சம காலத்து தமிழ் பிரசங்கங்களை எடுத்துப் பார்த்தால் அங்கே கோட்பாட்டுப் பஞ்சம் நிலவுவதை சுலபமாக அறிந்து கொள்ளலாம். வேத வசனங்கள் அங்குமிங்குமாக பிரசங்கங்களில் பலர் பயன்படுத்தப்படுகிறபோதும் அவர்களுடைய பிரசங்கங்களின் சாராம்சத்தையும், உட்தாற்பரியத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் மிஞ்சுவது வெறும் கதைகளும், தனிமனித அனுபவங்களும் மட்டுமே. வேதவசனங்களை மட்டுமே விளக்கிப் போதிக்கின்ற பிரசங்கிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுக்கு மட்டுமே அத்தகைய பிரசங்கிகளை தமிழினத்தில் காண முடிகின்றது.
பிரசங்கங்களில் கோட்பாடுகள் இல்லாமலிருப்பதற்குப் பலகாரணங்களுண்டு. முதலில் பிரசங்கிகளில் பலர் பிரசங்கப் பயிற்சியையோ, அனுபவத்தையோ தங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று வேதாகமக் கல்லூரிகளில் அத்தகைய பயிற்சிக்கு வழியுமில்லாமலிருக்கிறது. இரண்டாவதாக, இறையியல் போதனைகளை முறையாகக் கற்றுக்கொள்ளாததால் பிரசங்கிகளுக்கு வேத வசனங்களைப் பயன்படுத்தி சத்துள்ள போதனைகளை அளிக்க முடியாதிருக்கிறது. ஏதாவதொரு தலைப்பின் அடிப்படையில் அங்குமிங்குமாக தெரிவுசெய்யப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவே பிரசங்கங்கள் காணப்படுகின்றன. மூன்றாவதாக, கோட்பாடுகள் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற தவறான, வீணான எண்ணத்தைக் கொண்டிருக்கும் அனேக பிரசங்கிகள் அவற்றை முற்றாகத் தவிர்த்து விடுவதால் பிரசங்கத்தில் சொல்லுவதற்கு எந்த சத்தியமும் இல்லாமல் வெறும் சக்கையான சம்பவத் தொகுப்புகளைப் பிரசங்கமென்ற பெயரில் அளித்து வருகின்றனர். நான்காவதாக, வெறும் அனுபவத்திற்கு மட்டும் இடம் கொடுத்து வேதபோதனைகளைப் பெரும்பாலானோர் நிராகரித்திருப்பதால் பிரசங்கத்தைக் கேட்பதைவிட பரவசத்தை அடைவதே விசுவாசத்திற்கு வழி என்ற எண்ணத்தில் அவர்கள் வனாந்தரப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகி சத்திய மறியாமல் இருட்டில் வாழ்கிறது தமிழினம்.
பிரசங்கத்தின் முக்கிய பணி கர்த்தரின் செய்தியை ஆத்துமாக்களுக்கு தெளிவாக விளக்குவது. கர்த்தர் வேதத்தில் தந்திருக்கும் அனைத்துப் போதனைகளையும் தகுந்த முறையில் ஆத்துமாக்களின் ஆத்மீக வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் எடுத்துப் பிரசங்கிப்பதே பிரசங்கியின் முக்கிய கடமை. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கர்த்தரின் வேதம் கோட்பாடுகளால் நிரம்பி வழிகின்றது. கர்த்தரின் ஒவ்வொரு செய்தியும் போதனைகளே. போதனைகள் இல்லாத செய்தியை வேதத்தில் பார்க்க முடியாது. தன்னுடைய போதனைகளை அறிந்த விசுவாசிகள் அவற்றின்படி விசுவாசமாக வாழவேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவருடைய போதனைகளை அறிந்துகொள்ள விரும்பாத மனிதனால் கர்த்தரின் வழிப்படி வாழமுடியாது. கர்த்தரின் போதனைகளை நிராகரிக்கிறவர்கள் கர்த்தரையே நிராகரிக்கிறார்கள்.
பத்துக் கட்டளைகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால். முதலாம் கட்டளை கர்த்தர் மட்டுமே ஜீவனுள்ள தேவன் என்பதை விளக்குகிறது. அந்தக் கட்டளையை ஆராய்ந்து படித்தால் கர்த்தர் ஒருவரே தேவன் என்றும், அவர் ஜீவனுள்ள தேவன் என்றும், அவரைத் தவிர வேறு தேவர்கள் இல்லை என்றும், அவர் மட்டுமே தேவனாக இருப்பதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ளலாம். இதையே இன்னும் ஆழமாகப் படித்துப் பார்த்தால் கர்த்தர் சர்வ வல்லவர் என்றும், அனைத்தையும் படைத்து இயக்குகிறவர் என்றும் அவரைப் பற்றி இன்னும் அதிகமான சத்தியங்களை அறிந்து கொள்ளலாம். இதெல்லாம் முதலாம் கட்டளை கர்த்தரைப் பற்றித் தரும் போதனைகள். இதையெல்லாம் விளக்காமல் முதலாம் கட்டளையைப் பிரசங்கிக்கவே முடியாது. இந்தப் போதனைகளை உதறித் தள்ளி விட்டு முதலாம் கட்டளையைப் பிரசங்கிக்க முற்பட்டால் கர்த்தரைப் பற்றிய சத்தியங்களே இல்லாத செய்தியாகத்தான் அது போய் முடியும்.
பிரசங்கம் என்றால் அதில் வேதபோதனைகள் இருந்தேயாக வேண்டும். வேதக்கோட்பாடுகளை விளக்காத செய்திகள் பிரசங்கங்கலல்ல. அத்தகைய செய்திகள் ஆத்துமாக்களை சீரழித்து விடும். இனி பிரசங்கத்தில் வேதக் கோட்பாடுகள் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வதெப்படி? என்பதை ஆராய்வோம்.
பிரசங்கிகளுக்கு இறையியல் அறிவு அவசியம்
இறையியல் என்ற பதத்தைக் கேட்டவுடனேயே பலருக்கு ஜுரம் வந்துவிடுகிறது. அந்தளவுக்கு போலித்தனமான செய்திகளைக் கேட்டு இறையியலைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் பெரும்பாலானோர். பிரசங்கம் செய்யத் துணிகிறவர்கள் கர்த்தரின் வேத அறிவில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைத்தான் இறையியல் என்று கூறுகிறேன். கர்த்தரின் வேதத்தில் தரப்பட்டிருக்கும் அத்தனை சத்தியங்களையும் அறிந்தவனாகவும், அந்த சத்தியங்களைப் பகுத்துப் போதிக்கும் வல்லமையுள்ளவனாகவும் பிரசங்கி இருக்க வேண்டும். வேத இறையியலை இன்று வேதாகமக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ள முடியாமலிருப்பது கவலை தரும் செய்திதான். பெரும் பாலான வேதாகமக் கல்லூரிகள் இறையியல் என்பதையே அறியாத தேவ நிந்தனை செய்யும் கல்லூரிகளாக இருக்கின்றன.
இந்த நிலைமையில் பிரசங்கி எப்படி, எங்கிருந்து, வேத இறையியலைப் பெற்றுக்கொள்வது? அதற்கு வழி என்ன? என்ற கேள்வி எழுகிறது. முதலில் வேதத்தை முறையாகத் தொடர்ந்து வாசித்து, குறிப்பெடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அறைகுறையாக ஒரு பகுதியை வாசிப்பதோ அல்லது பிரசங்கம் செய்வதற்காக ஒரு வசனத்தை வாசிப்பதையோ நான் குறிப்பிடவில்லை. அது வேதவாசிப்பாகாது. ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கி ஆரம்பம் முதல் கடைசி நூல்வரை வருடா வருடம் வேதத்தை வாசித்து ஆராய்வதையே குறிப்பிடுகிறேன். இதன் அவசியத்தை உணர்ந்து இதற்கு நேரம் ஒதுக்கி வேதத்தைப் படிக்க வேண்டும். இப்படிப் படிப்பது வேதம் முழுவதிலும் தரப்பட்டிருக்கும் போதனைகளை நாம் படித்தறிந்து கொள்வதற்கு துணைபுரியும்.
அடுத்ததாக, ஒரு குறிப்பிட்ட வேதநூலை ஆராய்வதற்கு தனியாக நேரம் ஒதுக்கி அதைப் பலமுறைப் படித்து, அதன் எல்லா அம்சங்களையும் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். உதாரணத்திற்கு பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை எடுத்துக் கொண்டால்,
அதை எங்கிருந்து பவுல் யாருக்கு எழுதினார்?
அந்த நூலில் அவர் நூலைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எதைப் போதிக்கிறார்?
அந்தப் போதனை நூலில் எந்தமுறையில் தரப்பட்டிருக்கிறது?
அந்தப் போதனை எப்படி விளக்கப்பட்டிருக்கிறது?
அதேவிதமான போதனை வேதத்தின் ஏனைய பகுதிகளில் காணப்படுகின்றதா?
அந்தப் போதனையை பவுல் முக்கியமாக நூலைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு விளக்கியிருப்பதற்குக் காரணம் என்ன?
அந்தப் போதனையின் மூலம் பவுல் எதிர்க்கும் போலிக்கோட்பாடு எது?
அந்தப் போலிக்கோட்பாடு விசுவாசிகளை எந்தவிதத்தில் பாதித்தது?
என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை எல்லாம் ரோமருக்கு பவுல் எழுதிய நூலில் இருந்து பெற்றுக்கொள்ளும்படி நமது வாசிப்பும் ஆராய்ச்சியும் அமைய வேண்டும். இதை ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ செய்துவிட முடியாது. இதைச் செய்வதற்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இந்த முறையில் வேத நூல்களை ஆராய்ந்து ஆவியின் துணையோடு படிக்கும்போது வேதபோதனைகளில் நாம் நிச்சயம் வளர்வோம். வேதக் கோட்பாடுகளை இலகுவாக புரிந்துகொள்ளுவோம்.
இறையியல் ஞானத்தைத் தரக்கூடிய நூல்கள்
வேதபோதனைகளை முறையாகக் கற்றுக் கொள்ளுவதற்கு வேதஞான முள்ளவர்கள் எழுதிவைத்துள்ள நூல்களை வாசித்து ஆராய்வது பெரும் பயனளிக்கும். இன்று வேதக்கோட்பாடுகளை விளக்கும் நூல்கள் தமிழில் மிகக் குறைவு. இருந்தாலும் இருக்கும் நல்ல நூல்களை பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பது மன்னிக்க முடியாத குற்றம். நம்முன்னோர்களான சீர்திருத்தவாதிகள் ஆராய்ந்து எழுதி வைத்துள்ள 1689 விசுவாச அறிக்கை வேதபோதனைகளை விளக்கமாகவும், சுருக்கமாகவும் தொகுத்து அளிக்கும் மிகவும் பயனுள்ள ஒரு நல்ல நூல். பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் வாசித்துப்பயன்பெற வேண்டிய நூல் இது. வேதம் போதிக்கும் அனைத்து சத்தியங்களும் இதில் முறையாகத் தொகுத்து அளிக்கப்பட் டிருக்கிறது. வேதத்தாலும், வரலாற்றாலும், காலத்தாலும் நிரூபிக்கப்பட்டுள்ள அருமையான நூல். இதற்கு அடுத்தபடியாக வினாவிடைப் போதனையொன்றையும் நம்முன்னோர்கள் நமக்கு அருளிச் சென்றிருக்கிறார்கள். விசுவாச அறிக்கையில் நாம் வாசிக்கும் சத்தியங்களை வினா விடை வடிவத்தில் தந்திருக்கிறார்கள். அதையே திருமறைத்தீபத்தில் ‘கிறிஸ்தவ கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் விளக்கமாகத் தந்துவருகிறோம். இவை இரண்டையும் கவனமாகப் படிக்கும் எந்தப் பிரசங்கியும் தேவையான வேதபூர்வமான இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆரம்ப இறையியல் அறிவு இல்லாமல் பிரசங்க ஊழியத்திற்குப் போவது குதிரையோட்டத் தெரியாதவன் குதிரை சவாரி செய்யப் போவது போல்தான் அமையும்.
இவைதவிர வேதபூர்வமான நல்ல நூல்களையும் வாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஜோன் பனியனின் ‘மோட்ச பயணம்’ – இது வேத இறையியலை அனுபவரீதியில் அருமையாக விளக்குகிறது. மார்டின் லூதரின் ‘பிறவி அடிமைகள்’, மனிதன் பாவத்திற்கு எப்படி அடிமையாக இருக்கிறான் என்பதை விளக்கும் நல்ல நூல். நூல்களை வாசிக்கும்போது ஆராய்ந்து வாசிப்பது அவசியம். தவறான போதனைகளை அளிக்கும் நூல்களை வாசித்து இருதயத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. பெனிஹின், ஜொய்ஸ் மேயர், கென்னத் கோப்லாந்து, தமிழ் நாட்டில் தினகரன், சாம் ஜெபத்துரை மேலும் இவர்களைப் போன்ற பெந்தகொஸ்தே இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நூல்கள் பக்கம் தலை வைத்தும் படுக்காமல் இருப்பது நல்லது. ‘செழிப்பு உபதேசம்’ என்ற பிசாசின் போதனையை இவர்கள் பரப்பி வருகிறார்கள். நல்ல நூல்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் பின்வரும் முகவரிகளுக்கு எழுதிக் கேளுங்கள்: இந்தியாவில் இருப்பவர்கள், சீர்திருத்த பாப்திஸ்து வெளியீடுகள், 6/87, காமராஜர் தெரு, திருவள்ளுவர் நகர், அயனாவரம், சென்னை – 23, தமிழ்நாடு. என்ற முகவரிக்கு எழுதவும். ஸ்ரீ லங்காவில் இருப்பவர்கள், டியாகிறைசிஸ் புக் சர்விஸ், 19 இராஜசிங்க வீதி, கொழும்பு 6 என்ற முகவரியோடு தொடர்பு கொள்ளவும்.
ஆங்கில அறிவுள்ளவர்கள் அனேக நல்ல நூல்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்தில் வாசிக்கும் பயிற்சியையாவது பெற்றுக் கொண்டால் பிரசங்க ஊழியத்திற்கு பேருதவியாக அமையும். முக்கியமாக பேர்கொவ்வின் Summary of Christian Doctrine, (Louis Berkhof) வேதசத்தியங்களை சுருக்கமாக விளக்குகிறது. இவர் முழுக்கு ஞானஸ்தானத்தை விசுவாசிப்பவரல்ல என்றாலும் நூலில் உள்ள இறையியல் மிகவும் தரம் வாய்ந்தது.
வேதபோதனைகளை (இறை கோட்பாடுகள்) பிரசங்கத்தில் பயன்படுத்தும் முறை
நாம் கற்றறிந்து கொண்டிருக்கும் வேதபோதனைகளை பிரசங்கத்தில் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் கேட்கின்ற ஆத்து மாக்கள் வேத அறிவில் வளர வழி செய்து கொடுக்க முடியும். வேத அறிவில் அவர்கள் வளர்ந்தால் மட்டுமே அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க் கையில் மெய்யான வளர்ச்சி ஏற்படும். பிரசங்கி ஒரு நூலில் இருந்து தொடர்ச்சியான பிரசங்கத்தை அளிக்க முடிவு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர் ஏற்கனவே அந்த நூலைப் பலதடவை வாசித்து, அந்த நூலை எந்த முறையில் பிரசங்கிக்கப் போகிறேன் என்ப தைத் தீர்மானித்து, நூலைப் பல பகுதிகளாகப் பிரித்து அவற்றில் இருந்து எத்தனைப் பிரசங்கங்களை அளிக்கப் போகிறேன் என்பதையும் ஏற்கனவே தீர்மானித்திருப்பார். அத்தோடு அந்த நூலில் முக்கியமாகப் போதிக்கப்பட்டிருக்கும் இறைகோட்பாடு என்ன என்பதையும் நூல் விளக்கும் ஏனைய போதனைகளையும் குறிப்பெடுத்து வைத்திருப்பார். உதாரணமாக ரோமரை எடுத்துக் கொண்டால் அதில் நீதிமானாக்கல் (Justification) முக்கிய போத னையாக இருக்கிறது. அதைத் தவிர தேவ கோபம், தேவநீதி, பாவம், மூல பாவம், நியாயப்பிரமாணம், விசுவாசம், பரிசுத்தமாகுதல், கிறிஸ்து வினுடனான ஐக்கியம், எஞ்சியிருக்கும் பாவம், மகிமையடைதல், கர்த்தரின் இறையாண்மை, தேவனின் திட்டத்தில் இஸ்ரவேலின் பங்கு, விசுவாச வாழ்க்கை, கிறிஸ்தவ சுதந்திரம் போன்ற பல வேதபோதனைகளும் நூலில் அடங்கியிருக்கின்றன.
ரோமருக்கு எழுதிய நூலில் இருந்து பிரசங்கிக்கிறபோது மேலே நாம் பார்த்த சத்தியங்கள் காணப்படும் பகுதிகளில் அந்தந்த சத்தியங்களை முறையாக நூலில் அவை தரப்பட்டிருக்கும் விதத்தில் விளக்கமாக போதிக்க வேண்டியது பிரசங்கியின் கடமை. நூலில் காணப்படும் கோட்பாடுகள் அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு அதிலிருந்து பிரசங்கம் செய்ய முடியாது. அப்படிச் செய்கிற ஆயிரக்கணக்கான அதிகப்பிரசங்கிகள் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். பிசாசு செய்யவேண்டிய வேலையை இவர்கள் தத்தெடுத்து செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என்றால் நூலை முறையாக, தொடர்ச்சியாக விளக்கிப் போதிக்காது இங்கும் அங்குமாக தங்களுக்குப் பிடித்தமான ஓரிரு வசனங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் மேலெ ழுந்தவாரியாகப் பிரசங்கித்து ரோமரில் பவுல் தந்திருக்கும் போதனைகளை அடியோடு மறைத்துவிடுகிறார்கள். இதனால் ஆத்துமாக்கள் வேதம் தெரியாமலேயே வாழ நேரிடுகிறது.
பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் இருந்து நீதிமானாக்கலைக் குறித்து பிரசங்கி பிரசங்கிப்பதானால் அவர் முதலிலேயே நீதிமானாக்கல் போதனையை ஆராய்ந்து படித்து குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுவது அவசியம். அந்தக் கோட்பாட்டை சரிவர அறிந்துகொள்ளாமல் பிரசங்கிக் கப் போகக்கூடாது. நீதிமானாக்கலின் சகல அம்சங்கள் பற்றியும் பிரசங்கிக்கு நல்ல அறிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கோட் பாட்டைத் தவறாகப் பிரசங்கித்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். அதேபோலத்தான் அந்நூலில் உள்ள ஏனைய சத்தியங்களையும் கவனமாகப் படித்து அவற்றை நூலில் பவுல் எவ்வாறு கையாளுகிறார் என்பதை உணர்ந்து பிரசங்கிப்பது அவசியம். அதேவேளை நீதிமானாக்கலுக்கு எதிர் கோட்பாடுகளையும் அறிந்து வைத்திருப்பது அவசியம். ரோமன் கத்தோலிக்கர்கள் வேதம் போதிக்கும் நீதிமானாக்கல் போதனையை ஏற்றுக் கொள்ளுவதில்லை. கிரியையின் அடிப்படையிலான விசுவாசத்தை அவர்கள் போதிக்கிறார்கள். நீதிமானாக்கல் போதனையை நன்குணர்ந்தவர்கள் இரட்சிப்பில் மனிதனுக்கு எந்தப்பங்கும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுவார்கள்.
வேதக்கோட்பாடுகளை தலைப்பாகக் கொண்டு பிரசங்கித்தல்
ஒரு நூலில் இருந்து முறையாக பங்கு பங்காகப் பிரசங்கிக்காமல் சில சமயங்களில் வேதக் கோட்பாடுகளின் தலைப்புகளின் அடிப்படையிலும் (Topical sermons) பல வாரங்களுக்குப் பிரசங்கிக்கலாம். இப்படிப் பிரசங்கிப்பது சபை மக்களுக்கு வேதசத்தியங்களைப் போதித்து அவற்றில் அறிவு அதிகரிக்க வழி செய்யும். இதையே வழக்கமாகக் கொண்டிராமல் வசதிக்கும், ஆத்துமாக்களின் தேவைகளுக்கும் ஏற்ப இருந்திருந்து பிரசங்கிப்பது நல்லது. முக்கியமாக பிரசங்கி ஒரு காலண்டரை வைத்திருந்து குறிப்பிட்ட வருடத்தில் எப்போது எத்தனை வாரங்களுக்கு தலைப்புகளின் அடிப்படை யில் பிரசங்கிக்கப்பது என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த முறையில் பிரசங்கிப்பதற்கு பிரசங்கிக்கப்போகும் ஒவ்வொரு வேதக் கோட்பாட்டிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். வெறும் தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு உளறுவது ஒரு தலைப்பின் அடிப்படையில் செய்யும் பிரசங்கமாகாது. உதாரணமாக, பரிசுத்தமாகுதலைப் பற்றிப் பிரசங்கிப்பதானால் வேதம் அதுபற்றி எல்லாப் பகுதிகளிலும் கொடுக்கும் விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும். மேலும் வேதத்திற்கு முரணான பரிசுத்தமாகுதல் பற்றிய தவறான போதனைகளையும் அறிந்துவைத்திருக்க வேண்டும்.
கத்தோலிக்க மதம், விசுவாசி முழுக்கு ஞானஸ்நானத்தின் மூலமும், சபைக்குக் கட்டுப்பட்டு செய்யும் கிரியைகளின் மூலமும் ஒருவன் பரிசுத்த மாகுவதாக தவறாகப் போதிக்கிறது. பெந்தகொஸ்தே இயக்கங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் விசுவாசி பரிசுத்தமாகுவதாக எண்ணி, விசுவாசியின் கடமைப்பாட்டை முற்றாக அலட்சியப்படுத்துகிறது. சகோதர சபைப் பிரிவுகளில் சில பத்துக்கட்டளைகளுக்கு விசுவாசி அடங்கி நடக்க வேண்டு மென்பதை அலட்சியப்படுத்தி பாவம் செய்கிற விசுவாசி ஜெபத்தாலும், உபவாசத்தாலும், கர்த்தரில் தங்கியிருப்பதாலும் பரிசுத்தமடையலாம் என்று போதிக்கின்றன. ஜோன் வெஸ்லி, விசுவாசி இந்த உலகத்தில் பூரணத்துவ மடையலாம் என்று தவறாகக் கருதினார். இத்தனைத் தவறான போதனைகளும் நம்மத்தியில் உலவுவதால் இதையெல்லாம் தோலுரித்துக் காட்டி பரிசுத்தமாகுதல் விசுவாசியால் மட்டுமே முடியும் என்றும், அதை அடைய முதலில் ஒருவன் மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் பெற்றிருத்தல் வேண்டும் என்றும், அப்படி விசுவாசியாக இருக்கும் மனிதன் தன் வாழ்க்கையில் பாவத்துக்கு புறமுதுகு காட்டி அன்றாடம் பத்துக் கட்டளைகளைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் விளக்குவது அவசியம். பரிசுத்தமாகுதலை விசுவாசி கர்த்தரின் ஆவியின் துணையோடு மட்டுமே தன் வாழ்க்கையில் காண முடியும் என்பதையும் விளக்குவது அவசியம். கர்த்தர் விசுவாசியில் செய்யும் பரிசுத்த மாகுதலில் மனிதனின் பங்கு நிச்சயம் இருக்கிறது. (பிலிப்பியர் 2:12, 13).
இந்த முறையில் வேதக்கோட்பாடுகளை ஆராய்ந்து படித்துத் தயாரித்து பிரசங்கங்களை அளிக்க வேண்டியது ஒவ்வொரு பிரசங்கியினதும் கடமை.