போப்புகளின் வளர்ச்சியின் உச்சகட்டம்
ஹில்டபிராண்டு (Hilderbrand) 1073ல் ஏழாம் கிரெகரி என்ற பெயரோடு போப்பாக பதவியேற்றபின் உலகத்தில் சபையின் பங்கில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தார். பேரரசன் முதற்கொண்டு சாதாரண மனிதர்கள்வரை உலகத்தில் அனைவரும் தன்னுடைய அதிகாரத்துக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். கிறிஸ்துவின் பிரதிநிதியாக, பேதுருவின் வழிவந்த தனக்கு இந்த உலகத்தில் சகல அதிகாரமும் இருப்பதாக அறிவித்தார்.
இதன் முதற்படியாக குருமார்களில் சிலர் திருமண பந்தத்தில் ஈடுபடலாம் என்ற கருத்தை முழுபலத்தோடு தாக்கினார். அன்றிலிருந்து கத்தோலிக்க மதகுருமார் பரிசுத்தமுள்ளதும், சிறப்பான அனுபவமுமான திருமண பந்தத்தில் ஈடுபட்டு குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பது அடியோடு தடைசெய்யப்பட்டது. அடுத்ததாக சபை சம்பந்தமான காரியங்களிலும், நியமனங்களிலும் அரசு அங்கீகாரம் பெறுவதை ஹில்டபிராண்டு வன்மையாகக் கண்டித்தார். இது அங்கீகார சடங்கு (Investiture) என்று அழைக்கப்பட்டது. எவராவது சட்டரீதியான ஒரு பதவி நியமனம் பெறுவதற்கோ அல்லது அதிகாரபூர்வமாக எதையாவது பெற்றுக்கொள்ளும்போதோ அதற்கு அடையாளமாக இந்த அங்கீகாரம் அமைந்திருந்தது. சபையைப் பொறுத்தவரையில் இந்த அங்கீகாரம் அவசியமற்றது என்பது ஹில்ட பிராண்டின் வாதமாக இருந்தது. சபைக்காரியங்களில் அரசின் தலையீடாக இதை அவர் கருதினார். இது நாட்டு நிர்வாகத்துக்கு அவசியமாக இருந்த போதும் ஹில்டர்பிராண்டு எதற்கும் மசிவதாயில்லை.
1075ல் இதை ஹில்டபிராண்டு தடைசெய்து தன்னை வந்து சந்திக்கும்படி பேரரசன் நாலாம் ஹென்றிக்கு கட்டளையிட்டார். இது பேரரசன் சபை யின் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருப்பதுபோல் அமைந் தது. பேரரசன் இதற்கு உடன்படாமல் போப்பைப் பதவி நீக்கம் செய்யும்படி ஜெர்மானிய கவுன்சிலை வற்புறுத்தினான். கோபமுற்ற போப் பேரர சனைப் பதவி நீக்கம் செய்தார். நாடும், மக்களும் போப்பிற்குக் கட்டுப்பட்ட தால் ஒருவரும் பேரரசனை மதிக்கவில்லை. உணவுக்கும், தண்ணீருக்கும் கூட வழி இல்லாத நிலையில் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட பேரரசன் ஒரு குறிப்பிட்ட பனிக்காலத்தில் தன் மனைவி பிள்ளைகளோடு அல்ப்ஸ் மலைச்சிகரங்களைக் கடந்து போப்பை சந்திக்க வந்தார். போப் தங்கியிருந்த கனோசா மாளிகைக்கு வந்து மதில்களுக்கு வெளியில் அனுமதி நாடி நின்றார். காலணிகள் எதுவுமின்றி மூன்று நாட்கள் குடும்பத்தோடு பேரரசன் போப்பைப் பார்ப்பதற்காக கடும் பனியில் நிற்க வேண்டிய தாயிற்று. நான்காவது நாள் போப் அரசன் தன்னை சந்திக்க அனுமதியளித்தார். அரசன் போப்பின் காலில் விழுந்து தன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னிக்க வேண்டுமென்று கதறவேண்டியதாயிற்று. அதற்குப் பிறகே போப் அரசனை மன்னித்து தடையை நீக்கினார். இதன் மூலம் போப்பின் வெற்றி உறுதியானது.
சில காலங்களுக்குப் பின்பு ஹென்றி தன்னுடைய எதிரியோடு போரிட்டு வென்றபிறகு மீண்டும் தலை நிமிர முடிந்தது. போப் ஹில்டபிராண்டுக்கு சிசிலியின் படைகளின் துணையிருந்தபோதும் ஹென்றியை எதிர்த்து நிற்க முடியாமல் பின்வாங்க நேர்ந்தது. ஹென்றி அவருடைய இடத்தில் மூன் றாம் கிளெமன்ட்டை அமர்த்தினான். பதினொராம் நூற்றாண்டின் நெப் போலியன் என்று அழைக்கப்பட்ட ஹென்றி நாடுகடத்தப்பட்ட நிலையில் 1085ல் மரணமடைந்தான். அவனுடைய காலம் இந்த வழியில் முடிவடைந்த போதும் அவனுடைய கோட்பாடுகள் அவனுக்குப்பின் வந்த அரசர்களால் பின்பற்றப்பட்டன. பேரரசன் போப்பின் முன் மண்டியிட நேர்ந்ததை எவரும் மறந்துவிடவில்லை. ஹில்டபிராண்டின் ஆதரவாளர்கள் போப் இரண்டாம் ஆர்பனை நியமித்தார்கள். ஐந்தாம் ஹென்றியின் பதவிக்காலத்தில் Investiture பற்றி நெடுங்காலமாக இருந்த பிரச்சனைக்கு 1122ம் ஆண்டில் ஒரு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் மத்திய காலப்பகுதியில் போப்புக்கும் பேரரசனுக்கும் இடையில் இருந்த பெரும் பிரச்சனை தீர்ந்தது.
12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லொம்பார்டியின் (Lombardy) செல்வ மிக்க நகரங்கள் குடியரசுகளாவதை விரும்பின. அவர்களின் தலைவர்களில் ஒருவனாக எழுந்தவன் பிரேசியாவின் ஆர்னால்டு (Arnold of Brescia 1100-1153) என்பவன். இவன் பிரசித்திபெற்ற அபிலார்டு (Abeland) என்பவரின் மாணவன். இவன் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் காணப்பட்ட எளிய வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப வேண்டும் என்று கூறி சீர்திருத்தவாதத்தின் ஆவியை நினைவுபடுத்துபவனாக இருந்தான். இவனுடைய பெரும் எதிரியாக இருந்தவன் கிளேயார்வொக்சின் பெர்னார்டு (Bernard of Clairvaux) என்பவன். 1143ல் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ரோமில் ஆர்னால்டு மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டான். அதற்குப்பிறகு ஏற்பட்ட சண்டையில் ஒரு போப் உயிரிழக்க நேரிட்டது, அடுத்த போப் பிரான்சு நாட்டிற்கு ஓடித்தப்ப நேரிட்டது.
பிரெட்ரிக் பார்பரோசா (Fredrick Barbarossa) என்ற இளம் பேரரசன் இத் தாலிக்குப் படையுடன் வந்து லொம்பார்டைத் தற்காலிகமாக அடக்க நேரிட் டது. போப்புக்கு Investitute அளிக்குமுகமாக பயமேயறியாத ஆர்னால்டை பிரெட்ரிக் அவரிடம் ஒப்படைத்தான். பின்பு ஆர்னால்டு கொல்லப்பட்டான்.
பிரெட்ரிக்குக்கு போப்புடன் இருந்த நட்பு நெடுங்காலம் நீடிக்கவில்லை. 1176ல் லெக்னானோ (legnano) என்ற இடத்தில் லொம்பார்ட் நகரப் படைகளால் பிரெட்ரிக் முறியடிக்கப்பட்டான். பெருவியப்பு ஏற்படுத்தும்படியான நிகழ்ச்சிகள் அதற்குப் பின் நிகழ்ந்தன. ஜூலை 24, 1177ல் பிரெட்ரிக் பார்ப ரோசா போப் அலெக்சாண்டருக்கு முன் தன்னுடைய சால்வையை நிலத்தில் விரித்து மண்டியிட்டுத் தலைவணங்கி அவருடைய கால்களை முத்தமிட்டான். அதற்குப் பின் போப்பின் குதிரை லகானைக் கையில் பிடித்துக் கொண்டு குதிரைக்குப் பக்கத்தில் தெருவில் நடந்து போனான். ஒரு நூற்றா ண்டுக்கு முன்பு போப் ஹில்டபிராண்டு அடைந்த வெற்றியைவிட பெரு வெற்றியாக போப்புக்கு இது அமைந்தது.
சிலுவைப் போர்கள் (1095-1270)
ஹில்டபிராண்டு பெரிதும் ஆதரவளித்த சிலுவைப் போர்கள் அவருக்குப் பின்வந்த போப்புகளால் நடத்தப்பட்டன. அராபியர்களிடமிருந்து எருச லேமை மததீவிரவாதிகளான துருக்கிய இஸ்லாமியர்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு யாத்திரை செய்தவர்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்பட்டதோடு கிறிஸ்தவர்கள் அதைத் தமக்கேற்பட்ட களங்கமாகவே கருதினர். போப் மூன்றாம் அர்பன் முதலாவது சிலுவைப்போரை நடத்த அனைத்து ஏற்பாடு களையும் செய்தார். இதனால் தனக்கும் போப்புப் பதவிக்கும் கிடைக்கப் போகும் புகழை எண்ணி அவர் பெருமிதம் அடைந்தார். மக்களும் சிலுவைப் போருக்கு பெரும் ஆதரவளித்தனர். மக்களுக்கு சகலவிதமான ஊக்கத்தையும் சபை அளித்தது. சிலுவைப் போரில் ஈடுபடுபவர்களின் பலவிதமான பாவங்களும் சபையால் மன்னிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சமூக விரோதிகளுக்கு மன்னிப்பும், கடன் வாங்கியவர்களுக்கு கடனடைப்பும், வாழ்க்கை யில் படுபாவங்களைச் செய்தவர்களுக்கு பரலோக சந்தோஷமும் கிடைக்கும் என்று சபை உறுதியளித்தது. சபையின் பாவமன்னிப்புப் பத்திரங்கள் விற்கப்படுவதற்கு சிலுவைப் போர் வேறு எதையும்விட அதிக உதவிசெய்ததென்றே கூற வேண்டும்.
பேதுரு என்ற மதகுரு மக்களைத் தூண்டிவிட்டு போருக்கு ஆயத்தப்படுத்தினான். கர்த்தர் தங்களை அற்புதமாகக் காப்பார் என்ற நம்பிக்கையோடு உணர்ச்சி வெள்ளம் கரைபுரண்டோட ஆயிரக்கணக்கானவர்கள் எருசெலேமை நோக்கிப் புறப்பட்டனர். 1096ல் இப்படிப் போனவர்கள் 275,000 பேர். இவர்களில் பெரும்பாலானோர் குளிராலும், வியாதிகளாலும் வழியி லேயே இறந்தார்கள். இவர்களை வழிநடத்திய மதகுரு பேதுரு ஆபத்து தலையைக் காட்டிய நிமிடமே பறந்து தப்பிவிட்டார்.
முதலாவது அதிகாரபூர்வமான சிலுவைப் போருக்கான படை 1096ல் கொன்ஸ்தாந்திநோபிள் (Constantinople) வழியாகக் கிளம்பியது. 600,000 பேரைக்கொண்ட இந்தப் பெருங்கூட்டமும் ஆயிரக்கணக்கானோரைப் பலிகொடுத்தது. 1099ல் மீதமிருந்தோர் எருசலேமை அடைந்தனர். மொத்தத் தொகையில் பத்திலொரு பகுதியினர் மட்டுமே எருசலேமை அடைந்தனர். நகரை அடைந்ததும் அவர்கள் செய்த முதல் வேலை செரசீன்களை (Saracens) வெட்டிச் சாய்த்ததுதான். நிகழ்ந்த எட்டு சிலுவைப் யாத்திரைகளில் இது மட்டுமே ஓரளவுக்கு வெற்றியடைந்தது என்று சொல்ல வேண்டும். ஏனைய சிலுவை யாத்திரைகள் தோல்வியில் போய் முடிந்தன. 1270 வரை இத்தகைய சிலுவை யாத்திரைகள் தொடர்ந்து நடந்தன. பெரும் ஆரவாரத்தோடு ஆரம்பித்து ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைக் குடித்துப் பல பிரச்சனைகளையும் உருவாக்கிய சிலுவை யாத்திரைகள் இறுதியில் ஒரு முடிவு க்கு வந்தது போப் முதற்கொண்டு ஐரோப்பாவில் அனைவருக்கும் பெரும் நிம்மதியை அளித்தது.
போப் மூன்றாம் இனொசன்ட் (1198-1216)
போப் இனொசன்ட் பதவியேற்ற காலத்தில் போப்புக்களின் ஆதிக்கம் உச்ச நிலையை அடைந்திருந்தது. ஹில்டபிராண்டின் கோட்பாடுகளை இவர் பின்பற்றியபோதிலும் அவற்றை நடைமுறையில் செயலாக்குவதில் அவரைவிட கைதேர்ந்தவராக இருந்தார். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் இவருக்கு அனுகூலமாக அமைந்தன. நாலாம் ஹென்றி கனோசாவிலும், அதற்குப்பின் பிரெட்ரிக் பார்பரோசா வெனிஸிலும் அடைந்த அவமானங்கள் போப்பே சகல அதிகாரமும் கொண்டவரென்றும், அவருக்குக் கீழ் எல்லா அரசுகளும் அடங்கி வாழ வேண்டும் என்றும் மக்களை நம்ப வைத்திருந் தன. அத்தோடு சிலுவை யாத்திரைகளும் போப்பின் நிலையை வலிமைப் படுத்தியிருந்தன. மூன்றாம் இனொசன்டின் வெற்றி அபாரமாயிருந்தது. இங்கிலாந்தின் அரசனான ஜோனும், பிரான்சின் அரசனான பிலிப்பும் அவமானப்படுத்தப்பட்டு போப்புக்கு அடங்கியிருக்கும் நிலைக்குக் கொண் டுவரப்பட்டிருந்தார்கள். அக்காலத்தில் உலகத்தில் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் மக்கள் வாழ்ந்த பகுதிகளனைத்திலும் போப்பின் செல்வாக்கும், அதிகாரமும் நிலைபெற்றிருந்தது. தான் வாழ்ந்து அதிகாரம் செலுத்திய இத்தாலியில் தன்னுடைய விருப்பப்படி அனைத்தையும் செய்து அதிகாரம் செலுத்தி வந்தார் போப் இனொசன்ட்.
சிலுவை யாத்திரை என்ற பெயரில் அல்பிஜீனியர்களுக்கு (Albigenses) எதிராக இவர் ஆரம்பித்த போர் இவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் முரணாக இருந்தது. தென்பிரான்சில் வாழ்ந்த அல்பிஜீனியர்கள் போப்புகள் வெறும் மனிதர்கள் என்றும் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினர். 1215ல் இனொசன்ட் கூட்டிய, இதுவரை கூடிய எல்லாக் கவுன்சில்களுக்கும் உயர்ந்ததாக இருந்த லேட்டரன் கவுன்சிலே அவருடைய பதவிக்கு பெருமதிப்பூட்டியதாக இருந்தது.
போப் எட்டாம் போனிபேஸ் (1294-1303)
மூன்றாம் இனொசன்டின் காலத்தில் உச்சகட்டத்தை அடைந்த போப்பின் அதிகாரம் எட்டாம் போனிபேஸின் காலம்வரை நிலைத்திருந்தது. அதற்குப் பின் அது தள்ளாடி நிலைதளர ஆரம்பித்தது. போனிபேஸ் சகல அதிகாரங்களும் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும், ‘மனிதன் இரட்சிப்பை அடைய போப்பிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது’ என்றும் அறிக்கை யிட்டார். போப்பின் இத்தகைய செயல்கள் அரசர்களையும், இளவரசர்களையும் கோபம் கொள்ளச் செய்தன. நாடுகள் போப்பைப் பற்றிய தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள இது வழிவகுத்தது. போப்புக்கு எதிரான வர்கள் பொங்கி எழவும், தேசிய உணர்ச்சி நாடுகளில் பெருகவும் ஆரம்பித்தது. ஒரு பேரரசைக் கட்டுப்படுத்த முடிந்த போப்பால் பல நாடுகளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை.
ஆவிக்னன் போப்புகள்
அடுத்ததாக போப்புகள் இத்தாலிக்கு வெளியில் வாழ ஆரம்பித்தது அவர் களுடைய பதவியை பலவீனத்துக்குள்ளாக்கியது. ஐந்தாம் கிளெமன்ட் பிரான்சின் அரசனுக்கு அதிகளவு அடங்கியிருந்ததால் இத்தாலி மக்களின் கோபத்துக்கு உள்ளானார். இத்தாலிக்கு வெளி யில் இருந்து தன் கடமை களைச் செய்ய ஆரம் பித்த கிளெமன்ட் இறுதி யில் 1309ல் ஆவிக்னனில் இருந்து பணிபுரிய ஆரம் பித்தார். போப்புகள் எழுபது வருடங்களுக்கு மேலாக இத்தாலியில் வாழ்ந்துள்ளனர். போப்புகள் இத்தாலிக்கு வெளியில் வாழ ஆரம்பித்தது ரோமன் கத்தோலிக்க சபைக்கு அரசியல் ரீதியி லும், ஆத்மீக ரீதியிலும் ஆபத்தை விளைவித்தது. 1377ல் பதினொராம் கிரெ கரி மறுபடியும் இத்தாலி யில் இருந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
போப்புக்கள் மத்தியில் போராட்டம்
1378ல் இத்தாலியில் ஒரு போப்பும், ஆவிக்ன னில் ஒரு போப்புமாக இத்தாலியையும், பிரான்சையும் பிரதிநிதித்துவப் படுத்தி பணிபுரிய ஆரம் பித்தனர். நாற்பது வருடங்களுக்கு தொடர்ந்த இந்தப் பதவிப்போர் கத்தோலிக்க மதத்தை மேலும் பலவீனப்படுத்தி இரட்சிப்புக்கு போப்பில் தங்கியிருந்த கத்தோலிக்க உலகத்தை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கியது.
(கடந்த இதழில் ஹில்ட பிராண்டு என்ற பெயர் தவறுதலாக ஹைடில்பிராண்டு என்று பிரசுரமாகியுள்ளது. மன்னிக்கவும்)