‘லிபரல்’ கருத்துக்களைக் கொண்டவர்களாலும், சில ஐரோப்பிய நாடுகளாலும், பல தேசங்களாலும் வெறுக்கப்பட்டவர் ஜோர்ஜ் புஷ். தேர்தலுக்கு முன் நடந்த ஒரு வாக்கெடுப்பு அவர் மறுபடியும் பதவிக்கு வருவதை உலக நாடுகள் விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டியது. “புஷ் பதவிக்கு வருவது அமெரிக்காவிற்கு அவமானம்” என்று நியூசிலாந்து வானொலிச் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். அந்தளவிற்கு புஷ்ஷை பலர் விரும்பாமல் போனதற்குக் காரணமென்ன?
தன்னைக் கிறிஸ்தவராக அடையாளம் காட்டிக் கொள்ளும் ஜோர்ஜ் புஷ் தன்னுடைய விசுவாசத்தை மறைத்து வைக்காமல் வெளிப்படையாகப் பேசுவதையும், ஜெபிப்பதையும், அரசியலுக்காக தன்னுடைய நம்பிக்கைகளைப் பலியிடாததையும் பிசாசின் உலகம் விரும்பவில்லை. முகத்தாட்சண்யம் காட்டி எல்லோருடனும் ஒத்துவாழ வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிராது, பலருக்குப் பிடிக்காதிருந்தும் தனக்கு நியாயமாய்ப்படும் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாயிருந்தது உலகத்துக்குப் பிடிக்கவில்லை. ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை வற்புறுத்திப் பேசுவதும், ஓரின மணத்திற்கெதிராக சட்டம் கொண்டுவர முயல்வதும், கருச்சிதைவு செய்வதற்கெதிரான சட்டத்தில் கையெழுத்திட்டதும் உலகத்துக்குப் பிடிக்கவில்லை. அராஜக அரசுகளோடு பொறுத்துப்போகாமல் தன் நாட்டின் நன்மைக்காகவும், உலக நாடுகளின் சமாதானத்திற்காகவும் பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடப் புறப்பட்டிருப்பது உலகத்துக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்கா புஷ்ஷை விரும்பவில்லை என்று உலக ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் தீட்டிவந்தன. அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜோர்ஜ் புஷ் மறுபடியும் பதவியேற்றிருக்கிறார்.
விசுவாசத்தைப் பற்றிப் பேசுவதும், ஒழுக்கத்தை வற்புறுத்துவதும் உலகை ஆளுகின்ற பிசாசுக்கு எந்தளவுக்குப் பிடிக்காமல் போகின்றது என்பதை அமெரிக்க அதிபர் தேர்தல் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க கிறிஸ்தவர்கள் சரியான நேரத்தில் அவசியமானதைச் செய்து நாட்டைக் காப்பாற்றிவிட்டார்கள். புஷ்ஷின் கீழ் நாடு வளம் பெறட்டும். அதையும்விட ஆத்மீக செழிப்படையட்டும்.