கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
கவலைகளெல்லாம் கரைந்து போகும்
காணிக்கை கொடுங்கள் நூறுநூறாயென
கனிவாய் பேசினார் பிரசங்கி கூட்டத்தில்
திரும்பத் திரும்பப் பாடும் ரெக்காட்
பெட்டிபோல் இதைத்தான் வருடம் பூராய்
பெரிதாய் பேசுகிறார் வளமாய் வாழும்
வாக்குத்தத்த வண்டவாளப் பிரசங்கி
அற்புதம், ஆசீர்வாதம், காணிக்கை,
உபவாசம், உனக்கு வரும் நன்மையென்று
பிரசங்கிகள் பேசும் பேச்சிலெல்லாம்
இவையே செய்தியாய் இருக்கிறது இன்று
அழகாகப் பாடியும், அவசியப்பட்டபோது
ஒரு சொட்டுக் கண்ணீரும் சுலபமாய்விட்டு
ஆத்துமாக்களை வைத்துப் பிழைக்கும்
அற்பர்களே அதிகம் நம் நாட்டிலின்று
அறுபத்தி ஆறு நூல்களில் இருந்து
அருமையாக விளக்கங்களைத் தந்து
பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும்
பல்வேறு இறை போதனைகளையும்
பக்குவமாய் விளக்கிப் பிரசங்கித்து
ஆத்துமாக்களின் ஆத்ம தாகத்தை
ஆவியின் துணையோடு சந்தித்த
சீர்திருத்தவாதிகளெங்கே? இந்தப்போலிகளெங்கே?
பிரசங்கம் இன்று பிரசங்கமாய் இல்லை
பிரசங்கிகளும் நற்குணங்கொண்டார் இல்லை
மாநிலத்திற்கொரு மார்டின் லூதரும்
மலை போன்றதொரு ஜோன் நொக்ஸும்
சிங்கமாய்க் கர்ஜிக்கும் கல்வின் ஐயரும்
ஏன் இன்று நம் நாட்டில் இல்லை?
என்று தணியும் நம் பிரசங்கத் தாகம்
இந்நாட்டில் மெய்ப் பிரசங்கிகளால்