சிக்கலான சில வேதப்பகுதிகள்

வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாக வும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறுசிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை வாசகர்களின் நன்மை கருதி ஆராய விருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு விளக்கமளிக்கிறார்.

கடந்த இதழில் யூதாவில் ஒரு பகுதியை ஆராந்தோம். இந்த இதழில் பவுலின் நிருபங்களில் ஒன்றில் காணப்படும், சிக்கலானதாக நமக்குத் தோன்றுகின்ற ஒரு பகுதியை ஆராய்வோம். இந்தப் பகுதி பெண் களின் இரட்சிப்பைக் குறித்து விளக்குகின்றது.

“அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பி லும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப் பேற்றி னாலே இரட்சிக்கப்படுவாள்” (1 தீமோத்தேயு 2:15).

இந்தப் பகுதி அமைந்திருக்கும் சந்தர்ப்பம் விளக்கும் உண்மைகள்

பவுல் வாலிபப் போதகனாக இருந்த தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் நிருபத்தில் திருச்சபை நடவடிக்கைகளைப் பற்றி அவசியமான போதனைகளை அளிக்கிறார். கர்த்தரின் சபையில் அங்கம் வகிப்பவர்கள் அந்தச் சபையில் தேவபயத்தோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது மிகவும் அவசியம் என்கிறார் பவுல்.

“நான் உன்னிடத்திற்கு சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக் கிறேன். தாமதிப்பேனாகில் தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டியவகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத் துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 3:14-15).

இந்த நிருபத்தின் இரண்டாம் அதிகாரத்தில் ஆராதனைக்காக சபை கூடிவரும்போது ஆத்துமாக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று பவுல் விளக்குகிறார். முதலில், சபைகூடிவருகிறபோது எல்லோருக்குமாக ஜெபம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, அதை முக்கியமாக ஆண்களே சபையில் பரிசுத்தத்தோடும், சமாதானத்துடனும், ஒற்றுமை யுடனும் செய்ய வேண்டும் என்று போதிக்கிறார்.

“அன்றியும் புருஷர்கள் கோபமும் தர்க்கமும் இல்லாமல் பரிசுத்த மான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ண வேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 தீமோத்தேயு 2:8).

அடுத்ததாக இந்தப் பகுதியில் பவுல் திருச்சபை ஆராதனைவேளையில் பெண்களுடைய பங்கை விளக்க ஆரம்பிக்கிறார். பொது ஆராதனைக்கு வருகிறபோது அவர்கள் எத்தகைய ஆடை அணிகளை அணிந்து வர வேண்டும், எவ்விதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, அவர்கள் எந்தவிதத்திலும் பொது ஆராதனையின்போது சபையில் போதிப்பதையோ அல்லது தலைமை வகிப்பதையோ அல்லது ஆண்கள் மேல் அதிகாரம் செலுத்துவதையோ செய்யக்கூடாது என்று விளக்குகிறார். இதற்கு பவுல் பழைய ஏற்பாட்டில் சிருஷ்டியில் கர்த்தர் ஏற்படுத்தியிருந்த விதியையும், அதற்குப்பிறகு பாவத்தினால் ஏற்பட்ட வீழ்ச்சியையும் உதாரணங் காட்டி தனது போதனைக்கான காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

பொது ஆராதனையின்போது பெண்கள் சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பவுலின் பின்வரும் வாசகங்கள் தெளிவாக்கு கின்றன.

“ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாய் இருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.” (1 தீமோத்தேயு 2:11)

பவுலின் இந்த வார்த்தைகள் புதிய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளில் அவர் தந்துள்ள போதனைகளோடு பொருந்தியதாக இருக்கின்றன.

“ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 கொரிந்தியர் 11:3).

“தேவன் கலகத்துக்குத் தேவனாயிராமல் சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவீர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள அமர்ந்திருக்க வேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.” (1 கொரிந்தியர் 14:33-34).

அதற்குப் பிறகு ஆதியில் ஏவாளே முதலில் பிசாசின் பேச்சைக் கேட்டு ஏமாந்துபோய் அதனால் பாவத்துக்குள்ளானாள் என்பதை விளக்கி தொடர்ந்து, “அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், (பெண்) பிள்ளைப் பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்” (1 தீமோத்தேயு 2:15) என்று கூறுகிறார்.

வசனத்திற்கான விளக்கம்

நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் வசனத்தில் பெண்பிள்ளைப் பேற்றினாள் இரட்சிக்கப்படுவாள் என்று பவுல் கூறுகிறபோது அது எதைக் குறிக்கின்றது என்பதை ஆராய்வது அவசியம். சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் எந்தவிதமான வேறுபாடுமின்றி கிருபையின் மூலமாக கிறிஸ்து வுக்குள் இரட்சிப்பை அடைகிறார்கள் என்றல்லவா வாசிக்கிறோம்? அப்படியானால் பவுலின் வார்த்தைகளுக்குப் பொருளென்ன? கலாத்தியர் நிருபத்தில் பவுல் பின்வருமாறு கூறுகிறார்:

“நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராய் இருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீன னென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லோரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” (கலாத்தியர் 3:26-28).

இந்த வசனத்தை வைத்துப் பார்த்தால் 1 தீமோத்தேயுவில் பவுல் ஆத்மீக இரட்சிப்பைக் குறித்து விளக்கியிருக்க முடியுமா? அத்தோடு, வேறு சிலர் பவுல் ஏதோ ஒருவிதத்தில் பெண்களுடைய பிரசவ வேதனை குறையப்போகிறது என்றும், அவர்கள் விசேடமான ஒரு பாதுகாப்பை அடைவார்கள் என்றும் கூறுகிறார்களே அது சரியா? என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் பதிலளித்தாக வேண்டும்.

“நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்” என்று கர்த்தர் ஏவாளைப் பார்த்து ஆதியாகமம் 3:16ல் கூறியிருப்பதற்கும் இந்த வசனத்திற்கும் தொடர்பிருப்பதை மறுக்க முடியாது. இருந்தபோதும் இந்த உலகத்தில் விசுவாசிகளான பெண்களுடைய பிரசவ வேதனை அவிசுவாசிகளான பெண்களைவிடக் குறைவாக இருக்கும் என்று வேதத்தில் நாம் எங்கும் வாசிப்பதில்லை. எல்லாப் பெண்களும் தொடர்ந்து சமமாகவே பிரசவ வேதனையை அனுபவிக்கிறார்கள் என்பதை அனுபவமும் சுட்டிக்காட்டுகிறது.

பவுல் ஆத்மீக இரட்சிப்பைப் பற்றியும், நித்திய இரட்சிப்பைப் பற்றியும் தான் இந்த வசனத்தில் விளக்குகிறார் என்பதை பல முக்கிய காரணங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.

‘இரட்சிப்பு’ என்ற இதே வார்த்தையைத் தான் பவுல் ஏற்கனவே இந்த அதிகாரத்தில் பயன்படுத்தி, “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.” (1 தீமோத்தேயு 2:4) என்று விளக்கியிருக்கிறார். இதே வார்த்தையை இதற்கு முந்திய அதிகாரத்திலும் பயன்படுத்தி, “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீ கரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.” (1 தீமோத் தேயு 1:15) என்று கூறியிருக்கிறார். புதிய ஏற்பாட்டில் எந்த இடத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் தேவ கோபத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுபட்டு ஆத்மீக விடுதலை அடைவதைக்குறித்தே பவுல் பயன்படுத்தியிருக்கிறார்.

அப்படியானால் ஆத்மீக விடுதலையைக் குறிக்கும் கிருபையின் மூலமாக கிறிஸ்துவில் அடையும் இரட்சிப்பு 1 தீமோத்தேயு 2:15ல் தந்துள்ள விளக்கத்தோடு எப்படி பொருந்திப்போக முடியும்? இரட்சிப்பைக்குறித்து வேதம் முழுவதும் தரப்பட்டுள்ள பரந்த பொதுவான விளக்கங்களின் அடிப்படையிலேயே அதை விளங்கிக் கொள்ள முடியும்.

அப்படி வேதம் இரட்சிப்பைக்குறித்து எப்படிப்பட்ட விளக்கத்தை அளிக்கிறது என்பதைப் பார்ப்போம். ‘இரட்சிக்கப்படுகிறோம்’ என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துகிறபோது பெரும்பாலும் கிறிஸ்துவை நாம் அறிந்துகொள்ளுகிற அனுபவத்தையே குறிக்கிறோம். ஆனால், வேதம் இரட்சிப்பைக்குறித்து விளக்குகின்றபோது அதை மூன்றுவிதமான கால வேறுபாட்டு அர்த்தத்தில் விளக்குகின்றது. இறந்தகாலத்தில், நாம் இரட்சி¢க்கப்பட்டிருக்கிறோம் என்ற அர்த்தத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தில் நாம் இரட்சிப்பின் அனுபவத்தில் வளர்ந்து கொண்டிருப்பதை அது குறிப்பதாக இருக்கலாம். நித்திய இரட்சிப்பை அடையாளம் காட்டி எதிர்காலத்தில் நாம் இரட்சிக்கப்படப்போவதை அது விளக்குவதாக இருக்கலாம். இந்த அர்த்தங்களில் இருக்கும் கீழ் வரும் இரு வசனங்களையும் வாசித்துப்பாருங்கள்.

“இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட் டிருக்க, கோபாக்கினைக்கு நீங்களாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்கு சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்ட பின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:9-1-0).

“நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்க வேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கி லும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.” (ரோமர் 13:11).

ஆகவே, கிருபையின் மூலமாக கிறிஸ்துவில் நாமடையும் இரட்சிப்பு பற்றிய விளக்கத்தைப் பாதித்துவிடாதபடி 1 தீமோத்தேயு 2:25ல் காணப்படும் ‘இரட்சிப்பு’ எனும் வார்த்தையை இரட்சிப்பு பற்றி வேதம் தரும் பரந்த விளக்கத்தின் அடிப்படையில் பயன்படுத்த முடியும்.

இந்தப் பகுதியில் பவுல் இரட்சிப்பை நாம் எவ்வாறு அடைவது என்பது பற்றி விளக்கமளிக்கவில்லை. மாறாக, நாம் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள இரட்சிப்புக்குரிய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது பற்றியே விளக்கமளிக்கிறார். அதாவது, பவுல் கிறிஸ்துவுக்குள் நாமடைந்த இரட்சிப்புக்குரிய ஆரம்ப அனுபவத்தைப் பற்றிப் பேசாமல் விசுவாசிகளாகிய பெண்கள் இறுதிக் காலத்தில் நித்திய இரட்சிப்பை எவ்வாறு அடைவது என்பதை விளக்குகிறார். நித்திய இரட்சிப்பைப் பற்றி விளக்குகின்ற வேதம் அதை விசுவாசிகளின் பரிசுத்தத்திற்கான விடாமுயற்சியுடனும் ஆவிக்குரிய கனிகொடுத்தலின் அவசியத்தோடும், ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதபடி இணைத்தே விளக்குகின்றது. நித்திய இரட்சிப்பு என்று நாம் கூறுவது விசுவாசி இறுதிவரை கர்த்தருக்கு விசுவாசமாக பரிசுத்தமாக இருந்து அவருடைய வருகையின்போது அவரால் ஏற்றுக்கொள்ளப்படுவதையே குறிக்கிறோம். கீழ்வரும் வசனங்கள் விசுவாசியின் விடாமுயற்சியின் அவசியத்தையும், நித்திய இரட்சிப்பைப் பற்றியும் விளக்குகின்றன.

“என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவு பரியந்தமும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மாற்கு 13:13).

“நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” (எபிரேயர் 10:36).

பிள்ளைப் பேறு எது?

மறுபடியும் இந்த வசனம் அமைந்து காணப்படும் சந்தர்ப்பத்தை நாம் கவனிப்பது அவசியம். இந்தப் பகுதியில் பவுல் கர்த்தரின் சபையில் ஆண்களுடையதும், பெண்களுடையதுமான பணிகளைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டு வருகிறார். ஆண்கள் சபையில் ஆத்மீகத் தலைமையை அளிப் தோடு பெண்கள் அவர்களுக்கு அமைந்து நடக்க வேண்டுமென்பது அவருடைய போதனை. ஆண்களிலிருந்து வேறுபட்ட உருவத்தோடும், பணிகளோடும் தங்களைக் கர்த்தர் படைத்துள்ளார் என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

உலகத்தில் எத்தனையோ காரியங்களை ஆண்களும், பெண்களும் சமமாக செய்ய முடிந்தபோதும் ஒரு காரியத்தை மட்டும் ஆண்களால் ஒருபோதும் செய்ய முடியாது – அவர்களால் ஒருபோதும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.

இந்த வசனத்தில் பவுல் பிள்ளை பெறுவதை ஒரு அடையாள வார்த்தையாகப் பயன்படுத்துகிறார். அதாவது, பெண்களுடைய பணிகளைக் குறிக் கும் வார்த்தையாகப் பயன்படுத்துகிறார். எல்லாப் பெண்களாலும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதென்பது பவுலுக்கு நன்றாகத் தெரியும். அதேவேளை, வேதம் திருமணம் செய்வதை வழமையானதாகக் கருதுகிறபோதும் சில சந்தர்ப்பங்களில் சிலர் திருமணம் செய்துகொள்ளாமலிருப்பதையும் அனுமதிக்கிறது. ஆகவே, பிள்ளைப் பேறு இந்தப் பகுதியில் பெண்களின் கடமைகளைக் குறிக்கும் அடையாள வார்த்தையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் தங்களைக் கர்த்தர் படைத்துள்ளவிதத்திற்கு அமைந்து தங்களுடைய பணிகளை செய்துவருகிறதே அவர்களுக்கு சமுதாயத்தில் பாதுகாப்பானது என்பதை இந்த வார்த்தையின் மூலம் பவுல் உணர்த்துகிறார்.

பவுலின் இந்தப் போதனையின்படி பெரும்பாலான விசுவாசிகளான பெண்கள் தங்களுடைய கணவன்மாருக்கு கீழ்படிந்து நடந்துவருவதே அவர்களுக்கு சமுதயத்தில் பாதுகாப்பானதாகும். தங்களுடைய சொந்தக் கணவன்மாரே தங்களுக்கு ஆத்மீகத் தலைவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து அவர்களோடு இணைந்து பிள்ளைகளைக் கர்த்தரின் வழியில் நடத்தி வருவதே அவர்களுடைய பிரதான பணியாக இருக்கின்றது. அதேநேரம், பவுலின் போதனையின்படி எல்லாப் பெண்களும், அதாவது திருமணமானவர்களும், திருமணமாகாதவர்களும் சபையிலும், வீட்டிலும் ஆண்களுக்கு கர்த்தர் கொடுத்துள்ள தலைமைப்பதவியை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்காமலிருப்பது அவர்களுக்கு கர்த்தரிட்டுள்ள கட்டளையாக இருக்கின்றது.

இந்தப் போதனையே வேதத்தின் ஏனைய பகுதிகளிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கீழ்வரும் இரு வசனங்களும் இதேயே விளக்குவதாக இருக்கின்றன.

“ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம் பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.” (1 தீமோத்தேயு 5:14).

“தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், தங்கள் புருஷர்களுக்கு கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.” (தீத்து 2:4-5).

பரிசுத்தத்தில் பூரணத்துவமடைதல்

விசுவாசிகளான பெண்கள் கர்த்தர் தங்களைப் படைத்திருந்த நிலையில் இருந்து தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடமைகளை வேதத்திற்கு அடிபணிந்து “தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத் திலும் நிலைகொண்டிருந்தால் . . . இரட்சிக்கப்படுவாள்” என்று பவுல் கூறுகின்றார். நித்திய இரட்சிப்பை அடைவதானால் விசுவாசிகளான பெண்கள் இங்கே பவுல் கூறுகின்ற கிருபைகளில் நித்தமும் வளர்ந்து வருவது அவசியம். விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் அவர்கள் வளர வேண்டும். அதைத் தாங்கள் வேத அடிப்படையில் செய்யவேண்டிய கடமைகளின் மத்தியில் செய்ய வேண்டும்.

“இப்படிப்பட்ட வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1).

பெண்கள் ஏவாளைப் போல நடந்து தங்கள் கணவன்மாருடைய தலைமைத்துவத்தை ஆக்கிரமிக்கத் தேவையில்லை. அப்படி செய்தால் ஏவாளைப் போலவே அவர்கள் வஞ்சிக்கப்பட்டு பாவத்திற்குள்ளாவார்கள்.  மற்றவர்களுடைய வேலையை நாம் செய்யாவிட்டால் கர்த்தரின் காரியம் நடக்காது என்று நாம் நினைக்கக்கூடாது. கர்த்தரின் பணி நிச்சயம் நடக்கும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s