விசுவாசத்தினால் நீதிமானாகுதல் என்ற வேதசத்தியத்தைக் குறித்து பவுலும், .யாக்கோபுவும் முரண்பாடு கொண்டிருப்பதாக பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தையும் யாக்கோபுவின் நிருபத்தையும் வாசிக்கிற சிலர் கருத்துத் தெரிவிக்கிருக்கிறார்கள். அந்த இரு நிருபங்களையும் மேலெழுந்தவாரியாக வாசிக்கும்போது அப்படித் தொன்று கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சீர்திருத்தவாதியான மார்டின் லூதர்கூட அப்படி எண்ணி யாக்கோபு நிருபம் வேதத்தில் சேர்க்கப்பட் டிருக்கக்கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தார். 16-ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனைகளுக்கெதிராகத் தனியொரு மனிதனாக போர்க்கொடி உயர்த்தி கிரியைகளால் ஒருபோதும் எந்த மனித னும் இரட்சிப்பை அடைய முடியாது என்றும், நீதிமானாக முடியாது என்றும் கர்ஜனை செய்த லூதர் யாக்கோபு நிருபத்தைப் பற்றி இத்தகைய கருத்துக் கொண்டிருந்ததை நம்மால் அனுதாபத்தோடு புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், பவுலும், யாக்கோபுவும் நீதிமானாகுதலைக்குறித்து முரண் பாடான கருத்துக்களைக் கொண்டிருந்தார்களா? இருவருடைய போதனை களும் ஒன்றுக்கொன்று முரணானவையா? என்று கேட்பது அவசியமாகிறது. இதற்கு பதிலளிக்கும்போது ஆரம்பத்திலேயே நாம் மனதில் வைத்திருக்க வேண்டிய ஒரு உண்மை, வேதம் ஒருபோதும் தனக்கு முரணாகப் பேசாது என்பதுதான். வேதத்தின் எந்தப்பகுதியும் அதன் ஏனையபகுதிகளோடு முரண்பாடுள்ள போதனைகளைக் கொண்டிருக்கவில்லை என்பது அடிப் படை வேதவிளக்க விதி. இந்த விதியை மீறினால் நாம் பவுலும், யாக்கோபு வும் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்துக்களை அளித்துள்ளதாகத் தான் முடிவுக்கு வரவேண்டும். அத்தகைய முடிவு வேத ஒற்றுமையைக் குழைப்பதில் போய்முடிவதோடு வேதவிளக்க விதிகளை மீறியதாகவும் அமையும். அப்படியானால் உண்மையில் பவுலும் யாக்கோபுவும் நீதிமா னாகுதலைக் குறித்து போதிப்பதுதான் என்ன என்பதை ஆராய்வது அவசியம்.
பவுலின் போதனை – விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக முடியும்
பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம் கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பற்றியது. ரோமர் 1:16, 17 அந்த சுவிசேஷத்தை விளக்குகிறது. இந்த வசனங்களை இந்த நிருபத்தின் பொருளாகக் (theme) கொள்ளலாம். ரோமாபுரியில் இருந்த சபை பெருமளவில் புறஜாதியிலிருந்து கிறிஸ்துவை விசுவாசித்தவர்களையும், யூதர்களையும் கொண்ட சபையாக இருந்தது. அந்த விசுவாசிகளுக்கு பவுல் தெளிவாக கிறிஸ்தவ சுவிசேஷத்தை இந்நிருபத்தின் மூலம் விளக்குகிறார். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை சுவிசேஷம் விளக்குகிறது என்கிறார் பவுல் (1:17). இந்த சத்தியத்தையே முதல் பதினொரு அதிகாரங்களிலும் விளக்கமாகத் தருகிறார் பவுல். இந்த வேதசத்தியத்தை விளக்க ஆரம்பிக்கும் பவுல் முதல் அதிகாரத்தில் தேவ கோபம் சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிற அனைவர் மேலும் இருப்பதாகக் கூறுகிறார். தேவன் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும் அவரை நிராகரிக்கின்ற மனித வர்க்கத்தின் தீஞ்செயலை இந்த அதிகாரம் விளக்குகிறது. இரண்டாம், மூன்றாம் அதிகாரங்களில் யூதர்களும், புறஜாதியினரும் நியாயத்தீர்ப்பு நாளில் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் சமமாக நியாயந் தீர்க்கப்படுவார்கள் என்றும், கர்¢த்தருக்கு முன் அனைவரும் பாவிகளே என்று பவுல் விளக்குகிறார் (2:12-16; 3:23). விருத்தசேதனம் .யூதர்களை ஒருபோதும் நீதிமான்களாக்கவில்லை என்று விளக்கும் பவுல், நான்காம் அதிகாரத்தில் யூதர்கள் தங்களுடைய பெருமகனாகக் கொண்டாடும் ஆபிரகாமும் விசுவாசத் தின் மூலம் மட்டுமே நிதீமானாகினார் என்றும் விளக்குகிறார். இது யூதர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருகின்ற சத்தியம். நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாகினார் என்கிறார் பவுல் (4:3; 4:9, 10; 4:13-22). இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள யூதர்கள் முதலில் சுவிசேஷத்தைக் கேட்பது அவசியம் என்கிறார் பவுல் (9:31, 32; 10:1). விசுவாசிக் கிறவர்களுக்கு மட்டுமே நீதி உண்டாகிறதென்றும், அப்படியாக விசுவாசிக்கிறவர் களுக்கு மட்டும் நீதி கிடைக்கும்படியாக கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் என்றும் கூறுகிறார் பவுல் (10:4). அந்த விசுவாசம் சுவிசேஷப் பிரசங்கத்தைக் கேட்பதனால் கிறிஸ்துவின் மூலமாகக் கிடைக்கிற தென்கிறது பத்தாம் அதிகாரத்தின் 9 முதல் 15 வரையிலான வசனங்கள்.
ஆகவே, ரோமர் ஒருவன் எப்படி நீதிமானாவது? என்ற சத்தியத்தை விளக்குகிறது. நீதிமானாவதற்கு விருத்தசேதனத்திலும், நியாயப்பிரமாணத் திலும் அதிதீவிர நம்பிக்கை வைத்திருந்த யூதர்களில் வாதங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக முடியும் என்பதே ரோமரில் பவுல் அளிக்கும் போதனை. இதை விளங்கிக் கொண்டால் இந்நிருபத்தில் பவுல் தரும் போதனைகளைப் புரிந்து கொள்வது சுலபம். கிரியைகளின் மூலமாக விசுவாசத்தை அடைய லாம் என்ற போதனையை அளிக்கும் ரோமன் கத்தோலிக்க மதம் உட்பட உலகிலுள்ள அனைத்து மதங்களின் போதனைகளையும் அம்பலமாக்கும் அற்புதமான நிருபம் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபம்.
யாக்கோபுவின் போதனை – விசுவாசத்திற்குரிய நற்கிரியைகளை நீதிமான் தன் வாழ்வில் எப்போதும் செய்வான்
பவுல், ஒருவன் எப்படி நீதிமானாக முடியும் என்ற போதனையை ரோமருக்கு எழுதிய நிருபத்தில் அளிக்க, யாக்கோபு நீதிமான் எந்தவிதமாக வாழவேண்டும் என்பதை விளக்குகிறார். யாக்கோபு நிருபத்தைப் பெற்றுக் கொண்ட விசுவாசிகளுக்கு இது தெரியாமல் இருக்கவில்லை. ஆனால், அவர்கள் மத்தியில் சிலருடைய விசுவாச வாழ்க்கையில் குறைகள் இருந்தன. “இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை பட்சபாதத்தோடு பற்றிக் கொள்ளாதிருப்பீர்களாக” என்று யாக்கோபு 2:1 ல் வாசிக்கிறோம். இதற்குக் காரணம் ஏற்கனவே விசுவாசிகளாக இருந்தவர்கள் சபையில் பணக்காரர்களை மட்டும் பெரிதுபடுத்தி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான். இதை யாக்கோபு வன்மையாகக் கண்டிக்கிறார். நீதிமான்களாகிய விசுவாசிகள் தங்களுடைய விசுவாசத்திற்கு எதிரான செயல்களை வாழ்க்கையில் கடைப் பிடிக்கக்கூடாது என்கிறார் யாக்கோபு. வெறுமனே கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல் அதன்படி வாழ்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுரை செய்கிறார் (1:32).
விசுவாசி என்று தன்னை அழைத்துக் கொள்கிற ஒருவருடைய வாழ்க்கை யில் நற்கிரியைகளைப் பார்க்க முடியாதிருந்தால் அவர் விசுவாசியாக இருக்க முடியாது. நற்கிரியைகளை செய்யக்கூடிய தகுதியையும் வல்லமையையும் விசுவாசம் ஒருவருக்கு அளிக்கிறது. ஆகவே, விசுவாசி நற்கிரியைகளைச் செய்யும் படியாக வேதம் எதிர்பார்க்கிறது. விசுவாசி மட்டுமே பத்துக் கட்டளைகளையும் தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றக்கூடியவனாக இருக்கிறான். இதைச் சுட்டிக் காட்டும் யாக்கோபு, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும் அவனுடைய வாழ்க்கையில் கிரியைகளில்லாவிட்டால் அவனுக்குப் பிரயோஜன மென்ன என்கிறார் (3:14). கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும் என்கிறார் (3:17). யாக்கோபுவின் நகைச்சுவை உணர்வை 3:19ல் பார்க்கிறோம். நற்கிரியைகளை வாழ்க்கையில் கொண்டிராமல் சபையில் பாரபட்சம் காட்டிக் கொண்டு தன்னை விசுவாசி என்று சொல்லுகிற மனிதனைப் பார்த்து யாக்கோபு சொல்லுகிறார், பிசாசுகள்கூடத்தான் இயேசுவைத் தேவகுமாரரென்று அறிந்து நடுங்குகின்றன, அதனால் பிசாசுகள் விசுவாசிகளா? என்று நகைச்சுவை யாக கேட்கிறார். ஆபிரகாமை உதாரணம் காட்டும் யாக்கோபு, ஆபிரகாம் தன்னை விசுவாசி என்று மட்டும் அறிவித்துக் கொள்ளாமல் அதைச் செயலில் காட்டினான் என்கிறார். “மனுஷன் விசுவாசத்தினால் மட்டுமல்ல, கிரியை களினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே” என்ற வசனத்தை (3:24) அது காணப்படும் பகுதியின் ஏனைய வசனங்களோடு தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆபிரகாமை உதாரணம் காட்டுகிற யாக்கோபு, ஆபிரகாமினுடைய விசுவாசம் மெய்யான விசுவாசம் என்பதை அடையாளம் காட்டக்கூடியதான கிரியைகள் அவனுடைய வாழ்க்கையில் இருந்தன என்று ஏற்கனவே விளக்கியிருக்கிறார். ஆபிரகாம் தன்னுடைய பிள்ளையைப் பலி கொடுக்க முன்வந்தது அவனுடைய விசுவாசத்தைக் காட்டுகிறது. இதைப் பற்றி 24ம் வசனம் விளக்குகிறது. அதாவது, ஆபிரகாமின் விசுவாசம் மெய் விசுவாச மாக, அவன் நற்கிரியைகள் செய்யக்கூடிய விசுவாசமாக இருந்தது என்பது இதன் பொருள். இதைப்போலவே ராகாபும் தன்னுடைய விசுவாசம் மெய்யானது என்பதை துதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பியதன் மூலமாகக் காட்டினாள். ஆகவே, யாக்கோபு ஒருவனை நீதிமானாக்குகிற விசுவாசம் அவன் நற்கிரியைகளை செய்யும்படிச் செய்கிற விசுவாசம் என்பதை விளக்குகிறார்.
இவ்விரு நிருபங்களிலும் பவுலும், யாக்கோபுவும் ஒரே விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் விளக்குவதைப் புரிந்துகொள்ள வேண்டும். இருவரும் ஒருவருக் கொருவர் முரண்பட்டு விசுவாசத்தைப் பற்றிய முரண்பாடுள்ள போதனைகளை அளிக்கவில்லை. பவுல், ஒருவன் எப்படி நீதிமானாகலாம்? என்பதை விளக்க யாக் கோபுவோ, ஒருவன் நீதிமானாக இருந்தால் அது அவனுடைய வாழ்க்கையில் நற்கிரியைகள் மூலமாக வெளிப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இரட்சிப்பை ஒருபோதும் எவரும் கிரியைகளின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது. கிரியைகள் ஒருவனை நீதிமானாக்காது. ஆனால், ஒருவன் பெற்றுக்கொண்ட இரட்சிப்பும், நீதியும் அவன் நற்கிரியைகளை செய்யும்படிச் செய்யும். பவுலும் யாக்கோபுவும் நீதிமானாக்குதல் பற்றிய ஒரே நம்பிக்கையையே கொண்டிருந்தனர்.