கேள்வி 92: புறத்தில் மட்டும் சுவிசேஷத்துக்கு கீழ்ப்படிகிற எல்லோரும் தங்களுடைய பாவத்துக்கான தேவ கோபத்திலிருந்து தப்ப முடியுமா?
பதில்: புறத்தில் சுவிசேஷத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களல்ல, விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும் விடாமுயற்சியுடன் இறுதிவரை கடைப்பிடிப்பவர்களே இரட்சிப்பை அடைய முடியும்.
(மத்தேயு 7:21; 1 பேதுரு 1:5; எபிரேயர் 12:14)
கேள்வி 93: இறுதிவரையும் விசுவாசத்தையும், பரிசுத்தத்தையும் விடாமுயற்சியுடன் கடைப்பிடித்து நித்திய இரட்சிப்பை அடைகிறவர்கள் யார்?
பதில்: கர்த்தரின் நித்திய ஆணை, மாறாத அன்பு, கிறிஸ்துவின் வேண்டுதல் ஆகியவற்றின் காரணமாகவும், பரிசுத்த ஆவியும் வார்த்தையும் அவர்களில் இருப்பதன் காரணமாகவும் அனைத்து மெய் விசுவாசிகளும் கிறிஸ்துவுக்குள்ளான அனைத்து ஆத்மீக ஆசீர்வாதங்களையும் கர்த்தரிடமிருந்து பெற்று அவருடைய வல்லமையால் பாதுகாக்கப்படுவதால் நிச்சயமாக தங்களுடைய விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் இரட்சிப்புக்காக விடாமுயற்சியுடன் இறுதிவரை ஈடுபடுவார்கள்.
(ரோமர் 8:28-30; எரேமியா 31:3; எபிரேயர் 7:25; யோவான் 14:16; 10:28-29; 1 பேதுரு 1:5; எபேசியர் 1:3; 1 கொரிந்தியர் 1:8-9; பிலிப்பியர் 1:6)
விளக்கவுரை: முதலில் இந்த இரு வினாவிடைகளும் ஏன் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனிப்பது அவசியம். முந்தைய வினா விடைகள் இரண்டிலும் மெய்யான விசுவாசத்தைப் பற்றியும், மனந்திரும்புதலைப் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருந்ததை அறிவீர்கள். இந்த வினா விடைகள் பரிசுத்தவானுடைய ஆத்மீகக் கடமையான விடாமுயற்சியை விளக்குகின்றன. வினாவிடை 92 விடாமுயற்சியின் அவசியத்தை விளக்குகிறது. வினாவிடை 93 அத்தகைய விடாமுயற்சி இறுதி வெற்றி அடையும் என்பதை விளக்குகிறது. பரிசுத்தவானின் விடாமுயற்சி வேதத்தின் முக்கிய இறையியல் போதனைகளில் ஒன்று; கிருபையின் போதனைகளில் ஒன்று.
இவை இரண்டையும் விளக்கமாகப் பார்ப்பதற்கு முன்பாக வினாவிடை 37ல் பரிசுத்தமாக்குதலைப் பற்றி ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். அத்தோடு பத்துக்கட்டளைகளில் அந்தப் பரிசுத்தமாக்குதலில் உள்ளடங்கியிருக்கும் முக்கிய கடமைகளும் விளக்கப்பட்டுள்ளன. மெய்யாக மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்த ஒரு மனிதனால் மட்டுமே தன்னை வேத அடிப்படையில் பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியும். பரிசுத்தமாகுதல் ஒவ்வொரு விசுவாசியினதும் கடமை.
இன்று தவறான சுவிசேஷ ஊழியப்போக்கால் போலி விசுவாசம் எங்கும் அதிகரித்திருக்கிறது. திருச்சபை அங்கத்தவர்களாக இருக்கும் எல்லோரையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தை சூட்டிக்கொள்ளும் எல்லோரையும் விசுவாசிகளாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி ஊழியங்கள் குழப்பங்கள் நிறைந்தனவாக இருக்கின்றன. பரிசுத்தமாகுதலைப் பற்றிய தவறான, வேதத்துக்குப் புறம்பான கோட்பாடுகள் வலம் வருகின்றன. உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப் பரிசுத்த நடவடிக்கைகளை அசட்டை செய்துவருகிறார்கள் அநேகர். பரிசுத்தமாக வாழ்வதற்கு பத்துக் கட்டளைகள் அவசியமானவையல்ல என்ற போதனை தமிழினத்தில் பெருமளவுக்கு அதிகரித்து கிறிஸ்தவத்தைப் பாதித்து போலிக்கிறிஸ்தவ ஊழியங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இதனால் மெய்க்கிறிஸ்தவத்தை அடையாளம் கண்டுகொள்வதும் கடினமான செயலாக இருக்கின்றது.
இத்தகைய சூழ்நிலையில் பரிசுத்தவானின் விடாமுயற்சியாகிய இறையியல் போதனையை வலியுறுத்துவது அவசியமாகிறது. கிருபைகளின் போதனை இரட்சிப்பு கர்த்தருடையது என்பதையும், கிருபையின் மூலமாக விசுவாசத்தினூடாக மட்டுமே அதை அடைய முடியும் என்பதையும் மட்டும் போதிக்காமல், அப்படி விசுவாசத்தை அடைந்தவர்கள் பரிசுத்தத்திற்காக விடாமுயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
இந்த இரண்டு வினாவிடைகளும் கீழ்வரும் போதனைகளைத் தருகின்றன:
(1) வெளிப்புறமாக மட்டும் சுவிசேஷத்திற்குக் கீழ்படிகிறவர்கள் இரட்சிப்பை அடைய மாட்டார்கள் என்றும், அவர்கள் மேல் தேவகோபம் தொடர்ந் திருக்கிறது என்பதையும் வினாவிடை 92ன் மூலம் அறிந்து கொள்கிறோம். புறத்திலிருந்து வரும் எந்தக் கீழ்ப்படிவும் சுவிசேஷக் கீழ்ப்படிவல்ல என்பதை இந்த வினாவிடை விளக்குகிறது. பரிசேயர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம.
(2) தங்களுடைய விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் விடாமுயற்சியுடன் ஈடுபடுபவர்கள் மட்டுமே இறுதியில் இரட்சிக்கப்படுவார்கள் என்கிறது வினாவிடை 92. இந்தப் போதனையை சரிவர விளங்கிக்கொள்வது அவசி யம். கிருபையின் மூலமாக கிறிஸ்துவுக்குள் நாமடையும் விசுவாசம் நாம் இறுதிவரை விடாமுயற்சியுடன் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் வாழ வேண்டிய கடமையை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதோடு, அதற்கான சகலத்தையும் நமக்குத் தந்திருக்கின்றது. இதனால்தான் பவுல் அப்போஸ் தலன் பிலிப்பியர் 1:5ல் பிலிப்பியர்களுக்காகத் தான் நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுகிறதற்கான காரணத்தைத் தெரிவிக்கின்றபோது, “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந் தம் முடிய நடத்திவருவார்” என்று நம்புவதாகத் தெரிவிக்கிறார். இதையே பேதுரு 1:5ல், “விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே (நீங்கள்) காக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்கிறார். இது கிறிஸ்துவில் நமக்கிருக்கும் விசுவாசம் அவராலே காக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. மெய் யான விசுவாசம் அத்தகையது.
அதேவேளை, பவுல் பிலிப்பியர் 2:12ல், “நீங்கள் எப்பொழுதும் கிழ்ப்படி கிறபடியே, நான் உங்களுக்கு சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” என்கிறார். பிலிப்பியர் 1:5ல், கர்த்தர் விசுவாசிகளைப் பாதுகாத்து இறுதிவரை இரட்சிக்கும் உண்மையை வெளிப்படுத்திய பவுல் இந்த வசனத்தில், அந்த உண்மையின் அடிப்படையில் விசுவாசிகள் விடாமுயற்சியுடன் விசுவாசத்திலும், பரிசுத் தத்திலும் வளரவேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கிறார். முதலாவது இரண்டாவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த இரண்டும் இரட்சிப்பின் அனுபவத்தில் இணைந்தே காணப்படுகிறன. இரட்சிப்பை அடைந்த எவரும் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் அசட்டையாக இருந்துவிட முடியாது. தங்களுடைய கடமையை நிராகரித்துவிட முடியாது. நித்திய இரட்சிப்பை நோக்கி நடைபோடுகிற விசுவாசிகள் அதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய விடாமுயற்சி மட்டுமே அவர்களுக்கு இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை அளிக்க முடியும். இரட்சிப்பின் நிச்சயம் வெறும் உணர்ச்சி அல்ல; அது இரட்சிப்பிற்குரிய ஆத்மீகக் கிரியைகளை உள்ளடக்கியது.
(3) மேலே நாம் பார்த்த உண்மையையே மேலும் விளக்கமாகத் தருகிறது வினாவிடை 93. விசுவாசிகள் மட்டுமே விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் இறுதிவரை விடாமுயற்சியுடன் வளர்ந்து நிச்சயமாக இரட்சிக்கப்படுவார்கள் என்று விளக்கும் இந்த வினாவிடை, அதற்கான காரணங்களையும் தருகின்றது. அந்தக் காரணங்களில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருப்பது கர்த்தரின் கிரியைகளும், குணாதிசயங்களுமே. அநாதி காலத்துக்கு முன்பே அவர் இட்டுள்ள நித்திய ஆணையின் காரணமாகவும், அவர் அழியாத நித்திய அன்பைக்கொண்டுள்ளவராகவும் இருப்பதால் அவருடைய மக்கள் இரட்சிப்பை இழக்க முடியாதது மட்டுமல்ல அதில் வளர்கிறவர்களாகவும் இருப்பார்கள். கிறிஸ்து தான் சிலுவையில் மரித்து இரட்சித்த மக்களுக்காக பரலோகத்தில் தொடர்ந்து வேண்டுதல் செய்துவருகிறார். அவர்களுடைய விசுவாசத்திற்காகவும், பரிசுத்தத்திற்காகவும் தேவகுமாரன் ஜெபித்து வருவது இன்னுமொரு காரணம். அத்தோடு, ஆவியானவரும், வார்த்தையும் விசுவாசிகளில் நிலைத்திருப்பதால் அவர்களால் கிருபையில் வளர முடிகின்றது. கர்த்தர் அவர்களுக்கு கிறிஸ்துவில் சகல ஆத்மீக ஆசீர்வாதங் களையும் தந்து பாதுகாத்து வருவதால் நிச்சயமாக அவர்கள் விசுவாசத்திலும் பரிசுத்தத்திலும் விடாமுயற்சியுடன் வளர முடியும்.
பரிசுத்தவான்களின் விடாமுயற்சி இன்று அதிகம் பிரசங்கிக்கப்பட வேண்டியதொரு போதனை. எவரும் தங்களுடைய இரட்சிப்பை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்துவிட முடியாது. பரிசுத்தத்தில் பூரணத்துவத்தை இந்த உலகில் நாம் எட்டமுடியாவிட்டாலும் அதை நோக்கி விடாமுயற்சியுடன் நடைபோட வேண்டுமென்று கர்த்தர் கட்டளை யிட்டுள்ளார். ஆவியின் துணையோடு விசுவாசிகள் இந்தக் கடமையில் இறுதி வரை ஈடுபட வேண்டும். அத்தகையோர் மட்டுமே நித்திய இரட்சிப்பை அடைவார்கள். விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் அக்கறையற்றிருப்பவர்கள் தங்களுடைய விசுவாசத்தை இன்றே சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. நியாயத்தீர்ப்பு நாளில் இராஜாதி இராஜனாகிய இயேசு, உன்னை எனக்குத் தெரியாது என்று கூறும் சூழ்நிலை நமக்கு ஏற்படாமல் இருக்கட்டும்.