பெந்தகொஸ்தே நாளின் முக்கியத்துவம் (3)

பெந்தகொஸ்தே தினம் நாம் அனுதினமும் சபை வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய எழுப்புதலுக்கு உதாரணமாகவோ அல்லது பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய ஞானஸ்நானத்துக்கு உதாரணமாகவோ இல்லாமல் வரலாற்றில் ஒரு முறை மாத்திரமே நிகழ்ந்த நிகழ்ச்சியாக இருந்திருக்கிறது என்பதை இதுவரை கடந்த இதழ்களில் விளக்கியிருக்கிறோம். அப்படியாக மீட்பின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்து ஒரு தடவை மட்டுமே நிகழ்ந்த பெந்தகொஸ்தே நிகழ்ச்சியின் சில அம்சங்கள் அந்தக் காலத்தில் சபை எல்லா இடங்களிலும் அப்போஸ்தலர்களின் தலைமையில் ஒரேவிதமாக அமைய வேண்டும் என்ப தற்காகவும், சமாரியர்கள் சபைக்குள் கொண்டுவரப்படுவதற்காகவும் எருசலேமுக்கு வெளியில் சமாரியர்கள் மத்தியில் அடையாளமாக நிகழ்ந்தன என்பதையும் கடந்த இதழில் பார்த்தோம். அப்போஸ்தலர் 1:8ல் கிறிஸ்து தந்துள்ள வாக்குத் தந்தங்கள் இந்தவிதமாக அப்போஸ்தலர்களின் சுவிசேஷப் பணியின் மூலம் நிறைவேறி வந்தன. இனி கிறிஸ்துவின் வாக்குத்தத்தத் தின்படி புறஜாதியார்கள் சபைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். யூதர்கள் மத்தியிலும், சமாரியர்கள் மத்தியிலும் சுவிசேஷம் போய்ச் சேர்ந்து சபைகள் எழ ஆரம்பித்து விட்டன. யூதர்கள் இதுவரை வெறுத்து வந்த, பழைய ஏற் பாட்டுப் போதனைகளின்படி யூதர்கள் எந்தத் தொடர்பும் வைத்திருக்கக் கூடாத, புறஜாதியினர் மத்தியில் இனி சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். தேவர் இனத்தைச் சேர்ந்தவனும், பள்ளனும் ஒரே வீட்டில் வாழ முடியுமா? பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரே நாடாக இருக்க முடியுமா? அது போலத் தான் இதுவரை யூதர்களும், புறஜாதியினரும் இருந்து வந்திருக்கிறார்கள். அதில் பெருமாற்றம் தோன்றப் போகிறது. வரலாற்றில் இதுவரை நடந்திராத அற்புதம் நிகழப் போகிறது. எபேசியர் நிருபத்தில் 2:14ல் பவுல் அப்போஸ் தலன் சொல்லுவது போல், யூதர்கள், புறஜாதியினராகிய “இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்தெரியப் போகிறார்” கிறிஸ்து இயேசு. “இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக சிருஷ்டிக்கப்போகிறார்” இயேசு கிறிஸ்து (2:15).  இது சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலமாக நடைபெறப்போகிறது. வரலாற்றில் நிகழ்ந்த மேற் கூறிய அற்புதத்தைத்தான் அப்போஸ்தலர் நடபடிகளின் 10-11 அதிகாரங்கள் விளக்குகின்றன. இது வரலாற்றில் ஒரு திருப்புமுனை. அந்தத் திருப்புமுனை எந்தவகையில் நிகழ்ந்தது என்பதை இனி ஆராய்வோம்.

புறஜாதிக்காரனாகிய கொர்நேலியு

கொர்நேலியு பட்டாளத்தில் முக்கிய பதவி வகித்துவந்த ஒரு மனிதன். ரோம சைனியத்தில் இத்தாலியர்களைக் கொண்ட பிரிவின் நூற்றுக்கு அதிபதியாக செசரியாவில் இருந்தான். கொர்நேலியு ஒரு யூதனல்ல, அவன் புறஜாதியைச் சேர்ந்தவன். இருந்தபோதும் அவன் தன் வாழ்வில் யூதர்கள் வணங்கும் கர்த்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை வணங்கி வந்தான். அவனுடைய தேவபக்தி எத்தகையது என்பதை அப்போஸ். 10:2 தெளிவாக விளக்குகின்றது. இந்த வசனத்தில் கூறப்பட்டிருப்பதை நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். தன் வீட்டாரனைவரோடும் விசுவாசமாக கர்த்தரை ஆராதனை செய்து வந்த கொர்நேலியு யொகோவாவை மட்டுமே கேள்விப்பட்டிருந்தான். அவருக்கு பலிகள் செலுத்தி பழைய ஏற்பாட்டு வணக்க முறைகளை முறையாக செய்து வந்தான். அவன் இதுவரையிலும் விருத்த சேதனத்தை அடைந்திருக்கவில்லை (அப்போஸ் 11:3). அவன் எப்பொழுதும் ஜெபம் செய்து வந்தான். யெகோவாவின் மேல் அவனுக்கிருந்த பக்தி மேற் போக்கானதாக இருக்கவில்லை. இருந்தபோதும் அவனுடைய விசுவாசத்தில் குறைபாடுகள் இருந்தன. அவனுக்கு ஆபிரகாமின் விசுவாசம் இதுவரை கிடைக்கவில்லை. அவன் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவர் தரும் இரட்சிப்பைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. பழைய ஏற்பாட்டுக்கு வெளியில் அவனுக்கு எதுவும் தெரிய.£திருந்தது. இத்தனை தூரம் யெகோவாவை வணங்கி வந்த அவன் புறஜாதியைச் சேர்ந்தவனாகவும் இருந்தான்.

கொர்நேலியுவி¢ன் ஆத்மீகத் தாகத்தைக கர்த்தர் கண்டுகொண்டார் என்பதை அப். 10:4 வெளிப்படுத்துகிறது. தேவதூதன் மூலம் கர்த்தரின் செய்தி கொர்நேலியுவுக்கு கொடுக்கப்பட்டது. பேதுருவைப் போய்ப் பார்க்கும்படி கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டார். அதுவரை பேதுரு யார் என்பதுகூட கொர்நேலியுவுக்கு தெரியாதிருந்தது. கொர்நேலியு பேதுருவைப் பார்க்க தன்னுடைய விசுவாசமுள்ள ஆட்களை அனுப்பி வைத்தான்.

பேதுரு கண்ட தரிசனமும், பேதுரு கொர்நேலியுவைச் சந்தித்தலும்

அதேநேரம், கர்த்தர் யோப்பா பட்டணத்தில் கடலோரத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த அப்போஸ்தலனான பேதுருவுக்கு ஒரு தரிசனத்தைத் தந்தார். பேதுரு ஞானதிருஷ்டி அடைந்தான் என்று அப்போஸ். 10:10ல் வாசிக்கிறோம். ஞானதிருஷ்டி அடைந்த பேதுரு ஒரு துப்பட்டி தரையிலிருந்து வருவதாகவும், அதில் பூமியில் காணப்படும் சகலவிதமான ஜீவன்களும் மிருகங்களும், ஊரும் பிராணிகளும், பறவைகளும் இருப்பதைக் கண்டான். அதேவேளை வானத்தில் இருந்து வந்த ஒரு குரல், “பேதுருவே, எழுந்திருந்து அடித்துப் புசி” என்று கூறியது. பேதுரு அதற்குப் பதிலாக, “தீட்டும் அசுத்தமாயிருக்கிற யாதொன்றை யும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். ஆனால், “தேவன் சுத்தமாக் கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்று மறுபடியும் சத்தம் உண்டானது. இவ்வாறாக மூன்று தடவை நடந்தது.

பேதுரு பழைய ஏற்பாட்டு விதிகளின்படி தீட்டானவைகளை எப்போதுமே தொடாதவனாக இருந்தான். அவன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், புதிய உடன்படிக்கையின்படி ஏற்பட்டுள்ள பெருமாற்றத்தை கர்த்தர் இந¢தத் தரிசனத்தின் மூலம் பேதுருவுக்கு உணர்த்தினார். அதாவது, இதுவரை தீண்டத்தகாது என்று எதையெதையெல்லாம் கர்த்தர் விலக்கி வைத்திருந்தாரோ அதையெல்லாம் சுத்தப்படுத்திவிட்டேன் என்ற உண்மை யைக் கர்த்தர் பேதுருவுக்கு உணர்த்தினார். முக்கியமாக தீண்டத்தகாதவர் களாக தள்ளிவைக்கப்பட்டிருந்த புறஜாதி மக்களை தேவ இராஜ்யத்துக்குள் இப்போது சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற உண்மையை கர்த்தர் இந்தத் தரிசனத்தின் மூலம் பேதுருவுக்கு உணர்த்தினார். ஆனால், இது பேதுருவுக்கு உடனடியாகப் புலப்படவில்லை. இதைப் பற்றி பேதுரு ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தபோது கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் பேதுருவின் வீட்டை அடைந்தார்கள். அதேவேளை பரிசுத்த ஆவியானவர் பேதுருவிடம், நானே இவர்களை உன்னிடம் வரும்படிச் செய்தேன். ஆகவே, அவர்களை நீ வரவேற்று உபசரி என்று கூறினார். பேதுரு, அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் கொர்நேலியுவுக்கு நடந்த நிகழ்ச்சிகளை பேதுருவுக்கு விளக்கிக் கூறினார்கள். பேதுரு அவர்களை உள்ளே அழைத்து உபசரித்தபின் மறுநாளில் கொர்நேலியுவை சந்திக்க அவர்களுடன் புறப்பட்டுச் சென்றான்.

பேதுருவும், கொர்நேலியுவின் மனிதர்களும் செசரியா பட்டணத்துக்குள் நுழைந்தபோது கொர்நேலியு தன் உறவினர்கள், நண்பர்கள் சகிதம் பேதுருவை வரவேற்கத் தயாராக இருந்தான். இது வரலாற்றிலேயே இதுவரை நிகழ்ந்திராத சம்பவம். இரண்டு சமுதாயங்கள் கூடி வந்த ஒரு அற்புத நிகழ்ச்சி. புதிய உடன்படிக்கை மூலம் கர்த்தர் ஏற்படுத்திய சமூக சீர்திருத்தம். இதை அப்போஸ். 10:28-ல் பேதுரு விளக்குவதைக் காணலாம். அந்நிய ஜாதி யாருடன் கலந்துறவாடுவது யூதர்களுக்கு விலக்கி வைக்கப்பட்டிருந்ததது என்றும், அந்தத் தடை முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கர்த்தரே தனக்குக் காட்டிவிட்டதாகவும் பேதுரு கூறினான். அதன்பின் கொர்நேலியு தனக்கு நிகழ்ந்த சம்பவங்களை பேதுருவுக்கு விளக்கிக்கூறினான் (30-33). அதன்பின் பேதுரு கொர்நேலியுவுக்கும் அவனோடு கூடி இருந்தவர்களுக்கும் சுவிசேஷத்தை விளக்கிப் போதித்தான் (34-43).

புறஜாதியினர் மேல் பரிசுத்த ஆவியின் வருகை

இவ்வாறாக பேதுரு சுவிசேஷத்தை விளக்கிப் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போதே பரிசுத்த ஆவியானவர் வசனத்தைக் கேட்ட யாவர்மேலும் வந்து இறங்கினார் என்று அப்போஸ். 10:44-ம் வசனத்தில் வாசிக்கிறோம். அங்கிருந்த யூத விசுவாசிகள் இதைப்பார்த்து பெரும் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் ஆச்சரியமடைந்ததற்கான காரணத்தை 45, 46 வது வசனங்கள் விளக்கு கின்றன. பரிசுத்த ஆவியின் வருகையைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட வில்லை. பரிசுத்த ஆவியானவர் புறஜாதியினர் மேல் பொழிந் தருளப்பட்டதைப் பார்த்தே அவர்கள் பிரமித்து நின்றார்கள். அதற்குக் காரணம் யூதர்கள் புறஜாதியினரோடு அதுவரை சேராதிருந்ததுதான். விலக்கி வைக்கப்பட்டிருந்த புறஜாதியினர் மேல் பரிசுத்த ஆவியானவர் தங்களுக்கு நடந்தது போலவே வந்திறங்கியது அவர்களை பிரமிப்படையச் செய்தது. தங்கள் கண்முன் நடப்பதெல்லாம் கனவோ என்றுகூட அவர்கள் எண்ணியிருப்பார்கள். எந்தப் புறஜாதியினரோடு தாம் சேரக்கூடாது என்று கர்த்தர் கூறியிருந்தாரோ அவர்கள் மேலும் பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கியது அனைவரையும் ஆச்சரியத்துக் குள்ளாக்கியது. அது மட்டுமல்லாமல் பரிசுத்த ஆவியானவர் வந்து இறங்கியதும் புறஜாதியினர் அந்நிய பாஷையில் பேசி, தேவனைப் புகழ்ந்தார்கள். அதைப் பார்த்த பேதுரு, நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட இவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்காமல் இருக்கலாமா? என்று கூறி அவர்களுக்கு ஞானஸ்நானத்தைக் கொடுத்தான் (45-48).

இந்தப் பகுதி தரும் போதனை

இந்தப் பகுதியில் கொர்நேலியு முழுமனத்தோடு யெகோவாவை விசுவாசித்த போதும் இயேசு கிறிஸ்துவை அறியாதிருந்தான் என்று அறிந்து கொண்டோம். கிறிஸ்துவை விசுவாசிக்காமல் ஒருவரும் பரலோகம் போகமுடியாது என்பது புதிய உடன்படிக்கையின் விதிமுறை. பெந்தகொஸ்தே நாளில் பெருந் தொகையான யூதர்கள் அந்த செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். யூதர் மத்தியில் சபை நிறுவப்பட்டது (அப்போஸ். 2). அதே போல் சமாரியர்கள் அதே செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்தார்கள் (அப்போஸ். 8). அவர்கள் மத்தியிலும் சபை நிறுவப்பட்டது. இனிமீதமிருந்த புறஜாதியினர் அந்த செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். இது கொர்நேலியுவுக்கு சுவிசேஷம் போய் அவன் கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் நிறைவேறியது. இந்த மூன்று இடங்களிலும் அப்போஸ்தலர் 1:8ல் கிறிஸ்து அளித்த வாக்குறுதியின் நிறைவேறுதலாக பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினார். பரலோக இராஜ்யத்துக்குள் சகல இனத்தவர்களும் கொண்டுவரப்படுவதற்காக நிகழ்ந்ததே பரிசுத்த ஆவியின் வருகையும், அவருடைய வருகையோடு இணைந்த ஏனைய நடவடிக்கைகளும். பரிசுத்த ஆவியின் வருகையைத் தவிர இந¢த மூன்று இடங்களிலும் பெந்தகொஸ்தே தினத்தில் நடந்த அனைத்தும் நிகழவில்லை என்பதை உணர்வது அவசியம். அத்தோடு இந்த மூன்று இடங்களிலும் அப்போஸ்தலர்கள் நடந்த நிகழ்ச்சிகளுக்கு சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். இதெல்லாம் அப்போஸ்தர் 1:8ல் கிறிஸ்து அளித்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தைத் தெளிவாக விளக்குகின்றன.

யோவானின் சீடர்கள்

கடைசியாக நாம் ஆராயவேண்டியது அப்போஸ்தலர் 19:1-6 வரையிலுமுள்ள வசனங்களில் நாம் வாசிக்கும் யோவான் ஸ்நானனின் சீடர்களுடைய அனுபவத்தைப் பற்றியே. இவர்கள் யோவான் ஸ்நானனின் செய்தியைக் கேட்டு ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பரிசுத்த ஆவி இதுவரை கிடைத்திருக்கவில்லை. பெந்தகொஸ்தேகாரர்கள் இதை விளக்கும் போது “இந்த சீடர்கள் விசுவாசிகள், ஆனால், இதுவரை இவர்களுக்கு ஆவியின் அபிஷேகம் கிடைத்திருக்கவில்லை. அதற்காகவே ஆவியின் அபிஷேகம் அவர்களுக்குத் தரப்பட்டது” என்று கூறுவார்கள். ஆனால், அது முழுத்தவறான விளக்கம். மேலெழுந்தவாரியாக இந¢தப்பகுதியை வாசிக்கும்போது அப்படித்தான் தெரியும். ஆனால், இந்தப்பகுதியை கவனத்தோடு ஆராய்ந்து பார்த்தால் பெந்தகொஸ்தேகாரர்களின் விளக்கத்தின் தவறை உணரலாம்.

பவுல் இவர்களை எபேசியாவில் சந்தித்தபோது இவர்கள் விநோதமான சீடர்களாக இருப்பதை அறிந்துகொண்டார். இவர்களுக்கும் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் பெரும் வித்தியாசமிருந்தது. இவர்கள்மேல் பரிசுத்த ஆவி வராதிருந்தது மட்டுமல்ல இவர்களுக்கு பரிசுத்த ஆவியைப் பற்றியே இதுவரை தெரியாதிருந்தது. பெந்தகொஸ்தே நிகழ்ச்சிகளும் அவர்களுடைய காதுகளை அதுவரை எட்டியிருக்கவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி தங்களுடைய வாழ்நாளில் அதுவரையிலும் கேள்விப்பட்டிருக்கவேயில்லை. பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் ஒருவன் விசுவாசியாக முடியாது. அதுமட்டு மல்லாமல் அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கவில்லை. பவுல் அவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி விளக்கிக் கூறி சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிருந்தது. இதிலிருந்து இவர்கள் யோவானின் செய்தியைக் கேட்டு யெகோவாவை விசுவாசித்து தங்கள் தவறை உணர்ந்து மனம் மாறி இருந்தார்களே தவிர கிறிஸ்துவையும், சுவிசேஷத்தையும் அறிந்திருக்கவில்லை என்பதை அறிந்து கொள்கிறோம். இவர்கள் யோவானுக்கு மட்டுமே விசுவாசமாத இருந்த சீடர்கள். பவுல் இவர்களுக்கு பொறுமையாக கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றி விளக்கிக் கூற வேண்டியிருந்தது. இவர்கள் மனந்திரும்புதலுக்குரிய யோவானின் ஞானஸ்நானத்தை மட்டுமே தங்கள் வாழ்வில் அறிந்திருந்தார்கள். பவுல் விளக்கிக் கூறிய சுவிசேஷ செய்தியைக் கேட்டு இவர்கள் கிறிஸ்து இயேசுவை விசுவாசித் தார்கள். பவுல் இவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அப்போதே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்திறங்கினார் என்று அப்போஸ்தலர் நடபடிகள் 19-ல் வாசிக்கிறோம். அதுவும் அப்போஸ்தலனான பவுல் கைவைத்து ஜெபித்த பின்பே பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினார்.

யோவானின் இந்த சீடர்களும் யூதர்களைப்போலவும், சமாரியர்களைப் போலவும், புறஜாதியினரைப்போலவும் தேவனுடைய திருச்சபையில் சேர்க்கப்படவேண்டுமென்பதற்காகவே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் அப்போஸ்தலர் 1:8-ன்படி வந¢திறங்கினார். இந்த இடத்திலும் இதற்கு ஒரு அப்போஸ்தலன் சாட்சியாக இருக்க வேண்டியிருந்தது. இந்த சீடர்கள் பவுல் மூலமாக சுவிசேஷத்தைக் கேட்காதிருந்திருந்தால் தொடர்ந்தும் யோவானுக்கு மட்டுமே சீடர்களாக இருந்திருப்பார்கள். அதனால் சுவிசேஷம் பற்றியும், திருச்சபை பற்றியும் குழப்பமேற்பட்டிருக்கும். இந்தச் சீடர்கள் சபைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டதன் மூலம் யோவானின் சீடர்கள் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்கும் வசதியேற்பட்டது.

இந்த முறையில் பெந்தகொஸ்தே நாளில் வந்ததுபோல் வரலாற்றில் நான்கு முறைகள் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் வந்ததாக அப்போஸ்தல நடபடி களில் வாசிக்கிறோம். அவருடைய வருகைபற்றி அப்போஸ்தல நடபடிகளில் வேறு எங்கும் நாம் வாசிக்க முடியாது. இப்படியான ஆவியானவரின் வருகை திருச்சபை நிறுவப்படுவதற்காக நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சி. கர்த்தரின் மீட்பின் திட்டப்படி கிறிஸ்துவின் சிலுவைத் தியாகங்கள் நிறைவேறி, சுவிசேஷம் சகல இனத்தவர் மத்தியிலும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கும் வழிவகை இந்த வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு பரிசுத்த ஆவியை இந்த நான்கு இடங்களிலும் பெற்றுக் கொண்டவர்கள் ஏற்கனவே விசுவாசிகளாக இருந்தார்கள். யோவானின் சீடர்களும் விசுவாசிகளாகி- ஞானஸ்நானம் பெற்றபின்பே ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். இப்படியாக ஆவியானவர் அவர்கள் மேல் வந்தது, அவர்களுக்கு இரண்டாம் ஆசீர்வாதத்தை அதாவது அபிஷேகத்தைத் தருவதற்காக என்ற பெந்தகொஸ்தே விளக்கம் மிகத் தவறானது. ஏனெனில் அப்போஸ்தல நடபடி களில் இந்த நான்கு இடங்களைத் தவிர வேறெங்கும் இந்தவகையில் ஆவியான வரின் வருகை நிகழவில்லை. அப்படி நிகழ்ந்ததாக வேதத்தில் இருந்து பெந்த கொஸ்தேகாரர்களால் ஆதாரம் காட்ட முடியாது. இதிலிருந்து ஆவியானவரின் மூலம் அபிஷேகம் பெறுவது, அதற்கு அடையாளமாக அந்நியபாஷை பேசுவது என்பது பெந்தகொஸ்தேகாரர்களின் செயற்கையான வேதத்தில் காணப்படாத ஒரு போதனை என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். பெந்தகொஸ்தே தின நிகழ்ச்சிகள் அப்படியொரு போதனையை அளிக்கவில்லை. (இந்த இதழுடன் இந்த ஆக்கம் நிறைவு பெறுகிறது.)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s