பத்தாண்டு காலத் தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சி

கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழில் கிறிஸ்தவ இலக்கியம் எந்தள வுக்கு வளர்ந்திருக்கிறது என்பதைக் கணிப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம். கிறிஸ்தவ இலக்கியம் என்று கூறும்போது கிறிஸ்தவ இலக்கியமாகத் தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழில் வெளி வரும் எல்லாக் குப்பைகளையும் நாம் கருத்தில் கொள்ளவில்லை.

கிறிஸ்தவ இலக்கியம்

‘கிறிஸ்தவ இலக்கியம்’ என்ற வார்த்தைகளின் பொருளை முதலில் விளக்குவது அவசியமாகிறது. இதில் ‘கிறிஸ்தவம்’ என்று நாம் குறிப்பிடுவது ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தவிர்த்த புரொட்டஸ்தாந்து பிரிவினரை மட்டுமே. ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவமல்ல. அது கிறிஸ்தவத்தின் பெயரில் உலாவரும் போலிச் சமயம். இது தமிழினத்தில் இன்று அநேகர் புரிந்து கொள்ளாத உண்மையாக இருக்கிறது. சமீபத்தில் போப் இரண்டாம் ஜோன் போலின் மரண சடங்கின்போது நியூசிலாந்தின் கத்தோலிக்க குரு ஒருவர் பின்வருமாறு கத்தோலிக்க மதத்தை புரொட்டஸ்தாந்து மதத்திலிருந்து பிரித்துக் காட்டினார்: “கத்தோலிக்க மதம் புரொட்டஸ்தாந்து மதத்தைப் போல வார்த்தையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது. இதுவே இரண்டையும் பிரிக்கும் முக்கிய மான அடிப்படை வேறுபாடு” என்றார். இது எத்தனை பெரிய உண்மை. கத்தோலிக்க மதம் வேதத்தை ஒரு சாட்டுக்காக கையில் வைத்திருந்தாலும் அது வேதத்தின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்க வில்லை. சடங்குகளில் மட்டுமே அது மனிதனின் இரட்சிப்புக்காகவும், அத்தனை ஆத்மீகக் காரியங்களுக்காகவும் தங்கியிருக்கிறது.

புரொட்டஸ்தாந்து பிரிவினர் என்று குறிப்பிடும் போது அதிலும் சில பிரிவினர் பாரம்பரிய சபைகளாக ஆத்மீகத்தை இழந்து உயிரிழந்து நிற்கின்றன. உதாரணத்திற்கு தமிழினத்தில் ஆங்கிலிக்கன், சீ. எஸ். ஐ, மெத்தடிஸ்ட், லூதரன் சபைகளைக் கூறலாம். இவைகளின் மத்தியில் ஒரு சில குறிப்பிட்ட தனி நபர்களும், சபைகளும் வேதத்தை நம்பினாலும் மேலிருந்து அடிமட்டம் வரை இந்தப் பாரம்பரிய சபைகளின் தலைமைத்துவம் சத்தியத்தைவிட்டு விலகிப்போயிருப்பதால் அவற்றையும் ஒதுக்குவது அவசியமாகிறது. அடுத்த இடத்தில் இருப்பது பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கம். இது வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டும் இடம்கொடுத்து வேதத்தை நிராகரித்து இயங்கி வருவதால் வேத அடிப்படையில் அமைந்த இயக்கமாக இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களுடைய எழுத்துக்களில் பெரும்பாலும் சத்தியத்துக்கு இடமிருக்காது. ஆக, மிஞ்சி நிற்பது சுவிசேஷக் கோட்பாடுகளைப் (Evangelical) பின்பற்றுகிறவர்கள் மட்டுமே. இவற்றில் சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பிரிவினர், பாப்திஸ்து பிரிவினர், சகோதரத்துவ சபைகள், சுவிசேஷ சபைகளாக இயங்கி வரும் கெரிஸ்மெடிக் அல்லாத தனிச் சபைகள் என்று பல பிரிவினரை அடக்கலாம். இன்று கிறிஸ்தவம் என்ற பெயரில் தமிழினத்தில் உலவுகின்ற அத்தனை பிரிவு களையும் மெய்க் கிறிஸ்தவத்தைப் பிரதிபலிக்கும் பிரிவுகளாக ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது; அப்படி அவற்றை உடனடியாக அங்கீகரிப்பதும் தவறு. ஆகவே, வேதத்திற்கு மதிப்புக் கொடுத்து அதன் அதிகாரத் திற்குக் கட்டுப்பட்டு நடந்து, ஜீவனுள்ள சபைகளாக இருந்து வருகின்ற, இருக்க முயற்சி செய்கின்ற சுவிசேஷ சபைப்பிரிவுகளையும், விசுவாசிகளை யுமே நாம் கிறிஸ்தவம் என்ற பெயரில் இனங்காணுகிறோம்.

அடுத்ததாக, ‘இலக்கியம்’ என்ற வார்த்தையைப் பற்றியும் சிறிது விளக்குவது அவசியமாகிறது. எழுதப்படுவது எல்லாம் இலக்கியமாகிவிடாது. எழுதப்படுபவை இலக்கியம் என்ற தகுதியை அடைவதற்கு சில விதிகள் இருக்கின்றன. பொதுவாக இலக்கியம் என்பது படைப்பாளியின் உள்ளத்தின் வெளிப்பாடாக, அவனுடைய அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய், படைப்பாளியின் அனுபவத்தின் வெளிப்பாடு அவனுடைய உள்ளத்தில் இருந்து பீறிட்டு மொழியின் கலைத்திறமையுடன் வெளிவரும்போது அது இலக்கியமாகிறது எனலாம். இலக்கியம் படைப்பாளியின் சொந்த அனுபவமாக மட்டும் இல்லாமல் யதார்த்த மாகவும் அமையலாம். இலக்கியத்திற்கு பொருள் சுத்தம், மொழிச்சுத்தம், நடைச்சுத்தம் இன்றியமையாதது. இத்தகைய தகைமைகளைக் கொண்டிராத எழுத்துக்களை இலக்கியமாகக் கருத முடியாது.

இங்கே நாம் ஆத்மீக இலக்கியத்தை அதாவது, கிறிஸ்தவ இலக்கியத்தையே முதனிலைப்படுத்தி ஆராய்வதால், கிறிஸ்தவ இலக்கியத்துக்கிருக்க வேண்டிய அடிப்படை அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அம்சம் ஏனைய இலக்கியவகைகளுக்கு பொருந்தாது. இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம் என்ற பெயரை அடைய அது சத்தியத்தின் அடிப்படையில், சத்தியத்திற்கு முரணில்லாத வகையில் அமைந்திருக்க வேண்டும். சத்தியத்தை மட்டுமே விளக்குவதாகவும், போதிப்பதாகவும் இருக்க வேண்டும். சத்தியத் துக்கு எந்தவிதத்திலும் முரண்பட்ட எழுத்துக்கள் கிறிஸ்தவ இலக்கியமாகா. இதற்கு ஆங்கிலத்தில் ஜோன் பனியன் எழுதிய மோட்சப் பயணத்தை (Pilgrims progress) உதாரணங் காட்டலாம். பனியன் கிறிஸ்தியானின் பரிசுத்த வாழ்க்கையை வேதம் போதிக்கிறபடி எள்ளளவும் சத்தியத்தை மீறாமல் உருவகமாகப் படைத்திருக்கிறார். இது ஒரு வசன காவியம். கிறிஸ்தவ இலக்கியமாகக் கருதப்படுவதற்குரிய அத்தனை தகுதிகளும் இதற்குண்டு. இதேவிதமாகவே பனியனின் பரிசுத்த யுத்தமும் (Holy war) அமைந்திருக்கின்றது.

இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு இலக்கியங்களாகவோ அல்லது நமது மொழியில் எழுதப்பட்டதாகவோ இருக்கலாம். இங்கே நாம் கிறிஸ்தவ வாடை வீசும் கதை, கவிதை, சிறுகதை, நாவல் இலக்கியங்களைக் கணக்கில் எடுக்கவில்லை. அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இவ்வாக்கத்தில் முக்கியமாக வேதவிளக்கங்களைத் தருகின்ற வேத ஆராய்ச்சி நூல்கள், வேதக் கோட்பாடுகளை விளக்கும் நூல்கள் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். இதற்குக் காரணம் இன்றைக்கு தமிழினத்தில் ஆத்துமாக்களின் ஆத்மீக வளர்ச்சிக்கு இத்தகைய இலக்கியங்களே அதிகம் தேவைப்படுகின்றன.

உப்புச்சப்பற்ற பிரச்சார, வியாபாரப் பிரசுரங்கள்

தமிழகத்திற்குப் போகிற போதெல்லாம் கிறிஸ்தவ புத்தகக் கடைகளையும், ஏனைய புத்தகக் கடைகளையும் ஒருமுறை அலசிப் பார்த்துவிடுவதை நான் ஒரு கடமையாகவே வைத்திருக்கிறேன். இப்படிக் கடந்த பத்துவருடங்களாக நான் ஏறி இறங்கியிருக்கும் கடைகளில் வாசித்துப் பயன்பெற வாங்கியிருக்கும் நூல்கள் மிகச்சிலவே. அதற்கான காரணம் புரிந்திருக்கும். கிறிஸ்தவ இலக்கியம் என்ற பெயரில் இந்தக் கடைகளையெல்லாம் நிரப்பியிருக்கும் நூல்கள் பெரும்பாலும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் போதனைகளைப் பரப்புவனவாகவே இருக்கும். வெளிநாட்டுப் பணத்தில் அவை அழகாக அச்சிடப்பட்டிருந்தாலும் உள்ளே இருப்பவை உருப்படாதவை என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு பெனி ஹன்னின் (Benny Hynn) நூல்களையும், ஜொய்ஸ் மாயரின் (Joyce Mayer) நூல்களையும் குறிப்பிடலாம். இவர்களைப் பிரபல்யமாக்குவதற்கு பிரச்சார நூல்களாகவும், வியாபார நோக்கத்தில் மட்டுமே இவை எழுதப்பட்டவையாகவுமிருக்கும். கிறிஸ்தவ இலக்கியப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இவை எந்தத் தகுதியும் இல்லாதவை. இதேவிதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தினகரனும் அவரைப்போன்று ஊழிய வியாபாரம் நடத்திவரும் இன்னும் அநேகரின் நூல்களும் தவறாமல் புத்தகக் கடைகளை ஒவ்வொரு வருடமும் நிரப்பிவருகின்றன.

இவற்றைத் தவிர வருடத்தில் பல புத்தகங்களையாவது எழுதிவிட வேண்டும், பாராட்டுப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறவர்களும் உண்டு. இவர்களுடைய எழுத்துக்களில் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகமே தவிர தரமான வேதபோதனைகளுக்கு இடமிருக்காது. இவர்களுடைய நூல்கள் பொருளற்ற எழுத்துச் சாகரமாகவே இருக் கும். இதற்கு உதாரணமாக சாம் ஜெபத்துரை, மோகன் சி. லாசரஸ் போன்றோரின் நூல்களைக் கூறலாம். இவர்கள் கெரிஸ்மெட்டிக் இயக்கததைச் சார்ந்தவர்கள். இவர்களைத் தவிர எழுத வேண்டும் என்பதற்காகவே எழுதித் தள்ளிக் கொண்டிருப்போர் தமிழினத்தில் அதிகம். எட்டு அல்லது பத்துப் பக்கங்களைக்கொண்ட ஒரு சிறு சஞ்சிகையை வெளியிடாத ஒரு சபையையோ, ஸ்தாபனத்தையோ அல்லது ஊழியக்காரரையோ நாம் தமிழினத்தில் பார்க்காமல் இருக்க முடியாது. இவை பெரும்பாலும், தரமற்ற தமிழில், பொருள் சுத்தம், நடைச் சுத்தம் இல்லாமல் ஆத்மீகப் போதனை என்ற பெயரில் உப்புச்சப்பில்லாத அரைகுறை விளக்கங்களைத் தருவ தாகவும், தனிமனித துதிபாடலுக்கும், காணிக்கை சேர்ப்பதற்காகவும் பிரச்சார ரீதியில் வெளியிடப்படுபவையாகவும் இருக்கும். ஒரு போதகனாகவோ அல்லது ஊழியக்காரனாகவோ இருந்துவிட்டால் அது மட்டுமே இலக்கியம் படைப்பதற்கான ஒரே தகுதி என்ற எண்ணம் தமிழினத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிறது. தமிழையே சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் எல்லாம் தமிழில் துணிவோடு எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் தரமற்ற எழுத்துக்களை வாசித்து சகிக்க வேண்டிய நிலை ஆத்துமாக்களைப் பிடித்திருக்கிறது.

தமிழில் கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்

தமிழில் இன்றும் பெரியளவில் கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு இலக்கியங்களைக் காணமுடியவில்லை. Evangelical Literature Service தமிழகத்தில் சிலவற்றை வெளியிட்டுள்ளது. இவை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியானவை. அவை தொடர்ந்தும் வெளியிடப்படுவதால் அவற்றைக் குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கிறேன். அவற்றில் ‘ஸ்பர்ஜனின் அறிவுரைகள்’ ஒன்று. இது ஸ்பர்ஜன் எழுதி வெளியிட்ட ‘இறையியல் மாணவர்களுக்கான அறிவுரை’ என்ற ஆங்கில மூலத்தின் தமிழாக்கம். இது போதக ஊழியத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பயனளிக்கக் கூடிய சிறு நூல். அத்தோடு, ஜோன் ஓவனின் The Death of Death in the Death of Christ என்ற ஆங்கில நூலை ‘கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் வாழ்வு’ என்ற தலைப்பில் தமிழில் வெளியிட்டுள்ளனர். இவை இரண்டுமே ஆங்கில மூலத்தின் சுருக்கம் மட்டுமே. இவர்கள் ஜோன் பனியனின் Pilgrims progress ஐயும் தமிழில் ‘மோட்சப் பயணம்’ என்ற தலைப்பில் வெளி யிட்டுள்ளார்கள். இதில் எச். பி. ராஜ்குமார் மொழி பெயர்த்துள்ள புதிய மொழிபெயர்ப்பு சில காலம் அச்சிலில்லாமலிருந்து மறுபடியும் அச்சிடப்பட்டு அடுத்த மாதம் வெளிவரப்போகிறதாக அறிந்தேன். (இதன் பழைய மொழிபெயர்ப்பை Christian Literature Crusade வெளியிடுகிறது.) பனியனின் இந்த நூலுக்கான திறனாய்வை இதே இதழின் 28ம் பக்கத்தில் வாசிக்கலாம். ஜோன் பனியனின் இந்த நூல் மிகச் சிறந்த நூல். விசுவாசியின் ஆத்மீகப் பிரயாணத்தை உருவக மொழியில் அருமையாக விவரிக்கும் தலை சிறந்த இலக்கியம். இது ஒரு வசன காவியம். இது தமிழில் தொடர்ந்து வெளிவர வேண்டியது அவசியம். என் கையில் இருக்கும் பிரதி ஜூலை 1995ல் 533 பக்கங்களோடு வெளியிடப்பட்டது. ஆங்கில மூலத்தின் அனைத்துச் சிறப்புக்களையும் இதில் பார்க்கமுடியாவிட்டாலும் சாராம்சத்தையாவது இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது ஒவ்வொரு விசுவாசியும் வாசிக்க வேண்டிய நூல்.

ஜோர்ஜ் விட்பீல்டின் சில பிரசங்கங்களையும் அவருடைய வாழ்க்கைச் சுருக்கத்தோடு இவர்கள் ‘ஜோர்ஜ் ஒயிட்பீல்டு’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் 18ம் நூற்றாண்டு பெற்றெடுத்த அதிரடிப் பிரசங்கியாகவும், இங்கிலாந்து, வேல்ஸ் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட எழுப்புதல்களின்போது கர்த்தரால் அதிகம் பயன்படுத்தப்பட்டவராகவும் ஜோர்ஜ் விட்பீல்ட் இருந்தார். ஜோர்ஜ் விட்பீல்டைப் பற்றி எதுவுமே அறிந்தி ராத தமிழ் கிறிஸ்தவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தக்கூடிய நூலிது.

இவர்கள் ஏ. டபிள்யூ. பிங்க் எழுதிய Sovereignty of God என்ற ஆங்கில நூலைத் தமிழில் ‘சர்வவல்லவரின் சர்வ ஏகாதிபத்தியம்’ என்ற தலைப்பில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். இப்போது அது விற்பனைக்கு இல்லை. இத்தகைய நூல்களைத் தொடர்ந்து வெளியிட இவர்கள் ஆர்வம் காட்டுவதாக இல்லை. இத்தகைய ஆவிக்குரிய நல்ல நூல்கள் வியாபாரத்திற்குப் பயன்படாது என்ற வியாபார அணுகுமுறை இதற்குக் காரணாக இருக்கலாம்.

‘தமிழ் பாப்திஸ்து வெளியீடுகள்’ சில ஆங்கில நூல்களின் சுருக்கத்தைத் தமிழில் வெளியிட்டு வருகிறது. ஆங்கில மூலத்தை வாசிக்க வசதியில்லாதவர்களுக்கு இவை உதவும். தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த நூல்களை மறுபடியும் ஆங்கிலத்தில் சுருக்கமாக வடித்து பின்பு அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதனால் ஏற்படும் முக்கிய பாதிப்பு ஆங்கில மூலத்தை அப்படியே வாசிக்க முடியாமல் போவதுதான். சுருக்கத்தின் போதும், மொழிபெயர்ப்பின்போதும் தவிர்க்க முடியாமல் அடிபட்டுப் போகும் விஷயங்கள் அநேகம். இவர்கள் வெளியிட்டுள்ளவற்றில் குறிப்பிடத்தக்கவை மார்டின் லூதரின் ‘பிறவி அடிமைகள்’, ஜோன் பிளேவளின் ‘கடவுள் செயலின் இரகசியம்’, ஒக்டேவியஸ் வின்ஸ்லோவின் ‘கிறிஸ்தவனின் உள்ளான வாழ்க்கை’ என்பவையாகும். வேறு சில நூல்களையும் இவர்கள் வெளியிட்டிருந்தாலும் அவை எல்லாமே அச்சில் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

இவற்றைத் தவிர ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து நாம் வெளியிட்டுள்ள ‘1689 விசுவாச அறிக்கையை’ (1689 Confession of Faith) இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் களுமான பாப்திஸ்துகள் 17ம் நூற்றாண்டில் எழுதிய விசுவாச அறிக்கை முதன் முறையாக தமிழில் 2002ல் ‘சவரின் கிறேஸ் வெளியீடுகளால்’ வெளியிடப்பட்டது. வேதபூர்வமான இறையியல் கோட்பாட்டைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்ட தமிழ் கிறிஸ்தவ சபைகளுக்கு இது மிகவும் பலனளிக்கும்.

தமிழில் கிறிஸ்தவ இலக்கியங்கள்

தமிழில் முதன் முதலாக உருவான தரமான கிறிஸ்தவ இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் அவையும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன. தமிழகத்தில் ‘கிறிஸ்தவ இலக்கிய சங்கம்’ (Christian Literature Crusade) வெளியிட்டுள்ள ஒரு நூல் ‘இந்தியாவின் விடிவெள்ளி சீகன்பால்கு’. வில்லியம் கேரிக்கு முன்னதாக 1706ல் தமிழகத்துக்கு வந்து தரங்கம்பாடியில் சுவிசேஷப் பணிபுரிந்தவர் சீகன்பால்கு. அவருடைய வாழ்க்கைக் குறிப்பு இந்நூல். கத்தோலிக்க சமயத்தை கிறிஸ்தவ சமயமாகப் பார்க்கின்ற ஒரு பெரிய தவறைத் தவிர இந்நூல் சீகன்பால்குவின் அருமை ஊழியத்தை விளக்குவதாக இருக்கின்றது.

சவரின் கிறேஸ் வெளியீடுகள் இப்பத்திரிகையின் ஆசிரியர் எழுதியுள்ள ‘இந்திய வேதங்களில் இயேசுவா?’, ‘திருச்சபை சீர்திருத்தம்’, ‘சீர்திருத்த விசுவாசம்’, ‘ஏன் பிரசங்கம்’ ஆகிய நூல்களையும் வேறு சில நூல்களையும் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து நல்ல இலக்கியங்களை வெளியிட முயற்சி செய்து வருகின்றது. சீர்திருத்தப் போதனைகளையும், சீர்திருத்த போதக ஊழியத்தையும், சீர்திருத்த சபைக்கோட்பாடுகளையும் அறிமுகப்படுத்து முகமாக கடந்த பத்தாண்டு காலமாக வெளியி¢ட்டு வருகின்றது.

ஸ்ரீ லங்காவில் சத்திய வசனம் என்ற அமைப்பு பல ஆண்டுகாலமாக கிறிஸ்தவ நூல்களை வெளியிட்டு வருகின்றது. இவர்கள் வெளியிடும் நூல்களில் சில நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. என் கையில் கிடைத்த ‘கிறிஸ்த வனும் தொழிலும்’ என்ற நூல் தொழில்பற்றிக் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்க வேண்டிய வேதபூர்வமான அணுகுமுறையை விளக்குவதாக இருந்தது. ஆசிரியர் மேற்கோள்களாக காட்டியிருந்த நூல்கள் பெரும்பாலும் கெரிஸ்மெட்டிக் எழுத்தாளர்களுடையதாக இருப்பது ஒரு குறைபாடு. இருப்பினும் இது பயனுள்ள ஒரு நூல்.

மொத்தத்தில் தமிழில் தரமான கிறிஸ்தவ இலக்கியங்கள் என்ற வரிசையில் இருக்கத் தகுதியான நூல்களின் தொகை குறைவு என்பது வருந்தத்தக்கது. ஆங்கில நூல்கள் கிடைப்பது அரிதாக இருப்பதாலும், ஆங்கிலத்தில் வாசிக்கும் வசதி பெரும்பாலானோருக்கு இல்லாததாலும் தமிழில் தரமான கிறிஸ்தவ இலக்கியங்கள் இன்று தமிழினத்தின் மத்தியில் கிறிஸ்தவம் சத்தியத்தின் அடிப்படையில் வளரத் தேவையாக இருக்கின்றன.

தமிழில் கிறிஸ்தவ இலக்கிய வரட்சி

தமிழில் கிறிஸ்தவ இலக்கியங்களின் வரட்சி காணப்படுவதற்குக் காரணமென்ன? என்று கேட்காமல் இருக்க முடியாது. தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியில் ஸ்ரீ லங்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் மேலை நாடுகளான கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பரவலாக ஆறு கோடிக்கு மேல் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இன்று தரமான கிறிஸ்தவ இலக்கியப் பஞ்சம் நிலவுவதற்கு காரணமென்ன?

இதற்கு வேத அடிப்படையிலும், வரலாற்றின் அடிப்படையிலும் சில முக்கிய காரணங்களை முன்வைக்கலாம். தமிழ் மக்கள் மத்தியில் வேத அடிப்படையில் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டு அமையாதது என்னைப் பொறுத்தவரையில் முதலாவது காரணம். சீகன்பால்கும், வில்லியம் கேரியும் இந்தியாவுக்கு வந்திருந்தபோதும், அதற்குப்பிறகு இங்கிலாந்தி லிருந்தும் மிஷனரிகள் வந்து உழைத்திருந்தபோதும் முழுமையாக சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் கிறிஸ்தவம் நிலைபெறாமல் போய்விட்டது. நமது இனத்தின் புறஜாதிக் கலாச்சாரமும் மிஷனரிகளின் ஊழியப் பணியைப் பாதித்தது. கேரியின் அளவுக்கு சத்திய வாஞ்சையும், திறமையும் கொண்டு நமது பண்பாட்டைக் கண்டு பதறாமல், அதற்குத் தம்மைப் பலி கொடாமல் உழைத்து வெற்றி கண்ட மிஷனரிகளின் தொகை குறைவு. நம் மத்தியில் அமைந்த ஆரம்ப சபைகள் சிலுவை நாயகனில் இருக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்தபோதும் வேதபோதனைகளில் ஆழமான அறிவற்று, சத்திய வாஞ்சையற்றவையாகவும், பண்பாட்டுக்கு அடிமையானவையாகவும் இருந்தன. காலம் செல்லச் செல்ல அவற்றின் நிலை மோசமாகவும் தொடங்கியது. அதற்குப்பின் வந்த பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கம் திருச்சபைகளைப் பாதித்து கிறிஸ்தவத்தை வெறும் மானுட உணர்ச்சிகளுக்கு அடிமையாக்கி வேதத்தைவிட்டு வெகுதூரம் கொண்டு போய் கனவுலகில் விட்டிருக்கின்றன. இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஒருசில சபைகளைத் தவிர கோட்பாட்டுக் குளறுபாடுகளைக் கொண்ட சபைகளே பொதுவாக கிறிஸ்தவ சபைகள் என்ற பெயரில் ஆத்துமாக்களை இருட்டில் வைத்திருக்கின்றன.

இதோடு தொடர்புடைய இன்னொரு முக்கிய காரணம், படிப்பறியாத, உயர்சாதியினரால் புறக்கணிக்கப்பட்ட சாதியில் குறைந்த தரத்தில் இருந்தவர்கள் மத்தியில் ஆதியில் கிறிஸ்தவ ஊழியங்கள் ஆரம்பிக்கப்பட்டதால் வேதத்தைத்தவிர வேறு கிறிஸ்தவ இலக்கியங்களுக்கு அவசியமில்லாது போய்விட்டது. முக்கியமாக கிராமப்புற மக்கள் மத்தியிலும், மலைவாழ் மக்கள் மத்தியிலுமே ஆரம்பத்தில் ஊழியங்கள் தொடங்கப்பட்டன. இன்றும் இது தொடர்கிறது. இவர்கள் மத்தியில் ஊழியங்கள் செய்யக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. இத்தகைய மிஷனரி அணுகுமுறை இலக்கிய வளர்ச்சிக்கு இடமில்லாமல் செய்துவிட்டது.

ஆழமான வேத சத்தியங்களின் அடிப்படையில் சபைகள் அமையாததால் போதக ஊழியம் செய்ய வந்தவர்களும் சத்தியத்தில் நல்லறிவு பெற்றவர் களாக இருக்கவில்லை. இன்றும் அநேக போதகர்கள் ஆழமான இறையியல் அறிவில்லாதவர்களாகவும், அவற்றை இனங்கண்டு அடையும் ஆர்வமும், பக்குவமும் இல்லாதவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

தமிழினத்தில் காணப்படும் இன்னுமொரு பெரிய குறைபாடும் தரமான கிறிஸ்தவ இலக்கியப் பஞ்சத்தை நம்மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. நமது மக்கள் நூல்கள் வாசிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்பதே அந்தக் குறைபாடு. என்னுடைய போதக ஊழிய அனுபவத்தில் நான் பார்த்தவரையில் படித்திருக்கிற தமிழ் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள்கூட நல்ல கிறிஸ்தவ இலக்கியங்களை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்ப தில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களும்கூட அதைச் செய்வதில்லை. இது ஒரு தவறான பண்பாடாகவே நமது இனத்தில் இருந்து வருகிறது. ஞாயிறு ஆராதனைப் பிரசங்கத்தைக் மட்டும் கேட்டு ஆத்மீக வளர்ச்சி அடைந்து பரலோகம் போய்விட முடியும் என்று அநேகர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வாசிக்காதவர்களால் சிந்திக்க முடியாது. சிந்திக்க முடியாதவர்கள் அறிவில் வளர முடியாது. வேத அறிவற்ற கிறிஸ்தவன் என்ற வார்த்தைகளுக்கு கர்த்தரின் அகராதியில் இடமில்லை. இப்படி வாசிக்கும் பழக்கம் இல்லாததால் மேலைத்தேய நாட்டில் வாழும் சராசரி கிறிஸ்தவ இளைஞனுக்கு இருக்கும் வேத அறிவைக் கூட தமிழினத்தில் காணமுடியாதிருக்கிறது. இக்காரணத் தால் ஒரு சில நல்ல நூல்கள் வெளிவந்தாலும் அவற்றை வாங்கி வாசிப்பவர்களின் தொகை மிகவும் குறைவு. வாங்குபவர்கள் இல்லாதபோது நல்ல நூல்களை யார் அக்கறையோடு வெளியிடப் போகிறார்கள்?

இவையெல்லாம் வேதசத்தியங்களில் ஆர்வமில்லாத கிறிஸ்தவத்தை தமிழினத்தில் உருவாக்கி தரமான கிறிஸ்தவ இலக்கியங்கள் உருவாகத் தடையாக அமைந்து விட்டன. கிறிஸ்தவ இலக்கியங்கள் என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் நூல்களும், பத்திரிகைகளும் தரமற்ற மலிவுப்பதிப்புகளாக பிரச்சார நோக்கத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழில் கிறிஸ்தவ இலக்கியத்தின் எதிர்காலம்

வேத அடிப்படையில் அமைந்த தரமான சபைகள் உருவான காலத்தில்தான் வரலாற்றில் தரமான கிறிஸ்தவ இலக்கியங்களும் படைக்கப்பட்டன என்பதை எவராலும் மறுக்க முடியாது. 16ம் நூற்றாண்டு சீர்திருத்த காலமும், 17ம் நூற்றாண்டு பியூரிட்டன்களின் காலமும் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. இக்காலப்பகுதிகளில் ஆழமான அறிவுடைய அநேக போதகர்களை கர்த்தர் எழுப்பியிருந்தார். அவர்கள் வேதபூர்வமான திருச்சபை அமைக்கும் பணியில் எங்கும் ஈடுபட்டிருந்தனர். சிறந்த போதகர்களாகவும், நல்லறிஞர்களாகவும் இருந்த இவர்கள் தரமான கிறிஸ்தவ இலக்கியங்களைப் படைத்து மக்கள் ஆத்தும விருத்தியடைய துணை புரிந்தனர். இங்கிலாந்தில் கிடர்மின்ஸ்டர் என்ற ஊரில் வினாவிடைப் போதனைகளை ஒரு வீடு தவறாமல் அனைத்து மக்களும் படித்து கர்த்தரில் வளரும்படி ஊழியம் செய்திருந்தார் ரிச்சட் பெக்ஸ்டர்.

கல்வினும், லூதரும், பனியனும், ஓவனும், பிளேவலும் தரமான கிறிஸ்தவ இலக்கியங்களைப் படைத்து மக்கள் அவற்றை வாசித்து வளரும்படிச் செய்தனர். இவர்கள் எழுதியுள்ள இலக்கியங்கள் காலத்தால் அழியாதவை. பக்திவிருத்தியும், வேத ஞானமும் உள்ள போதகர்களும், வேத அடிப்படையில் அமைந்த சபைகளும் இருக்கும்போது ஆத்துமாக்கள் அறிவிலும், பக்திவிருத்தியிலும் வளர முடிகிறது என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளுகிறோம். அத்தோடு, தரமான இலக்கியங்களும் உருவாகக்கூடிய சூழ்நிலை அமைகிறதையும் பார்க்கிறோம். தரமான இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டி அவர்களை வளர்ப்பதற்கு உதவுகின்றன. சீர்திருத்தவாத, பியூரிட்டன் காலங்கள் இத்தனை ஆசீர்வாதங்களையும் கொண்டிருந்த காலங்களாக வரலாற்றில் வாசிக்கிறோம்.

கடந்த பத்து வருடங்களில் தரமான கிறிஸ்தவ இலக்கியங்களின் வளர்ச்சிகுன்றிக் காணப்பட்டபோதும் நாம் நம்பிக்கையிழந்துவிடக்கூடாது. தன் மக்களை எல்லா இனங்கள் மத்தியிலும் வைத்திருக்கும் தேவன் நிச்சயம் நமது இனத்திலும் தன்னுடைய மக்களைக் கொண்டு தரமான சபைகளை நிறுவுவதோடு தரமான இலக்கியங்களையும் எழச்செய்வார் என்பதை நாம் நம்பலாம். தமிழ் கிறிஸ்தவ உலகில் போலித்தனங்கள் மிகுந்திருந்தபோதும், சத்தியத்திற்கு இடமில்லாதிருக்கின்றபோதும், சத்திய வாஞ்சையுள்ளவர்களும், சத்திய வாஞ்சையுள்ள சபைகளும் உருவாகி வருவது நம் நெஞ்சைக் குளிர வைக்கிறது. இந்த வகையில் சபைகள் உருவாகி, ஆத்துமாக்கள் சத்தியத்திற்காக அலைய ஆரம்பித்தால் தரமான இலக்கியங்கள் தோன்றா மல் போகாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s