பிரசங்கப் பேச்சு நடை, உச்சரிப்பு, குரல் வளம் . . .

இனி பிரசங்கத்தைத் தயாரிக்கும்போது பிரசங்கிகள் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாக கவனித்து வந்த நாம் கடந்த இதழில் தயாரிக்கப்பட்ட பிரசங்கத்தை மேடைக்கு கொண்டு செல்லும் போது பிரசங்கக் குறிப்புகளை எந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் கவனித்தோம். ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவளித்து வளர்க்க வேண்டிய உயர்ந்த ஊழியத்தில் இருக்கும் போதகர்கள், பிரசங்கிகள் வேதபூர்வமாக பிரசங்கங்களைத் தயாரித்து அளிக்க இவை உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இவை தங்களுடைய பிரசங்க ஊழியத்துக்கு பெரிதும் உதவியிருப்பதாக எழுதித் தெரிவித்தவர் களுக்கு நன்றி. நம்முடைய பிரசங்க ஊழியத்தால் கர்த்தருக்கே அனைத்து மகிமையும் சேர வேண்டும்.

பிரசங்கங்களை நாம் வேத அடிப்படையில் கஷ்டப்பட்டு ஆராய்ந்து தயாரித்துவிடுவதோடு நமது வேலை முடிந்துவிடுவதில்லை. கடினமாக உழைத்து ஞானத்தோடு பிரசங்கங்களைத் தயாரிப்பது இன்றியமையாதது. அப்படித் தயாரித்த பிரசங்கத்தை ஆத்துமாக்களுக்கு முன் பிரசங்கிப்பது அதன் அடுத்த பகுதியாகும். பிரசங்கத்தை பிரசங்கித்து முடியும்வரை அந்தப் பணி நிறைவேறிவிட்டதாக நாம் கருத முடியாது. எத்தனைக் கருத்தோடு பிரசங்கத்தை உழைத்துத் தயாரித்தாலும் அதை ஆத்துமாக் களுக்கு முன் படைக்காதவரை அதனால் பிரயோஜனம் இருக்காது.

பிரசங்கப் பேச்சுநடை

பிரசங்கிகள் பிரசங்கிக்கும்போது கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களை இனி ஆராய்வோம். அதில் பிரசங்கத்தைப் பிரசங்கிக்கப் பயன்படுத்தும் பேச்சுநடை பற்றி முதலில் பார்ப்பது அவசியம். தமிழில் பிரசங்கிக்கும் பிரசங்கிகள் அந்த மொழியில் வளமாகப் பேசத் தெரிந் திருப்பது அவசியம். பிறந்தது முதல் பேசிக்கொண்டிருக்கிற மொழியில் யாருக்காவது வளமாகப் பேசத் தெரியாமல் இருக்குமா? என்று நீங்கள் கேட்கலாம். பிறந்தது முதல் நாம் தாய் மொழியில் பேசினாலும் பிரசங்கம் செய்கிறபோது அது சுலபமாக நல்ல முறையில் அமைந்துவிடும் என்று நினைப்பது தவறு. இன்றைய நடைமுறைப் பேச்சுத் தமிழ் கொச்சையாக இருப்பது நமக்குத் தெரியும். அதில் இலக்கண சுத்தத்திற்கோ, அழகுணர்ச்சி நயங்களுக்கோ இடமில்லை. நாம் பேசுகின்ற மொழி பிரசங்கம் செய்வதற்கு ஏற்றவிதத்தில் அமைந்திருக்க வேண்டும். இதற்கு மொழிப்பயிற்சி அவசியம்.

மொழியில் பயிற்சி இல்லாமல் பிரசங்கத்தை அளிக்க முடியாது. இதற்காக நாம் பண்டிதர்களாகிவிட வேண்டிய அவசியமில்லை. இலக்கணம் முதல் மொழி பற்றிய அனைத்திலும் நல்ல பயிற்சி இருக்க வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். வளமாகப் பேசத் தெரியாத காரணத்தால் பிரசங்கி ஒரு நல்ல பிரசங்கத்தைப் பயனற்றதாக்கி விடலாம். அதைவிடக் கொடுமை இருக்க முடியாது. மொழி அறிவும், மொழி வளமும் இல்லாமல் பிரசங்கம் கேட்பவர்களை சோர்வடையச் செய்கிறவர்கள் இன்று அதிகம். ஒரு சிலருடைய குரலைக் கேட்டாலே நமக்கு ஓடிவிடத் தோன்றும். அப்படியிருக்கும்போது அவர்களுடைய பிரசங்கங்களை இருந்து கேட்பதெப்படி? இன்று பிரசங்க ஊழியத்தின் இந்த விஷயத்தில் இறை யியல் கல்லூரிகளோ, சபைகளோ அக்கறை காட்டுவதில்லை. டெலிவிஷனில் செய்தி வாசிப்பவர்களையும், பேசுகிறவர்களையும் அவர்களுடைய பேச்சுநடை, மொழிவளம் ஆகியவற்றைப் பார்த்தே இந்த உலகத்தார் தெரிவு செய்கிறார்கள். பேசுவதற்கு அவர்கள் நல்ல பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. பிரசங்க ஊழியத்தில் இன்றைக்கு தட்டித்தடுமாறி, திக்கித் திணறி, வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாதவர்கள் பெருகிக் கிடப்பது நம்மினத்தைப் பிடித்துள்ள வியாதியே.

தமிழகத்துப் பிரசங்கிகளில் பலர் பிரசங்கத்துக்கென்று தனியாக ஒரு மொழிநடையைத் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பிரசங்கம் கேட்கிறவர்கள் பேசுகிறது நம் போதகர்தானா? என்று தலையை உயர்த்திப் பார்க்கும் விதத்தில் அவர்களுடைய மொழி நடை அமைந்திருக்கும். பிரசங்க மேடைக்கு வெளியில் அவர்களுடைய பேச்சு வித்தியாசமானதாக இருக்கும். ‘பிரியமானவர்களே’, ‘அன்பானவர்களே’ என்று ஆத்துமாக்களை பார்த்துப் பேசாத தமிழகத்துப் பிரசங்கிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை மிகவும் பழமையானது. இன்று அந்த மொழி நடையில் எழுதுகிறவர்களையும் பேசுகிறவர்களையும் நம்மினத்தில் பார்க்க முடியாது. பிரசங்கிகளில் பலர் இன்று அந்த மொழி நடையை பிரசங்கிக்கும்போது பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் அது கர்த்தரின் பாஷையாம்! புறஜாதி மனிதன் சபைக்கு வந்தால் இந்த மொழிநடையைக் கேட்டே ஓடிவிடுவான் என்பது அநேகருக்குப் புரிவதில்லை. வழக்கமாக நாம் பேசும்போது பயன்படுத்தும் மொழி நடையை பிரசங்கிக்கும்போதும், பிரசங்க மேடையில் நிற்கும்போதும் பயன்படுத்துவது தகாது என்ற தவறான எண்ணம் எல்லாப் போதகர்களுடைய இரத்தத்திலும் ஊறிப்போயிருக்கிறது.

பிரசங்கிக்கும்போது நாம் வழக்கத்துக்கு மாறான மொழிநடையைப் பயன்படுத்தினால் ஆத்துமாக்களுக்கும் நமக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிடும். பிரசங்கமும் கேட்பதற்கு செயற்கையானதாக இருக்கும். அதில் உயிரோ, உணர்ச்சியோ இருக்காது. அருமையான பிரசங் கத்தைக் கூட, மொழிநடை செயற்கையானதாக இருப்பதால் நாம் கெடுத்துவிடலாம். இதற்காக நாம் வழக்கில் இருக்கும் கொச்சைத் தமிழில் பேச வேண்டுமென்று சொல்லவில்லை. பண்டிதத் தமிழ் வாடையோ அல்லது நாம் யார் என்பதை அடையாளம் காட்ட முடியாத மொழி நடையோ இருந்துவிடக்கூடாது என்றுதான் சொல்லுகிறேன். பிரசங்க மொழி நடை மக்களுடைய பாஷையில் இருக்கவேண்டுமென்பதில் ஸ்பர்ஜன் உறுதியாக இருந்தார். சீர்திருத்தவாதிகளான மார்டின் லூதரும், கல்வினும், நொக்ஸும் அதற்குப் பின்வந்த ஜோர்ஜ் விட்பீல்ட் போன்றோரும் மக்களுடைய பாஷையிலேயே பேசினார்கள்.

பிரசங்கிகளுடைய பேச்சு வெளிப்படையாக இருக்க வேண்டும். ஜோடனைகள் உள்ளதாக செயற்கையாக இருக்கக்கூடாது. இதைக் குறிக்க வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தை Parresia (அப்போஸ். 4:13). இதற்கு வெளிப்படையான, ஒளிவு மறைவில்லாமல், நேரடியான ஆகிய அர்த்தங்கள் உண்டு. கர்த்தர் செயற்கையான பாஷையில் நம்மோடு பேசவில்லை. மனிதர்களுக்குப் புரிகிற பொதுவான மானிட மொழியில்தான் (Common or Vulgar language) பேசினார். இயேசு கிறிஸ்துவும் மனிதர்களுடைய அன்றாட பாஷையில் அவர்களுக்கு தெளிவாகப் புரிகிற மொழியில் பேசினார். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளும் இவ்விதமாகவே பேசியிருக்கிறார்கள். உண்மையில் அவர்களுடைய பேச்சில் கடுமையான வார்த்தைகளும், முகம் சுழிக்கக்கூடிய வார்த்தைகளும் இருந்திருக்கின்றன. தேவைப்பட்ட இடங்களில் அப்படிப் பேசுவதை அவர்கள் தவிர்க்க வில்லை. இதற்காக கீழ்த்தரமான பாஷையில் நாம் பேச வேண்டும் என்பதல்ல. தீர்க்கதரிசிகளும், இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் ஜோடனைகள் எதுவுமின்றி, தெளிவான மொழியில் குழப்பங்கள் இல்லாமல் கிராமத்தானுக்கும் புரிகிற பாஷையில் பேசினார்கள். பிரசங்கம் ஆத்துமாக்களுடைய இதயத்தில் பதிய வேண்டுமானால் நாம் பேசுகிற மொழி அவர்களுக்கு புரியக்கூடியதாக, அவர்களுடைய நெஞ்சில் பதியக்கூடியதாக இருக்க வேண்டும்.

சார்ள்ஸ் பிரிட்ஜஸ் (Charles Bridges) சொல்லுகிறார், “ஒரு மனிதனை மிகவும் படித்தவனைப்போலக் காட்டக்கூடிய மொழியில் எழுதவும், பேசவும் வைப்பது அவனுடைய மாயையே. ஆனால், பக்திவிருத்தி ஒரு அறிஞனை ஜோடனைகளில்லாத மொழியில் பொதுமக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் பேசவைக்கும்.” ஜோடனைகளில்லாமல், படிப்பறிவில்லாதவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பேசுவது இலகுவான காரியமல்ல என்கிறார் பிசப் ஜே. சி. ரைல். “கஷ்டப்படாமல் இதை நாம் அடைய முடியாது. மீண்டும் சொல்லுகிறேன், வலியும், கஷ்டமும் இல்லாமல் இது வராது” என்கிறார் ரைல். இதுபற்றி ஸ்பர்ஜன் பின்வருமாறு சொன்னார், “ஆத்துமாக்களில் நமக்கிருக்கும் அன்பு நம்மைப் பலவிதங்களில் உழைக்க வைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த அன்பினால் நாம் ஆத்துமாக்களுக்குப் புரியக்கூடிய மொழியில் பேசுவோம். நம்மைப் பார்த்து நாமே இப்படிச் சொல்லிக்கொள்ளுவோம், ‘சபையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணால் புரிந்து கொள்ள முடியாத அந்தப் பெரிய வார்த்தையை நான் பயன்படுத்தக்கூடாது. அந்தப் பகுதியில் இருக்கும் கடினமான விஷயத்தை நான் விளக்க முயற்சிக்கக் கூடாது. என்னுடைய விளக்கம் கலங்கிப் போயிருக்கும் அந்த ஆத்துமாவைக் குழப்பத்துக்குள்ளாக்கி அமைதி ஏற்படுத்தாமல் போய்விடும்.’ . . . நீங்கள் ஆத்துமாக்களை நேசிக்கப் பழகுவீர்களானால் அதிகமான வசனங்களைப் பயன்படுத்து வதில் உங்களுக்கு ஆசை ஏற்படாது . . . நமக்கு அன்பு இருந்தால் சகலவிதமான ஜோடனைகளையும், வருணணைகளையும் நமது பேச்சில் இருந்து களைந்து, வேதத்தின் அர்த்¢தத்தை மட்டும் தெளிவாக விளக்கி, ஆத்துமாக்களுக்கு நமது பேச்சு ஆசீர்வாதமாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுவோம்.” ஸ்பர்ஜனின் இந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.

ஆத்துமாக்களுக்கு புரிகிறபடி, வெளிப்படையாக, ஜோடனைகளின்றி பிரசங்கம் செய்யவேண்டுமென்று வலியுறுத்துகிறபோது அதைத் தவறாக விளங்கிக் கொள்ளாமலிருப்பதும் அவசியம். இதுவரை நாம் விளக்கிய வற்றின் மூலம் நாம் எல்லா இடங்களிலும் ஒரே முறையில் பேச வேண்டும் என்று நான் கூறவரவில்லை. கிராமத்து மக்கள் முன்னிலையில் பேசுவதற்கும், படித்த கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. எல்லா இடங்களிலுமே அநாவசியமான ஜோடனைகள் தேவையில்லை; இருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் பேசும்போது நமது பேச்சில் அவர்களுக்குத் தேவையான விஷய ஞானமிருப்பது அவசியம். புரிந்துகொள்ளும்படியாகப் பேச வேண்டும் என்று நான் தந்த ஆலோ சனையை நமது பேச்சு குழந்தைத்தனமானதாக, சாராம்சமற்றதாக, விஷய மற்ற, உப்புச்சப்பில்லாத பேச்சாக இருக்க வேண்டும் என்று தப்பாக விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்று பெரும்பாலான தமிழினத்து பிரசங்கிகளின் பிரசங்கங்கள் பொருளற்றதாகவும், கேட்பவர்களின் ஆத்மீக தாகத்தைத் தீர்த்துவைக்க முடியாததாகவும் இருக்கிறது என்று கூறுவது இருக்கின்ற நிலைமையை மிகைப்படுத்துவதாகாது.

நாம் எவ்வளவு படித்திருந்தாலும், எத்தனை மொழிவல்லமையுடையவர்களாக இருந்தாலும் நமது பிரசங்கத்தைத் கேட்கிறவர்கள் அதைப் புரிந்துகொள்ளும்படி பிரசங்கம் இருக்க வேண்டும். அதைச் செய்வதற்காக நாம் படிக்காத முட்டாளைப் போல பேச வேண்டியதில்லை; ரிக்ஷா இழுக்கிறவர்களைப் போலவும் பேசத்தேவையில்லை. தெருப் பாஷையில் பேசவேண்டிய அவசியமில்லாமலேயே நமது பேச்சுநடை எளிமையான தாக, கேட்பவர்கள் புரிந்துகொள்ளும்படியானதாக இருக்க வேண்டும்.

உச்சரிப்பு

பேச்சு நடையோடு நமது உச்சரிப்பும் தெளிவாக இருக்க வேண்டும். வார்த்தைகளை நாம் விழுங்கக் கூடாது. நாம் பேசுகின்ற வார்த்தைகளை ஆத்துமாக்கள் தெளிவாகக் கேட்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஸ்கொத்லாந்து நாட்டவர்களின் ஆங்கில உச்சரிப்பு வித்தியாசமானதாக இருக்கும். ஸ்கொத்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பிரசங்கி ஒருமுறை ஒரு சபையில் பிரசங்கித்தார். அந்த சபையில் ஆங்கிலம் தெரிந்த சீன இனத்தைச் சேர்ந்த பலர் இருந்தனர். ஸ்கொத்லாந்துப் பிரசங்கி சபையைக் குறித்துப் பயன் படுத்திய ஆங்கில வார்த்தையான Churchஐ அவர் ‘சுர்ச்’ என்று உச்சரித்த விதம் ஆங்கிலம் தெரிந்த சீனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. கூட்டம் முடிந்தபின் ஒரு சீனப் பெண் பிரசங்கியைப் பார்த்து அவர் உச்சரித்த அந்த வார்த்தை என்ன? என்று கேட்டாள். பிரசங்கம் முடியும்வரை அந்தப் பெண்ணின் மனம் அந்த வார்த்தை என்ன என்று ஆராய்வதிலேயே செலவழிந்து பிரசங்கத்தைக் கேட்காமல் செய்துவிட்டது. இந்த விஷயத்தை அந்தப் போதகரே ஒருமுறை என்னிடம் சொன்னார். அநேகர் பேசுகிற போது எல்லா ‘லகர’ங்களையும் ஒரேமாதிரியாக உச்சரிப்பார்கள். ‘ற’வையும், ‘ர’வையும்கூட ஒரே மாதிரியாக உச்சரிப்பார்கள். இதையெல்லாம் திருத்தி அமைத்துக் கொள்வது அவசியம்.

பிரசங்கிக்கிறபோது வார்த்தைகளையும் வசனங்களையும் உணர்ச்சியோடு பயன்படுத்த வேண்டும். வார்த்தைகள் வலிமைமிக்கது. அவற்றை அழுத்திப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் அழுத்திப் பயன்படுத்தி, நிறுத்திப் பேச வேண்டிய நேரத்தில் நிறுத்திப் பேசுவது அவசியம். தங்குதடையில்லாமல் குதிரை ரேஸில் வர்ணணை கொடுப்பவரைப் போல உணர்ச்சியில்லாமல் பேசக்கூடாது. சிலர் உணர்ச்சியே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அது பிரசங்கத்தைப் பாழடித்துவிடும். பிரசங்கம் கேட்பவர்களையும் தூங்க வைத்துவிடும். தேவைக்கு மேலாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதும் பிரசங்கத்தைப் பயனில்லாமல் செய்துவிடும். அரசியல் மேடைப்பேச்சு நடை பிரசங்கத்திற்கு உதவாது. கருணாநிதியும், ஸ்டாலினும் கட்டைக் குரலில் நிறுத்தி நிறுத்திப் பேசுவது போல் பேசக்கூடாது. அவர்களுடைய பேச்சில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மிகவும் அதிகம். இது பிரசங்கத்திற்கு உதவாது.

பிரசங்கத் தொனி

பிரசங்கிகள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய அம்சம் அவர்களுடைய குரல் வளம். பிரசங்கியின் நடத்தை, பக்திவிருத்தி ஆகியவற் றிற்கும், பிரசங்கத் தயாரிப்புக்கும் அடுத்தபடியான இடத்தையே பிரசங்கி யின் பிரசங்கத் தொனி வகிக்கிறது. குரல் வளம் மட்டுமிருந்து ஒருவர் சிறந்த பிரசங்கியாகிவிட முடியாது. அதேவேளை குரல்வளத்தின் அவசியத்தை அலட்சியப்படுத்திவிடவும் முடியாது. ஒரு மெய்ப்பிரசங்கியின் வேதபூர்வமாக தயாரிக்கப்பட்ட பிரசங்கம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் பிரசங்கி தன்னுடைய குரலைத் தகுந்த முறையில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

பிரசங்கிக்கு இருக்கும் முக்கியமான கருவி குரல். பிரசங்கி கர்த்தர் தந்திருக்கும் தன்னுடைய குரலோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் நல்லபடி பிரசங்கிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குரலில் இருக்க வேண்டிய உயர்வு தாழ்வுகள், வேறுபாடுகள், அழுத்தங்கள், வேகம், உணர்ச்சி அத்தனையையும் பிரசங்கப் பணி சிறப்பாக இருப்பதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.

பிரசங்கப் பணி சிறப்பாக அமையும் பொருட்டு பிரசங்கி தன்னுடைய குரல்வளத்தைப் பெருக்கிக் கொள்ள கீழ்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றலாம்:

1. தன்னுடைய குரலைப் பயன்படுத்தும் விதத்தில் இருக்கும் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

மூக்கினால் பேசும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மூக்கு பேசுவதற்காக அல்ல, மூச்சுவிடுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூக்கால் பேசும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வயிற்றில் இருந்து குரலை எழுப்பப் பயிற்சி செய்வது நல்லது. சிலருக்கு குரல் பெண்களுடைய குரலைப் போன்றதாக இருக்கும். அது உதவாது. பிரசங்கிகளின் குரலில் அநாவசிமான ஜோடனை இருக்கக்கூடாது. சில பிரசங்கிகள் கேட்பவர்கள் இதயத்தைக் கசியச் செய்வதுபோல் இனிப்பான குரலில் பேசுவார்கள். அது செயற்கையானது. அழுகின்ற குரலில் பேசுவதும் தகாது. தவறான விதத்தில் பேசிப்பேசிப் பழகிப் போனவர்கள் அதைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.

2. பிரசங்கத்தைக் கேட்க வந்திருக்கும் அனைவரும் அதைக் கேட்கும் அளவுக்கு குரலை கம்பீரமாக உயர்த்திப் பேசப் பழக வேண்டும்.

சிலருடைய குரல் வளமானதாக இருந்தாலும் அவர்களால் குரலை உயர்த்திப் பேச முடியாமல் இருக்கும். ஆத்துமாக்களுக்கு தங்களுடைய குரல் கேட்கிறது என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கலாம். அதைவிட தங்களுடைய குரல் ஆத்துமாக்களுக்குக் கேட்கிறதா என்பதை அவர்கள் அடிக்கடி விசாரித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. சபையில் பின்வரிசையில் இருப்பவர்களுக்கு முன்வரிசையில் இருப்பவர்களுக்குக் கேட்பதைப்போலவே பிரசங்கம் கேட்க வேண்டும். சிலர் நன்றாக குரலை உயர்த்தி பிரசங்கத்தை ஆரம்பித்துவிட்டு பிற்பாடு பாதியில் குரலை அடக்கிக் கொள்வார்கள். இத்தகைய குறை உள்ளவர்கள் தங்களுடைய குரல் சாதாரணமாக மற்றவர்களுக்கு கேட்பதில்லை என்பதை நினைவில் வைத்து எப்போதும் குரலை உயர்த்திப் பேசுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். வாய்க்குள்ளேயே வைத்து வார்த்தைகளை மென்றுவிடுகிறவர் கள் பிரசங்க ஊழியத்துக்கு வருவதால் எந்தப் பயனுமில்லை. ஆரம்பத் திலேயே இதை சரிப்படுத்திக்கொள்ளாவிட்டால் போகப் போக பிரசங்க ஊழியத்தில் அவர்களால் வளர முடியாது.

சங்கீதம் கற்றுக்கொள்ளுகிறவர்கள் தங்களுடைய சாரீரத்தை நல்ல முறையில் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பார்கள். ஆற்றிலோ, குளத்திலோ இருந்து பாடிப் பயிற்சி எடுப்பார்கள். அது அவர்கள் குரலை வளமாகப் பயன்படுத்துவதற்கு உதவுகிறது. அதுபோல பிரசங்கி தன்னுடைய குரலில் கவனத்தை செலுத்துவது அவசியம். குரலை உயர்த்தி எல்லோருக்கும் கேட்கும்படியாகப் பேசுவது அவசியமானாலும், அநாவசியமாக குரலை தேவைக்கு மேலாக உயர்த்தி கேட்பவர்கள் காதுகளைக் கிழித்துவிடக் கூடாது.

3. குரலில் தேவையான உயர்வு தாழ்வுகளும், வேறுபாடுகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிரசங்கத்தை ஆரம்பித்து முடிக்கும்வரை பிரசங்கியின் குரல் ஒரே அளவில் தொடர்ந்து இருக்குமானால் கேட்பவர்கள் சலிப்படைந்து போவார்கள். எந்த இடத்தில் குரலை உயர்த்த வேண்டும், தாழ்த்த வேண்டும், நிறுத்திப் பேச வேண்டும் என்பது பிரசங்கிக்கு தெரிந்திருக்க வேண்டும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உச்சரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரசங்கி அதிக கவனம் எடுக்க வேண்டும். தன்னுடைய நாவையும், பற்களையும், தொண்டையையும், வயிற்றையும் அக்கறையுடன் தன்னுடைய குரல் வளத்திற்கு பொருத்தமானவிதத்தில் பயிற்சிசெய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீமோத்தேயுவுக்கு வயிறு சரியில்லாமலிருந்தபோது அதைக் குணப்படுத்திக் கொள்வதற்கு திராட்சை இரசத்தை அருந்தும்படிப் பவுல் கூறியதற்கு பிரசங்கியான தீமோத்தேயுவின் வயிற்றுக்கும், குரலுக்கும், பிரசங்கம் செய்வதற்கும் இருந்த பெருந்தொடர்புகூடக் காரணமாக இருந்திருக்கலாம்.

மேடை பாவனை

இனி பிரசங்க மேடையில் பிரசங்கி நின்று பிரசங்கிக்க வேண்டிய விதத்தைப் பற்றியும் சில ஆலோசனைகளை சொல்ல விரும்புகிறேன். நாம் பிரசங்கிக்கும்போது ஆத்துமாக்களின் கண்கள் நம்மீது பதிந்திருக்கின்றன. நமது பிரசங்கத்தை ஆத்துமாக்கள் கேட்கிறபோது நமது பிரசங்க மேடை செயல்முறைகள் அவர்களுடைய கவனத்தை எந்தவிதத்திலும் பாதித்துவிடுவதாக அமையக்கூடாது. பிரசங்கத்தை ஆரம்பித்து அது முடிகிறவரை ஆவியானவரின் கிரியைக்குத் தடையாக எதுவும் இருப்பதற்கு இடந்தரலாகாது.

தமிழகத்து பிரசங்கிகளில் பலர் கண்களை மூடிக்கொண்டு பிரசங்கம் செய்யும் வழக்கத்தை நான் கவனித்திருக்கிறேன். இப்படி ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. அது பக்தியைக் குறிப்பதாக இருக்கிறது என்று நினைக்கிறார்களோ என்னவோ. கண்களை மூடிக் கொண்டு பேசுவது மிகவும் தவறான செயல். ஆத்துமாக்களின் கண்களைப் பார்த்து பிரசங்கிக்க முடியாதவர்கள் மெய்ப்பிரசங்கிகள் அல்ல. உத்தமமான இருதயத்தைக் கொண்டிராதவர்கள் மட்டுமே கண்களை மூடிக்கொண்டு பிரசங்கிப்பார்கள்; பேசுவார்கள். மெய்ப்பிரசங்கிகளுக்கு இது தகாது. ஜெபிக்கும்போது மட்டுமே கண்கள் மூடி இருக்க வேண்டும். பேசும்போது கண்கள் திறந்திருக்க வேண்டும்.

பிரசங்க மேடையில் நிற்கும்போது ஒரு காலில் நின்று பிரசங்கிக்கும் சிலரையும் பார்த்திருக்கிறேன். இரண்டு கால்களிலும் நின்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறவனாக பிரசங்கி இருக்க வேண்டும். ஒரு காலில் நின்றோ அல்லது பிரசங்க மேடையில் ஒரு பக்கம் சாய்ந்து நின்றோ அல்லது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டோ, கூரையைப் பார்த்துக் கொண்டோ பேசுவது மிகவும் தவறு. இதெல்லாம் பிரசங்கம் செய்வதற்கு உதவாத செயல்முறைகள்.

பிரசங்கம் செய்யும்போது ஒரே இடத்தில் நின்று அசையாமல் கூட்டத் தில் ஒருபகுதியினரை மட்டும் பார்த்து பிரசங்கிக்கக்கூடாது. கூட்டத்தின் சகல பக்கமும் நமது கண்கள் திரும்ப வேண்டும். அதற்கேற்ப உடலசைவும் இருக்க வேணடும். பிரசங்க மேடையில் உணர்ச்சியற்ற கட்டைபோல இயங்காமல், இயந்திரம் போல் செயல்படாமல், உணர்ச்சியோடும், கம்பீரத் தோடும், வேத அதிகாரத்தோடும் பிரசங்கி இயங்க வேண்டும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s