‘1689 விசுவாச அறிக்கை’
1689 விசுவாச அறிக்கை என்ற நூல் எங்களுக்குக் கிடைத்தது. இது கர்த்தர் செய்த அரிய காரியம். அதை நீங்கள் தமிழில் எங்களுக்குத் தந்தது அதைவிடப் பெரிய கர்த்தரின் கொடை.
1689 விசுவாச அறிக்கையினூடாக நாங்கள் எதை விசுவாசிக்க வேண்டும் என்றும், ஏன் அதை விசுவாசிக்க வேண்டும் என்றும் கிரமமாக விளக்கியிருக்கபடியால் அதை வெளியிட்டதற்காக சபையாக எங்களுடைய ஆழ்ந்த நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விசுவாச அறிக்கையைப் பற்றி இன்று அனேகர் தெரிந்து கொண்டிராதபடியாலும், அதைப் பின்பற்றாதபடியாலுமே நாம் எதை விசுவாசிக்க வேண்டும், எவ்வாறு ஊழியம் செய்ய வேண்டும் என்பவற்றையும், சபை அமைப்பு, சபை சட்ட திட்டங்கள் போன்றவற்றின் அவசியத்தையும், அறியாமல் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.
விசுவாச அறிக்கையின்படி சபை அமைப்பு இல்லாமலும், ஒரு நிலையான கொள்கைப் பிடிப்பு இல்லாமலும் இன்றைய காலகட்டத்தில் புதுப்புது ஸ்தாபனங்களும், அற்புத அடையாங்களை மட்டும் நம்பும் ஊழியங்களும் திருச்சபைக்கு மதிப்புக் கொடுக்காமல் பெருகிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் வேதரீதியிலான விசுவாச அறிக்கைக்கு தம்மை ஒப்புக்கொடுக்காத சபைகள் மத்தியில் புதுப்புது வேதக் கோட்பாடுகளும், வேத விளக்கங்களும், ஆத்துமாக்களுக்கு இஷ்டமான ஆராதனை முறைகளும் மலிந்து காணப்படுகின்றன.
எம்மைப் போல சீர்திருத்த விசுவாசத்தைக் கொண்டு இயங்கி வருகின்ற சபைகள் தேவனைக் கிட்டிச்சேர விசுவாச அறிக்கை பேருதவி புரிகின்றது. எங்களுடைய சபை மக்களுக்கும், எங்களைப்போல ஒத்த கருத்துள்ள திருச்சபைகளுக்கும் நாங்கள் எதை விசுவாசிக்கிறோம் என்பதைத் திட்டவட்டமாக உணர்ந்து ஊழியம் செய்ய 1689 விசுவாச அறிக்கை ஆசீர்வாதமாக இருந்து வருகின்றது.
– எஸ். ஜெயகாந்த், போதகர், ஸ்ரீலங்கா