கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 2

கர்த்தருடைய வேதபோதனைகளின் அடிப்படையில் திருச்சபைகள் இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்று இந்த வருடத்தின் இரண்டாம் இதழில் ஆராய ஆரம்பித்தோம். அந்த ஆரம்ப ஆக்கத்தில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய உண்மையாக இன்று நம்மத்தியில் அப்போஸ்தலர்கள் இல்லை என்று தெளிவாக விளக்கியிருந்தேன். அப்போஸ்தலர்கள் இன்றிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்போஸ்தலர்கள் இன்று நம்மத்தியில் இல் லாததோடு அவர்களுடைய போதனைகள் அனைத்தும் வேதத்தில் வடிக்கப்பட்டு நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இன்று அப்போஸ்தலருக்குரிய அதிகாரம் கொண்டவர்கள் எவரும் இல்லை. முக்கியமாக இந்த உலகத்தில் கர்த்தருடைய விதிகளின்படி அமைக்கப்பட்டு இயங்கி வரும் திருச்சபைக்கு மட்டுமே ஆத்மீகக் காரியங்களுக்கான அதிகாரத்தைக் கர்த்தர் அளித்திருக்கிறார்.

இனி கிறிஸ்துவின் வழியில் இந்த உலகத்தில் அமைய வேண்டிய திருச்சபைப் போதனைகள் பற்றிய ஐந்து முக்கிய வேதவிதிகளை (The Principles of Mission) இந்த இதழில் இருந்து ஆராய்வோம். இந்த விதிகள் எக்காலத்துக்கும் உரியவை. எந்தவிதமான வேத போதனைகளையும் அறியாது, அறிந்திருந்தாலும் அவற்றிற்கு இடங்கொடுக்காது மனம் போன போக்கில் சுயநல நோக்கத்திற்காக வியாபார ஊழியம் நடத்தி தம்மையும் தம் குடும்பத்தையும் மட்டும் வளர்த்து வருகிறவர்கள் பெருகிக் காணப்படுகின்ற தமிழினத்தில் சிந்திக்கும் இதயத்தைக் கொண்டிருப்பவர்கள் இந்த வேத போதனைகளை ஆராய்ந்து பார்த்து தங்களைத் திருத்திக்கொண்டு கர்த்தருடைய மெய்யான திருச்சபைக்கு அடங்கி வாழ்ந்து ஆத்மவிருத்தி அடைவார்களானால் அதுவே நமக்கு போரானந்தமளிக்கும். இனி வேதம் போதிக்கும் திருச்சபை அமைப்புக் கான ஐந்து முக்கிய வேத போதனைகளை நாம் ஆராய்வோம்.

(1) திருச்சபையை இந்த உலகத்தில் கர்த்தர் தம்முடைய இறையாண்மை யின் அடிப்படையில் அமைக்கிறார். எனவே, நம்முடைய திருச்சபை அமைப்புப் பணிகள் அனைத்தும் அவருடைய இறையாண்மையைக் கருத்தில் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும்.

இறையாண்மை என்பதை ஆங்கிலத்தில் Sovereignty of God என்று அழைப்பார்கள். கர்த்தர் சகல வல்லமையுமுள்ளவர்; அவருக்கு மேல் அதிகாரமுள்ள ஒருவரும் இல்லை என்பது இதற்கு அர்த்தம். கர்த்தர் என்ற அவருடைய பெயரிலே அந்த அர்த்தம் இருக்கிறது. ஆண்டவர் என்பதிலும் ஆளுகிறவர் என்ற அர்த்தத்தைப் பார்க்கிறோம். சகலத்தையும் படைத்த தேவன் தமது படைப்பைத் தொடர்ந்து பராமரித்து ஆண்டு வருகிறார். அவருடைய ஆளுகைக்கு உட்படாத இடம் இல்லை. இந்த உலகத்தின் இளவரசனான பிசாசு தன்னுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்து கொண்டிருந்தபோதும் அவனுடைய செயல்கள் கர்த்தர் விதித்திருக்கும் எல்லையை மீறி நடந்துவிட முடியாது. பிசாசின் கிரியைகளும் கர்த்தருடைய அதிகாரத்துக்கு உட்பட் டிருக்கின்றன என்று கூறலாம். இதற்காக பிசாசின் செயல்களுக்கு கர்த்தரைக் குற்றஞ்சாட்ட முடியாது. பிசாசு தன்னுடைய இயல்புக்கு ஏற்ப காரியங்களைச் செய்து வந்தபோதும் கர்த்தர் அவனையும் ஒரு எல்லைக்குள் வைத்திருக்கிறார். அதேபோலத்தான் உலகத்தில் கேடான மனிதர்களுடைய கிரியைகளும் அவருடைய கட்டுக்குள் இருக்கின்றன. கர்த்தருடைய ஆளுகை எங்கும் பரந்து வியாபித்திருக்கிறது.

சங்கீதம் 2 கர்த்தரின் இறையாண்மையை அருமையாக விளக்குகிறது. “ஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி: அவர்கள் கட்டுக்களை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.” என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். இந்த வசனங்களும் இந்த சங்கீதமும் கர்த்தருடைய இறையாண்மையை விளக்குகின்றன. மனிதர்களுடைய செய்கைகளைப் பார்த்து கர்த்தர் நகைப்பதற்குக் காரணமென்ன? அவர் அவருடைய குமாரனை அபிஷேகம் பண்ணி வைத்திருக்கிறார். அதை ஒருவராலும் அசைக்க முடியாது. மனிதர்கள் மனந்திரும்பாமல் இருந்தால் குமாரனின் கோபக்கனலைத்தான் அவர்கள் சந்திக்க வேண்டும். அவர்களால் வேறு எதையும் செய்துவிட முடியாது. இறையாண்மையுள்ள கர்த்தரின் திட்டத்தை மீறி எவரும் நடந்துவிட முடியாது. இதையே தானியேல், தானியேல் 4:35-ல் நினைவுறுத்துகிறான், “அவர் தமது சித்தத்தின்படி வானத்தின் சேனையையும், பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. .”

கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்று கூறும்போது, அவர் வானம்,  பூமி அனைத்துக்கும் அதிபதியாய் சகல அதிகாரங்களையும் கொண் டிருந்து எவரும் அவருடைய திட்டங்களை மாற்றவோ அல்லது அவருடைய ஆலோசனைகளை தோல்வியடையச் செய்யவோ அல்லது அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நிற்கவோ முடியாத நிலையில் இருக்கிறார் என்கிறது வேதம் (சங்கீதம் 115:3). கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்கிறபோது, சகல நாடுகளுக்கும் அவரே அதிபதி என்று விளக்குகிறது வேதம் (சங்கீதம் 22:28). அரசாங்கங்களை அமைத்தும், பேரரசுகளைக் கவிழ்த்தும், தன் விருப்பப்படி ராஜவம்சங்களை நிர்ணயித்தும் கர்ததர் சர்வலோக நாயகனாக செயல்பட்டு வருகிறார். “அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாக இருக்கிறார்” (1 தீமோத்தேயு 6:15).

கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்று வேதம் போதிக்கும் ஆணித்தரமான சத்தியம் திருச்சபை அமைப்பைப் பொறுத்தவரையில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய மிக அவசியமான போதனையாகும். தாம் படைத்த அனைத்தையும் ஆண்டுவருகிற தேவனே தன்னுடைய சபையையும் ஆண்டு தன்னுடைய திட்டங்களையும், தீர்மானங்களையும் அந்தச் சபைக்காக அதனூடாக நிறைவேற்றி வருகிறார் (எபேசியர் 1:20-23).

கர்த்தரின் இறையாண்மையை இகழ்ந்து நடப்பவர்கள்

அமெரிக்காவின் சார்ள்ஸ் பினி 18ம் நூற்றாண்டில் மனிதன் தன்னுடைய சுயமுயற்சியால் இரட்சிப்பை அடைய முடியும் என்று போதித்தார். சுவிஷேசம் சொல்லுகிறவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியால் பாவத்தை உணர்கிறவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் நித்தய ஜீவனை அடைய வழிசெய்து விடலாம் என்று போதித்தார். இந்த மனிதனின் போதனையால் கர்த்தரின் இறை யாண்மையை விசுவாசித்து செயல்படாமல் மனித ஞானத்திலும், உலக ஞானத்திலும் நம்பிக்கை வைத்து செயல்படும் சுவிஷேகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். சுவிசேஷக் கூட்டங்களில் கர்த்தரை ஏற்றுக்கொள்ளுவதற்கு கைகளைத் தூக்குவதும், தீர்மான அட்டைகளில் கையெழுத் திட்டுவிட்டதால் இரட்சிப்பு கிடைத்துவிட்டது என்று நம்புவது போன்ற வேதத்திற்குப் புறம¢பான நடவடிக்கைகள் அதிகரித்தன. பினியின் வழியில் வந்து பின்னால் பிரபலமான மனிதரே பில்லி கிரேகம். சார்ள்ஸ் பினியின் இத்தகைய நம்பிக்கைக்கும், செயல் முறைகளுக்கும் காரணம் வேத இறையியலில் விஷம் போன்ற கருத்துக்கள் நுழைய ஆரம்பித்ததே. பினியின் காலத்துக்கு முன்பே மனிதன் கர்த்தரின் துணையோடு தன்னுடைய சுயமுயற்சியால் தன்னைத் தானே இரட்சித் துக்கொள்ள முடியும் என்ற போதனையை ஜேக்கபொஸ் ஆர்மீனியஸ் ஆரம்பித்து வைத்திருந்தான். பினி ஆர்மீனியஸைப் பின்பற்றியே தன்னு டைய போதனைகளை வகுத்துக் கொண்டிருந்தான். இந்தப் போதனைகளும், அதன் அடிப்படையிலான செயல்முறைகளும் கர்த்தரின் இறையாண்மையை நிராகரித்து மனிதனைக் கர்த்தரின் இடத்தில் இருத்த முயன்றன.

மேற்குறிப்பிட்ட போதனையைப் பின்பற்றியவர்களின் சுவிசேஷக் கூட்டங்களாலும், நடவடிக்கைகளினாலும் திருச்சபை பற்றிய வேத போதனைகள் நிராகரிக்கப்பட்டன. பில்லி கிரேகம் போன்ற பிரபல்யமான தனி மனிதர்கள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு சுவிசேஷக் கூட்டங்களைத் தங்களுடைய ஸ்தாபனங்களைக் கொண்டு நடத்த ஆரம்பித்தார்கள். இவர்களுக்குப் பின் சபைகள் கைகட்டி நிற்க வேண்டிய நிலையேற்பட்டது. சபைக்கு கர்த்தர் அளித்திருந்த பணிகள் சபைகளுக்கு வெளியே கவர்ச்சிகரமாக பேசக்கூடிய தனிமனிதர்களுடைய அமைப்புக்களின் மூலம் நடக்க ஆரம்பித்தன. இதன் வழி வந்து இன்று உலகத்தையும், தமிழினத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அமைப்புக்களே “கூடில்லாக் குருவிகளான” கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் (Para-church organizations), கேட்பாரில்லாமல் தனி நபர்களால் சுயமாக ஆரம்பிக்கப்பட்டு நடந்து வரும் ஊழியங்களும். சபை மட்டுமே செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் இந்த ஸ்தாபனங்களும், நபர்களும் தங்கள் கரத்தில் எடுத்துக் கொண்டு கர்த்தரின் திருச்சபையை அலட்சியப்படுத்தி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல், சபையையே தங்கள் வாழ்க்கையில் கண்ணில் காணாதவர்களும், சபையில் இருந்து வளர்ந்து கற்றுக்கொள்ளாதவர்களும் ஊழியம் செய்கிறோம் என்றும், சபை அமைக்கிறோம் என்றும் புறப்பட்டிருக்கிறார்கள். கர்த்தரின் இறையாண்மையை அறிந்து, அவருடைய திருச்சபை பற்றிய போதனைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறவர்கள் இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஊழியம் செய்ய ஓடமாட்டார்கள்.

இது தவிர தமிழினத்தில் இருந்து வரும் சபை வளர்ச்சி இயக்கத்தைப் (Church Growth Movement) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். டொனல்ட் மெக்காவரன் (Donald McGaveren), பீட்டர் வெக்னர் (Peter Wagner) ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் சபை வளர்ச்சிக்கு முழுவதும் மனிதனின் ஞானத்திலும், வல்லமையிலும் தங்கியிருக்கிறது. சமுதாயத்தின் நடைமுறைகளுக்கும், பண்பாட்டிற்கும் ஒத்து, இசைந்து போய் எப்படி சபை வளர்ப்பது என்பதே இந்த இயக்கத்தின் போதனையாக இருக்கிறது. இதன் சபை அமைப்பு வழிமுறைகளின்படி, சபைகளை அமைப்பதற்கு நாம் மெய்யான சுவிசேஷப் பிரசங்கத்திலும், ஆவியின் கிரியையிலும் நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, நம் சமுதாயத்தின் இந்துப் பண்பாடுகளுக்கும், சமய வழிபாட்டு முறைகளுக்கும் ஏற்றவகையில் சுவிசேஷ போதனையையும், வழிபாட்டு முறைகளையும் நாம் மாற்றி அமைத்துக் கொண்டாலே போதும், ஊழியம் வெற்றிகரமாக அமைந்துவிடும் என்கிறது இந்த இயக்கம். “எங்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றினால் சுவிசேஷ ஊழியத்தில் கர்த்தரைக்கொண்டு அற்புதங்கள் செய்ய வைக்கலாம்” என்கிறார்கள் மெக்காவரனும், பீட்டர் வெக்னரும். கர்த்தரின் இறையாண்மையை முற்றாக நிராகரிக்கும் சபை பற்றிய போதனைகளை சபை வளர்ச்சி இயக்கம் முன்வைக்கிறது. அவை அனைத்தும் வேதபோதனைகளுக்கு முரணானவவை.

சமீபத்தில் தபாலில் எனக்கு சுவிசேஷ ஊழியம் பற்றிய ஒரு செமினாருக்கு வரும்படியாக அழைப்பு வந்திருந்தது. “இந்த செமினாரில் கர்த்தரை அறியாதவர்களுக்கு நட்புரீதியிலும், அவர்களைப் பயமுறுத் தாதவிதத்திலும் எப்படி சுவிசேஷம் சொல்லுவது என்று விளக்கப்படும்” என்று எழுதியிருந்தது. அதாவது, கர்த்தர் தெளிவான சுவிசேஷ செய்தியை நமக்குக் கொடுத்திருந்தாலும் அதை மக்களுக்கு ஏற்ற முறையில் விளக்குவதற்கு கர்த்தருக்கு நம்முடைய உதவி தேவை என்று இவர்கள் சொல்லுவது போலிருந்தது. சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களை அதனால் எந்தவிதத்திலும் துக்கப்படாமலும், ஆத்திரப்படாமலும், வெறுப்படையாமலும் சந்தோஷமாகக் கேட்க வைக்கிற காரியத்தையே இன்று அநேகர் செய்து வருகிறார்கள். ஒரு பொருளைப் விலை கொடுத்து வாங்குகிறவன் அதை விரும்பி இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக அது இருக்க வேண்டும் (User friendly) என்ற அடிப்படையில் இன்று வர்த்தக உலகில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த முறையை சுவிசேஷ ஊழியத்தில் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த நவீன சுவிசேஷ வியாபாரிகள். இதெல்லாம் கர்த்தருடைய இறையாண்மையைப் பற்றியும், அவருடைய சுவிசேஷத்தின் மகிமையைப்பற்றியும் எந்த ஞான மும் இல்லாதவர்கள் செய்கின்ற செயல்கள்.

டிஷ்பென்சேஷனலிசத்தைப் (Dispensationalism) பற்றி நமது பத்திரிகையில் ஏற்கனவே விளக்கமாக எழுதியிருக்கிறோம். இந்தப் போதனை சகோதரத்துவ சபைகளையும், பாப்திஸ்து சபைகளையும் அதிகம் பாதித்து அவர்களுடைய சபை பற்றிய நம்பிக்கைகளைப் பாதித்திருக்கிறது. இதில் நகைப்புக்கிடமான விஷயம் என்னவென்றால் இது எங்கிருந்து, எவ்வாறு பரவியது என்பதே நம்மினத்தில் அதிகமா னோருக்கு தெரியாது. இது வேதத்தில் இருப்பதாகத் தவறாக எண்ணி கிறிஸ்தவர்களில் பலரும் இதைப்பின்பற்றி வருகிறார்கள். ஜோன் டார்பி (John Darby) இங்கிலாந்தில் உருவாக்கி அமெரிக்காவில் பரப்பிய இந்தப் போதனை, நாம் வாழும் இந்தக் காலம் திருச்சபையின் காலமில்லை என்றும் இது சுவிசேஷம் சொல்லுவதற்காக மட்டும் கொடுக்கப்பட் டிருக்கிற காலம் என்றும் போதித்து திருச்சபையை அலட்சியப்படுத்துகிறது. சகோதரத்துவ சபைகளில் எல்லோருமே இதை நம்புவதில்லை என்றாலும் பெரும்பாலானவர்கள் இந்தப் போதனையினால் பாதிக்கப்பட்டு திருச்சபை அமைப்பை உதாசீனப்படுத்தி வருகிறார்கள். டிஷ்பென்சேஷனலிசம் வேதத்தில் காணமுடியாத, செயற்கையாக டார்பியினால் உருவாக்கப்பட்டு ஸ்கோபீல்டினால் (Scofield) எங்கும் பரப்பப்பட்டுள்ள ஒரு போலிப் போதனை. இந்தப் போதனையும் கர்த்தரின் இறையாண்மையை நிராகரித்து இயேசு கிறிஸ்துவின் திருச் சபையை அலட்சியப்படுத்துகிறது.

அமெரிக்காவில் செடில்பேக் (Saddleback Church) சபையின் போதகராக இருந்து வரும் ரிக் வொரன் (Rick Warren) திருச்சபை வளர்ச்சி பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். திருச்சபை வளர்ச்சியில் அக்கறை காட்டும் ரிக் வொரன் அதற்குத் தரும் ஆலோசனைகள் மனித ஞானத்தின் அடிப்படையில் அமைந்து மனித சக்தியில் நம்பிக்கை வைத்தே அமைந்திருக்கின்றன. ஹெரல்ட் கேம்பிங் (Harold Camping) என்ற மனிதர் இன்னும் ஒருபடி மேலே போய் கர்த்தர் இன்று திருச்சபையை முற்றாக நிராகரித்துவிட்டார் என்றும் ஆத்துமாக்கள் அனைவரும் திருச்சபையை விட்டு வெளியில் வந்து வீடுகளிலும், அங்குமிங்குமாக மட்டும் கூட வேண்டும் என்று தன்னுடைய வானொலிச் செய்திகளில் சொல்லி வருகிறார். திருமுழுக்கு, திருவிருந்து, போதகர்கள், சபை அமைப்பு எதுவுமே இன்று அவசியமில்லை என்று அறிவித்து வருகிறார். இது தேவ பயமே இல்லாமல் கர்த்தரின் இறையாண்மையை நிராகரித்து எள்ளி நகையாடும் செயல்.

மனிதர்களுடைய விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் நாம் ஒருபோதும் சுவிசேஷ ஊழியத்தைச் செய்யப் புறப்படக்கூடாது. அது பெரும் தவறு. உண்மையில் மனிதனுடைய தேவைகளின் அடிப்படையிலும்கூட அதில் ஈடுபடக்கூடாது. சுவிசேஷப் பணி எப்பொழுதும் கர்த்தரின் மகிமையை நோக்கமாகக் கொண்டு அவருடைய இறை யாண்மையைக் கருத்தில் கொண்டு அமைய வேண்டும். மனிதனின் தேவைகளைச் சந்திக்கக் கூடியவர் கர்த்தர் மட்டுமே. எனவே, கர்த்தர் மனிதனுடைய விடுதலைக்காக அளித்திருக்கும் சுவிசேஷத்தை அவருடைய சர்வ வல்லமையை மனதில்கொண்டு அதற்கு எந்தவிதத்திலும் பங்கேற்படுத்தாமல், அவரை விசுவாசித்து அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் சுயநலத்துக்கும், உலக ஞானத்துக்கும் அடிமையாகிவிடுவோம்.

ரொபட் சூளர் (Robert Schuller) என்ற அமெரிக்க போதகர் வேதத் தில் இருக்கும் அநேக உண்மைகளை நம்புவதில்லை. மனிதன் பாவத்தில் பிறந்திருக்கிறான் என்பதை இந்த மனிதர் மறுதளிக்கிறார். இவர் ஒரு கண்ணாடி மாளிகைபோன்ற சபையைக் கட்டியிருக்கிறார். ஒரு முறை இவர், “மனிதனை மையப்படுத்தாமல் கர்த்தரை மையப்படுத்தி யதால்தான் வரலாற்றில் சீர்திருத்தவாதம் வெற்றியடையவில்லை” என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறார். ரொபட் சூளருக்கு இதிலிருந்து சீர்திருத்தவாத வரலாற்றைப் பற்றிய அறிவில்லை என்பது தெரிகிறது. அத்தோடு சூளர் உலகக் கண்ணோட்டத்தில் சீர்திருத்தவாதத்தைப் பார்த்ததனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. சீர்திருத்தவாதத்தின் வெற்றியை வரலாறு வெளிப்படையாகக் காட்டுகிறது. சீர்திருத்தவாதம் மனிதன் உருவாக்கிய எழுப்புதல் அல்ல; அது கர்த்தரின் வல்லமையான கிரியை என்பது இந்த மனிதருக்குத் தெரிந்திருக்கவில்லை. ரொபட் சூளரின் தவறான இறையியல் நோக்கு அவருடைய கண்களை மறைத்திருக்கிறது. அதையும்விட இவர் கர்த்தரின் இறையாண்மையையும் மகிமையையும்விட மனிதனுடைய விருப்பு, வெறுப்புக்களில் அதிக அக்கறை வைத்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

நாம் இதுவரை பார்த்த இயக்கங்களும், மனிதர்களும் கர்த்தரின் இறையாண்மையில் நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களுடைய இறையியல் வேதத்தில் இருந்து புறப்படவில்லை. வேதத்தின் அதிரகாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் இருதயத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இதெல்லாம் கர்த்தரின் இறையாண்மையை அவர்கள் நிராகரித்திருப்பதற்கான அடையாளங்கள். கர்த்தரின் இறையாண்மையை நம்பியிருந்தால் சார்ள்ஸ் பினி பாவிகளுக்கு தன்னுடைய சொந்த முயற்சியால் இரட்சிப்பை அளிக்க முயன்றிருக்கமாட்டார். கர்த்தரின் இறையாண்மையில் நம்பிக்கை வைத்திருந்தால் சபை வளர்ச்சி இயக்கம் இந்துப் பண்பாட்டிற்கும், சமய வழிபாட்டு முறைகளுக்கும் ஏற்றவகையில் கிறிஸ்தவ சபை நிறுவுவதில் ஈடுபட்டிருக்காது. கர்த்தரின் இறையாண்மையில் நம்பிக்கை வைத்திருந்தால் ஹெரல்ட் கேம்பிங் ஆத்துமாக்களைத் திருச்சபையை விட்டு வெளியே வர சொல்லியிருக்க மாட்டார். கர்த்தரின் சர்வ வல்லமையை இவர்கள் எல்லோரும் ஏட்டுப்படிப்பாக மட்டுமே அறிந் திருக்கிறார்கள்.

இதுவரை நாம் பார்த்த இயக்கங்களும், மனிதர்களும் கர்த்தரின் இறையாண்மையை நிராகரித்து நடந்துகொள்வதற்குக் காரணமென்ன என்பதை விளக்குவது அவசியம்.

(1) வேதத்திற்குப் புறம்பான இறையியல் போதனைகளை இவர்கள் விசுவா சிப்பதால் கர்த்தரின் இறையாண்மைக்கெதிராக செயல்பட நேரிடுகிறது.

நமது கிறிஸ்தவ நடைமுறைச் செயல்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது நாம் விசுவாசிக்கும் சத்தியங்கள்தான். அவற்றின் அடிப்படையில்தான் நாம் எல்லா முடிவுகளையும் எடுத்து கர்த்தருக்குரிய காரியங்களைச் செய்கிறோம். நாம் இதுவரை பார்த்து வந்த இயக்கங்களும், மனிதர்களும் கர்த்தர் சகலத்தையும் ஆளுகிறார் என்று நம்பினாலும், அவருடைய சித்தம் மனிதர்களாகிய நம்முடைய துணையில்லாமல் இந்த உலகத்தில் சகல காரியங்களிலும் நிறைவேற முடியாது என்று நம்புகிறார்கள். கர்த்தர் தம்முடைய சித்தம் நிறைவேற நம்மைப் பயன் படுத்திக் கொள்ளுகிறார் என்று நாம் நம்புகிறோம். ஆனால், அவர்கள் ஒருபடி மேலே போய் நம்முடைய துணையும், பங்கும் இல்லாமல் அவருடைய சித்தம் நிறைவேறாது என்று நம்புகிறார்கள். நாம் விசுவா சிப்பதற்கும், அவர்கள் விசுவாசிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கர்த்தர் சகலத்தையும் ஆளுகிறார் என்று விசுவாசிக்கிற நாம் கர்த்தருடைய சித்தத்தை வேதத்தில் ஆராய்ந்து அதைத் தெளிவாக விளங்கிக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு அதன் அடிப்படையில் மட்டும் சகல ஆத்மீகக் காரியங்களையும் செய்யப் பார்ப்போம். அவர்கள் கர்த்தருடைய சித்தம் நிறைவேற தங்களுடைய பங்கும் அவசியமெனக் கருதி, தங்களுடைய சொந்த ஞானத்தின் அடிப்படையில் சகல ஆத்மீகக் காரியங்களைச் செய்கிறார்கள். கர்த்தருடைய ஆதமீகக் காரியங்களைச் செய்ய அவர்கள் கர்த்தரின் இறையாண்மையில் தங்கியிருக்கவில்லை. இதுவே அவர்களுடைய தவறான போக்கிற்கு பெருங் காரணமாக இருக்கிறது. சுவிசேஷ ஊழியம், திருச்சபை, பரிசுத்த வாழ்க்கை என்று கிறிஸ்தவத்தின் அத்தனை அம்சங்களையும் அவர்கள் தங்களுடைய தவறான எண்ணங்களின் அடிப்படையிலேயே அனுகுகிறார்கள்.

(2) தவறான இறையியல் போதனைகளில் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதால் இவர்களுடைய செயல்முறைகள் கர்த்தரின் இறையாண்மைக் கெதிரானதாக அமைகின்றன.

கர்த்தரின் இறையாண்மையில் பூரண நம்பிக்கை வைத்து அவருடைய வேதபோதனைகளுக்கு கட்டுப்பட்டு மனித ஞானத்திற்கு இடங்கொடுக்காமல் இருக்கும்போது நாம் சகல ஆத்மீக காரியங்களையும் கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக செய்ய முடிகிறது. அப்படியில்லாது, கர்த்தரின் இறையாண்மைக்கு மதிப்புத்தராத இறையியல் கோட்பாடுகளை விசுவாசித்தால் நம்முடைய செயல்முறைகளெல்லாம் கர்த்தரின் வழிமுறைகளை மீறியே அமைந்திருக்கும். கர்த்தரின் சுவிசேஷம் வெற்றி பெறவேண்டுமானால் மனிதனின் மனநிலைக்குத் தக்கதாக அதைப் பிரசங்கிக்க வேண்டும் என்று நம்பினால் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சுவிசேஷத்தை நாம் மாற்றத்தான் செய்வோம். கர்த்தரின் இறையாண்மையைப் பற்றிய உணர்வில்லாமல், வேதம் போதிக்கும் திருச்சபை பற்றிய ஞானமில்லாமல் இருந்தால் அவை பற்றி நாமே ஒரு போதனையை உருவாக்கிக்கொண்டு கர்த்தரின் பெயரில் தவறான காரியங்களைத்தான் நாம் செய்து கொண்டிருப்போம். நாம் செய்வது தவறா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியது நாமல்ல; வேதமே. திருச்சபை ஊழியம் பற்றிய வேதத்தின் போதனைகளுக்கு முரணான போதனைகளைக் கொண்டிருப்பவர்களுடைய செயல்முறைகள் கர்த்தரின் இறையாண்மைக்கு எதிராகத்தான் செயல்பட முடியும்.

கர்த்தர் இறையாண்மையுள்ளவராதலால் அவர் தன்னுடைய திட்டங்களையெல்லாம், தன் சித்தப்படி எந்த மனிதனுடைய உதவியும் இல்லாமல் நிறைவேற்றிக்கொள்கிறவராக இருக்கிறார். தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு அவர் நாடுகளையும், மனிதர்களையும் பயன்படுத்திக்கொள்கிறபோதும், அவருடைய திட்டங்கள் நிறைவேற மனிதனுடைய உதவி அவருக்குத் தேவையில்லை. மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருடைய திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறும். அவருடைய திட்டங்களைக் குழப்பக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை; அவரைவிடப் பெரியவர் ஒருவரும் இல்லை.

அத்தோடு, திருச்சபையை இந்த உலகில் நிறுவுவது கர்த்தருடைய திட்டங்களில் ஒன்று. அதைச் செய்ய கர்த்தர் எந்த மனிதனிலும் தங்கியிருக்கவில்லை. தன்னுடைய மகா ஞானத்தினாலும் வல்லமையினாலும் கர்த்தர் அதைச் செய்துவருகிறார். தன்னுடைய சபையை ஏற்கனவே இந்த உலகத்தில் நிறுவியிருக்கும் கர்த்தர் அதைத் தொடர்ந்து சகல தேசங்களிலும் நிறுவி வருகிறார். தனது சபை இந்த உலகத்தில் அப்போஸ்தலர்களின் போதனைகளின் அடிப்படையில் எவ்வாறு தொடர்ந்து எல்லா இடங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக வேதத்தில் எழுத்தில் தந்திருக்கிறார். சபையைக்குறித்த நமக்குத் தேவையான அத்தனை போதனைகளும் வேதத்தில் இருக்கின்றன. சுவிசேஷத்தை யார் சொல்ல வேண்டும்? அவர் எங்கிருந்து அனுப்பப்பட வேண்டும்? திருச்சபை விசுவாசிகளைக் கொண்டு எவ்வாறு நிறுவப்பட வேண்டும்? என்றெல்லாம் வேதம் போதிக்கின்றது. நிலமை இப்படியிருக்க கர்த்தரின் தெளிவான போதனைகளை நம் காலத்துக்கு உதவாது என்று மாற்றி அமைப்பதோ அல்லது மனிதர்களுக்குப் பிடிக்காது என்று விலக்கிவைப்பதோ அல்லது மனித ஞானத்தின்படி திருச்சபையை நிறுவ முயல்வதோ கர்த்தரின் இறையாண்மையை முற்றாக நிராகரித்ததற்கு ஒப்பானதாகும்.

மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் காணப்படும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் சுவிசேஷ உழியத்திலும், திருச்சபை நிறுவுவதிலும் அவருக்குள்ள இறையாண்மையை தெளிவாக விளக்கின்றன:  “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளை யும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர் களுக்கு -ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமேன்.”

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s