தமிழினத்தில் கிறிஸ்தவம் வேத அடிப்படையில் இயங்கி வருகிறதா? என்ற கேள்விக்கு இருதய சுத்தத்தோடு பதிலளிக்க வேண்டுமானால் இல்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘நெகட்டிவ்வாக’ நம்மைப் பற்றிப் பேசுகிறாரே என்று சில உள்ளங்கள் இதை வாசித்து வருத்தப்படலாம். பொறுமையாக நான் சொல்லப் போவதைக் கேட்டுவிட்டு அதற்குப் பிறகு சிந்தித்து பதிலளியுங்கள்.
மிஷனரிகள் விட்ட தவறு
தமிழ் மக்கள் மத்தியில் பணிபுரிய வந்த அனேக மேலைத்தேச மிஷனரி கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள். பட்டரையும், ஜேம்மையும், பிரெட்டையும் வருடக்கணக்கில் கண்ணால் காணமுடியாமல் வாழ்ந்து நம்மக்கள் மத்தியில் நல்லூழியம் செய்திருக்கிறார்கள். வெய்யில் கொடுமையை சகித்துக் கொண்டு, தூசியையும், சூழலின் துர்நாற்றத்தையும், கொசுத்தொல்லையையும் பொறுத்துக்கொண்டு அரும்பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பையும், நல்ல நோக்கத்தையும் பாராட்டத்தான் வேண்டும். குடும் பத்தைப் பலிகொடுத்தும்கூட போகமாட்டேன் என்று பலர் உழைத்திருக்கிறார்கள். கடினமான நம்மொழியைக் கற்று அதில் பேசுவதென்றால் முடியுமா? ஆங்கிலத்தைப் படிக்க நம்மவர்கள் படுகிறபாடுதான் எத்தனை?
இத்தனை நன்மைகளை நமக்காக அவர்கள் செய்திருந்தும் அவர்கள் ஊழியத்தில் ஒரு குறை இருக்கத்தான் செய்தது. அது முழுவதும் அவர்களுடைய தவறல்ல. நம்மக்கள் இயேசுவின் அன்பை ருசிபார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு பணி செய்த அவர்கள் நமது பண்பாடு இயேசுவின் வார்த்தைக்கு ஏற்றபடி மாற்றமடைய பெரிதாக எதையும் செய்யவில்லை. ஒருசிலர் பாடுபட்டிருக்கிறார்கள்தான். ஆனால், அனேகர் அது கைவைக்கக் கூடாத, தீண்டத்தகாததொன்று என்று தொட மறுத்துவிட்டார்கள். சிலர் நமது பண்பாட்டை வேதமாகக் கூட ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஏற்கனவே நான் சொன்னதுபோல் அது அவர்களுடைய முழுத்தவறல்ல. மேலைத்தேய பண்பாட்டில் வளர்ந்த அவர்களுக்கு குழப்பமான நம் பண்பாட்டைப் புரிந்துகொள்வது இலேசான காரியமல்ல. எத்தனை முயற்சி எடுத்தாலும் மேலைத்தேசத்தார் புரிந்துகொள்ளக் கஷ்டமானது நமது தமிழ்ப் பண்பாடு.
இங்கிலாந்தைச் சேர்ந்த, இப்போது அமெரிக்காவில் வாழும் என் நண்ப ரான போதகரொருவர் நம் தமிழ் சபைகளில் பெண்கள் ஒரு பக்கமும், ஆண்கள் ஒரு பக்கமும் உட்காருவதைப் பார்த்து துள்ளிக் குதித்தார். ‘இது அடுக்காது. கணவன், மனைவி, பிள்ளைகளைக் கூடப் பிரித்து வைக்கி றார்களே பாவிகள்’ என்று பரிதவித்தார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருடைய எண்ணத்தில் எந்தவிதமான தவறுமில்லை. ஆணும், பெண்ணும் அருகருகே உட்காரக்கூடாது என்று வேதத்தில் எங்கே வாசிக்கிறோம்? இது நாமே உருவாக்கிக்கொண்டுள்ள பண்பாடு. ஏன் இதைச் செய்கிறோம்? பரிசுத்தம் கெட்டுவிடும் என்பதாலா? இல்லை. ஆண், பெண் உறவுபற்றி நம்மினத்தில் நாமே உருவாக்கிக் கொண்டுள்ள சில கருத்துக்களால் இந்தப் பிரிவினையை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். இப்படி சபைகளில் தள்ளி உட்காருவதோடு அது முடிந்துவிடுவதில்லை. கூடப்பிறந்து வளரும் சகோதரர் களும், சகோதரிகளும்கூட வீட்டில் பிரித்து வைக்கப்பட்டே வளர்ந்து வருகி றார்கள். உடன்பிறந்த சகோதரனும், சகோதரியும் கொஞ்ச நேரம் கூடிப்பேசிக் கொண்டிருந்தால்கூட அது தவறு என்று விதித்து இந்த ஆண், பெண் பேதத்தை சாதிவெறிபோல் நாம் பாதுகாத்து வருகிறோம். பெண்ணைப் பற்றியும், பெண்ணில் ஏற்படும் சரீரரீதியிலானதும், உளரீதியிலானதுமான மாற்றங்களை அறியாமல் வளர்ந்துவரும் வாலிபர்கள் நம்மினத்தில் அதிகம். ஏனெனில், இதுபற்றிப் பேசுவதோ, வாசிப்பதோ ஒழுக்கமற்ற செயல் என்ற உதவாக்கறை எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். திருமண த்திற்குப் பிறகு கூட மனைவியோடு அவளுடைய சரீர மாற்றங்களில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிப் பேசக்கூச்சப்பட்டு டாக்டரிடம் அழைத்துப் போகும் கணவன்மார் எத்தனை பேர்? அந்தளவுக்கு போலிப்பண்பாடு நம்மைக் குருடர்களாக வைத்திருக்கிறது. அதேபோல் ஆணில் ஏற்படும் மாற்றங்கள்கூட அனேக தமிழ்ப் பெண்களுக்குத் தெரிவதில்லை. இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்ட பின்னும் இது நம்மத்தியில் சுகமாகத் தொடர்கிறது. யாரும் இது பற்றி எதுவும் கேட்பதில்லை. பெண்கள் கூட்டம் என்றால்கூட ஆண் போத கர் பேசமுடியாமல் ஒரு பெண்ணே பேச வேண்டிய அளவுக்கு இந்தப் பேதம் தொடர்ந்து நம்மை ஆளுகிறது. இரட்சிப்பைக் கொடுக்கின்ற ராஜாதி ராஜனாகிய இயேசுவால்கூட இன்று இதில் கைவைக்க முடியாமலிருக்கிறது.
இப்படியிருக்கின்ற நிலைமையில் மேலைத்தேசத்து மிஷனரி என்ன செய்து விட முடியும்? அவர்கள் எதுவும் புரியாமல் இது பண்பாட்டோடு சம்பந்தப்பட்ட ஒன்று என்ற எண்ணத்தில் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டார்கள். அவர்கள் மூலம் சுவிசேஷத்தைக் கேட்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற கூட்டம் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டு தொடர்ந்து நமது பண்பாட்டிலும், வாழ்க்கைமுறையிலும் எந்த வொரு மாற்றமுமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். நன்மையோ, தீமையோ பண்பாட் டில் கைவைக்கக்கூடாது என்பதே நமது எண்ணமாக இருக்கிறது.
பண்பாடு நம்மைப் பாதிக்கிறது
இந்த அருமைப் பண்பாடு விசுவாசிகளைப் பாதிக்கிறதா? இல்லையா? என்பதே நான் விவாதிக்க விரும்புகிற விஷயம். நிச்சயம் பாதிக்கிறது. அவர்களுடைய விசுவாச வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, பிள்ளைகளின் வாழ்க்கை, சபை வாழ்க்கை எல்லாவற்றையுமே பாதிக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான முடிவு. எப்படி என்று கேட்கிறீர்களா? விளக்குகிறேன் பொறுமையாக வாசியுங்கள்.
முதலில், வேதம் சொல்லுவதைக் கவனியுங்கள். இயேசு நம் வாழ்க்கையில் குடிபுகுந்தபின் நமக்குள்ளும், நம்மோடு சம்பந்தமுடைய அனைத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிறது வேதம். அது கிறிஸ்துவே ஏற்படுத்துகிற மாற்றம். கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்டிருக்கும் நாம் புதிய சிந்தனைகளோடு, அதாவது வேத சிந்தனைகளோடு நம்மிலும், நம்மைச் சுற்றி நம்மோடு சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்திலும் வேதரீதியிலான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியவர்களாக இருக்கிறோம். பண்பாடு என்பது நாம் பிறந்த சூழ்நிலையில் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கிற ஒன்று. அதில் நல்லதும் இருக்கலாம், கெட்டதும் இருக்கலாம். விசுவாசி நல்லவற்றை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு, தீயவற்றை விட்டுவிட வேண்டியவனாக இருக்கிறான். இன்னொருவிதமாகக் கூறினால், வேதம் அனுமதிக்கின்றவற்றை தக்கவைத்துக் கொண்டு வேதம் அனுமதிக்காதவற்றைத் தூரஎறிந்துவிட வேண்டியவனாக இருக்கிறான். நாம் விசுவாசிகளாக மாறியபின் நல்லது, கெட்டதைத் தீர்மானிப்பது நமது சமூகமோ, நாம் இதுவரைப் பின்பற்றி வந்துள்ள பண்பாடோ அல்ல. வேதம் மட்டுமே. விசுவாசிகளான நாம் வேதபோதனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள். வேதம் சொல்லுவதைச் செய்து, செய்யாதே என்று தடுப்பவற்றைத் தன் வாழ்க்கையில் விலக்கிவைத்து வாழ்கிறவனே மெய்விசுவாசி.
சிலர் பண்பாட்டிற்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, வேதம் அந்த விஷயத்தில் எல்லாம் நாம் ஊர்நிலவரத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது என்பார்கள். பவுல் தீமோத்தேயு விருத்தசேதனம் செய்துகொள்ள அனுமதித்ததையும், “நான் எல்லோருக்கும் எல்லாமானேன்” என்று சொன்னதையும் காரணம் காட்டி விசுவாசியின் வாழ்க்கையில் பண்பாடுகள் தொடர்வதற்கு வேதம் அனுமதி யளிக்கிறது என்பார்கள். மேலே பார்த்த இரண்டும் வேத உதாரணங்களுக் கும் பண்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த சந்தர்ப்பங்கள் புறஜாதிப் பண்பாடு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் தொடர்வதற்கு அனுமதி யளிக்கும் பகுதிகள் அல்ல. அந்த இரண்டும் ஒருசில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையில் வேதபோதனைகளுக்கு விரோதமற்ற செயல்களைத் தொடர்வதை மட்டுமே நியாயப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சபைக்குள் செருப்புப் போடலாமா? போடக்கூடாதா? என்பது போன்ற பாதகமற்ற செயல் களையே அவை கருத்தில் கொண்டுள்ளன. தெளிவான வேத போதனைகளுக்கு மாறான செயல்கள் நம் வாழ்க்கையில் தொடர்வதைக் கர்த்தர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
மேலே நாம் பார்த்த இரண்டு வேத உதாரணங்களின் அடிப்படையில் பண்பாட்டிலுள்ள கேடான அம்சங்கள் நம் வாழ்க்கையில் தொடர்வதை ஆதரிப்பவர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். வேதம் தொடாத இடம் விசுவாசியின் வாழ்க்கையில் இல்லை என்பது இவர் களுக்குப் புரியவில்லை. கிறிஸ்து நம் ராஜாவாக இருந்தால் அவர் ஆளாத இடம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடாது. கணவன், மனைவி உறவில் கூட வேத அடிப்படையில் காரியங்கள் நடக்க வேண்டும் என்கிறது கர்த் தரின் வேதம். உதாரணத்திற்கு வீட்டுக்கு வரப்போகிறவளிடத்தில் வரதட்சனை வாங்குவது தமிழ் பண்பாடு. விசுவாசியான ஒருவன் தனக்கு மனைவியாக வரப்போகிறவளிடத்தில் வரதட்சனை வாங்குவது வேத விரோதமான செயல். அப்பா, அம்மாவைப் பகைத்துக்கொள்ள முடியாது, அவர்கள்தானே வாங்குகிறார்கள் என்று ஒருவன் சொல்லுவானாகில் அவன் ஒரு பெரிய விசுவாசத் துரோகி; இயேசுவின் முதுகில் குத்துகிற யூதாசு. இந்த விஷயத்தில் வேதம் அதிகாரம் செலுத்துகிறது. அது இந்தப் போலிப்பண்பாட்டிற்கு இடம் கொடுக்கவில்லை. எப்படிச் சொல்லுகிறேன் என்கிறீர்களா? எபேசியர் 5:22-33 வரையுள்ள வசனங்களில் கணவன் மனைவியைப் போஷிக்க வேண்டிய முறையைப்பற்றி பவுல் கூறுவதை வாசியுங்கள். இயேசு தன் சபையை நேசிப்பதுபோல் தன் மனைவியை ஒருவன் நேசிக்க வேண்டுமென்கிறார் பவுல். மனைவியிடம் திருமணத்திற்கு முன்பே கைநீட்டிப் பணம் வாங்குகிற ஒரு பாவி அவளை இயேசு சபையை நேசிப்பது போலவா நேசிக்கப்போகிறான்? முதலில் அவனுடைய விசுவா சத்திலேயே பெரிய கோளாறு இருக்கிறது.
திருமணத்தில் பெற்றோரின் பங்கு
பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தை எடுத்துக் கொள்வோம். இதுவும் தமிழர் மத்தியில் இருக்கும் வழக்கம். இதில் நன்மையும் இருக்கிறது; கேடும் இருக்கிறது. உதாரணத்திற்கு பெற்றோர் விசுவாசிகளாக இருந்தால், தங்களுடைய பிள்ளைகள் விசுவாசிகளாக இருந்தால் மட்டுமே விசுவாசிகளான துணைகளைத் தேடி வைக்க வேண்டும். விசுவாசியாக இல்லாத மகன் திருந்த வேண்டும் என்பதற்காக விசுவாசியான ஒரு பெண் ணைப் பார்த்து திருமணம் செய்து வைப்பது எத்தனை பெரிய கொடுமை. அல்லது விசுவாசியான மகனோ, மகளின் எண்ணங்களுக்கு எந்த இடமும் கொடுக்காது பணத்தோடும், சமூக, சாதித்தரத்தோடும் வருகிறார்கள் என்ப தற்காக அவிசுவாசிகளைப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப் பது எத்தனை பெரிய பாவம்.
தன் பிள்ளைகள் யாரையும் விரும்பிவிடக்கூடாது என்பதற்காக சபையில் எந்த வாலிபப் பையன்களும், பெண்களும் யாரையும் விரும்புவதற்கு தடைபோட்டு ஒருவரையொருவர் உடன்பிறந்த சகோதரர்கள் போல் நடத்த வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கும் போதகப் பெருமக்கள் எத்தனைப் பெரிய பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். சபையில் இருக்கும் பெற்றோர்கள் விசுவாசிகளான தங்களுடைய பிள்ளை களுக்கு அவிசுவாசியையும், விசுவாசமேயில்லாத பெயர் கிறிஸ்தவர்களையும் (Nominal Christians) திருமணத்திற்காக நிச்சயம் செய்யும்போது அது தெரிந்திருந்தும், தெரியாததுபோல் மௌனமாக இருந்துவிடும் போதகர் கள் எத்தனைப் பெரிய பாதகர்கள். இது தொடக்கூடாத விஷயம் என்று வாய்திறக்காமல் இருந்துவிடுகிற போதகர்களின் ஊழியத்தைக் கர்த்தர் ஆசீர்வதிக்கப் போவதில்லை. வாழ்ந்து வளம்பெற வேண்டிய இளம் உள் ளங்களின் வாழ்க்கை வீணாவதற்கு போதகர்கள் உடன்போவதை எந்த விதத்தில் வேதம் அனுமதிக்கிறது? தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் கிறிஸ்துவும், அவருடைய வார்த்தையும் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிப்படையாகப் புறக்கணிக்கப்படுகிறது. வேதசத்தியங்களின்படி திருத்தமடைய வேண்டிய பண்பாடு வேதத்தைப் புறக்கணிப்பதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கும் தமிழ் கிறிஸ்தவம் மெய்க்கிறிஸ்தவம்தானா? என்று நான் கேட்பதில் என்ன தவறு.
கிறிஸ்தவ சபைகளில் திருமண வயதில் இருக்கும் வாலிபர்கள் விசுவாசி களான பெண்களை, அல்லது விசுவாசிகளான பெண்கள் விசுவாசிகளான வயதுக்கு வந்த வாலிபர்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது எந்தவிதத்தில் தவறு? இது நம் பண்பாடில்லை என்று சொன்னால் நம் சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உணர்ச்சிகளே இல்லையா? கர்த்தர் படைத்துள்ள மனிதன் சகல உணர்ச்சிகளையும் கொண்டே படைக்கப்பட்டிருக்கிறான். உணர்ச்சிகள் தவறானவிதத்தில் அடக்கப்பட்டு, மறைத்து வைக் கப்படுகிறபோதுதான் மனிதர்கள் பாவச்செயலில் ஈடுபடுகிறார்கள். விசுவாசிகளுக்கு உணர்ச்சிகளே இல்லை என்று வேதத்தில் நாம் வாசிப்பதில்லையே. யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை திருமண வயதில் இருக்கிற வாலிபனோ, வாலிபப் பெண்ணோ முடிவு செய்ய வேண்டும். அவர்கள் உள்ளத்தில் ஏற்பட வேண்டிய உணர்வை பெற்றோர்களால் உருவாக்க முடி யாது. பெற்றோர்கள் உள்ளத்தில் ஏற்பட வேண்டிய உணர்வு அல்ல அது.
தான் படைத்த உலகத்தில் தகுந்த ஒரு துணையைத் தேடிக்கொள்ளுமாறு கர்த்தர் ஆதாமைப் பணித்தார். ஆதாமே ஒரு துணையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதே கர்த்தரின் விருப்பமாயிருந்தது. அப்படி ஒரு துணை யைத் தேடிக்கொள்ளக் கூடிய சகல தகுதிகளும் அவனுக்கிருந்தன. தனக்கேற்ற துணையை அவனால் உலகத்தில் தேடிக்கொள்ள இயலாதபோதே கர்த்தர் அவனுக்கு ஏவாளைத் தந்தார். கர்த்தர் ஏவாளைத் தந்தபோது அவளை அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுக்குப் பிடித்தமில்லாதவளை கர்த்தர் படைத்துத் தரவில்லை. ஆதாமின் மனமறிந்து அவனுக்கேற்ற துணையை கர்த்தர் அளித்தார். நல்ல தகப்பன் செய்கிற காரியத்தை கர்த்தர் செய்தார். ஆதாம் ஏவாளைக் குறித்துக் கூறிய வார்த்தைகள் அவன் அவளை எந்தளவுக்கு நேசித்தான் என்பதை விளக்குகின்றன. இது பெற்றோர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. தனக்குப் பிடித்தமில்லாதவளை மணந்து வாழ்நாள் முழுதும் ஒருவன் மனக்கஷ்டத்துக்குள்ளாவதைப் போன்ற வேதனை ஒன்றுமில்லை. இளம் உள்ளங்களின் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுக்காது தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக இருவரை இணைத்து வைக்கும் அநியாயச் செயல், திருமண பந்தம் பற்றி வேதம் போதிக்கும் அத்தனை சத்தியங்களுக்கும் முரணாக அமைகிறது. அது கர்த்தருக்கு விரோதமானது என்பது விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்ளுகிற உங்களுக்குப் புரியாமல் இருப்பது ஆச்சரியமே.
பெற்றோர்களே, போதகர்களே, விசுவாசிகளான உங்கள் வாலிபர்கள் மெய் விசுவாசிகளை மட்டும் திருமணம் செய்து கொள்ள ஆலோசனை சொல்லு ங்கள், அவர்களுக்குத் துணையாக இருங்கள். அவர்கள் காதலிக்க வேண்டிய பெண்ணையோ, ஆணையோ நீங்கள் தீர்மானிக்கப்போவது சிருஷ்டியில் மனித சரீரம், உணர்வுகள் சார்ந்த அனைத்திற்கும் எதிராக நடப்பதாகும். திருமணத்திற்குப் பிறகு காதலிக்கப் பழகலாமே என்று சிலர் சொல்லுவது காதில் விழுகிறது. என் கண் பார்த்து, மனதுக்குப் பிடிக்காத ஒருத்தியை என்னால் என்றாவது விரும்ப முடியுமா? இனிப்புக் கடைக்குப் போனால் கூட எனக்குப் பிடித்ததைத்தானே வாங்கிச் சுவைக்கிறேன். கடைக்காரன் சொல்லுவதைக் கேட்டு அவன் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வருவதில்லையே. சாதாரண இனிப்பு விஷயத்திலேயே நம் நாக்கு விரும்புவதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறபோது வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழவேண்டியவள் நமக்குப் பிடிக்காதவளாய் இருந்துவிடக்கூடாது.
விசுவாசிகளான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் விசுவாசிகளை மட்டும் விரும்பவும், மணக்கவும் ஆலோசனை சொல்ல வேண்டும் என்று சொன்ன உடனேயே எனக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. நமது பண்பாட்டில் இந்த விஷயத்தை நாம் பிள்ளைகளோடு ஒருநாளும் பேசுவது இல்லையே. பிள்ளைகளுக்கு உணர்ச்சிகளே இல்லாதது போலவும், வயதுக்கு வந்தபின் எல்லாம் தானாய்த் தெரிந்துவிடும் என்ற கனவுலகில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண், பெண் பற்றிய சரீர வேறுபாடுகளை யும், உணர்ச்சிகளையும், திருமணம், மணவாழ்க்கை பற்றி தம் பிள்ளைகளோடு அவர்கள் வளர்ச்சி கருதி பேசி உதவுகிற பெற்றோர்களைத் தமிழினத்தில் பார்க்க முடிகிறதா? விசுவாசத்திற்கு எதிரியான வரட்டுப் பண்பாடு பலரின் கண்களையும், இருதயத்தையும் குருடாக்கி வைத்திருக் கிறது. பண்பாடு என்ற பெயரில் பிள்ளைகளோடு நட்போடு கூடிய உறவை வளர்த்துக் கொள்ளாது அவர்கள் வாழ்க்கையிலேயே அதிமுக்கியமான நிகழ்ச்சியான மணவாழ்க்கையை வெறும் சந்தை வியாபாரமாக நடத்திக் கொண்டிருக்கிற பெற்றோர்கள் தாங்கள் விசுவாசிகள்தானா என்று ஆராய் ந்து பார்ப்பது நல்லது. பண்பாடு நம்மை எந்தளவுக்கு பாதித்து திருமண வயதுக்கு வந்துள்ள பிள்ளைகளுக்கு இல்லற விஷயத்தில் ஆலோசனைகள் சொல்லக்கூட முடியாதபடி நம்மைத் தடுத்து வைத்திருக்கிறது என்பது புரிகிறதா? விசுவாசிகள் இந்த மோசமான பண்பாட்டிற்கு முடிவு கட்டாத வரையில் நம்மினத்தில் குடும்பங்கள் விசுவாசமாக வாழ்க்கை நடத்துவது முடியாது. திருமணத்துக்கும் விசுவாச வாழ்க்கைக்கும் பெருந்தொடர்பு இருக்கிறது. வேத அடிப்படையில் அமையாத திருமணங்களின் மூலம் குடும்ப வாழ்க்கை வேதபூர்வமாக அமைவது சாத்தியமில்லை. சாத்திய மாகும் என்று நினைப்பது பெருங்கனவு.
குடும்ப வாழ்க்கையில் பண்பாட்டுக் கோளாறு
நமது பண்பாட்டால் சீரழிந்திருப்பது திருமணம் மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையும்தான். “யாரோ பார்த்து வைத்தவளைக் கட்டி திருமணம் முடிந்த பிறகு இருவரும் உடலுறவும் கொண்டுவிட்டோம். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பினால்தான் அப்படிச் செய்தோமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக் கிறது” என்று என்னிடம் சொன்னார் ஒரு விசுவாசி. “ஒரு பெண்ணைக் காட்டி இவள் உனக்குப் பொருத்தம், மணந்துகொள் என்று சொன்னதால் கட்டினேன் தாலி. அதற்கு அடுத்தபடியாக ஒரு கடமையாய்தான் ஹனிமூன் நடந்ததே தவிர அன்பால் இணைக்கப்பட்டதால் அல்ல” என்று கூறிய விசுவாசி “காலச்சக்கரம் மட்டும் மாறி அமையுமானால் அன்போடு திருமணம் செய்து அன்போடு வாழ்க்கை நடத்துவதைத்தான் விரும்புகிறேன்” என்றார். இதற்காக அவர் தன் மனைவியை இப்போது நேசிக்க வில்லை என்று அர்த்தமில்லை. சரியாக நடந்திருக்க வேண்டியது அப்படி நடக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் அவருக்கு.
இன்று எத்தனை விசுவாசிகள் வயது வந்தபின் காலாகாலத்தில் நடக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியாக மட்டும் கருதி பெற்றோர் காட்டும் ஒருத்தி கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு கடமைக்காக அவளோடு வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்? உடலுறவுக்காகவும், குடும்பப் பெயர் நிலைக்க பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே மனைவி இருக்கிறாள் என்ற எண்ணம் பலர் மத்தியில் ஊறிப்போயிருக்கிறது. போதக ஊழியத்தில் ஈடுபடுவதற்கு மனைவி தேவை என்பதற்காக நாலு இடங்களில் தேடி யாரையாவது மணந்துகொள்ளும் அநியாயம் நடப்பதும் தமிழினத்தில் மட்டும்தான். மனங்கள் பொருந்திவராமல், வேதம் எதிர்பார்க்கும் உண்மையான அன்பு கணவன் மனைவிக்கு இடையில் இல்லாமல் சமூகக் கட்டுப்பாட்டிற்கு மட்டும் அடங்கி ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதற்குப் பெயர் திருமண வாழ்க்கையல்ல; சட்டரீதியான விபச்சாரம். நம்முடைய வரட்டுப் பண்பாடே இதற்கெல்லாம் வழிவகுத்திருக்கிறது.
கர்த்தரை அறியாத மக்கள் இப்படி வாழ்வது வழக்கம். கர்த்தரை விசுவா சிக்கிறவர்கள் திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் அலட்சியப் படுத்தி வெறும் உடலுறவுக்காக அதில் ஈடுபடுவதைக் கர்த்தர் விரும்பவில்லை. பெற்றோர் பார்த்துவைத்து ஏனோதானோவென்று திருமணம் முடி த்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டபின் வேறு பெண்கள் மேல் அன்பு காட்ட ஆரம்பித்த பலர் விசுவாசிகள் மத்தியில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பாவம் என்று மட்டும் சொல்லி உதறிவிட முடியாது. திருமண வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் வயிற்றுப் பசிக்கு சாப்பாடு போடுவது போல் அமைந்து விடுவதால்தான் பலர் இந்தக் கதிக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள் திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளின் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்து அவர்கள் மனதுக்குப் பிடித்தமாதிரியான வரன்களைத் தேடி, அவர்கள் சந்தித்துப் பேசி ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்ள வகைசெய்து கொடுத்தால் மிருகங்கள் வாழ்வதுபோல் விசுவாசிகள் உடலுறவுக்காகவும், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்காகவும் மட்டும் குடும்ப வாழ்க்கை நடத்தும் வழக்கத்திற்கு ஒரு முடிவு கட்டிவிடலாமே.
திருமண விஷயத்தில் சபைப் போதகர்களின் பங்கு
திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் பற்றி வேதபூர்வமாக சபைகளில் போதிப்பது போதகர்களின் கடமை. திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு இல்லற வாழ்க்கைபற்றி போதகர்கள் வேதபூர்வமாக சிந்தித்து தகுந்த ஆலோசனை அளித்து உதவ வேண்டியது அவசியம். இதை எழுதிக் கொண்டிருக்கிறபோது, சபைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர் கள்/போதகர்கள் இருப்பதன் அவசியம் நினைவுக்கு வருகிறது. மிகவும் ‘சென்சிடிவான’ நம் பண்பாட்டில் ஒரே ஒரு போதகன் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களை தனிமையில் சந்தித்து எப்படி ஆலோசனை தர முடியும்? ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்கள் இருந்தால் ஆலோசனைகள் சொல்ல அது வசதியாக இருப்பதோடு, போதகர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். தனிமையில் பெண்களைப் போதகர்கள் ஒரு போதும் சந்திப் பதை வழக்கமாக வைத்திருக்கக் கூடாது.
திருமண காரியமெல்லாம் சபையில் பேசுகிற விஷயமல்ல என்றும், அவை பக்திக்குரிய விஷயங்களல்ல என்றும் பத்தாம்பசலித்தனமாய் சிந்தித்து வாழ்கிற போதகர்கள்தான் இன்று நம்மினத்தில் அதிகமாக இருக்கிறார்கள். கொரிந்தியருக்கு பவுல் எழுதிய நிருபத்தையும், எபேசியருக்கு எழுதிய நிருபத்தையும், பேதுருவின் நிருபத்தையும் போதகர்கள் முறையாக வாசித்துப் பார்த்தால் போதகர்களுக்கு இந்த விஷயத்தில் பெரும் பங்கிருப்பது தெரியவரும். நம்மினத்தின் போலிப் பண்பாட்டிற்கேற்ப வேதத்தை தலைகீழாக மாற்றி சபை நடத்தி வருவதால்தான் போதக ஊழியம் இன்று தமிழினத்தில் சீரழிந்து காணப்படுகிறது. அனேக போதகர்களின் குடும்ப வாழ்க்கையும் வேதப்படி அமைந்ததாயில்லை. ஆத்துமாக்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் சொல்லிக்கொடுக்காமல், அவர்கள் இருட்டில் இந்துக்கள் வாழ்வதுபோல் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு தமிழினத்தின் சபைப் போதகர்களுக்குப் பெரும் பங்கிருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
‘திருமண வாழ்க்கைபற்றி போதகரிடம் கேட்டால் என் மானமே போய் விடும், அவர் என்னைத் தப்பாக நினைத்துவிடுவார்’ என்று இன்று போதகர் கள் பக்கமே தலையைக் காட்டாமல் இருந்துவிடுகிறார்கள் வாலிபப் பிள்ளைகள். பெற்றோரிடம் கேட்க முடியாத நிலையிலும், போதகர்கள் பக்கம் போக முடியாத நிலையிலும் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டு இருட்டில் வாழ்ந்து வருகிறார்கள் அனேக இளைஞர்கள். இல்லற வாழ்க்கையின் இரகசியத்தை கர்த்தர் அவர்களுக்கு வானத்தில் இருந்து திருமண நாளிரவில் திடீ ரென்று கொடுக்கப்போவதாக பெற்றோர்களும், போதகர்களும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. குடும்பங்களில் குளருபடி ஏற்பட்டு சபைகள் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால் குடும்ப வாழ்க்கை பற்றி கர்த்தர் தந்துள்ள போதனைகளின்படி சபை மக்கள் சிந்தித்து ஆராய்ந்து வாழ்வதற்கு துணைபுரிவது போதகர்களின் அடிப்படை கடமை.
இன்னும் எத்தனையோ விடயங்களில் பண்பாடென்ற பெயரில் நாம் பாவத் திற்கு துணை போய்க்கொண்டிருக்கிறோம். இந்துமதக் கலாச்சாரம் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும் தமிழ்ப்பண்பாட்டில் இருக்கும் கள்ளிச்செடிகளும், களைகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். விசுவாசி என்று தன்னை அழைத்துக் கொள்ளுகிற எவரும் பிசாசின் கேவலமான வழிமுறைகளுக்கு பண்பாடு என்ற பெயரில் தங்களுடைய வாழ்க்கையில் இடம் கொடுக்கக்கூடாது. பண்பாடு என்ற இருட்டில் வாழ்ந்துகொண்டு, சமூகக் கட்டுப்பாடு என்ற போர்வையில் ஒலிந்துகொண்டு சீரழிந்து வருகிறார்கள் தமிழ் கிறிஸ்தவர்கள். நமது பண்பாட்டில் வேத அடிப்படையில் சீர்திருத்தத்தை நாம் கொண்டுவராதவரையில் நமது விசுவாசம் உயிரற்ற பிணமாகத் தான் இருக்கும். இயேசுவை விசுவாசிக்கிறோம் என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நம் வாழ்க்கையில் அந்த விசுவாசத்தின்படி அனைத்தும் அமைவதையே கர்த்தர் விரும்புகிறார்; எதிர்பார்க்கிறார்.