சீர்திருத்தவாதம்!
சபையில் சீராக இல்லாத அனைத்தையும்
சீராக்குவது என்பது அதற்குப் பொருள்
வரலாற்றில் அது பெற்றது வார்த்தைகளால்
விவரிக்க முடியாததொரு இடத்தை
வேதத்தை நாமின்று நம் மொழியில் வாசிக்க
வழி ஏற்படுத்தித் தந்ததே அதுதான்
அதை ஈன்றெடுத்தோர் பட்ட துன்பங்கள்
ஒன்றா இரண்டா அதைப் பெற்றெடுக்க?
உறக்கத்திலும் விழித்திருக்கையிலும்
ரோமப் போப்பை அது அலறவைத்தது
கத்தோலிக்க மதத்தின் கடையாணியைப்
பிடுங்கி அதன் கால்களை ஒடித்தது
வேத விரோதக் கோட்பாடுகளையும்
சம்பிரதாயங்களையும்
சூறாவளியாக சுழன்று தாக்கியது
போப்பின் அடிவருடிகளையும், அரசையும்
அஞ்சி அஞ்சி அலரச் செய்தது
தொடர்ந்து அதன் வழியில் நாம்
இன்பப் பயணம் செய்யத் தூண்டும்
பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதம்
சாதிப் பித்து!
பாரதி பாடிச் சபித்து
அம்பேத்கர் அறவே வெறுத்து
காந்தி காரித் துப்பி
இயேசு இல்லாமலாக்கிய
இதயமற்ற சாதிப்பித்து
இருபத்தியோராம் நூற்றாண்டில்
நாட்டுக்கு ஒளியூட்டி
நல்வழி காட்ட வேண்டிய
நற்செய்தி சபைகளில்
நர்த்தன மாடுவதெப்படி?
சுபி . . .