சபையில் பெண்கள் முக்காடிட வேண்டுமா?

சமீபத்தில் என் கையில் கிடைத்த ஒரு கிறிஸ்தவ பத்திரிகையில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் ஒரு ஆக்கம் வந்திருந்தது. 1 கொரிந்தியர் 11:5ம் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு சபையில் பெண்கள் முக்காடிட்டு ஆராதனை செய்ய வேண்டும் என்பதை ஆதரித்து அந்த ஆக்கம் எழுதப்பட்டிருந்தது. அந்த ஆக்கத்தை ஆர்வத்தோடு முழுமையாக வாசித்தபொழுது அதை எழுதியவர் எங்குமே 1 கொரிந்தியர் 11:5க்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை என்பதைக் கவனித்தேன். நமது மக்கள் கிறிஸ்தவ வேதத்தின் அடிப்படையில் ஒரு காரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்று நாம் வற்புறுத்துவதானால் அவர்கள் அந்தக் காரியத்தைப் பின்பற்றும்படி வலியுறுத்தும் ஆரோக்கியமான வேதவிளக்கங்களை அவர்கள் முன்பு வைப்பதற்கு முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமது இனத்தைப் பிடித்திருக்கும் ஒரு வியாதியே எந்தவொரு விஷயத்தையும் வேத அடிப்படையில் இல்லாது பாரம்பரியத்தின் அடிப்படையிலும், பண்பாட்டின் அடிப்படையிலும் நமது மக்கள் மேல் திணிப்பதுதான். அது முழுத்தவறு. வேத ஆதாரமில்லாத எந்தக் காரியத்தையும் எந்தக் கிறிஸ்தவ சபையும், போதகரும், தனி மனிதனும் சொன்னாலும் நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

இரண்டாவதாக, ஆக்கத்தை எழுதியவர் பெண்கள் சபையில் முக்காடிட்டு ஆராதிப்பதைப் பண்பாட்டை மட்டும் காரணம் காட்டி வலியுறுத்தியிருந்தார். அதாவது, அப்படிச் செய்தால் அவர்கள் அழகாகவும், அடக்கமாகவும், மரியாதையோடும், ஆண்களுக்கு முன் நாணத் தோடும் இருப்பதற்கு அது உதவும் என்று காரணம் காட்டியிருந்தார். ஆணாதிக்கம் அதிகமாகவும், பெண்கள் அடக்கியாளப்பட்டும் இருந்த ஒரு சமுதாயத்தில் கிறிஸ்தவம் பரவியபோது பெண்களுக்கு மரியாதை தரும் வழக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் பாதிப்பு ஏற்பட்டு பெண் கள் தங்கள் நிலைமையை மறந்து ஆண்களுக்கு சமமாக நடந்துவிடாமல் இருக்கவும், ஆண்களுக்கு முன் அவர்கள் நாணத்தோடு நடந்துகொள்ள வும் உதவுமுகமாக முக்காடிடும் வழக்கத்தை பவுல் ஏற்படுத்தியதாகவும் ஆக்கத்தை எழுதியவர் விளக்கியிருந்தார். அதுவும் முழுத்தவறு. ஏனெனில், சபைப் பெண்கள் ஆராதனை வேளையில் பின்பற்ற வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்ற, கர்த்தரின் ஆராதனையோடு தொடர்புடைய ஒரு காரியத்தை பண்பாட்டின் அடிப்படையில் செய்யும்படி வற்புறுத்துவதற்கு எந்தச் சபைக்கோ, தனிமனிதனுக்கொ அதிகார மில்லை. அதை வேதம் எதிர்க்கிறது. பண்பாட்டை மட்டும் அடிப்படை யாக வைத்து கிறிஸ்தவர்கள் ஒரு காரியத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பவுல் எந்த இடத்திலும் வலியுறுத்துவதை நாம் புதிய ஏற்பாட் டில் வாசிப்பதில்லை.

அப்படியானால் பெண்கள் சபைகளில் முக்காடிட்டு ஆராதனை செய்ய வேண்டுமா, என்ற கேள்வியை நாம் எவ்வாறு அணுக வேண்டும்? முதலில், அத்தகைய நடைமுறையைப் போதிக்கின்ற வேதப்பகுதிகள் இருக்கின்றனவா என்பதைத் தேடிப்பார்த்து, அந்தப் பகுதிகளில் என்ன விளக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஆராய்வது அவசியம். எந்தவொரு வேதப்பகுதியையும் அதற்குரிய வரலாறு, மொழியியல், இலக்கண அடிப்படையில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பது வேதவிதி. இந்த விதியை மீறி எந்தவேதப்பகுதிக்கும் விளக்கம் தர முயல்வது நீச்சல் தெரியாதவன் ஆற்றைக் கடக்க முயல்வது போன்றதில் போய் முடியும். இந்தவிதமாக வேதத்தைப் படித்துப் புரிந்து கொள்ளுவதை சிலர் ஆவிக்குரிய பார்வையில்லை என்று ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். வரலாறு, மொழியியல், இலக்கண அடிப்படையில் வேதத்தைப் படிக்கத் தெரியாதவர்களுக்கே ஆவிக்குரிய பார்வை இருக்காது. ஏனெனில் வேதத்தை நமக்குத் தந்திருக்கும் வரலாற்றின் தேவன் அதை வரலாறு, மொழி, இலக்கண அமைப்போடேயே தந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் ஆவிக்குரிய போதனையை நாம் வேதத்திலிருந்து பெற்றுக் கொள்ளுவதானால் இந்த அடிப்படையிலேலே படித்து அறிந்து கொள்ள வேண்டும். இன்று ஊழியம் செய்பவர்களில் பலருக்கு இந்த அறிவெதுவும் இல்லாமலிருப்பதால்தான் வேதத்தை “சிதம்பர இரகசியம்” போன்றதாக்கி ஆத்துமாக்களை இருட்டில் வைத்திருக்கிறார்கள்.

பெண்கள் சபையில் முக்காடிட்டு ஆராதனை செய்ய வேண்டும் என்ற போதனையைத் தருவதுபோல் தோற்றமளிக்கும் புதிய ஏற்பாட்டிலிருக்கும் ஒரே பகுதி 1 கொரிந்தியர் 11 மட்டும்தான். இதை வாசிக்கும் போதே நமக்கு முதலில் ஒன்று விளங்க வேண்டும். எப்போதும் ஒரு வசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு நாம் பின்பற்றும்படியான ஒரு போதனையை வேதத்தில் இருந்து உருவாக்கக்கூடாது. பல வேதப் பகுதிகளாலும், பல வசனங்களாலும் நிரூபிக்கப்படுகின்ற ஒரு போதனையே வலிமைமிக்கது என்பது வேதவிதி. இது மனிதன் ஏற்படுத்திய விதியல்ல; கர்த்தரின் வார்த்தை சுட்டிக்காட்டும் விதி.

அடுத்ததாக, இந்த வேதப்பகுதி ஏனைய வேதப்பகுதிகளைப் போல விளங்கிக் கொள்ளுவதற்கு இலகுவானதல்ல என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அவ்வாறான நிலையில் இந்தப் பகுதியை நாம் கவனத்தோடு அனுக வேண்டும். 1 கொரிந்தியர் 11ம் அதிகாரம் 1-16 வசனங்களும் கர்த்தர் சமுதாயத்தில் ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்கள் எந்த நிலையில் இருந்து பணிபுரிய வேண்டும் என்ற நியமித்திருக்கிறார் என்பதை விளக்குகின்றது. அதுவே இந்தப் பகுதியின் பிரதான போதனை. ஆணுக்கு தலைமைத்துவத்தை தந்து ஆணோடு இணைந்து அவனுக்கு அடங்கி பெண் நடந்துகொள்ள வேண்டுமென்று கர்த்தர் ஆணையும், பெண்ணையும் நியமித்திருக்கிறார். இதுவே இந்தப் பகுதியின் பிரதான போதனை (1 கொரி. 3). இந்த வேதப்பகுதியின் ஏனைய வசனங்கள் இந்தப் பிரதானப் போதனையை மேலும் விளக்குவதற்காகத் தரப்பட்ட நடைமுறை உதாரணங்களாக விளங்குகின்றன. தரப்பட்டிருக்கின்ற உதாரணங்களைப் பிரதான போதனையின் அடிப்படையில் மட்டுமே நாம் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். இங்கே தரப்பட்டிருக்கின்ற நடைமுறை உதாரணம் ஆணும், பெண்ணும் இணைந்து காணப்படுகின்ற இடங்களில் அவர்கள் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை விளக்குவதாக உள்ளது. 4ம் வசனத்தில் ஆணும், பெண்ணும் கூடிவருகின்ற இடங்களில் பெண் தன் தலையை “மூடிக்கொள்ள வேண்டும்” என்று இருக்கிறது. அதற்கு அடுத்த 6ம் வசனம் அவர்கள் “முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்” என்கிறது. அதே வசனம் தொடர்ந்து அப்படி முக்காடிட்டுக் கொள்ளா விட்டால் “தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள்” என்கிறது. இந்த வசனங்களை முதலாம் வசனத்திலிருந்து 16ம் வசனம் வரை மீண்டும் தொடர்ந்து வாசித்துப் பார்த்தால் இப்பகுதியில் குறிப் பிடப்பட்டுள்ள மூன்று வாசகங்களான “மூடிக்கொள்ள வேண்டும்”, “முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்”, “தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்” ஆகியவற்றிற்கிடையில் பெருந்தொடர்பிருப்பதை உணர வேண்டும். அதாவது, இவை மூன்று வித்தியாசமான காரியங்களை விளக்காமல் ஒரே காரியத்தை விளக்குவதாக இருக்கின்றன. முக்காடிடுவதற்கும், மூடிக்கொள்வதற்கும், தலைமயிருக்கும் தொடர்பிருக்கின்றன. இதை விளங்கிக் கொண்டால் மட்டுமே இந்தப் பகுதியைப் புரிந்துகொள்ள முடியும். அது என்ன தொடர்பு? இப்பகுதியில் பவுல், பெண்களுக்கு கர்த்தர் இயற்கையாகக் கொடுத்திருக்கின்ற நீளமான தலைமயிரையே “முக்காடு” என்று விளக்குகிறார். இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் 6ம் வசனத்தை விளங்கிக் கொள்ள முடியாது. 15ம் வசனம் இதை சந்தேகமில்லாமல் விளக்குகிறது – “தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது”.

ஆகவே, ஆணிலிருந்து வேறுபடுத்தி நீளமான மயிருடன் பெண்ணைக் கர்த்தர் படைத்து, அவள் ஆணைவிட வித்தியாசமானவள் என்பதை உணர்த்தி, ஆணும் பெண்ணுமாக மனிதர்கள் கூடிவருகின்ற இடங்களில் பெண் தன் நீளமான தலைமயிரை கவனமாக வாரிச்சீவி முடித்து ஆண்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்கிறார் பவுல். ஆண்கள் தலைமைத்துவத்தைப் பெற்றிருப்பதால் (3, 7, 9) அவர்களுக்கு இந்த விதமான “முக்காடு” தேவையில்லை. அப்படி ஆண் தன் மயிரைப் பெண்ணைப் போல வளர்த்துக் கொள்வது அவனுக்கு அழகல்ல; அப்படிச் செய்தால் அவன் தன்னையே அவமானப்படுத்திக் கொள்கிறவனாகிறான் (14). ஆகவே, இந்தப் பகுதியில் முக்காடு என்பது பெண்களின் சேலைத் தலைப்பையோ அல்லது கைக்குட்டையையோ குறிக்கவில்லை. அது பெண்களுக்கு கர்த்தர் இயற்கையாகக் கொடுத்திருக்கும் நீளமான மயிரையே குறிக்கின்றது. அதுவே அவளுக்கு முக்காடு. பெண் தலைவிரிகோலமாக இருப்பதும், தலைமயிரை ஆண்க ளுடையதைப் போலக் கத்தரித்துக்கொள்ளுவதுமே அலங்கோலமானதும், ஆண்களையும், ஏன், கர்த்தரையும் அவமதிக்கின்ற செயல்களாகும்.

அடுத்ததாக, பெண்கள் தங்கள் நீளமான மயிரை முக்காடாகக் கருதி ஆண்களின் தலைமைத்துவத்திற்கு மதிப்பளித்து எங்கே நடந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்விக்குப் பதில் அவசியம். இதற்குப் பதிலளிக்கும் போது இந்தப் பகுதி பற்றிய ஒரு முக்கிய அம்சத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது. (1) இந்தப் பகுதி சபை ஆராதனை தவிர்ந்த அனைத்துப் பொதுவான இடங்களைக் குறித்துப் பேசுவதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். 17ம் வசனத்திலிருந்தே பவுல் சபை கூடி வரும்போது நடக்க வேண்டிய காரியங்களைக்குறித்துப் பேச ஆரம்பிக்கிறார் (“நீங்கள் கூடிவருதல்” என்பது சபை கூடிவருதலைக் குறிக்கும் பதமாகும்.) அப்படியானால் சபை ஆராதனை வேளையில் பெண்கள் ஆண்களை மதித்து நடக்க வேண்டியதில்லையா? என்ற கேள்வி எழும். நிச்சயம் மதித்து நடக்கத்தான் வேண்டும். எல்லா இடங்களிலும் ஆண்களை மதித்து நடக்க வேண்டும். ஆனால், 1 கொரி. 11:4, 5, 13 ஆகிய வசனங்கள் முக்கியமாக சபை ஆராதனை தவிர்ந்த இடங்களில் பெண்கள் ஆவிக்குரிய கிரியைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன. ஏனெனில், 5ம் வசனத்திலும், 13ம் வசனத்திலும் பவுல் பெண்கள் ஜெபிக்கும்போது என்று கூறுவதைப் பார்க்கிறோம். அதே அப்போஸ்தலன் 1 கொரி. 14ம் அதிகாரத்தில் பெண்கள் சபை ஆராதனை வேளையில் ஜெபிப்பதற்கும் பேசுவதற்கும் அனுமதி தரவில்லை. இதை விளக்கும் சிலர் பவுல் முரண்பாடாகப் பேசுவதாகக் கூறுவார்கள். இது பவுலு டைய வார்த்தைகள் மட்டுமல்ல, பரிசுத்த ஆவியினுடைய வார்த்தை களுமாகும். ஆகவே, முரண்பாடு பவுலின் வார்த்தைகளிலல்ல. நாம்தான் இந்த இருவேறு சந்தர்ப்பங்கள் யாவை என்பதை ஆராய்ந்து பார்த்து விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே, இந்த இடத்தில் “பெண்கள் ஜெபிக்கும்போது” என்று பவுல் குறிப்பிடுவது சபை ஆராதனை தவிர்ந்த ஏனைய இடங்களான பெண்கள் ஜெபக்கூட்டம், குடும்ப ஆராதனை போன்ற இடங்களாகும். சபை ஆராதனை வேளைகளில் ஆண்களை மதித்து நடந்து பெண்கள் சபையில் பேசவோ, ஜெபிக்கவோ முயலக் கூடாது. சபைக்கு வெளியில் ஆண்களை மதித்து நடந்து பெண்கள் அடக்கத்துடன் ஜெபிக்கலாம், பேசலாம்.

நாம் இதுவரை பார்த்ததிலிருந்து பெற்றுக் கொண்டுள்ள உண்மைகளைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்:

(1) பெண்கள் எந்த இடத்திலும் படைப்பில் கர்த்தர் தங்களுக்கு விதித்திருக்கும் நிலமையை மீறி நடந்துகொள்ளக் கூடாது.

(2) பெண்கள் சபை ஆராதனைவேளைகளில் ஆண்களை மதித்து அமைதலுடன் நடந்து அங்கு ஜெபிக்கவோ, அதிகாரத்துடன் பேசவோ கூடாது.

(3) பெண்கள் சபை ஆராதனை தவிர்ந்த இடங்களில் ஆண்களை மதித்து அடக்கத்துடன் நடந்து ஜெபிக்கவும், பேசவும் முடியும்.

(4) இந்த இடங்களிலெல்லாம் பெண்கள் தங்களுக்கு இயற்கையாக கர்த்தர் அளித்திருக்கும் முக்காடான தலைமயிரை வாறிச் சீவிப்பிண்ணி பெண்ணைப் போலத்தொற்றமளித்து சக ஆண்களை மதித்து அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

முக்காடு அவசியமா?

அப்படியானால் பெண்கள் ஆராதனை வேளைகளில் முக்காடணிவது அவசியமா? நாம் ஏற்கனவே இந்தப் பகுதியில் பார்த்தபடி முக்காடு என்பது பெண்களுக்கு இயற்கையாக கொடுக்கப்பட்டிருக்கின்ற நீளமான மயிரைக் குறிக்கிறது (15). ஆகவே, பெண்கள் தங்கள் தலைமயிரை வாறிச் சீவி முடித்து சபையில் இருப்பது அவர்கள் ஆண்களை மதித்து நடந்து முக்காடிட்டிருப்பதற்கு சமம். 1 கொரிந்தியர் 11:1-16 வரையிலான பகுதி சேலைத் தலைப்பையோ அல்லது கைக்குட்டையையோ முக்காடாகக் குறிக்கவில்லை. சேலைத் தலைப்பால் தலையை மூடிக்கொள்ளும்படி கர்த்தர் இப்பகுதியில் கட்டளையிடவில்லை.

சேலைத் தலைப்பால் முக்காடிடுவதை விட்டுவிட்டால் பெண்கள் மத்தியில் ஒழுக்கம் குன்றிவிடுமே? என்று கேட்கலாம். இன்று பெண் களின் நடையுடை பாவனைகள் மோசமாகப் போய்க் கொண்டிருப்பதால் இதையும் விட்டுவிட்டால் அவர்கள் மேலும் சிரழிந்து விடுவார்கள் என்று வாதிடலாம். வெறும் சேலைத்தலைப்பும், நீளமான வெள்ளைத்துணியும் பெண்களின் நடத்தையை ஒழுக்கமுள்ளதாக்கி விடாது. அப்படியானால் நமது ஒழுக்கத்தைப் பாதுகாக்க கர்த்தர் எத்தனையோ புறசாதனங்களை மட்டும் ஏற்படுத்தியிருப்பார். வெறும் சேலைத தலைப்பால் பெண்களின் புற ஒழுக்கத்தை மட்டும் சரி செய்யப் பார்ப்பது சரியல்ல; அவர்களுடைய அகத்தில் அடங்கியிருக்கும் பாவங்களை சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் சரிசெய்யப் பார்க்க வேண்டும். பெண் கள் தங்களுடைய நீளமான தலைமயிரை முக்காடாகப் பயன்படுத்தும்படிக் கர்த்தர் கூறியது அவர்கள் தாங்கள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்து ஆண்களின் பணிகளைச் செய்ய ஆரம் பித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

பவுல் சொன்னார் என்பதற்காக அல்லாமல் நமது பண்பாட்டைப் பாதுகாக்க ஒரு காரியம் ஆரோக்கியமானதாக இருக்குமானால் அதைச் செய்வதில் என்ன தவறு? என்று நாம் மேலே பார்த்த பத்திரிகை ஆசிரியர் கேட்கிறார். உண்மையில் பவுல் அப்படிச் சொல்லியிருந்தால் செய்யத்தான் வேண்டும். ஆனால், பவுல் அப்படிச் சொல்லவில்லை என்பதை ஏற்கனவே விளக்கிவிட்டேன். அடுத்ததாக, பண்பாட்டின் பெயரில் ஆரோக்கியமான எந்தக் காரியத்தையும் தனியொரு நபர் பின்பற்றுவதில் தவறில்லை. ஒரு பெண் பண்பாட்டின் பெயரில் தன்னுடைய தலையை சேலைத் தலைப்பால் மூடிக்கொள்ளுவதில் தவறில்லை. இங்கு பிரச்சனை தனியொரு நபர் தனக்குப் பிடித்ததை செய்யலாமா? செய்யக்கூடாதா? என்பதல்ல. கிறிஸ்தவர்களை நாம் கர்த்தருடைய வார்த்தை எதிர்பார்க்காத எந்தக் காரியத்தையும் செய்ய வற்புறுத்தலாமா? கூடாதா? என்பதுதான். கர்த்தருடைய வார்த்தை செய்யச் சொல்லாத எந்தக் காரியத்தையும் அவை ஆரோக்கியமானதாக இருந்தாலும் மற்றவர்கள் பின்பற்றும்படி நாம் கட்டளையிட முடியாது. ஆகவே, சேலைத் தலைப்பை முக்காடாக்கியது பண்பாடே தவிர கர்த்தரல்ல.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s