கடந்த இதழில் “சீர்திருந்த வேண்டிய தமிழ்ப் பண்பாடு” என்ற தலைப்பில் நமது இனத்தில் சீர்திருந்த வேண்டிய அநேக காரியங்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் திருமண வயதில் இருக்கும் வாலிப விசுவாசிகளுக்கு சில ஆலோசனைகளைச் சொல்லுவது அவசியமென்று கருதுகிறேன். திருமண வயதில் இருப்பவர்கள் முதலில் காதல், கத்திரிக்காய் என்ற சினிமா மாயையில் அகப்பட்டுவிடாமல் இருப்பது அவசியம். ஒருதலைப்பட்சமான சரீர உணர்வுகளுக்கு நம்மினத்தில் பெயர்தான் காதல். அது இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒத்துவராது. இதற்காக ஒரு ஆணும், பெண்ணும் திருமண வயதில் ஒருவர் மீது ஒருவர் நியாயமாக வைக்கும் அன்பை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், வாழ்க்கைக்கு ஒத்து வராத, மனங்கள் பொருந்திவராத ஒருதலைப்பட்சமான உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்றுதான் கூறவருகிறேன்.
திருமண வயதில் இருக்கும் வாலிபர்களை நமது பண்பாட்டிற்கு அடிமையாக்கி, அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்பதற்காக யாரையோ பார்த்து திருமண பந்தத்தில் இணைத்து வைப்பது நம்மினத்தில் வழக்கம். திருமணத்திற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? இருவரும் விசுவாசியா? என்பதையெல்லாம் பெற்றோர்கள் கவனிப்பது இல்லை. விசுவாசிகளான ஆண்களும், பெண்களும் பெற்றோர்களுக்கு இணங்கிப்போக வேண்டும் என்பதற்காக அவிசுவாசிகளைத் திருமணம் செய்துகொள்ளுவது நம்மினத் தில் அதிகம். இதைவிடக் கொடுமை இருக்க முடியாது. இது கர்த்தருக்கு செய்யும் துரோகம் என்பதை விசுவாசிகளான வாலிபப் பெண்களும், பையன்களும் நினைத்துப் பார்ப்பதில்லை. பெற்றோர்களுக்கு இணங்கிப் போகாவிட்டால் பெரிய ஆபத்து என்ற ஒரே காரணத்தால் கர்த்தரின் வேதத்தை தூக்கி எறிந்துவிட்டு அவிசுவாசிகளைத் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். வேதம் சொல்லுகிறபடி நமது சமுதாயத்தில் வாழ்வது கடினம், மேல் நாட்டில் என்றால் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்துவிடலாம் என்றெல்லாம் கதைவிடுகிறவர்களும் உண்டு. அப்படியானால் வேத வாழ்க்கை நமது இனத்திற்குப் பொருந்திவராதா? கர்த்தரின் வழி நமது இனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை இல்லாததா? என்றெல்லாம் கேட்காமல் இருக்க முடியவில்லை. சமுதாயத்துக்குப் பயந்து, பிரச்சனைகளை எதிர்நோக்கத் துணிவில்லாமல் இவர்கள் கிறிஸ்துவை அடமானம் வைக்கத் தயாராகி விடுகிறார்கள். சிலுவையைத் தன் தோளில் தூக்கி கிறிஸ்துவை பின்பற்ற முடியாதவர்களுக்கு கிறிஸ்து எதற்கு? கிறிஸ்தவ திருமணம் எதற்கு?
திருமண வயதில் இருக்கும் வாலிபப் பையன்கள் திருமணத்திற்கு தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். முதலில் வாலிப வயதில் படிக்கிற நேரத்தில் படித்து எதிர்காலத்துக்குப் பயன்தரும் விதத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும். இது விசுவாசி செய்கிற உத்தமமான காரியம். வரப்போகிறவளுக்கு உழைத்து உணவூட்ட முடியாதவனுக்கு மனைவி ஒரு கேடா? அவன் விசுவாசியாக இருந்தாலும் வேலையில்லாதவனாக இருக்கக் கூடாது. திருமண வயது வந்துவிட்டது என்பதற்காக திருமணத்தை நினைத்துப் பார்க்கக்கூடாது. வயது மட்டும் திருமணத்திற்கு ஒருவனைத் தயார் செய்து விடுவதில்லை. வேலையில்லாமலும், இருப்பதற்கு வீடில்லாமலும், மின்சார பில்கட்ட வழியில்லாமலும் திருமணத்தை மட்டும் செய்து என்ன பயன்? வாலிபர்களே! படியுங்கள், முதலில் தகுந்த வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு திருமணத்தைப் பற்றி ஆர அமர சிந்திக்கலாம்.
திருச்சபை வாழ்க்கையை அறியாதவர்களைத் திருமணம் செய்து கொள்ளுவதும் ஆபத்து. விசுவாசி என்ற பெயரில் இன்றைக்கு திருச்சபை வாழ்க்கையையே அறியாத அநேகர் இருக்கிறார்கள். நல்ல போதனைகள் கிடைக்கும் சபைகளில் இருப்பவர்கள் அத்தகைய சபைகளில் வளர்ந்து வருகிறவர்களைத் திருமணம் செய்துகொள்ளுவதே உத்தமமானது. ஒரே சபையில், சத்தியத்தில் வளர்கிறவர்கள் திருமணம் செய்துகொள்ளுகிறபோது அவர்களுடைய ஆத்மீக வாழ்க்கை சிறக்க வழியுண்டு. அப்படியில்லாதவர்களுடைய குடும்பம் சிறக்க வழியில்லை. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக எவரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. ஆத்மீக அறிவிலும், பரிசுத்தத்திலும் வளர் கிறவர்களை பரிசோதித்து திருமணம் செய்துகொள்வது அவசியம். மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக தலையைக் காட்டிவிடுவதும், தாலியைக் கட்டி விடுவதும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். பரிந்துரை செய்தவர்கள் கலியாண சாப்பாட்டோடு வேலை முடிந்தது என்று போய் விடுவார்கள். கஷ்டப்படப் போகிறவர்கள் கட்டிக் கொண்டவர்கள் மட்டுமே. அநாவசிய மாக வம்மை நாம் விலைக்கு வாங்கிக் கொள்ளக் கூடாது.
நம்மினத்தில் திருமணம் என்பது வாலிபர்கள் வயதுக்கு வந்தபின் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இது பெரும் தவறு. தகுதி இல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்வது எந்தவிதத்திலும் சரியில்லை. வாலிபர்கள் திருமணத்திற்கான தகுதியை அடையும்வரை பொறுத்திருப்பது நல்லது. திருமணமாகும்வரை வாலிபர்கள் ஆத்மீக வளர்ச்சியிலும், சபைப் பணிகளிலும் ஈடுபடுவது அவர்கள் கர்த்தரில் வளர உதவும். வேலைத்தளத்தில் உழைப்பதோடு, நேரத்தை மீதப்படுத்தி சுவிசேஷப் பணிகளில் சபை மூலம் ஈடுபடுவதும் பயனுள்ளது. திருமணமாகாத வயதில் நம்மால் செய்யக்கூடிய பணிகள் அநேகம். அதை சந்தர்ப்பம் இருக்கும்போது செய்வது அவசியம். வெறுமனே திருமணத்தை மட்டும் நினைத்து நேரத்தைப் போக்காமல் இருக்கும் காலத்தைப் பயன்படுத்தி கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். அத்தோடு, உங்களைப் பரிசுத்தமாக வைத்திருந்து மனைவியாக வரப்போகிறவளுக்கோ, கணவனாக வரப்போகிறவருக்கோ தகுதியுள்ள வர்களாக இருக்கப் பாருங்கள். திருமணமாகும்வரை தங்களைப் பரிசுத்தமாக வைத்திருக்கத் தெரியாதவர்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவனுக்கோ, மனைவிக்கோ உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆரம்பிக்கப் போகிற வாழ்க்கை பரிசுத்தமாக ஆரம்பிக் கப்பட வேண்டியது அவசியம். சரீரத்தையும், மனத்தையும் தூய்மையாக வைத்திருந்து எதிர்கால வாழ்க்கைக்கு உங்களை வேத அடிப்படையில் சிந்தித்து தயார் செய்துகொள்ளுங்கள்.