பத்து வருடங்களைக் கண்டுவிட்டது திருமறைத்தீபம். அதை நினைவு கூரு முகமாக இந்த இதழ் பத்தாண்டு நிறைவு மலராக வெளிவருகின்றது. பத்திரிகையின் வளர்ச்சியில் ஊக்கம் காட்டிப் பங்கெடுத்து வருபவர்களை இந்தப் பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம். நம்மையே நாம் பெருமை பாராட்டிக் கொள்வதற்காக இதை நாம் வெளியிடவில்லை. கண்களில் படாமல் பின்னால் இருந்து பணிபுரிகிற அநேகரை ஒரு தடவையாவது வெளிச்சத்தில் நிறுத்தி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காகவே இந்த நினைவு மலர் வெளிவருகிறது.
சர்வ வல்லவரான கர்த்தர் தம்முடைய அளப்பரிய கிருபையால் தரமான கிறிஸ்தவ காலாண்டு பத்திரிகையை தமிழினத்திற்கு வழங்க நம்மை இந்நாள் மட்டும் வழிநடத்தி வந்திருக்கிறார். பிள்ளைப் பருவத்தைக் கடந்து வளர்ந்திருக்கிறது திருறைத்தீபம். இதற்குப் பாலூட்டி, அருஞ்சுவை உணவூட்டி, நல்லாடை உடுத்தி இதன் வளர்ச்சியில் அக்கறைகாட்டி தாயின் பாசத்துடன் தொடர்ந்து உழைத்து வரும் ஒரு கூட்டமே இருக்கின்றது. ஆசிரியரும், அவர் பணிபுரியும் சபையும் இதற்கு அடித்தளமென்றால் இந்தக் கட்டிடம் வளர தன் பங்குக்கு செங்கல் வைத்து இதன் வளர்ச்சியில் அக்கறை காட்டி உழைக்கிறவர்கள் அநேகர். கர்த்தரே இப்பணிக்கு ஊன்றுகோல்.
நான் எழுதுவதையும், மொழி பெயர்ப்பதையும் சரிபார்த்து பல வருடங்களாக துணை புரிந்துள்ளார் என் மனைவி. இன்று அந்தப் பொறுப்பைச் சுமந்து வருகிறார், சென்னையில் எடிட்டராக ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் சகோதரன் ஜேம்ஸ், பத்திரிகையை அருமையாக அச்சிட்டு நேரம் தவறாமல் அனுப்பிவருகிறார்கள் டிராவு பிரின்ட் அச்சகத்தார். ஸ்ரீ லங்காவில் பத்திரிகையை அச்சிட்டு விநியோகித்து வருகிறார் கள் கிருபை இலக்கிய சேவையைச் சேர்ந்த சகோதர்கள் அருள்செல்வமும், மில்டனும். எம்மோடு இணைந்துழைக்கும் அநேக திருச்சபைகள் இவ்விதழ் தொடர்ந்து வெளிவரத் துணை புரிகிறார்கள். அவசியமேற்படுகிற வேளையில் தேவையான ஆக்கங்களை எழுதிப் பணிபுரிகிறார்கள் என் அருமை நண்பர்களான போதகர்கள். பத்திரிகையின் நடைமுறைத் தேவைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றி வருகிறார்கள் சவரின் கிறேஸ் சபை அங்கத்தவர்கள். பத்திரிகை வழங்கிவரும் வேத போதனைகளால் ஆத்மீக ஒளி பெற்று சத்தியத்தில் அக்கறைகாட்டி பத்திரிகைக்கு ஆதரவு அளித்துவருகிறார்கள் வாசக நண்பர்கள். ஜெபங்களில் எம்மைத் தாங்கி நெகேமியாவின் ஈட்டிபோல் இருந்து வரும் அன்புள்ளங்களும் அநேகம். இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. திருமறைத் தீபத்தின் வளர்ச்சிக்காக அக்கறையோடு உழைத்து வரும் அனைவருக்கும் பத்திரிகையின் சார்பாக என் மனமார்ந்த நன்றிகள்.
1995ல் நண்பரொருவரின் வீட்டு அறையில் என்னோடு சேர்த்து மூன்று விசுவாசிகளின் உள்ளத்தில் எழுந்த சத்திய வாஞ்சையின் வார்ப்பே திருமறைத்தீபம். ஒரு சிறு முயற்சி யாக சவரின் கிறேஸ் சபையைச் சார்ந்த சவரின் கிறேஸ் வெளியீடுகளினால் 1995ல் முந்நூறு பிரதிகளோடு மட்டும் உதயமான திருமறைத்தீபம் சீர்திருத்த வேத போதனை களை தமிழினத்திற்கு அறிமுகப்படுத்துவதையும், அதன் அடிப்படையில் போதகர் களும் திருச்சபைகளும் வளரத் துணைச் செய்வதையும் இலக்காகக் கொண்டு உழைத்து வருகின்றது. இன்று இருபது நாடுகளில் திருமறைத்தீபம் பவணி வருகின்றது. இந்நாள்வரை இதன் வளர்ச்சிக்குத் துணை புரிந்த கர்த்தர் தொடர்ந்தும் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையோடு பாதம் பதித்து நடந்து வருகிறது திருறைத்தீபம்.
திருமறைத்தீபத்தை அச்சிட ஆரம்பித்தபோது யாரிடம் அச்சிடுவது என்ற கேள்வி எழுந்தது. கர்த்தரே ஒரு நிறுவனத்திடம் எம்மை வழிநடத்தினார். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக கடமைக்காக எதையும் செய்யாது, அக்கறையோடு நமது பணிகளுக்கு முதலிடம் கொடுத்து பத்திரிகையை அச்சிட்டு வருகிறார்கள் ‘டிராவு பிரின்ட்’ அச்சகத்தார். இந்த சிறப்பிதழின் வர்ணப் பக்கங்களையும் பணமே வாங்காது அச்சிட்டுத் தந்திருக்கிறார்கள். நண்பர் ஜோன் ஃபிரிக்கர் (John Fricker) அங்கே நமது பணிகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார். பத்து ஆண்டுகளாக எந்தவித தடங்கலும் இல்லாமல் சகல பணிகளையும் பொறுப்போடு செய்து உதவி வருகிறார்.
விடியும் வேளையில் பகலவனின் பார்வைபட்டு மறையும் பனித்துளிகளாய்ப் பறந்து விட்டன பத்து ஆண்டுகள். திருறைத்தீபம் எத்தனையோ இதயங்களில் சீர்திருத்தத் தீயைப் பற்ற வைத்திருக்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அந்தத் தீ கொழுந்துவிட்டு எரியும் இதயங்களும் அநேகம். இருண்டு போயிருக்கிற தமிழினத்தின் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒளியேற்றிவைக்கப் பாடுபட்டு வரும் திருமறைத்தீபம் அதில் வெற்றி கண்டிருக்கிறதா என்பதற்கு காலம்தான் சாட்சி சொல்ல வேண்டும்.
இயேசுவைத் தேவனாக ஏற்றுக்கொண்டு இரண்டாங்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்து வரும் திருச்சபைகளையும், கிறிஸ்தவ சமுதாயத்தையும் அசைத்து மெய்யான விசு வாசத்திற்கு அடையாளம் அவருடைய வார்த்தைக்கு அடிமைப்பட்டு அனைத்துக் கடமைகளையும் செய்வதே என்பதை பகிரங்கமாக அறிவித்து வருகிறது திருறைத்தீபம். கிறிஸ்தவ சமுதாயத்தில் எல்லோருக்கும் துதிபாடி, சபைப் பிரிவுகளை யெல்லாம் தாஜா செய்து, கொள்கைகளையும் கோட்பாடுகளையும் புறக்கணித்து பிரபலமான பத்திரிகை என்று பெயர் வாங்குவதை நாம் என்றுமே இலட்சியமாகக் கொண்டிருக்க வில்லை. சத்தியத்தை வெளிப்படையாகப் போதிப்பதையும், நடைமுறையில் இருக்கு மாறு பார்த்துக்கொள்ளுவதையும் வெட்கப்படுகிற காரியமாக நாம் எண்ணவில்லை. “கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வெளிப்படையாக எடுத்துக் கூறாத பத்திரிகை ஓர் இலக்கியத் தடங்கல்” என்ற பிரசங்கிகளின் இளவரசனாம் ஸ்பர்ஜன் சொன்ன வார்த்தைகள் எங்கள் காதில் தொடர்ந்து ரீங்காரமிட்டு வருகின்றன. தமிழினத்தில் சத்தியத்தின் அடிப்படையில் சீர்திருத்தம் ஏற்பட்டு சபைகள் வளர வேண்டும் என்ற வாஞ்சையோடு தொடர்ந்து உழைத்து வருகிறோம்.
ஆற்றவேண்டிய பணிகள் மலை போல் நம்முன் எழுந்து நிற்கின்றன. போக வேண்டிய வழியும் இடறலானது; நீண்டது. இதுவரை இருந்ததைவிடப் பொறுமையும், துணிவும், தன்னம்பிக்கையும் நமக்குத் தேவை. முன்வைத்த காலைப் பின்வைக்காமல் தொடர்ந்து சீர்திருத்தப் பாதையில் கர்த்தர் நம்மை வழிநடத்திச் செல்லட்டும். நம்மெல் லோரையும் ஒன்றுகூட்டி இலட்சிய வாஞ்சையோடு சீர்திருத்த கிறிஸ்தவத்தின் வளர்ச் சிக்காகவும், எழுச்சிக்காகவும் பயன்படுத்தி வரும் இராஜாதி இராஜனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு இந்தப் பத்தாவது ஆண்டு நிறைவு மலரை சமர்ப்பிக்கிறேன். வருகிற காலங்களிலும் நாம் ஏற்றுக் கொண்டுள்ள இலட்சியத்தை மறக்காது கர்த்தரின் மகிமைக்காக உழைக்க கிறிஸ்து இயேசு நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
– ஆசிரியர்