கிறிஸ்துவின் சிலுவை மரணப்பலி பற்றி குழப்பமான சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் அனேகர். இந்த சத்தியத்தை தர்க்கரீதியில் அணுகி குழப்பத்தைப் போக்க முயல்கிறோம் என்று வேத போதனைகளுக்கு முரணான விளக்கத்தை அளிக்கிறார்கள் சிலர். வேதம் போதிப்பது மட்டுமே சத்தியம். அது நமக்குப் புரியவில்லை, பிடிக்க வில்லை என்பதற்காக நாம் நினைத்தவிதத்தில் அதை மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது. கிறிஸ்துவின் சிலுவைப் பலிபற்றியும் மனித சித்தம் பற்றியும் இனி ஆராய்வோம்.
கிறிஸ்துவின் சிலுவைப்பலி சகல மக்களையும் இரட்சிப்பதை நோக்க மாகக் கொண்டிருந்ததா?
சிலுவையில் கிறிஸ்து இறந்தபோது அவர் இந்த உலகத்துக்கு வந்த காரி யங்கள் அனைத்தும் நிறைவேறி, ‘எல்லாம் முடிந்தது’ (யோவான் 19:30) என்று சொல்லி மரித்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ‘எல்லாம் முடிந்தது’ என்றால் நடந்து முடிந்த காரியங்கள் அனைத்திலும் கிறிஸ்துவுக்கு முழுத்திருப்தி இருந்தது என்றுதான் அர்த்தம். தான் வந்த காரியம் நிறைவேறி விட்டது என்பதில் அவருக்கு முழுநம்பிக்கையும் இருந்தது. யோவானில் அவர் சொல்லியிருப்பதுபோல் தன்னுடைய ஆடுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தன்னிடம் அழைத்துக் கொள்ளுவதற்கான அனைத்தையும் அவர் நிறைவேற்றிவிட்டார் என்றுதான் அதற்குப் பொருள்.
அப்படியானால் கிறிஸ்து யாருக்காக மரித்தார்? ஏசாயா 53:6; எபிரேயர் 2:9; 1 யோவான் 2:2 ஆகிய வசனங்களைப் பயன்படுத்தி சிலர் வாதிடுவதுபோல் கிறிஸ்து எல்லா மனிதர்களுக்குமாக மரித்திருந்தால் அவர் ‘எல்லாம் முடிந்தது’ என்று சொல்லி முழுத்திருப்தியோடு மரித்திருக்க முடியாது. எல்லா மனிதர்களும் கிறிஸ்துவை விசுவாசிப்பதில்லை. அனேகர் அவரை நிராகரித்து, நிந்தித்து மரிக்கிறார்கள். படித்தவனும், படிக்காதவனும், சகல மனிதர்களும் இரட்சிக்கப்பட்டு பரலோகம் போகிறார்கள் என்ற வாதம் வேதபோதனைகளுக்கெல்லாம் முரணானது. கிறிஸ்துவை விசுவாசிக்காமல் ஒருவரும் இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் அடைய முடியாது என்று வேதம் ஆணித்தரமாக கூறுகிறது.
உலகத்து மக்கள் கிறிஸ்துவின் மரணத்தால் அனேக பொதுவான நன்மைகளை அடைகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. கிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதால் உலகத்து மக்களுக்கு அனேக நன்மைகள் கிடைக்கின்றன. அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியவர்கள் கிறிஸ்தவர்களே. உலகத்தில் கல்வியும், மருத்துவ வசதிகளும் ஏற்படக் கிறிஸ்தவம் காரணமாக இருந்திருக்கின்றது. நம் சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் வளம் பெற உழைத்தவர்கள் கிறிஸ்தவர்களே. பாவத்தைச் சுட்டிக்காட்டி, அது கட்டுப் பாட்டில் இருக்க சுவிசேஷம் தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. அவிசுவாசிகள் இருக்கும் குடும்பங்களில் இரட்சிக்கப்படுகிறவர்களால் அந்தக் குடும்பங்களுக்கு சுவிசேஷ ஒளி கிட்டுகிறது. கிறிஸ்து இராஜாவாக இருப்பதால் மனிதர்கள் மத்தியில் கருணையும், அன்பும் ஓரளவுக்கு காணப்படுகிறது. இதனால் எல்லா மனிதர்களும் இரட்சிப்பை அடைந்துவிட்டார்கள் என்றோ கடைசி காலத்தில் இரட்சிப்பை அடைந்து விடுவார்கள் என்றோ கூறவிட முடியாது.
சகல மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்ற போதனை மனிதனின் பாவத்தை அலட்சியப்படுத்துகிறது. மனிதன் பாவத்தில் பிறந்திருக்கிறான் (சங். 51). மனிதன் கர்த்தரைத் தன் இருதயத்தில் எதிரியாக எண்ணுகிறான். கர்த்தரின் சகல நீதியையும், பத்துக் கட்டளைகளையும் முற்றாக நிராகரித்து, அவருடைய சுவிசேஷ அழைப்பை அலட்சியப்படுத்தி, அவருக்கு எதிராக வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறான். கிறிஸ்துவின் மரணத்தின் பலாபலன்களான, பாவமன்னிப்பு, சமாதானம், கர்த்தருடனான ஐக்கியம், கிறிஸ்துவுடனான ஐக்கியம் ஆகியவற்றை விசுவாசத்தின் மூலம் அடையும்போதே மனிதனுக்கு இரட்சிப்பு கிடைக்கின்றது. இவற்றை அடைய மனிதன் முதலில் தான் பாவி என்பதை உணர வேண்டும். கிறிஸ்து வின் அழைப்பிற்கு உடன்பட்டு அவரிடம் வர வேண்டும். தன்னுடைய மீட்புக்காக அவரைப் பணிந்து விசுவாசிக்க வேண்டும்.
சகல மக்களும் இரட்சிப்பை அடைவார்கள் என்ற போலிப் போதனையைக் கொண்டிருப்பவர்கள் மனிதனைப் பற்றிய தவறான எண்ணத்தையும், அவனுடைய பாவத்தைப் பற்றிய அறைகுறையான அறிவையும் கொண்டிருக்கிறார்கள். மனிதன் பாவத்தில் மரித்திருக்கிறான் (எபேசி. 2:1). அவன் தேவனை எதிரியாகக் கருதுகிறான் (ரோமர் 8:7). தன்னுடைய இயற்கைத் தன்மையின்படி அவன் கர்த்தருடைய சித்தத்திற்கு ஒருபோதும் உடன்பட மாட்டான். மனித னின் பாவத்தன்மை, நீதியுள்ள கர்த்தர் அவன் மீது இரக்கங்காட்ட வேண்டு மென்று நாம் கேட்பதைத் தடைசெய்கிறது. தன்னுடைய இரக்கத்தை நாடி வராதவர்களை நீதியுள்ள கர்த்தர் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் நீதியுள்ளவராக இருப்பதால் தன்னுடைய இரக்கத்தை நாடி வருகிறவர்களுக்கே அவர் கருணை காட்ட வேண்டும். ஆகையால், கிறிஸ்துவின் சிலுவைப் பலி எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்கு வாய்ப்பேயில்லை.
கிறிஸ்து குறிப்பிட்ட தொகையினரை மட்டுமே இரட்சிப்பதற்காக மரித்தாரா?
வேறு சிலர் கிறிஸ்துவின் சிலுவை மரணப்பலியையும், மனிதன் ஆத்மீக காரியங்களில் சுதந்திரமாக எந்தத் தீர்மானத்தையும் எடுக்கக்கூடியவனாக இருக்கிறான் என்ற அவர்களுடைய சொந்தக் கருத்தையும் இணைத்து இரட்சிப்புக்குரிய விடயத்தில் கர்த்தரின் பங்குக்கு இடமேயில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மனிதன் இரட்சிப்புக்குரிய தீர்மானத்தை தன் வாழ்வில் எடுத்தபிறகே கர்த்தர் அவனை இரட்சிப்புக்காக தெரிவு செய்கிறார் என்ற விளக்கத்தை அளிக்கின்றனர். இந்த விளக்கம் வேதத்தின் தெளிவான போதனைகளுக்கு முரணானதாக இருக்கின்றது.
முதலில், வேதம் மனிதன் ஆத்மீக உணர்வே இல்லாமல் மரித்திருக்கிறான் என்கிறது (எபேசி. 2:1). இறந்து உயிரற்று இருக்கும் மனிதன் கர்த்தருக்காக எப்படி ஆத்மீகத் தீர்மானத்தை எடுக்க முடியும்? மறுபிறப்புக்கான ஆத்மீகக் கிரியையை பரிசுத்த ஆவியானவர் அவனில் செய்யாவிட்டால் அவன் இரட்சிப்பை அடையவே முடியாது என்கிறது வேதம். ஆத்மீக மரணத்தை அடைந்திருக்கும் மனிதன் அதில் இருந்து விடுபட எந்தத் தீர்மானத்தையும் எடுக்க இயலாத நிலையில் இருக்கிறான். கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவனால் தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்ள முடியும்? அந்த நிலை யில்தான் மனிதனுடைய ஆத்மீக நிலை இருக்கின்றது. இரண்டாவதாக, மனிதனால் இரட்சிப்புக்குரிய தீர்மானத்தை, சுயமாக எடுக்க முடியுமானால் அவனுடைய இரட்சிப்பு கிரியையினால் உண்டாவதாக இருக்கும். அது கிருபையினால் ஏற்பட்டதாக இருக்காது. அதுமட்டுமல்லாமல் மனிதன் கர்த்தருக்கு இதில் துணை செய்பவனாக இருப்பான். கர்த்தர் ஒருவருக்கும் கடன்பட்டவரல்ல. ஆகையால், இந்த வாதம் கர்த்தரைப் பற்றி வேதம் தரும் போதனைக்கு முரணாக அமைந்து விடுகிறது. மூன்றாவதாக, மனிதனுக்கு சுயாதீன சித்தம் (விருப்பச் சித்தம்) இருக்கிறது என்ற போதனை கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், தன்னுடைய கிரியை பற்றிய அவருடைய முழுத் திருப்தியையும் பாதிப்பதாக இருக்கின்றது. அதாவது தங்களுடைய சுயாதீன சித்தத்தின்படி ஒருவருமே கிறிஸ்துவை விசுவாசிக்காமல் போனால் கிறிஸ்துவின் சிலுவைப் பலி பயனற்றதாகப் போய்விடும். மனிதன் பிசாசின் குழந்தையாக பாவத்தில் மரித்து வாழ்ந்து வருவதால் அவன் கிறிஸ்துவுக்கு ஒரு போதும் தன் குணத்தின்படி உடன்பட்டு வாழ மாட்டான். அத்தோடு, அவனுடைய சித்தத்தினால் கட்டுப்படும்படியாக கிறிஸ்துவின் சிலுவைப் பலியின் பலன்களும் அமைந்திருக்கவில்லை. ஆகவே, மனிதனின் சுயாதீன சித்தம் என்பது வெறும் கற்பனையே. அவன் சுயமாக, சுதந்திரமாக பிசாசின் வழியில் போய் பாவத்தை மட்டுமே செய்யக்கூடியவனாக இருக்கிறான். இரட்சிப்புக்குரிய எந்த நடவடிக்கையையும் எடுக்கும் வல்லமை அவனுடைய அடிமைச் சித்தத்திற்கு இல்லை.
வேறு சிலர் சிலுவைபலியையும், மனிதனுடைய சுயாதீன சித்தத்தையும் பாதுகாப்பதற்காக இன்னொரு வழியைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். அதாவது, கிறிஸ்துவின் சிலுவைப்பலி எல்லோரையும் இரட்சிக்கும் வல்லமையுடையதென்றும், அவரை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிப்பை அடைவார்கள் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். அத்தோடு, சிலர் கிறிஸ்துவைப் புறக்கணித்துவிடுவதால் அவர் ஒரு குறிப்பிட்ட தொகையினரை மட்டுமே தெரிந்துகொள்ள நேரிட்டது என்றும் கூறுகிறார்கள். இந்த விளக்கத்தில் உள்ள ஆபத்து என்னவென்றால் இவர்கள் கிறிஸ்துவின் சிலுவைப்பலி எல்லோரையும் இரட்சிக்கக்கூடிய வல்லமை கொண்டது என்று கூறுவது தான். அந்த விளக்கத்தின்படி கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் பலன்கள் முழு உலகத்துக்கும் சொந்தமானதாகிவிடுகிறது. அதேநேரம், அவற்றால் ஒருவருக்கும் எந்தப் பலனுமில்லாமலும் போய்விடுகிறது. இது வேதம் தருகின்ற விளக்கமல்ல.
ஆகவே, நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஒரேயொரு தகுந்த விளக்கம் மட்டுமே இருக்கின்றது. அதாவது, கர்த்தர் எந்த மக்களுக்காக கிறிஸ்து மரிக்கும்படியாகத் தீர்மானித்து அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினாரோ அவர்களுக்காக மட்டுமே அவர் சிலுவையில் தன்னைப் பலியாகத் தந்தார். உலகத்தோற்றத்துக்கு முன்பாக கர்த்தரால் முன்குறிக்கப்பட்டு தெரிந்து கொள் ளப்பட்டவர்கள் இரட்சிப்பை அடைவதற்காக கிறிஸ்து பிதாவின் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றி சிலுவையில் மரித்து முழுத்திருப்தியுடன் பிதாவைச் சென்றடைந்தார். இதன் மூலம் கிறிஸ்துவின் பரிகாரப்பலி செலுத் தப்பட்ட அனைத்து மக்களும் அவரிடத்தில் நிச்சயம் உலக முடிவுக்கு முன் வந்தே சேர்வார்கள். அதுவும் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவை அவர்கள் பற்றிக்கொள்ளுவார்கள். இந்த விளக்கம் மட்டுமே கர்த்தருடைய இறையாண்மையை மகிமைப்படுத்துவதாக இருக்கிறது. இந்த விளக்கம் மட்டுமே வேதபோதனைகளோடு ஒத்துப்போவதாய் பாவத்தில் மூழ்கி அழிந்து கொண்டிருக்கும் மனிதனை விடுவிப்பதற்குரிய வல்லமையைக் கொண்டதாய் இருக்கிறது.
குறிப்பிட்ட மக்களுக்கான கிறிஸ்துவின் மரணத்தை எதிர்ப்பவர்கள்
குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் பரிகாரப்பலி (Particular Redemption or Limited Atonement) என்ற பதங்களைக் கேட்டவுடனேயே காதில் நாராசம் விழுந்ததுபோல் துடிப்பவர்கள் இருக்கிறார்கள். தவறான போதனைகளுக்கு இடங்கொடுத்து அவர்கள் சிந்திக்கத் தவறிவிடுகிறார்கள். கருணையுள்ள கர்த்தர் எப்படி சிலரை நரகத்துக்கு அனுப்ப முடியும்? என்று அவர் கள் வருத்தப்படுவார்கள். கர்த்தருடைய குணாதிசயத்துக்கே அது முரணானது என்பார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத்தான் வேண்டும்.
உலகத்தோற்றத்துக்கு முன்பு கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காகவே கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (எபேசியர் 1) என்கிறது வேதம் என்று ஏற்கனவே பார்த்தோம். மனிதன் நரகத்துக்கு உரிய பாவி என்பதும் வேதம் தெளிவாகப் போதிக்கும் சத்தியம். அவன் சுயமாக விசுவாசத்தை அடையமுடியாதென்றும், கர்த்தரின் இரக்கத்தாலும், கருணையினாலும் மட்டுமே அவன் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ள முடியும் என்கிறது வேதம். பரிசுத்த ஆவியானவர் அவனுடைய குருட்டுக் கண்களைத் திறந்து இருதயத்தில் அடிப்படை ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே அவன் பாவ மன்னிப்புக்காக கிறிஸ்துவை நாடி ஓடுவான் என்கிறது வேதம். நீதியின் தேவனாகிய கர்த்தர் கருணையுள்ளவராக இருப்பதால்தான் மனிதன் அழிந்து விடாதபடி அவன் இரட்சிக்கப்படும்படியான இத்தகைய வழிமுறையை கிறிஸ்துவின் சிலுவைப்பலியின் மூலம் ஏற்படுத்தித் தந்துள்ளார். கர்த்தர் நீதியாகத் தெரிந்துகொண்டவர்களுக்கான சிலுவைப்பலி கர்த்தருடைய கருணையின் செயல்முறை. திருந்தமாட்டேன் என்று பாவத்தில் நிலைத் திருக்கத் துடிப்பவர்களுக்காக சிலுவைப்பலி அமைந்திருந்தால் மட்டுமே நாம் கர்த்தரைக் குறைகூற முடியும். மனந்திரும்ப மாட்டேன் என்று விடாப் பிடியாக நரகத்தை நோக்கி ஓடுகிறவர்களுக்கு கருணை காட்டுகிறவர் கர்த்த ராக இருக்க முடியாது. தம்முடைய அளப்பரிய ஞானத்தின்படி உலகத் தோற்றத்துக்கு முன் தெரிந்துகொண்ட மக்களுக்காக கிறிஸ்துவை சிலுவையில் பலியிட்ட செயல் கர்த்தர் எத்தனை நீதியுள்ளவர், அன்புள்ளம் கொண்டவர் என்பதையே வெளிப்படுத்துகிறது.
குறிப்பிட்ட மக்களை மட்டுமே கர்த்தர் இரட்சிப் பாரானால் நாம் பாவிகளுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டிய அவசியமென்ன?
நிச்சயம் நாம் சுவிசேஷத்தை எல்லோருக்கும் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் அறிவிக்க வேண்டும். அதற்கான பதிலை மத்தேயு 29:18-20 தருகிறது. சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தரே கட்டளையிட்டிருக் கிறார். நமது கடமை யார் கர்த்தரால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்து சுவி சேஷத்தை அவர்களுக்கு அறிவிப்பதல்ல. அந்த எண்ணமெல்லாம் நமக்கு வரவேகூடாது. இரகசியமான காரியங்களை கர்த்தர் மட்டுமே அறிவார். நமது கடமை எல்லோருக்கும் சுவிசேஷ த்தை அறிவிப்பது மட்டுமே என்கிறது வேதம்.
கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் தொகையை அறிந்தவர் கர்த்தர் மட்டுமே. சகல ஜாதிகள் மத்தியிலும் இருக்கின்ற அந்த மக்கள் உலகமெல்லாம் பரவிக்காணப்படுகிறார்கள். அவர்களை அறிந்தவர் இந்த உலகத்தில் யாருமில்லை. கிறிஸ்துவை ஒருவர் விசுவாசிக்கின்ற போதே நாம் அந்த நபர் தெரிந்துகொள்ளப் பட்டிருக்கிறார், இரட்சிப்புக்காக முன்குறிக்கப் பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அதற்கு முன் எவரையும் நாம் நரகத்திற் குரிய பாவிகளாக மட்டுமே கருத முடியும்.
பாவிகளான அனைத்து மக்களுக்கும் சுவிசேஷத்தை சொல்ல வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. சுவிசேஷத்தை பாவியான மனிதன் கேட்கிறபோதே ஆவியானவர் அவனில் கிரியை செய்து அவனுடைய செவி மடல்களைத் திறந்து கர்த்தரின் அழைப்பைக் கேட்டு உணரச் செய்கிறார். அவனுக்கு கர்த்தர் விசுவாசத்தையும் தரு கிறார். இந்தச் செயல்கள் நடைபெற அனைத்து மக்களுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டியது அவசியம். சுவிசேஷப் பிரசங்கம் இல்லையெனில் பாவிகள் மனந்திரும்புவதற்கு வழியே இல்லை (ரோமர் 10:13-17).