கேள்வி 94: தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களைப் பராமரிக்கவும், கிறிஸ்துவின் மீட்பின் ஆசீர்வாதங்களை அவர்கள் அடையவும் கர்த்தர் பயன்படுத்தும் வெளிப்புறமானதும் சாதாரணமானதுமான கிருபையின் சாதனங்கள் யாவை?
பதில்: முக்கியமாக வார்த்தை, திருமுழுக்கு, திருவிருந்து, ஜெபம் ஆகிய திருநியமங்களையே கர்த்தர் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களைப் பராமரித்து கிறிஸ்துவின் மீட்பின் ஆசீர்வாதங்களை அவர்கள் அடையப் பயன்படுத்தும் வெளிப்புறமானதும் சாதாரணமானதுமான கிருபையின் சாதனங்கள். இவையனைத்தும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இரட்சிப்பை அடையும்விதமாக திட்ப உறுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
(மத்தேயு 28:19-20; அப்போஸ்தல நடபடிகள் 2:41-42; 46-47.)
விளக்கவுரை: 88-வது வினாவிடையில் இரட்சிப்பை அடைவதற்கு ஒருவனில் கர்த்தர் எதிர்பார்க்கும் உள்ளார்ந்த கிருபைகளைப் பார்த்தோம். மனந்திரும்புதலும், விசுவாசமுமே அந்த உள்ளார்ந்த கிருபைகள். இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் (கிறிஸ்துவின் மீட்பின் பலன்கள் எவ்விதமாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு நடைமுறையில் கொடுக்கப்படுகிறது என்பது பற்றிய விளக்கம்) இவை அடங்குகின்றன. இந்த உள்ளார்ந்த கிருபைகள் பரிசுத்த ஆவியின் கிரியையினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
அதேவேளை, மீட்பின் பலன்களைத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அனுபவிப்பதற்கு ஒரு சில சாதாரணமானதும், வெளிப்புறமானதுமான கிருபையின் சாதனங்களையும் கர்த்தர் பயன்படுத்துகிறார். கர்த்தரால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த வெளிப்புற கிருபையின் சாதனங்களின் மூலமாகவே பரிசுத்த ஆவியானவர் பொதுவாக தெரிந்துகொள்ளப் பட்டவர்களில் கிரியை செய்கிறார்.
இந்த உள்ளார்ந்த கிருபைகளுக்கும், வெளிப்புற கிருபையின் சாதனங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை நாம் தெளிவாக அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
(1) ரோமன் கத்தோலிக்க மதப் போதனை – ரோமன் கத்தோலிக்க மதம் இந்த (உள்ளார்ந்த கிருபைகள்/வெளிப்புற கிருபையின் சாதனங்கள்) இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று போதிக்கிறது. கத்தோலிக்க மதம் மனிதனுக்கு கிருபையை அளிக்கும் தகுதி தனக்கே இருக்கிறது என்று கருதுகிறது. அதாவது, மனிதனுக்கு தானே இரட்சிப்பை வழங்கும் தகுதியைக் கொண்டிருப்பதாக அது போதிக்கிறது. எனவே, வெளிப்புற கிருபையின் சாதனங்களின் மூலம்
கத்தோலிக்க மதம் மனிதனுக்கு அந்தக் கிருபையை வழங்குவதாகக் கூறுகிறது. ஆகவே, அதன் போதனையின்படி வெளிப்புற கிருபையின் சாதனங்களில் ஒருவிதத்தில் உள்ளார்ந்த கிருபை உள்ளடங்கியிருக்கிறது. வெளிப்புற கிருபையின் சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் மட்டுமே ஒருவருக்கு கிருபை கிடைக்காமல் போகலாம். வெளிப்புற சாதனங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுகிறபோது மனிதன் அதன் மூலம் சாதாரணமாக கிருபையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது இந்த மதப்போதனை. இதனால்தான் ரோமன் கத்தோலிக்க மதம் ஞானஸ்நானத்தின் மூலம் ஒருவர் மறுபிறப்பை அடையாளம் (Baptismal Regeneration) என்ற போதனையைக் கொடுக்கிறது. இந்தப் போதனையின்படி பிறக்கும் குழந்தைகளுக்கு சரியானவிதத்தில் ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்போது அவர்கள் இரட்சிப்பை அடைகிறார்கள் என்கிறது கத்தோலிக்க மதம். இது மிகவும் தவறானதும், ஆபத்தானதுமான போதனை. பழைய ஏற்பாட்டு யூதர்களும், பரிசேயர்களும் இதே விதமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். விருத்தசேதனம் செய்து கொண்ட ஒவ்வொருவரும் ஆபிராகாமின் விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக அவர்கள் தவறாக நம்பிக்கொண்டிருந்தார்கள். பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்திலும், கலாத்தியருக்கு எழுதிய நிருபத்திலும் இதைக் கண்டித்து திருத்துகிறார்.
(2) இரட்சண்யப் படை – இரட்சண்யப் படை (Salvation Army) என்று அழைக்கப்படுகின்ற இயக்கம் வெளிப்புற கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் வாராவாரம் கூடி ஆராதனை செய்த போதும் திருமுழுக்கையும், திருவிருந்தையும் வழங்குவதில்லை. இவர்கள் வெளிப்புற கிருபையின் சாதனங்கள் அவசியமில்லை என்ற நம்பிக்கை யைக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த இயக்கம் பிரசங்கம் கர்த்தரால் நியமிக்கப்பட்டிருக்கும் கிருபையின் சாதனங்களில் ஒன்று என்பதை வலியுறுத்துகிறது. ஆனால், இவர்கள் உள்ளார்ந்த கிருபைக்கும், வெளிப்புற கிருபையின் சாதனங்களுக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இருப்பதாகக் கருதவில்லை. இதுவும் முழுத் தவறு. ஏனெனில், கர்த்தரே வெளிப்புற கிருபையின் சாதனங்களை நியமித்து அவற்றைப் பயன்படுத்துமாறு பணித்திருக்கிறார் (மத்தேயு 28:18-20). வெளிப்புற கிருபையின் சாதனங்களுக்கும், உள்ளார்ந்த கிருபைகளுக்கும் இடையில் பெருந்தொடர்பிருப்பதை மத்தேயு 28:18-20 பகுதி தெளிவாக விளக்குகிறது.
(3) சீர்திருத்தப் போதனை – சீர்திருத்தப் போதனை உள்ளார்ந்த கிருபைகளுக்கும், வெளிப்புற கிருபையின் சாதனங்களுக்கும் இடையில் பிரிக்க முடியாத தொடர்பிருப்பதாகக் கருதுகிறது. கர்த்தர் இணைத்து வைத்திருப்பதை ஒருவரும் பிரிக்கக் கூடாது என்று நம்புகிறது. கர்த்தரால் தன்னுடைய கிருபையின் சாதனங்களை மீறிச் செயல்பட முடியும். கிருபையின் சாதனங்கள் கர்த்தரை ஒருபோதும் கட்டுப்படுத்துவ தில்லை. இருந்தபோதும் தான் நியமித்துள்ள வெளிப்புற கிருபையின் சாதனங்களின் மூலம் கிரியை செய்வது கர்த்தரின் சித்தமாகவும், திட்டமாகவும், அவருக்குப் பிடித்தமானதாகவும் இருக்கிறது. தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு இரட்சிப்பை அளித்து, பரிசுத்த வாழ்க்கையில் அவர்களைப் பராமரிக்க கர்த்தர் வெளிப்புற கிருபையின் சாதனங்களையே பயன்படுத்தி வருகிறார். பிரெஸ்பிடீரியன் சபையைச் சார்ந்தவர்கள், பிறக்கும் குழந்தைகளைப் பொறுத்தவரையில் கர்த்தர் வெளிப்புற கிருபையின் சாதனங்களின் உதவியில்லாமல் அவர்களுக்கு மறுபிறப்பை அளிக்கிறார் என்ற தவறான போதனையைக் கொண்டிருக்கிறார்கள். நமது 1689 விசுவாச அறிக்கை அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டு உண்மைகளை இந்த வினாவிடை நமக்கு வெளிப்படுத்துகிறது: (அ). வெளிப்புற கிருபையின் சாதனங்களுக்கு தம்மை ஒப்புக்கொடுக்கிறவர்களிலேயே சாதாரணமாக நாம் உள்ளார்ந்த கிருபையின் அடையாளங்களைக் காணமுடிகின்றது. பிரசங்கத்தின் ஆசீர்வாதத்தையும், திருமுழுக்கு, திருவிருந்து ஆகிய திருநியமங்களையும், திருச்சபையின் ஒழுங்குக் கட்டுப்பாட்டையும் விசுவாசத்தோடு ஏற்று நடப்பவர்களிலேயே உள்ளார்ந்த கிருபையை சாதாரணமாகக் காணலாம். (ஆ). அதேவேளை, அப்போஸ்தல நடபடிகள் 8:23ல் நாம் வாசிப்பது போல் தவறாக திருமுழுக்கைப் பெற்றுக்கொண்ட சீமோனைப் போன்ற உள்ளார்ந்த கிருபையைத் தம்மில் கொண்டிராதவர்களும் இருந்து விடலாம். சீமோன் பிரசங்கத்தைக் கேட்டும் மெய்யாக மனந்திரும்பியதாகத் தெரியவில்லை. அவன் திருமுழுக்கு பெற்றிருந்தும் தேவனை அறியாதவனாக இருந்தான். இதனால், நாம் வெளிப்புற கிருபையின் சாதனங்களை மிகைப்படுத்தி உள்ளார்ந்த கிருபையை ஒருபோதும் அலட்சியப் படுத்திவிடக்கூடாது. உள்ளார்ந்த கிருபைகளான மனந்திருப்புதலும், விசுவாசமும் இருக்கும் பட்சத்திலேயே வெளிப்புற கிருபையின் சாதனங்களின் பலன்களை நாம் நம்முடைய ஆத்தும விருத்திக்காக அடைய முடியும்.
இதிலிருந்து நாம் வெளிப்புற கிருபையின் சாதனங்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதை இந்த வினாவிடை உணர்த்துகிறது. அதாவது, அவற்றை நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் ஆத்மீக வளர்ச்சி குன்றிவிடாது என்று நெஞ்சில் பயமில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. இங்கே நாம் உள்ளூர் திருச்சபைகளின் முக்கியத்து வத்தை ஒருமுறை எண்ணிப் பார்ப்பது அவசியம். விசுவாசமுள்ள உள்ளூர் திருச்சபைகள் அனைத்தும் மூன்று முக்கிய அடையாளங்களைத் தவறாது கொண்டிருக்கும். (1) விசுவாசமுள்ள பிரசங்கம் அங்கே காணப்படும் (2) விசுவாசத்துடன் திருநியமங்கள் கொடுக்கப்படும். (3) தேவபயத்தோடு சபை ஒழுங்குக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும். இந்த மூன்று அடையாளங்களையும் கொண்டிராதவை விசுவாசமுள்ள கர்த்தருடைய சபைகள் அல்ல. உலகத்தில் இருக்கின்ற சபைகள் அத்தனையும் விசுவாச முள்ளவையாக இருந்துவிடாது. அவற்றில் சத்தியத்தைப் புறக்கணித்தவை அதிகமாகவே இருக்கும். அதேவேளை, விசுவாசமுள்ள நல்ல சபைகளுக்குள்ளும் போலிகள் தவறி இருந்துவிடலாம். இதெல்லாம் உண்மையாக இருந்தபோதும் விசுவாசமுள்ள சபைகளுக்கும், விசுவாசமற்று சத்தியத்தைப் புறக்கணித்து நடக்கின்ற சபைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை நாம் கவனித்து சத்தியத்தைப் பின்பற்றி கர்த்தருக்கு விசுவாசமாயிருக்கின்ற சபைகளில் இணைந்து வாழ வேண்டும்.
அத்தோடு, உள்ளூர் சபையில் அங்கத்தவர்களாக இருந்து சபை வாழ்க்கை நடத்தாமல் இருந்துவிடலாம் என்ற தவறான எண்ணத்தையும் நாம் கொண்டிருக்கக் கூடாது. உள்ளூர் திருச்சபையில் திருநியமங்களுக்கும், கிருபையின் சாதனங்களுக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து வாழாத மனிதன் கிறிஸ்தவ வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திவிடலாம் என்று எண்ணுவது வீண் பிரேமை. கர்த்தர் நமக்கு மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் (உள்ளார்ந்த கிருபைகள்) கொடுத்து அவற்றைப் பராமரிக்க திருச்சபைகளின் மூலமாக வெளிப்புற கிருபையின் சாதனங்களையும் அளித்திருக்கிறார். “அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும், ஜீவனையும் கட்டளையிடுகிறார்.” (சங்கீதம் 133:3). வெளிப்புற கிருபையின் சாதனங்களை உள்ளூர் திருச்சபைகளில் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றைக் கொடுக்கும் அதிகாரத்தைக் கர்த்தர் உள்ளூர் திருச்சபைகளுக்கு மட்டுமே அளித்திருக்கிறார். உள்ளூர் அல்லது ஸ்தல திருச்சபை வாழ்க்கையை அறியாதவர்கள், அதற்குத் தம்மை ஒப்புக்கொடுக்க மறுத்து வருகிறவர்கள் தங்களுடைய விசுவாசத்தை ஒருமுறை மறுபடியும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. சபை வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்தும் கர்த்தருடைய தெளிவான வார்த்தைகளை நிராகரித்து வாழும் ஒருவன் தன்னைக் கர்த்தருக்கு விசுவாசமுள்ளவனாகக் கருதமுடியாது.
அத்தோடு வினாவிடை, வெளிப்புற கிருபையின் சாதனங்களை நாம் மிகுந்த அக்கறையோடு பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. அதன்படி நாம் வெளிப்புற கிருபையின் சாதனங்களை (திரு முழுக்கு, திருவிருந்து, பிரசங்கம் கேட்டல், ஜெபம், சபை மக்களுடன் ஐக்கியம், சபை ஒழுங்குக்கு கட்டுப்படுதல் போன்றவை) அலட்சியப்படுத்தி அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை நம்முடைய வாழ்க்கையில் காண முடியாது. இதன் காரணமாகவே வேதம் நம்மைப் பார்த்து, “சபைகூடிவருதலை சிலர் விட்டுவிடுவதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருப்போம் என்று எச்சரிக்கிறது (எபிரேயர் 10:25). இந்த எச்சரிக்கையை இன்று நாம் காது கொடுத்து கேட்டுணர்வது அவசியம். தமிழினத்தில் பலர் இன்றைக்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் தேவை என்று அங்குமிங்கும் அலைந்து விசேஷமான நபர்களை நாடி ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருக் கிறார்கள். வாரத்துக்கொரு புதிய மனிதனிடம் ஏதாவது புதிய செய்தியும், ஆசீர்வாதமும் தங்களுக்கு ஆத்ம விருத்தி அளிக்கக் கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் எந்த சபைகளிலும் நிலையாக இருப்பதில்லை. இப்படி அலைந்து திரிகின்ற இவர்கள் ரோமர் 10:27ன்படி சாதாரணமாக இரட்சிப்பை அளிப்பதற்கு கர்த்தர் பயன்படுத்துகிற, சபைகளில் கொடுக்கப்படுகின்ற பிரசங்க ஊழியத்தை அலட்சியப்படுத்துகிறார்கள். விசேஷமான ஆசீர்வாதங்களுக்கு அலையும் இவர்கள் திருநியமங்களையும், கிருபையின் சாதனங்களையும் சபைகளில் பெற்றுக்கொள்ளாததோடு தங்களுடைய சொந்த வாழ்க்கையில் கூட வேதத்தை வாசித்து ஜெபிப்பதில்லை.
இந்த வினாவிடை, கர்த்தருடைய ஆசீர்வாதம் சில விசேஷடமான மனிதர்களின் செய்திகளிலோ அல்லது நடைமுறைக்கு மாறான அசாதரணமான நடவடிக்கைகளிலும் தங்கியிருக்கவில்லையென்றும், கிருபையின் சாதனங்களின் மூலமாகவே சாதாரணமாக ஆத்துமாக்களுக்கு அளிக்கப்படுவதாகவும் விளக்குகிறது. இதனால்தான் வேதபூர்வமாக ஆத்மீக காரியங்களைச் செய்ய முயலும் சீர்திருத்த சபைகளிலெல்லாம், இயேசுவை விசுவாசித்து சபை அங்கத்தவர்களாக வரவிரும்புகிறவர்களிடமெல்லாம், “நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்து ஆராதனையில் விசுவாசத்துடன் கலந்துகொள்ள உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா?” என்று கேட்பார்கள். அப்படி சபையோடு தங்களை இணைத்துக் கொண்டு வெளிப்புறக் கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் ஆத்துமவிருத்தி அடைய முடியாது.
வெளிப்புற கிருபையின் சாதனங்களை நாம் சடங்குபோல் பயன்படுத்திவிடக்கூடாது என்பதையும் இந்த வினாவிடை வற்புறுத்துகிறது. பரிசுத்த ஆவியில் தங்கியிருந்து, விசுவாசத்துடன் அவற்றைப் பயன்படுத்துகிறபோதே அவற்றின் பலாபலன்களை நாம் அடைய முடியும். அவற்றை சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்போடு சபைக்கு வந்து ஜெப சிந்தையோடு ஆராதனையில் கலந்துகொண்டு, ஆர்வத்தோடும், ஆத்தும தாகத்தோடும் பிரசங்கத்தைக் கேட்டு, தேவபயத்தோடும், மெய்யான மனந்திரும்புதலோடும், ஆவிக்குரிய ஆனந்தத்துடனும் திருவிருந்தில் கலந்துகொண்டு, அன்போடு ஆத்துமாக்களுடன் ஐக்கியத்தில் வரும்படி வேதம் வலியுறுத்துகிறது. ஒருவரில் உள்ளார்ந்த கிருபை இருக்கும்போதே வெளிப்புற கிருபையின் சாதனங்களின் பயன்களை அவரால் அடைய முடியும். இரண்டுக்கும் பிரிக்க முடியாத தொடர்பிருக்கின்றது. பேதுரு சொல்லுகிறார், “ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளு தலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறி விழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய இராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.” (2 பேதுரு 1:1–11).