பெந்தகொஸ்தே தினத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து கடந்த இதழில் விளக்கமாகப் பார்த்தோம். இதுவரை நாம் பார்த்துள்ள விளக்கங்களின்படி பெந்தகொஸ்தே நாள் ஓர் வரலாற்று சிறப்பு மிக்க நாள்; சுவிசேஷ இரகசியம் பகிரங்கமாக உலகெங்கும் அறி விக்கப்பட்ட ஆரம்ப நாள்; பரிசுத்த ஆவியின் உலகளாவிய ஊழியம் ஆரம் பித்த நாள்; புதிய ஏற்பாட்டில் என்றுமிருந்திராதவகையில் விசுவாசிகளான யூதர்களையும், புறஜாதியாரையும் கொண்டு திருச்சபை அமைக்கப்பட்ட நாள். இத்தன்மைகளால் பெந்தகொஸ்தே நாள் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நாளாக இருக்கிறது. மேலே நாம் விளக்கிய அம்சங்கள் ஏற்கனவே வரலாற்றில் ஆரம்பமாகி நிகழ்ந்து கொண்டிருப்பதால் மறுபடியும் பெந்தகொஸ்தே நாள் தொடர்ந்தும் வரலாற்றில் இருக்க வேண்டும் என்று கூறுவது வேதபோதனைகளுக்கெல்லாம் முரணானதொரு விளக்கம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். பெந்தகொஸ்தே நாளின் மெய்த் தன்மையை அறியாதவர்களே இந்தத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
இருந்தபோதும் முதல் நூற்றாண்டில் பெந்தகொஸ்தே தினத்தில் இயேசு கிறிஸ்துவால் ஆதிசபை அமைக்கப்பட்ட காலத்தில் நாம் மேலே பார்த்த திருச்சபை அமைப்போடு தொடர்புடைய வரலாற்று அம்சங்கள் எருசலேமி லேயே ஆரம்பித்து அங்கிருந்த மக்களுக்கும், அங்கு வந்திருந்த பெருந்தொகை யினரான மக்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. எருசலேமுக்கு வெளியில் இருந்தவர்களுக்கும், உலகின் ஏனைய பகுதிகளில் இருந்தவர்களுக்கும் திருச்சபை சம்பந்தமான இந்த வரலாற்று அம்சங்கள் நிகழ்ந்ததோ அல்லது அவற்றின் தவிர்க்க முடியாத அவசியமோ உடனடியாகத் தெரியாதிருந்தது. திருச்சபை தொடர்ந்து உலகமெங்கும் பெந்தகொஸ்தே நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் நிறுவப்படவிருந்ததால் அந்நிகழ்ச்சிகளை முழு உலகும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமிருந்தது. பெந்தகொஸ்தே தினத்தில் நடந்த நிகழ்ச்சிகளை உலகம் அறியாமல் இருந்தால் சுவிசேஷப் பிரசங்கத்தால் எருசலேமுக்கு வெளியில் நிறுவப்படும் சபைகள் எருசலேமில் நிறுவப்பட்ட சபைகளைவிட வித்தியாசமான முறையில், அவற்றிற்கு எதிரானவையாகக்கூட அமைந்துவிடும் ஆபத்து இருந்தது. இயேசு கிறிஸ்து, ஏற்கனவே அப்போஸ்தலர்கள் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் தனக்கு சாட்சியாக இருப்பார் கள் என்று வாக்குறுதி தந்திருந்தார் (அப்போஸ். 1:8). அவர்கள் அந்தவிதமாக கிறிஸ்துவுக்கு சாட்சியாக உலகம் முழுவதிலும் இருக்கவேண்டுமானால், அவர்களுடைய அதிகாரத்தின் கீழ் திருச்சபைகள் உலகின் ஏனைய பகுதிகளில் அமையவேண்டுமானால், அந்தப்பணிக்கு அடிப்படையான பெந்தகொஸ்தே நிகழ்ச்சிகளை உலகம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆகவே, அதிகாரபூர்வமான பெந்தகொஸ்தே தின நிகழ்ச்சிகளை உலகம் அறிந்துகொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நேரடித் தலையீட்டினாலேயே பெந்தகொஸ்தே தின நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்ற உண்மையை உலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். உலகம் முழுவதிலும் கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டு அப்போஸ்தலர்களின் வழிப்படி திருச்சபை அமையும்படியாக பெந்தகொஸ்தே தின நிகழச்சிகளை உலகம் எப்படி அறிந்து கொண்டது என்பதைத்தான் இனிப்பார்க்கப் போகிறோம். அப்படிப் பார்க்கின்றபோது பெந்தகொஸ்தே தின நிகழ்ச்சிகள் நான்கு தடவைகள் மட்டும் உலகத்தில் மறுபடியும் நிகழவேண்டிய அவசியம் இருந்தது என்பதையும், அவை அந்தவிதமாக உலகின் ஏனைய பகுதிகளில் நிகழ்ந்ததற்கான காரணம் என்ன என்பதையும் இனி நாம் சந்தேகமறத் தெளிவாக விளங்கிக் கொள்ளப் போகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் “உலகம்”
இந்த விளக்கங்களுக்கு ஆரம்பகட்டமாக அப்போஸ்தலர் நடபடிகளில் உலகம் எப்படி வர்ணிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம். அபோஸ்தலர் 1:8-ல் இயேசு, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப் பரியந்தமும் அப்போஸ்தலர்களைச் சாட்சியாக இருக்கும்படிச் செய்வதாக வாக்குறுதி அளித்திருப்பதைப் பார்க்கிறோம். இயேசு இங்கு இந்தவிதமாக பல நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதற்குக் காரணம் அவை முழு உலகத்தையும் குறிப்பனவாக இருந்ததால்தான். அதாவது இந்தப் பிரதேசங்களிலெல்லாம் அப்போஸ்தலர் கள் சாட்சியாக இருந்தால் அவர்கள் முழு உலகத்திற்கும் சாட்சியாக இருப் பார்கள் என்பது அர்த்தம். உலகின் இந்தப் பிரதேசங்களின் பெயர்களுக்குள் இயேசு முழு உலகத்தையும் அடக்குகிறார். இந்தப் பெயர்கள் எருசலேமையும், யூதேயாவையும், யூத மக்களனைவரையும் உள்ளடக்குவதாக இருக்கின்றன. யூதர்களைத் தவிர்த்த, அவர்கள் எந்த உறவும் வைத்திராத சமாரிய இனத்தவரை சமாரியா உள்ளடக்கியது. இந்த இருபிரிவினரையும் தவிர்ந்த மக்களை உலகத்தின் ஏனைய பிரதேசங்களில் பார்க்கலாம். இந்தவிதமாக உலகம் முழுவதும் இந்தப் பெயர்களில் அடங்குகிறது. இந்த மூன்று இனத் தவர்களும் பெந்தகொஸ்தே நாளில் அதிகாரபூர்வமாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வது அவசியம். இல்லாவிட்டால் இவர்கள் மத்தியில் நடக்கும் சுவிஷேச ஊழியத்தால் திருச்சபை எருசலேமில் அமைந்ததுபோல் அதிகாரபூர்வமாக அமையாமல் போய்விடும். இந்த மூன்று இனத்தவர்களும் பெந்தகொஸ்தே நிகழ்ச்சிகளை அறிந்துகொண்டால் இந்த இடங்களில் திருச்சபை அப்போஸ்தலர்களின் வழிப்படி அமையமுடியும். அப்படி அமையும்போது முழு உலகத்திலும் இயேசுவின் வார்த்தைகளின்படி (அப்போஸ். 1:8) அப்போஸ்தலர்கள் சாட்சியாக இருக்கும் வாக்குத் தத்தமும் நிறைவேறிவிடும்.
யூதர்கள் மத்தியில் திருச்சபை
பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் வருகை கிறிஸ்துவைப் பற்றிய அப்போஸ்தலர்களுடைய சாட்சியத்தை உறுதிப்படுத்தி, அதன் விளைவாக பேதுரு தந்த பிரசங்கத்தை எருசலேமுக்கு வந்திருந்த பல தேசத்து யூதர்களும் கேட்டு அன்றைய தினத்தில் 3000 பேர் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள் என்று அப்போஸ்தலர் நடபடிகள் இரண்டாம் அதிகாரம் விளக்குகிறது. அப்போஸ்தலரின் சுவிசேஷ ஊழியம் சுவிசேஷம் சொல்வதோடு நின்று விடவில்லை. விசுவாசிகளைக் கொண்டு யூதர்கள் மத்தியில் முதன் முதலாக புதிய ஏற்பாட்டு சபை அமைக்கப்பட்டது. அன்று சபையில் 3120 பேர் அங்கத்தவர்களாக இணைந்தனர் (அப்போஸ் 2:40-42). எருசலேம் தேவால யத்தில் ஆராதனைக்காக உலகின் பல தேசங்களில் இருந்து வந்திருந்த யூத மக்களில் பலரும் அன்று கர்த்தரை விசுவாசித்திருக்கிறார்கள். இவர்கள் மூலமாக யூதர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் சுவிஷேசம் அறிவிக்கப்படக் கூடிய செயலும் ஆரம்பமானது. ஆகவே, பெந்தகொஸ்தே தினத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் எருசலேமில் திருச்ச¬யின் ஆரம்பத்திற்கும், அமைப்பிற்கும் வித்திட்டது மட்டுமல்லாமல் யூத இனம் வாழ்ந்த யூதேயா, மற்றும் உலகின் வேறு பகுதிகளிலெல்லாம் அதிகாரபூர்வமாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபை ஆரம்பிக்கப்படுவதற்கும் வழி ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போஸ் தலர் 1:8-ல் இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்குத் தந்த வாக்குறுதியின் முதலாவது கட்டம் நிறைவேறியிருப்பதை அறிந்து கொள்கிறோம். இதன் மூலம் உலகத்தில் யூத குலத்தின் மத்தியில் கிறிஸ்துவின் இராஜ்யம் திருச்சபை மூலமாக ஆரம்பமானது.
சமாரியர்கள் மத்தியில் திருச்சபை
கிறிஸ்துவின் வாக்குத்தத்ததின்படி (அப்போஸ். 1:8) முதலில் யூதர்கள் மத்தியில் பெந்தகொஸ்தே தினத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு திருச்சபை அமைக்கப்பட்டதைப் பார்த்தோம். இனி அந்த வாக்குத்தத்தத்தின்படி சமாரியர்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு திருச்சபை நிறுவப்பட வேண்டியது அவசியம். சுவிசேஷம் உலகம் முழுவதையும் அடைந்து திருச்சபை எல்லா நாடுகளிலும் அமைக்கப்படும் பணியின் அடுத்த கட்டம் இதுவே. அத்தோடு, பிதாவின் வாக்குத்தத்தத்தின்படி பெந்தகொஸ்தே தினத்தில் பரிசுத்த ஆவியானவர் வருகை தந்து செய்த காரியங்களையும் சமாரியர்கள் அறிந்து கொள்வது அவசியம். முக்கியமாக சமாரியர்கள் மத்தியில் அமையும் சபை எருசேலம் சபையைப்போல அப்போஸ்தலர்களின் அதிகாரத்தின் கீழ் அவர்கள் வழிப்படி நடப்பது அவசியம். இதெல்லாம் நிறைவேறும்படியாக கர்த்தரின் திட்டப்படி காரியங்கள் நிகழ ஆரம்பித்தன.
எருசலேமில் இந்தக்காலத்தில் திருச்சபைக்கு பெருந்துன்பம் உண்டானது. ஏற்கனவே ஸ்தேவான் கொலை செய்யப்பட்டான். சவுல் தொடர்ந்து வீடு வீடாக கிறிஸ்தவர்களைத் தேடித் துன்புறுத்த ஆரம்பித்தான் (அப்போஸ். 8:3). ஆகவே, அப்போஸ்தலர்கள் மட்டும் எருசலேமில் தங்கியிருக்க பெருந்தொகையினரான கிறிஸ்தவர்கள் யூதேயா, சமாரியா ஆகிய நாடுகளுக் குப் போய் வாழ ஆரம்பித்தார்கள். அவர்களால் எருசலேமில் வாழ முடிய வில்லை. இதுவும் கர்த்தரின் திட்டங்களில் ஒன்று. இப்படிப்போன மக்களால் சுவிசேஷம் யூதேயா, சமாரியப் பிரதேசங்களில் அறிவிக்கப்பட்டது (அப்போஸ். 8:4). பிலிப்பு (திருச்சபை உதவிக்காரர்களில் ஒருவர்) சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்துக்குப்போய் அங்குள்ளவர்களுக்கு கிறிஸ்துவைக்குறித்து பிரசங்கித்தான். அனேகர் அவன் சொன்னதை உன்னிப் பாகக் கவனித்துக் கேட்டு ஆராய்ந்தார்கள். கர்த்தரும் அவர்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்தார். அந்நாட்டில் மாய வித்தைகள் செய்து வந்திருந்த சீமோன் என்பவனும் ஆச்சரியப்படும்படியாக கர்த்தரின் கிரியைகள் நடந்தன. சீமோன் தீய நோக்கத்தோடு கிறிஸ்துவை விசுவாசித்த அனேகரோடு சேர்ந்து தானும் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான்.
இந்த செய்திகள் எல்லாம் எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களுடைய காதுகளுக்கு எட்டின. சமாரியர்களில் அனேகர் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் உணர்ந்ததால் அப்போஸ்தலர்களான பேதுருவை யும், யோவானையும் தாங்கள கேள்விப்பட்டது உண்மையா என்பதை அறிந்துகொள்ள சமாரியாவுக்கு அனுப்பினார்கள் (அப்போஸ். 8:14). இந்த இடத்தில் அப்போஸ்தலர்கள் இதை ஏன் செய்தார்கள் என்று சிந்தி¢த்துப் பார்ப்பது அவசியம். அப்போஸ்தலர்களே கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள். அவர்களைக் கொண்டே கிறிஸ்து தன்னுடைய சபையை நிறுவ ஆரம்பித்தார். ஆகவே, அக்காலத்தில் எங்கு சபைகள் தோன்றினாலும் அவை அப்போஸ்தலர்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருந்தது. அத்தோடு அப்போஸ்தலர்களுக்கே கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் தெரிந்திருந்தபடியால் சபைகள் கிறிஸ்துவின் போதனைகளின்படி அமைய அப்போஸ்தலர்களின் துணை எல்லாச் சபைகளுக்கும் தேவைப்பட்டது.
மேலும் சமாரியா யூதர்களை வெறுத்து வந்த இனம். பழைய ஏற்பாட்டுப் போதனைகளைத் திரித்து தங்களுக்கென ஒரு மதத்தை சமாரியர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். சமாரியப் பெண் கிறிஸ்துவிடம் யோவான் 4-ல் இதைக்குறித்து கேள்விகள் கேட்பதைப் பார்க்கிறோம். ஏற்கனவே கிறிஸ்துவைப் பற்றி அவள் மூலம் சமாரியர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது அவர்கள் மத்தியில் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் மேலும் உருவாக ஆரம்பித்தபடியால் சமாரியாவில் சபை நிறுவப்படுவது அவசியமாயிற்று. அத்தோடு அந்த சபை அப்போஸ்தலர்களின் போதனை களின்படி எருசலேம் சபையைப் போல இருக்க வேண்டியதும் அவசியம். இவையெல்லாம் முறைப்படி நடக்க வேண்டுமானால் அப்போஸ்தலர்கள் நேரடியாகத் தலையிட்டு அக்காரியங்களை முறையாக நடத்தி வைப்பது அவசியம். இல்லாவிட்டால் யூதர்களுக்கெதிராக பழைய ஏற்பாட்டைப் பயன்படுத்தி சமாரியர்கள் ஒரு மதத்தை ஏற்படுத்திக் கொண்டதைப்போல் கிறிஸ்துவின் பெயரில் எருசலேம் சபைக்கெதிரானதொரு சபை சமாரியாவில் ஆரம்பமாவதைத் தடுக்க முடியாது. அத்தகைய ஆபத்தைத் தவிர்க்குமுகமாக அப்போஸ்தலர்கள் பேதுருவையும், யோவானையும் சமாரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அப்போஸ். 8:15-ல் சொல்லப்பட்டிருப்பதை நாம் கவனமாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். “இவர்கள் வந்தபொழுது (பேதுருவும், யோவானும்) அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானத்தை மட்டும் பெற்றிருந்தவர் களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி ஜெபம் பண்ணினார்கள்” என்று இந்த வசனத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். வரலாற்று, இலக்கண ரீதியாக இதன் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் பெந்தகொஸ்தேகாரர்கள் விசுவாசிகள் ஆவியைப் பெற்றுக்கொள்ளுவதற்காக தொடர்ந்தும் ஜெபக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதன் மெய்க்கருத்து என்ன என்பதைப் பார்ப்போம். முதலில் படிமுறையாக ஒரு உண்மையைப் புலப்படுத்த விரும்புகிறேன்.
(1) பரிசுத்த ஆவியினாலன்றி ஒரு ஆத்துமாவும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது.
(2) விசுவாசிக்கின்ற அனைவரும் கிறிஸ்துவைப்பற்றிய விசுவாசத்தை யும், பரிசுத்த ஆவியையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.
(3) இயேசுவை விசுவாசிக்காத எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கக் கூடாது. (மாய வித்தைகள் செய்து வந்த சீமோன் மட்டும் மனந் திருந்தியதாக நடித்து தவறுதலாக ஞானஸ்நானம் பெற்றிருந்தான்).
இந்த உண்மைகளின் அடிப்படையில் மெய்யாகக் கிறிஸ்துவை விசுவா சித்த அனைவரும் பரிசுத்த ஆவியானலேயே விசுவாசத்தையும் ஆவியையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அவர்களுக்கு மறுபடியும் பரிசுத்த ஆவியை அப்போஸ்தலர்கள் ஜெபித்துக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியானால் அப்போஸ்தலர்களான பேதுருவும், யோவானும் எதற்காக அவர்கள் மேல் கைவைத்து ஜெபித்தார்கள்? இதற்குக் காரணம் பெந்தகொஸ்தே நாளில் எருசலேமில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிதான். சபை நிறுவப்படுவதற்காக அன்று பரிசுத்த ஆவியானவரின் வரலாற்று வருகை நிகழ்ந்தது. கிறிஸ்துவின் சபை ஆரம்பமானது. இப்போது சமாரியாவிலும் அதேமுறையில் சபை அமைக்க வேண்டிய அவசியம் இருந் தது. சமாரியாவில் அமைக்கப்பட வேண்டிய சபை எருசலேம் சபையைப் போல இருக்கவேண்டுமானால், இரண்டும் ஒன்றுதான் என்று சமாரியரும் விசுவாசிக்க வேண்டுமானால், பெந்தகொஸ்தே நாளில் வந்ததுபோல் பரிசுத்த ஆவியானவர் சமாரியர் மீதும் வந்திறங்குவது அவசியம். பெந்த கொஸ்தே நாள் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் எருசலேமுக்கு வெளியில் எங்கும் பரவிக் கொண்டிருந்தன. ஆகவே, சமாரியர் மீதும் பரிசுத்த ஆவி வந்திறங்கும்போது சமாரியர்கள் கிறிஸ்துவின் திருச்சபைக்கு விசுவாசத்துடன் தம்மை ஒப்புக் கொடுப்பார்கள். அதற்காகவே பேதுருவும், யோவானும் சமாரியாவுக்கு அனுப்பப்பட்டார்கள். அத்தோடு, சமாரியர்களுக்கு சுவிசேஷம் அறிவித்த பிலிப்புவால் இதை செய்திருக்க முடியாது. ஏனெனில், அன்று அப்போஸ்தலர்களை அடித்தளமாகக் கொண்டே ஆதிசபை நிறுவப்பட்டது. அத்தோடு, அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே பரிசுத்த ஆவியை இ¢ந்தவிதமாக இறங்கச் செய்யும் அதிகாரமும் இருந்தது. இதிலிருந்து இந்த பரிசுத்த ஆவியானவர் சமாரிய விசுவாசிகள் மீது வந்திறங்கியதற்கான காரணத்தை அறிந்து கொள்கிறோம். இந்த வரலாற்று நிகழ்ச்சியின் அர்த்தம் புரியாமல், வேதத்தை எப்படிப் படித்துப் புரிந்து கொள்வது என்பதும் தெரியாமல், விசுவாசிகளுக்கெல்லாம் இரண்டாம் முறையாக பரிசுத்த ஆவி வேண்டுமென்று இன்று தவறாக ஜெபித்துக் கொண்டிருக்கின்றன பெந்தகொஸ்தே சபைகள்.
இங்கே இன்னுமொரு முக்கிய உண்மையையும் கவனிக்கத் தவறக்கூடாது. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி வந்திறங்கியபோது நடந்த பல சம்பவங்கள் சமாரியர்மேல் அவர் வந்திறங்கியபோது நடக்கவில்லை. பலத்த காற்று, இடி முழக்கம் போன்ற இரைச்சல், 120 பேர் மேல் இறங்கிய அக்கினி போன்ற நாவுகள், அந்நிய பாஷை பேசுதல் போன்ற ஒன்றுமே சமாரியாவில் நிகழவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்கும் சிலர், பெந்தகொஸ்தே நாளில் நிகழ்ந்த அனைத்தும் பரிசுத்த ஆவி வந்த ஒவ்வொரு முறையும் நிச்சயம் நிகழ்ந்தன, ஆனால், லூக்கா அவற்றைத் திரும்பத்திரும்ப எழுத வேண்டிய அவசியமிருக்கவில்லை என்பார்கள். இந்த முறையில் வேதவிளக்கம் கொடுக்க முடியாது. இது வெறும் ஊகம் மட்டுமே. ஒவ்வொரு பகுதியிலும் சொல்லியிருப்பவற்றின் அடிப்படையில் மட்டுமே அந்தப்பகுதி தரும் போதனையை அதோடு தொடர்புடைய ஏனைய பகுதிகளுடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, பெந்தகொஸ்தே நாளில் எருசலேமில் நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும் சமாரியாவில் நிகழவில்லை என்பது தெளிவு. அத்தோடு, சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவர் வந்த பொழுது அந்நிய பாஷை பேசினார்கள் என்றும் நிரூபிக்க முடியாது. இதற்குக் காரணம் பரிசுத்த ஆவியின் வருகையைத்தான் அந்த நிகழ்ச்சிகள் பெந்தகொஸ்தே நாளில் குறிப்பவையாக இருந்தன. அதுவும் முதன்முறையாக வரலாற்றில் பரிசுத்த ஆவி பெந்தகொஸ்தே தினத்தில் வந்ததாலும், எருசலே மில் பலநாடுகளிலும் இருந்து வந்து, பல மொழிகளைப் பேசிய, ஆயிரக் கணக்கில் கூடியிருந்த யூதர்களின் கவனத்தைக் கவர வேண்டியிருந்ததாலும் அந்த அற்புதங்களைக் கர்த்தர் நிகழ்த்திக் காட்டினார். அத்தகைய நிலமை சமாரியாவில் இருக்கவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் சமாரியாவில் நிச்சயமாக நடந்தது. அதாவது எல்லோரும் பார்த்து அறிந்துகொள்ளும்படியாக பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினார். இதை எப்படி அறிந்துகொள்கிறோம்? அப்போஸ். 8:18, “அதை சீமோன் கண்டபொழுது” என்று விளக்குகிறது. சீமோன் பரிசுத்த ஆவியின் வருகையைப் பார்த்தது மட்டுமல்லாமல் அப்போஸ்தலர்களுக்கு பணத்தைக் கொடுத்து “பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்” என்றான். ஏதோவொரு முறையில் சீமோன் பார்த்து விளங்கிக்கொள்ளக்கூடியதாக பரிசுத்த ஆவியின் வருகையும், அன்று அவருடைய வருகைக்குக் காரணமாக அப்போஸ்தலருடைய அதிகாரமும் இருந்திருக்கிறது. இதற்குமேல் இந்த நிகழ்ச்சிக்கு நாம் விளக்கங் கொடுக்க முற்பாட்டால் அது ஊகிப்பதில்தான் போய் முடியும்.
இதிலிருந்து பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களும், அவரைச் சேர்ந்தவர்களும் இணைந்து செய்த சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக ஆதிசபை நிறுவப்படுவதற்காக, அதன் ஆரம்ப கட்டமாக பிதாவின் வாக்குத் தத்தத்தின்படி எருசேலமில் பெந்தகொஸ்தே நாளில் வந்திறங்கியதோடு, எருசலேமைப்போலவே சமாரியர் மத்தியிலும் சபை அமைக்கப்படுவதற்காக சமாரியாவில் இருந்த விசுவாசிகள் மேலும் வந்திறங்கி அதிகாரபூர்வமாக அங்கு சபை அமைக்கப்பட வழி செய்தார் என்று விளங்கிக் கொள்கிறோம்.
இதன் மூலம் சுவிசேஷம் உலகில் இரண்டு பெரும் இனத்தைப் போய்ச் சேர்ந்து அவ்வினங்களின் மத்தியில் சபைகள் தோன்றின. இனி உலகின் ஏனைய பகுதிகளையும் அப்போஸ்தலர் 1:8-ன் படி சுவிசேஷம் போய்ச்சேர வேண்டும். அங்கெல்லாம் சபைகள் நிறுவப்பட வேண்டும். அப்படி பூமியெங் கும் சபைகள் அமைய சுவிசேஷம் போய்ச்சேரவிருந்த மீதி இனம் புறஜாதி யினர் மட்டுமே. யூதர்கள் மத்தியில் சபை ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு விரோதிகளாக இருந்த சமாரியர்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபைகள் தோன்ற வழி ஏற்பட்டாயிற்று. இனி மிகுதி இருந்த இனம் புறஜாதி யினர் மத்தியிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, விசுவாசிக்கிறவர்கள் மேல் பெந்தகொஸ்தே தினத்தில் நடந்ததுபோல் பரிசுத்த ஆவியானவர் இறங்கி விட்டால் புறஜாதியினர் மத்தியிலும் சபைகள் அமைய வழியேற்பட்டுவிடும். இதன் மூலம் உலகம் முழுவதும் கிறிஸ்துவின் வார்த்தையின்படி அப்போஸ் தலர்கள் தங்கள் காலத்தில் சாட்சியாக இருக்கும் பணி நிறைவேறிவிடும். புறஜாதியினர் மத்தியில் எவ்வாறு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபை அமை யும் வழி ஏற்பட்டது என்பதை இனி அடுத்த இதழில் பார்க்கப்போகிறோம்.
1-ம் நூற்றாண்டில் அப்போஸ்தலர் தலைமையில் உலகம் முழுவதும் திருச்சபை அமைய பரிசுத்த ஆவியின் வருகை
1-ம் கட்டம்
யூதர்கள்
சுவிசேஷம் பெந்தகொஸ்தே நாளில் யூதர்களை அடைந்து எருசலேமில் சபை ஏற்படுதல்
– அப்போஸ். 2
2-ம் கட்டம்
சமாரியர்
சுவிசேஷம் பிலிப்பு மூலம் சமாரியரை அடைந்து அப்போஸ்தலரால் ஆவியானவர் அவர்கள் மேலிறங்கி சபை தோன்றல்
– அப்போஸ். 8:1-25
3-ம் கட்டம்
புறஜாதியினர்
யோவான் ஸ்நானனின் சீடர்கள்
அப்போஸ்தலர் 1:8, “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”
இந்த வார்த்தைகள் அப்போஸ்தலர்கள் வல்லமையோடு கிறிஸ்துவைப் பிரசங்கித்து அவருக்கு சாட்சியாக இருப்பார்கள் என்று மட்டும் சொல்லாமல் அவர்கள் கிறிஸ்துவின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளாக இருந்து உலகெங்கும் சபைகளை அமைக்கக்கூடிய அதிகாரமுள்ளவர்களாக இருப்பார்கள் என்ற சத்தியத்தையும் விளக்குவதாக இருக்கிறது. இன்று அப்போஸ்தல அதிகாரம் ஒருவருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அப்போஸ்தலர்களின் போதனைகளின்படி சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் நாடெங்கும் சபை அமைக்கும் பணி திருச்சபைக்கும், சபைப்போதகர்களுக்கும் தரப்பட்டிருக்கிறது.
(வரைபடத்தின் முதலிரு கட்டங்களை இந்த இதழில் விளக்கியிருக்கிறோம். அடுத்த இரு கட்டங்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்.)