நமது சீர்திருத்தவாத பாரம்பரியம்

ஐரோப்பாவையே கலங்கவைத்த ஆண்டு 1517. கத்தோலிக்க மதத்திற் கெதிரான திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்த ஆசீர்வாதமான ஆண்டு. அந்த ஆண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்ட சீர்திருத்தத்தின் காரணமாகத்தான் இன்றைக்கு இந்தப் பத்திரிகையைக் கூட சத்தி யத்தின் அடிப்படையில் நம்மால் வெளியிட முடிகிறது. 1517ம் ஆண்டில் அக்டோபர் 31ம் தேதி நிகழ்ந்த, திருச்சபை சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமான அந்த நிகழ்ச்சியின் காரணமாக வருடாவருடம் உலகெங்கும் சீர்திருத்த சபைகள் அந்த நாளை சீர்திருத்த நாளாக (Reformation Day) நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

கத்தோலிக்கத்தின் காட்டாட்சியும், லூதரின் சத்திய வேட்கையும்

பதினாறாம் நூற்றாண்டில் உலகின் பெரும்பாகங்களைத் தன் கரத்தில் வைத்து கொடூர ஆட்சி செலுத்தி வந்தது ரோமன் கத்தோலிக்க மதம். அதன் தலைவனான போப் கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுருவின் தெய்வீக வழித்தோன்றலாக தன்னை இனங்காட்டிக் கொண்டு நாடுகளையும், மக்களையும் மதத்தின் அடிப்படையில் ஆட்சிபுரிந்து வந்த காலம் அது. பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு பல நூற்றாண்டுகளாகவே கத்தோலிக்க மதத்தின் அட்டகாசங்களும், அட்டூழியங்களும் மக்களை அம்மதத்தின்மீது வெறுப்படையச் செய்திருந்தன. இருந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாதபடி அரசும், பேரரசனும், இளவரசர்களும் கத்தோ லிக்க மதத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர். கத்தோலிக்க மதத்தையும், போப்பையும் எதிர்த்தவர்கள் உயிரையே இழக்க நேர்ந்தது. அப்படி உயிரிழந்தவர்கள் அநேகர். தன்னோடு முரண்பட்ட நாடாளும் அரசனை அவனுடைய குடும்பத்தோடு தன் மாளிகைக்கு முன்பாக பனியில் மூன்று நாட்கள் பசியோடு மண்டியிட்டு தனக்குக் கருணைகாட்டுமாறு கேட்க வைத்த சமயத்தலைவராக இருந்திருக்கிறார் ஒரு போப். இத்தனையையும் கடவுளின் பெயரில் செய்து கொண்டிருந்தது கத்தோலிக்க மதம்.

கத்தோலிக்க மதத்தின் இந்த அராஜக ஆளுகை நடந்துகொண்டிருந்த காலத்தில்தான் கர்த்தர் அற்புதமாக ஒரு கத்தோலிக்கத் துறவியின் இதயத்தில் ஆத்மீகத் தாகத்தை ஏற்படுத்தினார். அந்தத் துறவிதான் ஜெர்மனியைச் சேர்ந்த மார்டின் லூதர். கத்தோலிக்க மதகுருவாக அவர் விட்டன் பேர்க் கல்லூரியில் இறையியல் போதிக்கும் விரிவுரையாளராக இருந்தார். பல மொழிப்பாண்டித்தியம் பெற்றவராக, அறிஞராக இருந்த லூதருடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட ஆரம்பித்தார். லூதர் தான் ஒரு பாவி என்பதையும், தான் கர்த்தரைவிட்டு விலகி பாவத்தில் வாழ்வதையும் உணர்ந்து ஆத்மீக விடுதலைக்கான வழியைத் தேட ஆரம்பித்தார். சக கத்தோலிக்க மதத்துறவிகள் போப்பைப் போய்ப் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவருக்கு ஆலோசனை கூறினர். ரோமுக்குப் போய் போப்பைப் பார்ப்பதுதான் வழி என்று லூதர் ரோமுக்கு தன் நீண்ட பயணத்தை ஆரம்பித்தார். அப்போது ரோமில் செயின்ட் பீட்டர் ஆலயத்தைக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட் டிருந்தார் போப். அதற்குப் பணம் சேர்ப்பதற்காக இன்டல்ஜன்ஸ் (Indulgence) என்று அழைக்கப்படும் பத்திரங்களை விற்றுக்கொண்டிருந்தார். தங்களுடைய பாவங்களைப் போக்கிக்கொள்ளுவதற்காக அதற்குரிய பணத்தைக் கொடுத்து அந்தப் பத்திரங்களை வாங்குபவர்களுக்கு பரலோகம் நிச்சயம் என்று போப் அறிவித்திருந்தார். இதனால் அந்தப் பத்திரங்கள் அதிகம் விற்றுக்கொண்டிருந்தன. போப்புக்குப் பணமும் பெருகிக்கொண்டிருந்தது.

ரோமுக்கு வந்து இதையெல்லாம் பார்த்த மார்டின் லூதருக்கு சொல்ல முடியாத ஆத்திரம் வந்தது. ஆத்மீக விடுதலையை நாடிக்கொண்டிருந்த லூதர் கர்த்தரின் பெயரில் கத்தோலிக்க மதமும், போப்பும் செய்து வந்த அநியாயங்களை உணர்ந்து இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று தீர்மானித்தார். உடனடியாக விட்டன்பேர்கிற்கு திரும்பிய லூதர் வேதத்தை ஜெபத்தோடு வாசிக்க ஆரம்பித்தார். கர்த்தரின் ஆவி அவருடைய உள்ளத்தில் கிரியை செய்து கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலன்களை அவர் விசுவாசத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும்படி செய்தது. ஆத்மீகக் கண்கள் திறக்கப்பட்டு இயேசுவின் அன்பை ருசிபார்த்த லூதர் கத்தோலிக்க மதத்தின் சுயரூபத்தை வெளிப்படுத்த தீர்மானித்தார்.

1517ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் நாள் விட்டன்பேர்க் திருச்சபைக்கட்டடத்தை நோக்கி வீராப்போடும், நிமிர்ந்த நெஞ்சோடும், கூரிய பார்வையோடும், கால்கள் தரையில் அதிர ஒரு உருவம் கையில் ஒரு சுருளை எடுத்துக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தது. ரோமன் கத்தோலிக்க மதத்தின் போலித்தனத்தை 95 தலைப்புகளில் அந்தச்சுருளில் விளக்கி திருச்சபைக் கதவில் பதிக்க அஞ்சா நெஞ்சனாய் உறுதியோடு நடந்து போய்க்கொண்டிருந்தார் மார்டின் லூதர். லூதர் அன்று செய்யப் போகிற காரியம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படப் போகிற காரியமாக இருந்தது. ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கம் வேரோடு நிலத்தில் வீழ்வதற்கு அடியெடுத்து வைத்த நாளாக அது இருந்தது.

அந்தக் காலத்தில் பொது மக்களுக்கு ஏதாவதொரு முக்கியமான காரியத்தை எவரும் தெரியப்படுத்த வேண்டுமானால் இப்படித்தான் செய்வார்கள். இன்றைக்கு நாம் காகிதத்தில் எல்லா விஷயங்களையும் அச்சிட்டு தெரியப்படுத்துகிறோம். அன்று திருச்சபைக் கதவில் எழுதப் பட்டிருப்பதை வாசித்தே மக்கள் முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்வார்கள். மார்டின் லூதர், “சத்தியத்தின் மேல் வைத்திருக்கும் அன்பினாலும், சத்தியத்தைக் குறித்த வைராக்கியத்தினாலும், சத்தியம் பற்றிய இந்த 95 உண்மைகளை ஆராய பொதுமக்களாகிய உங்களை நான் அழைக்கிறேன். விட்டன்பேர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் மார்டின் லூதராகிய நான் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளும் படி உங்களை அழைக்கிறேன். கலந்துகொள்ள முடியாதவர்கள் எனக்கு கடிதம் மூலம் தயவு செய்து தெரியப்படுத்தவும்” என்று அதில் எழுதி யிருந்தார். படித்த மேதைகளும், பொது மக்களும் கலந்துகொண்டு சத்தியம் பற்றிய உண்மைகளை விவாதித்து அந்த விவாதத்தின் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளால் 1517ல் வரலாற்றை மாற்றி அமைத்த சீர்திருத்தவாதம் தோன்றியது.

1517ல் சபை சீர்திருத்தம் நடப்பதற்கு ஏதுவான காரியங்களும் அதற்கு முன்பே நடக்க ஆரம்பித்திருந்தன. திருச்சபை சீர்திருத்தம் திடீரென விண்ணிலிருந்து இறங்கி ஒரே நாளில் இந்த உலகத்தில் நிகழ்ந்து விடவில்லை. திருச்சபை சீர்திருத்தம் ஏற்படுவதற்கு ஏதுவான காரியங்களைக் கர்த்தர் உலகில் ஏற்கனவே நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஜோன் ஹஸ், ஜோன் விக்கிளிப் போன்றோர் ஏற்கனவே சத்தியத்துக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். சத்தியத்திற்காக உயிர்ப் பலி கொடுத்தனர். ஆனால், 1517ல்தான் மார்டின் லூதர் மூலமாக சீர்திருத்தம் உருவெடுத்தது. 488 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த அந்த நிகழ்ச்சியை நாம் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும். அதில் நாம் ஏன் அக்கறைகாட்ட வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நான் நிச்சயம் பதிலளிக்க வேண்டியது அவசியம்.

கிறிஸ்தவம் வரலாற்றில் தோன்றிய வாழ்க்கை நெறி. கர்த்தர் வரலாற்றின் தேவனாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் வரலாறே உலக வரலாறு. தேவன் மனிதனைப் படைத்து அவனுக்கு இரட்சிப்பை எப்படி அளித்தார் என்றும், இறுதி இரட்சிப்பை நோக்கி அவனை எவ்வாறு வழிநடத்திச் செல்கிறார் என்பதையுமே வரலாற்றில் காண்கிறோம். அந்த வரலாற்றில் இரட்சிப்பைக் குறித்து எழுந்த போராட்டத்தின் ஓரு அங்கமே 16ம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதம். ஆகவே, வரலாற்றை நாம் புறக்கணிக்க முடியாது. வரலாறு தெரியாமல் நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர முடியாது. மொத்தத்தில் வரலாறறியாத கிறிஸ்தவம் என்றொன்றில்லை. மார்டின் லூதர் 488 வருடங்களுக்கு முன்பு விட்டன்பேர்கில் அதிரடியாக செய்த காரியம் கிறிஸ்தவத்தின் ஒரு அங்கம் மட்டுமல்ல ஒவ்வொரு விசுவாசியையும் பாதிக்கின்ற வரலாற்று நிகழ்ச்சி. அதை அறியாமல் இருக்கின்ற விசுவாசி தன் வாழ்க்கையில் கர்த்தரின் ஆசீர்வாதங்களை அறியாமல் வாழ்ந்து வருகிறான். பாவிகளின் விடுதலைக்காக கர்த்தர் வரலாற்றில் செய்த மகா அற்புதத்தை அறியாமல் வாழ்ந்துவருகிறான். வரலாற்றில் உருவெடுத்த சீர்திருத்தவாதத்தை அறிவுபூர்வமாக அறிந்திருந்து அதை நினைவுகூருகிற விசுவாசி உணர்வுபூர்வமாக சத்தியத்தில் உறுதியோடுவளர்ந்து, தன் விசுவாசத்தைப் பாதுகாத்துக்கொண்டு, சத்தியத்துக்காக எதையும் செய்யத் தயங்காதவனாக வளருவான். இப்படிப்பட்ட விசுவாசியாக நாம் தொடர்ந்து வளரவும், வருங்கால சந்ததிக்கு வழிகாட்டவும் 488 ஆண்டு களுக்கு முன்பு நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூருவதும், அதன் பலாபலன்களை நமது நினைவலைகளில் சுவைத்துப் பார்ப்பதும் அவசியம். உலகம் முழுவதும் இருக்கின்ற சீர்திருத்த திருச்சபைகள் வரலாற்றில் நிகழ்ந்த அந்த நாளை வருடந்தோறும் நினைவுகூருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அதை விழாவாகவோ, சடங்காகவோ அவர்கள் கொண்டாடுவதில்லை. இதயபூர்வமாக அந்நாளில் கிறிஸ்தவத்தின் விடுதலைக்காக அவர்கள் கர்த்தருக்கு நன்றி கூறுவார்கள். இளம் சந்ததிக்கு அந்த விடுதலையை எடுத்து விளக்குவார்கள்.

1517ம் வருடம் மனிதன் வேதத்தைத் தன்னுடைய சொந்த மொழியில் வாசிக்க வழியேற்படுத்திக் கொடுத்த வருடம். அன்று சபை சீர்திருத்தம் இந்த வருடத்தில் ஆரம்பித்திருக்காவிட்டால் இன்றைக்கும் மனிதன் கண்ணிருந்தும் குருடனாக இரட்சிப்பின் வழியை அறியமுடியாமல் இருந் திருப்பான். ரோமன் கத்தோலிக்க மதம் அந்தளவிற்கு மனிதனின் கண்களை குருடாக்கி, இருதயத்தைப் பாழாக்கி, சடங்குகளுக்கு அவனை அடிமையாக்கி கர்த்தரை அறிந்துகொள்ள முடியாமல் செய்து வைத்திருந்தது. அந்த அடிமைத் தளையிலிருந்து மனிதனுக்கு விடுதலை கொடுப்பதற்கு கர்த்தர் எழுப்பிய மனிதன் மார்டின் லூதர். 1517ம் வருடத்தில் லூதர் மாபெரும் செயலைச் செய்தார். மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்து ஆத்மீக விடுதலை அடைந்த லூதர் ரோமன் கத்தோலிக்க மதத்தின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டப் புறப்பட்டார். வேதத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தார். அச்சகங்கள் உருவாகி மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்த அந்தக் காலத்தில் மக்கள் வாசிக்கும்படியாக வேதம் ஜெர்மானிய மொழியிலும் ஏனைய மொழிகளிலும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன. லூதரின் சீர்திருத்தக் கருத்துக்களும் எழுத்தில் அச்சாகி மக்களின் கரத்தை சென்றடைந்தன. இவ்வாறு சபை சீர்திருத்தம் உருவாகியது. ரோமன் கத்தோலிக்க மதத்தின் அட்டூழியங்களுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. கிறிஸ்தவ விடுதலைக்கு அடிக்கல் நடப்பட்டது.

சீர்திருத்தவாதத்தை ஏன் நினைவுகூருவது அவசியம்?

1517ல் நிகழ்ந்த அந்த அற்புத எழுப்புதலாகிய திருச்சபை சீர்த்திருத்தத்தை இந்த இருபத்தோராவது நூற்றாண்டில் நாம் நினைவுகூருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

(1) சீர்திருத்தப் போதனைகளில் ஆர்வம் காட்டி அவற்றைப் பின்பற்றுகிற நாம், சீர்திருத்தவாதத்தோடு நமக்கு வரலாற்றுத் தொடர்பிருக்கிறது என்பதை ஆனந்தத்தோடு நினைவுகூர முடிகிறது.- பாரம்பரியம் என்பது நல்லதாகவும், கேடானதாகவும் இருந்துவிடலாம். ஆனால், சீர்திருத்த போதனைகளை விசுவாசிக்கின்ற நமக்கிருக்கும் வரலாற்றுப் பாரம்பரியம் சிறப்பானது. அதற்கு நாம் கர்த்தருக்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கத்தாருக்கு இத்தகைய பாரம்பரியத் தொடர்பில்லை. அவர்கள் வரலாற்றை அலட்சியப்படுத்து கிறார்கள். 20ம் நூற்றாண்டுக்கு முன்பு அவர்களுடைய இயக்கத்தை நாம் வரலாற்றில் அடையாளம் காணமுடியாது. வரலாற்றில் அடையாளம் காணமுடியாததெதுவும் கிறிஸ்தவத்தின் அங்கமாக இருக்க முடியாது. கத்தோலிக்கர்களை வரலாற்றில் நாம் பார்க்கலாம். ஆனால், வரலாறு அவர்களைப் போலிமதமாக மட்டுமே தெளிவாக அடையாளம் காட்டுகிறது. சீர்திருத்த போதனைகளை நேசித்துப் பின்பற்றுகிறவர்கள் தங்களை வரலாற்றில் அடையாளம் காணலாம். வரலாறு அவர்களை மெய்க்கிறிஸ் தவத்தின் புத்திரர்களாகக் காட்டுகிறது. முதலாம் நூற்றாண்டு காலத்து அப்போஸ்தலர்களோடும், 16ம் நூற்றாண்டு காலத்து சீர்திருத்தவாதிக ளோடும், 17ம் நூற்றாண்டு பியூரிட்டன்களோடும் அவர்களுக்கு வரலாற்றுத் தொடர்பிருக்கிறது.

உலகத்தைப் படைத்த கர்த்தர் இந்த உலகத்தில் இஸ்ரவேலைத் தெரிவு செய்து அவர்கள் மூலம் தனது திட்டங்களை நிறைவேற்ற ஆரம்பித்தார். இஸ்ரவேலர்கள் தேவனை நிராகரித்தபோது அவருடைய திட்டங்கள் தகர்ந்துவிடவில்லை. கர்த்தர் உலகத்தின் சகல ஜாதிகளிலும் இருந்து தனது மக்களைத் தெரிந்துகொண்டார். உலகத்தில் கிறிஸ்துவின் சபையை நிறுவினார். உலக வரலாற்றோடு தொடர்புடையதாக ஆரம்பத்திலிருந்தே கர்த்தரின் கிரியைகள் இருந்திருக்கிறபோது வரலாற்றை நிராகரித்து வரலாற்றில் காணமுடியாதபடி எழுந்திருக்கின்ற இயக்கங்களை கிறிஸ்தவத்தோடு நாம் எப்படித் தொடர்புபடுத்த முடியும்? வரலாற்றில் நம்மைப் பார்க்க முடிகிறபோது, அப்போஸ்தலர்களோடும், அவர்கள் வழிவந்த சீர்திருத்தவாதிகளோடும் நமக்கிருக்கின்ற தொடர்பைப் பார்க்கின்றபோது சீர்திருத்த கிறிஸ்தவர்களாகிய நாம் நமது அருமைப் பாரம்பரியத்திற்காக கர்த்தருக்கு நன்றிகூற வேண்டியவர்களாக இருக்கிறோம். அதேவேளை, நம் காலத்தில் தமிழினத்தில் சீர்திருத்த சபைகள் விரல்விட்டு எண்ணக்கூடியதாக இருப்பதைப் பார்த்து நாம் வருந்த வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். வெறும் உணர்ச்சிகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு தமிழினம் போகும் வழிதெரியாமல் தறிகெட்டு நிற்பது சீர்திருத்த விசுவாசிக்கு கவலை தர வேண்டிய காரியம். நமது பாரம்பரியத்திற்காக கர்த்தருக்கு நாம் நன்றி கூறுகிற அதேவேளை, இருண்ட காலத்தில் இருந்து வருகிற தமிழினத்தில் சீர்திருத்த விடிவெள்ளி தோன்ற நாம் அன்றாடம் ஜெபித்து உழைக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.

(2) நமக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியமிருப்பதை உணர்ந்து அதற்காகப் பெருமைப்பட்டு கர்த்தருக்கு நன்றி கூறுவது மட்டுமல்லாமல் இன்னொரு பொறுப்பும் நமக்கிருக்கின்றது. 16ம் நூற்றாண்டில் கத்தோலிக்கத்தின் பிடி இறுகி மக்கள் திணறிக்கொண்டிருந்தபோது, வேதத்தை வாசிக்கமுடியா மலும், கர்த்தரை அறிந்துகொள்ள முடியாமலும் தவித்துக் கொண்டிருந்த போது, விக்கிளிப்பும், ஹஸ்ஸும், லூதரும், கல்வினும், நொக்ஸும் சுகமாக சும்மாயிருந்துவிடாமல் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கர்த்தருக்காக செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தோடு செய்தார்கள். உயிரைப் பணயம் வைத்து உழைத்து வேத சத்தியங்களின் அடிப்படையில் சபைகள் அமையவும், ஆத்து மாக்கள் சத்தியத்தை அறிந்து கொள்ளவும் வழிவகுத்தார்கள். அவர்களில் பலரை எதிரிகள் உயிரோடு கொலுத்தியபோதும் சத்திய வெறி அவர்களை மனிதப் பதர்களுக்கு அடிமையாக இருக்கவிடவில்லை. இருட்டில் இருக்கும் தமிழினத்தில் பிறந்து சத்தியத்தை அறிந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெற்றிருக்கும் நாமும் சீர்திருத்தவாதிகளைப் போல நம் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் அநேகம் உண்டு. எதிரிகள் எத்தனை பேர் முளைத்தாலும், எதிர்ப்புகள் எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் உயிரைக் கொடுத்து சத்தியத்திற்காக உழைக்க வேண்டிய பணி நமக்கிருக்கின்றது. இருட்டே சுகம் என்று கண்ணிருந்தும் குருடர்களாக இருந்து வருபவர்களை கர்த்தரின் துணையோடு பிசாசின் கரத்தில் இருந்து விடுவிக்க வேண்டிய பெரும்பணி நமக்கிருக்கின்றது.

சத்தியம் ஒரு ஆத்துமாவின் இருதயத்தில் வாஞ்சையையும், வெறியையும் ஏற்படுத்தும். ஏனெனில் அது கர்த்தருடைய சத்தியம். அத்தகைய சத்திய வாஞ்சையுள்ளவர்களே தேவனுடைய மனிதர்கள். இன்று நம்மினத்தில் தேவனுடைய மனிதர்களாக அடையாளங்காட்டிக் கொண்டு நடனமாடு கிறவர்களும், அல்லேலூயா கோஷம் போடுகிறவர்களும் சத்திய வாஞ்சை யற்றவர்கள். சத்திய வெறி கொண்டவர்கள் சத்தியத்தின்படி வாழ்வது மட்டுமன்றி, அதை வளர்க்கவும¢, பாதுகாக்கவும் உயிரையும் கொடுப்பார்கள். லூதர் சீர்திருத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருடைய உயிருக்கு பேராபத்து காத்திருந்தது. அதேபோல்தான் கல்வினும், நொக்ஸும் ஆபத்தை எதிர்கொண்டார்கள்; சத்தியத்திற்காக உழைத்தார்கள். அதையே ஒரு மெய்யான சீர்திருத்தவாதி இன்றைய காலகட்டத்தில் தமிழினத்தில் செய்வான்.

சீர்திருத்தவாதத்தின் தூண்கள்

நமது சீர்திருத்தவாதப் பாரம்பரியத்திற்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருப்பதற்கும், நம்காலத்தில் நம்மினத்தின் மத்தியில் சபை சீர்திருத்தத்திற்காக உழைப்பதற்கும் அவசியமான சீர்திருத்தவாதத்தின் தூண்களான சத்தியங்களில் நமக்குப் பரிச்சயம் இருப்பது அவசியம். இந்தத் தூண்கள் ஐந்தாகும்: (1) வேதம் மட்டுமே (2) கிருபை மட்டுமே (3) கிறிஸ்து மட்டுமே (4) விசுவாசம் மட்டுமே (5) கர்த்தரின் மகிமை மட்டுமே என்பவையே.  இந்த ஐந்திற்கும் ரோமன் கத்தோலிக்க மதம் அன்று இடம் கொடுக்கவில்லை. 11ம் நூற்றாண்டில் போப் போனிபேஸ் என்ற எட்டாவது போனிபேஸ் பி¢ன்வருமாறு கூறினார்: “ஒவ்வொரு மனிதனும் இரட்சிப்பை அடைவதற்கு போப் மிகவும் அவசியம். இதுவே கத்தோலிக்க மதத்தின் போதனை” என்று கூறி போப் போனிபேஸ் அதை அதிகாரபூர்வமான அறிக்கையாக வெளியிட்டு மக்கள் பின்பற்றும்படிச் செய்தார். மனிதன் தன்னுடைய இரட்சிப்புக்கு போப்பில் தங்கியிருக்கிறான் என்பது தான் அன்றும் இன்றும் கத்தோலிக்க மதத்தின் போதனை. கத்தோலிக்க மதம் தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டதல்ல. தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொள்ளாத இரட்சிப்பு பற்றிய போதனைகள் பிசாசின் போதனைகள் என்பதை சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

1. வேதம் மட்டுமே

பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க மதம் வேதத்தை நிராகரித்து சாதாரண மனிதர்கள் அதை வாசிக்க முடியாதபடி செய்திருந்தது. நடைமுறைக்குப் பொறுத்தமில்லாத வகையில் இலத்தீன் மொழியில் மட்டுமே வேதம் அன்று எழுத்தில் இருந்தது. அதை வாசிப்பதற்கும், விளங்கிப் பயன்படுத்துவதற்கும் கத்தோலிக்க மதம் இடங்கொடுக்காததோடு, அவ்வாறு செய்பவர்களுக்கு கடுந்தண்டனையையும் கொடுத்தது. மக்கள் கத்தோலிக்க மதச் சடங்குகளைப் பின்பற்றி தங்களுடைய பாவ விடுதலைக்கு போப்பிலும், சடங்குகளிலும் தங்கியிருக்கும் படி வழிநடத்தப்பட்டார்கள். நாட்டரசுகளும் போப்பின் அதிகாரத்துக்குக் கீழிருந்தன. அன்று கத்தோலிக்க மதகுருவாக இருந்த மார்டின் லூதர் இரட்சிப்பை அடையாமலேயே, வேதத்திற்கு விளக்கங் கொடுக்கும் கத்தோலிக்க மதவிரிவுரையாளராக விட்டன்பேர்கில் பணிபுரிந்து வந்தார். கர்த்தர் அவரோடு ஆவியின் மூலம் பேச ஆரம்பித்தபோது லூதர் சிந்திக்க ஆரம்பித்தார். தன் பாவத்திலிருந்து விடுதலை அடைவதற்கான வழிகளை நாட ஆரம்பித்தார். தான் யார்? என்பதை அறிந்து கொள்ளத் துடித்தார். வேதத்தை பல மணிநேரங்களாகப் படித்தார். தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள அரும்பாடுபட்டார். சக கத்தோலிக்க மத குருமார்களும், போப்பும் காட்டிய வழிகள் அவருக்கு உதவவில்லை.

தொடர்ந்து வேதத்தை ஜெபத்தோடு ஆராய்ந்து படித்தபோது கர்த்தர் லூதரின் கண்களைத் திறந்தார். மனந்திரும்பி கிறிஸ்துவை தன்னுடைய இரட்சிப்பிற்காக விசுவாசித்தார். அன்றிலிருந்து கத்தோலிக்க மதத்தின் போலித்தனத்தை அவர் அடையாளங் கண்டுகொண்டார். அம்மதத்திற் கெதிராக அவர் 95 உண்மைகளை எழுதி மக்கள் முன் வைத்தார். மேலும் அத்தகைய போதனைகளை எழுத்தில் வடித்து அச்சிட்டு விநியோகித்தார். மக்கள் ஆதரவு அவருக்குப் பெருகத் தொடங்க போப்பும், நாட்டரசனும் அவரை இது பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்துக்கு அழைத்தனர். அவர் எழுதியவற்றையெல்லாம் நிராகரிக்கும்படியும், போப்பிடம் மன்னிப்புக் கேட்கும்படியும் அறிவுறுத்தினர். லூதர், தன்னுடைய மனச்சாட்சி வேதத்திற்கு கட்டுப்பட்டிருப்பதாகக் கூறி மனச்சாட்சியை மீறுவது பாதகமானது என்று பதிலளித்தார். கர்த்தர் பலநாட்டு இளவரசர்களைப் பயன்படுத்தி லூதருக்கு எந்த ஆபத்தும் வராது காப்பாற்றினார். அன்றிலிருந்து சீர்திருத்தம் சுனாமி வேகத்தில் பரவ ஆரம்பித்தது.

வேத போதனைகளுக்கு மட்டுமே அடிபணிவேன் என்று அறைகூவலிட்ட லூதர் கத்தோலிக்க மதம் வேதத்தைக் குழி தோண்டிப் புதைத்திருப்பதைத் தோலுரித்துக் காட்டினார். அதனால்தான் சீர்திருத்தவாதம் வேதத்தை எப்போதும் முன்னிறுத்துகிறது. இரட்சிப்புக்கும், பரிசுத்த வாழ்க்கைக்கும், சபை அமைப்புக்கும், வாழ்க்கைக்கும் வேத போதனைகளே அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அவற்றிற்கு மட்டுமே அடி பணிந்து நடக்க வேண்டும் என்றும் சீர்திருத்தவாதிகள் போதித்தனர். வேத போதனைகளோடு எதையும் சேர்க்கவும் கூடாது, அவற்றை திரிபுபடுத்திப் போதிக்கலாகாது, அவற்றை நிராகரிக்கக்கூடாது என்பது சீர்திருத்த வாதத்தின் ஆணித்தரமான போதனை.

இன்றைக்கு தமிழினத்தில் வேதத்திற்கு இடமில்லை. பிள்ளையார் சிலையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இயேசுவை வைத்துக்கொண்டு இந்துக் கலாச்சார, பண்பாட்டின் அடிப்படையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறது தமிழ் கிறிஸ்தவம். பெயரளவில் மட்டுமே தமிழினத்தில் கிறிஸ்து தேவனாக இருக்கிறார். ஆத்துமாக்களுடைய வாழ்க்கை கிறிஸ்து வின் போதனைகளின் அடிப்படையில் நடப்பதில்லை. கிறிஸ்து போதிக்கும் சபை அமைப்புக்கும், சபை வாழ்க்கைக்கும் அங்கு இடமில்லாமல் இருக்கிறது. கிறிஸ்துவில் வைராக்கியமுள்ளவர்களை நம்மத்தியில் இன்று காண முடியாமலிருப்பதற்குக் காரணம் வேத அறிவு அநேகருக்கு இல்லாமலிருப் பதுதான். சத்தியத்தில் வளருகிறபோதுதான் நம் மனச்சாட்சி அதற்கு அடிபணிய முடியும். சத்தியம் தெரியாதிருக்கும்போது மனச்சாட்சி உலகத்துக்கும், புறஜாதிப் பண்பாட்டிற்கும் மட்டுமே அடிபணிய முடியும். உலகத்து க்கு அடிமைப்பட்டவர்களாக வாழ்ந்து கிறிஸ்துவின் பெயரை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுகிறவர்கள் மெய்க் கிறிஸ்தவர்களல்ல; அவர்களால் சத்தியத்துக்கு அடிபணிய முடியாது. இத்தகைய மோசமான போலித் தனமான சூழ்நிலையில் வேதம் மட்டுமே என்று ஆணித்தரமாகப் போதித்து அதன் வழி நடக்கும் நெஞ்சுரமிக்க சீர்திருத்தவாதிகள் நம்மத்தி யில் தேவைப்படுகிறார்கள். லூதரைப் போலவும், கல்வினைப் போலவும், நொக்ஸைப் போலவும் தைரியசாலிகள் தேவைப்படுகிறார்கள்.

2. கிருபை மட்டுமே

கத்தோலிக்க மதம் சபை மூலமே ஆத்துமாக்களுக்கு கிருபை கிடைக்கிறது என்று போதித்தது. போப்பும் அதைக் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார் என்றது. மனிதனால் மனிதனுக்கு கிருபையை அளிக்க முடியாது என்றார் லூதர். சீர்திருத்தவாதிகள் கிருபை தேவனிடமிருந்து கிடைப்பதாகவும் அதை எந்த ஒரு மனிதனும் சக மனிதனுக்கு வழங்க முடியாது என்றும் போதித்தனர் (எபேசியர் 2:8-10). எந்தவொரு சடங்குகள் மூலமாகவும், ஆசாரியன் மூலமாகவும், கர்த்தரின் பிரதிநிதியாக போலியாக தன்னை அறிவித்துக் கொள்ளும் போப்பின் மூலமாகவும் எவருக்கும் கிருபை கிடைப்பதில்லை என்றனர் சீர்திருத்தவாதிகள்.

மனிதன் பாவத்தில் விழுந்தபிறகு ஆத்மீக நன்மைகளை செய்யக்கூடிய தன்மையை இழந்துவிட்டான் என்கிறது வேதம். கத்தோலிக்க மதமும் மனிதன் நன்மையான கிரியைகளை செய்து அதன்முலம் பரலோக வாழ்வை அடைய முடியும் என்கிறது. கிரியையின் அடிப்படையில் கிறிஸ்துவை அடைய முடியாதென்கிறது வேதம். இதனால் சீர்திருத்த வாதிகள் கிருபை மட்டுமே என்ற தத்துவத்தை வலியுறுத்தினர். அதாவது பரிசுத்த ஆவியின் செயலால் தேவ கிருபையால் மட்டுமே பாவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும், கிரியைகளால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாதென்றும் போதித்தனர். கத்தோலிக்க பாரம்பரியங்களையும், சடங்குகளையும் அவர்கள் முற்றாக நிராகரித்தனர்.

இன்று மனிதனின் வல்லமையிலும், ஞானத்திலும் உலகம் அதிக நம்பிக்கை வைத்து செயல்பட்டு வருகின்றது. பெலேஜியனிசமும், ஆர்மீனிய னிசமும் ஆத்மீக விடுதலைக்கு மனிதனின் கிரியைகளில் பெருநம்பிக்கை வைக்கின்றன. சார்ள்ஸ் பினி மனிதன் தன்னுடைய பலத்தால் கர்த்தரைக் கட்டுப்படுத்தி இரட்சிப்பை அடைய முடியும் என்று போதித்திருக்கிறார். இன்று மனிதனின் கிரியைகளில் நம்பிக்கை வைத்தே பெரும்பாலான இடங்களில் சுவிசேஷ செய்தி கொடுக்கப்படுகிறது. சீர்திருத்தவாதத்தின் தூண்களில் ஒன்றான கிருபை மட்டுமே என்ற போதனையை இன்று நாம் வலியுறுத்திப் போதிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

3. கிறிஸ்து மட்டுமே

சீர்திருத்தவாதம் கிறிஸ்து மட்டுமே என்று வலியுறுத்தியதற்கான காரணத்தை நம்மால் புரிந்துகொள்வது கடினமாக இருக்காது. வெறும் சதையும், இரத்தமும் கொண்ட மனிதப்பிறவியான போப் தன்னைக் கடவுளைப்போலக் கருதி உலகில் நடந்துகொண்டதோடு ஆத்துமாக்களின் பாவநிவாரணத்துக்கு தானும் காரணமாக இருப்பதாக எண்ணிச் செயல்பட்ட காலசூழ்நிலையில் தங்களுடைய பாவ நிவாரணத்துக்கு மனிதர்கள் கிறிஸ்துவில் மட்டும் வைக்க வேண்டிய விசுவாசத்தை லூதரும், சீர்திருத்தவாதிகளும் ஆணித்தரமாக வலியுறுத்தினர். மனிதனுடைய பாவநிவாரணப்பலியாக கிறிஸ்து சிலுவையில் மரித்து, பாவிகளின் இரட்சிப்பிற்கான அனைத்தையும் செய்து முடித்துவிட்டபிறகு மனிதன் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு கிடைக்கும் என்கிறது வேதம். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கிறிஸ்துவில் ஒருவன் வைக்கும் விசுவாசமே அவனுக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தரும். இந்தப் போதனைக்கு எதிர்மாறாக இருந்தன கத்தோலிக்க மதப் போதனைகள்.

சடங்குகளிலும், சபையின் பாரம்பரியத்திலும், அளவற்ற சுய நற்கிரியைகளிலும், போப்பிலும் வைக்கும் நம்பிக்கையும், விசுவாசமுமே ஒருவரைப் பரலோகத்துக்கு தகுதியாக்குகிறது என்ற கத்தோலிக்க மதப்போதனையை சீர்திருத்தவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இன்று இதேவிதமாக கத்தோலிக்க மதம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. அதேபோல நற்கிரியைகளிலும், மனிதனின் சுயத்திலும் நம்பிக்கை வைத்து இரட்சிப்பு வழிகாணும் போதனைகளும் நம்மினத்தில் அதிகமாக இருந்து வருகின்றன. இந்துமதத்திலும், திராவிட மதங்களிலும் இறைவனைக் காணும் பித்தலாட் டங்களும், கனவுகளின் மூலமும், தரிசனங்களின் மூலமும் கர்த்தரைக் கண்டடையும் முயற்சிகளும் கர்த்தர் நம்முடைய இரட்சிப்புக்காகக் தந்துள்ள சுவிசேஷத்தை நிராகரிக்கின்றன. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் தன்மையை சரிவரப் விளங்கி, அவர் மூலம் மட்டுமே இரட்சிப்பு கிடைக்கும் என்ற விசுவாசமில்லாதவர்கள் ஒருபோதும் கர்த்தரைக் கண்டடைய முடியாது என்பது இன்று பிரசங்கிக்கப்பட வேண்டிய சத்தியமாகும். கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் கர்த்தரின் கிருபையைத் தவிர வேறு எதுவும் மனிதனுக்குத் தேவையில்லை என்ற சுவிசேஷ செய்தியை விசுவாசிக்காதவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. கிறிஸ்து மட்டும் என்ற சீர்திருத்தவாதத்தின் இந்த மூன்றாவது தூண் இன்று நம்மினத்தில் தெளிவாகப் போதிக்கப்பட வேண்டும்.

4. விசுவாசம் மட்டுமே

இதுவரை நாம் பார்த்து வந்துள்ள மூன்று தூண்களாகிய சத்தியங்களோடு இணைந்த அவசியமான இன்னுமொரு சத்தியம் விசுவாசத்தின் மூலம் மட்டுமே நீதிமானாகுதல் என்பதாகும். சீர்திருத்த வாதம் இதையும் வலியுறுத்தியது. இதற்குக் காரணம் ரோமன் கத்தோலிக்க மதம் தன்னுடைய சபை மூலம் மட்டுமே ஒருவன் நீதிமானாக முடியும் என்று போதித்தது. அதாவது ரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்து அதன் சடங்குகளில் தங்கியிராதவர்களுக்கு கிறிஸ்தவ விசுவாசம் கிடையாது என்று போதித்தது. மார்டின் லூதர் ரோமர் நிருபத்தில் பவுலின் போதனையான ஆரம்பமுதல் கடைசிவரை விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் கிறிஸ்துவுக்குள் நீதிமானாக்கப்படுகிறான் என்ற சத்தியத்தை ஆணித்தரமாக பிரசங்கித்தார். மனந்திரும்புகிற பாவி தேவ கிருபையால் விசவாசத்தினூடாக மட்டுமே கிறிஸ்துவுக்குள் நீதிமானாக்கப்படுகிறான் என்பது சீர்திருத்தவாதத்தின் நான்காவது தூணாகும்.

கிறிஸ்துவின் சிலுவைப் பலியை ஏற்றுக்கொண்ட கர்த்தர் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கிறிஸ்துமேல் அவர்கள் வைக்கும் விசுவாசத்தின் அடிப்படையில், கிறிஸ்துவின் நீதியை அவர்கள் கணக்கில் வைத்து நீதிமான்களாக அவர்களை அறிக்கையிடுகிறார். விசுவாசிகள் கிறிஸ்துவில் நீதிமான்களாகவே கர்த்தரால் கணிக்கப்படுகிறார்கள். மனித கிரியைகளுக்கு இங்கு இடமில்லை. விசுவாசம் மனந்திரும்புகிற பாவிகளுக்கு கர்த்தர் தரும் ஈவாகும். இந்த சத்தியத்தை ரோமன் கத்தோலிக்க மதம் இன்றும் எதிர்க்கிறது. இந்த சத்தியத்தில் அநேக சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குழப்பம் இருந்து வருகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைப் போதனையை£ன இதில் மாற்றங்களைக் கொண்டுவர பலர் முயன்று வருகிறார்கள். அது வீணான முயற்சி. அநேகர் வேதம் போதிக்கும் நீதிமானாக்குதல் சத்தியத்தை விளங்கிக் கொள்ளாமல் தங்களுக்குப் பிடிக்காத அம்சங்களை அதில் இருந்து அகற்றப் பார்க்கிறார்கள். சுயத்தில் இருந்து புறப்படும் செத்த கிரியைகளில் நம்பிக்கை வைத்துப் பழகிய மானுடம் சர்வ வல்லமையுடைய கர்த்தர் இலவசமாகத் தரும் இரட்சிப்பை விரும்பாது அதைப் பெற்றுக்கொள்ள தன்னுடைய கிரியைக்கும் இடமிருக்கிறதா என்றே என்றும் அலைந்து வருகிறது.

வேத போதனையான தேவ கோபத்தை நிராகரித்தும், சிலுவை மரணத்தில் தங்களுக்குப் பிடிக்காத அம்சங்களை சுவிசேஷ செய்தியில் விளக்காமலும் மானுட இச்சைகளுக்கு ஏற்ற குழப்பமான செய்தியை சுவிசேஷம் என்ற பெயரில் இன்று அநேகர் பிரசங்கித்து வருகிறார்கள். இன்றைய சுவிசேஷ செய்தியில் நீதிமானாக்குதல் பற்றிய போதனையே விளக்கப் படுவதில்லை. இறைபோதனையற்ற இரட்சிப்பை அளிக்க முடியாத செய்தி களே இன்று சுவிசேஷம் என்ற பெயரில் உலவி வருகின்றது.

5. கர்த்தரின் மகிமை மட்டுமே

இரட்சிப்பு ஆரம்ப முதல் இறுதிவரை கர்த்தருடையதாக இருப்பதாலும், கர்த்தரின் மகிமையையே இலக்காகக் கொண்டிருப்பதாலும் நாம் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை யில் அனைத்துக் காரியங்கள் மூலமும் கர்த்தரே மகிமைப்படுத்தப்பட வேண்டும். அவருடைய வார்த்தையின் அதிகாரத்துக்கு அடங்கி நடந்து, அவருக்காக வாழ்ந்து இறப்பதற்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நம்முடைய ஆராதனை கர்த்தரின் வார்த்தைக்கு எதிராக அமைகின்றபோதும், கர்த்தரின் வார்த்தைக்கு விரோதமான அம்சங்களை ஆராதனையிலும், நம் வாழ்க்கையிலும் நாம் இணைத்துக் கொள்கிறபோதும், சபை ஊழியமும், பிரசங்க ஊழியமும் கர்த்தரின் வார்த்தையின்படி அமையாத போதும், சுயத்தின் ஆளுகை அதிகரித்து நம்மை நாமே பெருமை படுத்திக்கொள்ளும்படி அனைத்தையும் செய்கிறபோதும் நாம் கர்த்தரின் மகிமையை நாடாது நடந்துகொள்ளுகிறோம். எபேசியர் முதல் அதிகாரம் சிருஷ்டியில் இருந்து அனைத்தும் கர்த்தரின் மகிமைக்காகவே செயல்பட வேண்டும் என்று போதிக்கின்றது.

இன்று சபை வளர்ச்சி இயக்கத்தில் (Church growth movement) இருந்து கிறிஸ்தவ ஊழியங்களில் பெரும்பாலானவை மனிதனின் கிரியைகளிலும், சுய வல்லமையிலும் நம்பிக்கை வைத்தே செயல்பட்டு வருகின்றன. ரிக் வாரன் (Rcik Warren), ஹெரல்ட் கேம்ப்பிங் (Herold Camping) போன்ற அமெரிக்க ஊழியர்கள் கர்த்தருக்காக தங்கள் வல்லமையின் மூலம் ஆத்துமாக்கள் என்ன செய்ய முடியும் என்று விளக்குவதையே ஊழியமாகக் கொண்டு இயங்கி வருகிறார்கள். இவர்களுடைய அகராதியில் கர்த்தரின் மகிமை என்ற பதங்களுக்கு இடம் கிடையாது. இவர்கள் வழியில்தான் இன்றைக்கு கர்த்தரின் வார்த்தைக்கும், வழிகளுக்கும் இடங்கொடுக்காது கர்த்தர் அழைத்தார் என்ற போலி மயக்கத்தில் சுயத்திற்கு மகிமை தேடிக்கொள்வதற்காக அநேகர் தமிழினத்தில் ‘தனி ஊழியம்’ செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள். கர்த்தருக்கு மகிமை தேடி வாழ்கிறவர்கள் மத்தியில் ‘தனி ஊழியம்’ என்ற தம்பட்டத்திற்கே ஒருநாளும் இடமிருக்காது.

சுவிசேஷத்தின் தன்மையை உணராது, நாம் வாழும் புறஜாதி சமுதாய நடைமுறைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டு, மனித பயத்துக்கு இடங்கொடுத்து கர்த்தருக்கு மகிமை கொடுக்காது வாழ்ந்து வரும் முறை மாற வேண்டும். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற வர்களும், திருச்சபைகளும், போதகர்களும், ஊழியக்காரர்களும் இன்று செய்ய வேண்டிய அவசியமான காரியம் மனந்திரும்புதலாகும்.

இதுவரை நாம் சீர்திருத்தவாதத்தை இந்த இருபத்தோராவது நூற்றாண்டில் ஏன் நினைவுகூர வேண்டும் என்று ஆராய்ந்திருக்கிறோம். என்றுமில்லாதவகையில் இன்றைக்கு நம்மினத்தின் மத்தியில் சீர்திருத்தத் தீ பொங்கியெழ வேண்டிய அவசியம் இருக்கின்றது. உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்க நாம் இன்னும் ஆத்மீக இருட்டில் வாழ்ந்து வருகிறோம். இறையியல் கோளாறுகளுக்கு உட்பட்டு உலகிற்கே வெளிச்சம் காட்டி வரும் சீர்திருத்த கிறிஸ்தவத்தை அறியாது குருடர்களாக வாழ்ந்து வருகின்றோம். கர்த்தரின் கிருபை நம்மை நோக்கிப் பார்க்கட்டும். நம் சமுதாயத்திலும் சீர்திருத்தத் தீ கொழுந்துவிட்டு எரியட்டும். நல்ல சபைகள் உருவாகட்டும். அதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யும் மனோதைரியம் கொண்டவர்களை நம்மத்தியில் கர்த்தர் எழுப்பட்டும். போலிகளை சீர்திருத்தம் சுட்டெரிக்கட்டும். அதற்காக உழைக்கவும், ஜெபிக்கவும் தயாரானவர்கள் உங்களை இனங்காட்டிக் கொள்ளுங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s