பின் நாயகன் இந்த உலகில் தோன்றி மீட்பின் செயல்களை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதன்படியாக இயேசு இந்த உலகில் யோசேப்புவுக்கும், மரியாளுக்கும் மகனாகப் பிறந்து தன்னுடைய பிதாவின் கட்டளைகளைப் பூரணமாக நிறைவேற்றி இறுதியில் கல்வாரி சிலுவையில் தேவனின் திட்டப்படி தனது மக்களுக்காகத் தன்னைப் பலியாகத் தந்தார். பழைய ஏற்பாட்டில் உள்ளடக்கமாக (Implicit) விளக்கப் பட்டிருந்த மீட்பின் திட்டங்கள் கிறிஸ்துவின் மூலமாக புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இப்படியாக நிறைவேறியது. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதர்கள் அனைவரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான வழியை கிறிஸ்து தன்னுடைய சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றினார்.

இயேசு தோன்றி வாழ்ந்த புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அவரே தன்னுடைய மரணத்திற்கு முன்பாக மீட்பின் இரகசியங்களை வெளிப்படையாகப் போதிக்க ஆரம்பித்ததை சுவிசேஷ நூல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். நிக்கொதேமு இரட்சிப்பின் இரகசியங்களை அறிந்து கொள்ளத் தன்னைத் தேடிவந்தபோது இயேசு, பழைய ஏற்பாட்டைப் போதிக்கிறவனாக இருந்தும் நீ இதை அறியாம லிருப்பதெப்படி என்று கேட்டார். அத்தோடு நிக்கொதேமுவுக்கு விளங்கும் படியாக பழைய ஏற்பாட்டு மொழியில் மீட்பின் இரகசியங்களை விளக்கினார் (யோவான் 3). சமாரியப் பெண்ணுக்கு இயேசு கொடுத்த விளக்கமும் இதே முறையில்தான் அமைந்திருந்தது (யோவான் 4). அவரது போதனைகளைக் கேட்ட மக்கள் அவற்றின் தெளிவையும், அதிகாரத்தையும் கண்டு பிரமித்தார் கள். இதுவரை அந்தமுறையில் பரிசேயர்கள் போதிக்கவில்லை என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.

இயேசுவின் மலைப்பிரசங்கத்தை வாசித்துப் பாருங்கள். அங்கே பரிசேயர்களுடைய போதனைகளை இயேசு சாடி, பழைய ஏற்பாட்டிற்கு விளக்கமளித்து மீட்பின் இரகசியங்களைத் தன்னுடைய சீடர்களுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தினார். பிதாவும், நானும் ஒருவரே, என்மூலமாக அல்லாமல் ஒருவரும் பிதாவிடத்தில் போக முடியாது என்று வெளிப்படை யாகப் போதித்து இரட்சிப்பின் வழிமுறையை இயேசு விளக்கினார். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்பதை அவர் தெளிவாகப் போதிக்கத் தவறவில்லை. மறைமுகமாக பழைய ஏற்பாட்டில் விளக்கப்பட் டிருந்த மீட்பின் இரகசியங்களை மீட்பின் நாயகனான இயேசு ஆணித்தரமாக தன் காலத்தில் போதித்தார். ஆபிரகாமை உதாரணம் காட்டிப் பேசிய இயேசு யோவான் 8:58ல் ஆபிரகாமும் தன்னுடைய நாளைக் காண்பதற்கு ஆசையாக இருந்தான் என்று விளக்கினார். விசுவாசியான ஆபிரகாமுக்கு தன்காலத்தில் கிறிஸ்துவின் மீட்பின் நிறைவேற்றத்தைக் காணமுடியவில்லை. ஆனால், அது பற்றிய உண்மையை அவன் அறிந்து, உணர்ந்திருந்தான். அதை அவன் விசுவா சித்தவனாக இருந்தான். வருங்காலத்தில் நிகழப்போகும் அந்த மகா அற்பு தத்தை அவன் காணவும் ஆசை கொண்டிருந்தான் என்றார் இயேசு (யோவான் 8:56). இவ்வாறாக மீட்பின் போதனைகளை, சுவிசேஷ இரகசியங்களை இயேசு தெளிவாக அனைவரும் அறிந்துகொள்ளும்படியாகப் போதித்தார்.

மீட்பின் திட்டங்களை நிறைவேற்றிய கிறிஸ்துவுக்கு தான் இந்த உலகை விட்டுப் போகவேண்டும் என்பது தெரிந்திருந்தது. அதற்குப் பின்பு சுவிசேஷம் எங்கும் பிரசங்கிக்கப்பட்டு முழு உலகத்தாரும் மனந்திரும்ப வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்பதும் மீட்பின் திட்டங்களில் ஒன்று. கர்த்தரால் தெரிவு செய்யப்பட்ட அனைவரும் அவரை வந்தடைய வேண்டுமென்பது அவருடைய அனாதித் தீர்மானம். பழைய ஏற்பாட்டில், புறஜாதியினருக்கும் எதிர்காலத்தில் கர்த்தரின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற உண்மை போதிக் கப்பட்டிருந்தாலும் யூதரும், புறஜாதியினரும் எந்தவித வேறுபாடுமில்லாமல் ஒரே மனிதர்களாக எதிர்காலத்தில் கருதப்படுவார்கள் என்ற உண்மை வெளிப் படையாகப் போதிக்கப்படவில்லை. புரட்சிகரமான அந்த உண்மை நிறைவேற வேண்டுமானால் இயேசு உயரெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன் பின் சுவிசேஷம் எங்கும் அறிவிக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக யூதர்கள் மட்டுமல்லாமல், புறஜாதியாரும் அதைக்கேட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். இது பழைய  ஏற்பாட்டில் பெருமளவில் நிகழ்ந்திராத ஒன்று. அங்கும் இங்குமாக பழைய ஏற்பாட்டில் புறஜாதியார் கர்த்தரை அறிந்து கொண்டபோதும், ஆவியானவர் இஸ்ரவேலின் மத்தியிலேயே பெருமளவுக்கு கிரியை செய்தவராக இருந்தார். ஆனால், புதிய ஏற்பாட்டில் இது மாறி சகல ஜாதியினரும் கிறிஸ்துவின் தலைமையில் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படவேண்டிய ஊழியம் ஆரம்பமானது. பழைய ஏற்பாட்டில் மறை முகமாகப் போதிக்கப்பட்டிருந்த இந்த சுவிசேஷ இரகசியம் புதிய ஏற்பாட்டுக் காலத்திலேயே நிறைவேற வேண்டியிருந்தது. ஒருவரையொருவர் வெறுத்து வந்த இனங்களான யூதர்களும், புறஜாதியாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்று கூடும் அற்புதம் கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு இந்த உலகில் ஆரம்பமாகவிருந்தது. அந்த அற்புதத்தை நிறைவேற்றிவைக்க ஆவியானவர் வருகை தர வேண்டியவராக இருந்தார். இதையே சுவிசேஷ இரகசியம் (Gospel mystery) என்று பவுல் அப்போஸ்தலன் பல இடங்களில் புதிய ஏற்பாட்டில் வர்ணித்திருக்கிறார் (எபேசியர் 3:1-13).

இந்த நாளுக்காகத்தான் இயேசு தன்னுடைய பன்னிரு சீடர்களையும் தயார் செய்தார். அவர்களை அப்போஸ்தலர்களாக நியமித்து சுவிசேஷத்தை சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும் பொறுப்பை அளித்தார் (மத்தேயு 28:18-20). அவர்கள் மேல் ஆவியை ஊதி அவர்களுக்கு வல்லமையையும் அளித்தார். இதுவரை நிகழ்ந்திராதவகையில் சுவிசேஷ இரகசியம் அவர்கள் மூலமாக முழு உலகத்திற்கும் அறிவிக்கப்படவிருந்தது. யூதர்கள் ஆச்சரியப்படும் வகையில் மீட்பின் பலன்களை பலரும் அறிந்து கிறிஸ்துவை விசுவாசித்து ஆபிரகாமின் புத்திரர்களாக மாறும் அற்புதம் நிகழவிருந்தது. இது நிகழ முதலில் இயேசு உயரெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முன்பாக இயேசு தன்னுடைய சீடர்களை எருசலேமில் போய் தங்கியிருக்கும்படியாகக் கட்டளை யிட்டார். அப்படி அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் ஆவியானவர் தன்னு டைய உலகளாவிய ஊழியத்தை ஆரம்பிக்க வரவிருப்பதை அவர்களுக்குத் தெரிவித்தார். ஆவியானவர் அவர்களுக்குத் துணையாக இருந்து தான் போதித்த அனைத்தையும் அவர்களுடைய நினைவுக்குக் கொண்டு வருவார் என்பதையும் விளக்கினார் (யோவான் 16:7-15). அத்தோடு ஆவியானவர் அவர்களுடைய ஊழியத்திற்குத் தேவையான அனைத்து வல்லமையையும் அளிப்பார் (அப்போஸ். 1:8) என்றும் இயேசு கூறியிருந்தார். இப்படியாக நிகழ விருந்த காரியங்களின் காரணமாகத்தான் பெந்தகொஸ்தே நாள் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது.

பெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவம்

இதுவரை நாம் பார்த்து வந்துள்ள உண்மைகளுக்கும் பெந்தகொஸ்தே நாளுக்கும் முக்கிய தொடர்பிருப்பதை சிந்திக்கும் வாசகர்கள் உணர்ந்திருப்பீர்கள். வேதம் அறியாதவர்கள் பெந்தகொஸ்தே நாளை அந்நிய பாஷை பேசுவதற்கும், அற்புதங்கள் செய்வதற்கும் வழி ஏற்படுத்தித் தந்த நாளாக மட்டுமே பார்க்கிறார்கள். வேதத்தை ஆராயாது விளக்கமளிக்க முற்படும்போது இந்தத் தவறுகள் நேர்வது சகஜம். ஆனாலும் பெந்தகொஸ்தேகாரர்களும், கெரிஸ்மெட்டிக் கூட்டத்தாரும் இதுவரை தந்து வந்துள்ள விளக்கங்கள் எத்தனை ஆபத்தானது என்பதை பெந்தகொஸ்தே நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை ஆராயும்போது புரிந்து கொள்ளலாம்.

பெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவத்தை ஆராய்கின்றபோது நான்கு உண்மைகளை நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்த உண்மைகளை மேலும் விளக்கமாக நாம் அப்போஸ்தலர் நடபடிகளை ஆராய்வதன் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம்:

1. பழைய ஏற்பாட்டில் வெளிப்படையாக போதிக்கப்படாமலிருந்த மீட்பின் இரகசியம் பெந்தகொஸ்தே நாள் முதல் வெளிப்படையாக பிரசங்கிக்கப் பட்டதால் அந்நாள் வரலாற்று முக்கியத்தும் பெறுகிறது.

2. பழைய ஏற்பாட்டில் வெளிப்படையாக போதிக்கப்படாது, உள்ளடக்கமாக மட்டும் காணப்பட்ட சத்தியமான, யூதர்களும் புறஜாதியாரும் சமமான முறையில் கிறிஸ்துவில் ஒன்றுகூடிவருவது (Jewish and Gentile Christians together in one body under Christ) பெந்தகொஸ்தே நாளில் ஆரம்பித்து வைக்கப்பட்டதால் அந்நாள் வரலாற்று முக்கியத்துவம் அடைகிறது.

3. மேலே நாம் பார்த்த இரண்டு காரியங்களும் சுவிசேஷ பிரசங்கத்தின் மூலம் நடைபெறுவதை உலகளாவிய முறையில் ஆரம்பித்து வைக்க ஆவியானவர் பெந்தகொஸ்தே நாளில் வருகை தந்ததால் அந்நாள் வரலாற்று முக்கியத்துவம் அடைந்தது.

4. பெந்தகொஸ்தே நாளில் ஆவியின் வருகையின் மூலமாகவும், சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலமாகவும் திருச்சபை ஓர் நிறுவனமாக இந்த உலகில் இதுவரை இல்லாதவகையில் யூதர்களையும், புறஜாதியாரையும் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாலும் அந்நாள் வரலாற்று முக்கியத்துவம் அடைகிறது. (பழைய ஏற்பாட்டில் சபையைப் பார்க்கவே முடியாது என்ற டிஸ்பென்சேஷனலிசப் போதனை முழுத்தவறு. பழைய ஏற்பாட்டில் சபை நிச்சயம் இருந்தது. அப்போஸ். 7:38; எபிரே. 2:12. புதிய ஏற்பாட்டில் நிறுவப்பட்ட சபைக்கும் அதற்கும் தொடர்பிருந்தது. ஆனால், புதிய ஏற்பாட்டில் அமைக்கப் பட்ட சபை மீட்பின் வரலாற்றில் ஒரு புரட்சிகரமான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. மத்தேயு 16:18.)

பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையில் நின்று மேலே நாம் பார்த்த நான்கு உண்மைகளும் நிறைவேறிய நாளாக பெந்தகொஸ்தே நாள் இருந்தது. இதனால்தான் பெந்தகொஸ்தே நாள் கிறிஸ்துவின் மீட்பின் வரலாற்று நிறைவேற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. கர்த்தருடைய மீட்பின் திட்டங்கள் படிப்படியாகவே வரலாற்றில் நிகழ்ந்து வேதத்திலும் வெளிப்படுத் தப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் அத்திட்டங்கள் அனைத்தும் உள்ளடக்க மாகவே தரப்பட்டிருந்தன. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அவை நிறைவேறின. பழைய ஏற்பாடு முடிவடைந்து புதிய ஏற்பாட்டில் மீட்பின் திட்டங்கள் வரலாற்று ரீதியில் நிறைவேறி, உலகளாவிய முறையில் ஜனங்கள் மீட்பின் பலன்களை வெளிப்படையாகவும், நடைமுறையில் அனுபவபூர்வமாகவும் அறிந்துகொள்வதை ஆரம்பித்து வைத்த நாளே பெந்தகொஸ்தே நாள்.

பெந்தகொஸ்தே நாளில் நடந்ததென்ன?

பெந்தகொஸ்தே நாளில் நடந்த நிகழ்ச்சிகளை முறையாக விளங்கிக்கொள்ள அப்போஸ்தலர் நடபடிகளின் முதலிரண்டு அதிகாரங்களையும் அவை அமைந்து காணப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில், அதாவது வரலாற்று, இலக்கண ரீதியில் முறையாக ஆராய்வது அவசியம். இந்த இரு அதிகாரங்களையும் இனி விளக்கமாகப் பார்ப்போம்.

1. சீடர்களுக்கு கிறிஸ்து தந்த கட்டளையின் பொருள் (அப்போஸ். 1:4-8)

அ. ஆவியின் வருகைக்காக எருசலேமில் காத்திருங்கள் (அப்போஸ். 1:5)

அப்போஸ்தலர் நடபடிகள் முதல் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து ஏற்கனவே தன்னுடைய சீடர்களை எருசலேமுக்குப் போய் பிதாவின் வாக்குத்தத்த நிறைவேறுதலுக்காகக் காத்திருக்கும்படிக் கட்டளையிட்டிருந்தார் என்று வாசிக்கிறோம் (லூக்கா 24:49; அப்போஸ். 1:5). அத்தோடு அவ்வாறு அவர்கள் எருசலேமில் தங்கியிருக்கும்போது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியிருந்தார் (யோவான் 14:16; 26; 16:7, 8; அப்போஸ். 1:4). பெந்தகொஸ்தேகாரர்கள் அப்போஸ். 1:5ஐ வைத்து ஆவியானவரைக் குறித்த ஒரு தவறான போதனையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இயேசு தன்னுடைய சீடர்களை எருசலேமில் ஆவியானவருடைய வருகைக்காகக் காத்திருக்கும்படி கூறியதாக இவ்வசனம் கூறுகிறது. இவ்வசனத்தில் ‘காத்திருங்கள்’ (ஷ்ணீவீt) என்ற வார்த்தைக்குப் பொருள் ‘தங்கியிருங்கள்’ என்பதுதான்.  ‘காத்திருங்கள்’ என்ற வார்த்தை அதைத் தவிர வேறு எந்த அர்த்தத்திலும் கிரேக்க மொழியில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், பெந்தகொஸ்தேகாரர்கள் சீடர்கள் வெறுமனே காத்திருக்காமல் ஆவியானவரின் வருகைக்காக உபவாசமிருந்து உறுதியாக ஜெபம் செய்தார்கள் என்று விளக்கமளித்து ஆவியின் வருகைக்காக ‘காத்திருப்புக் கூட்டம்’ (Tarrying meeting) வைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இந்தக் காத்திருப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உபவாசித்து ஜெபிப்பதன் மூலம் கிறிஸ்தவர்கள் ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அவர்களுடைய போதனை.

ஆனால், இயேசு தன்னுடைய சீடர்கள் ஆவியின் வருகைக்காக எதையும் செய்யவேண்டுமென்று ஒருபோதும் கட்டளையிடவில்லை. எருசலேமுக்குப் போன சீடர்களும் அப்படியாக ஆவியின் வருகைக்காக விசேடமான எந்த ஜெபத்தையும் செய்ததாக நாம் அப்பகுதியில் வாசிப்பதில்லை. அவர்கள் எருசலேமுக்குப் போய் ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்ததாக 1:14 வசனம் கூறுகிறது. இதை வைத்துக் கொண்டுதான் பெந்தகொஸ்தேகாரர்கள் காத்திருப்புக்கூட்ட ஜெபத்தை நியாயப்படுத்து கிறார்கள். ஆனால், இந்த வேதப்பகுதியில் அந்த வசனத்திற்கு என்ன பொருள் என்பதை அவர்கள் நிதானமாக ஆராய்ந்து பார்க்கத் தவறிவிட்டார்கள்.  எருசலேமுக்குப் போன சீடர்கள் தங்குவதற்கு வசதியாக ஒரு இடத்தைப் பார்த்து அங்கே மேல்வீட்டில் தங்கினார்கள் என்று 1:13ம் வசனம் கூறுகிறது. அப்படி இருந்த காலங்களில் அவர்கள் சகஜமாக எல்லாக் கிறிஸ்தவர்களும் செய்வது போல் தங்களுடைய நேரத்தை ஜெபத்தில் கழித்தார்கள். அதாவது, வேத வசனங்களை ஒருவரோடொருவர் கலந்துகொண்டு ஜெபம் செய்தார்கள். அன்று அவர்கள் முக்கியமான வேறு ஒரு காரியத்தையும் ஒருமனப்பட்டு செய்தார்கள் என்று வாசிக்கிறோம். அப்போஸ்தலர்களில் பன்னிரெண்டாம் நபரை அவர்கள் தெரிவுசெய்தார்கள். அதை அவர்கள் நிச்சயம் ஜெபத்துடன் தான் செய்திருப்பார்கள். மிகுதியான நேரங்களில் அவர்கள் எருசலேம் ஆலயத்துக்கு விஜயம் செய்திருப்பார்கள். வேறு எத்தனையோ காரியங்களையும் நிச்சயம் செய்திருப்பார்கள். அன்று அவர்கள் செய்த எல்லாக் காரியங்களையும் நமக்கு விளக்குவது லூக்காவின் நோக்கமல்ல. ஆனால், அவர்கள் ஆவியின் வருகைக்காகத்தான்  முழுநாளும் கூடியிருந்து உபவாச ஜெபம் செய்தார்கள் என்று 1:5க்கு விளக்கம் கொடுப்பது முழுத்தவறு. அந்தப்பகுதியில் அப்படியான ஒரு விளக்கம் கொடுக்கப்படவில்லை.

அத்தோடு 2:1ல் சீடர்கள் ஒருமனப்பட்டு பெந்தகொஸ்தே நாளில் ஓரிடத்தில் கூடியிருந்தபோது ஆவியானவர் வருகை தந்தார் என்று வாசிக்கிறோம். சீடர் கள் அந்நாளில் மற்ற நாட்களில் செய்ததுபோல் ஐக்கியத்தில் கூடிவந்திருந்தார் களே தவிர ஆவியின் வருகைக்காக ஜெபக்கூட்டம் நடத்தவில்லை. ‘ஒருமனப் பட்டு கூடியிருந்தார்கள்’ (met in a place with one mind) என்பதற்கு ஜெபத்தில் கூடிவந்தார்கள் என்று விளக்கம் கொடுப்பது முழு முட்டாள்தனமாகும். அதற்கு அப்படியொரு விளக்கம் வேதத்தில் கொடுக்கப்படவில்லை. ஒருமனப் படாமல் பலர் எப்படி ஓரிடத்தில் கூடிவர முடியும்? ஆகவே, இந்த இரண்டு அதிகாரங்களும் ஆவியின் வருகைக்காக சீடர்கள் காத்திருப்புக் கூட்டம் நடத்தி னார்கள் என்ற போதனையை எந்தவிதத்திலும் நியாயப்படுத்துவதாக இல்லை.

அதுமட்டுமல்லாமல், இயேசு சீடர்களைப்பார்த்து ஆவியின் வருகைக்காக எருசலேமில் காத்திருங்கள் என்று மட்டும்தான் சொன்னார். அதாவது ஆவியானவர் எப்போது வருவார் என்பதை அவர் சீடர்களுக்கு தெரிவிக்க வில்லை. ஆவியின் வருகைக்காக அவர்கள் எதையும் செய்ய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. இன்னுமொரு உண்மையையும் கவனிப்பது அவசியம். அதாவது, ஆவியானவர் காற்று வீசுவதுபோல் தாம் நினைத்த வேளையில் வருவார், கிரியை செய்வார் என்று ஏற்கனவே இயேசு நிக்கொதேமுவுக்கு யோவான் 4ல் கூறியிருப்பதை நினைவு கொள்ளுங்கள். அதன்மூலம் ஆவியானவர் எந்நேரத்தில் எப்படி வரவேண்டும் என்று ஒருவரும் தீர்மானிக்கவோ அல்லது ஆவியானவருக்குக் கட்டளையிடவோ முடியாது என்று இயேசு விளக்கியுள்ளார். எனவே, ஆவியானவரின் வருகைக்காக சீடர்கள் எருசலேமில் எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதுதான் அப்போஸ்தலர் நடபடிகளின் முதலிரண்டு அதிகாரங்களும் போதிக்கும் உண்மை.

ஆ. பூமியின் கடைசிபரியந்தமும் எனக்கு நீங்கள் சாட்சிகளாயிருப்பீர்கள் (அப்போஸ். 1:8)

எருசலேமைவிட்டுப் போகாமல் ஆவியின் வருகைக்காக காத்திருங்கள் என்று இயேசு சொன்னதன் அர்த்தம் சீடர்களுக்கு விளங்கவில்லையென்பதை அவர்களுடைய பதில் உணர்த்துகிறது. இயேசு இஸ்ரவேலுக்கு ராஜாவாக இருந்து அதனை மறுபடியும் உலகில் வல்லமையுள்ள நாடாக மாற்றப் போகிறார் என்று அவர்கள் தப்புக்கணக்குப் போட்டார்கள் (1:7). இயேசு அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் 1:8ம் வசனத்தில் இன்னுமொரு முக்கியமான உண்மையை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த வசனத்தில் இயேசு போதித்த சத்தியம் பெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இந்த வசனத்தை பெந்தகொஸ்தேகாரர்கள் மட்டுமல்லாமல் சுவிசேஷ கிறிஸ்தவர்களும் தவறான முறையில் விளங்கிக் கொண்டிருக் கிறார்கள். இந்த வசனத்தில் இயேசு, “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றார். இந்த வசனத்தை இனி கவனமாக ஆராய்வோம்.

இயேசு முதலில் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வருவார் என்று சொன்னார். அதாவது, அவர் தான் நினைத்த வேளையில், உங்களுடைய எந்தவிதமான உதவிக்கோ, செயல்களுக்கோ அவசியமில்லாமல், நீங்கள் எதிர்பார்த்திராத வேளையில் வருவார் என்று சொன்னார். இதன் மூலம் ஆவியின் வருகைக்காக விசுவாசிகள் ஜெபித்துக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இயேசு தெளிவாக விளக்குகிறார். விசுவாசிகள் ஜெபத்தின் மூலமாக ஆவியின் வருகையைத் தீர்மானிக்க முடியாது; அவரைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை இதன் மூலம் சந்தேகமற விளங்கிக் கொள்ள முடிகிறது.

இரண்டாவதாக, ஆவியானவர் வருகிறபோது சீடர்களுக்கு வல்லமையைத் தருவார் என்று இயேசு சொன்னார். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை power என்பதாகும். இதை வைத்துக் கொண்டு அது எந்தவிதமான வல்லமை என்பதை பெந்தகொஸ்தேகாரர்கள் தாங்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்த வசனமே அந்த வல்லமை எப்படிப்பட்டது, அது எதற்காக அளிக்கப்படவிருக்கிறது என்பதை தெளிவாக விளக்குகிறது. முழுவசனத்தையும் அது தரப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் வாசிக்கும்போதே அதன் மெய்யான அர்த்தத்தை விளங்கி¢க் கொள்ள முடியும் என்பது பெந்தகொஸ்தேகாரர்களுக்குப் புரிவதில்லை. இயேசு இந்த வசனத்தின் மூலம் வரப்போகின்ற ஆவியானவர், சீடர்கள் தனக்கு சாட்சியாக பூமியின் கடைசி பரியந்தமும் இருக்கும்படியான வல்லமையைத் தருவார் என்றே சொன்னார். அதாவது, இயேசுவின் சுவிசேஷத்தை உலகெங்கும் எடுத்துப் பிரசங்கிப்ப தற்கான வல்லமையை ஆவியானவர் சீடர்களுக்குத் தருவார் என்பதுதான் இதற்கு சரியான விளக்கம். மீட்பின் இரகசியத்தையும், கிறிஸ்துவின் பரிகாரப் பலியையும், அவர் இலவசமாகக் கொடுக்கும் இரட்சிப்பையும் ஒரு மனிதன் ஆவியின் பலத்தால் அல்லாமல் பிரசங்கிக்கவே முடியாது. பவுல் அப்போஸ் தலன் தெசலோனியருக்கு எழுதிய நிருபத்தில், எங்கள் சுவிசேஷம் உங்களிடத் தில் வசனத்தோடு மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும் . . . வந்தது (1 தெசலோ. 1:5) என்று எழுதியபோது, இங்கே நாம் அப்போஸ். 1:8ல் வாசிக்கும் ஆவியின் வல்லமையைத்தான் குறிப்பிடுகிறார். ஆவியின் வல்லமையில்லாமல் ஒருவரும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க முடியாது. கிறிஸ்துவை பிரசங்கத்தில் மேன்மைப்படுத்துவதே அவருக்கு சாட்சியாக இருக்கும் செயல். நீதிமன்றத்தில் ஒருவருக்கு துணையாக சாட்சியமளித்து அவருடைய நீதியை நிலைநிறுத்துவதற்கு ஒப்பானது இயேசுவுக்கு சாட்சிய மளிப்பது. அதைச் செய்ய ஆவியின் வல்லமை அவசியம். இதைத்தான் அப்போஸ். 1:8 விளக்குகிறது. இது தெரியாமல் ஆவியானவர் அந்நிய பாஷை பேசவும், அற்புதம் செய்யவும் எல்லோருக்கும் வல்லமை தருவார் என்ற தவறான போதனைகளை பெந்தகொஸ்தேகாரர்கள் அளித்து வருகிறார்கள்.

இ. நீங்கள் பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் (அப்போஸ். 1:4)

இந்த வசனத்தையும், அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் பெந்தகொஸ்தே நாளில் நிகழ்ந்தவற்றையும் வைத்துத்தான் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் பெந்தகொஸ்தேகாரர்களின் ‘பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்’ என்ற போதனை உருவானது. அதாவது, விசுவாசி கள் தங்கள் வாழ்க்கையில் வல்லமையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதே அந்தப்போதனை. விசுவாசிகள் ஏற்கனவே ஆவியானவரை முழுமையாகப் பெற்றுக்கொண்டிருந்த போதும் இந்தவகையில் ஆவியின் அபிஷேகத்தைப் பெறாவிட்டால் வாழ்க்கையில் வெற்றிகரமாக கிறிஸ்துவை மகிமைப்படுத்த முடியாதென்கிறது இந்தப் போதனை. அத்தோடு ஆவியின் அபிஷேகத்துக்கு அடையாளமாக அந்நிய பாஷையும் பேச வேண்டும் என்கிறார்கள் பெந்த கொஸ்தேகாரர்கள். இது, இரண்டாம் ஆசீர்வாதப் போதனை (Second Blessing) என்று வேதவல்லுனர்களால் வர்ணிக்கப்படுகின்றது. (கிறிஸ்தவ வரலாற்றில் அதற்கு முன்பு இத்தகைய போதனை இருக்கவில்லை என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீர்திருத்தவாதிகளும், தூய்மைவாதிகளும் அத்தகைய போதனைகளை ஒருபோதும் போதிக்கவில்லை.) ஆனால், இந்த வசனத்தில் இயேசு சொன்னதுதான் என்ன? என்பதை நாம் ஆராய்வது அவசியம். இயேசுவின் வார்த்தைகளை முறையாக விளங்கிக்கொள்ள வேண்டு மானால், நாம் இந்த வசனத்தை இயேசு இந்தப்பகுதியில் 8ம் வசனம்வரை சொன்ன அத்தனை காரியங்களின் அடிப்படையிலும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த வசனத்திற்கு மட்டும் தனிப்பட்டவிதத்தில் விளக்கமளிக்க முடியாது. அப்படிச்செய்வது வேதத்தைத் திரித்துப் போதிப்பதில் போய் முடியும்.

இயேசு ஏற்கனவே, பரிசுத்த ஆவியானவர் வரும்போது சீடர்கள் உலகம் முழுவதும் சாட்சிகளாக இருக்கும்வகையில் அவர்களுக்கு வல்லமையைத் தரவிருப்பதாக அறிவித்திருக்கிறார் (லூக்கா 24:47-49; அப்போஸ். 1:8). அதற்கும் இந்த வசனத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இயேசு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் செய்வார் என்று யோவான் ஸ்நானன் ஏற்கனவே தன்காலத் தில் பிரசங்கம் செய்திருப்பதை உதாரணம் காட்டி இயேசு சீடர்களுக்கு இவ்வசனத்தில் நினைவூட்டுவதைப் பார்க்கிறோம் (மத்தேயு 3:11; லூக்கா 3:16). யோவான்ஸ்நானன் பிதா அளித்துள்ள வாக்குத்தத்தத்தின்படி பெந்தகொஸ்தே நாளில் நடக்கவிருப்பதையே தன்காலத்தில் போதித்திருந்தான். யோவானின் போதனையின் உள்ளர்த்தத்தை சீடர்கள் புரிந்துகொண்டிராத போதும் அதுபற்றி அறிந்திருந்தார்கள். இயேசுவும் இங்கே அதை நினைவுபடுத்துகிறார்.

இந்த வசனத்தை 1:8 டுடன் இணைத்துப் படித்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கிறபோது விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் பரிசுத்தத்தில் உயரவும், கிறிஸ்துவை அதிகம் மேன்மைப்படுத்தவும் இரண்டாவது ஆசீர்வாதமாக இயேசு பரிசுத்த ஆவியை அளிக்கப்போவதாக இந்த வசனங்கள் நிச்சயம் போதிக்கவில்லை. ஏற்கனவே விசுவாசிகளாக இருந்த சீடர்கள் சுவிசேஷத்தை தைரியத்தோடு எடுத்துப் பிரசங்கித்து சபை அமைப்பதற்கு பரிசுத்த ஆவியின் வரலாற்று வருகையின் (Historical arrival) மூலம் வல்லமையடைவார்கள் என்று மட்டுமே இயேசு இங்கே விளக்குவதைக் காணலாம். அதற்கு மேல் இந்த வசனங்களுக்கு விளக்கம் கொடுக்க முயல்வது இலக்கண வரம்பை மீறி விளக்கம் கொடுப்பதில் போய்முடியும். அதைத்தான் பெந்தகொஸ்தேகாரர்கள் செய்திருக்கிறார்கள்.

2. பரிசுத்த ஆவியின் வருகை (அப்போஸ். 2:1-13)

பெந்தகொஸ்தே நாளில் சீடர்கள் 120 பேரும் எருசலேமில் ஓரிடத்தில் கூடி இருந்தபோது பிதாவின் வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவர் யோவான் பிரசங்கித்தது போலவும், இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு அறிவித்தபடியும் வருகை தந்தார் என்று அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். பரிசுத்த ஆவி வருகை தந்தபோது நடந்த நிகழ்ச்சிகளை விளக்க மாக ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.

அ. ஆவியின் வருகையின் வெளிப்புற அடையாளங்கள் (2:1-3)

முதலில் பலத்த காற்று அடிப்பது போன்ற ஒரு பெருமுழக்கம் உண்டாகி 120 பேரும் அமர்ந்திருந்த இடம் முழுவதையும் நிரப்பியது (2:2). அது காற்று அல்ல பலத்த சத்தம் மட்டுமே. வானத்தில் இருந்து உருவாகிய அந்த சத்தம் சீடர்கள் 120 பேரும் அமர்ந்திருந்த இடத்தை நிரப்பியபோதும், அந்த இடத்துக்கு வெளியில் எருசலேம் நகரில் தொலை தூரத்துக்கும், அனேகர் அதைக் கேட்கக்கூடியதாக இருந்தது என்பதை 6ம் வசனம் விளக்குகிறது. இந்த சத்தம் கர்த்தர் அளிக்கப்போகும் வல்லமையைக் குறிப்பதாகவும், எருசலேமில் இருந்த மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அனுப்பப்பட்டது. எருசலேம் மக்கள் கூட்டம் 120 பேரும் இருந்த இடத்தைத் தேடி வரும் வரையில் அந்த சத்தம் அன்று தொடர்ந்திருந்திருக்கின்றது.

இரண்டாவதாக, அக்கினிபோல் தோற்றமளித்த, பிரிந்திருந்த நாவுகள் 120 சீடர்கள் மேலும் (ஆண்களும், பெண்களும்) வந்திறங்கியது. அவ்வாறு வந்திறங்கிய நாவுகள் அக்கினியல்ல, அக்கினிபோன்ற தோற்றத்தை மட்டுமே அளித்தனவாயிருந்தன. எவ்வளவு காலத்துக்கு அந்நாவுகள் தொடர்ந்து அவர்கள் மேல் இருந்தன என்பதை இப்பகுதி விளக்கவில்லை. ஆனால், மக்கள் கூட்டம் அந்த இடத்துக்கு வந¢து சேர்ந்தபோது அந்நாவுகள் தொடர்ந்திருக்க வில்லை என்பது தெரிகிறது. ஏனெனில், கூட்டம் அந்நாளில் தாம் கேட்டதை மட்டுமே விபரிப்பதை இப்பகுதியில் வாசிக்கிறோம். அவர்கள் இந்நாவுகளைப் பார்த்திருந்தால் அது பற்றியும் பேசியிருந்திருப்பார்கள். இந்நாவுகள் முகிழ்கூட்டம்போல் வந்திறங்கி பின்பு தனித்தனியாகப் பிரிந்து 120 பேர்களின் தலைகள் மேலும் அமர்ந்தன என்பதையும் அறிந்து கொள்கிறோம். இது லூக்கா 3:16ல் யோவான் சொன்னதை நினைவுபடுத்துகிறது. “அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.” பெந்தகொஸ்தே நாளில் நடந்ததை வைத்தே லூக்கா 3:16 ஐயும், மத்தேயு 3:11 ஐயும் விளங்கிக் கொள்ள வேண்டும். இடிபோன்ற பெருமுழக்கம் அந்த வீட்டை நிரப்பியது. ஆனால், அக்கினிபோன்ற நாவுகள் அங்கிருந்த நூற்றிருபது பேர் மேல் மட்டும் தனித்தனியாக வந்திறங்கின. இது பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய வல்லமையால் அந்த நூற்றிருபது பேரை மட்டுமே நிரப்பினார் என்பதை விளக்குகிறது. நூற்றிருபது பேரும் அன்று அந்த அனுபவத்தை அடைந்தார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இடிபோன்ற சத்தத்தைப் போலவே இந்த நாவுகளும் அற்புதமாக அன்று கர்த்தரால் கொடுக்கப்பட்டது.

ஆ. ஆவியானவரின் வருகையும், அந்நிய பாஷையும் (2:6-47)

அந்நாளில் நூற்றிருபது சீடர்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள் என்று 2:6ம் வசனத்தில் வாசிக்கிறோம். கிறிஸ்துவின் சீடர்கள் ஏற்கனவே கிறிஸ்துவை விசுவாசித்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய இரட்சிப்பில் எந்தக் குறைபாடும் இருக்கவில்லை. இரட்சிப் புக்கும், பரிசுத்த வாழ்க்கையை இவ்வுலகில் வெற்றிகரமாக வாழ்வதற்கும் தேவையான அனைத்தையும் அவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் அடைந் திருந்தார்கள். இரட்சிப்புக்குரிய விசுவாசத்தை பரிசுத்த ஆவியைப் பெறாமல் ஒருவரும் அடைய முடியாது.

(1) ஆவியானவரின் வருகையின் வரலாற்று முக்கியத்துவம்

ஆகவே, பரிசுத்த ஆவியினால் சீடர்கள் நிரப்பப்பட்டார்கள் என்று இங்கு எழுதப்பட்டிருப்பதின் இறையியல் விளக்கத்தை நாம் முறையாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஆவியின் நிரப்புதல் ஒரு மனிதனுக்கு விசுவாசத்தையோ, பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதற்கோ அளிக்கப்பட்ட நிரப்புதல் அல்ல. இது ஏற்கனவே விளக்கப் பட்டிருந்த ஓர் புதிய வாக்குத்தத்தத்தின் நிமித்தமாக சீடர்களுக்கு அளிக்கப் பட்டது. இந்த வாக்குத்தத்தத்தை அப்போஸ். 1:5; யோவான் 14:16, 17; 15:26; 16:7 ஆகிய பகுதிகளில் வாசிக்கிறோம். இந்த வாக்குத்தத்தம் அளிக்கப்பட்தற்கு இந்த உலகில் கிறிஸ்து ஏற்படுத்தப்போகும் சபையே காரணம். பெந்தகொஸ்தே நாளில் எருசலேமில் இருந்த நூற்றிருபது பேரும் அந்த சபையின் முதல் அங்கத்தவர்கள். பழைய ஏற்பாட்டில் ஏற்கனவே விசுவாசிகள் காணப்பட்டு, அவர்கள் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் காணப்பட்டபோதும், புதிய ஏற்பாட்டுக் காலத்திலேயே கிறிஸ்துவின் மீட்பின் நிறைவேற்றுதலுக்குப்பிறகு ஓர் நிறுவனமாக அப்போஸ்தலர்களைக் கொண்டு திருச்சபை அமைக்கப் பட்டது. அந்த அடிப்படையில் பழைய ஏற்பாட்டில் திருச்சபையை நாம் பார்ப்பதில்லை. (பழைய ஏற்பாட்டில் திருச்சபை இல்லை என்ற டிஸ்பென்சேஷனலிசக் கோட்பாடு வேதத்தில் இல்லாததொன்று). புதிய ஏற்பாட்டில் இந்த சபை சகல வல்லமையோடும் அமைந்து, சுவிசேஷத்தை உலகெங்கும் பிரசங்கித்து யூதர்களையும், புறஜாதியினரையும் தனக்குள் உள்ளடக்கி இருப்பதை ஆரம்பித்து வைக்கவே பரிசுத்த ஆவியானவர் சீடர்களை நிரப்பினார். இது புதிய ஏற்பாட்டு சபை ஆரம்பமானது பற்றிய வரலாற்று நிகழ்ச்சி. அத்தோடு யூதக் கிறிஸ்தவர்களும், புறஜாதிக் கிறிஸ்தவர் களும் இதுவரை இல்லாதவகையில் இணைந்து பிதாவின் வாக்குத் தத்தத்தின் படி சகல ஆசீர்வாதங்களையும் ஒரே குலமாக திருச்சபையில் அங்கத்தவர் களாக இருந்து அனுபவிக்கப்போவதின் ஆரம்ப நாளே பெந்தகொஸ்தே நாள். இது பழைய ஏற்பாட்டில் இரகசியமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம்; புதிய ஏற்பாட்டில் நிறைவேறிய பிதாவின் வாக்குத் தத்தம். ஆகவே, பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் வருகையும் இந்தவகையில் திருச்சபை அமைப்போடு தொடர்புடைய ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். பெந்தகொஸ்தே நாளில் நடந்தது ஒரு மாபெரும் வரலாற்று எழுப்புதல்.

(2) வெவ்வேறு பாஷையில் சீடர்கள் பேசியதன் காரணம்

அடுத்ததாக நூற்றிருபது பேரும் ஆவியானவர் கொடுத்த வரத்தின்படி வெவ்வேறு மொழிகளில் (other languages) பேசத் தொடங்கினார்கள் என்று வாசிக்கிறோம் (2:4). இங்கே நூற்றிருபது பேரும் இன்ன வரம்தான் வேண்டும் என்று கேட்டு ஏற்கனவே அதற்காக ஜெபிக்கவில்லை. அவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதுகூட தெரியாதிருந்தது. வெவ்வேறு பாஷைகளில் பேசும் வரத்தை ஆவியானவர் தன்னுடைய சித்தப்படி அளித்தார். ஆவியானவர் அவர்களை ஏன் வெவ்வேறு பாஷைகளில் பேசும்படிச் செய்தார் என்பதற்கான விளக்கத்தை இனி வரப்போகும் வசனங்கள் விளக்குகின்றன.

இப்படியாக நூற்றிருபதுபேரும் வெவ்வேறு பாஷைகளில் பேச ஆரம்பித்த போது, ஆரம்பத்தில் இடி முழக்கம்போல அவர்கள் இருந்த இடத்தை நிரப்பிய சத்தத்தைக் கேட்டு பிரமித்த, எருசலேமுக்கு வருகை தந்திருந்த ஏராளமான யூதர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர்.  அப்படி வந்தவர்கள் அந்த சீடர்கள் இருந்த வீட்டைச் சுற்றி நின்று உள்ளே நடப்பதை வியப்போடு பார்த்தார்கள். அவர்களை மேலும் திகைக்க வைத்த இன்னுமொரு செயல் பல நாடுகளில் இருந்து எருசலேம் பண்டிகைக்காக வந்திருந்த மக்கள் பேசிய பாஷைகளில் நூற்றிருபதுபேரும் கர்த்தரை மகிமைப்படுத்தி ஆராதனை செய்ததுதான். அந்த மக்கள் எந்தெந்த நாடுகளில் இருந்து வந்திருந்தார்கள் என்பதை 2:9-11 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. வீட்டைச் சுற்றி நின்ற மக்கள நம்முடைய பாஷைகளில் இவர்கள் எப்படி தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்று கேட்டு வியந்தார்கள்.

இதிலிருந்து சீடர்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்திராத உலக மொழிகளில் அன்று தேவனை மகிமைப்படுத்தினார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். கலிலேயர்களான இவர்கள் தங்களுடைய பாஷைகளில் எப்படிப் பேசுகிறார்கள் என்று கேட்டு மக்கள் வியந்தார்கள் (2:7, 8). அவர்கள் பேசியதை வந்திருந்த மக்களால் நன்றாகக் கேட்டுப்புரிந்து கொள்ள முடிந்தது. இது ஆவியானவர் சீடர்களில் அன்று செய்த அற்புதம். இதிலிருந்து அந்நிய பாஷை என்பது உலகத்தில் காணக்கூடிய ஒரு மொழி என்பதையும், ஒருவருக்கும் புரியாத வெறும் அர்த்தமற்ற சத்தம் அல்ல என்பதையும் தெரிந்து கொள்கிறோம். அத்தோடு சீடர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசியபோது அங்கே எவரும் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு அது தங்கள் மொழி என்பதை நன்றாக அடையாளம் காண முடிந்தது (2:8).

அடுத்ததாக, இப்படியாக அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசியதற்குக் காரணம் அன்று கூடியிருந்த வேற்று நாட்டு மக்கள் அதைக் கேட்டு சிந்திக்க வேண்டும் என்பது தேவனின் திட்டமாக இருந்ததுதான். வெவ்வேறு மொழிகளில் பேசிய சீடர்கள் எதையும் உளரிக்கொட்டாமல் தேவனை மகிமைப்படுத்தினார்கள் என்று வாசிக்கிறோம். சீடர்கள் தேவனை மகிமைப் படுத்தினார்கள் என்று கூடிநின்ற மக்கள் சொன்னதாக இப்பகுதி சொல்லு கிறது. அதாவது, சீடர்கள் சுவிசேஷ மகத்துவத்தை வெவ்வேறு மொழிகளில் அன்று பேசியதை வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த யூதர்களால் கேட்டுணர முடிந்தது. ஆவியானவர் சீடர்களில் செய்த அற்புதம் தேவனுடைய வசனத்தை பல்வேறு நாட்டு மக்களும் கேட்கக்கூடிய வசதியை அன்று ஏற்படுத்தியது. பேதுரு, வியப்போடு தங்களைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அன்று எடுத்து விளக்கினான் என்று 2:14ல் வாசிக்கிறோம். ஆகவே, அன்று அந¢நிய பாஷை சீடர்களுடைய சொந்த ஆத்மீக நன்மைக்காக அளிக்கப்படவில்லை என்பதையும், ஆராதனை வேளையில் பயன்படுத்துவதற்காகவோ அல்லது சீடர்கள் தங்களுடைய ஆவிக்குரிய வரமாகப் பயன்படுத்தவோ அளிக்கப்படவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவை பெந்தகொஸ்தே நாளில் கொடுக்கப்பட்ட தற்கான ஒரே காரணம் சுவிசேஷ இரகசியம் (Gospel mystery) வெளிப்படுத்தப் பட்டு சகல மக்களும் இயேசுவை விசுவாசிப்பதற்கு ஆரம்பகட்டமாக, அப்போஸ்தலர் 1:8ன்படி யூதர்கள் மத்தியில் ஆவியின் வருகையின் மூலமாக சுவிசேஷ ஊழியத்தை ஆரம்பித்து வைப்பதற்காகத்தான் என்பதை இப்பகுதியைக் கவனத்தோடு வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

(3) பேதுருவின் பிரசங்கம்

அப்போஸ்தலர் 2:14-47 வரையுள்ள வசனங்களில் பேதுருவின் பிரசங்கத்தின் பொருளை ஆராய்வதும் அவசியம். பேதுரு, அன்று நடந்த நிகழ்ச்சிபற்றி ஏற்கனவே தீர்க்கதரிசனமாக யோவேலினால் பழைய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கிறது என்றார். அதன் நிறைவேற்றத்தையே நீங்கள் காண்கிறீர்கள் என்று யூதர்களைப் பார்த்து சொன்னார். 2:17-21 வரையுள்ள வசனங்களில் யோவேலின் புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தை பேதுரு இங்கே நினைவூட்டுகிறார். இந்த வசனங்களுக்கு நாம் மனம்போன போக்கில் விளக்கங் கொடுக்கக்கூடாது. இயேசுகிறிஸ்துவின் முதல் வருகையில் இருந்து இரண்டாம் வருகை வரையுள்ள காலப்பகுதியில் நிகழப்போகும் காரியங்கள் சுருக்கமாக தீர்க்கதரிசனமாக இங்கே விளக்கப்பட்டுள்ளது. இவ்வசனங்களில் அடையாள மொழி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. அதாவது வெளிப்படுத்தல் விசேஷத்தில் காணப்படும் அதே எழுத்துநடையை இங்கே பார்க்கிறோம். இதனை ஆங்கிலத்தில் Apoclyptic எழுத்து நடை என்பார்கள். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை அடையாளமாக விளக்குவது இந்த எழுத்து நடையின் சிறப்புதன்மையாகும். இங்கே விளக்கப்பட்டுள்ள அனைத்தும் பெந்தகொஸ்தே நாளில் நிகழ்ந்து முடிந்துவிடவில்லை. அந்த நடவடிக்கைகளில் முக்கியமானது ஆவியின் வருகையாகும். அதைத்தான் பேதுரு இந்த வசனங்களில் வலியுறுத்துகிறார். ஆவியானவர் வருகிறபோது இதுவரை இருந்திராதவகையில் அனேகர் ஆவியானவரை அடைவார்கள். அதாவது, அவரைப் பெற்று இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வார்கள் (2:21) என்கிறார் பேதுரு. அந்த இரட்சிப்பைத் தருவதற்காக வந்த இயேசுவை நீங்கள் விசுவாசிக்க மறுக்கிறீர்கள் என்று பேதுரு பிரசங்கித்தார். அவருடைய பிரசங்கத் தின் இறுதியில் பலர், அதாவது 3000 பேர் தங்களுடைய இருதயத்தில் குத்தப் பட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள் என்று வாசிக்கிறோம். அன்று 3120 பேரைக் கொண்டு புதிய ஏற்பாட்டு திருச்சபை ஒரு அமைப்பாக இந்த உலகத்தில் உதயமானது.

3. பெந்தகொஸ்தே ஒரு வரலாற்றுச் சம்பவம்

இதுவரை பெந்தகொஸ்தே நாளில் நிகழ்ந்த காரியங்களை முறையாக ஆராய்ந்து வந்திருக்கிறோம். இனி இந்த நாளின் நிகழச்சிகள் பற்றிய மிக முக்கியமான அம்சமொன்றை விளக்குவது அவசியம். அதாவது, பெந்த கொஸ்தே நாளின் நிகழ்ச்சிகள் வரலாற்று சம்பவமாகும் (Historical incident). அவை வரலாற்றில் நடந்து முடிந்துபோன நிகழ்ச்சிகள். பிதாவினால் வாக்குத் தத்தமாகக் கொடுக்கப்பட்டு, பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக உரைக்கப் பட்டு புதிய ஏற்பாட்டில் நடந்து முடிந்த வரலாற்று நிகழ்ச்சி பெந்தகொஸ்தே சம்பவங்கள். உதாரணத்திற்கு இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்ததும¢, நேரு பிரதமராக இருந்ததும், காந்தி வாழ்ந்ததும் வரலாற்று நிகழ்ச்சிகள். இன்று ஒருவரும் மறுபடியும் 1947க்காகவும், நேருவுக்கும், காந்திக்கும் அலைந்து திரிவ தில்லை. அவை வரலாற்று நிகழச்சிகள் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக் கும் தெரியும். அதுபோல்தான் பெந்தகொஸ்தே நாளின் நிகழ்ச்சிகள். இந்த வரலாற்று சம்பவத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்தும் எதிர் பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பது வரலாறு என்றால் என்னவென்று தெரியாத மனிதர்கள் செய்யும் காரியமாக இருக்கும். இந்த வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அனேக உண்மைகள் இருக்கின்றன. அந்த உண்மைகள் மட்டுமே எக்காலத்துக்கும் பொருத்தமானவை. ஆனால், நடந்து முடிந்த சம்பவங்கள் மறுபடியும் வரலாற்றில் தொடர்ந்து நடக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

ஆவியானவர் உலகளாவிய கிரியைகளை ஆரம்பிக்க பெந்தகொஸ்தே நாளில் வந்தது முடிந்துபோன ஒரு வரலாற்று நிகழ்ச்சி. வந்துவிட்ட ஆவியானவரை நாம் தொடர்ந்து வா, வா என்று தேடி அலையக்கூடாது. அவர் இன்று தன் கிரியைகளை உலகில் நடத்திக் கொண்டிருக்கிறார். சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் பாவிகளை (யூதர்களையும், புறஜாதியாரையும்) மனந்திரும்பச் செய்து அவர்களுக்கு இரட்சிப்பை அளித்து திருச்சபைக்குள் இணைத்துக் கொண் டிருக்கிறார். இதை விளங்கிக் கொள்ளாமல் காத்திருப்புக் கூட்டம் நடத்தி ஆவியானவருக்காக தொடர்ந்து வீணாக அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். வேதத்தை எப்படி விளங்கிக் கொள்வது என்பது தெரியாததே அதற்குக் காரணம். பெந்தகொஸ்தே நாளில் உலகில் திருச்சபை ஜீவனுள்ள ஒரு அமைப்பாக நிறுவப்பட்டுவிட்டது. அந்தத் திருச்சபையை இந்த உலகில் கட்டி எழுப்புவதே நமது கடமை. சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அதை விசுவாசிக்கும் ஆத்துமாக்களை மட்டும் கொண்டு திருச்சபைகள் சகல நாடுகளிலும் கட்டி எழுப்பப்பட வேண்டும். அதற்கான வல்லமையைத்தான் கிறிஸ்து 1:8ன்படி திருச்சபைக்கு அளித்திருக்கிறார். இதுவே பெந்தகொஸ்தே நாள் நிகழ்ச்சிகளின் வரலாற்று முக்கியத்துவம்.

(வளரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s