என்ன பாவம் செய்தான்?
பத்துமாதம் சுமந்து வயிற்றில் தாய்
பாசத்தோடு பெற்ற பிள்ளை
ஆகா! என்று அரும்பெரும் கனவுகளோடு
பெற்றோர் வளர்த்த ஆசைப் பிள்ளை
இப்போது விசுவாசிக்கிறான் இயேசுவை
என்றறிந்ததும் எக்கேடும் கெட்டுப்போ!
தொலைந்துபோ! என்று வசைமாறித் திட்டித்
தினமும் முதுகில் பிரம்பால் விளாசி
காலால் உதைத்துக் கச்சேரி நடக்கிறது,
ஆசையாய் பெற்ற அருமை மகனுக்கு
தன்பாவம் போக இயேசுவை விசுவாசித்தான்
பெற்றவர்கள் பாசமெலாம் போகுமளவுக்கு
அவன் என்ன பாவம் செய்தான்?
சாதிக்கொரு சபை!
யூதன், புறஜாதி என்று
யாதொரு பேதமுமின்றி
யாதும் ஊரே யாவரும் கேளீர்
எனுந் தமிழ்மொழிக்கிணங்க
தரணி வாழ் மக்களெல்லாம்
தன் வார்த்தை வழிப்படி
ஒரே குடும்பம் ஒரே மக்களாய்
ஒன்றுபட்டு வாழ்வதற்கு
உயிர் நீத்தார், உயரெழுந்தார்
உத்தமராம் இயேசு கிறிஸ்து!
இத்தனையும் தெரிந்திருந்தும்
இயேசு வழி அறிந்திருந்தும்
சாதிவழி சபை அமைத்து
நாடார் சபை, தேவர் சபை
பள்ளனுக்கு பரலோகமில்லை
என்றியம்பி வாழ்ந்துவரும்
எத்தர் கூட்டம் இங்குண்டே!
கவிதை!
நெஞ்சக் குமுறல்களை
நச்சென்று நாலு வார்த்தைகளில்
குறுகத் தரித்துக்
கொட்டுவதுதான் ‘கவிதை’
– சுபி