பிரசங்கமும், பரிசுத்த ஆவியும்

வேத அடிப்படையில் பிரசங்கத்தைத் தயாரித்துப் பிரசங்கிப்பதற்கு அவசியமான அம்சங்களில் கவனம் செலுத்திப் பிரசங்கம் பிரசங்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது எப்படி என்று இதுவரை பார்த்திருக்கிறோம். இத்தோடு பிரசங்கம் குறித்த சகல அம்சங்களையும் ஆராய்ந்து முடித்துவிட்டோம் என்று எண்ணிவிடக்கூடாது. நமது பிரசங்க ஊழியம், கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக, அவற்றின் நோக்கங்கள் நிறைவேற வேண்டு மானால் நம்முடைய உழைப்பையும் மீறிய பரிசுத்த ஆவியானவரின் அனுக்கிரகமும், வல்லமையும் அவசியம். அதாவது, நமது படிப்பையும், திறமைகளையும், உழைப்பையும் மீறிய கர்த்தரின் கிரியை அவசியம். மனிதனின் வேறு எந்தவிதமான மேடைப் பேச்சுக்கும், விரிவுரை களுக்கும் அவசியமில்லாத கர்த்தரின் விஷேச ஆசீர்வாதம் பிரசங்கம் மனிதர்களுக்குப் பயனுள்ளதாக அமைய அவசியமாகிறது. அதைத்தான் நாம் பரிசுத்த ஆவியின் அனுக்கிரகம் என்று அழைக்கிறோம். இது பரிசுத்த ஆவியானவர் பிரசங்கியிலும், பிரசங்கத்தின் மூலம் ஆத்துமாக்களின் இருதயங்களிலும் செய்கின்ற கிரியையாகும்.

பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் ஆள்தத்துவம். அவர் தேவன், கர்த்தர். இராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுகை சகல இடங்களிலும் தொடர பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிரதிநிதியாக உலகில் செயல்பட்டு வருகிறார். தான் போதித்த அனைத்தையும் அப்போஸ்தலர்கள் நினைவுகூறும்படி ஆவியானவர் அவர்களுக்கு உதவுவார் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் திருச்சபை இந்த உலகில் நிறுவப்பட்ட காலமுதல் ஆவியானவர் சுவிசேஷம் சகல தேசங்களிலும், சகல குலமக்கள் மத்தியிலும் பரவி சபைகள் நிறுவ கிரியை செய்து வருகிறார். ஆவியானவருடைய கிரியையில்லாமல் சுவிசேஷம் பரவ முடியாது. திருச்சபைகள் நிறுவப்பட முடியாது.

பிரசங்கத்துக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையில் உள்ள தொடர்பை ஓரளவுக்கு கிறிஸ்தவர்களில் பலரும் அறிந்து வைத்திருந்தாலும், அவர்களுடைய எண்ணங்கள் வேத அடிப்படையில் அமைந் திருப்பதில்லை. பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கங்களால் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய தவறான போதனைகள் இன்று சர்வ சாதாரணமாக தமிழினத்தின் மத்தியில் உலவி வருகின்றன. ஆகவே, பிரசங்கத்துக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையில் உள்ள தொடர்பைப் பற்றி நாம் ஆராய்கிறபோது கவனத்தோடு அதை அனுகுவது அவசியமாகிறது.

கர்த்தரின் செய்தியை அவருடைய ஊழியக்காரர்கள் பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி பரிசுத்த ஆவியானவருடைய துணையோடேயே அறிவித்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் ஆவியின் வல்லமையினாலேயே கர்த்தரின் செய்தியை இஸ்ரவேலருக்கு அறிவித்தார்கள். எசேக்கியல் 2:1-2ல், “அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்” என்றிருக்கிறது. எசேக்கியல் யூதாவுக்கு கர்த்தரின் வார்த்தையைப் பிரசங்கிக்குமுன் அந்த வார்த்தையைப் பெற்றுக்கொள்ள ஆவியானவர் அவரில் கிரியை செய்திருப்பதை இந்த வசனம் உணர்த்துகிறது. இது எசேக்கியல் மட்டுமல்லாமல் சகல தீர்க்கதரிசிகளும் பழைய ஏற்பாட்டில் பெற்றிருந்த அனுபவமாகும். புதிய ஏற்பாட்டிலும் அதேவிதமாகவே கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர்களும், அவருக்குப்பின் வந்தவர்களும் அறிவித்திருக்கிறார்கள். அப்போஸ்தலர்கள் கர்த்தரின் வார்த்தையைப் பிரசங்கித்தபோது அவர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அவர்கள் தங்களுடைய சபைக்குத் திரும்பி சபையாக ஜெபித்து பிரசங்க ஊழியத்திற்காக கர்த்தரின் துணையை நாடியபோது பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக அவர்களுக்கு உதவினார் என்றும் அவர்கள் ஆவியின் வல்லமையுடன் வசனத்தைப் பிரசங்கித்தார்கள் என்றும் அப்போஸ்தலர் 4:1-31 வரை யுள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.

பிரசங்கத்தோடு தொடர்புடைய இந்த ஆவியின் கிரியை நாம் வேதரீதியில் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதை நமது சீர்திருத்தவாத பெரியவர்கள் “Unction of the Spirit” என்று அழைத்தார்கள். இதை அவர்கள் வேதப் பிரசங்கத்தோடு தொடர்புடையதும், வேதப் பிரசங்கத்துக்கு அவசியமானதுமான அனுபவமாகக் கருதினார்கள். பெந்த கொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கங்களின் பரிசுத்த ஆவியானவர் பற்றிய தவறான போதனகளுக்கும் நாம் விளக்கப்போகும் பிரசங்க ஊழியத்துக்கு அவசியமான ஆவியானவரின் அனுபவத்திற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. இன்று பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கங்கள் “அபிஷேகம்” என்ற பெயரில் அழைக்கும் போலித்தனமான அனுபவமல்ல இது. ஆகவே, நாம் பெந்தகொஸ்தேகாரர்களைப் போல ஆவியானவரைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டோம் என்று யாரும் தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது. பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிரசங்கத்தைப் பிரசங்கத்திற்குரிய இலக்கணங்களோடு, கடின உழைப்போடு வேதபூர்வமாக தயார் செய்யாமல் பிரசங்க வேளையில் மட்டும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை நாடி வருகிறார்கள். வேத அடிப்படையில், இறையியல்பூர்வமாக தயாரிக்கப்படாத எந்தப் பிரசங்கத்தையும் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்துவதில்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. அத்தோடு, அவர்கள் பிரசங்கத்தின் அவசியம் இல்லாமலேயே பரிசுத்த ஆவியானவர் ஆத்து மாக்களில் கிரியை செய்து அவர்களுக்கு இரட்சிப்பைத் தருவார் என்று தவறாக நம்பி வருகிறார்கள்.

பிரசங்கத் தயாரிப்பில் பரிசுத்த ஆவியின் கிரியை

தங்களுடைய பிரசங்க ஊழியத்தில் பரிசுத்த ஆவியின் கிரியையைப் பார்க்க வேண்டுமானால் பிரசங்கிகள் தங்களுடைய ஊழியக்காலம் முழுவதும் பரிசுத்த ஆவியில் தங்கியிருக்க வேண்டும். விசுவாசியாக பரிசுத்த ஆவியின் இடைப்படுதலை தன் வாழ்வில் அன்றாடம் அறிந்திருந்து பரிசுத்தத்தில் வளர்ந்து வராதவர்கள் பிரசங்க ஊழியத்தையும் போதக ஊழியத்தையும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தோடு செய்ய முடியாது.

பிரசங்கிகள் பிரசங்கிக்கும்போது ஆவியானவர் அவர்களில் செய்யும் கிரியையையும், பிரசங்கத்தைக் கவனமாக தயாரிக்க வேண்டிய அவர்களுடைய கடமையையும் நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது என்று கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிரசங்கியான மார்டின் லொயிட் ஜோன்ஸ் கூறியிருக்கிறார். அவர் கூறியது உண்மைதான். இவற்றில் ஒன்றில்லாமல் மற்றதை நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அநேகர் பிரசங்கத்தை தயாரிக்க வேண்டிய விதத்தில் உழைத்துத் தயாரிக்காமல் பரிசுத்த ஆவியின் கிரியை மட்டும் பிரசங்க வேளையில் நாடி வருகிறார்கள். அது மிகவும் தவறான செயல். வேறு சிலர் பிரசங்கத்தை மட்டும் இறையியல் பூர்வமாக நல்லமுறையில் தயாரித்துவிட்டு பிரசங்க வேளையில் ஆவியின் துணையை நாடி வருவதில்லை. இதுவும் தவறான செயல். இந்த இரண்டும் அவசியம்; இரண்டும் இல்லாத எதையும் கர்த்தர் ஒரு போதும் பயன்படுத்துவதில்லை.

பிரசங்கத்தைத் தயாரிக்க ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து அதைப் பிரசங்கித்து முடியும்வரை பிரசங்கி ஜெபத்தோடு பரிசுத்த ஆவியில் தங்கியிருப்பது அவசியம். பிரசங்க நேரத்தில் மட்டும் திடீரென பரிசுத்த ஆவியானவர் இடைப்பட்டு பிரசங்கத்தை ஆசீர்வதிப்பார் என்று எண்ணுவது வெறும் கனவு. பிரசங்கப் பகுதியை விளங்கிக் கொள்ளுவதற்கு நாம் பரிசுத்த ஆவியில் தங்கியிருக்க வேண்டும். வசனத்தை நாம் விளங்கிக் கொள்ளத் துணை செய்கிறவர் பரிசுத்த ஆவியானவரே (லூக்கா 10:21; 11:13; யோவான் 14:26). பிரசங்கிப்பதற்காக எடுத்துக் கொண்ட வசனங்களைப் பிரித்து ஆராய்ந்து, அதில் தரப்பட்டுள்ள போதனைகளுக்கேற்ப பிரசங்கத்தை இறையியல் போதனைகளையும், உதாரணங்களையும், நடைமுறைப் பயன்பாடுகளையும் கொண்டு தயாரிப்பதற்கு ஆரம்ப முதல் இறுதிவரை நமக்கு பரிசுத்த ஆவியின் துணை தேவைப்படுகிறது. வேத அடிப்படையில் பிரசங்கத்தைக் கவனத்தோடு பாடுபட்டுத் தயாரிப்பவர்களை ஆவியானவர் நிச்சயம் வழிநடத்தித் துணை செய்கிறார்.

பிரசங்கவேளையிலும், பிரசங்கத்தின் மூலமும் பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியை

ஏதோ ஒரு வேத வசனத்தை எடுத்துக் கொண்டு, மாம்ச தைரியத்தோடு பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதத்தை நாடி பிரசங்கிக்கப் போகிறவர்கள் இன்று நம்மத்தியில் அதிகம். பரிசுத்த ஆவியானவர் ஊழியக்காரனுக்கு கட்டுப்பட்டவர் என்ற அசட்டுத் தைரியத்திலும், அறியாமையிலும் ஊழியம் செய்கிறவர்களின் தொகைக்கும் அளவேயில்லை. இவர்கள் எல்லோரும் பிரசங்கத்தின் மூலம் ஆவியானவர் செய்யும் கிரியையைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

பிரசங்கத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையைப் பற்றி விளக்குகிறபோது இரண்டு முக்கிய அம்சங்களை நாம் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

(1) பரிசுத்த ஆவியானவர் பிரசங்கியில் செய்யும் கிரியை

பிரசங்கி பிரசங்கிக்கும் வேளையில் ஆவியானவரின் கிரியையைத் தன்னில் உணர முடியும். ஆவியின் அனுக்கிரகம் பிரசங்கியோடு இருக்கும்போது பிரசங்கத்தை ஆரம்பித்து பிரசங்கிக்கின்ற வேளையில் பிரசங்கி தன்னுடைய வார்த்தைகள் தடையில்லாமல் அருவி போலப் பாய்வதையும், மனித பயமில்லாமல் வைராக்கியத்தோடு தன்னால் பிரசங்கிக்க முடிவதையும், தன்னை மீறிய ஒரு வல்லமை தன்னைப் பயன்படுத்துவதையும் உணர முடியும். இதைத்தான் “Unction of the Spirit” என்று சீர்திருத்தவாத பெரியவர்கள் அழைத்தார்கள். இது மனித சக்தியாலோ, மனித ஞானத்தினாலோ நிகழும் காரியமல்ல. அப்போஸ். 4:31, அப்போஸ்தலர்கள் “தேவ வசனத்தை தைரியமாய்ச் சொன்னார்கள்” என்கிறது. “தைரியமாய்” என்ற இந்த வார்த்தையைப் பலவிதமாக விளக்கலாம். இதற்கு வெளிப்படையாய், பயமின்றி, முழு நம்பிக்கையோடு என்று பல அர்த்தங்கள் உள்ளன. இதெல்லாம் அப்போஸ்தலர்கள் மனித சக்தியினாலல்லாமல் அவர்களுக்குப் புறத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் தந்த வல்லமையால் வார்த்தையைப் பிரசங்கித்தார்கள் என்பதை விளக்குகின்றன. பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பயன்படுத்தியபோது அவர்களால் குழப்பமில்லாமல், வைராக்கியத்தோடு, மனுஷ பயமின்றி வசனத்தை வல்லமையாய் பிரசங்கிக்க முடிந்தது.

இந்த அனுபவத்தைப் பற்றிப் பவுல் அப்போஸ்தலன் பலதடவை விளக்கியிருக்கிறார். “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது . . .” என்று பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதினார் (1 தெசலோ. 1:5). தொடர்ந்து 1 கொரி. 2:5ல், “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும், பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது.” என்று பவுல் விளக்குகிறார். தன் பிரசங்கம் ஆத்துமாக்களுக்குப் பயனுள்ளதாக அமைய பவுல் மனுஷனுடைய ஞானத்தில் தங்கிருக்கவில்லை; இந்த உலகத்துக்குரிய கருவிகளில் தங்கியிருக்கவில்லை; வீண் வார்த்தை சாமர்த்தியத்திலும், வார்த்தை ஜாலத்திலும் தங்கியிருக்கவில்லை. அவர் ஆவியின் பெலத்தினாலேயே ஒவ்வொரு முறையும் பிரசங்கித்திருக் கிறார். “உறுதிப்பட்டதாயிருந்தது” என்ற வார்த்தையின் மூலம் ஆவியின் கிரியையின் அடையாளங்களோடு தன்னுடைய பிரசங்கம் அமைந் திருந்ததாக பவுல் கூறுவதைக் கவனிப்பது அவசியம். இன்று ஆவியின் கிரியையின் அடையாளங்களாக கூட்டத்தில் இருப்பவர்கள் பேயாட் டம் ஆடுவதையும், நிலத்தில் விழுந்து புரளுவதையும் சுட்டிக் காட்டு வார்கள். அவை ஆவியின் கிரியைகளல்ல, பிசாசின் கிரியைகளே. பவுல் சுட்டிக் காட்டும் கிரியைகள் ஆவியானவரின் பரிசுத்தமான கிரியைகள்; கர்த்தரை மகிமைப்படுத்தும் கிரியைகள். பிரசங்கியை அவர் பயன்படுத்தும் அற்புதமான கிரியைகள். இதில் அவலட்சனத்திற்கும், அசட்டுத்தனமான செயல்களுக்கும் இடமிருக்கவில்லை.

“எல்லாருடைய காதுகளிலும் விழும்படியாக சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டாலும், அது சிலருடைய காதுகளில் மட்டும்தான் வல்லமையாக விழுகிறது. சுவிசேஷத்தின் வல்லமை அதைப் பிரசங்கிக்கும் பிரசங்கியின் பேச்சுத்திறத்தில் தங்கியிருக்கவில்லை; அப்படியிருந்திருந்தால் ஆத்துமாக்களின் மனந்திரும்புதலுக்கு மனிதனல்லவா காரணமாக இருந்திருப்பான். அது பிரசங்கியின் அறிவுத்திறத்திலும் தங்கியிருக்கவில்லை; அவ்வாறிருந்திருந்தால் மனிதனின் ஞானத்தினாலல்லவா மனந்திரும்புதல் என்றாகிவிடும். நம்முடைய நாக்கு வீணாகப் போகுமளவுக்கு நாம் பிரசங்கித்தாலும், நம்முடைய இருதயம் பலவீனமாகி, நாம் இறந்துபோகுமளவுக்கு பிரசங்கித்தாலும் நமது பிரசங்கத்தோடு ஆவியின் வல்லமையும் சேர்ந்து செயல்படாவிட்டால் ஒரு ஆத்துமாவாவது மனந்திரும்புவதற்கு வழியில்லை.” என்றார் பிரசங்கிகளின் இளவரசன் என்றழைக்கப்பட்ட ஸ்பர்ஜன்.

பிரசங்கம் எப்போதும் வேதபூர்வமாகவும், தத்துவரீதியிலும், ஆத்துமாக்களை சிந்திக்க வைப்பதாகவும், அவர்களுக்கு அறிவூட்டுவதாகவும், இறையியல் போதனகளையளிப்பதாகவும், நடைமுறைப்பயன்பாடுகளைக் கொண்டதாகவும் இருப்பது மிகவும் அவசியம் என்பதை நாம் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். அதேவேளை அத்தனை சிறந்த அடையாளங்களைக் கொண்டுள்ள பிரசங்கத்தைப் பிரசங்கி ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்காவிட்டால் அந்தப் பிரசங்கம் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகிவிடும். அதாவது, அது சிந்தனைக்கு மருந்து தரும்; ஆனால், ஆத்துமாவுக்கு உணவளிக்காது. இதை ஸ்பர்ஜன் மறுபடியும் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்:

“ஒரு பிரசங்கம் தெளிவானதாய், சரியானதாய், நல்ல கருத்துக்களைக் கொண்டதாய், காரண காரியங்களை ஆராய்ந்து சிறப்பாக விளக்குவதாய், அழகுள்ளதாய், உவமை, உருவகங்களைக் கொண்டதாய், உணர்வுகளைத் தூண்டக்கூடியதாய், நல்ல பயன்பாடுகளைக் கொண்டதாய் இருந்துவிடலாம். அத்தகைய அருமையான பிரசங்கத்தை மேடைப் பிரசங்கத்தின் இளவரசனாக இருக்கும் ஒருவர் பிரசங்கித்தாலும் அது பரிசுத்த ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்கப்படாவிட்டால் மரித்தவனுக்கு உயிரளிப்பதுபோல் ஆத்துமாவின் இருதயத்தை அசைத்து மனந்திரும்பவைக்கக்கூடிய வல்லமை இல்லாததாக இருந்து விடும்.”

பிரசங்கத்தை ஆரம்பித்தது முதல் முடியும்வரை ஒரே தோனியில் எந்தவித மாற்றமுமில்லாமல், உணர்ச்சியும் இல்லாமல் கொடுக்கப்படும் பிரசங்கம் ஆவியின் வல்லமையைக் கொண்டதல்ல. அதில் காணப்படும் செய்திகள் ஆவிக்குரியதாக இருந¢தாலும் அது ஆத்துமாக்களை அசைக்கும் ஆவியின் அடையாளத்தைக் கொண்டிருக்காது. ஆவியின் வல்லமையுள்ள பிரசங்கம் அதைக் கேட்பவர்களில் இரண்டில் ஒன்றை நிச்சயம் செய்யும். ஒன்றில், அது அவர்களுடைய இருதயத்தை அசைத்து பாவத்தை உணர்த்தும் அல்லது பிரசங்கியின் மேல் அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும். எவரையும் ஏதாவதொருவிதத்தில் அசைக்காத பிரசங்கம் பிரசங்கமாக இருக்க முடியாது.

பிரசங்கத்தில் ஆவியின் வல்லமையை உணர்ந்த பிரசங்கிகள் ரிச்சட் பெக்ஸ்டர் சொன்னது போல் “மரணத்தின் வாசலில் நிற்கும் மனிதர்களுக்கு, நான் மரணத் தருவாயில் இருக்கும் மனிதனைப் போல பிரசங்கம் செய்வேன்” என்ற வைராக்கியத்தோடு பிரசங்கிப்பார்கள். ஆவியின் வல்லமையுள்ள பிரசங்கத்தில் பிரசங்கியின் இருதயத்தைப் பார்க்க முடியும். ஆத்துமாக்கள் மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்ற வாஞ்சையோடு, மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் அவர்கள் நிற்கிறார்கள் என்ற ஆணித்தரமான நம்பிக்கையோடு இயேசுவை விசுவாசிக்கும்படி அறைகூவலிடும் ஆத்துமாவைப் பார்க்க முடியும். பவுலின் பிரசங்கம் அப்படிப்பட்டதாயிருந்தது. அரசனான அக்கிரிப்பாவைப் பார்த்து பவுல், “ராஜாவே தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன்” என்று பிரசங்கித்தபோது அக்கிரிப்பா பவுலை நோக்கி, நீ தொடர்ந்து பேசினால் என்னைக் கொஞ்ச நேரத்தில் கிறிஸ்தவனாக மாற்றிவிடுவாய் என்று சொல்ல வில்லையா? (அப்போஸ். 26:27-28). அந்தளவுக்கு பவுலின் பிரசங்கம் ஆவியின் வல்லமையையும், அக்கிரிப்பா இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்ற வாஞ்சையையும் கொண்டிருந்தது.

பிரசங்கத்தில் ஆவியின் வல்லமை இருக்கும்போது பரலோகம் இந்த உலகத்துக்கு வந்துவிடுகிறது. ஆவியின் வல்லமையோடு பிரசங்கம் இருக்கும்போது பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் அலற வேண்டிய அவசியமில்லை. கூட்டத்தில் விவரிக்க முடியாத அமைதி காணப்படும். சிலரது முகங்களில் வடியும் கண்ணீரைக் காணலாம். கூட்ட முடிவில் ஆத்துமாக்கள் ஆவிக்குரிய சத்தியங்களில் அதிக நாட்டம் காட்டிப் பேசுவதைக் கேட்கலாம். இரட்சிப்பை எப்படிப் பெற்றுக்கொள்வது என்று துடித்துக் கேட்கிறவர்களைப் பார்க்கலாம். இதெல்லாம் பிரசங்கத்தின் மூலம் ஆவியானவர் செய்யும் கிரியைகள்.

ஆவியின் வல்லமையைப் பிரசங்கத்தில் காண மாம்ச வழியில் பிரசங்கி எதையும் செய்துவிட முடியாது. அதற்காக ஜெபிப்பதைத் தவிர வேறு வழியில்லை. நேர்மையான, கடின உழைப்பும், விசுவாசமுள்ள ஜெபமும் மட்டுந்தான் நமது பிரசங்கங்களில் ஆவியின் வல்லமையைக் காண உதவி செய்யும். ஆவியானவரை நாம் கட்டுப்படுத்திக் காரியம் சாதிக்க முடியாது என்று ஏற்கனவே பார்த்தோம். விசுவாசமுள்ள ஜெபத்தையும், விசுவாசமுள்ள பிரசங்கங்களையும் அவர் ஆசீர்வதிக்கத் தவறுவதில்லை. ஜோர்ஜ் விட்பீல்ட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஜோன் பனியன், ஸ்பர்ஜன் போன்ற நமது சீர்திருத்தவாத பெரியவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தங்களுடைய பிரசங்க ஊழியத்தில் அறிந்திருந்தார்கள். இன்று தமிழினத்தின் ஆத்மீக விடு தலைக்கும், திருச்சபை சீர்திருத்தத்திற்கும் ஆவியின் வல்லமையைக் கொண்ட பிரசங்கங்களும், அத்தகைய பிரசங்கங்களை அளிக்கக்கூடிய பிரசங்கிகளும் தேவை. வேதத்தைப் படித்துப் பிரசங்கங்களைத் தயாரிக்கின்ற பிரசங்கிகள் ஆவியின் வல்லமையோடும் பிரசங்கிக்கிறவர்களாக இருக்க நாம் ஜெபிப்பது அவசியம்.

(மிகுதி அடுத்த இதழில்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s