பிரசங்கிக்கும்போது . . .

இதுவரை பிரசங்கத்தைத் தயாரிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் முடிந்தளவுக்கு தெளிவாக ஆராய்ந்திருக்கிறோம். பிரசங்கத் தயாரிப்பில் கவனிக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் விளக்கமாக ஆராய்ந்திருக்கிறோம். பிரசங்கம் மிகவும் கீழான நிலை யிலிருக்கும் நம்மினத்து சபைகளில் பிரசங்கம் உயர்ந்த இடத்தை வகிக்க வேண்டுமானால் ஒவ்வொரு பிரசங்கியும் இதுவரை நாம் பார்த்த, படித்த விஷயங்களில் கருத்தோடு கவனம் செலுத்தி உழைத்தால் மட்டுமே அது முடியும்.

இனி பிரசங்கத்தை நாம் கர்த்தரின் துணையோடு நல்ல முறையில் தயாரித்து விட்டோம் என்ற அனுமானத்தோடு தயாரித்த பிரசங்கத்தை பிரசங்க மேடைக்கு கொண்டு சென்று ஆத்துமாக்கள் முன் படைப்பதற்கு அவசியமான, பிரசங்கி கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விஷயங்களை ஆராய்வோம். பிரசங்கத்தை நல்ல முறையில் தயாரித்து விடுவதால் மட்டும் அது நல்ல பிரசங்கமாகிவிடாது. பிரசங்கத்தை நல்ல முறையில் தயாரிப்பது பிரசங்க ஊழியத்தில் 50% பணி மட்டுமே. தயாரித்த பிரசங்கத்தைக் கர்த்தரின் துணையோடு ஆத்துமாக்களின் இருதயத்தைப் பாதிக்கும்படி பிரசங்கிப்பது அடுத்த 50% பணியாகும். அதைச் செய்யாதவரை தயாரித்துள்ள பிரசங்கம் அது எத்தனை நல்ல பிரசங்மாக இருந்தாலும் ஏட்டோடு மட்டுமே நின்றுவிடும்.

பிரசங்கக் குறிப்புகள்

தயாரிக்கப்பட்ட பிரசங்கத்தை எந்த முறையில் பிரசங்க மேடைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது நாம் அடுத்ததாகக் கவனிக்க வேண்டிய விஷயம். பிரசங்கத்தை நாம் நல்ல முறையில் தயாரித்து எழுத்தில் வைத்திருக்கிறோம் என்றால் அதனை எந்த முறையில் மேடைக்கு கொண்டு செல்வது?

பெரும்பாலானோர், பிரசங்கத்தை நான் மனனம் செய்துவிட்டேன், அதனால் பிரச்சனை இல்லை என்று சொல்லுவார்கள். ஒரு சிறு காகிதத்தில் குறைந்தளவான குறிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு பிரசங்கம் செய்வது பெரும்பாலான பிரசங்கிகளின் வழக்கம். அதாவது, அவர்கள் முழுப்பிரசங்கத்தையும் எழுத்தில் வடிப்பது இல்லை. இது ஆபத்தானதாகும். எப்படியென்றால், தயாரித்துள்ள பிரசங்கத்தை முழுவதுமாக வார்த்தை தவறாமல் மனனம் செய்துகொள்ளும் வல்லமை எல்லோருக்கும் இல்லை. பிரசங்க வேலையில் தயாரித்த பகுதி நினைவுக்கு வராத வேளை யில் நாம் மனதுக்கு வருவதை அந்தவேளையில் பேசிவிட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பிரசங்கம் பாதிப்புறும். ஆவியானவர் வெளிப்படுத்தினார் என்ற பெயரில் இல்லாததையும் பொல்லாததையும் மேடையில் சொல்லுவதே அநேக பிரசங்கிகளுக்கு இன்று வழக்கமாக இருக்கிறது. முழுவதுமாக தயாரித்து பிரசங்கிக்கப்படாத பிரசங்கத்தை ஆவியானவர் ஒருபோதும் ஆசீர்வதிப்பதில்லை. அதேவேளை, நன்றாக தயாரித்து வைத்திருக்கும் பிரசங்கத்தையும் சரியாகப் பிரசங்கிக்க ஆவியானவரின் துணை நமக்குத் தேவை. அதனால் பிரசங்கத்தை தயாரித்தபோது நாம் காட்டிய அக்கறையையும், கவனத்தையும் பிரசங்கத்தைப் பிரசங்கிக்கும் போதும் காட்ட வேண்டியது அவசியம். அதற்காகத்தான் தயாரித்த பிரசங் கத்தை கையோடு மேடைக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது.

வேதப்பகுதிகளை இலக்கணபூர்வமாக விளக்கிப் பிரசங்கிக்கும் வியாக்கியானப் பிரசங்கங்களை முழுவதுமாக மனனம் செய்து பிரசங்கிப்பது மிகவும் கடினமானது. திறமையும், அனுபவமுமுள்ள பிரசங்கிகளாலேயே அது முடியும். சராசரி பிரசங்கிகள் அத்தகைய தகுதிகளை வாழ்க்கையில் பெற்றிருப்பதில்லை. இத்தகைய பிரசங்கங்களை வழங்கும்போது அநேக விஷயங் களை நினைவில் வைத்திருக்க வேண்டும். அந்தளவுக்கு எல்லாவற்றையும் நம்மால் மனனம் செய்துவிட முடியாது. ஆகவே, பிரசங்கக் குறிப்பு கையில் இல்லாமல் நமது ஞாபக சக்தியை மட்டும் நம்பி மேடைக்குப் போவது பேராபத்தில் போய் முடியும்.

பிரசங்கத்தை நாம் விசுவாசத்தோடு பிரசங்கிக்க வேண்டுமானால் முழுப் பிரசங்கத்தையும் நல்ல பேப்பர்களில் தெளிவாக எழுதி வைப்பது அவசியம். முடிந்தது ஆறு பக்கங்களில் தெளிவான கையெழுத்திலோ அல்லது டைப் செய்யப்பட்டதாகவோ பிரசங்கம் இருக்க வேண்டும். பிரசங்கத் தலைப்பு, முன்னுரை, உப தலைப்புகள், வரிசைக்கிரமமான பயன்பாடு களின் தலைப்புகள், முடிவுரை ஆகியன பெரிய எழுத்துக்களில் கண்களுக்கு நன்றாக தெரியும் வகையில் பேப்பரில் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்க வேண்டும். இப்படி எழுதியோ அல்லது டைப் செய்யப்பட்டோ இருக்கும் பிரசங்கத்தை நாம் முழுவதுமாக பலமுறை வாசித்து சிக்கலில்லாமல் மனதில் பதியும்படி செய்துகொள்ள வேண்டும். இந்தப் பேப்பர்களை நாம் ஒரு பைலில் வைத்து பிரசங்க மேடைக்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். பிரசங்கிக்கும் வேளையில் நமது கண்கள் தொடர்ந்து பேப்பரில் இருக்கப்போவதில்லை என்றாலும் பேப்பர்களில் நாம் எழுதி வைத்திருப்பதை பிரசங்கிக்க அந்தக் குறிப்புகள் உதவும்.

ஆரம்பப் பிரசங்கிகள் பல வருடங்களுக்கு பிரசங்கங்களை முழுவதுமாக எழுதித் தயாரித்துப் பிரசங்கிப்பது அவசியம். இத்தகைய பயிற்சி பிரசங்கத்தை திறமையோடு தயாரிக்கவும், அதை தயாரித்த விதத்தில் கொடுக்கப்பட்டுள்ள கால அளவில் பிரசங்கிக்கவும் உதவும். பெரும் பிரசங்கியாக இருந்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் இதை வற்புறுத்தியுள்ளார். தனது ஆரம்பகாலப் பிரசங்கங்களையெல்லாம் அவர் முழுவதுமாக வார்த்தை தவறாமல் எழுத்தில் வடித்திருந்தார். இந்தப் பழக்கம் அவருக்கு கட்டுப்பாட்டையும், ஒழுங்குமுறையையும் கற்றுத் தந்தது. தயாரித்த பிரசங்கத்தைத் தவிர மனதில்பட்டதை மேடையில் சொல்லாமலிருக்கவும், குறித்த நேரத்துக்கு பிரசங்கத்தை அளிப்பதிலும் அது அவருக்கு உதவி செய்தது. இதே பயிற்சியை தற்காலப் பிரசங்கிகளும் நடைமுறையில் கைக் கொள்ளு வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கு நண்பர்களான பல பிரபலமான தேர்ந்த சீர்திருத்த பிரசங்கிகள் தங்களுடைய பிரசங்கங்களை அருமையாக பேப்பரில் வடித்துப் பிரசங்கிக்கும்போது அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளுகிறார்கள்.

நாம் பிரசங்கக் குறிப்புகளை தயாரித்து பேப்பரில் வைத்திருந்தால், அவற்றைப் பலமுறை வாசித்து மனதில் பதிய வைத்திருந்து மேடைக்குப் போகும்போது தேவையற்ற வார்த்தைகளையும், வசனங்களையும் பயன்படுத்தாமல் இருக்க முடியும். பிரசங்க வாக்கியங்களையும், வார்த்தைகளையும் தகுந்த முறையில் பயன்படுத்த கையில் இருக்கும் பிரசங்கக் குறிப்புகள் உதவும். ஒழுங்குபடுத்தப்பட்ட வார்த்தைகளும், வாக்கியங்களும் இல்லாமல் எந்தவொரு விஷயத்தையும் நாம் தெளிவாகப் பிரசங்கித்துவிட முடியாது. பிரசங்கத்தைத் தயாரித்தபோது நாம் பல உதாரணங்களையும், பழமொழிகளையும் தகுந்த இடங்களில் பயன்படுத்தியிருப்போம். அதையெல்லாம் எல்லோராலும் பிரசங்கக் குறிப்புகள் கையில் இல்லாமல் மனனம் செய்து வைத்திருப்பது முடியாத காரியம். ஆகவே, பிரசங்கக் குறிப்புகளைத் எழுத்தில் வடித்து மேடைக்குக் கொண்டுபோவதை நாம் வழக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

பிரசங்கிக்கும்போது பிரசங்கக் குறிப்பை வாசிக்கக் கூடாது

இவ்வாறாக எழுதி நாம் மேடைக்குக் கொண்டுபோகும் பேப்பர்களை நாம் பிரசங்கிக்கும்போது முழுவதுமாக வாசிக்கக்கூடாது. அது பிரசங்கமாக இருக்காது. பிரசங்க வேளையில் ஆத்துமாக்களுடைய கண்களை நமது கண்கள் சந்திப்பது அவசியம். மேலை நாடுகளில் ஒரு சில சபைப் பிரிவுகளில் இவ்வாறாக பிரசங்கத்தை வாசிப்பவர்கள் உண்டு. இது சரியான முறையல்ல. உணர்ச்சியே இல்லாமல் எழுதி வைத்திருப்பதை வாசிப்பது ஆத்துமாக்களுடைய உள்ளத்தை அசைக்காது. வாசிப்பதைத் தவிர்ப்பதற் காக பிரசங்கத்தை முழுவதுமாக எழுதி மேடைக்கு கொண்டு போகாமல் இருப்பது நல்லது என்று சிலர் கூறுவார்கள். அது அவசியமில்லை. “பிரசங்கத்தை வாசிப்பதை எந்தவிதத்திலும் ஒருவர் நியாயப்படுத்த முடியாது” என்று இறையியல் அறிஞர் ரொபட் லூயிஸ் டெப்னி (Robert Lewis Dabney) கூறியுள்ளார். அவர் தொடர்ந்து “அப்படி வாசிக்கும் வழக்கத்தை பிரசங்க மேடை அருகில்கூட வரவிடக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

பிரசங்கக் குறிப்பை தேவைப்பட்டபோது மட்டுமே பிரசங்கி பிரசங்க வேளையில் பார்க்க வேண்டும்

பிரசங்கிக்கும்போது நமது கண்கள் எப்போதும் ஆத்துமாக்களில் பதிந்திருக்க வேண்டியிருப்பதால் அவசியமானபோது மட்டுமே நாம் நமக்கு முன்னால் இருக்கும் பிரசங்கக் குறிப்பைப் பார்க்க வேண்டும். நாம் ஒரு விரிவுரையைக் வகுப்பில் கொடுக்கும்போது அதை வாசிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால், பிரசங்கம் ஒரு விரிவுரை அல்ல. பிரசங்கம் உணர்ச்சிததும்ப, ஆத்துமாக்களின் உள்ளத்தைத் தொடுவதாக அமைய வேண்டியிருப்பதால் அதைத் தடைசெய்துவிடக்கூடிய எதற்கும் நாம் பிரசங்கிக்கும்போது இடம் கொடுத்துவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதைப் பார்த்து வாசிப்பது அத்தகைய தடையைத்தான் ஏற்படுத்தும். சில வேளைகளில் நமது பிரசங்கத்தில் நாம் வேறு எவராவது சொன்னதைக் குறிப்பிட (Quote) வேண்டியிருந்தால் அதை வாசிக்க நேரிடும். மற்றவர்களுடைய குறிப்புகள் நமது பிரசங்கங்களில் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும். ஆத்துமாக்கள் வசனத்தைத்தான் கேட்க வந்திருக்கிறார்களே தவிர மற்றவர்களுடைய கருத்துக்களை அல்ல.

பிரசங்க வேளையில் நாம் பிரசங்கக் குறிப்பை அவசியம் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்போது அதைக் கவனமாக ஆத்துமாக்களுடன் நமக்கிருக்கும் தொடர்புக்கு தடைவராத விதத்தில் செய்வது நல்லது. பேசிக்கொண்டே குனிந்து பார்த்தோ அல்லது குரலைக் கொஞ்சம் தாழ்த்தி குறிப்பைப் பார்த்தோ செய்ய வேண்டும். சில வேளைகளில் ஒரு வசனத்தை வாசிப்பதற்காக ஆத்துமாக்களை அந்த வசனத்தைப் பார்க்கச் சொல்லுகிறபோது பிரசங்கக் குறிப்பைப் பார்க்கலாம். இப்படிச் செய்கிற போது நாம் பிரசங்கக் குறிப்பைப் பார்க்கிறோம் என்பதையே ஆத்துமாக்கள் அறியாதபடி செய்வது அவசியம். இது பயிற்சி இல்லாமல் வராது. பிரசங்கக் குறிப்பை மேடைக்கு கொண்டுபோவது மிகவும் அவசியமான போதும் அவற்றை நாம் வாசிப்பதற்காக அங்கு கொண்டுபோகவில்லை என்பதை உணர வேண்டும். பிரசங்கத்தைப் பலமுறை வாசித்து அதில் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறபோது தாளில் இருப்பதெல்லாம் மனதில் பதிந்துவிடும். சில வேளைகளில் நமது கரங்கள்தான் குறிப்புகளைப் புரட்டினாலும், கண்கள் அதில் பதிந்தாலும் நம்மால் தொடர்ந்து தடையில்லாமல் தயாரித்ததை பிரசங்கிக்க முடியும்.

பிரசங்கக் குறிப்பை பிரசங்க மேடைக்குக் கொண்டுபோவது அவசியமானபோதும் பிரசங்கி, பிரசங்கக் குறிப்புக்கு கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது. பிரசங்கக் குறிப்பைக் அவர் தம்முடைய கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கர்த்தர் தம்முடைய மக்களோடு பிரசங்கத்தின் மூலம் பேசுவதற்கு தடையாக பிரசங்கக் குறிப்புகள் அமைந்துவிடக்கூடாது. இதற்காக பிரசங்கி தன்னுடைய பிரசங்கத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆத்துமாக்களில் தன்னுடைய கண்களைப் பதித்து சரளமாக பேசக்கூடியவிதத்தில் பயிற்சி செய்வது அவசியம். தனிமையில் இருக்கின்ற வேளைகளில் இத்தகைய பயிற்சியில் ஈடுபடுவது பிரசங்கப் பணிக்கு பெரும் துணைபுரியும்.

பிரசங்கிப்பதற்கு தேவையான கால அளவு

பிரசங்கி எவ்வளவு நேரம் பிரசங்கிக்க வேண்டும் என்பது முக்கிய கேள்வி. ஒவ்வொரு பிரசங்கியும் வித்தியாசமானவர். கர்த்தரின் படைப்பில் எல்லோருமே ஒரேவிதமாக படைக்கப்பட்டிருக்கவில்லை. சிலருடைய குரல் வளம் திறமையானதாக ஆத்துமாக்களைக் கவருவதாக இருக்கும். அவர்களால் நாற்பத்தி ஐந்து நிமிடத்துக்குப் பேசி ஆத்துமாக்களைச் சலிப்படையாமல் செய்ய முடியும். அத்தகைய குரல்வளமில்லாதவர் தானும் நாற்பத்தி ஐந்து நிமிடத்துக்குப் பேசவேண்டும் என்று துடித்தால் அது ஆத்துமாக்களால் சகித்துக்கொள்ள முடியாதபடி பொய்விடும். ஒருவர் முப்பது நிமிடத்துக்குப் பேசுவதற்குத்தான் திறமையானவர் என்றால் அவர் அதைக்கூட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அத்தோடு, பிரசங்க நேரம் நாம் பிரசங்கிக்கும் பிரசங்கத்துக்கு தக்கதாக வேறுபட்டும் இருக்கும். ஒவ்வொரு பிரசங்கமும் வித்தியாசமானதாக வித்தியாசமான பகுதிகளில் இருந்தும் அமையும். பழைய ஏற்பாட்டில் இருந்து ஒரு வரலாற்றுப் பகுதியை விவரித்துப் பிரசங்கிக்கும்போதோ அல்லது புதிய ஏற்பாட்டு நிருபங்களில் ஒரு பகுதியை விளக்கிப் பிரசங்கிக்கும் போதோ அல்லது இறையியல் விளக்கத்தை ஒரு தலைப்பில் அடிப்படை யில் பிரசங்கிக்கும்போதோ சிறிது நேரம் அதிகமாகத் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு சபையும் வித்தியாசமானதாகவும், ஆத்மீக வளர்ச்சிப்படியில் வித்தியாசமான படிநிலையில் இருப்பதாகவும் இருக்கும். ஒரு சபை மக்கள் பிரசங்கத்தாகம் அதிகமாக இருந்து நீண்ட பிரசங்கங்களுக்கு பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இன்னொரு சபையில் அதைப் பார்க்க முடியாமல் இருக்கும்.

பிரசங்கத்திற்கான கால அளவைத் தீர்மானிக்கும் இன்னுமொரு அம்சம் எத்தகைய கூட்டத்தில் நாம் பேசுகிறோம் என்பதாகும். பிரசங்கி ஒரு போதகர் கூட்டத்தில் பேசுபவராக இருப்பாரானால் அவர் போதகர் களுக்கு ஏற்றவிதத்தில் பேச வேண்டும். ஏற்கனவே பிரசங்கங்களையும், போதனைகளையும் கேட்டு தங்களுடைய மனதை அதற்குத் தயாராக்கிக் கொண்டுள்ள கூட்டமாக போதகர்கள் கூட்டம் இருக்கும். அத்தோடு, சபை மக்களைவிட அதிகளவு இறையியல் போதனைகளைப் பெறத்தக்க தாக அவர்களுக்கு மனவளர்ச்சியும் இருக்கும். இதனால் போதகர்களுக்கு மத்தியில் நாம் நேரத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

சிலவேளைகளில் பிரசங்கி ஒரு பிரசங்கத்தை ஆத்துமாக்கள் சலிப்படையாதபடி நாற்பத்தி ஐந்து நிமிடத்துக்கும், இன்னொன்றை முப்பது நிமிடத்திலும் கொடுத்துவிட முடியும். ஆகவே, இந்த விஷயத்தில் நாம் ஒரு நிலையான விதியை ஏற்படுத்தி இவ்வளவு நேரத்திற்குத்தான் பிரசங்கிக்க வேண்டும் என்று கூற முடியாது. ஸ்பர்ஜன் பிரசங்கங்கள் மிகவும் நீளமான தாக இருந்துவிடக்கூடாது என்று கூறியுள்ளார். மார்டின் லொயிட் ஜோன்ஸ் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் போதுமானது என்று சொல்லியிருக் கிறார். இருவருமே அதற்கு மேலும் பிரசங்கித்தவர்கள். ஆனால், அவர்களுடைய பிரசங்கங்கள் என்றைக்கும் எவருக்கும் சலிப்பேற்படுத்தவில்லை. ஒரு மனிநேரத்துக்கு மேல் பேசுவது அதிகம் என்றுதான் கூற வேண்டும். அதுவும் நமது கூட்டங்களில் குழந்தைகளும், வயதானவர்களும் இருப்பார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களால் மிகவும் நீளமான பிரசங்கங்களைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஆரம்பப் பிரசங்கிகள் முப்பது நிமிடங்களுக்குள் பேச முயற்சித்தால் அவர்கள் பின்பு நேரத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்துப் பிரசங்கிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

புரோடஸ் (Broadus) என்ற அமெரிக்க இறையியல் அறிஞர் கூறுவதைக் கவனியுங்கள், “ஒரு போதகர் தன்னுடைய பிரசங்கத்தை சில வேளைகளில் நீளமானதாகவும், சில வேளை களில் மிகச் சுருக்கமானதாகவும் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அறிந்திருப்பது அவசியம். இருபது நிமிடங்களில் அருமையாகக் கேட்பவர்கள் மகிழும்படிப் பிரசங்கிக்க வேண்டிய சில போதனைகள் இருக்கின்றன. அவற்றை நாற்பது அல்லது அதற்கு அதிகமான கால அளவில் பிரசங்கிக்க முயற்சித்தால் அநாவசியமாக தேவையற்ற விஷயங்களை அந்தப் பிரசங்கங்களில் சேர்க்க நேரிடும். அதனால் பிரசங்கம் தன்னுடைய வல்லமையை இழந்துவிட நேரிடுவதோடு கேட்பதற்கும் சலிப்பைத் தருவதாக அமைந்துவிடும்.”

நமது சபைகளில் எப்போதுமே குறை கண்டுபிடிக்கும் சிறுதொகையினர் இருப்பார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் பிரசங்கம் நீண்டதாக இருந்தாலும் குறைகூறுவார்கள். பிரசங்கம் குறைந்த நேரத்தில் இருந்தாலும் குறைகூறுவார்கள். அவர்களை வைத்து நம்முடைய பிரசங்கத் தகுதியை தீர்மானிக்க நாம் பழகிக் கொள்ளக்கூடாது. அதேநேரம் இந்த உலகத்திலேயே நாம்தான் மிகச் சிறந்த பிரசங்கி என்று நம்மைப் பாராட்டும் ஒரு சிலரும் இருப்பார்கள். நாம் இன்னும் அதிக நேரத்திற்கு பிரசங்கிக்க வேண்டுமென்று அவர்கள் சில வேளைகளில் நம்மை ஊக்கப்படுத்தக்கூடும். ஆனால், சிறுபிள்ளைகளும், வயதானவர்களும் சபையிலிருப்பதை அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இப்படியானவர்கள் சபையில் எப்போதும் வெறும் மைனோரிட்டி மட்டுமே. அவர்கள் சொல்லுவதை வைத்து உணர்ச்சி வசப்பட்டு நம்முடைய தலை வீங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆகவே, பிரசங்கி எப்போதும் தகுந்த கால நேரத்தில் தன்னுடைய பிரசங்கத்தை அளிப்பதில் மிகவும் அக்கறை காட்ட வேண்டும்.

போதகர் அல்பர்ட் என். மார்டின் சொல்லுகிறார், “ஒரு பிரசங்கி மேல் ஆத்துமாக்கள் குறைகூறுவார்களானால் அவர் குறைந்தளவே பேசுகிறார் என்ற குறையை அவர் கொண்டவராக இருக்கட்டும். அவர் நீண்ட பிரசங்கங்களை அளிக்கிறார் என்ற குறைகூறப்படு வதைவிட சுருக்கமாகப் போதிக்கிறார் என்ற குறைகூறப்படுவது நல்லது. சரியான அளவுக்கு நாம் உணவு படைக்கிறபோது சாப் பிடுகிறவர்கள் திருப்தியோடு சாப்பிட்டுவிட்டுப் போகமுடியும். நாம் அவர்களுக்கு தொடர்ந்து விடாமல் உணவைப் படைத்துக் கொண்டிருந்தோமானால் சிறிது நேரத்திற்குப்பிறகு அவர்கள் திருப் திக்கு அப்பாலுள்ள நிலையை அடைந்து மூச்சுத் திணறி உணவை வெறுக்கும் நிலை ஏற்படும்.”

ஆத்துமாக்களுக்கு கர்த்தரின் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுத்து, ஆத்துமவிருத்தி ஏற்படுத்துவதற்காக பிரசங்கிகளுக்கு தரப்பட்டிருக்கும் சிறந்த ஆயுதம், கிருபையின் சாதனம் பிரசங்கம். அந்த ஆயுதத்தை எத்தனை தடவை சாணம் பூசி பட்டை தீட்டினாலும் அது நல்லதே. பிரசங்க ஆயுதத்தை நாம் பட்டைதீட்டிப் பயன்படுத்த ஊழியக்காலம் முழுதும் பயிற்சி எடுக்க வேண்டும். பிரசங்கிகளே! செய்வீர்களா?

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s