சாம்பார் இறையியல் ஊழியம்

இதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? தொடர்ந்து வாசித்தால் இது என்ன என்பது உங்களுக்குப் புரியும். சாம்பரைத் தெரியாத, ருசித்திராத தமிழர்கள் இருக்க முடியாது. அது நம்முடைய உணவின் முக்கிய அம்சம். சாம்பாரின் மகிமையே அதில் பலவிதமான காய்கறி வகைகளும் சேர்ந்திருப்பதுதான். முருங்கக்காய், கத்தரிக்காய் என்று அதில் எந்தக் காயையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படிப் பலவிதமான காய்கறிகளையும் சேர்த்துத் தயாரிப்பதுதான் சாம்பார். அப்படி இல்லாததற்குப் பெயர் சாம்பாராயிருக்காது.

இப்படிப் பல்வேறு காய்கறி வகைகளும் இணைந்து சாம்பார் இருக்க லாம். அதை நாம் சுவைத்து மகிழலாம். ஆனால், இந்த சாம்பார் ரெசிப்பியை (Recipe) ஆத்மீகக் காரியத்துக்கு நாம் ஒருபோதும் பயன்படுத்த முடியாது. அது பொருந்திவராது. இதை அனேகர் அறியாதிருக்கிறார்கள். நமக்கு சாம்பார் பிடிக்கிறது; சாம்பார் இறையியல் பிடிக்கவில்லை. இன்றை க்கு தமிழினத்தின் இறையியல் சாம்பாராய்த்தான் இருக்கிறது. அதாவது ஒருவிஷயத்தைப் பற்றி ஏறுக்குமாறானதும், ஒத்துப் போயும், போகாமலு மிருக்கும் சகலவிதமான போதனைகளும் கலந்தே எல்லா இடங்களிலும் போதிக்கப்படுகின்றன; பின்பற்றப்படுகின்றன. அந்தவிதமாகவே ஆத்துமாக் களும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிறார்கள். ஒரு ஆத்மீகப் போதனைக்கு ஒரு விளக்கம் மட்டுமே உண்டு என்பதை நம்மினத்து ஆத்துமாக்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது. சாம்பாரையே சாப்பிட்டுப் பழகிப்போய் தனிக்காய்கறிக்கூட்டு பிடிக்காமல் போன மனிதனைப் போல அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

நம்மைப் பற்றி சிறிது தெரிந்து வைத்திருக்கிற சிலர் “இவர்கள் குறுகிய ஒரு போக்கில் (Narrow path) போகிறார்கள்” என்று சொல்லுவது வழக்கம். அதாவது, “இவர்கள் எல்லோரோடும் இணைந்து போவதில்லை, எல்லாப் போதனைகளோடும் பொருந்திப் போவதில்லை” என்பார்கள். இவர்கள் சொல்லுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இவர்கள் நம் மைப் பற்றிய முழு உண்மையையும் தெரிவிப்பதில்லை அவற்றைப் புரிந்து கொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை.

முதலில் இவர்கள் நம்மைப் பற்றி எதைச் சொல்லவில்லை என்பதைப் பார்ப்போம். நாம் வரையறுக்கப்பட்ட வேதசத்தியங்களை விசுவாசிக்கி றோம் என்பதையும், அவற்றிற்கு கட்டுப்பட்டு நடப்பதால் கலப்படப் போதனை வியாபாரம் செய்பவர்களோடு எம்மால் பொருந்திப் போகமுடியாமல் இருக்கிறது என்பதையும் இவர்கள் சொல்லமாட்டார்கள். சத்தியத்தை நாம் பலகோணங்களில் பார்க்க மறுக்கிறோம் என்பதையும், அதனால் சத்தியத்துக்கு விரோதமாகப்படுகிற எதற்கும் தலைசாய்க்க மறுத்து அவற்றை அரவணைத்துப் போவதை அடியோடு வெறுக்கிறோம் என்ற உண்மையையும் இவர்கள் மறைத்துவிடுகிறார்கள். சொல்ல வேண்டியதை விட்டுவிட்டு நாம் குறுகியபோக்கு கொண்டவர்கள், ‘எக்ஸ்டிரீம்’ ஆகப்போகிறோம் என்று சொல்லி தங்களுடைய சாம்பார் இறையியல் ஊழியப் போக்கை நியாயப் படுத்திக் கொள்கிறார்கள்.

சாம்பார் இறையியல்

இந்த சாம்பார் இறையியல் ஊழியம் எப்படிப்பட்டது? இது ஏன் ஆபத்தானது? என்பதை நான் விளக்கத்தான் வேண்டும். இந்த வழியில் போகிறவர்கள் குறைந்தபட்ச வேத சத்தியங்களை மட்டுமே அடிப்படை சத்தியங்களாக விசுவாசிக்கிறார்கள். அதாவது கர்த்தர் ஒருவர், கிறிஸ்து தேவன், இரட்சிப்பு அவருடையது, பாவிகள் மனந்திரும்ப வேண்டும், விசுவாசிகள் பரிசுத்தமாக வாழ வேண்டும், கிறிஸ்து மீண்டும் வருவார் என்ற சத்தியங்களை இவர்கள் அடிப்படை சத்தியங்களாக ஏற்று, இவற்றை எவரும் மீற முடியாது என்று கூறி, இவற்றை விசுவாசிக்கின்ற எவராயிருந்தாலும் சரி, அவர்களோடு கூட்டுவைத்துக் கொள்வார்கள். அவர்களோடு இணைந்து உழைப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் அடிப்படை சத்தியங்களாகக் கருதுகிற இந்தக் குறைந்தபட்ச சத்தியங்கள் மட்டுமே இவர்களைப் பொறுத்தவரையில் எந்தக் கூட்டுக்கும் அவசியமானது. ஏனைய வேத போதனைகளை எவரும் வற்புறுத்தக்கூடாது; கிறிஸ்தவ ஒற்றுமைக்கு அவற்றை அவசியமாகக் கருதக்கூடாது என்று இவர்கள் சொல்லுவார்கள்.

இந்த அடிப்படையில் இவர்களுக்கு எந்த ஸ்தாபனங்களோடும் சேர்ந்து உழைப்பது கசக்காது. பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கத்தாரோடு இணைந்துழைப்பது இனிக்கும், சமயசமரசத்தைப் பின்பற்றும் லிபரல் பாரம்பரிய சபைக்கூட்டும் பிடிக்கும். இறையியலைப் பொறுத்தவரையிலும் இயேசுவைப் பிரசங்கித்தால் போதும் ஏனைய சத்தியங்களை அவரவர் விருப்பப்படி பின்பற்றிக் கொள்ளலாம். மற்றவர்கள் மேல் திணிக்காமல் இருந்தால் சரி என்பது இவர்களுடைய நம்பிக்கையாக இருக்கும். இந்த முறையில் இவர்கள் சீர்திருத்தப் போதனைகளில்கூட சிலவற்றை ஏற்றுக்கொண்டு ஏனையவற்றை உடப்பில் போட்டுவிடுவார்கள். இந்தப் போக்கினால்தான் இன்றைக்கு புதிதாக சீர்திருத்தப் போதனைகளைப் பின்பற்றுகிறோம் என்று தமிழினத்தில் தோன்றியிருக்கிற சில சபைகளும் கூட ஸ்தாபனங்களோடு எந்தப் பிரச்சனையுமில்லாமல் கூட்டுச் சேருவது மட்டுமல்லாமல் ஸ்தாபன பக்தர்களை தங்கள் சபைகளிலும் பேசவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா? கெரிஸ்மெட்டிக் ஆராதனை வழி முறைகளையும் சபை ஆராதனையில் அனுமதிக்கிறார்கள். பெண்கள் சபை களில் பேசுவதற்கும், ஜெபிப்பதற்கும், அறிக்கைகள் வாசிப்பதற்கும், உதவிக்காரர்களாக இருப்பதற்கும் அனுமதிக்கிறார்கள். குறைந்தபட்ச சத்திய ஆர்வமே இவர்களை இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. ஒரே சபையில் ஆர்மீனியனும், டிஸ்பென்சேஷனலிசத்தைப் பின்பற்றுகிறவரும், சீர்திருத்த போதனைகளை நம்புகிறவரும், ஸ்தாபன ஊழிய பக்தரும் பல சபைகளில் ஆருயிர் தோழர்கள் போல் வாழமுடிவதற்குக் காரணம் இந்தக் குறைந்தபட்ச சத்தியப் பிடிப்பே. இன்று இந்த முறையில் செயல்படுவது மட்டுமே மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமை, இதையே வேதம் போதிக்கின்றது என்றுகூட இவர்கள் பறைசாற்றத் தயாராக இருக்கிறார்கள். யார் எங்கு பேச அழைத் தாலும் இவர்கள் அங்கே போகத்தயாராக இருப்பார்கள். குறைந்தபட்ச சத்தியம் மட்டும் போதும் என்பது இவர்களுடைய கொள்கையானபடி யால் எவரோடும் இவர்களால் இலகுவாக இணைந்துகொள்ள முடிகிறது. ஏற்கனவே குழம்பிப்போய் ஐம்பது ஆண்டுகால சத்திய வரட்சியில் வாடி நிற்கும் நம்மினம் மேலும் குழப்பத்துக்குள்ளாகி இன்று வழி தெரியாது நிற்பதற்கு இவர்கள் காரணமாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இந்தப் போக்கு சத்தியத்தின் பாதையல்ல, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் கைங்கரியமாகும்.

இந்தப்போக்கு தவறானது; சத்தியத்துக்கு விரோதமானது என்பதை நம்மால் விளக்காமல் இருக்க முடியாது. நமது பாதையையும், சத்திய வேட்கையையும் புரிந்துகொள்ள முயலாமல் நம்மைக் குறுகிய போக்குக் கொண்டவர்கள் என்று பெயர் சூட்டுகிறவர்களுக்கு நமது பாதையென்ன என்பதை விளக்காமல் இருக்க முடியாது. இதை வாசிக்கிற விசுவாசிகளும் எமது சத்திய வேட்கையைப் புரிந்துகொண்டு அந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது வாஞ்சை.

சத்தியத்துக்குப் பலகோணங்கள் இல்லை

முதலில் நாம் சத்தியத்தைப் பலகோணங்கள் கொண்ட ஒரு இரத்தினக் கல்லாகப் பார்ப்பதில்லை. பட்டைதீட்டப்பட்ட ஒரு இரத்தினக்கல்லை எடுத்து வெளிச்சத்தில் பார்த்தால் அதை இப்படியும் அப்படியுமாகத் திருப்புகிறபோது அதில் பல வர்ணங்களைப் பார்க்கலாம். ஒரே கல்லில் அத்தனை வர்ணங்களும் தெரியும். ஒளி கல்லில் எப்படி, எந்த இடத்தில் படுகிறதோ அதற்கேற்றபடி கல்லில் நிறங்கள் தெரியும். இது இரத்தினக் கல்லைப் பொறுத்தவரையில் சரியானதுதான். இந்தமுறையில் வேதத்தில் சத்தியத்தை நாம் பார்ப்பதில்லை. வேதபோதனைகளை எந்தப் பக்கத்தில் வைத்து, எப்படித் திருப்பிப் பார்த்தாலும் அதில் ஒரு நிறம் மட்டுமே தெரியும். அங்கே பலவர்ண விளையாட்டுக்கு இடமில்லை. கர்த்தர் ஆறு நாட்களில் உலகத் தைப் படைத்தார் என்றால் செத்தவன் பிழைத்து எழுந்தாலும் அது மட் டுமே சத்தியம். இந்த சபைக்கு இது பிடிக்காது, அந்த ஸ்தாபனத்துக்கு அது ஒத்துவராது, சபையில் சிலருக்கு அதில் ஏற்பு இல்லை என்பதற்காக ஆறு நாட்களை ஐந்து மில்லியன் வருடங்களாக்கும் வித்தை எங்களுக்குத் தெரியாது. இரட்சிப்பு கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்று வேதம் போதித்தால் அது பிடிக்காதவர்களுக்கு ஏற்ற விதத்தில் அதை சபையில் பிரசங்கிக்கத் தயங்கும் கூட்டத்தில் எங்களுக்கு இடமிருக்காது. உணர்ச்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் சபையில் துடிக்க விரும்பும் ஆத்துமாக்களை தாஜா செய்து வைத்திருக்க வேண் டும் என்ற நோக்கத்தில் வேத ஆராதனை விதிகளைக் குழிதோண்டிப் புதைத்துவி¢ட்டு ஆடலுக்கும், பாடலுக்கும் இடம் கொடுக்கும் இருதயம் நமக்கில்லை. மொத்தத்தில் இழுக்கிறவர்கள் பக்கமெல்லாம் இழுபடும் சாம்பார் இறையியலுக்கு எங்கள் அகராதியில் இடமில்லை.

எமக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும் இருக்கிறது. சீர்திருத்தப் பெரியவர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள விசுவாச அறிக்கையையும், வினாவிடைப்போதனையையும் எந்தவித சந்தேகமோ, குற்ற உணர்வோ இல்லாமல் வேத சத்தியங்களாக உள்ளதை உள்ளவாறே நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது காலத்துக்குப் பொருந¢தாது; மாற்றி எழுதப்பட வேண்டும் என்ற மயக்கமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. முன்னூற்று ஐம்பது வருடங்களாக தொடர்ந்து அச்சில் இருந்து பல தேசங்களில் உள்ள சபைகளால் பின்பற்றப்பட்டு வரும் அந்தப் போதனைகளைக் கர்த்தரே எமது பெரியோர் மூலம் எமக்குத் தந்திருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். பத்துக் கட்டளைகளை இன்று நித்திய கட்டளைகளாக நாம் பின்பற்றத் தேவையில்லை என்போரும், ஓய்வுநாளை ஓரங்கட்டிவிட்டு ஒழுங்கில்லாமல் வாழ நினைப்போரும், வரையறுக்கப்பட்ட வேத ஆரா தனை விதிகளை வெறுப்பவர்களும் அதில் கைவைத்து சில பகுதிகளை மாற்றி அமைக்க முயல்வதை நாம் நிர்த்தாட்சிணியமாக எதிர்க்கிறோம். மனிதனுடைய சிந்தனைகளையும், எழுத்துக்களையும் வேண்டுமானால் மாற்றி அமைக்கலாம் கர்த்தரின் வேதபோதனைகளில் எவரும் கைவைப் பதை எம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது. அந்த வித்தையில் கைதேர்ந்தவர்களோடு எங்களுக்கு சகவாசம் இருக்காது.

எல்லோரோடும் நாம் ஒத்துப் போவதில்லை என்பது உண்மைதான். அதை மறுக்கிற அளவுக்கு நாம் நெஞ்சுரம் இல்லாதவர்களில்லை. சத்தியத்தைப் பலகோணங்களில் பார்க்கிறவர்களோடும், தேவனுடைய திருச்சபை ஊழியத்தில் அக்கறையில்லாது சபைக்கு வெளியில் ஸ்தாபன ஊழியம் நடத்தி வருபவர்களோடும், பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கத்தோடும் நாம் ஒத்துழைப்பதில்லைதான். அதற்கு இறையியல் காரணங்கள் இருக்கின்றன. நாம் அடிப்படையான சத்தியங்கள் என்று விசுவாசிக்கின்ற வேத சத்தியங்களை இவர்கள் புரட்டிப்போதித்து ஊழியம் செய்துவருவதால் அவர்களோடு எம்மால் சமபந்தி இருக்க முடிவதில்லை. சாம்பார் இறையியல் கடை நடத்தி வருபவர்களையும், சமய சமரச இறையியல் கல்லூரிகளையும் நாம் நிராகரிக் கிறோம். சத்தியத்தை விற்றுப் பிழைக்கும் வித்தை எங்களுக்கு தெரியாது என்பதை வெட்கமில்லாமல் கூறிக்கொள்வதில் தவறில்லை என்பதை நாம் நம்புகிறோம். இங்கிலாந்தில் போதகராக இருந்தவரும், பல நூல்களை எழுதியுள்ளருமான பீட்டர் ஜெப்ரி சொல்லுகிறார், “எல்லோரையும் திருப்திப்படுத்தி வாழ்வதே சூழ்நிலைக்குத் தகுந்தது (Politically correct) என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள், ஆனால், வேதத்தின்படி சரியானதைச் செய்வதே (Biblically correct) கிறிஸ்தவனுடைய முக்கிய பணியாக இருக்கின்றது.”

இதற்காக நாம் ஒருவரோடும் சேருவதில்லை என்று எவரும் தவறாக முடிவுகட்டிவிடக் கூடாது. ஒத்த கருத்தும், சத்திய வேட்கையும் உள்ளவர்களோடு, அவர்கள் எங்கிருந்தாலும், சத்திய வளர்ச்சியில் அவர்கள் எந்தப் படியிலிருந்தாலும் சேர்ந்து உழைப்பதிலும், இணைந்து ஐக்கியத்தில் வளர்வதிலும் நாம் அதிக அக்கறை காட்டி வருகிறோம். பெந்தகொஸ்தே, கெரிஸ் மெட்டிக் மாயையிலிருந்தும், ஸ்தாபனங்களினதும், சொந்த ஊழியங்களினதும் பிடியில் இருந்தும் விலகி கர்த்தரின் வேதத்திற்கு கட்டுப்பட்டு திருச்சபைக்குத் தம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று வருபவர்களை நாம் இருகை நீட்டி வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம். சத்தியம் எங்கெல் லாம் தலையெடுத்து வளர்கிறதோ, அசத்தியத்தைப் புறமுதுகு காட்டி ஓட வைக்கிறதோ அங்கெல்லாம் எங்கள் நிழலிருக்கும்; கால் பதியும். உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு நுனி நாக்கினால் பேசுகிறவர்களல்ல நாங்கள். எங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் இருக்கும் உறவு அறிவு பூர்வமானதும், உணர்வுபூர்வமானதுமாகும். அது இறுக்கமானது; உடைக்க முடியாதது. எங்களிடத்தில் ஊழியப் பகட்டைப் பார்க்க முடியாது. பண மோகத்தின் அடையாளம் இருக்காது. சுவிசேஷ வாஞ்சையோடு சீர்திருத்த சபைகளை அமைப்பதும், வளர்ப்பதுமே எங்கள் வாழ்க்கையின் இலக்கு.

இயேசுவின் வழியே நம் வழி

இதெல்லாம் இந்த நூற்றாண்டில் நாம் கண்டுபிடித்து பின்பற்றி வரும் புதிய ஒழுக்கங்களல்ல. விண்ணிலிருந்து அற்புதமாக இவற்றை நாம் பெற்றுக்கொண்டதுமில்லை. எமக்கு வழிகாட்டிகள் இயேசு கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும்தான். சத்தியம் விடுதலையாக்கும் என்று சொன்ன இயேசு சத்தியத்தைப் பிசாசிடம் விற்கவில்லை. சோதனைக் காலத்தின்போது சத்தியத்தின் மூலம் அவர் பிசாசை வென்றார். கூட இருந்த பேதுருகூட ஒரு தடவை உங்கள் போதனைகளை மாற்றிக்கொள் ளுங்கள் என்றபோது, வெளியே போ சாத்தானே என்றார் நம் தேவன். அவரோடு இறுதிவரை இருந்த கூட்டம் சிறியது. மிக அருகில் இருந்த சக ஊழியர்கள் பதினொருவர் மட்டுமே. பகட்டு ஊழியத்தை அவர் நாடியிருந் தால், சாம்பார் இறையியல் கடை நடத்த அவர் விரும்பியிருந்தால் இந்த உலகத்தில் ஒரு பெரிய மனிதராக அவரால் ஊர்வலம் வந்திருக்க முடியும். அந்தச் சோதனையை அவர் வாழ்நாள் முழுவதும் போராடி அதில் வெற்றி கண்டார். சமயசமரசப் போக்கு அவரில் என்றும் இருந்ததில்லை. போலிப் போதகர்களான பரிசேயரோடும், சதுசேயரோடும் அவர் இறையியல் சமரசம் பேசியதில்லை. உலகத்தை தாஜா செய்து ஊழியம் செய்ய அவர் யூதர்களோடும், ரோமரோடும் போலி உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வில்லை. ஒருவரோடும் சேரமாட்டேன் என்கிறானே, கொள்கைகளை மாற்றிக்கொண்டு எங்களோடு ஒத்துப் போகமாட்டேன் என்கிறானே என் றெல்லாம் சுற்றி இருப்பவர்கள் தூற்றியபோதும் இயேசு மசியவில்லை; முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைத்ததில்லை. இயேசு செய்ததைவிட நாம் வேறென்னத்தை செய்துகொண்டிருக்கிறோம். அவர் குறுகிய போக்கைக் (Narrow path) கொண்டிருந்தார்; அதுவே நம்வழியுமானது.

இதேவழியைத்தான் அப்போஸ்தலர்களும் பின்பற்றினார்கள். பவுலும், பேதுருவும், யோவானும் இந்த உலகத்தில் சத்தியத்தை விற்று எல்லோரோடும் ஒத்துப்போய் ஊழியம் செய்யப் புறப்படவில்லை. மனிதர்களைப் பிரியப்படுத்துகிறவன் அல்ல நான் என்று பவுல் கலாத்தியருக்கு சொன்னார். மனிதர்களைப் பிரியப்படுத்துகிறவனானால் யூதர்கள் ஏன் என்னை வெறுக்கிறார்கள்? என்று கேட்டார். சகலருக்கும் துதிபாடி தன்னை வளர்த்துக்கொள்ளும் வித்தை அவருக்குத் தெரியவில்லை. சன்பலாத்தும், தொபியாவும், கேஷேமும் கூடிவந்து எங்களோடு சேர்ந்துகொள், எல்லோரும் சேர்ந்து உழைக்கலாம் என்றபோது எனக்கு வேறு முக்கிய வேலை இருக்கிறது என்று பதிலளித்து கர்த்தரின் பணியைக் கருத்தோடு செய்த நெகேமியாவைப் போன்றவர்கள் பவுலும், ஏனைய அப்போஸ்தலர்களும்.

நண்பர்களே! இதயமில்லாதவர்களுக்கும், ஊழியத்தை வைத்து தங்களை வளர்த்துக் கொள்ளக் கிளம்பியிருப்பவர்களுக்கும் நம் போக்கு குறுகியதாகவும் எக்ஸ்ட்ரீமாகவும்தான் தெரியும். காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாய் இருப்பதுபோல். மனந்தளராமல் முன்னேறுங்கள். சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். சுவிசேஷ வாஞ்சையுடன் பாரத்தோடு உழையுங்கள். திருச்சபை மேல் கிறிஸ்து வைத்த அன்பைக் காட்டுங்கள். நம்கூட்டத்தை நேசிக்கப் பழகுங்கள். போலிகளை இனங்கண்டு கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள். இயேசு வரும்வரையும் நமக்கு வேலை இருக்கிறது. நாமிருக்கப் போகும் நாட்களும் குறைவாக இருக்கின்றன. இது பேசி வீணாக்க வேண்டிய நேரமல்ல. உழைத்துப் பலருக்கும் ஊக்கமளிக்க வேண்டிய நேரம். தேவ இராஜ்யப் பணிகள் ஏராளமாய் நம்முன் குவிந்திருக் கின்றன. ஜெபியுங்கள், கரத்தில் எடுத்த சம்மட்டியைக் கீழே போடாமல் உழையுங்கள். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; நம் பணிகளுக்கு அவர் நிச்சயம் துணை போவார்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s