சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக தமிழினத்தின் மத்தியில் அனேகர் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்களும், தனிநபர் சொந்த ஊழியங்களும் இரவில் தோன்றி இருந்த இடம் தெரியாமல் அடுத்த நாளே மறைந்து விடும் காளான்கள் போல் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் பணிகள் மூலம் வேதபூர்வமாக நிலைத்து நின்று நம் சமுதாயத் தில் உறுதியான ஊழியங்களைச் செய்யும் திருச்சபைகள் எத்தனை தோன்றி இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் அவற்றை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஸ்தாபனங்கள் பெரும்பாலும் திருச்சபைகள் அமைப்பதில் எந்த அக்கறையும் எடுப்பதில்லை. சபை அமைக்கிறோம் என்ற பெயரில் எழும் தனிநபர் ஊழியங்களும் அதை ஆரம்பிக்கும் தனிநபருடைய சுயநல நோக்கங்களுக்காகவே பெரும்பாலும் ஆரம்பிக்கப் படுகின்றன. நம்மினத்தில் இந்த ஐம்பது வருட காலத்திற்குப் பிறகும் ராஜாதி ராஜாவான கிறிஸ்து இயேசு அமைத்து வருகின்ற திருச்சபையை இனங்காட்டி, சமுதாயத்தில் ஒளிபரப்பி உயிரூட்டத்தோடு இருக்கும் சபைகளை அதிகம் பார்க்க முடியாமலிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. புறஜாதி மக்கள் கண்டு வியந்து கைகளை உயர்த்தி வணங்க வைக்கும் அளவுக்கு திருச்சபை ஊழியங்கள் இல்லாதிருப்பது நெஞ்சைச் சுடுகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதற்கிணங்க நம்மத்தியில் அவல நிலை யில் இருக்கும் கிறிஸ்தவ ஊழியத்தில் முதல் போடாமலேயே வட்டி வாங்கிப் பிழைக்கும் கூத்தாடிகளும், கூடில்லாக் குருவிகளுந்தான் அதிகம்.
இந்தச் சூழ்நிலையில் இருந்து வருகிற நம்மினத்தில் சிந்திக்கத் தெரிந்தவர்களும், தேவபயமுள்ளவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கர்த்தரின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கத் தெரிந்திருக்கிற அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆக்கத்தை எழுதத் துணிந்தேன். மத்தேயு 28ம் அதிகாரத்தில் 18-20 வசனங்களில் இயேசு கிறிஸ்து தன்னு டைய சீடர்களான பதினொருவரை அழைத்து (யூதாஸ் இறந்துவிட்டான்) அவர்களுக்கு ஒரு பெருங்கட்டளையை இட்டார். அந்தக் கட்டளைபடி கிறிஸ்துவின் சீடர்களான பதினொருவரும் உலக முழுதும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்கின்ற வர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்களை சேர்த்து வேத போதனைகளின் அடிப்படையில் திருச்சபைகளை நிறுவும்படிக் கட்டளையிட்டார். இன, மத, மொழி வேறுபாடுகளின்றி சகல மக்கள் மத்தியிலும் சுவிசேஷம் பிரசங் கிக்கப்பட்டு இத்தகைய சபைகள் அமைய வேண்டுமென்பதே கிறிஸ்துவின் கட்டளையாக இருந்தது. இதே கட்டளையை ஏனைய சுவிசேஷ நூல்களின் ஆசிரியர்களும் விளக்கி யிருக்கிறார்கள். பவுல் ரோமர் 10ல் இதைத்தான் வலியுறுத்துகிறார். இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒரே விஷயத்தை வெவ்வேறு விதங்களில் விளக்கும் பகுதிகளாக இருக்கின்றன. இவற்றிலிருந்து கிறிஸ்து சுவிசேஷத்தை உலக மக்களுக்கு அறிவிப்பது மட்டும் தனது சீடர்களின் கடமையாகக் கருதவில்லை. சுவிசேஷ ஊழியங்கள் அனைத்தும் சபை நிறுவுதலில் போய் முடியவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். சபை நிறுவுதலுக்குக் குறைந்த எதையும் அவர் விரும்பவில்லை. வெறுமனே சுவிசேஷத்தை மட்டும் சொல்லிவிட்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறவர்களுக்கு கிறிஸ்துவின் கட்டளை புரியவில்லை என்றுதான் கூறவேண்டும்.
கிறிஸ்துவின் கட்டளையைத் தலைமேல் தாங்கி அவருடைய சீடர்களான அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தைப் போதித்து திருச்சபைகளை அமைத்த வரலாற்று விபரங்களை அப்போஸ்தலர்களின் நடபடிகள் தெளிவாக விளக்குகின்றன. அப்போஸ்தலர்களுடைய சுவிஷேசப் பணிகள் அனைத்தும் சபை அமைப்பதில் போய் முடிந்திருக்கின்றன. அவர்கள் சபை அமைப்பதை இலக்காகக்கொள்ளாமல் சுவிசேஷப்பணிகளை ஒருபோதும் ஆரம்பிக்கவில்லை. இன்றைக்கு வாலிபர் சுவிஷேசப்பணி, பெண்கள் சுவிசேஷப்பணி, குழந்தைகள் சுவிசேஷப்பணி என்று சமுதாயத்து மக்க ளைத் தனித்தனியாகப் பிரித்து சுவிசேஷம் சொல்லி அவர்கள் சபைப் போதனையையே அறியாமலும், சபை வாழ்க்கைக்கே தகுதியற்றவர்களாகவும் இருக்கும்படி செய்து தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளுகிற ஸ்தாபன ஊழியங்களை அப்போஸ்தலர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
இன்று பொதுவாக வழங்கப்பட்டு வரும் ‘மிஷனரி’ (Missionary) என்ற வார்த்தை வேதத்தில் இல்லாதது. அது இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. அப்போஸ்தலன் என்ற வார்த்தைக்குப் பொருளான அதிகாரத் தோடு (சபையால்) அனுப்பப்பட்டவர் என்ற அர்த்தமே இலத்தீனில் முதலில் உருவான இந்த வார்த்தைக்குப் பொருள். இன்று ‘மிஷனரி’ என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்களில் 99% திருச்சபைகளால் அனுப்பப் படவில்லை. சபைத்தொடர்பில்லாத ஸ்தாபனங்களினாலேயே அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் திருச்சபைகளில் வளர்ந்து இருக்கமாட்டார்கள்; திருச்சபையைக் கண்டும் இருக்க மாட்டார்கள். அத்தோடு, இவர்களில் 99% திருச்சபை அமைப்புப் பணி தவிர்ந்த ஏனைய வேலைகளைச் செய்யவே அனுப்பப்படுகிறார்கள். கிறிஸ்து கட்டளையிட்டுச் சொல்லியிருக்கும் திருச்சபை அமைப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகை மிகவும் குறைவு. ஆனால், வேதத்தில் நாம் பார்க்கும் ஆதிசபை அப்போஸ்தலர்கள் சபைகளை நிறுவ கிறிஸ்துவாலும், சபைகளாலும் அனுப்பப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் வேறு வேலைகளில் ஈடுபட்டதாக வேதத் தில் நாம் எங்கும் வாசிப்பதில்லை.
ஆகவே, மத்தேயு 28ல் காணப்படும் இயேசு கிறிஸ்துவின் கட்டளையின்படி இந்த உலகத்தில் அமைந்த திருச்சபை ஊழியத்தையும், அந்த திருச்சபை ஊழியம் இந்த உலத்தில் தொடர்ந்து திருச்சபை ஊழியங்கள் அமைவதற்காக சுட்டிக்காட்டும் நாம் பின்பற்ற வேண்டிய விதிகளையும் விளக்கமாகப் பார்ப்பதற்கு முன்பாக நாம் அப்போஸ்தலர்களைப் பற்றிய நான்கு முக்கிய அம்சங்களை நினைவில் வைத்திருப்பது அவசியம்.
(1) இன்று நம்மத்தியில் அப்போஸ்தலர்கள் இல்லை. – அப்போஸ்தலர்களின் பதவி முதலாம் நூற்றாண்டுடனேயே முடிவடைந்துவிட்டது. நம்மத்தியில் இன்று அப்போஸ்தலர்கள் இல்லை. அப்போஸ்தலப் பதவிக்கு இருக்க வேண்டிய இலக்கணங்களின் அடிப்படையில் இன்றைக்கு அப்போஸ்தலர்கள் இருக்க முடியாது. சமீபத்தில் எனக்கு வந்த ஒரு கடிதத்தில் ஒரு சபைப் போதகர் தன்னை அப்போஸ்தலர் என்று அறிவித்துக் கொண்டிருந்தார். வேதம் சரியாகத் தெரியாத அந்த மனிதரின் அறியாமையை எண்ணி என்னால் சிரிக்க மட்டுந்தான் முடிந்தது. அப்போஸ்தலர்கள் திருச்சபைக்கு அத்திவாரம். அத்திவாரம் போட்ட பிறகு எந்தக் கட்டிடத்துக்கும் மறுபடி யும் அத்திவாரம் போடத்தேவையில்லை. அப்போஸ்தலர்களுக்கு சத்தியம் நேரடியாக வெளிப்படுத்தப்பட்டது. அந்த சத்தியங்கள் அனைத்தும் வேதத்தில் எழுத்தில் வடிக்கப்பட்டு பூரணமாகக் கொடுக்கப்பட்டவுடன் அப்போஸ்தலப் பதவிக்கு இன்று அவசியமில்லை. அப்போஸ்தலர்கள் அனைவரும் நேரடியாக இயேசுவைக் கண்டவர்கள். அவர் காலத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள், பவுலைத் தவிர. இந்த இலக்கணங்கள் எல்லாம் இருந்தவர்கள் மட்டுமே அன்று அப்போஸ்தலர்களாக தெரிவு செய்யப் பட்டனர். இன்று அந்த இலக்கணங்களைக் கொண்ட எவரும் எம்மத்தியில் இல்லை. அத்தோடு, கர்த்தரே திருச்சபைக்கு அத்திவாரமான அந்தப் பதவியை நிறுத்திக்கொண்டுவிட்டார்.
(2) அப்போஸ்தலர்களுக்கு சத்தியம் நேரடியாக வெளிப்படுத்தப்பட்டது. – அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவிடமிருந்து சத்தியத்தை நேரடியாகப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களே அதை திருச்சபைக்கு வெளிப்படுத்தி னார்கள். இந்தவிதத்தில் அப்போஸ்தலர்கள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போன்றவர்கள். அப்போஸ்தலர்களுடைய காலம் முடிவடைகின்றபோது சத்தியம் முழுமையாக எழுத்தில் வடிக்கப்பட்டு வேதமாக நமக்குக் கொடுக்கப்பட்டது. இன்று சத்தியத்தை நாம் நேரடியாக கர்த்தரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது. அதை நாம் வேதத்தை வாசித்தே அறிந்துகொள்ள வேண்டும். இக்காரணத்தால் சத்தியத்தை அன்று வெளிப்படுத்திய அப்போஸ்தலர்களின் பதவி இன்று தேவையற்றுப் போயிற்று.
(3) அப்போஸ்தலர்கள் அற்புதங்களைச் செய்யும் வல்லமை கொண்டவர்களாக இருந்தனர். – அப்போஸ்தலர்கள் அற்புதங்களைச் செய்யும் வல்லமையுடையவர்களாக இருந்தனர். அவர்கள் கர்த்தரின் பிரதிநிதிகள் என்பதை உணர்த்தவும், அவர்களிடமிருந்தே சத்தியம் நமக்கு வருகிறது என்பதைத் தெரிவிக்கவும் அவர்களுக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமை அளிக்கப் பட்டிருந்தது. இன்று அப்போஸ்தலப் பதவி முடிவடைந்து போய்விட்ட தால் அற்புதங்கள் செய்ய வேண்டிய அவசியமும் இல்லாமல் போய் விட்டது. கர்த்தர் மட்டுமே இன்று நேரடியாக எந்த அற்புதத்தையும் செய்யக்கூடிய வராக இருக்கிறார். அற்புதங்கள் செய்பவர்களாக தங்களை இனங்காட்டிக் கொள்கிற எவரும் இன்று போலிகளே.
(4) அப்போஸ்தலர்கள் திருச்சபைகள் மீது அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக இருந்தனர். – கர்த்தரிடம் இருந்து சத்தியத்தைப் பெற்று சபைக்களித்ததோடு அற்புதங்களையும் செய்த அப்போஸ்தலர்கள் திருச்சபைகள் மீது அதிகாரம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர். அவர்கள் வழிப்படி திருச்சபைகள் நடக்க வேண்டியிருந்தது. அவர்கள் மூலமே கர்த்தர் அக்காலத்தில் திருச் சபைகளை வழிநடத்தினார். இதனால்தான் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் நான் கர்த்தரிடம் இருந்து பெற்றுக் கொண்டதை உங்களுக்கு ஒப்புவித்தேன். எல்லா சபைகளிலும் இப்படியே இருக்கக்கடவதாக என்றெல்லாம் பவுல் அப்போஸ்தலனால் சொல்ல முடிந்தது. அப்போஸ்தலப் பதவி விஷேடமான பதவி. அப்போஸ்தலர் காலத்துக்கு மட்டுமே உரிய பதவி.
மேற்கண்ட காரணங்களால் இன்று அப்போஸ்தலர்கள் நம்மத்தியில் இல்லை. இனி வருங்காலத்திலும் அவர்களைப் பார்க்க முடியாது. சபைக்கு அத்திவாரமாக இருந்த அவர்கள் பணி நிறைவேறிவிட்டது. ஆகவே, இன்றைக்கு எவரும் அப்போஸ்தலர்களைப்போல அதிகாரத்தோடு நடந்து கொள்ள முடியாது. அற்புதங்கள் செய்ய முடியாது. அப்போஸ்தலர்களைப்போல திருச்சபைகள் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாது. அப்போஸ்தலர்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள் தங்களுடைய அறியாமையைத்தான் காட்டிக் கொள்கிறார்கள். அப்போஸ்தலர்கள் இல்லாத இன்றைய காலப்பகுதியில் திருச்சபை போதகர்களையும்/மூப்பர்களையும், உதவிக்காரர் களையும் மட்டுமே அதிகாரிகளாகக் கொண்டிருக்கிறது. போதகர்களும்/மூப்பர்களும் இன்று வேதத்தைப் போதித்து சபையை வழிநடத்துவதை மட்டுமே பொறுப்பாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அப்போஸ்தலர்களுக்கு அன்றிருந்த அதிகாரம் இல்லை. உதவிக்காரர்கள் போதகர்களுக்குக் கீழ் பணிபுரிய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அன்று அப்போஸ்தலராக எந்தப் பெண்மணியும் நியமிக்கப்படவில்லை. அதேபோல் இன்று போதகர்களாகவும், மூப்பர்களாகவும், உதவிக்காரர்களாகவும் எந்தப் பெண்ணும் நியமிக்கப்படக்கூடாது. இவை பெண்களுக்குரிய ஊழியங்கள் இல்லை.
அப்போஸ்தலர்களுக்குரிய முக்கிய இலக்கணங்களையும் அவர்களுடைய பதவி இன்று இல்லாததற்கான காரணங்களையும் பார்த்தோம். இனி வேதம் போதிக்கும் திருச்சபை அமைப்புப் பணிகளுக்கான விதிகளை ஆராய்வோம். அதற்கு முன் நாம் பார்க்கப்போகின்ற இவ்விதிகள் வேதத்தில் ஓர் இடத்தில் மொத்தமாகக் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் உணர்வது அவசியம். அவற்றை வேதம் தரும் திருச்சபை அமைப்பு பற்றிய போதனைகள் அனைத்திலிருந்துமே பெற்றுக்கொள்ள முடியும். அப்போஸ்தல நடபடிகள் நமக்கு முக்கியமாக அப்போஸ்தலர்களைப் பயன்படுத்தி இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் எவ்வாறு சபையை நிறுவினார் என்பதை தெளிவாக விளக்குகிறது. அப்போஸ்தலர் நடபடிகள் ஒரு வரலாற்று நூல். அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் நமக்கு சபைகள் எப்படி அமைக்கப் பட்டன என்பதை மட்டும் எடுத்துக் கூறாமல் இன்று சபைகள் அமைக்கப்படுவதற்குத் தேவையான விதிகளையும் விளக்குகின்றன. அப்போஸ்தலர்களின் வழிகளைப் பின்பற்றி நாம் எவ்வாறு சபையை அமைப்பது என்பதை அது விளக்குகின்றது. அது வெறும் வரலாறுதானே என்று ஒதுக்கிவிட முடியாது. அது சபை அமைப்பதற்கு கர்த்தர் நமக்குக் காட்டியிருக்கும் உதாரணம்; வழிகாட்டி. சிலர், அது அந்தக்காலத்துக்கு மட்டுமே பொருத்த மானது. இன்று பொருந்தாது என்பார்கள். அனேக இறையியல் கல்லூரி களில் இப்படித்தான் இன்று தவறாகப் போதிக்கிறார்கள். இதனாலேயே வேதத்துக்கு விரோதமாக அநேக உலக வழக்கங்கள் பலராலும் இன்று ஊழியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்போஸ்தல நடபடிகள் கர்த்தரின் வேதம், சத்தியம் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அந்த நூல் இல்லாவிட்டால் இன்று திருச்சபைப் பணி செய்வதற்கு நமக்கு வழி காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எனவே, அறியாமையால் அப்போஸ்தலர் நடபடிகளின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது.
அத்தோடு புதிய ஏற்பாட்டின் ஏனைய நிருபங்களும் நமக்கு சபை அமைப்பு, நிர்வாகம் பற்றிய போதனைகளைத் தருகின்றன. முக்கியமாக பவுல் எழுதிய 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து ஆகிய மூன்று நூல்களும் போதக ஊழியத்துக்குத் தேவையான இலக்கணங்களையும், உதவிக்காரர் களுக்குரிய இலக்கணங்களையும் விளக்குகின்றன. எபேசிய சபையில் போதகனாக இருந்த வாலிபத் தீமோத்தேயு சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சபை மக்களை எப்படி வழிநடத்த வேணடும் என்பதை பவுல் இந்நிருபங்களில் தீமோத்தேயுவுக்கு விளக்குகிறார். அவையத்தனையும் கிறிஸ்து மறுபடியும் வரும்வரையும் இவ்வுலகத்தில் திருச்சபை ஊழியத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய போதனைகள். இந்த நிருபங்களில் சபை பற்றிய அநேக போதனைகள் உள்ளன. பவுலும் மற்றவர்களும் எழுதிய ஏனைய நிருபங்களும் சபை சம்பந்தமான போதனைகளை அள்ளி வழங்குகின்றன. திருச்சபையில் ஆராதனை எவ்வாறு நிகழ வேண்டும், திருச்சபையில் ஆண்களும், பெண்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கொரிந்தியருக்கு பவுல் எழுதிய நிருபத்தில் இருந்து அறிந்து கொள்ளுகிறோம். பேதுருவும் இவை பற்றி எழுதியிருக்கிறார். திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை எபேசியருக்கு பவுல் எழுதிய நிருபம் விளக்குகிறது. திருச்சபைகள் எப்படி இருந்தன, அவை எப்படி இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தல் விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்களிலும் வாசிக்கிறோம். இவை எல்லாவற்றையும் வைத்தே நாம் திருச்சபை அமைப்புப் பணிக்கான விபரங்களைப் பெற்றுக் கொள்கிறோம். புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் போதனைகளின்படி அமைந்து வளர்கிறவை மட்டுமே கர்த்தருடைய திருச்சபைகளாக இருக்க முடியும். இன்று இதையெல்லாம் அசட்டை செய்துவிட்டு உலகத்தைப் பார்த்து ஊழியம் செய்ய ஆரம்பித்திருக்கிறது ஒரு பெருங்கூட்டம்.
வேதபோதனைகளை உதாசீனப்படுத்திவிட்டு கிறிஸ்து இயேசுவின் பெயரில் இந்த உலகத்தில் சுவிசேஷ ஊழியம் செய்ய முடியாது; சபை அமைக்க முடியாது. வேதவழிகளினால் அல்லாமல் வேறுவழிகளின் மூலம் அமைகிற எந்த ஊழியமும் கர்த்தரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட ஊழியமாகவும் இருக்காது. கிறிஸ்து காட்டும் வழியில் அவருடைய சபை எப்படி அமைக் கப்படவேண்டுமென்பதை இனி வரும் இதழ்களில் பார்ப்போம். (வளரும்)