எதில் தேவை சீர்திருத்தம்

கடந்த பத்து வருடங்களாக சீர்திருத்தவாதத்தைப்பற்றியும், சீர்திருத்தப் போதனை களைப்பற்றியும் இந்தப் பத்திரிகையில் வெளிப்படையாகவே பலரும் அறிய எழுதி வந்திருக்கிறேன். அதில் எனக்கு எந்தவிதமான வெட்கமோ, தயக்கமோ ஆரம்பத்தில் இருந்தே இருந்ததில்லை. சீர்திருத்தப் போதனைகளை நான் வியாபாரத்துக்காகவோ, என்னை உயர்த்திக்கொள்ளும் சுயநலத்துக்காகவோ பின்பற்றவில்லை. அது என் உயிர்நாடி; வேதம் அப்பட்டமாகப் போதிக்கும் சத்தியம். அதற்கு மாறான போதனை களை, அவை வேதத்துக்கு முரண்பட்டவையாய் இருந்தால் இனங்காட்டவும், வேத அடிப்படையில் அவற்றின் போலித்தனத்தை வெளிப்படுத்தவும் நான் தயங்கியதில்லை. சத்தியத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு முகத்தாட்சண்யம் பார்க்கும் குரங்குத்தனம் இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மற்றவர்கள் மனதைப் புண்படுத்துவது எழுதுகிறவனுக்கோ, விசுவாசிக்கோ பணியாக இருக்கக்கூடாது. அதற்காக உயிர் மூச்சாய் விசுவாசிக்கிற சத்தியத்தை மற்றவர்கள் மனஸ்தாபப் படுவார்கள் என்பதற்காக மறைப்பது கோழைத்தனம். “அசத்தியத்தை தோலுரிக்கிற போது சத்தியம் ஒளிருகிறது” என்றார் ஒரு சீர்திருத்தவாதி. சீர்திருத்தவாதிகளான லூதரும், கல்வினும் தம் காலத்தில் எதைச் செய்தார்களோ அதையே நான் செய்யத் துணிகிறேன்; முயற்சித்தும் வருகிறேன். புதிய வாசகர்களுக்காகவும், சீர்திருத்தப் பாதை யில் செல்லத்துணிந்திருக்கிறவர்கள் அந்தப் பாதையில் எதிர்கொள்ள வேண்டிய கடமை களை நினைவுபடுத்திக் கொள்ளுவதற்காகவும் இந்த ஆக்கத்தை எழுதியுள்ளேன். இறையாண்மையுள்ள கர்த்தர் நமது பாதையில் வழித்துணையாக இருந்து நாமும், நமது சபைகளும் தொடர்ந்து சீர்திருந்த உதவுவாராக.

சீர்திருத்தம் என்ற வார்த்தையின் மூலம் நான் எதைக் குறிக்கிறேன் என்பதை இப்பத்திரிகையின் தீவிர வாசகர்கள் நிச்சயம் அறிவார்கள். இருந்தாலும் புதிய வாசகர்களின் பொருட்டு அதை சுருக்கமாக விளக்குவது அவசியமாகிறது. ‘சீர்திருத்தம்’ என்பதற்கு சாதாரண மாக மறுமலர்ச்சி, சீராக இல்லாததை திருத்தி அமைத்தல் போன்ற பொது வான அர்த்தங்கள் உள்ளன. அந்த அர்த்தங்கள் இந்த வார்த்தையில் நிச்சயம் அடங்கியிருந்தபோதும், இதை முக்கியமாக கிறிஸ்தவ வரலாற்று அடிப்படை யில் விளங்கிக்கொள்ளுவது அவசியம். கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இதை வரலாற்று அடிப்படையிலேயே நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்; வரலாற்றிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

சீர்திருத்தம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்ட உடனேயே கிறிஸ்தவ வரலாறு தெரிந்தவர்கள் 16-ம் நூற்றாண்டைத் திரும்பிப் பார்ப்பார்கள். அதற்குக் காரணம், அந்த நூற்றாண்டில்தான் ரோமன் கத்தோலிக்க மதத்தின் பிடியில் இருந்து கிறிஸ்தவத்திற்கு விடுதலை கிடைத்தது. 6-ம் நூற்றாண்டு களில் இருந்து படிப்படியாக வளர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தைக் காலில் போட்டு மிதித்து வைத்திருந்தது. வேதத்தை ஒருவரும் வாசிக்க முடியாதபடியும், வேத அடிப் படையில் திருச்சபைகள் நிறுவ முடியாதபடியும் அரசையும் தன்வசப்படுத்தி கொடூர ஆட்சி செய்துவந்த ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருந்து கர்த்தர் கிறிஸ்தவத்திற்கு விடுதலை பெற்றுத் தந்த நூற்றாண்டு 16-ம் நூற்றாண்டு. இந்த நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிராகப் போர்க்கொடி ஏந்தி மார்டின் லூதர், ஜோன் கல்வின், ஜோன் நொக்ஸ் போன்றோர் புறப்பட்டு திருச்சபை சீர்திருத்தத்திற்குப் பாடுபட்டதாலேயே ‘சீர்திருத்தம்’ (Reformed) என்ற பெயர் அவர்கள் நிறுவிய சபைகளால் பயன்படுத்தப்பட் டன. தன்னை சபையாக உலகில் பொய்யாகக் காட்டிக் கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தகர்த்ததால் அவர்களும் ‘சீர்திருத்த வாதிகள்’ (Reformers) என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.

17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தோன்றிய ‘பியூ ரிட்டன்’ (பரிசுத்தவான்கள்) இயக்கமும் சீர்திருத்தவாதத்தின் தொடர்ச்சியே. லூதரையும், கல்வினையும்போல இக்காலத்தில் கர்த்தரால் எழுப்பப் பட்டவர்கள் ஜோன் ஓவனும், தொமஸ் குட்வினும், ஜோன் பனியனும், ரிச்சட் சிப்சும், இவர்களைப்போன்ற மேலும் நூற்றுக்கணக்கானவர்களும். 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திருத்தத்தின் அடிப்படையில் தொடர்ந்த சபை சீர்திருத்தமே 17-ம் நூற்றாண்டில் பியூரிட்டனிசம் (Puritanism) என்ற பெயரைப் பெற்றது. இந்நூற்றாண்டில் மெய்ச்சபைகளைப் பாதுகாப்ப தற்காக விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் எழுதி வைக்கப்பட்டன. இந்தப் போதனைகளின் அடிப்படையில் வரலாற்றில் தொடர்ந்து நிறுவப்பட்ட சபைகள் ‘சீர்திருத்த சபைகள்’ (Reformed Churches) என்று அழைக்கப்பட்டு வருகின்றன. இப்படியாக 17-ம் நூற்றாண் டில் வெளிவந்த சீர்திருத்த விசுவாச அறிக்கையே 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை. ஸ்பர்ஜன் இதன் அவசியம் கருதி இதனை 1855ல் மறுபதிப்பு செய்து வெளியிட்டார். இது சீர்திருத்த போதனைகளின் அடிப்படையில் இயங்கி வரும் சீர்திருத்த பாப்திஸ்துகளின் விசுவாச அறிக்கையாக எல்லா நாடுகளிலும் இன்று இருந்து வருகிறது.

உலகத்திலிருக்கின்ற பாப்திஸ்து சபைகள் எல்லாமே 1689 விசுவாச அறிக்கையைப் பின்பற்றுவதில்லை. சீர்திருத்த பாப்திஸ்து என்று வசதிக்காகப் பெயர் சூட்டிக் கொள்கிறவர்கள்கூட இதனைத் தங்கள் சபையின் விசுவாச அறிக்கையாகக் கொள்வதில்லை. சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றாத அனேக பாப்திஸ்து பிரிவுகள் இருக்கின்றன. அவர்களில் பெரும்பான்மையானோர் ஆர்மீனியனிசக் கோட்பாட்டைத் தழுவியவர்கள். ஆர்மீனியனிசக் கோட்பாட்டைப் பின்பற்றுகிற பாப்திஸ்து சபைகள் இரட்சிப்பிற்கு மனிதன் தன்னிலேயே தங்கியிருக்கிறான் என்று நம்பு கின்றன. இது வேத போதனைகளுக்கெல்லாம் முரணானதாகும். அத்தோடு அனேக பாப்திஸ்து சபைகள் ஸ்கோபீல்டின் டிஸ்பென்சேஷனலிசத்தையும் ஆறத்தழுவிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக ஆர்மீனியனிசப் போக்கைப் பின்பற்றும் பாப்திஸ்து சபைகள் எல்லாமே வேதத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அதன் போதனைகளின்படி சபை நடத்துவதில்லை. மனித ஞானமே இவர்களின் வாழ்க்கையையும், சபைகளையும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பாப்திஸ்துப் பிரிவுகள் முழுக்கு ஞானஸ் தானத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. அதுவும் முழுக்கு ஞானஸ்தானத்தைக் கேள்வி முறையில்லாமல் பலருக்கும் கொடுப்பது இவர்கள் மத்தியில் வழக்கிலிருப்பதைப் பார்க்கலாம்.

சீர்திருத்த பாப்திஸ்துகள் இதுவரை நாம் மேலே பார்த்த பாப்திஸ்துகளில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதத்தின் மூலம் எழுந்த போதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேதத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு சபை நடத்தும் இலட்சியப் போக்கைக் கொண்டவர்கள். மனித ஞானத்திற்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் சபையிலும் இடங்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்களல்ல.

16-ம் நூற்றாண்டில் எழுந்த சீர்திருத்தவாதத்தால் உயிர்பெற்ற சத்தியங்களை சுருக்கமாக பின்வருமாறு விளக்கலாம்:

1. கிருபையின் போதனைகள் – கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்றும் அவர் தன்னுடைய அநாதிகாலத் திட்டப்படி தன்னு டைய மக்களைத் தெரிந்துகொண்டு, கிறிஸ்துவின் சிலுவைப் பலியை அவர்களுக்காக வரலாற்றில் நிறைவேற்றி, அவர்களுக்கு தகுந்த காலத்தில் விசுவாசத்தைத் தந்து தன்னிடம் அழைத்துக் கொள்ளுகிறார் என்பது கிருபையின் போதனைகளின் சுருக்கம். இதில் மனிதனின் கிரியைகளுக்கோ, பங்கிற்கோ இடமில்லை என்கிறது சீர்திருத்தவாதம். ஆவியானவரின் கிரியை ஆரம்பித்த பின்பே அவருடைய துணையின் மூலம் மனிதன் மனந்திரும்பி இரட்சிப்பை அடைகிறான் என்கிறது இவ்வேத சத்தியம். இது இரட்சிப்பைக் குறித்த சீர்திருத்தப் போதனை.

2. கர்த்தரின் ஆராதனை – ஆராதனை மனிதனின் சுய உணர்ச்சிகளின் அடிப்படையிலல்லாது கர்த்தரின் வேதம் காட்டும் வழிப்படி நடத்தப்பட வேண்டுமென்கிறது சீர்திருத்தப் போதனை. வேதம் போதிக்கும் ஆராதனை விதிகளை மீறிக் கர்த்தரை ஆராதிப்பது அந்நிய அக்கினியை கர்த்தருக்கு முன் ஏற்றும் பாவச் செயலுக்கு ஒப்பானது என்கிறது சீர்திருத்தப் போதனை.

3. கர்த்தரின் சபையும், ஊழியங்களும் – மனிதனின் தேவைகளை முன்வைத்து நடக்க வேண்டியதல்ல சுவிசேஷ ஊழியம்; கர்த்தரின் மகிமைக்காகவே அது நடத்தப்பட வேண்டும் என்று நம்பும் சீர் திருத்தப் போதனை சுவிசேஷ ஊழியத்தின் மூலமும், சபை அமைத் தலின் மூலமும் கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றி அவருக்கு மகிமை தேடுவதை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு சீர்திருத்தக் கோட்பாடுகளை தமிழினம் அறிந்து வருகின்றது. பல இடங்களில் அக்கோட்பாடுகளின் அடிப்படையில் சபைகள் உருவாகி வருகின்றன. போக வேண்டிய பாதை அதிக நீளமானது என்பதும், அதில் முற்களும், கற்களும் அதிகமென்பதும் அவர்களுக்குத் தெரியும். சத்தியத்தால் கண்கள் திறக்கப்பட்டு சீர்திருத்தப் பாதையில் போக அவர்கள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். சடங்குகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சபைகளும், வயிற்றுக்காக போதக ஊழியம் செய்து கொண்டிருக்கும் போலிகளும், காளான்களாய் நிரம்பி வழியும் ஸ்தாபனங்களும், கலாச்சாரத்தின் பெயரில் பிணநாற்றம் அடிக்கும் போலிப் பண்பாடும் தங்கள் பாதையில் இடறல்களாய் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். முன்வைத்த கால்களைப் பின்வைக்க முடியாது. முடிந்தவரை முயற்சி செய்து ஒரு கை பார்த்துவிடுவது என்ற வைராக்கியத்தோடு அவர்கள் எழும்பியிருக்கிறார்கள். விடிவானில் தெரியும் வெள்ளி நட்சத்திரம் போல் இது நம் இதயத்துக்கு இதமளிக்கிறது.

சீர்திருத்தம் என்பது விசுவாசியின் வாழ்க்கையிலும், திருச்சபையின் போக்கிலும் வளர்ச்சியிலும் காணப்பட வேண்டிய மாற்றங்களைக் குறிக்கிறது. அந்த மாற்றங்கள் மனிதஞானத்தின் அடிப்படையில் உண்டாகும் மாற்றங்களல்ல; சத்திய வேதத்தின் அடிப்படையில் உருவாகும் சத்திய வளர்ச்சி. சீர்திருத்தம் ஏற்படுவதற்கு ஆரம்பம் மெய்யான விசுவாசமும், சத்திய வசனத்திற்குக் கட்டுப்படும் மனப்போக்கும்தான். சத்திய வேதத்தை வெறும் காகித ஏடாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு சீர்திருத்தப் போதனைகள் சுட்டுப் போட்டாலும் விளங்காது. சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் முகத்தாட்சணியத்தை முரத்தால் அடித்து விரட்டி முழு மனதோடு சத்திய வேதத்திற்கு அடிபணிந்தவர்கள்.

எதில் தேவை சீர்திருத்தம்? என்ற கேள்விக்கான பதிலை இனிப் பார்ப்போம்.

எதை விசுவாசிக்கிறோம் என்பதில் தேவை சீர்திருத்தம்

விசுவாசிகள் கூட்டம் என்ற பெயரில் எதை விசுவாசிக்கிறோம் என்பதே தெரியாத நிலையில் இன்று தமிழினத்தில் இருந்து வருகின்றது ஒருவகைக் கிறிஸ்தவம். ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் சுவிசேஷ கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரியாமலும், கிறிஸ்தவ வரலாற்றை அறியாமலும், வேதத்தின் அருமை தெரியாமலும், வேத ஆதாரமில்லாத கொள்கைகளைப் பின்பற்றியும், தனிமனிதர்களுக்கு துதிபாடி, பரவசத்தை மட்டும் நாடி இருந்து வருகிறது தமிழினத்தின் கிறிஸ்தவம். பாட்டும், இசையும் இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்ற மனப்பாங்கோடு இருட்டில் வாழ்ந்து வருகிறார்கள் அனேகர். வேதத்தை இந்தளவுக்கு அறியாமலும், அதை உதாசீனப்படுத்தியும் வரும் இவர்கள் மெய்யான விசுவாசிகளாக இருக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுகின்றது.

இந்தக் குழப்பமான மனநிலைக்கு மாறாக மெய்யான மனந்திரும்பு தலையும், விசுவாசத்தையும் கொண்டிருந்து வேதத்திற்கு அடிபணியும் மனப்போக்குள்ள விசுவாசிகள் உறுதியான வேதக்கோட்பாடுகளை அறிந்து வளர வேண்டியது அவசியமாகிறது. நாம் எதை விசுவாசிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நாமோ, தனி மனிதர்களோ அல்ல வேதம் மட்டுமே என்ற உறுதியான எண்ணம் நமக்கிருக்க வேண்டும். அந்த மனப்போக்கைக் கொண்டிருப்பதே சீர்திருத்தத்தின் ஆரம்பப்படி. காதில் விழுவதையெல் லாம் நம்புவது தவறு, கண்ணில் தெரிவதெல்லாம் ஆவியின் செயல்களல்ல என்ற நம்பிக்கை சீர்திருத்தவாதிக்கு அவசியம். எதையும் ஆராய்ந்து பார்க் காமல் ஏற்றுக்கொள்ளுவது சீர்திருத்தவாதியின் அகராதியில் கிடையாது.

கர்த்தர் சகலத்துக்கும் அதிகாரி, அனைத்தையும் ஆள்கிற, நம்மைப் படைத்த அவர் மட்டுமே நமக்கு இரட்சிப்பை வழங்க முடியும் என்றும், நம்மில் எந்த நீதியும் பிறப்பில் இருந்தே இருக்கவில்லை, நீதியும், நாதியுமற்ற நமக்கு கர்த்தர் மட்டுமே ஜீவனை அளிக்க முடியும் என்ற சீர்திருத்த வேத அறிவு நமக்கிருக்க வேண்டும். சுட்டுப்போட்டாலும் எந்தவொரு மனிதனோ, போதகனோ, சுவிசேஷகனோ எவருக்கும் ஆத்மீக விடுதலை அளிக்க முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். இரட்சிப்பு கர்த்தருடையது; இது, இன்று நமக்கிருக்க வேண்டிய வேதநம்பிக்கை.

வேதத்தை தேவபயத்தோடு தன்மேல் அதிகாரம் செலுத்தும் கர்த்தரின் வார்த்தையாக ஏற்றுக்கொள்கிறான் சீர்திருத்த கிறிஸ்தவன். மாறும் நிலைப்பாடுடைய மனிதனின் போதனைகளுக்கு அவன் மசியமாட்டான். வேதம் சொல்வதே நிரந்தரமான உண்மை என்பதை அறிந்திருந்து அதனை அன்றாடம், வாசித்து, படித்து, ஆராய்ந்து, அதன் வழி சிந்தித்து வேத போதனைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பான் சீர்திருத்த விசுவாசி. சீர்திருத்த வாதிகளைப் பற்றியும் அவர்களுடைய போதனைகளையும் படித்து ஆராய்ந்து தன்னை வேதசத்தியங்களில் நிலைநிறுத்திக் கொள்ளுவான். இன்று தமிழ் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை இது. பரவசத்தை ஊட்டி, ஆவியின் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் எத்தர்களின் வழியில் போய் ஏமாந்துவிடாமல் இருக்க வேதசத்தியங்களில் நிலைத்திருப்பது அவசியம். இன்றைய தமிழ் மகனின் சிந்தனைப் போக்கை விளக்கும் ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். இப்படிச் சொல்கிறார் ஒருவர், ‘அந்த சபையில் பிரசங்கம் இருக்கிறதோ இல்லையோ என்னைப் பரவசப்படுத்தும் ஒரு சூழல் நிச்சயமாக இருக்கிறது. அது போதும் எனக்கு’ என்று. இந்த எண்ணப் போக்கில் மாறுதல் தேவை. இது ஆத்தும அழிவுக்கு வழிதேடும் குழந்தைத்தனமான சிந்தனை.

நான் பரவசமடைகிறேனா? என்று புத்தியற்று சிந்திக்காமல், நான் எதை விசுவாசிக்கிறேன் என்ற கேள்வியைக் கேட்கப் பழகிக்கொள்ள வேண்டும். நாம் விசுவாசிக்கும் போதனைகள் தவறானவையாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்தத்திற்கு இடமிருக்க முடியாது. சத்தியத்தைப் பின்பற்றுவதால் ஒருவனுடைய வாழ்க்கையில் ஏற்படுவதே பரிசுத்தம். பரவசத்தால் பரிசுத்தமடைந்து பரலோகம் போனவர்கள் ஒருவர்கூட இல்லை. தன் ஆத்துமாவை பரவசப்படுத்திக்கொள்ள தாவீதை சங்கீதம் வாசிக்கச் சொன்ன சவுல் அந்த நிமிடம் ஆறுதலை அடைந்தபோதும் இன்று வெந்துகொண்டிருப்பது நரகத்தில். எதை விசுவாசிக்கிறீர்கள் என்று இன்றே சிந்தித்துப் பாருங்கள். அவை வேத அடிப்படையில் அமைந்திருக்கின்றனவா என்று ஆராய்ந்து பாருங்கள். சபை வரலாற்றில் அவற்றை அப்போஸ்தலர் முதற்கொண்டு எத்தனைப் பெரியவர்கள் பின்பற்றி யிருக்கிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். வரலாற்றில் சபைகளும், சபைப் பெரியவர்களும் பின்பற்றியிராத, வேத அடிப்படையில் அமைந் திராத போதனைகள் ஒருக்காலும் மெய்யான போதனைகளாக இருக்க முடியாது; இருக்கப்போவதுமில்லை.

கர்த்தரைத் துதிக்கும் முறையில் தேவை சீர்திருத்தம்

சபைகள் இன்று கலியாட்ட அரங்கங்களாக மாறியிருப்பதை யாரால் மறுக்க முடியும். பாட்டும், இசையுமே இன்று சபைகளை ஆள்கின்றன; கர்த்தரின் வார்த்தையல்ல. கைத்தட்டலும், உடலசைவும், அல்லேலூயா கூச்சலும் பரிசுத்த அமைதி ஆள வேண்டிய இடத்தில் அதிகாரம் செலுத்து கின்றன. குரலை உயர்த்தி நன்றாக நாலு பாடல்களைப் பாடமுடிந்து விட்டாலே போதக ஊழியத்துக்கு அழைப்பு வந்துவிட்டதாக எண்ணி  அலைய ஆரம்பித்துவிடுகிறார்கள். பாடத் தெரிவது மட்டுமே போதகர் களுக்கான முக்கிய இலக்கணமாக எண்ணிச் செயல்பட்டு வருகிறது தமிழ் கிறிஸ்தவம். போதக ஊழியத்துக்கும் பாடுவதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக வேதத்தில் நாம் வாசிப்பதில்லை. ஆனால், தமிழுலகத்தில் வசியக் குரலை வைத்துக்கொண்டு கவர்ச்சியாகப் பேசுவதையும் பாடுவதையுமே போதகர்கள் செய்துவருவது தமிழ் கிறிஸ்தவத்தைப் பிடித் திருக்கும் பெரும் தொழுநோய்.

‘துதி’ என்ற பெயரில் கர்த்தரைத் துதிக்கும் ஒரு முறையை தமிழினத்தின் சபைகளில் மட்டுமே காணமுடியும். தமிழ் வேதத்தில் இருக்கும் ‘துதி’ என்ற வார்த்தையை ஜெபத்தோடு தொடர்பில்லாத வார்த்தையாகக் கருதி சபை மக்களெல்லோரும் ஒருவர் மாறி ஒருவர் சத்தமிட்டு துதிக்கும் வழக்கம் ஆராதனை அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறது சபை களிளெல்லாம். வேதத்தில் ஜெபத்திற்கு இன்னொரு பெயராக துதியும் இருக்கிறது என்பது அனேகருக்குப் புரிவதில்லை. ஜெபத்தில் வர வேண்டியது துதி என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. இயேசு, தான் போதித்த மாதிரி ஜெபத்தை துதியுடனேயே ஆரம்பித்தார். அவருடைய ஜெபத்தில் துதி கலந்திருந்தது. இதையெல்லாம் தமிழினம் எண்ணிப் பார்ப்பதேயில்லை. யாரோ என்றோ சுழிபோட்டு ஆரம்பித்து வைத்த ‘துதி’ சொல்லும் முறை இன்று சடங்காக சபைகளை ஆண்டு வருகிறது.

தமிழினத்தில் கர்த்தரை ஆராதிக்கும் முறையில் இன்று சீர்திருத்தம் தேவை. அதாவது, இருக்கும் தவறான முறைகள் அழிந்தொழிந்து வேத போதனைகளின் அடிப்படையில் ஆராதனை அமைய வேண்டும். கர்த்தர் தன் வேதத்தில் போதித்திருக்கும் ஆராதனை முறைகள் ஆராதனையை ஆள வேண்டும். கர்த்தர் தன்னை எந்தவகையில் ஆராதனை செய்ய வேண் டும் என்று கட்டளையிட்டிருக்கிறாரோ அந்தவகையில் அவரை அணுகும் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். இசை நம் காதுகளைக் குடைந்து செவி மடல்களை நாசம் செய்வது ஒழியும் நாள் ஏற்பட வேண்டும். அடக்கி வாசிக்கத் தெரியாத அடங்காப்பிடாரிகள் சபையைவிட்டு துரத்தப்படும் சீர்திருத்தம் இன்று தேவை. இசை அதன் பெயருக்கு ஏற்ப அமைதியாக பின்னணியில் இருந்து நாம் குரலுயர்த்தி பாடும் சங்கீதங்களுக்கும், பாடல்களுக்கும், கீர்த்தனைகளுக்கும் துணையாக மட்டும் இருக்க வேண்டும்.

வேதப்பிரசங்கங்கள் வேத சத்தியங்களின் அடிப்படையில் பிரசங்கிக்கப் படும் இடங்களில் மட்டுமே கர்த்தரின் ஆவியின் கிரியைகளைக் காணலாம். வேதப் பிரசங்கம் ஆராதனையின் முக்கிய அம்சம். வேதப் பிரசங்கமில்லாத ஆராதனை கர்த்தரின் ஆராதனையல்ல. ஆராதனையில் சீர்திருத்தம் ஏற்பட ஒரேயொரு வேத வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மனதில் பட்டதையும், இனிப்பினிப்பான கதைகளையும் சொல்லி நேரத்தை இழுத் தடித்து ஆத்துமாக்களை ஏமாற்றிவரும் பிரசங்கிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். சத்திய போதனைகளே இல்லாது பிரசங்கமென்ற பெயரில் பிரசங்கிக்கப்படும் வெறும் வார்த்தை ஜாலங்களும், வாய்ச் சவடால்களும் சபைகளைவிட்டு விரட்டியடிக்கப்பட வேண்டும். விசுவாசத்தை அளிக்கக் கூடிய பிரசங்கங்களால் ஆராதனை அலங்கரிக்கப்பட வேண்டும். ஆராய்ந்து, கவனத்தோடு தயாரிக்கப்பட்ட வேதபோதனைகளுள்ள பிரசங்கங்கள் ஆரா தனையை உயர்த்த வேண்டும். பரிசுத்தத்தில் உயர்ந்த, அதை அணிநலனாகக் கொண்டு ஆத்துமாக்களுக்கு உதாரண புருஷர்களாக இருக்கும் மனிதர்கள் மட்டுமே பிரசங்க மேடைகளில் அனுமதிக்கப்பட வேண்டும். பரிசுத்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து, பணத்தைக் கையாடும் இழிவானவர்களும், பொய்யும், புரட்டும் சொல்லி வாழ்கிறவர்களும் பிரசங்க ஊழியம் செய்வதில் இருந்து அகற்றப்படும் நாள் வரவேண்டும். ஆராதனையின் பிரதான அம்சமான பிரசங்கத்தை தகுதியற்ற மனிதர்கள் செய்வது கர்த்தருக்குப் பொறுக்காது. பிரசங்கம் வேத அடிப்படையில் கொடுக்கப்படாத இடத்தில் ஆத்துமா ஒரு நிமிடமும் இருக்கக்கூடாது. கேட்டு சிந்தித்து வாழ்க்கையில் நடை முறையில் நிறைவேற்றக்கூடிய சத்தியங்களைத் தராத இடங்கள் கள்ளர் குகைகளே தவிர வேறில்லை. நிகழ வேண்டிய சீர்திருத்தத்தின் முதல்படியாக இன்று வேதபிரசங்கங்கள் ஆராதனை வேளையில் கொடுக்கப்பட்டு அவை சபைகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற வேண்டும்.

சுவிசேஷ ஊழியத்தில் தேவை சீர்திருத்தம்

இந்தப் பத்திரிகையில் நாம் பலமுறை சுவிசேஷ ஊழியங்களில் இன்றிருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி எழுதியிருக்கிறோம். சபை அமைப்பதை நோக்கமாகக் கொண்டிராது (மத்தேயு 28:18-20) தனி ஊழியம் என்ற பெயரிலும், சொந்த ஊழியம் என்ற பெயரிலும் குடும்ப வியாபாரம் செய்வதை நோக்கமாகக் கொண்டு சுவிசேஷ ஊழியத்தில் இறங்குபவர்களுக்கு ஆத்துமாக்கள் அனுசரனையாக இருக்கக்கூடாது. அத்தகைய ஊழியங்கள் கர்த்தரின் அனுமதி பெறாதவை. சுவிசேஷ ஊழியங்களை செய்யப் புறப்படுகிறவர்கள் சபை மூப்பர்களுக்குள்ள இலக்கணங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அனுபவசாலிகளாகவும், ஏனையோரால் ஆராய்ந்து அனுப்பப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எந்த வேலையும் செய்ய வக்கில்லாது கடைசியில் சுவிசேஷ ஊழியம் செய்யப் புறப்பட்டவர்களால் தமிழினம் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனாலேயே இன்று நம்மத்தியில் மேலைத்தேயத்தார் மத்தியில் இருப்பது போல் வளமான, உறுதியான, நல்ல போதகர்களையும், மூப்பர்களையும் கொண்ட சபைகளைக் காணமுடியாமலிருக்கிறது. சபை என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? என்பதெல்லாம் தெரியாமல் ஊழியம் செய்யக் கிளம்பி இருப்பவர்களே நம்மத்தியில் அதிகம்.

சுவிசேஷம் சொல்லப்படும் விதத்திலும் இன்று சீர்திருத்தம் தேவை. மனிதர்களை வசியம் செய்து கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்ய வைக்கும் செயல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். வணிக உத்திகளைப் பயன்படுத்தி எந்தவிதத்திலாகிலும் ஆத்துமாக்களைக் கவரப் பார்க்காது கர்த்தருக்குப் பயந்து சுவிசேஷத்தைத் தெளிவாகச் சொல்லக்கூடிய நிலை ஏற்பட வேண்டும். கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலாபலன்களையும், ஆத்துமா தன் பாவத்திலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டியதன் அவசியத்தையும் சொல்லும் நிலை ஏற்பட வேண்டும். சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி கிறிஸ்துவின் மரணப்பலிபற்றி எதுவுமே சொல் லாமல் ஆத்துமாக்களைக் கரை சேர்க்கப் பார்க்கும் எத்தர்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

சபை அமைப்பில் தேவை சீர்திருத்தம்

சபை அமைப்பே இல்லாமல் சபைகள் என்ற பெயரில் ஊழியங்கள் தமிழினத்தின் மத்தியில் நிகழ்ந்து வருகின்றன. அதாவது, சபை சட்ட விதிகளையும், அங்கத்தவர்களையும், மூப்பர்களையும், உதவியாளர்களையும் கொண்டு முறையாக அமைந்த சபைகளைப் பார்ப்பதே அரிது. ஒரேயொரு போதகரை மட்டும் கொண்டு அவருடைய மனம்போன போக்கில் காரியங் கள் நிகழ்ந்து வருகின்றன பல சபைகளில். சுய இச்சையாலும், அதிகாரப் பிடிப்பாலும், தன் தலைமைக்கு இடையூறு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத் தாலும் பல போதகர்கள் தங்களுக்கு பக்கத்தில் யாரையும் வரவிடுவ தில்லை; எவரையும் வளர விடுவதும் இல்லை. இந்தப்போக்கால் நிம்மதி இல்லாமல், எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து வாழ்ந்து பல நோய்களையும் தேடிக்கொண்டு ஊழியத்தில் கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பார்க்க முடியாமல் இருந்து வருகிறார்கள் அனேக சுயநலம்பிடித்த போதகர்கள். சுயநலதாலும் ஊழியப் பளுவைத் தாங்கமுடியாமலும் இறந்து போகிறவர்களும் உண்டு.

சுவிசேஷப் பணியால் திருச்சபைகள் சரியாக உருவாகாததாலும், சபை அமைப்புக்கு என்றுமே இடமில்லாமல் இருந்ததாலும் தொடர்ந்தும் தமிழ் கிறிஸ்தவர்கள் தனி மனிதர்களின் எதேச்சாதிகாரப் போக்கிற்கும், அக்கறை யற்ற, ஆத்தும விருத்தியற்ற தலைமைக்கும் தலைவணங்கி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். வேத போதனைகளின்படியான சபை அமைப்போடு தமிழ் சபைகள் அமைய வேண்டும். சபை மக்களின் அங்கீகாரம் பெற்றுத் தெரிவு செய்யப்படாமல் தனிமனிதர்கள் தங்களைத் தாங்களே போதகர்களாக்கிக் கொள்ளும் அதிகப்பிரசங்கித்தனம் முடிவுக்கு வரவேண்டும். குடும்ப ஆதிக்கத்திற்கும், தனி மனித வழிபாட்டிற்கும் முடிவு கட்டப்பட வேண்டும். வேத அடிப் படையிலான சபை அமைப்பு இல்லாத இடங்களை விசுவாசிகள் அங்கீ கரிக்கக்கூடாது; அவற்றிற்கு ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடாது. அத்தகைய இடங்களில் தொடர்ந்திருப்பதால் ஆத்துமாக்களின் ஆத்தும வாழக்கைக்கு ஆபத்து ஏற்படும். வேத அடிப்படையிலான சபை அமைப்பு பற்றிய விழிப்பு ணர்வு ஏற்படாதவரை மெய்யான திருச்சபைகளை தமிழினத்தில் ஒரு போதும் பார்க்க முடியாது. சபை சீர்திருத்தம் இன்று தமிழினத்தில் அவசி யம் தேவைப்படுகிறது.

குடும்ப வாழ்க்கையில் தேவை சீர்திருத்தம்

சாதி பார்த்தும், சமுதாயப் படிக்கட்டில் ஏற்ற இறக்கம் பார்த்தும், இளைஞர்களின் மனநிலை தெரியாமல் பெற்றோர்கள் அவர்களுக்கு எவரெவரையோ மணமுடித்து வைப்பதுமாய் இருக்கின்ற அவல நிலைக்கும் முடிவுகட்டப்பட வேண்டும். இது எளிதாக விரட்டியடிக்க முடியாத எலித் தொல்லை தமிழினத்தில். இருந்தாலும் விசுவாசிகளான இளைஞர்களும், சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றி சபை நடத்துபவர்களும் இந்தக் காரியத்தில் அசட்டையாக இருந்துவிட முடியாது. போதகர்கள் தங்களு டைய சபை மக்களுக்கு இதுபற்றிப் போதித்து விசுவாசிகள் வேத அடிப் படையில் சிந்தித்து செயல்பட வழியெற்படுத்த வேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு தம் பிள்ளைகளுக்கு சாதியும், தரமும் பார்த்து மணமுடித்து வைக்கிறவர்கள் கிறிஸ்துவை நிந்திக்கிறவர்கள்.

குடும்ப வாழ்க்கையிலும் சீர்திருத்தம் தேவை. கணவனும் மனைவியும் வேத அடிப்படையில் வாழ்வது அவசியம். எபேசியர் 5ம் அதிகாரம் ஒன்று சொல்ல, புறஜாதி மனிதர்களைப்போல குடும்பம் நடத்தி வரும் விசுவாசிகள் என்ற பெயர் கொண்டோர் அனேகர். குடும்ப வாழ்க்கைக்கும், கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் வாழ்ந்து கொண்டிருப் பவர்கள் விசுவாசத் துரோகிகள். கணவன் அன்புத் தலைவனாய், மனைவி அவனுக்கு அன்போடு அமைந்து நடப்பவளாய் இருவரும் விசுவாச வாழ்க்கை வாழ்ந்து, பெறும் பிள்ளைகளையும் அவ்வாறு வளர்க்கும் சீர்திருத்தம் இன்று தேவை. ஊழியம் செய்கிறேன் என்ற ஆர்வத்தில் மனைவி பிள்ளைகளை அதற்கு பலிகொடுப்பவர்கள் பாகாலின் மைந்தர் கள். அவர்களுக்கு வேதமும் தெரியவில்லை, கர்த்தரின் கட்டளைகளும் விளங்கவில்லை.

பரிசுத்த வாழ்க்கையில் தேவை சீர்திருத்தம்

தமிழினத்தில் இன்று காணப்படும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பத்துக் கட்டளைகள் பற்றிய வேத ஞானம் இல்லாமலிருக்கிறது. அதை மேலெ ழுந்தவாரியாக வாசித்து பாராட்டுகிறார்களே தவிர அதன்படி வாழ முற்படுகிறவர்கள் குறைவு. பத்துக் கட்டளைகளின்படி வாழ முற்படாதவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றிய அறிவே இல்லாதவர்கள். தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் முகஸ்துதி பார்த்தும், உண்மைக்குப் புறம்பாய் நடந்தும், வாக்குத் தவறியும், பொய்களை நாளும் பொழுதுமாய் சொல்லி அதை மறைக்க சாக்குப் போக்குகளைச் சொல்லியும் பாவச்செயல்களைச் செய்து அது பாவம் என்பதை உணராமல் விசுவாசிகள் என்ற பெயரில் ஒரு பெருங் கூட்டமே நம்மத்தியில் இருக்கிறது. பத்துக்கட்டளைகளை அன்றாடம் இந்தவகையில் மீறுகிறவர்கள் எப்படி விசுவாசிகளாக இருக்க முடியும்? பத்துக் கட்டளைகளை வாழ்வில் நிறைவேற்றுகிறவனே விசுவாசி. அவற்றின்படி வாழுகிறவர்கள் வாழ்க்கையில் மட்டுமே விசுவாசத்தைப் பார்க்க முடியும். பரிசுத்தமான வாழ்க்கையை நாம் வாழ வேண்டுமென்பதற் காகவே இரட்சிப்பை இலவசமாக அளித்த கர்த்தர் நமக்கு பத்துக் கட்டளைகளையும் தந்திருக்கிறார். அவற்றின்படி நடந்துகொள்ளுகிறவர்கள் மட்டுமே தன்னை நேசிக்கிறவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழினத்தில் இன்று ஓய்வுநாள் அசிங்கப்படுத்தப்பட்டு வருகிறது. ஓய்வு நாளை அனுசரிக்காத மக்கள் கூட்டத்தில் மெய்க்கிறிஸ்தவத்தையும், கர்த்தர் மீதான மெய்யன்பையும் பார்க்க முடியாது. ஓய்வுநாளில் ஆராதனைக்கு ஒருவேளை மட்டும் போய்விட்டு, கடைக்குப் போய் பொருட்களை வாங்கி யும், துணிமனிகளை வீட்டில் துவைத்தும், டெலிவிஷனில் சினிமாப் படங்களைப் பார்த்தும், இருக்கும் பத்திரிகைகளையெல்லாம் வாசித்துத் தீர்த்தும், வீண் அரட்டை அடித்தும் வாழ்கிறவர்கள் விசுவாசிகள் என்றால், கிறிஸ்தவத்திற்கு இன்று புதுவிளக்கம் கொடுக்க நேரிடும். ஓய்வு நாளை அசிங்கப்படுத்தாதே என்கிறார் கர்த்தர். அந்நாள் எனக்குரியது என்கிறார் நம் தேவன். அந்நாளில் ஆத்துமரீதியிலான காரியங்களையே செய்து, அநாவசியமான செயல்களைச் செய்வதை நாம் விலக்கி வைக்க வேண்டும். ஓய்வுநாளை தமிழினம் வேதபூர்வமாக அனுசரிக்க ஆரம்பிக்கும் நாளி லேயே தமிழினத்தில் சீர்திருத்தத்தின் உதயத்தைக் காண முடியும். ஓய்வு நாளை அசிங்கப்படுத்துவதில் போதகர்களே முன்நிற்பது இன்று தமிழினத் தைப் பிடித்துள்ள பெருந்தரித்திரம்.

பரிசுத்தமான வாழ்க்கை இருக்குமிடத்தில் பாவத்தைப் பற்றிய பயமும், அதைச் செய்துவிடக்கூடாது என்ற அக்கறையும், பாவத்தை எதிர்த்துப் போராடும் துடிப்பும் ஆர்வமும் இருக்கும். இந்த உலகத்தில் நாம் பூரணமாக வாழ்ந்துவிட முடியாத போதும் அதை நோக்கி வாழும் மனப்போக்கு விசுவாசிகளுக்கு இருக்கும். இதை இன்று தமிழ் கிறிஸ்தவத்தில் பார்க்க முடியாதிருக்கிறது. பாவத்தை அலட்சியப்படுத்துகிறவர்களே அதிகம். பாவத்தை உணர்த்தும் போதனைகளும், பிரசங்கங்களும் நம்மத்தியில் மிகக்குறைவு. சபைகளில் பாவம் மூடி மறைக்கப்படுகின்றது. ஆத்துமாக் களைக் கூசாமல் சபிக்கின்ற இதயமற்ற போதகர்கள் அதிகரித்திருக்கிற அளவுக்கு பாவத்தை விளக்கிக்காட்டி ஆத்துமாக்கள் பரிசுத்தமாக வாழ உதவுகின்ற போதகர்களை நம்மத்தியில் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின் றது. கூட்டம் குறைந்துவிடுமே, காணிக்கை தொகை அதிகரிக்காதே என்ற பயத்தில் தன்னுடைய தேவைகளில் மட்டுமே அக்கறை காட்டி ஆத்துமாக் களின் பாவங்களை சுட்டிக்காட்டித் திருத்தாமல் அவர்கள் செய்யும் அனைத்தையும் அனுசரித்து பகட்டு ஊழியம் செய்து கொண்டிருக்கும் போதகர்களுக்கு எத்தனை தண்டனை காத்திருக்கிறது என்பது அவர் களுக்குத் தெரியாமலிருக்கிறது. விசுவாசிகளின் வாழ்க்கைக்கு ஊறு செய்யும் போலிப்போதகர்கள் இருந்த இடம் தெரியாமல் போகும் நாள் வரத்தான் போகிறது.

எதில் தேவை சீர்திருத்தம்? நாம் இதுவரை பார்த்து வந்துள்ள அனைத் திலும் தேவை சீர்திருத்தம். இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மக்களுக்கு ஆத்தும விடுதலை தேவை இன்று. உணர்ச்சிகளுக்கு உணவூட்டி பரவசத்தை மட்டும் நாடி இருதயத்தைப் பாழடித்துக் கொண்டிருப்பவர்கள் கண்களைத் திறக்கக்கூடிய பிரசங்க சீர்திருத்தம் தேவை இன்று. பண ஆசையும், பதவி ஆசையும் இல்லாமல் சுத்த இருதயத்தைக் கொண்டு சிந்தித்து செயல்படும் சத்திய வாஞ்சையுள்ள போதகர்களும், இளைஞர்களும் அவசியமான இந்த சீர்திருத்தத்தில் இன்று ஈடுபட்டால் மட்டுமே நாளைய தமிழினத்திற்கு விடிவு காலம் ஏற்படும்; நல்ல சபைகளும் உருவாகும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s