கத்தோலிக்க மதத்திற்கெதிரான கடும் எதிர்ப்பு
ஏழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையும் பல கிறிஸ்தவ குழுக்கள் வரலாற்றில் உருவாகி ஆர்மீனியா, ஆசியா மைனர், பல்கேரியா, பொஸ்னியா பால்கன் நாடுகள், நெதர்லாந்து என்று பல தேசங்களில் பரவியிருந்தன. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பெர்காட்ஸ் (Beghards) என்று அழைக்கப்பட்ட ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு பகுதியினர் நெதர்லாந்தில் ரைன் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பரவியிருந்தனர். பன்னிரெண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் தெற்கு பிரான்சில் அல்பிஜென்சஸ் (Albigenses) என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் வளர்ந்திருந்தனர். வட இத்தாலியில் இக்காலப் பகுதியில் வளர்ந்திருந்த வர்களே வல்டேன்சஸ் (Waldenses) என்ற பிரிவினர்
இவர்கள் எல்லோருமே கத்தோலிக்க மதத்தில் காணப்பட்ட போலிப் போதனைகளுக்கு எதிராக இருந்தனர். இப்பிரிவினர் தங்களுடைய காலத்தில் அநேகரைக் கவர்ந்திழுத்தனர். மிகுந்த வைராக்கியமுள்ள பெருந் தொகையினர் இப்பிரிவினரைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இப்பிரிவுகள் எல்லாமே தெளிவான வேதபோதனைகளைப் பின்பற்றின என்று கூற முடியாது. அத்தோடு எல்லாமே ஒரேவிதமான போதனைகளையும் கொண்டிருக்கவில்லை. இவற்றில் சில பிரிவுகள் தவறான போதனைகளையும் கொண்டிருந்தன. கத்தோலிக்க மதம் இவர்களை மனிக்கேனியர்கள் (Manichaeans) என்று குற்றஞ்சாட்டியது. அதாவது, இவர்கள் மணி என்ற மனிதனின் போதனைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றினார்கள் என்பது அந்தக் குற்றச்சாட்டு. மணி (Mani) கிறிஸ்தவத்தையும், சௌராஷ்டிரியனிசத்தையும் (Soroastrianism) ஒன்று சேர்க்க முயற்சி செய்தான். சௌராஷ்டிரியனிசம் ஆதி பெர்சியாவின் (Persia) மதமாக இருந்தது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் எதைப் பின்பற்றியிருந்தபோதும் இவையனைத்தும் கத்தோலிக்க மதத்தி லிருந்து வேறுபட்ட வாழ்க்கையும், ஆராதனை வழிகளையும் வேத அடிப் படையில் பின்பற்றி தங்களுடைய சொந்த மொழிகளில் தனித்துவத்தோடு இயங்கி வந்தன. இவையனைத்தும் மிகவும் எளிமையான பக்திவிருத்தியுள்ள வாழ்க்கையை நாடி நின்றன. எல்லாப் போப்புகளும் இப்பிரிவுகளைக் கண்டிக்கவில்லை.
இப்பிரிவுகளில் மிகவும் பிரபல்யமானது அல்பிஜென்சஸ் (Albigenses) பிரிவு. இவர்கள் அக்காலத்தில் கத்தோலிக்க குருமார்களாக இருந்தவர்கள் தேவ மனிதர்கள் அல்லவென்றும், அவர்கள் ஆத்மீகத் தலைவர்களாக இருக்க அருகதையற்றவர்களென்றும் கருதினர். இதன் காரணமாக அவர் கள் கடுந்துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பிஷப்புக்களால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இருபது வருடங்களுக்கு அல்பிஜென்சியர் கள் கொடுமைப்படுத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் மிகச் சில அல்பிஜென்சியர்களே உயிர் வாழ்ந் தனர். அவர்களுடைய உடலை சிதைக்க முடிந்தாலும் எதிரிகளால் அவர்களுடைய உணர்வுகளை அழிக்க முடியவில்லை. சீர்திருத்தவாத காலம் வரையும் கத்தோலிக்க மதத்திற்கெதிரான இந்த உணர்வுகள் உயிர்த்துடிப் போடிருந்தன.
கத்தோலிக்க மதத்தை எதிர்த்து வேத அடிப்படையில் தனி வழி சென்ற இந்தப் பிரிவுகள் பற்றிய முழு ஆய்வும் இதுவரை செய்யப்படவில்லை. இவர்களைப் பற்றி நிலவி வரும் கருத்துக்கள் பெரும்பாலும் இவர்களுடைய எதிரிகளிடமிருந்து பெறப்பட்டிருப்பதால் அவை அனைத்தையும் நம்புவது கடினம்.
கத்தோலிக்க மதத்திற்குள்ளிருந்தே அம்மதத்திற்கெதிரான எதிர்ப்பு
இனி கத்தோலிக்க மதத்திற்கு அதற்குள்ளிருந்து எழுந்த எதிர்ப்பைப் பார்ப்போம். இந்த எதிர்ப்பாளர்களில் முக்கியமானவர் பாதுவாவைச் செர்ந்த மார்சீலியஸ் (Matsilius of Paduva, 1270-1342). இவர் ஒரு மருத்துவர். 1324ல் இவர் எழுதிய நூலில் வேதம் மட்டுமே நம் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய சகல அதிகாரத்தையும் கொண்டது என்று எழுதியிருந்தார். இவருடைய கருத்துக்கள் மதகுருமார்களின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டுமென்றும், சாதாரண மக்களின் சார்பாக அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் குருமார்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தன. அந்தக் காலத்தில் இத்தகைய கருத்துக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக இருந்தன.
இவரைவிட முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு மனிதர் ஆங்கிலேய ரான வில்லியம் ஓக்கம் (William Occam, 1280-1347) சிறந்த கல்விமானாகிய இவர் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் பணியாற்றி வந்தார். இவரும் கத்தோலிக்க மதத்தின் அதிகாரத்திற்கெதிராக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவர்கள் அக்காலத்தில் தலையெடுத்து வந்த தனித்துவத்தோடு சிந்தித்து வருபவர்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். இவரைப் போன்றோர் மதத்துறையில் இருப்பவர்கள் நம்முன் வைக்கும் போதனை களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பக்கூடாது என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டு வந்தவர்களாக இருந்தனர்.
ஜோன் விக்கிளிப் (1320-1384)
தன்னுடைய காலத்தில் தலைசிறந்த கல்விமானாக விளங்கினார் ஜோன் விக்கிளிப் (John Wycliff). ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தன் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்தார் விக்கிளிப். ரோமன் கத்தோலிக்க மதத்தின் குருவாக இறக்கும்வரை இருந்த விக்கிளிப் திருச்சபையின் ஒரே தலைவர் கிறிஸ்து மட்டுமே என்று பறைசாற்றினார். போப்பை அந்திக்கிறிஸ்து என்றும் அறிவித்தார். அதிகார வெறிபிடித்த மதத்தலைவர்களையும், குருமார்களையும் வேதம் அடியோடு வெறுக்கின்றது என்று சூளுரைத்தார். கத்தோலிக்க மதத்தின் திருவிருந்துக் கோட்பாட்டை அடியோடு நிராகரித் தார் விக்கிளிப். வேதத்தில் அதற்கு இடமில்லை என்று வாதிட்டார். ரோமன் கத்தோலிக்க மதத்தின் அதிகாரம், பேர்கட்டரி, பரிசுத்தவான்களுக் கான ஆராதனை, சிலை வணக்கம் அத்தனையையும் கடுமையாக கண்டித்தார்; அவற்றை வேதத்தில் பார்க்க முடியாது என்று விளக்கினார். அவரை “ஆங்கில சீர்திருத்தவாதத்தின் விடிவெள்ளி” (The Morning Star of Reformation) என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.
விக்கிளிப் பிரசங்கிகளைத் தயார் செய்தார். இவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அந்தக் காலத்தில் மதகுருக்கள் எந்தவிதமான போதனைகளையும் கொடுக்காததால் மக்கள் வேதபோதனைகளை அறியாமல் வாடிக்கொண்டிருந்தபோது இந்தப் பிரசங்கிகளே நாடு முழுவதும், பட்டிதொட்டியெங்கும் போய் வேதப் பிரசங்கம் அளித்தார்கள். அது மட்டுமல்லாது விக்கிளிப்பினுடைய வழிவந்தவர்கள் இலத்தீன் வல்கேட்டிலிருந்து (Latin Vulgate) ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழிபெயர்த்திருந்த வேதத்தையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. இளவரசர்களி லிருந்து, விவசாயிவரை அனைவரும் வேதத்தை தங்களுடைய மொழியில் படிப்பதற்கு இதுவே வழிவகுத்துக் கொடுத்தது.
விக்கிளிப்பினுடைய எழுத்துக்களுக்கு அக்காலத்தில் மக்கள் தந்த வரவேற்பு, சபை சீர்த்திருத்தத்தின் அவசியம் எந்தளவுக்கு நாட்டு மக்களால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக இருந¢தது. நூற்றுக்கணக்கான மதகுருமார்களும், பெண் மதகுருமார்களும் அவருடைய எழுத்துக்களில் ஆர்வம் காட்டி வாசித்தனர். அதேவேளை, எதிர்பார்த்தது போல் பெரும் எதிர்ப்பும் இருந்தது. அவருடைய எதிரிகள் அவரை எரித்துவிடத் துடித்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றமும், ஜோன் கோன்ட்டும் (John Gaunt) அவருடைய பக்கம் இருந்ததால் அவர்களால் அவரைத் தொலைத்துவிட முடியவில்லை. அவருடைய எதிரிகள் அவரை அழித்து விட முயன்றதற்கு மதத்தைவிட அரசியலே முக்கிய காரணமாக இருந்தது. ஆவிக்னனில் (Avignon) இருந்து அதிகாரம் செலுத்திய போப்பையும், பிரான்சின் அரசனுக்கு கீழிருந்த நிலையையும் அவர்கள் வெறுத்தார்கள்.
ஜோன் ஹஸ் (1360-1415)
ஜோன் ஹஸ் (John Huss) விவசாயம் செய்து வந்த வறிய குடும்பத்தில் பிறந்தார். தன்னுடைய திறமையை முழுதாகப் பயன்படுத்தி ஐரோப்பாவில் பாரிஸ் (Paris), ஆக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகங்களைவிட செல்வாக்கு மிகுந்த பல்கலைக் கழகமாக இருந்த பிராக் பல்கலைக் கழகத்தில் (Prague) போதகராகப் பதவியேற்றார். ஹஸ் மெய்யான மனந்திரும்புதலைப் பெற்று பொகீமிய மொழியில் (Bohemian) பிரசங்கம் செய்யக்கூடிய சிறந்த பிரசங்கியாக இருந்தார். சுவிசேஷத்தை மிகவும் உணர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பிரசங்கித்து பொதுவான பாவச் செயல்களையெல்லாம் கண்டித்து வந்தார். ஏனைய மதகுருமார்களுடைய உலகப்பிரகாரமான வாழ்க்கையையும், பக்திவிருத்தியற்ற நடைமுறையையும் அவர் கண்டித்துப் பிரசங்கித்தபோதே அவர்கள் அவருடைய எதிரிகளாக மாறினார்கள்.
அக்காலத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கும், பிராக் பல்கலைக் கழகத்துக்கும் பெருந்தொடர்புகள் இருந்தலால் விக்கிளிப்பின் போதனைகள் பிராகை அடைந்து ஹஸ்ஸும் அவரைச் சார்ந்தவர்களும் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஜெர்மானியர்கள் ஹஸ் போலிப் போதனைகளை அளிப்பதாக குற்றஞ்சாட்டினர். பிராக்கின் பொது இடங்களில் அவருடைய நூல்கள் எரிக்கப்பட்டன. நகரின் ஆர்ச்பிஷப் அவரு டைய பிரசங்கத்தைத் தடைசெய்ய முயன்றார்.
இறுதியில் கொன்ஸ்டன்சில் (Constance) இருந்த கவுன்சிலின் முன் வரும்படி அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஜெர்மானிய அரசரான சிகிஸ்மன்ட் (Sigismund) நல்ல முறையில் அவர் விசாரிக்கப்படுவார் என்று கொடுத்த வாக்கின் காரணமாக ஹஸ் கொன்ஸ்டன்சுக்குப் போனார். உடனடியாக அங்கே அவர் சிறையில் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப் பட்டார். அவரை உடனடியாக விடுவிக்கும்படி அரசன் உத்தரவிட்ட போதும், போப்பினதும், கார்டினல்களுடையதும் பயமுறுத்தலுக்கு அடங்கி அந்த உத்தரவை மீளப்பெற்றுக்கொள்ள நேர்ந்தது. ஏழு மாதங்களுக்கு சிறையில் கொடுமைப் படுத்தப்பட்டபின் பெயரளவுக்கு அவர் விசாரனைக் குக் கொண்டுவரப்பட்டார். எதிரிகள் விசாரனை மண்டபத்தில் அவரைப் பேசவிடாமல் ‘நீ எழுதியவற்றை மறுத்துரை’ என்று கூக்குரலிட்டனர். கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராக இருந்தால் மட்டுமே தான் எழுதிய வற்றை மறுத்துரைப்பேன் என்று ஹஸ் ஆணித்தரமாகக் கூறினார். 1415ல் கவுன்சிலினால் தீர்ப்பளிக்கப்பட்டு கொன்ஸ்டன்சுக்கு வெளியில் நகர அதிகாரிகளால் அவர் மிகவும் கேவலமான முறையில் நெருப்பில் போட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். சத்தியத்திற்காக ஹஸ் உயிர்ப்பலி கொடுத்தார்.
நீதிமானான ஹஸ் எரிக்கப்பட்டதற்கு மூலகாரணமாக இருந்த போப் 23ம் ஜோன் (Pope John XXIII) மிகமோசமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். வரலாறு இந்தப் போப்பைப் பற்றி எந்த நல்ல வார்த்தைகளையும் சொல்ல வில்லை. இப்படியாக ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிரான சீர்திருத்தப் போராட்டம் தலையெடுக்க ஆரம்பித்தது. அதிகார வெறிபிடித்த போப்பும், அவரைச் சார்ந்தவர்களும் தமக்கெதிராகப் புறப்பட்டவர்களை உயிரோடு கொளுத்தவும் தவறவில்லை. எந்தளவுக்கு கத்தோலிக்க மதம் பிசாசின் மதமாக அக்காலத்தில் அதிகாரம் செலுத்தி வந்தது என்பதை வரலாறு காட்டுகின்றது. இருந்தபோதும் சத்தியத்தை அம்மதத்தால் புதைத்துவிட முடியவில்லை. சத்திய வாஞ்சையுள்ளவர்களை அதனால் பேசாமல் அடக்கிவைத்துவிட முடியவில்லை.
இந்த சீர்திருத்தத் தீ எவ்வாறு வளர்ந்து ஐரோப்பா முழுவதும் பரவி கத்தோலிக்க மதத்தின் அதிகாரத்தை நிர்மூலமாக்கியது என்று வரலாறு காட்டும் விபரங்களை இனி வருங்காலங்களில் பார்ப்போம்.