திருச்சபை வரலாறு

ரோம சபையும், சீர்திருத்த கவுன்சில்களும்

போப்பின் அதிகாரத்திற்கெதிரான முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை 1409-1449 வரை உருவாகிய மூன்று சீர்திருத்த கவுன்சில்கள் சுட்டிக்காட்டுகின்றன. கத்தோலிக்க சபை அங்கத்தவர்களனைவரதும் பிரதிநிதிகளைக் கொண்டதாகவும், போப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, அவசியமானால் போப்பை நியாயந்தீர்த்து பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தைக் கொண்டதாகவும் இருக்கும் வகையில் இந்தக் கவுன்சில் அமைக்கப்பட்டது. கத்தோலிக்க மத சீர்திருத்தத்தை நாடிய முதலாவது கவுன்சில் 1409ல் பீசாவில் (Pisa) உருவானது. இந்தக் கவுன்சில் ஒருவருக்கொருவர் எதிர் முனையில் இருந்து செயல்பட்டு வந்த போப்புக்களான 12ம் கிரெகரியையும், 13ம் பெனடிக்டையும் கலகக்காரர்கள், சத்திய விரோதிகள், பொய்யர்கள் என்று குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்தது. அத்தோடு, அவர்களுடைய இடத்தில் 5ம் அலெக்சாண்டரை (Alexander III) போப்பாகவும் நியமித்தது. இவ்வாறு ஆரம்பித்த சீர்திருத்தத்தைக் கவன்சில் தொடர முற்பட்டபோது புதிதாக நியமிக்கப்பட்ட போப் தன்னுடைய அதிகாரங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தில் தனக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கவுன்சிலை உடனடியாகக் கலைத்துவிட்டார்.

இரண்டாவது கவுன்சில் 1414-1418 வரை கொன்ஸ்டன்ஸ் (Constance) என்ற இடத்தில் கூடியது. இந்தக் கவுன்சிலே ஜோன் ஹஸ்சுக்கு (John Huss) மரண தண்டனை விதித்து தீர்ப்பளிதத்தது. அத்தோடு, ஜோன் விக்கிளிப் இறந்து நாற்பது வருடங்களுக்குப் பிறகு அவர் புதைக்கப்பட்டிருந்த இடத்தைத் தோண்டி எழும்புகளை வெளியே எடுத்து மறுபடியும் அவற்றைப் புதைக்க அனுமதி தர மறுத்தது. அந்தளவுக்கு விக்கிளிப்பின் மீது ரோமன் கத்தோலிக்க சபைக்கு ஆத்திரம் இருந்தது. இந்தக் கவுன்சிலே முறைகேடான நடத்தையைக் கொண்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டி போப் 23ம் ஜோனைப் (Pope John XXIII) பதவியில் இருந்து இராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி அவருடைய இடத்தில் 5ம் மார்டின் (Martin V) என்ற பெயரில் கார்டினல் கொலன்னாவை (Cardinal Colanna) நியமித்தது. இந்தக் கவுன்சிலும் எதிர் போப்புக்களாக இருந்த 12ம் கிரெகரியையும் (Gregory XII), 13ம் பெனடிக்டையும் (Benedict XIII) பதவி நீக்கம் செய்தது. 13ம் பெனடிக்ட் கவுன்சிலின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து 1424ல் தான் இறக்கும்வரை தானே சட்டப்படி போப் என்று கூறி வந்தார். 12ம் கிரெகரி கவுன்சில் கூடிய காலத்தில் மரணமடைந்தார். எந்தவிதமான நிலையான சீர்திருத்தத்தையும் இந்தக் கவுன்சிலால் ரோம சபையில் கொண்டுவர முடியவில்லை. கிறிஸ்துவிடம் இருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்ட அதிகாரத்தைத் தான் கொண்டிருப்பதாகவும் போப்பின் மீதும் சபை அங்கத்தவர்கள் மீதும் தனக்கே அதிகாரம் இருப்பதாகவும் கவுன்சில் அறிவித்துக் கொண்டது.

மூன்றாவது கவுன்சில் 1431ல் பேசல் (Basel) நகரில் கூடியது. இது பொகீமியாவில் ஹஸ்சைச் சார்ந்தவர்களினால் ரோம சபைக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை எதிர்நோக்கக் கூடியது. கவுன்சில் கூடுவதைப் போப் தடைசெய்யப் பார்த்தபோதும் சபை அங்கத்தவர்கள் போப்பைவிட கவுன்சிலுக்கே அதிகாரம் அதிகம் என்று கூறி போப்பின் வார்த்தைக்கு உடன்பட மறுத்துவிட்டார்கள். ஆனால், காலஞ் செல்லச் செல்ல கவுன்சிலின் மதிப்பு குறைவடைய 1449ல் போரரசன் 3ம் பிரெடிரிக் (Fredrick III) அதைக் கலைத்துவிட்டார்.

இந்த மூன்று கவுன்சில்களும் ரோமன் கத்தோலிக்க சபையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதில் வெற்றிபெறாத போதிலும், அதில் சீர்த்திருத்தம் அவசியம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தன. ரோம சபையை பிடித்திருந்த வியாதி அவர்கள் நினைத்திருந்ததைவிட மோசமானதாக இருந்தது. இதற்குப் பின்பு வந்தவர்களும் கத்தோலிக்க சபையில் சீர்திருத்தம் தேவை என்று பல முயற்சிகளை எடுத்தபோதும் போப்பின் அதிகாரத்தை வேரோடு பிடுங்கி எறியும் அளவுக்கு மார்டின் லூதர் செயல்பட ஆரம்பித்தவரையும் எவரும் எதையும் பெரிதாக செய்ய முடியவில்லை.

ஒரு முறை திரும்பிப் பார்ப்போம்

இதுவரை முதலாம் நூற்றாண்டில் ஆதிசபை அப்போஸ்தலர்களால் அமைக்கப்பட்டு, அதற்குப் பிறகு சபைப் பிதாக்களினால் அது வழிநடத்தப்பட்டு, காலஞ் செல்லச் செல்ல சபையை வழிநடத்தியவர்கள் சத்தி யத்தைவிட்டு விலக ஆரம்பித்தபோது திருச்சபை எவ்வாறு வேதத்தைப் பின்பற்றாமல் உலக நடைமுறைகளைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்தது என்று பார்த்தோம். அதன் பிறகே கிறிஸ்துவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிய போப்பின் பதவி உருவாகி, போப் கிரெகரியின் காலத்திலிருந்து ஆதியில் வேத அடிப்படையில் இயங்கி வந்த திருச்சபை எவ்வாறு ரோமன் கத்தோலிக்க மதமாக படிப்படியாக மாறியது என்பதையும் பார்த்தோம். போப்புக்களினதும், அரசுகளினதும் அதிகாரத்துக்கு உட் பட்டதாக, வேதத்தை நிராகரித்த அமைப்பாக ரோமன் கத்தோலிக்க சபை உருவாகியிருந்தது. மேலே நாம் பார்த்த கவுன்சில் சீர்திருத்தங்கள் இந்த ரோமன் கத்தோலிக்க அமைப்பை சீர்திருத்த எடுத்த முயற்சிகளாக இருந்தன. இந்தக் கவுன்சில்கள் போப்பின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனவேயல்லாது போலித்தனமான மதச் சடங்குகளையும், போதனைகளையும் அடிமட்டத்திலிருந்து மாற்றும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. சபை வரலாற்றில் ஏற்பட்ட மெய்யான சீர்திருத்தத்தை இனித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

இந்தப் 15ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் கர்த்தர் அற்புதமாக தனிப்பட்ட நபர்களில் தன் ஆவியின் மூலமாக கிரியை செய்தார். மெய்யான விசுவாசிகளின் தொகை இக்காலத்தில் குறைவாக இருந்தது. வேதத்தை தங்களுடைய மொழியில் மக்கள் வாசிக்க முடியாத நிலையை போப்புக்களும், ரோமன் கத்தோலிக்க அமைப்பும் ஏற்படுத்தி வைத்திருந்தன. அரச அதிகாரமும், ரோமன் கத்தோலிக்க அமைப்பும் இணைந்து செயல்பட்டதால் மக்கள் வேதத்தை வாசித்து, சிந்தித்து செயல்படவும், கர்த்தரின் வழிப்படி ஆராதிக்கவும் சுதந்திரம் இருக்கவில்லை. இக்காலத்தில் மெய்சபை உலகில் உண்டா? என்று கேட்கும் அளவுக்கு போலிச் சபை வியாபித்து மக்களை இருட்டில் வைத்திருந்தது. சத்தியத்திற்காக போராட ஆரம்பித்த ஜோன் விக்கிளிப், ஜோன் ஹஸ் போன்றோர் அரச ஆதரவுடன் செயல்பட்ட கத்தோலிக்க மதத்தால் வேட்டையாடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர், சிலர் கொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்க மதத்திற்கும், அதன் போதனைகளுக்கும் எதிரான எந்த முயற்சியும் ராஜதுரோகமாகக் கணிக்கப்பட்டு தண்டனைக்குள்ளானது.

இத்தகைய சூழ்நிலையில்தான் இந்த நிலை மாறி மெய்க் கிறிஸ்தவ வாழ்க்கை வாழவும், வேத அடிப்படையிலான ஆராதனையில் ஈடுபடவும் வேண்டும் என்று ஆர்வம் காட்டியவர்களை கர்த்தர் எழச் செய்தார். அவர்கள் போப்புக்கு எதிராகவும், போப்பை ஆதரித்த அரசுக்கு எதிராகவும் சீர்திருத்தத்தில் ஈடுபட்டனர். சீர்திருத்தம் என்பது கத்தோலிக்க மதத்தால் வாசிக்க முடியாதபடி தடைசெய்யப்பட்டிருந்த வேதத்தை வாசித்து கர்த்தரை அறிந்துகொள்ள தனிநபர்கள் எடுத்த முயற்சி. பாவத்திற்கு பரிகாரம் தேடியும், மெய்யான மனந்திரும்புதலையும், இரட்சிப்பையும் நாடி அவர்கள் எடுத்த நடவடிக்கைகளே சீர்திருத்தம் என்கிறது சபை வரலாறு. கர்த்தரின் வழிகளைப் பின்பற்றி அவரை ஆராதிக்க வும், பரிசுத்த வாழ்க்கை வாழவும், சபை அமைக்கவும் அவர்கள் எடுத்த முயற்சியே அது. அத்தகைய முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டபோது போப்பும், கத்தோலிக்க மதமும், அரசும் அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. சபை சீர்த்திருத்தம் என்பது மெய்யான கிறிஸ்தவத்தை உலகத்தில் மறுபடியும் ஏற்படுத்துவதற்காக கர்த்தர் ஆரம்பித்த ஆத்மீக செயல். இதுவே பின்பு மார்டின் லூதரின் மூலம் பெரீயக்கமாக உருவாகி ரோமன் கத்தோலிக்க மதத்தின் வீழ்ச்சிக்கும், மறுபடியும் மெய்ச் சபைகள் தோன்றவும் காரணமாக அமைந்தன.

16ம் நூற்றாண்டில் சபை சீ¢ர்திருத்தம் ஆரம்பித்து இன்று கிறிஸ்தவ சபைகள் உலகெங்கும் வியாபித்து கர்த்தரை ஆராதித்து, ஊழியத்தில் ஈடுபட்டு வந்தபோதும், பல் பிடுங்கப்பட்ட பாம்பாக, அதிகாரத்தை இழந்து இருந்து வரும் ரோமன் கத்தோலிக்க மதம் தொடர்ந்தும் தன் னைத் தாய்ச் சபையாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறது. உண்மையில் “சபை” என்ற பதத்தை அது பயன்படுத்த வேதம் அனுமதிக்கவில்லை. மெய்யான விசுவாசமுள்ள ஆத்துமாக்களைக் கொண்டமைந்த சபைகள் மட்டுமே மெய்ச்சபைகள். அது ரோமன் கத்தோலிக்க மதத்திற்குப் பொருந்தாது. வேதபூர்வமான கிறிஸ்தவ திருச்சபைகள் சில்லறைத் தனமான காரியங்களுக்காக முரண்பட்டுத் தன்னைவிட்டு விலகிப் போனதாகவும், திரும்பவும் ஒருநாள் மீண்டும் அவை தன்னோடு இணைந்து கொள்ளும் என்ற கனவுலகில் கத்தோலிக்க மதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ சபைகளைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் அது தொடர்ந்து ஈடுபடத் தவறவில்லை.

இந்தியாவில் சமய சமரசம் (Ecumenism) என்ற பெயரில் சத்தியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தென்னிந்திய திருச்சபையும் (Church of South India), ஆங்கிலிக்கன் சபைகளும் (Anglican Churches), மெத்தடிஸ்ட் சபைகளும் (Methodist Churches), பிரெஸ்பிடீரியன் சபைகளும் (Presbyterian Churches), கொங்கிரிகேஷனல் சபைகளும் (Congregational Churches) இணைந்து ஒரே அமைப்பாக 1947ல் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இயங்கி வருகின்றன. இவை United or Uniting Churches of India என்ற பெயரில் இயங்கி வருகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த அமைப்பு ரோமன் கத்தோலிக்க மதத்துடன் ஒத்துழைப்பதற்கான வழிவகைகளை நாடி ஏற்கனவே பலதடவைகள் உலக அளவில் சமய சமரசக் கூட்டங்களை நடத்தியுள்ளது; தொடர்ந்து நடத்திக் கொண்டும் வருகின்றது. திருச்சபை வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிய அறிவு இல்லாமல், கத்தோலிக்க மதத்துக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவுக்கு இறையியல் போதனைகள் ஒரு காரணமல்ல என்று அறிவித்து, இந்த சமய சமரசக் கலந்துரையாடல்கள் 1992ல் இருந்து நடந்து வருகின்றன. இதேவிதமான சமய சமரச கூட்டங்களை பெந்தகொஸ்தே இயக்கத்தோடும் இந்த அமைப்பு நடத்தியுள்ளது. சத்தியத்தை ஏற்கனவே உதறித்தள்ளிவிட்ட இந்த சமயசமரச சபைகள் அனைத்தும் ரோமன் கத்தோலிக்க சபையுடன் இணையப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்த முறையிலேயே 15ம் நூற்றாண்டிற்கு முன்பு ரோமன் கத்தோலிக்க மதம் தன்னை வளர்த்து பலப்படுத் திக் கொண்டதை நாம் ஏற்கனவே வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s