(வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாகவும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறுசிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை இந்த இதழிலிருந்து வாசகர்களின் நன்மை கருதி ஆராயவிருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு இந்தப் புதிய வருடத்திற்கான இதழ்களில் விளக்கமளிப்பார்.)
வேவேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கஷ்டமான ஒரு பகுதியை சந்திக்க நேருகிறபோது ஒரு போதகனோ அல்லது வேதமாணாக்கனோ என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்வியோடு இந்த இதழில் இருந்து வேதத்தில் சிக்கலானதாகக் காணப்படும் வேதப்பகுதிகளை நாம் ஆராயப் போகிறோம். கர்த்தரால் வெளிப்படுத்தப்படாத, நம்மால் புரிந்துகொள்ள முடியாத சில விஷயங்கள் வேதத்தில் உள்ளன. அதே வேளை, படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய கடினமான பகுதிகளும் வேதத் தில் உள்ளன. அவ்வாறு விளங்கிக்கொள்ளக் கடினமானதாகத் தோன்றும் பகுதிகளை கர்த்தரின் துணையோடு ஆராய்வதே நம்நோக்கம்.
வேதம் பற்றிய சில முக்கிய உண்மைகள்
வேதம் மனிதர்களால் எழுதப்பட்ட ஏனைய நூல்களைப் போன்றதல்ல. பவுல் அப்போஸ்தலன் வேதம் கர்த்தரின் ஆவியால் அருளப்பட்டது என்று கூறுகிறார். அதாவது, கர்த்தரின் ஆவியால் ஊதப்பட்டது (God-breathed) என்கிறார் (2 தீமோ. 3:16-17). வேதத்தை நாம் படிக்க முயல்கின்றபோது அதில் குறைகண்டு பிடிக்கும் எண்ணத்தைக் கொண்டிராமல் தாழ்மையோடு அதைப் பயன்படுத்தி நம்மை ஆராய்ந்து பார்க்கும் எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்தையும்விடக் கூர்மையுள்ளதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக துளைக்கக்கூடியதாகவும், இருதயத்தின் சிந்தனைகளையும் மனோ பாவங்களையும் வகையறுக்கிறதாகவும் இருக்கிறது” என்கிறார் எபிரேயருக் கான நிருபத்தை எழுதியவர் (எபிரே. 4:12).
நம்மை பக்திவிருத்தியுள்ள வாழ்க்கைக்குத் தயார்செய்வதே வேதத்தின் இலக்காக இருக்கிறதேயன்றி நம்முடைய குருட்டார்வத்தின் மூலமாக எழும் கேள்விக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருப்பதல்ல. அத்தோடு, கர்த்தர் நம்மால் பூரணமாக புரிந்துகொள்ள முடியாதவராக எல்லையற்றுக் காணப் படுவதால் ஒருவரையறைக்கு உட்பட்டு சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சில காரியங்கள் எப்போதுமே இருக்கும் என்பதை உணர வேண்டும். எல்லாக் கேள்விகளுக்குமே நமக்கு பதில் தெரியவேண்டிய அவசியமில்லை. நமக்குத் தெரியவேண்டியதெல்லாம், அனைத்திற்கும் கர்த்தருக்கு பதில் தெரியுமென்பதையும், அவருடைய சித்தப்படி வாழ அவசியமானவைகளை அறிந்திருப்பதும்தான். ஏசாயா மூலம் கர்த்தர் சொல்லுகிறார், “பூமியைவிட வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைவிட என் வழிகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:9). “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” (உபாகமம் 29:29).
வேதம் பற்றியதொரு எச்சரிக்கை
வேதத்தின் சிக்கலான பகுதிகளை விளங்கிக்கொள்ள முயலுகின்றபோது நாம் தவறானவிதத்தில் அவற்றிற்கு விளக்கங்கொடுக்க முனைந்தால் அது கல்லாதவர்களையும், உறுதியில்லாதவர்களையும் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும் என்று பேதுரு கூறிய அறிவுரையை நாம் மனதில் வைத்திருப்பது அவசியம். (2 பேதுரு 3:15-16).
வேதத்தை விளங்கிக்கொள்வதற்கு அவசியமான இரு விதிகள்
முறையாக வேதத்தை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய இரண்டு முக்கிய வேதவிதிகள் உள்ளன:
முதலாவதாக, எந்தவொரு வேதவசனத்தையும் அது அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தின் அடிப்படையிலேயே (context) விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு அடிப்படை வேதவிளக்க விதியாகும். இதைப் பயன்படுத்தாவிட்டால் எந்த வேதப்பகுதியையும் நாம் தவறாகவே புரிந்துகொள்ள நேரிடும்.
இரண்டாவதாக, வேதத்தை நாம் வேதத்தோடு ஒப்பிட்டுப் படித்து ஆராய வேண்டும். (Compare Scripture with Scripture). ஒரு பகுதியில் தரப்பட்டிருக்கும் போதனையைப் பற்றி ஏனைய வேத நூல்கள் என்ன கூறுகின்றன? என்று ஆராய வேண்டும். வேதம் முழுவதுமே கர்த்தரின் வார்த்தையாக இருப்பதால் அதன் ஒரு பகுதி அளிக்கும் போதனையை இன்னொரு பகுதி நிராகரிக்காது; அதற்கு முரணான விளக்கத்தை அளிக்காது. இதன்படி ஒரு வேதப்பகுதி பற்றி நாம் கொண்டிருக்கும் விளக்கம் வேதத்தின் ஏனைய பகுதிகளில் காணப்படும் விளக்கங்களோடு ஒத்துப்போகாவிட்டால் நம்முடைய விளக்கம் தவறானது என்ற முடிவுக்கு வரவேண்டும்.
யூதாவில் காணப்படும் சிக்கலான வேதப்பகுதி
“பிரதான தூதனாகிய மீகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே வாதிட்டபோது, அவனை நிந்தனையாகக் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.” (யூதா 1:9).
இதை வாசித்தவுடனேயே மோசேயின் சரீரம் பற்றிய பிசாசின் சண்டை யைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆவல் நமக்கு ஏற்படுகிறது. ஆனால், இதைப்பற்றி அறிந்துகொள்ள பழைய ஏற்பாட்டில் எந்தப் பகுதியையாவது நாம் புரட்டிப்பார்க்க முடியுமா? முடியாது. ஏனெனில், மோசேயின் மரணம் பற்றி பழைய ஏற்பாடு நமக்கு மிகச்சுருக்கமான விளக்கத்தை மட்டுமே அளிக் கிறது. “அப்படியே கர்த்தரின் அடியானாகிய மோசே மோவாப் நாடான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் நாட்டிலுள்ள பெத்பேயாருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக் கம் பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக் குழியை அறியான்.” (உபாகமம் 34:5, 6).
யூதா 1:9ல் நாம் பார்த்த விளக்கம் யூதாவுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது யாருக்காவது தெரியுமா? சபை வரலாற்றின் ஆரம்ப காலத்தில் சிலர் யூதாவுக்கு இது அக்கால பாரம்பரியத்திலிருந்தோ அல்லது அன்றைய நூலான The Assumption of Moses-ல் இருந்தோ கிடைத்திருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால், இந்தப் புத்தகம் கர்த்தரால் அருளப்பட்ட நூலாக வேதத்தில் அறிவிக்கப்படவில்லை. தனக்கு எங்கிருந்து இந்த விளக்கம் கிடை த்ததென்று யூதாவும் சொல்லவில்லை. இதேபோல்தான் பவுல் அப்போஸ் தலனும் பின்வரும் வசனத்தில் காணப்படும் பெயர்கள் தனக்கு எங்கிருந்து கிடைத்ததென்பதை நமக்குத் தெரியப்படுத்தவில்லை. “யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற் கிறார்கள்; இவர்கள் நடத்தைகெட்ட மனிதர்கள். விசுவாச காரியத்தில் தள்ளப்பட்டவர்கள்.” (2 தீமோ. 3:8). இருந்தாலும், வேதத்தை எழுதியவர் களைப் பற்றியும் அவர்கள் எங்கிருந்து செய்திகளைப் பெற்று எழுதினார்கள் என்பதையும் பற்றி பேதுரு நமக்கு மிக அவசியமான உண்மையை வெளிப் படுத்துகிறார்: “வேதத்திலுள்ள எல்லாத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியின் சொந்த விளக்கத்தினால் உண்டானதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தீர்க்கதரிசனமானது ஒருநாளும் மனிதருடைய சித்தத்தினாலே உண் டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” (2 பேதுரு 1:20, 21). அப்போஸ்தலனான பவுலும் இதே உண்மையை வலியுறுத்திக் கூறுகிறார். “என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதருடைய திட்டத்தின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனிதரிடமிருந்து பெற்றதுமில்லை, மனிதனால் கற்பிக்கப்பட்டதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.” (கலாத்தியர் 1:11-12). அதாவது, நாம் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை கர்த்தரே வேதத்தை எழுதியவர்களுக்கு வெளிப்படுத்தி எழுத்தில் வடிக்கும்படிச் செய்தார். மோசேயைப் பற்றிய சண்டையின் விபரங்களை நாம் தெரிந்துகொள்ளுவது அத்தனை அவசியமானதாக இருந்திருந்தால் கர்த்தரே தன் வார்த்தையை எழுதியவர்கள் மூலமாக அவற்றை வெளிப்படுத்தியிருப்பார். அநாவசியமாக மோசே பற்றிய சண்டைக்கான விபரங்களை நாம் உலக நூல்களில் தேடிப்பார்க்கும் செயலை விட்டுவிட்டு வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்தி மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதென்ன என்பதை அறிந்துகொள்ள முயல வேண்டும்.
இந்தச் செய்தி அமைந்துள்ள பகுதி தரும் விளக்கம்
இந்தப்பகுதி மூலம் யூதா கர்த்தரின் பிள்ளைகளுக்கு மத்தியில் இரகசியமாக நுழைந்துவிடக்கூடிய பக்தியற்றவர்களைப்பற்றி எச்சரிக்கிறார். கர்த்தரின் சபையில் அவர்களால் தொல்லை ஏற்பட்டுவிடக்கூடாதென்பதற்காக அவர்களுடைய ஆபத்தான தீயசெயல்களை இங்கே வெளிப்படுத்துகிறார். (யூதா 1:4, 19). இத்தகைய தீயசெயல்களை தன்னுடைய மக்கள் மத்தியிலோ அல்லது உலக மக்கள் மத்தியிலோ அல்லது தேவதூதர்கள் மத்தியிலோ செய்கிற பக்தியற்றவர்களைக் கர்த்தர் எப்போதும் தண்டித் திருக்கிறார் என்றும் யூதா விளக்குகிறார். இவற்றை விளக்கிவிட்டு யூதா, தற்போது சபையை எதிர்நோக்கும் ஆபத்தை உணர்ந்து எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய பக்தியற்ற சிலரின் அடையாளங்களை விளக்க ஆரம்பிக்கிறார். “சொப்பனக்காரராகிய இவர்களும் தங்கள் சொந்த சரீரத்தைக் கறைபடுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி மாட்சிமைகளை நிந்திக்கிறார்கள்.” (யூதா 1:8). இவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக இருப்பதோடு, அதிகாரத்தை நிராகரிக்கிறவர்களாகவும், மனித அதிகாரங் களுக்கு எல்லாம் மேலான உயர் அதிகாரங்களையும் நிராகரிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்று யூதா விளக்குகிறார். இந்த சந்தர்ப்பத்திலேயே யூதா, பக்தியுள்ளவர்களாக நடந்துகொள்கிறவர்களுக்கு உதாரணமாக மீகா வேலை உதாரணங்காட்டுகிறார். மீகாவேலின் எண்ணப்போக்கும், நடந்து கொண்ட முறையுமே இங்கு முக்கியமேயல்லாது மோசே பற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ள சிறு குறிப்பு அல்ல. மிருகங்களைப்போல நடந்து கொள்ளும் ஒழுக்கங்கெட்ட மனிதர்களைப் போலல்லாது மீகாவேல் மோசக்காரனாகிய பிசாசின் முன்பாகக்கூட “கர்த்தர் அவனைக் கடிந்து கொள்வார்” என்று உத்தமமாகக் கூறியதாக யூதா விளக்குகிறார். கர்த்தரின் விசேட தூதனாக இருந்தபோதும் மீகாவேல் தாழ்மையோடு உத்தமனாய் நடந்து கொண்டான். அதேபோல் பக்தியுள்ளவர்கள் அகங்காரங் கொண்ட பக்தியற்றவர்களைப்போலல்லாது மீகாவேலைப்போல ஞானமும், தாழ்மை யும் உள்ளவர்களாக நடந்துகொள்ளுவார்கள் என்று உணர்த்துகிறார்.
வேதத்தை வேதத்தோடு ஒப்பிடுதல்
நாம் இதுவரை பார்த்த விளக்கத்தை வேறு எந்த வேதப்பகுதியாவது உறுதிப்படுத்துகிறதா? ஆம். பேதுரு தன்னுடைய 2-ம் நிருபத்தில் இதே செய்தியை தேவதூதனின் பெயரைச் சொல்லாமலும், மோசேயின் சரீரம் பற்றிய சண்டையைக் குறிப்பிடாமலும் விளக்குகிறார். “குறிப்பாக தீய இச்சையோடே பாவ இயல்புக்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், இறுமாப்புள்ளவர்கள், மாட்சிமையை நிந்திக்க அஞ்சாதவர்கள். அதிக பலமும் வல்லமையுமுடைய தேவதூதர்கள்கூட கர்த்தருக்கு முன்பாக அவர்களை நிந்தையாக குற்றப்படுத்தமாட்டார்களே. இவர்களோ பிடிபடவும் அழிக்கப்படுவதற்குமென்றே பிறந்த அறிவற்ற விலங்குகளைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை நிந்தித்து, அந்த விலங்குகளைப் போலவே அழிந்துபோவார்கள்.” (2 பேதுரு 2:10-12) என்கிறார்.