2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2 ம் தேதி சனிக்கிழமை அன்று மதுரை ராயல் கோர்ட் ஹோட்டலில் மாலை 7 மணியளவில் திருமறைத்தீபம் இதழின் பத்தாண்டு நிறைவு விழா கர்த்தரின் கிருபையால் இனிதாக நிகழ்ந்தது. விழாவின் தலைமைப் பொறுப்பை சிவகாசியைச் சேர்ந்த போதகர் டேவிட் ஜெபராஜ் அவர்கள் ஏற்று சிறப்பாக நடத்தினார்கள். இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சபைப் போதகர்களும், திருமறைத்தீப வாசகர்களும் பிற சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 240 பேர் கலந்து கொண்டார்கள்.
விழாவில் கலந்து கொண்டவர்களை மதுரை இவாஞ்சலிக்கள் பாப்திஸ்து சபைப் போதகர் ஸ்டீபன்சன் வரவேற்றுப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து திரு. ஜெயபால் அவர்கள் திருமறைத்தீபம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் பற்றியும், ஆசிரியர் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியப்பணி பற்றியும், பத்திரிகையின் தன்மை குறித்தும் விளக்கிப் பேசினார்.
இவ்விழாவில் 10-ம் ஆண்டு நிறைவு திருமறைத்தீபம் இதழின் முதல் பிரதியை போதகர் டேவிட் இளங்கோவனிடம் இருந்து திரு. அருள்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்தியன் பாங்கில் பணிபுரியம் திரு. அருள்செல்வம் அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து பத்திரிகையின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருகிறவர். பெயரையும், பெருமையையும் நாடாமல் அமைதியாகத் தள்ளி நின்று பத்திரிகையின் நலத்திலும், அதில் வெளிவரும் சத்தியங்களிலும் அடங்காத ஆர்வம் காட்டும் இந்த அன்புச் சகோதரர் 10-ம் ஆண்டு நிறைவு மலரின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டது விழாவுக்கு பெருமை சேர்த்தது.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் சிலர் கீழ்வரும் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்:
“பொருளாதார செழிப்பையும், ஆசிர்வாதங்களையும் முதன்மைப்படுத்தி வெளிவரும் தமிழ் பத்திரிகைகளை மட்டுமே இன்றுவரை தமிழுலகம் கண்டுள்ளது. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இதழாக திருமறைத்தீபம் உள்ளது பாராட்டிற்குரியது. கிறிஸ்தவ இலக்கியத் துறையில் தரமான செய்திகளைக் கொண்டு சந்தா இல்லாத புத்தகமாக தொடர்ந்து வெளிவருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களான நாம் அடுத்த மாநிலத்துக்குப் போனவுடனேயே தமிழை மறந்து விடுகிறோம். அப்படியிருக்கும்போது நியூசிலாந்து நாட்டில் இருந்து பத்திரிகை தமிழில் நமக்குதவ வெளிவருவது ஆச்சரியம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும், ஊழியங்களுக்கும் பத்திரிகை மிகவும் துணையாக இருந்து வருகின்றது.” – போதகர் டேவிட் ஜெபராஜ், சிவகாசி
“திருமறைத்தீபம் இதழானது மிகவும் தரம் வாய்ந்த தாளில் அச்சிடப்பட்டு வெளிவருவதால் நீண்ட நாட்கள் வைத்து படிக்க உதவும் வகையில் உள்ளது. சிலர் பத்திரிகை மாதா மாதம் வரவேண்டுமென்று விரும்புவார்கள். காலாண்டுக்கு ஒருமுறை வெளிவருவதை நான் மிகவும் வரவேற்கிறேன். காரணம், தகுந்த இடைவெளி இருப்பதால் இதழில் வெளிவரும் ஆழமான செய்திகளைப் படித்து நினைவுபடுத்திக்கொள்ளுவதற்கு வசதியாக இருக்கிறது. திருமறைத்தீபம் இதழின் அளவானது சிறியதாகவும் கைக்கு அடக்கமாகவும் இருப்பதால் எல்லா இடங்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக உள்ளது. பத்திரிகையின் எழுத்து நடை, வார்த்தைப் பிரயோகங்கள் அருமை. அநேக வார்த்தைகளை நானே முதன்முறையாகக் கற்றுக்கொண்டதோடு பயன்படுத்தியும் வருகிறேன்.”
– போதகர் பால்ராஜ், பழனி
“திருமறைத்தீப இதழ் ஆவிக்குரிய வாழ்க்கையின் சகல அம்சங்களையும் தொட்டு சரியான போதனைகளைத் தந்து வருகின்றது. சபை சரித்திரத்தில் சீர்திருத்தவாதிகள் எழுதிப் பின்பற்றிய 1689 விசுவாச அறிக்கையையும், திருச்சபை ஆராதனை விதிமுறைகளையும் பத்திரிகை தெளிவுபட விளக்கியது பாராட்டிற்குரியது. மலேசியாவில் என்னுடைய சபை மக்களுக்கும் எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.”
– போதகர் இந்திரன், மலேசியா
“திருமறைத்தீப இதழில் போலிப் போதனைகளுக்கு எதிராக வெளிவரும் ஆக்கங்கள் எல்லாம் எந்தவிதமான முகத்தாட்சனியமும் பாராமல், சத்தியத்தின் அடிப்படையில் மட்டும் எழுதப்பட்டு வருவது பாராட்டிற்குரியது. குறிப்பாக போலிப் போதனையாளரையும், அவரது தவறான போதனைகளையும் வேத பூர்வமாகத் தெளிவாக அடையாளப்படுத்தி எழுதிவருவது மிகச் சிறப்பான ஒன்றாகும்.”
– போதகர் மணிவண்ணன், கீராம்பூர்
நிறைவாக பத்திரிகையின் ஆசிரியர் போதகர் பாலா தனது சிறப்புரையில், தமிழுலகில் திருச்சபை சீர்திருத்தம் இன்று ஏன் அவசியம் என்பதைப் பழைய ஏற்பாட்டில் எசேக்கியா ராஜாவின் வாழ்க்கையிலிருந்து எடுத்து விளக்கினார். எசேக்கியாவின் சிந்தனையையும், செயற்திறனையும் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இலக்கியப் பணி குறித்து விளக்கிய போது கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்படியாக இப்பணிகள் செய்யப்பட வேண்டும் என்றும், எந்த ஒரு தனி மனிதனை மையப்படுத்தியோ, பெருமைப் படுத்தியோ எழுதுவதற்கு இலக்கியத்துறை இல்லை என்ற உண்மைகளை மிக அழகாக விளக்கினார். இறுதியில் திரு. இரவிக்குமார் அவர்கள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார். அதன்பின் அனைவரும் ஐக்கிய விருந்தில் கலந்து கொண்டனர். ஜெபத்துடன் திருமறைத் தீபத்தின் பத்தாண்டு நிறைவு விழா இனிதே நிறைவடைந்தது.