சத்திய வேதத்தை உதறித் தள்ளிவிட்டு
சுத்தமும் நெஞ்சில் தேவ பயமின்றி
வங்கியில் கடனெடுத்த பணத்தை வீசி
சுவிசேஷ வியாபாரத்தை அசத்தலாய் செய்து
சபை என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக்கூட்டி
தன்னிச்சையாய் தங்கள் குடும்பத்தை வளர்க்க
செய்கிறார்களே ஒரு ஊழியம்; அதில்
தேவை இன்று நிச்சயம் சீர்திருத்தம்
வேதமறியாது, கர்த்தர் சித்தம் தெரியாது
பிரசங்கத்திற் கெந்த இடமுந் தராது
பாட்டும், கூத்தும், சினிமாப் படக்காட்சியும்
அறைகுறைகள் சொல்லுகிற அறைவேட்காட்டு சாட்சியும்
மட்டுந்தான் ஆராதனைக்கு அவசியம் இன்று என்று
ஆர்ப்பரித்து அல்லேலூயா! சொல்லுகிற கூட்டத்தின்
கொட்டம் அடங்கி சத்திய வாஞ்சை வளர
தேவை இன்று நிச்சயம் சீர்திருத்தம்
கமிட்டி அமைத்துக் கர்த்தரை மதிக்காது,
குடும்ப ஊழியக் கூத்துக்குப் பாலூட்டி,
சாதி, குலம், கோத்திரம் பார்த்துச்
சபையில் திருமணங்கள் செய்து வைத்து,
ஆணவத்துடன் அதிகாரம் செய்து
தங்களையும், தம்மினத்தாரையும் வளர்த்து வரும்
போலிப் போதகர்கள் திசையறியாமல் போகும்படி
தேவை இன்று நிச்சயம் சீர்திருத்தம்
அர்த்த இராத்திரியில் அயர்ந்த உறக்கத்தில்
கண்ட கனவின் கள்மயக்கத்தின் விளைவாய்
உண்டான உற்சாக வெறியில் துள்ளி
சுவிசேஷ ஊழியம் செய்யப் போகிறேனென்று
அரிச்சுவடி கூடப் படிக்காத அறீவீனர்கள்
அரிப்போடு கிளம்பி யிருக்கிறார்களே,
அந¢தத் திருச்சபை ஊழியத் திருப்பணியில்
தேவை இன்று நிச்சயம் சீர்திருத்தம்
பாப்திஸ்து, மெத்தடிஸ்டு, லூதரன், ஆங்கிலிக்கன்
சகோதரர்கள், பெந்தகொஸ்தே காரர்கள் என்ற
சாதிப்பிரிவு போன்ற பேதத்திற் கெல்லாம்
சமாதிகட்டி, சடங்குகள் பாரம்பரியங்கள் என்று
கூவம்போல் சபையைச் சீரழித்துக் கொண்டிருக்கும்
பிணங்களுக்கும், சபை அறியா ஸ்தாபனங்களுக்கும்
முடிவுகட்டி தூய திருச்சபைகள் தோன்றிவளர
தேவை இன்று நிச்சயம் சீர்திருத்தம்
கர்த்தருக்குப் பணிந்து வாழும் குடும்பங்கள்
கருத்தாய் இயேசு வழிச்செல்லும் நல்லிளைஞர்கள்
அறிவில் சிறந்து ஆவியில் நெருப்பாய்
பிரசங்கித்துப் போதிக்கும் நற் போதகர்கள்
தேவன் வழி மட்டுமே தேர்ந்த வழி என்று
தீவிரமாய் அவர் வழி செல்லும் திருச்சபைகள்
தோன்றிச் சிறந்திருந்த சீர்த்திருத்தகாலம் போல்
தேவை இன்று நிச்சயம் சீர்திருத்தம் நம்மினத்தில்